BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  30. இரு சிறைகள் Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 30. இரு சிறைகள்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  30. இரு சிறைகள் Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 30. இரு சிறைகள்   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  30. இரு சிறைகள் Icon_minitimeWed May 18, 2011 3:44 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

மூன்றாம் பாகம் : கொலை வாள்

30. இரு சிறைகள்



வானதியை விட்டுப் பிரிந்ததும் அரசிளங்குமரி நேரே பழையாறைச் சிறைச்சாலைக்குச் சென்றாள். காவலர்களை வெளியிலேயே நிறுத்திவிட்டுத் தான் மட்டும் வந்தியத்தேவன் அடைபட்டிருந்த இடத்துக்குப் போனாள். அவன் தனி அறையில் பூட்டப் பட்டிருந்தான். சிறையின் உச்சியைப் பார்த்துக்கொண்டு உற்சாகமாகத் தெம்மாங்கு பாடிக் கொண்டிருந்தான்.

"வானச் சுடர்கள் எல்லாம்
மானே உந்தனைக்கண்டு
மேனி சிலிர்க்குதடி -
மெய்மறந்து நிற்குதடி!"

குந்தவை அருகில் வந்து நின்று தொண்டையைக் கனைத்த பிறகுதான் அவளைத் திரும்பி பார்த்தான். உடனே எழுந்து நின்று, "வருக! வருக! இளவரசியாரே! வருக! ஆசனத்தில் அமருக!" என்று உபசரித்தான். "எந்த ஆசனத்தில் அமரட்டும்?" என்று இளவரசி கேட்டாள்.

"இது தங்கள் அரண்மனை. இங்கு நடப்பது தங்கள் ஆட்சி, தங்கள் ஆணை. இங்குள்ள சிம்மாசனம் எதில் வேண்டுமானாலும் தங்கள் விருப்பம் போல் அமரலாம்" என்றான் வல்லவரையன்.

"ஐயா! உமது முன்னோர்கள் ஆணை செலுத்தி மூவுலகையும் ஆண்டபோது வல்லத்து அரண்மனை இவ்விதந்தான் இருந்தது போலும்! எங்கள் நகரில் இந்த இடத்தைச் சிறைச்சாலை என்று சொல்லுவார்கள்" என்றாள் இளவரசி.

"அம்மணி! எங்கள் ஊரில் இப்போது அரண்மனையும் இல்லை; சிறைச்சாலையும் இல்லை. பல தேசத்து அரசர்களுமாகச் சேர்ந்து அரண்மனை, சிறைச்சாலை எல்லாவற்றையும் இடித்துத் தரைமட்டமாக்கி விட்டார்கள், நூறு வருஷங்களுக்கு முன்பு..."

"ஏன்? ஏன்? வல்லத்து அரண்மனை மீதும் சிறையின் பேரிலும் அவர்களுக்கு என்ன அவ்வளவு கோபம்?"

"எல்லாம் ஒரு கவிஞரால் வந்த வினை!"

"ஆ! அது எப்படி?"

"என் குலத்து முன்னோர்கள் தென் நாட்டின் பேரரசர்களாக அரசு புரிந்த நாளில், காலாகாலத்தில் கப்பம் செலுத்தாத அரசர்களை அதிகாரிகள் சிறைப்பிடித்துக் கொண்டு வருவார்கள். அரண்மனை முற்றத்தின் இருபுறத்திலும் அரசர்களை அடைத்து வைக்கும் சிறைகள் இருந்தன. சக்கரவர்த்தி கருணை புரிந்து எப்போது தங்களை வரும்படி சொல்லி அனுப்புவார், மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஊருக்குத் திரும்பலாம் என்று அச்சிற்றரசர்கள் காத்திருப்பார்கள். பேரரசரைக் காணும்பேறு அவர்களுக்கு எளிதிலே கிட்டாது. அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கவிஞர்களும் புலவர்களும் சக்கரவர்த்தியின் ஆஸ்தான மண்டபத்துக்குப் போவார்கள். சக்கரவர்த்தி முன்னிலையில் பாடல்களைச் சொல்லிப் பரிசுகள் பெற்றுக் கொண்டு திரும்பிச் செல்லுவார்கள். அப்போது சிறையில் காத்திருக்கும் சிற்றரசர்கள் 'அடாடா! இந்தப் புலவர்களுக்கு வந்த யோகத்தைப் பார்! இவர்கள் கொண்டு போகும் பரிசுகளைப் பார்!' என்று சொல்லி வியப்பார்கள். 'ஓகோ! இந்தப் புலவன் கொண்டு போவது என் வெண் கொற்றக் குடையல்லவா?' என்பான் ஓர் அரசன். 'அடடே! இந்தக் கவிஞன் என் சிவிகையில் அமர்ந்து போகிறானே!' என்பான் இன்னொரு வேந்தன். 'ஐயோ! என் பட்டத்து யானையை இவன் கொண்டு போகிறானே!' என்பான் இன்னொரு மன்னன். 'இது என் குதிரை! இந்தக் கவிராயனை என் குதிரை கட்டாயம் ஒரு நாள் கீழே தள்ளிவிடும்!' என்று சொல்லி மகிழ்வான் வேறொரு சிற்றரசன். எல்லாப் புலவர்களுக்கும் கடைசியில் இன்னொரு புலவர் வந்தார். அவர் சிறையிலிருந்த சிற்றரசர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டார். கேட்டுக் கொண்டே சக்கரவர்த்தியின் சந்நிதானத்துக்குச் சென்று இந்தப் பாடலைச் சொன்னார்:

'என் கவிகை என் சிவிகை
என் கவசம் என் துவசம்
என் கரியீது என் பரியீது
என்பரால் - பன்கவள
மாவேந்தன் வாணன்
வரிசைப் பரிசு பெற்ற
பாவேந்தரை வேந்தர்
பார்த்து!'

"இவ்விதம் அந்தப் புலவர்கள் பாடிய பாடல் தமிழ் நாடெங்கும் அப்பாலும் பரவிவிட்டது. மக்கள் அடிக்கடி பாடியும் கேட்டும் மகிழ்ந்தார்கள். இதனால் எங்கள் இராஜ்யத்துக்கே ஆபத்து வந்துவிட்டது. எல்லா அரசர்களுமாகச் சேர்ந்து வந்து படையெடுத்து எங்கள் ஊரையும் அரண்மனையையும், சிறைச்சாலையையும் எல்லாவற்றையும் அழித்துவிட்டார்கள்..."

"எல்லாவற்றையும் அழித்தாலும் அந்தக் கவியின் பாடலை அழிக்க முடியவில்லையல்லவா? உங்கள் குலம் பாக்கியம் செய்த குலந்தான்! அதன் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்!"

"வாணர் குலத்தின் வீரப் புகழைக் கெடுக்க நான் ஒருவன் இப்போது ஏற்பட்டிருக்கிறேன்..."

"ஆகா! அந்த உண்மையை நீரே ஒப்புக் கொள்கின்றீர் அன்றோ?"

"ஒப்புக் கொள்ளாமல் வேறு என்ன செய்வது? அடிமைத்தனங்களுக்குள்ளே பெண்ணடிமை மிகப் பொல்லாதது. ஒரு பெண்மணியின் வார்த்தையைக் கேட்கப் போய், என் முன்னோர்களில் குலப்புகழுக்கு நான் மாசு தேடிக்கொள்ள நேர்ந்தது. ஓடி ஒளிந்து, மறைந்து திரிந்து உயிர் வாழ நேர்ந்தது. என் கோபத்தையெல்லாம் அந்த வைத்தியர் மகனைக் கொன்று தீர்த்துக்கொள்ளலாம் என்று பார்த்தேன். அதற்கும் ஒரு தடை வந்து குறுக்கிட்டு விட்டது..."

"ஐயா! வைத்தியர் மகன் பினாகபாணி மீது உமக்கு ஏன் அவ்வளவு கோபம்?"

"கோபத்துக்கு வேண்டிய காரணம் இருக்கிறது. நல்ல ஆளைப் பிடித்து என்னோடு கோடிக்கரைக்கு அனுப்பினீர்கள். அவன் என் காரியத்தையே கெடுத்துவிட இருந்தான். அது போகிறதென்றால், சற்று முன் இந்த ஊர் வீதியில் அவன் என்னைப் பகைவர்களின் ஒற்றன் என்று சொல்லிப் பழுவேட்டரையர்களிடம் பிடித்துக்கொடுக்கப் பார்த்தான். அங்கிருந்து தப்பி வந்தால், அரண்மனை முற்றத்தில் ஆயிரம் பதினாயிரம் பேருக்கு எதிரில் என்னைப் 'பழுவூர் ராணியின் ஒற்றன்' என்று குற்றம் சாட்டினான்..."

"வல்லத்து இளவரசரே! அது உண்மையல்லவா?"

"எது உண்மையல்லவா?"

"நீர் பழுவூர் ராணி நந்தினி தேவியின் ஒற்றன் என்று பினாகபாணி குற்றம் சாட்டியதைக் கேட்கிறேன். உண்மையைச் சொல்வீரா?"

"நான் உண்மை சொல்லுவதில்லையென்று விரதம் வைத்துக் கொண்டிருக்கிறேன், தேவி!"

"ஆகா! அது என்ன விரதம்? அரிச்சந்திர நதிக்கரையில் பழுவூர் ராணியைப் பார்த்ததிலிருந்து அப்படிப்பட்ட விரதம் எடுத்துக் கொண்டீரா?"

"இல்லை, இல்லை! அதற்கு முன்னாலேயே அந்த முடிவுக்கு வந்து விட்டேன். நான் உண்மைக்கு மாறானதைச் சொல்லிக் கொண்டிருந்த வரையில் எல்லாரும் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் வாய் தவறி 'இளவரசர் நாகைப்பட்டினத்தில் பத்திரமாயிருக்கிறார்' என்று சொன்னேன். ஒருவரும் நம்பவில்லை கேட்டவர்கள் எல்லாரும் சிரித்தார்கள்..."

"எவ்வளவு தவறான காரியத்தைச் செய்தீர்! உம்முடைய வார்த்தையை அவர்கள் நம்பாததே நல்லதாய்ப் போயிற்று! நம்பியிருந்தால் எவ்வளவு பிசகாகப் போயிருக்கும்?"

"இனிமேல் எப்போதும் இத்தகைய தவறுகள் நேரவே நேராது..."

"உமது வாக்குறுதிக்கு மிக்க நன்றி!"

"என்ன வாக்குறுதி கொடுத்தேன்?"

"இனிமேல் தவறு எதுவும் நேராமல் நான் இட்ட காரியத்தைச் செய்வதாக..."

"கடவுளே! அப்படி நான் ஒன்றும் வாக்குறுதி கொடுக்கவில்லை. போதும்! என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்து விடுங்கள்! என் வழியே போகிறேன்..."

"அப்படியானால் உமக்கு விடுதலை கிடையாது! இந்தச் சிறையிலேயே நீர் இருந்து வரவேண்டியதுதான்" என்றாள்.

வந்தியத்தேவன் கலகலவென்று சிரித்தான்.

"நீர் எதற்காகச் சிரிக்கிறீர்? நான் சொல்வது வேடிக்கை என்றா?"

"இல்லை, தேவி! இந்தச் சிறையிலிருந்து தாங்கள் என்னை விடுதலை செய்யாவிட்டால், நான் இதிலிருந்து தப்பிச் செல்ல முடியாதா?"

இளவரசி ஒரு கணம் வந்தியத்தேவனைத் தன் மலர்ந்த கண்களினால் உற்றுப் பார்த்துவிட்டு, "ஐயா, நீர் கெட்டிக்காரர்; அதிலும் சிறையிலிருந்து தப்பிச் செல்வதில் மிகக் கெட்டிக்காரர். பழுவேட்டரையரின் பொக்கிஷ நிலவறையிலிருந்து தப்பிச் சென்றவருக்கு இது ஒரு பிரமாதமா?" என்றாள்.

"அப்படியானால், நீங்களே கதவைத் திறந்து என்னை விடுதலை செய்யுங்கள்."

"நானே இந்தச் சிறையைத் திறந்து விடலாம். அல்லது நீரும் தப்பிச் செல்லலாம். ஆனால் இன்னொரு சிறைச்சாலையிலிருந்து நீர்தப்ப முடியாது..."

"சின்னப் பழுவேட்டரையரின் பாதாளச் சிறையைச் சொல்கிறீர்களா?"

"இல்லை; அதுவும் உமக்கு இலட்சியமில்லை; பாதாளச் சிறைவாசலில் காத்திருக்கும் புலிகளையும் வென்றுவிட்டுத் தப்பிச் சென்று விடுவீர்..."

"பின்னே, எந்தச் சிறையைச் சொல்கிறீர்கள்?"

"என்னுடைய இதயமாகிற சிறைச் சாலையைத்தான் சொல்கிறேன்."

"தேவி! நான் வீடு வாசல் அற்ற அநாதை. என்னுடைய குலப் பெருமையெல்லாம் பழைய கதை, கவிஞர் கற்பனை. தாங்களோ, மூன்று உலகையும் ஒரு குடை நிழலில் ஆளும் சக்கரவர்த்தியின் செல்வக்குமாரி...."

"யார் கண்டது? இந்தச் சோழ குலத்தின் பெருமையும் ஒருநாள் பழைய கதை ஆகலாம்."

"ஆயினும், இன்றைக்குத் தாங்கள் இந்நாட்டில் இணையற்ற, அதிகாரம் படைத்தவர். சக்கரவர்த்தியும், பழுவேட்டரையர்களும், முதல் மந்திரியும், தங்கள் விருப்பத்துக்கு மாறாக நடக்கத் துணியமாட்டார்கள்..."

"இதெல்லாம் உண்மையாயிருந்தால், நீர்மட்டும் எவ்விதம் என் அதிகாரத்தை மீற முடியும்?"

"அரசாங்க அதிகாரம் வேறு விஷயம். தாங்கள் நெஞ்சின் அதிகாரத்தையல்லவா குறிப்பிட்டீர்கள்."

"அதிலேதான் என்ன தவறு?"

"நம் இருவருக்கும் அந்தஸ்திலே உள்ள வித்தியாசம்தான் தவறு..."

"'அன்பிற்கும் உண்டோ , அடைக்கும் தாழ்' என்ற முதுமொழியைக் கேட்டதில்லையா?"

"அந்த முதுமொழி பொன்னியின் செல்வருக்கும் படகுக்காரி பூங்குழலிக்கும் கூடப் பொருந்துமல்லவோ?"

"ஆம்! பொருந்தும்தான்! என் தம்பி உலகமாளப் பிறந்தவன் என்று நினைத்தேன். அதனால் அவர்களுடைய நெஞ்சுக்கும் தாளிட விரும்பினேன்..."

"நானும் இளவரசரைப் பற்றி எவ்வளவோ கேள்விப்பட்டு விட்டுத்தான் ஆவலுடன் வந்தேன். அவரோடு எட்டுத் திசைகளுக்கும் சென்று போர்க்களங்களில் வீரச் செயல்கள் புரிந்து பெயரும் புகழும் அடைய விரும்பினேன்..."

"இப்போது அந்த ஆசை போய்விட்டதல்லவா?"

"ஆம்; பொன்னியின் செல்வர் அரசுரிமையைக் காட்டிலும் அமைதியான வாழ்க்கையை அதிகம் விரும்புகிறார். போர்க்களத்தில் வாளேந்தி வீசுவதைக் காட்டிலும் ஆலயத் திருப்பணியில் கல்லுளி கொண்டு வேலை செய்வதற்கு அதிகம் ஆசைப்படுகிறார்!..."

"மதுராந்தகனோ இராஜ்யம் ஆளுவதில் தீவிர நோக்கம் கொண்டிருக்கிறான். ஆடு புலியாக மாறுகிறது; புலி ஆடாகிறது. ஆலவாய் இறைவன் நரியைப் பரியாக்கிப் பரியை நரியாக்கியதாகச் சிவபக்தரின் வரலாறு கூறுகிறது. அதுபோல்..."

"தேவி தங்களுடைய கருணையினால் நானும் ஒரு நரியானேன். ஒளிந்து மறைந்தும், தந்திர மந்திரம் செய்தும், இல்லாதது பொல்லாததைச் சொல்லியும் பகைவர்களிடமிருந்து தப்பிவரவேண்டியதாயிற்று. அரசிளங்குமரி! இந்த வேலை இனிச் செய்ய என்னால் முடியாது! விடை கொடுங்கள்..."

"ஐயோ! என் பிராண சிநேகிதி என்று எண்ணியிருந்த வானதி என்னை கைவிட்டுப் போகப் பார்க்கிறாள். நீருமா என்னைக் கைவிட்டுப் போய்விட எண்ணுகிறீர்?"

"தேவி! கொடும்பாளூர் இளவரசிக்கும் தங்களுக்கும் உள்ள விவகாரத்தைப் பற்றி நான் அறியேன். ஆனால் நான் எப்படித் தங்களைக் கைவிட முடியும்? இராஜாதிராஜாக்கள் தங்களுடைய மணிப் பொற்கரத்தைக் கைப்பற்றத் தவம் கிடக்கிறார்கள். நானோ குற்றேவல் செய்ய வந்தவன்..."

இளையபிராட்டி அப்போது தன்னுடைய திருக்கரத்தை நீட்டினாள். இது கனவா, நனவா என்ற தயக்கத்துடன் வந்தியத்தேவன் அந்த மலர்க்கரத்தைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டான். அவனுடைய உள்ளமும் உடம்பும் பரவசமடைந்தன.

"வாணர் குலத்து வீரரே! கற்பென்னும் திண்மையைக் குலதனமாகப் பெற்ற பழந்தமிழ் மன்னர் வம்சத்தில் வந்தவள் நான். எங்கள் குலத்து மாநகரில் சிலர் கணவனுடன் உடன் கட்டை ஏறியதுண்டு. பதியின் உடலை எரித்த தீயைக்குளிர்ந்த நிலவென்று அவர்கள் கருதி அக்கினியில் குதித்தார்கள்.!"

"கேள்விப்பட்டிருக்கிறேன், தேவி!"

"உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம் இன்னொரு ஆடவனுடைய கையை ஒரு நாளும் பற்றாது..."

வல்லவரையன் சொல்லிழந்து செயலிழந்து குந்தவையின் கண்ணீர் ததும்பிய கண்களைப் பார்த்த வண்ணம் மதியும் இழந்து நின்றான்.

"ஐயா! உம்முடைய பதட்டமான காரியங்களினால் உமது உயிருக்கு ஏதேனும் அபாயம் நேர்ந்தால், என்னுடைய கதி என்ன ஆகும் என்பதைச் சிறிது எண்ணிப் பாரும்."

"தேவி! தங்களுடைய இதய சிங்காசனத்தில் இடம் பெற்ற இந்தப் பாக்கியசாலி உயிருக்குப் பயந்த கோழையாயிருக்க முடியுமா?"

"கோழைத்தனம் வேறு, ஜாக்கிரதை வேறு, ஐயா! முதன் மந்திரி அநிருத்தருக்குக்கூடத் தங்கள் வீரத்தைப் பற்றி ஐயம் கிடையாது."

"பின்னர், எதைப்பற்றி அவர் ஐயப்படுகிறார்..."

"நீர் பழுவூர் ராணியின் ஒற்றனாயிருக்கலாம் என்று ஐயுறுகிறார்.."

"அப்படியானால், வைத்தியர் மகன் பினாகபாணிக்கு அளித்த மறுமொழியை அவருக்கும் அளிக்கச் சித்தமாயிருக்கிறேன். சிறைக்கதவைத் திறந்து விடுங்கள்! அந்த மனிதர் எங்கே இருக்கிறார் என்று சொல்லுங்கள்!"

"வைத்தியர் மகனாவது மற்போரில் சிறிது பழக்கமுள்ளவன். அநிருத்தர் சொற்போர் அறிவாறேயன்றி மற்போர் அறியார். அறிவின் கூர்மையே அவருடைய ஆயுதம். வாளின் கூர்மையை அவர் என்றும் துணை கொண்டதில்லை..."

"அப்படியானால், என்னுடைய வாளின் கூர்மையைத்தான் முதன் முதலில் பரீட்சை பார்க்கட்டுமே?"

"ஐயா! இந்த நாட்டில் சக்கரவர்த்திக்கு அடுத்த மரியாதைக்குரியவர் முதன் மந்திரி அநிருத்தர். அவருடன் பகிரங்கமாக முரண்படப் பழுவேட்டரையர்களும் தயங்குகிறார்கள்..."

"பழுவேட்டரையர்கள் குற்றம் உள்ள நெஞ்சினர். அவர்கள் பயப்படுவார்கள்; நான் ஏன் பயப்பட வேண்டும்?"

"இளம் பிராயத்திலிருந்து என் தந்தையின் உற்ற தோழர் அவர். முதன் மந்திரிக்குச் செய்த அவமரியாதை சக்கரவர்த்திக்கும், எனக்கும் செய்த அவமரியாதையாகும்."

"அப்படியானால், அவருடைய நம்பிக்கையை நான் பெறுவதற்கு வழியையேனும் சொல்லுங்கள்."

"முதன் மந்திரி, காஞ்சிக்கு மிகவும் நம்பிக்கையான ஒருவரை அனுப்ப விரும்புகிறார். உம்மை அனுப்பலாம், நம்பி அனுப்பலாம் என்று நான் உறுதி அளித்திருக்கிறேன்."

"தேவி! காஞ்சிக்கு என்னை அனுப்பாதீர்கள்! என் மனத்திற்குள் ஏதோ ஒரு குரல், 'காஞ்சிக்குப் போகாதே!' என்று சொல்லிக் கொண்டிருக்கிறது."

"அது ஒருவேளை பழுவூர் இளைய ராணியின் குரலாயிருக்கலாம் அல்லவா?"

"இல்லவே இல்லை! தங்களுடைய சொல்லுக்கு மாறாக அந்த விஷ நாகத்தின் குரலை நான் கேட்பேனா?"

"ஐயா! பழுவூர் இளைய ராணியைப் பற்றி இனி எந்தச் சமயத்திலும் அப்படியெல்லாம் பேசாதீர்கள்!"

"இது என்ன? ஏன் இந்தத் திடீர் மாறுதல்?"

"ஆம்; என் மனம் அவள் விஷயத்தில் அடியோடு மாறிவிட்டது. நீர் இலங்கையிலிருந்து கொண்டு வந்த செய்தியைக் கேட்ட பிறகு."

"அப்படியானால் இனி நான் பழுவூர் இளைய ராணியிடமும் பயபக்தியுடன் நடந்து கொள்ள வேண்டியதுதானோ?"

"ஆம்!"

"அவள் பயபக்தியுடன் பூஜை செய்யும் கொலை வாளை என்னிடம் கொடுத்து, 'இன்னாருடைய தலையைக் கொண்டு வா!' என்று சொன்னாலும் கொண்டுவர வேண்டியதுதானோ?"

குந்தவை தேவியின் உடம்பு நடுங்கிற்று. மறுமொழி கூறியபோது அவளுடைய குரலும் நடுங்கிற்று.

"பழுவூர் ராணியிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால் அவள் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியமில்லை. அவள் எத்தகைய காரியத்தில் ஈடுபட்டிருக்கிறாள் என்பது அவளுக்கே தெரியாமலிருக்கலாம் அல்லவா?"

"அப்படித்தான் அவளும் கூறினாள். 'நான் எதற்காக இந்தக் கத்தியைப் பூஜை செய்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை' என்றாள்."

இதைக் கேட்ட இளவரசி இன்னும் அதிகமாக நடுங்கிய குரலில் "இந்தச் சோழர் தொல்குடியைத் தெய்வந்தான் காப்பாற்ற வேண்டும்" என்றாள்.

"காப்பாற்றுகிற தெய்வம் இந்த ஏழையைச் சாதனமாக வைத்துக்கொண்டு காப்பாற்றட்டும்" என்றான் வந்தியத்தேவன்.

"ஐயா! நானும் அவ்வாறுதான் நம்பியிருக்கிறேன். நீர் காஞ்சியிலிருந்து திரும்பி வந்ததும் மறுபடி ஒருதடவை இலங்கைக்குப் போக வேண்டும். அந்த ஊமைத்தாயை எப்படியாவது இங்கே அழைத்து வரவேண்டும்..."

"அவளை அழைத்து வருவது சுழிக்காற்றைக் குடத்தில் அடைத்துக் கொண்டு வருவது போலத்தான். இப்படி ஒரு முறை யாரோ சொன்னார்கள், ஆம். அந்த வீர வைஷ்ணவன் தான். ஒருவேளை அவனே அழைத்து வந்திருக்கலாம்."

"இல்லை; அவனால் அந்தக் காரியம் முடியவில்லை. உம்மாலேதான் அந்தக் காரியம் ஆக வேண்டும்."

"அப்படியானால் என்னைக் காஞ்சிக்கு அனுப்பாதீர்கள், தேவி!"

"ஏன்?"

"அங்கே என் எஜமானர் இருக்கிறார். அவர் கேட்டால் நான் எல்லா விவரங்களையும் சொல்லித்தான் ஆகவேண்டும். பழுவேட்டரையர்களும், மற்றச் சிற்றரசர்களும் செய்யும் சதியைப்பற்றி அறிந்தால் உடனே வெகுண்டு எழுவார். சக்கரவர்த்தியைச் சிறைவைப்பது போல் வைத்திருக்கிறார்கள் என்று அறிந்தால் உடனே படை எடுத்துக் கிளம்புவார். பொன்னியின் செல்வரைப் பற்றிய செய்தி அவர் காதில் எட்டியிருந்தால் இதற்குள்ளேயே ஒருவேளை புறப்பட்டிருந்தாலும் புறப்பட்டிருப்பார்..."

"அதற்காகவேதான் - உம்மை அனுப்ப விரும்புகிறேன். அவர் காஞ்சியைவிட்டுப் புறப்படாமல் எப்படியாவது தடுத்து விடவேண்டும்."

"நான் காஞ்சியை அடைவதற்குள் அவர் புறப்பட்டிருந்தால்?"

"வழியில் அவர் எங்கே இருந்தாலும் அங்கே போய்ச் சேர்ந்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும் விட முக்கியமாக நீர் அவசியம் செய்ய வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது..."

"சொல்லுங்கள்!"

"பெரிய பழுவேட்டரையர் இளையராணியுடன் கடம்பூர் மாளிகைக்குப் புறப்பட்டுவிட்டார் என்ற செய்தி கிடைத்திருக்கிறது..."

"உண்மையில் இளைய ராணிதான் போகிறாளா! அல்லது இளைய ராணியின் பல்லக்கில்..."

"இல்லை; இளைய ராணிதான் போகிறாள். என் சித்தப்பாதான் இன்னும் இங்கே இருக்கிறாரே!"

"எதற்காகப் போகிறார்களாம்?"

"ஆதித்த கரிகாலனையும் கடம்பூருக்கு வரும்படி அழைத்திருக்கிறார்கள். கல்யாணப் பேச்சு என்பது வெளிப்படையான காரணம். இராஜ்யத்தை இரண்டாகப் பிரித்துக் கொடுத்துச் சமாதானம் செய்து வைக்கப் போவதாகவும் ஒரு பேச்சு நடந்து வருகிறது."

"என் எஜமானர் அதற்கு ஒருநாளும் சம்மதிக்க மாட்டார்."

"அதைப் பற்றியெல்லாம் இப்போது எனக்குக் கவலை இல்லை."

"பின்னே என்ன கவலை தேவி!"

"இன்னதென்று சொல்லமுடியாத பயம் என் மனத்தில் குடி கொண்டிருக்கிறது நெஞ்சு 'திக் திக்' என்று அடித்துக் கொள்கிறது. அரைத் தூக்கத்தில் விவரமில்லாத பயங்கரங்கள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன. நல்ல தூக்கத்தில் அகோரமான கனவுகள் கண்டு விழித்துக் கொள்கிறேன். அப்புறம் வெகு நேரம் வரையில் என் உடம்பு நடுங்கிக் கொண்டிருக்கிறது."

"இந்த நிலையில் தங்களைப் பிரிந்து என்னை ஏன் போகச் சொல்லுகிறீர்கள்? தங்களுக்கு எத்தகைய அபாயம் வந்தாலும் என் உயிரைக் கொடுத்து..."

"ஐயா! என்னுடைய பயம் என்னைப் பற்றியதே அன்று. என் தமையனைப் பற்றியது; பழுவூர் ராணியைப் பற்றியது. அவர்கள் சந்தித்தால் என்ன நேரிடுமோ என்று எண்ணி என் உள்ளம் கலங்குகிறது. அவர்கள் தனியாகச் சந்திக்க முடியாதபடி நீர் தடை செய்ய வேண்டும்..."

"தேவி! அவர் ஒன்றும் செய்வதற்கு நினைத்தால் அதை யார் தடுக்க முடியும்?"

"ஐயா! என் தமையனைக் காப்பாற்றும் இரும்புக் கவசம் போல் நீர் உதவவேண்டும். அவசியமானால் நந்தினி யார் என்பதை என் சகோதரனிடம் சொல்லிவிட வேண்டும்..."

"அதை அவர் நம்ப வேண்டுமே?"

"நம்பும்படியாகச் சொல்வது உமது பொறுப்பு. எப்படிச் செய்வீர் என்று எனக்குத் தெரியாது. அவர்களை எப்படியேனும் சந்திக்க முடியாதபடி செய்தால் மிக்க நலமாயிருக்கும்."

"தேவி! என்னாலியன்ற முயற்சிகளைச் செய்து பார்க்கிறேன். தோல்வி அடைந்தால் என்னைக் குற்றம் சொல்ல வேண்டாம்" என்றான் வந்தியத்தேவன்."

"ஐயா! தாங்கள் தோல்வி அடைந்தாலும், வெற்றி அடைந்தாலும் என் இதயச் சிறையிலிருந்து இந்த ஜன்மத்தில் தங்களுக்கு விடுதலை கிடையாது!" என்றாள் அரசிளங்குமரி












Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 30. இரு சிறைகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 35. சக்கரவர்த்தியின் கோபம்
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 16. அருள்மொழிவர்மர்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 32. பரிசோதனை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: