BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  7. வாலில்லாக் குரங்கு Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 7. வாலில்லாக் குரங்கு

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  7. வாலில்லாக் குரங்கு Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 7. வாலில்லாக் குரங்கு   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  7. வாலில்லாக் குரங்கு Icon_minitimeMon May 23, 2011 3:46 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

நான்காம் பாகம் : மணிமகுடம்

7. வாலில்லாக் குரங்கு




மணிமேகலை சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தாள். தான் சற்று முன் கண்ட தோற்றம் வெறும் பிரமைதானா? அல்லது கனவில் கண்ட தோற்றமா? கனவாக இருந்தால் தான் தூங்கிக் கொண்டல்லவா இருக்க வேண்டும்? தன்னைத் தானே தொட்டுப் பார்த்துக் கொண்டாள்; இல்லை, தான் தூங்கவில்லை. பழுவூர் இளையராணிக்காக ஆயத்தமாயிருக்கும் அந்தப்புர அறை அல்லவா இது? பளிங்குக் கண்ணாடியில் தன் முகம் இதோ நன்றாகத் தெரிகிறது. அதோ குத்துவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. கண்ணாடிக்கு எதிரே சுவரை உற்றுப் பார்த்தாள். அங்கே ஓர் இரகசிய வாசல் இருப்பது அவளுக்குத் தெரியும். அதை வெளியிலிருந்தும் திறக்கலாம்; உள்ளிருந்தும் திறக்கலாம். மணிமேகலை அந்த இடத்தில் சுவர் ஓரமாக நின்று காதைச் சுவரோடு ஒட்டி வைத்து உற்றுக் கேட்டாள். அவ்விடத்தில் சுவரோடு சுவராக இருந்த இரகசியக் கதவு மரத்தினால் ஆனதுதான். ஆகையால் உள்ளே வேட்டை மண்டபத்தில் ஏதோ ஓசைப் பட்டது போல் கேட்டது.

மணிமேகலை மெதுவாக இரகசியக் கதவை திறந்தாள். வேட்டை மண்டபத்தில் எட்டிப் பார்த்தாள். அந்த மண்டபத்தின் பெரும் பகுதியில் இருள் சூழ்ந்திருந்தது. ஒரு மூலையில் சிறிய அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. திடீரென்று அச்சிறிய விளக்கின் ஒளி மங்கிற்று, அடுத்த கணம் முன் போல் பிரகாசித்தது. ஏதோ ஓர் உருவம் அவ்விளக்கின் முன்புறமாகக் குறுக்கே சென்றது போலிருந்தது. அக்காரணத்தினால்தான் விளக்கு ஒரு கணம் மறைந்து அடுத்த கணம் பிரகாசித்திருக்க வேண்டும். அப்படி விளக்கை ஒரு கணம் மறைத்த உருவம் அதன் முகம் - தான் சற்று முன் கண்ணாடியில் கண்ட முகம்தானா? அல்லது இதுவும் தன் சித்தக் கோளாறுதானா?

மணிமேகலை எட்டிப் பார்த்தபடியே கையைத் தட்டினாள், "யார் அங்கே?" என்று மெல்லிய குரலில் கேட்டாள். பதிலுக்கு ஒரு கனைப்புக் குரல் கேட்டது. வௌவால் ஒன்று தான் மேல் கூரையில் தொங்கிய இடத்திலிருந்து கிளம்பி 'ஜிவ்'வென்று பறந்து போய், கூரையில் இன்னொரு இடத்தைப் பற்றிக் கொண்டு தொங்கிற்று. மறுபடியும் மிக மிக இலேசான இருமல் சத்தம்.

மணிமேகலை அவ்வாசற்படியில் நின்றபடியே, "அடியே சந்திரமதி!" என்று உரத்த குரலில் கூறினாள்.

"ஏன் அம்மா!" என்று பதில் வந்தது.

"கை விளக்கை எடுத்துக் கொண்டு உடனே இங்கு வா!" என்றாள் மணிமேகலை.

சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு பணிப்பெண் கையில் விளக்குடன் வந்தாள். "இங்கேதான் விளக்கு நன்றாக எரிகிறதே? எதற்கு அம்மா, விளக்கு?"

"வேட்டை மண்டபத்துக்குள்ளே போய்ப் பார்க்க வேண்டும் ஏதோ ஓசை கேட்டது."

"வௌவால் இறகை அடித்துக் கொண்டிருக்கும், அம்மா! வேறு என்ன இருக்கப் போகிறது?"

"இல்லையடி! சற்று முன் இந்தப் பளிங்குக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று என் முகத்துக்குப் பக்கத்தில் இன்னொரு முகம் தெரிந்ததடி!"

"அந்த முகம் எப்படி இருந்தது? மன்மதன் முகம் போல் இருந்ததா? அர்ச்சுனன் முகம் போல் இருந்ததா?" என்று கூறிவிட்டுப் பணிப்பெண் சிரித்தாள்.

"என்னடி, சந்திரமதி! பரிகாசமா செய்கிறாய்?"

"இல்லை, அம்மா இல்லை! நீங்கள் அடிக்கடி கனவில் காண்பதாகச் சொன்னீர்களே? அவர்தான் இப்போது கண்ணாடியில் தோன்றினாரோ?"

"ஆமாண்டி, சந்திரமதி! ஆனால் ரொம்ப ரொம்ப நிஜம் போலிருந்தது."

"எல்லாப் பெண்களுக்கும் இப்படித்தான் ஒரு சமயம் சித்தப்பிரமை பிடிக்கும். உங்களுக்கும் இன்னும் இரண்டொரு நாள் தான் அப்படி இருக்கும். நாளைக்குக் காஞ்சியிலிருந்து வரும் இளவரசரைப் பார்த்து விட்டீர்களானால், அந்தப் பழைய முகம் அடியோடு மறந்து போய்விடும்."

"அது இருக்கட்டுமடி! இப்போது இந்த வேட்டை மண்டபத்துக்குள் போய்ப் பார்க்கலாம், வா!"

"வீண் வேலை, அம்மா! வேட்டை மண்டபத்தில் ஒரே தூசியும் தும்புமாக இருக்கும் சேலை வீணாய்ப் போய்விடும்!"

"போனால் போகட்டுமடி!"

"இருமலும் தும்மலும் வரும் நாளைக்கு எல்லோரும் வரும் சமயத்தில்..."

"சும்மா வரட்டும், வேட்டை மண்டபத்தை இப்போது சோதித்துப் பார்த்தேயாக வேண்டும்; விளக்கை அசைத்து அணைத்து விடாமல் எடுத்து வா!"

இவ்விதம் கூறிக் கொண்டே மணிமேகலை வேட்டை மண்டபத்துக்குள் பிரவேசித்தாள். தோழியும் விளக்குடன் அவளைத் தொடர்ந்து வந்தாள். இருவரும் சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தார்கள். சந்திரமதி கையிலிருந்த தீபத்துக்கு மேலாக நோக்கி உயிர் அற்ற மிருகங்களை மட்டும் பார்த்துக் கொண்டே வந்தாள். மணிமேகலையோ சில சமயம் தரையிலும் பார்த்தாள். தரையில் படிந்திருந்த புழுதியில் அங்குமிங்கும் கால் சுவடுகள் இருந்ததைக் கவனித்துக் கொண்டாள்.

"அம்மா, அதோ!" என்றாள் சந்திரமதி.

"என்னடி இப்படிப் பதறுகிறாய்?"

"அதோ அந்த வாலில்லாக் குரங்கு அசைந்தது போலிருந்தது!"

"உன்னைப் பார்த்து அது தன் சந்தோஷத்தைத் தெரியப்படுத்தியதாக்கும்?"

"என்ன அம்மா, என்னைக் கேலி செய்கிறீர்களே?"

"நான் பிரமைபிடித்து அலைகிறேன் என்று நீ மட்டும் என்னைப் பரிகாசம் செய்யவில்லையா?"

"ஒருவேளை உங்கள் கண்ணாடியில் தெரிந்த முகம் அந்தக் குரங்கின் முகம்தானோ என்னமோ! நாம் வந்த வாசலுக்கு நேரே இருக்கிறது, பாருங்கள்! குரங்கு மறுபடியும் அசைகிறது!"

"சீச்சீ! உன் விளக்கின் நிழலடி! விளக்கின் நிழல் அசையும் போது அப்படிக் குரங்கு அசைவது போலத் தெரிகிறது வா போகலாம்! இங்கே ஒருவரையும் காணோம்!"

"அப்படியானால் அந்தக் குரங்கு முகம்தான் கண்ணாடியில் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிடில் அதோ மேலே உட்கார்ந்திருக்கிறதே, அந்த ஆந்தையின் முகமாக இருக்கலாம். அது நம்மைப் பார்த்து எப்படி விழிக்கிறது பாருங்கள்!"

"என்னை ஏன் சேர்த்துக்கொள்கிறாய்? உன் அழகைப் பார்த்துச் சொக்கிப் போய்த்தான் அந்த ஆந்தை அப்படிக் கண்கொட்டாமல் பார்க்கிறது!"

"பின்னே, தங்களைக் கண்ணாடியில் எட்டிப் பார்த்த முகம் யாருடைய முகமாயிருக்கும்?"

"அடியே! எனக்குத் தான் சித்தப்பிரமை என்று நீ முடிவு கட்டி விட்டாயே? என் கனவில் அடிக்கடி தோன்றும் முகம் கண்ணாடியிலும் தோன்றியிருக்கலாம். அந்தச் சுந்தர முகத்தைப் பார்த்த கண்ணால் இந்தக் குரங்கையும் ஆந்தையையும் பார்க்க வேண்டி வந்ததே என்று எனக்குக் கஷ்டமாயிருக்கிறது, வாடி, போகலாம்! கண்ணாடியில் இன்னொரு தடவை அந்த முகம் தெரியுமா என்று பார்க்கிறேன்!"

இரண்டு பெண்களும் மறுபடியும் வந்த வழியே புகுந்து அந்தப்புற அறைக்குள்ளே போனார்கள்.

வாலில்லாக் குரங்குக்குப் பின்னாலிருந்து வந்தியத்தேவன் வெளியில் வந்தான். இரண்டு மூன்று தடவை தும்மி மூக்கில் புகுந்திருந்த தூசி துப்பைகளைப் போக்கிக் கொண்டான். தன்னை அவ்வளவு நன்றாக மறைத்திருந்த வாலில்லாக் குரங்குக்குத் தனது நன்றியைச் செலுத்தினான்.

"ஏ குரங்கே! நீ வாழ்க! அந்தப் பணிப்பெண் என் முகத்தை உன் முகத்தோடு ஒப்பிட்டாள். அப்போது எனக்குக் கோபமாய்த்தான் இருந்தது. வெளியில் வந்து விடலாமா என்று கூட எண்ணினேன், நல்ல வேளையாய்ப் போயிற்று மனத்தை அடக்கிக் கொண்டேன். நீ மட்டும் இங்கே ஆள் உயரத்துக்கு நின்றிராவிட்டால் என் கதி என்ன ஆயிருக்கும்? அந்தப் பெண்களிடம் அகப்பட்டுக் கொண்டிருப்பேன்! குரங்கே! நீ நன்றாயிருக்க வேணும்!"

இப்படிச் சொல்லி முடிக்கும்போதே, அந்தப் பெண்களிடம் அகப்பட்டுக் கொண்டிருந்தாலும் அப்படி ஒன்றும் விபரீதமாகப் போயிராது என்ற எண்ணம் அவன் மனத்தில் தோன்றியது. அவர்கள் யார் என்பதை முன்னமே ஊகித்துக் கொண்டிருந்தான். அவர்கள் பேசிய வார்த்தைகள் யாவும் அவன் காதில் நன்றாய் விழுந்தன. அதிலும் மணிமேகலை உரத்த குரலில் கணீர் என்று பேசினாள். கனவில் கண்ட முகத்தைப் பற்றியும் கண்ணாடியில் பார்த்த முகத்தைப் பற்றியும் அவள் ஏதோ பேசினாளே, அது என்ன? பழைய சம்பவங்கள் அவனுக்கு நினைவு வந்தன. கந்தமாறன் அடிக்கடி இவளிடம் தன்னைப் பற்றி பேசியிருப்பதாகச் சொல்லியிருக்கிறான். முன் தடவை இந்த மாளிகைக்கு வந்திருந்தபோது அவளை அரைகுறையாகப் பார்த்துச் சென்றதும், கந்தமாறன் அவளை வேறு பெரிய இடத்தில் மணம் செய்து கொடுக்கப் போவதாகச் சொன்னதும் ஞாபகத்துக்கு வந்தன. இந்தப் பேதைப் பெண் ஒருவேளை அவளுடைய மனத்தை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறாளா, என்ன...?

அதைப்பற்றி யோசிப்பதற்கு இப்போது நேரம் இல்லை; வெளியேறும் வழியைப் பார்க்க வேண்டும். யானைத் தந்தப் பிடியுள்ள வழி அந்தப்புரத்துக்குள் போகிறது. ஆகையால் அது தனக்குப் பயன்படாது. தான் வந்த வழியைத்தான் தேடிப் பிடிக்க வேண்டும். இரகசிய வழிகளின் கதவுகளை உள்ளேயிருந்து திறப்பதற்கும் வெளியிலிருந்து திறப்பதற்கும் வெவ்வேறு முறைகள் உண்டு என்பது அவனுக்குத் தெரிந்ததே. திறப்பது எப்படி என்று கஷ்டப்பட்டுக் கண்டுபிடிக்கலாம். ஆனால் இரகசிய வழி எங்கே இருக்கிறது என்று தெரிந்தால் அல்லவா திறப்பதற்கு வழி கண்டுபிடிக்கலாம்? சுவரை எவ்வளவு உற்று உற்றுப் பார்த்தாலும் ஒன்றும் தெரியவில்லை; வெளிச்சமும் போதவில்லை. தான் புகுந்த இடத்துக்குப் பக்கத்தில் முதலை ஒன்று கிடந்தது என்பது அவன் நினைவுக்கு வந்தது. அங்கே போய் அருகிலுள்ள சுவர்ப் பகுதியையெல்லாம் தடவிப் பார்த்தால், ஒருவேளை வெளியேறும் வழி புலப்படலாம்.

இவ்வாறு நினைத்து முதலைக்கு அருகில் சென்று சுற்றுப் பக்கத்துச் சுவரையெல்லாம் தடவி தடவிப் பார்த்தான் ஒன்றும் பயன்படவில்லை. நேரமாக ஆகக் கவலை அதிகரித்து வந்தது. இது என்ன தொல்லை? நன்றாக இந்தச் சிறைச்சாலையில் அகப்பட்டுக் கொண்டோ மே? கடவுளே! அந்தப்புரத்துக்குள் புகுவதைத் தவிர வேறு வழி இல்லை போலிருக்கிறதே! அப்படி அந்தப்புரத்துக்குள் புகுந்தால் அதில் எத்தனை அபாயங்கள்! ஒருவேளை மணிமேகலை தன்னிடம் அனுதாபம் காட்டலாம். ஆயினும் தான் அவளிடம் இங்கே இப்படி இரகசியமாக வந்ததற்கு என்ன காரணம் சொல்வது? "உன்னிடம் கொண்ட காதலினால் வந்தேன்!" என்று சொல்லலாமா? அது எவ்வளவு கொடூரமான பொய்யாயிருக்கும்? துணிந்து அத்தகைய பொய் சொன்னாலும் அவள் நம்புவாளா? மணிமேகலை மட்டும் தனியாய் இருப்பாள் என்பது என்ன நிச்சயம்? மற்றப் பெண் பிள்ளைகளுக்கிடையில் அகப்பட்டுக் கொண்டால்? சம்புவரையர் அறிந்தால் கட்டாயம் தன்னைக் கொன்றே போடுவார்?

மறுபடியும் வந்தியத்தேவனுடைய கவனம் தரையில் கிடந்த முதலையின் மீது சென்றது. அதன் பேரில் அவனுக்குக் கோபமும் வந்தது. "முதலையே! எதற்காக இப்படி வாயைப் பிளந்து கொண்டே இருக்கிறாய்!" என்று சொல்லிக் கொண்டே அதை ஓங்கி ஒரு உதை உதைத்தான். உதைத்த போது முதலை கொஞ்சம் நகர்ந்தது. அதே சமயத்தில் சுவர் ஓரமாகத் தரையில் ஒரு சிறிய பிளவு தெரிந்தது!

"ஆகா! நீதானா வழியை அடைத்துக் கொண்டிருக்கிறாய்? முட்டாள் முதலையே! முன்னாலேயே சொல்வதற்கு என்ன?" என்று சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் குனிந்து முதலையைப் பிடித்து நகர்த்தினான். முதலை நகர நகரச் சுவர் ஓரத்தில் துவாரம் பெரிதாகி வந்தது கீழே படிகளும் தெரிந்தன.








Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 7. வாலில்லாக் குரங்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 34. அநுராதபுரம்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 11. திடும்பிரவேசம்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 43. பழையாறை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: