BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  9. நாய் குரைத்தது! Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 9. நாய் குரைத்தது!

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  9. நாய் குரைத்தது! Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 9. நாய் குரைத்தது!   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  9. நாய் குரைத்தது! Icon_minitimeMon May 23, 2011 4:03 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

நான்காம் பாகம் : மணிமகுடம்

9. நாய் குரைத்தது!



மணிமேகலை வந்தியத்தேவனுடைய முகத்தைப் பார்த்த வண்ணம் நின்றாள். வந்தியத்தேவனும் புன்னகை புரிந்தவண்ணம் நின்றான். இந்தப் பெண்ணிடம் என்ன சொல்லி விட்டு எப்படி தப்பிச் செல்வது என்று அவன் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது.

இச்சமயம் எங்கேயோ தூரத்திலிருந்து ஒரு குரல் "அம்மா! என்னை அழைத்தீர்களா?" என்று கேட்டது.

"இல்லையடி உன் வேலையைப் பார்!" என்றாள் மணிமேகலை. உடனே அவளுடைய திகைப்பு நீங்கியது.

சற்று முன் வந்தியத்தேவன் புகுந்து வந்த துவாரத்தின் அருகில் சென்று உட்பக்கத்துத் தாளையிட்டாள். பின்னர் வந்தியத்தேவனுக்குச் சமிக்ஞை காட்டி அந்த அறையிலேயே சற்றுத் தூரமாக அழைத்துச் சென்றாள். சட்டென்று திரும்பி நின்று "ஐயா! உண்மையைச் சொல்லும்! சந்திரமதி உம்மை அழைத்ததாகக் கூறினீரே, அது நிஜமா?" என்று கேட்டாள்.

"ஆம், அம்மணி!"

"எப்போது, எங்கே பார்த்து உம்மை அழைத்தாள்?"

"சற்று முன்னால்தான்! அடுத்த அறையில் நான் குரங்கின் பின்னால் மறைந்து நின்றபோது நீங்கள் இருவரும் வந்து பார்த்துவிட்டுத் திரும்பினீர்கள். நீங்கள் திரும்பிய பிறகு அவள் என்னைப் பார்த்து, 'குரங்கே! நீ என்னுடைய அறைக்கு வந்து இருக்கிறாயா? வேண்டாத சமயத்தில் வருகிறவர்களைப் பயமுறுத்தி அனுப்பச் சௌகரியமாயிருக்கும்!' என்றாள். அது தங்கள் காதில் விழவில்லை போலிருக்கிறது!"

மணிமேகலை இளநகை புரிந்தவண்ணமாக "காதில் விழுந்திருந்தால் அவளைச் சும்மா விட்டிருப்பேனா?" என்றாள்.

"இளவரசி! தங்கள் தோழி பேரில் கோபிப்பதில் பயன் என்ன? என் முகமும் வாலில்லாக் குரங்கின் முகமும் ஒன்று போலிருந்தால் அதற்குச் சந்திரமதி என்ன செய்வாள்?"

"உமது முகத்துக்கும் வாலில்லாக் குரங்கின் முகத்துக்கும் வெகு தூரம்!"

"குரங்கின் முகத்துக்கும் அதற்கு மேலே தொங்கிய ஆந்தையின் முகத்துக்கும் உள்ள தூரம் போலிருக்கிறது."

"உமது முகம் குரங்கு முகமும் அல்ல; ஆந்தை முகமும் அல்ல. ஆனால், குரங்கின் சேஷ்டையெல்லாம் உம்மிடம் இருக்கிறது. சில சமயம் ஆந்தையைப் போலவும் விழிக்கிறீர்! சற்று முன்னால் இதோ இந்தக் கண்ணாடியில் எட்டிப் பார்த்து விழித்தது நீர் தானே?"

"ஆம், இளவரசி, நான்தான்!"

"எதற்காக, உடனே பின்வாங்கிக் கதவைச் சாத்திக் கொண்டீர்?"

"இந்தக் கண்ணாடியில் என் முகத்துக்கு அருகில் ஒரு தேவ கன்னிகையின் முகம் போலத் தெரிந்தது. அந்த தேவ கன்னிகை என் முகத்தைப் பார்த்துப் பயந்து கொள்ளப் போகிறாளே என்று நான் பிடித்திருந்த யானைத் தந்தத்திலிருந்து கையை எடுத்தேன் கதவு தானாகச் சாத்திக் கொண்டது."

"அந்தத் தேவ கன்னிகை யார் என்பது உங்களுக்கு தெரியுமா?"

"அந்த க்ஷணம் எனக்குத் தெரியவில்லை பிறகு நினைத்துப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்."

"என்ன தெரிந்து கொண்டீர்?"

"நான் பார்த்தது தேவ கன்னிகை அல்ல; தேவ கன்னிகைகள் ஓடி வந்து அடிபணிவதற்குரிய மணிமேகலாதேவி! கடம்பூர் சம்புவரையரின் செல்வக் குமாரி என்று தெரிந்து கொண்டேன். என்னுடைய ஆருயிர் நண்பன் கந்தமாறனுடைய அருமைத் தங்கை என்பதும் நினைவுக்கு வந்தது."

மணிமேகலையின் புருவங்கள் நெறித்தன ஏளனமும் கோபமும் கலந்த புன்சிரிப்புடன், "அப்படியா? என் தமையன் கந்தமாறன் தங்களுடைய ஆருயிர் நண்பனா?" என்றாள்.

"அதில் என்ன சந்தேகம், இளவரசி! நாலு மாதங்களுக்கு முன்னால் நான் இங்கு ஒருநாள் வந்திருந்தது நினைவில்லையா? அந்தப்புரத்துக்குகூட வந்து தாய்மார்களுக்கு வணக்கம் செலுத்தினேனே! அது ஞாபகம் இல்லையா!"

"நன்றாய் ஞாபகம் இருக்கிறது அதற்குள் மறந்து விடுமா? அந்த வல்லவரையர் வந்தியத்தேவர் என்னும் வாணர் குலத்து இளவரசர் தாங்கள்தானா?"

"ஆம் இளவரசி! தங்குவதற்கு அரண்மனையும் ஆளுவதற்கு இராஜ்யமும் இல்லாமல் 'அரையன்' என்ற குலப்பெயரை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கும் அந்த ஏழை நான் தான்! ஒரு காலத்தில் தங்கள் தமையன் என்னிடம் தங்களைப் பற்றி எவ்வளவோ சொல்லியதுண்டு. ஒரு காலத்தில் நானும் கந்தமாறனும் வடபெண்ணை நதிக்கரையில் காவல் செய்து கொண்டிருந்தபோது, தங்களைப் பற்றி அடிக்கடி சொல்லுவான். நானும் ஏதேதோ கனவு கண்டு கொண்டிருந்தேன். பிறகு அந்த எண்ணத்தை மறந்து விட்டேன்."

மணிமேகலையின் உள்ளத்தில் ஓர் அதிசயமான எண்ணம் தோன்றியது. இவன் தன்னைக் குத்திக் கொல்ல முயன்றதாகக் கந்தமாறன் கூறினான். அது எதற்காக இருக்கும்? ஒருவேளை தன்னைப் பற்றியதாகவே இருக்குமோ? தன்னை இவனுக்கு மணம் செய்து கொடுக்க போவதில்லை என்று சொன்னதற்காகக் கந்தமாறனுடன் சண்டையிட்டிருப்பானோ? இந்த எண்ணம் அவள் உள்ளத்தில் இன்பப் புயலை உண்டாக்கியது. அதை அவள் கோபப் புயலாக மாற்றிக் கொண்டாள்.

"ஐயா! பழைய கதையெல்லாம் இப்போது வேண்டாம். இந்த அரண்மனையில் நீர் கள்ளத்தனமாகப் புகுந்ததின் காரணத்தைச் சொல்லும்; இல்லாவிடில் உடனே என் தோழியை அழைத்துத் தந்தைக்குச் சொல்லி அனுப்பவேணும்" என்றாள்.

"இளவரசி! நான் இங்கு வந்த காரணத்தை முன்பே சொன்னேனே! சில கொலைகாரர்கள் என்னைக் கொல்லுவதற்காகத் துரத்திக் கொண்டு வந்தார்கள். அவர்களிடமிருந்து தப்பி ஓடிவந்தபோது பூமியில் ஒரு துவாரம் தெரிந்தது. அது ஏதோ இரகசியப் பாதை என்று அறிந்து கொண்டேன். அதன் வழியாக ஓடித் தப்பிக்கலாம் என்று வந்தபோது, அந்த வழி இங்கே கொண்டு வந்து சேர்த்தது!"

"ஐயா! சுத்த வீரர் என்றால் உமக்கே தகும் நானும் எத்தனையோ அஸகாய சூரர்களைப் பற்றிக் கேட்டிருக்கிறேன். ஆனால் உம்மைப்போல் ஓட்டத்தில் சூரனைப் பற்றிக் கேட்டதில்லை. உத்தரகுமாரன் உம்மிடம் பிச்சை வாங்க வேண்டியது தான்!"

வந்தியத்தேவன் மனத்தில் சுரீர் என்றது தான் அசட்டுப் பெண் என்று நினைத்த மணிமேகலை இப்படித் தன்னைக் குத்திக் காட்டும்படி ஆகிவிட்டதல்லவா? "தேவி! அவர்கள் ஏழெட்டுப் பேர்! நான் ஒருவன். அவர்கள் ஆயுதபாணிகள் என்னிடம் ஆயுதமே இல்லை. என்னுடைய அருமை வேல் கொள்ளிடத்து வெள்ளத்தில் போய் விட்டது."

"ரொம்ப நல்லது! அந்தப் படுபாதக வேல், சிநேகிதனைப் பின்னாலிருந்து குத்திக் கொல்லும் வேல் ஆற்றோடு போனதே நல்லது!"

வந்தியத்தேவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவன் பதில் சொல்ல வாயெடுப்பதற்குள் மணிமேகலை, "உண்மையைக் கூறிவிடும் கொலைக்காரர்களிடம் தப்புவதற்காக ஓடிவந்தீரா? கொலை செய்வதற்காக இங்கு வந்தீரா?" என்று கேட்டாள்.

வந்தியத்தேவன் தீயில் காலை வைத்தவனைப் போல் துடித்து " சிவசிவா! நாராயணா! நான் யாரை கொலை செய்வதற்காக இங்கே வரவேணும்? என் ஆருயிர் சிநேகிதரின் அருமைத் தங்கையையா? எதற்காக?" என்றான்.

"நான் என்ன கண்டேன்? 'அருமை சிநேகிதன்' என்று வாய்கூசாமல் பொய் சொல்கிறீரே? அப்பேர்ப்பட்ட அருமை சிநேகிதனின் பின்னாலிருந்து முதுகிலே குத்திக் கொல்லுவதற்கு நீர் முயலவில்லையா? அது எதற்காகவோ, அதே காரணத்துக்காக, இங்கே யாரையேனும் கொலை செய்வதற்கு நீர் வந்திருக்கலாம்."

"கடவுளே! இது என்ன வீண் பழி? நானா கந்தமாறனின் முதுகில் குத்தினேன்? அப்படிப்பட்ட காரியத்தைச் செய்வதற்கு முன்னால் என் கையை வெட்டிக் கொண்டிருப்பேனே? இளவரசி! இத்தகைய படுபாதகமான பொய்யைத் தங்களிடம் யார் கூறினார்கள்?"

"என் அண்ணனே கூறினான் வேறு யாராவது கூறியிருந்தால் நான் நம்பியே இருக்க மாட்டேன்."

"கந்தமாறனா இப்படிக் கூறினான்? அப்படியானால் நான் உண்மையில் துர்ப்பாக்கியசாலிதான்! யாரோ அவனை முதுகிலே குத்தித் தஞ்சாவூர் மதில் சுவருக்கு அருகில் போட்டிருந்தார்கள். மூர்ச்சையாகிக் கிடந்த அவனை நான் தூக்கிக் கொண்டு போய்ச் சேந்தன் அமுதன் குடிசையில் சேர்த்துக் காப்பாற்றினேன். அதற்கு எனக்குக் கிடைத்த வெகுமதியா இது? இளவரசி! எதற்காக அவனை நான் கொல்ல முயன்றேனாம்? ஏதாவது காரணம் சொன்னானா?"

"சொன்னான், சொன்னான்! நீர் என் அழகைப் பழித்து, அவலட்சணம் பிடித்தவள் என்று இகழ்ந்தீராம். தஞ்சாவூர்ப் பெண்கள் என்னைவிட அழகிகள் என்று சொன்னீராம். அதனால் கந்தமாறன் கோபங்கொண்டு உம்மை நன்றாய்ப் புடைத்தானாம். நேருக்கு நேர் சண்டையிடக் கையினாலாகாமல் பின்னாலிருந்து குத்தி விட்டீராம்! இதெல்லாம் உண்மையா, இல்லையா?"

"பொய்! பொய்! பயங்கரமான பொய்; தங்களை அவலட்சணம் என்று சொல்வதற்கு முன்னால், என் நாக்கையே துண்டித்துக் கொண்டிருப்பேனே! கந்தமாறன் அல்லவா அவனுடைய சகோதரியை நான் மறந்து விடவேண்டும் என்று வற்புறுத்தினான்?"

"எதற்காக?"

"இராஜ்யம் ஆளும் பேரரசர்கள் தங்களை மணந்து கொள்ளக் காத்திருப்பதால் தங்களை நான் மறந்துவிட வேண்டுமென்று வற்புறுத்தினான்."

"நீரும் அடியோடு என்னை மறந்து விட்டீராக்கும்!"

"என்னால் அடியோடு மறக்க முடியவில்லை ஆனால் அது முதல் தங்களை என் அருமைச் சகோதரியாகக் கருதத் தொடங்கினேன். இளவரசி! உடனே கந்தமாறனிடம் என்னை அழைத்துப் போங்கள்! அல்லது அவனை இங்கே அழையுங்கள். ஏன் இத்தகைய பெரும் பொய்யை அவன் சொன்னான் என்றாவது தெரிந்து கொள்கிறேன், அல்லது உண்மையிலேயே அவன் அப்படி எண்ணிக் கொண்டிருந்தால், அந்தத் தப்பெண்ணத்தைப் போக்குகிறேன்."

"தஞ்சாவூரில் ஆரம்பித்த காரியத்தை இங்கே பூர்த்தி செய்து விடலாம் என்று வந்தீராக்கும்..."

"அப்படி என்றால்..."

"அங்கே அவனைக் கொல்ல முயன்றீர் அந்த முயற்சி பலிக்கவில்லை..."

"கடவுளே! கந்தமாறனைக் கொல்லுவதற்கு அவனுடைய அரண்மனையைத் தேடியா வருவேன்!"

"இரகசிய வழியாக வந்தது வேறு எதற்காக?"

"அதோ, உற்றுக் கேளுங்கள்! என்னைக் கொல்ல வந்தவர்கள் அடுத்த அறையில் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் நடமாடும் சத்தமும் பேசும் குரல்களும் கேட்கவில்லையா?"

"அவர்கள் எதற்காக உம்மைக் கொல்ல வரவேணும்?"

"அவர்களைப் பார்த்தால் மந்திரவாதிகள் போலிருக்கிறது. ஒருவேளை நரபலி கொடுக்கும் கூட்டமாயிருக்கலாம்."

"சகல இலட்சணங்களும் பொருந்திய ராஜகுமாரனாகிய உம்மை அதற்காகப் பிடித்தார்கள் போலிருக்கிறது.." என்று கூறி மணிமேகலை சிரித்தாள்.

"அதுதான் எனக்கும் அதிசயமாயிருக்கிறது; இந்த ஆந்தை விழி விழிக்கும் குரங்கு மூஞ்சிக்காரனை அவர்கள் எதற்காகப் பிடிக்க வந்தார்கள் என்று தெரியவில்லை. உங்கள் பேச்சைக் கேட்ட பிறகு ஒரு சந்தேகம் உதிக்கிறது. ஒருவேளை என் நண்பன் கந்தமாறனே இப்படிப்பட்ட ஏற்பாடு செய்திருப்பானோ என்று. அவனிடம் உடனே என்னை அழைத்துச் செல்லுங்கள்! ஒன்று அவனுடைய தப்பபிப்பிராயத்தைப் போக்கிக் கொள்ளட்டும்; இல்லாவிட்டால் என்னை அவன் கையினாலேயே கொன்று விடட்டும். கொலைக்காரர்களை எதற்காக ஏவ வேண்டும்? அம்மணி! உடனே கந்தமாறனை அழைத்து விடுங்கள்!"

"ஐயா! அவ்வளவு அவசரப்பட வேண்டாம் கந்தமாறன் ஊரில் இல்லை."

"எங்கே போயிருக்கிறான்?"

"காஞ்சிக்குக் கரிகாலரை அழைத்து வரப் போயிருக்கிறான். நாளை இரவு எல்லாரும் இங்கு வந்து விடுவார்கள்; அதுவரையில் நீர்..."

"அதுவரையில் என்னை இங்கேயே இருக்கச் சொல்கிறீர்களா? அது நியாயமல்ல!"

"இங்கே இருக்கச் சொல்லவில்லை இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் இங்கே பழுவூர் இளையராணி வந்து விடுவாள். பிறகு ஈ காக்காய் இங்கே வர முடியாது. பழுவேட்டரையர் எப்பேர்ப்பட்டவர் என்பது உமக்குத் தெரிந்திருக்கும். அவர் உம்மை இங்கே கண்டால் உடனே கண்டதுண்டமாய் வெட்டிப் போட்டுவிடச் செய்வார்! ஆ! அக்கிழவருக்குத்தான் பெண்டாட்டியின் பேரில் எவ்வளவு ஆசை!" என்று சொல்லி மணிமேகலை சிரித்தாள்.

வந்தியத்தேவன் முன் தடவை பழுவேட்டரையர் வந்த போது நடந்ததையெல்லாம் நினைத்துக் கொண்டான்.

"அப்படியா? பழுவேட்டரையருக்குப் பழுவூர் ராணி பேரில் ரொம்ப ரொம்ப ஆசையா?" என்று கேட்டான்.

"அது நாடு நகரம் எல்லாம் தெரிந்த விஷயம் ஆயிற்றே! போன தடவை, எட்டு மாதங்களுக்கு முன்னால் இங்கே ஒரு தடவை அவர்கள் வந்திருந்தார்கள். பழுவூர் ராணி அந்தப்புரத்துக்கு வரக் கூடக் கிழவர் விடவில்லை! அப்படிக் கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாக்கிறார். இந்தத் தடவை சில நாள் இங்கே இருக்கப் போகிறார்களாம். பழுவூர் ராணிக்குத் தனி அந்தப்புரம் வேண்டுமென்று ஒரே தடபுடல். இந்தத் தடவையாவது எங்களையெல்லாம் பார்க்கப் போகிறாளோ - பார்ப்பதற்குக் கிழவர் விடப் போகிறாரோ, தெரியவில்லை."

"அப்படியானால் நான் இப்பொழுது என்ன செய்யட்டும்?"

"அதுதான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் - ஆ! ஒரு யோசனை தோன்றுகிறது. என் தமையன் கந்தமாறனுடைய தனி ஆயுத அறை ஒன்று இந்த மாளிகையில் இருக்கிறது. அதில் உம்மைக் கொண்டு விடுகிறேன். நாளை சாயங்காலம் கந்தமாறன் வந்து விடுவான் அதுவரையில் அங்கேயே இரும். நீர் சொல்வதின் உண்மை, பொய்யைக் கந்தமாறனிடம் நேரில் நிரூபித்து விடலாம்..."

"இளவரசி! அது முறையன்று! மிகவும் ஆபத்தான காரியம்!"

"என்ன ஆபத்து?"

"அங்கே நான் எப்படி வந்து சேர்ந்தேன் என்று கந்தமாறன் கேட்டால் என்ன பதில் சொல்லுவது?"

"உள்ளது உள்ளபடி சொல்லுகிறது."

"உள்ளது உள்ளபடி நான் இப்போது சொன்னதை நீங்களே நம்பவில்லையே? அடுத்த அறையில் என்னைத் தேடி வந்த ஆட்கள் இருக்கும் போதே?"

"ஐயா! அதை இப்போதே சோதித்து விடுகிறேன்."

"என்ன சோதிக்கப் போகிறீர்கள்?"

"அடுத்த அறைக்குள் சென்று அந்த மனிதர்களைப் பார்த்து விசாரிக்கப் போகிறேன். அவர்கள் உம்மைக் கொல்ல வந்தவர்களா? அல்லது நீர் அழைத்து வந்தவர்களா என்று தெரிந்து கொண்டு வருகிறேன்."

"ஐயோ! அவர்கள் பொல்லாத துஷ்டர்கள் தாங்கள் அவர்களிடம் தனியாக அகப்பட்டுக் கொண்டால்..."

"என் அரண்மனையில் யார் என்னை என்ன செய்ய முடியும்? இதோ பாருங்கள்!" என்று கூறி மணிமேகலை யாருக்கும் தெரியாமல் தன் இடுப்பில் செருகியிருந்த சிறிய மடக்குக் கத்தியை எடுத்துக் காட்டினாள்.

"யாரும் என்கிட்ட வரமுடியாது அப்படி ஏதாவது ஆபத்து வருவதாயிருந்தால் நீர்தான் சூராதி சூரர் இங்கே இருக்கிறீரே!"

"அம்மணி! என்னிடம் தற்சமயம் ஆயுதம் ஒன்றுமில்லை."

"வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று நீர் கேட்டதில்லையா? உமது பெயரே வல்லவரையர் ஆயிற்றே? ஆயுதம் கையில் இருந்தால் பெண்பிள்ளைகள் கூடச் சண்டை போடுவார்கள். ஆண்பிள்ளைகள் எதற்கு? உமக்கு வீண் கவலை வேண்டாம். அங்கே ஒரு அறையில் தூசு தட்டிக் கொண்டிருந்தவன் எங்கள் அரண்மனை வேலைக்காரன்தான். மற்றவர்களை அவன்தான் இட்டு வந்திருக்க வேண்டும். அவர்களும் எனக்குத் தெரிந்தவர்கள் என்றே தோன்றுகிறது. அவர்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு வருகிறேன். கதவுக்கு அருகில் நிற்க வேண்டாம். அதோ அந்த மரக்களஞ்சியத்துக்கு அருகில் போய் சிறிது மறைந்து நில்லுங்கள்!"

இவ்விதம் சொல்லிக் கொண்டே மணிமேகலை வேட்டை அறைக்குப் போகும் வாசற் பக்கம் சென்று அதன் கதவைத் திறக்க முயன்றாள். வந்தியத்தேவன் அவசரமாக நடந்து மரக்களஞ்சியத்தின் அருகில் சென்று மறைந்து நின்றான். மரக்களஞ்சியத்தின் கதவுகள் திறந்திருந்தன அதற்குள்ளே தற்செயலாகப் பார்த்தான். அது தானியம் கொட்டும் களஞ்சியம் அல்லவென்று தெரிந்தது. அறைக்குள்ளே படிப்படியாக அமைந்திருந்தது. ஒவ்வொரு படியிலும் யாழ், வீணை, மத்தளம், தாளம் முதலிய இசைக்கருவிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலே சிறிது அண்ணாந்து பார்த்தான் படிகள் மேற்கூரை வரையில் போவதாகத் தெரிந்தது. இதற்குள் மணிமேகலை வேட்டை மண்டபத்தின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தாள்.

அவளுடைய தைரியத்தை வந்தியத்தேவன் வியந்தான். அதே சமயத்தில் மணிமேகலைக்கு ஆபத்து ஒன்றும் நேருவதற்கில்லை என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான்.

இதற்குள் அந்த அறையின் இன்னொரு பக்கத்திலிருந்து கதவு திறந்தது. "அம்மா! அம்மா!" என்று கூவிக் கொண்டே சந்திரமதி உள்ளே வந்தாள்.

வந்தியத்தேவன் திடுக்கிட்டான் அவள் தன்னைப் பார்த்து விடாமலிருப்பதற்காக இசைக்கருவி களஞ்சியத்துக்குள் நுழைந்தான்.

"அம்மா! அம்மா! தஞ்சாவூர்க்காரர்கள் கோட்டை வாசலில் வந்து விட்டார்களாம். மகாராணி உடனே தங்களை அழைத்து வரச் சொன்னார்கள்!" என்று கத்திக் கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தாள். அவள் எதிரில் திறந்திருந்த வேட்டை மண்டபக் கதவை நோக்கிப் போனாள்.

கதவின் அருகில் நின்று பார்த்தால் வந்தியத்தேவன் களஞ்சியத்துக்குள் இருப்பது தெரிந்து போய்விடும். ஆகையால் அவன் விரைவாகச் சில படிகள் மேலே ஏறினான். ஒரு வீணையின் மீது அவன் முழங்கால் இடித்து அது சப்தித்தது. வந்தியத்தேவன் பீதி அடைந்து மேலும் சில படிகள் ஏறினான். அவன் தலை களஞ்சியத்தின் மேற்பலகையில் முட்டியது. என்ன விந்தை? அந்த மேற்பலகை வந்தியத்தேவனுடைய மண்டை முட்டியபோது சிறிது மேலே சென்றது. ஏதோ சந்தேகம் தோன்றி வந்தியத்தேவன் அப்பலகையைக் கைகளினால் நெம்பித் தூக்கினான். அது நன்றாய் மேலே போனதுடன், திறந்த இடத்தின் மூலமாக வெளிச்சம் வந்தது. தூரத்தில் சலசலவென்று சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களும் தெரிந்தன. வந்தியத்தேவனுடைய உள்ளம் உற்சாகத்தினால் துள்ளியது.

பலகையை நன்றாக நகர்த்திவிட்டு மேலே ஏறினான். மாளிகையின் மேல் மச்சில் ஒரு பகுதிக்குத் தான் வந்திருப்பதைக் கண்டான். அதிலும் அந்தப் பகுதி முன்னொரு நாள் அவன் சுகமாகக் காற்று வாங்கிக் கொண்டு படுத்திருந்த பகுதிதான். பெரிய தூண்களின் மறைவில் நின்று சிற்றரசர்களின் கொடிய சதியாலோசனையைப் பற்றித் தெரிந்து கொண்ட அதே இடந்தான். பலகையைத் தள்ளி முன்போல் மூடினான். மூடிய பிறகு, கூரையிலிருந்து அப்படி ஒரு வழி இருக்கிறதென்று கண்டுபிடிப்பது சுலபமல்லவென்பதை உணர்ந்தான். அதைப் பற்றி இப்போது யோசிக்கவும் அதிசயப்படவும் அவகாசம் இல்லை. அங்கிருந்து தப்பிச் செல்லும் வழியைப் பார்க்க வேணும். இத்தனை நேரமும் தனக்கு உதவி செய்த அதிர்ஷ்ட தேவதை இனியும் உதவி செய்யாமலா இருக்கப் போகிறது?

வந்தியத்தேவன் நாலா புறமும் சுற்றிப் பார்த்தான். எங்கு நோக்கினாலும் கொடிகளும் தோரணங்களும் பறந்து அந்த அரண்மனைப் பிரதேசம் முழுவதும் கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. அடடா! இராஜோபசாரம் என்பது இதுதான் போலும். வந்தியத்தேவன் அடிமேல் அடி வைத்து மெள்ள மெள்ள நடந்தான், சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு நடந்தான். மேல் மச்சில் எங்கும் மனித சஞ்சாரமே இல்லை. அந்த வரையில் நம் அதிர்ஷ்டந்தான் பிறகு கொஞ்சம் விரைவாகவே நடந்தான்.

முன்னொரு தடவை அவன் படுத்திருந்த நிலா மாடத்துக்கு வந்து சேர்ந்தான். அங்கிருந்து பார்த்தபோது அரண்மனையின் வெளிமதிளும் மதிள்களுக்கும் மாளிகைக்கும் நடுவிலிருந்த முற்றமும், குரவைக் கூத்து நடந்த இடமும், சதியாலோசனை நடந்த இடமும் காணப்பட்டன. ஆனால் அந்த இடங்களில் மனிதர்கள் யாரும் காணப்படவில்லை. அதற்குக் காரணம் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமான காரியமாயில்லை. அரண்மனையின் முன் வாசலில் ஒரே அல்லோல கல்லோலமாயிருந்தது. நூற்றுக்கணக்கான தீவர்த்திகள் வெளிச்சம் தந்தன. மேள தாளங்கள் பேரிகை முழக்கங்களுடன் மனிதர்களின் வாழ்த்தொலிகளும் கலந்து பேரொலியாகக் கிளம்பியது. பழுவேட்டரையரின் பரிவாரங்கள் அரண்மனை வாசலை நெருங்கி வந்து விட்டபடியால், அவர்களை வரவேற்பதற்காக எல்லாரும் அங்கே போயிருக்கிறார்கள். அதனாலேதான் இங்கேயெல்லாம் ஜனசஞ்சாரம் இல்லை. ஆகா! உண்மையில் அதிர்ஷ்ட தேவதை வந்தியத்தேவன் பக்கத்தில் இருந்தாள் என்பதில் சந்தேகமில்லை. தப்பிச் செல்வதற்கு எவ்வளவு அருமையான சந்தர்ப்பம்; அரை நாழிகைக்கு முன்னாலும் இத்தகைய சமயம் கிடைத்திராது. அரை நாழிகை பின்னால் வந்தாலும் இம்மாதிரி வசதி கிட்டியிராது.

சதியாலோசனை நடந்த இடத்துக்குச் சமீபமாக வந்து, வந்தியத்தேவன் இன்னொரு தடவை சுற்று முற்றும் பார்த்தான்; ஒருவருமில்லை. கீழே குனிந்து பார்த்தான் அங்கேயும் யாரும் இல்லை. எதிரில் மதிள் சுவரைப் பார்த்தான் அங்கேயும் யாரும்...ஆ! இது என்ன? மதிள் மேல் கிளைகளுக்கு நடுவில் ஒரு முகம்! ஆழ்வார்க்கடியானுடைய முகம் போல் தெரிகிறதே!... சீச்சீ! வீண்பிரமை! முன்னொரு தடவை ஆழ்வார்க்கடியானுடைய முகம் போல் தெரிந்த இடம் அது! ஆகையால் அவன் மனம் அவனை அப்படி ஏமாற்றிவிட்டது! அதுவும் ஒரு நல்லதற்குத்தான். மதிள் மேல் ஏறிக் குதித்துத் தாண்டுவதற்கு அதுதான் சரியான இடம். அதை அவனுடைய உள் மனம் சுட்டிக்காட்டி ஞாபகப்படுத்தியிருக்கிறது. வரவேற்பு முடிந்து வாசலில் நிற்கும் கூட்டம் உள்ளே வருவதற்குள் அவன் தப்பித்துக் செல்லவேண்டும். முற்றத்தில் எப்படி இறங்குவது? ஆ! இதோ ஒரு வழி! இங்கே முற்றத்தில் ஒரு கொட்டகை போட்டிருக்கிறது. குரவைக்கூத்துக்காகப் போட்டிருக்கும் கொட்டகை போலும். கொட்டகைக்காகப் புதைத்திருந்த மூங்கில் மரம் ஒன்று நெடிதுயர்ந்து மேல் மச்சு வரையில் வந்திருந்தது. வந்தியத்தேவன் அதைத் தாவிப் பிடித்துக் கொண்டு சரசரவென்று கீழே இறங்கினான். மீண்டும் சுற்று முற்றும் பார்த்தான் ஒருவரும் இல்லை. மச்சின் மேலே, தான் சற்று முன் நின்ற இடத்தில் கிண்கிணிச் சத்தம் கேட்டது. ஆகா! மணிமேகலை தன்னைத் தேடி வந்தாள் போலும்! பொல்லாத பெண்! இச்சமயம் அவளிடம் அகப்பட்டுக் கொண்டால் நம்பாடு தீர்ந்தது.

முற்றத்தின் திறந்த வெளியை ஒரே ஓட்டமாக ஓடி வந்தியத்தேவன் கடந்தான், மதிள் சுவர் ஓரமாக நின்று திரும்பிப் பார்த்தான், மச்சின் மீது ஒரு பெண் உருவம் தெரிந்தது. மணிமேகலையோ, சந்திரமதியோ தெரியவில்லை. யாராயிருந்தாலும் தான் முற்றத்தை ஓடிக் கடந்ததைப் பார்த்திருக்க வேண்டும் நல்லவேளையாகக் கூச்சல் போடவில்லை. அவள் யாராயிருந்தாலும் நன்றாயிருக்கட்டும்! மகராசியா இருக்கட்டும்!

இவ்விதம் மனதிற்குள் வாழ்த்திக் கொண்டே மதிள் சுவர் ஓரமாக வந்தியத்தேவன் விரைந்து நடந்தான். மதிள் மேல் ஆழ்வார்க்கடியானுடைய முகம் தெரிந்த இடம் வந்துவிட்டது. அங்கே சுவரில் ஏறுவது எப்படி? இவ்வளவு உயரமாயிருக்கிறதே! சுவரில் பிடித்துக் கொள்வதற்கு மேடு பள்ளம் ஒன்றுமே இல்லையே? கடவுளே!..இதோ ஒரு உபாயம்! குரவைக்கூத்துக் கொட்டகைக்காகக் கொணர்ந்த மூங்கில் கழிகள் சில சற்றுத் தூரத்தில் கிடந்தன; அவை மிஞ்சிப் போனவை போலும். ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அந்தக் கழிகளில் ஒன்றை எடுத்து வந்தான். மதிளின் பேரில் சாய்த்து வைத்தான். கழியின் உயரத்துக்கும் மதிளின் உயரத்துக்கும் சரியாக இருந்தது. ஆனால் கழி சுவரில் நிலைத்து நிற்க வேண்டுமே? ஏறும்போது நழுவி விட்டால்?.. நழுவி விட்டால் கீழே விழ வேண்டியதுதான்! அதற்காகக் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருந்து என்ன பயன்?

கழியை இரண்டொரு தடவை அழுத்திப் பார்த்துவிட்டு, அதன் வழியாக ஏறத் தொடங்கினான். பாதி சுவர் ஏறியபோது கழி நழுவத் தொடங்கியது. 'தொலைந்தோம்! கீழே விழுந்தால் எலும்பு நொறுங்கிவிடும்!' என்று எண்ணுவதற்குள், கழி, மறுபடியும் உறுதியாக நின்றது. மேலேயிருந்து ஒரு கரம் அதைப் பிடித்துக் கொண்டது போல் தோன்றியது! 'நமக்குப் பைத்தியம் பிடிப்பதுதான் பாக்கி!' என்று எண்ணிக் கொண்டு வந்தியத்தேவன் மேலே ஏறினான். மதிள் சுவரின் மேல் முனையை அவன் பிடித்துக் கொண்டதும் கழி நழுவிக் கீழே விழுந்தது. அது விழுந்த சத்தம் இடி முழக்கம் போல் அவன் காதில் விழுந்தது. நல்ல வேளை! கோட்டை வாசலில் ஆரவாரம் இப்போது இன்னும் அதிகமாயிருந்தது. ஆகையால் யார் காதிலும் விழுந்திராது! ஆனால், எதிரே அந்தப்புர மேல் மாடத்தில் நின்ற பெண்! அவள் காதில் விழுந்திருக்கும். மதிள் மேல் தாவி ஏறி நின்றபடி மறுபடி ஒரு தடவை வந்தியத்தேவன் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தான். இன்னமும் அப்பெண் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்!

வந்தியத்தேவனுடைய கிறுக்குக் குணம் அவனை விட்டுப் போகவில்லை! 'போய் வருகிறேன்!' என்று சொல்கிற பாவனையாகக் கையை ஆட்டிவிட்டு, மதிளின் அப்புறத்தில் இறங்கத் தொடங்கினான். இறங்குவதில் அவ்வளவு கஷ்டம் இல்லை. ஏனெனில் மதிள் சுவரின் வெளிப்புறம் உட்புறத்தைப் போல் மட்டமாக இல்லை. சில மேடு பள்ளங்கள் இருந்தன. பக்கத்திலிருந்த மரங்களின் கிளைகள் சில சுவரின் மீது மோதி உராய்ந்து கொண்டிருந்தன. அவற்றின் உதவி கொண்டு சரசரவெனக் கீழே இறங்கினான். மணிமேகலையைத் தான் ஏமாற்றி விட்டு வந்தது பற்றி நினைத்தபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது. அந்தச் சிரிப்பின் எதிரொலியைப் போல் இன்னொரு சிரிப்பு எங்கிருந்தோ வந்தது. வந்தியத்தேவனுடைய இரத்தம் அவனுடைய உடம்பில் உறைந்து போயிற்று. கைகள் நடுங்கின கீழே குதிப்பதற்காகப் பார்த்தான். நாய் ஒன்று அவன் மீது பாயக் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டான். மேலே ஏறுவதைப் பற்றி இனி யோசிப்பதற்கே இல்லை? கீழே குதித்துத்தான் ஆகவேண்டும். குதித்தால், இந்த நாயின் வாயில் ஒரு பிடி சதையையாவது கொடுத்துத் தீரவேண்டும். சற்று முன் கேட்டது சிரிப்புச் சத்தமா? அல்லது நாய் குரைத்த சத்தமா? பக்கத்தில் யாராவது மறைந்து நின்று நாயை ஏவி விட்டிருக்கிறார்களா?.. மேலே ஏறுவதில் அபாயம் அதிகமா? கீழே குதிப்பதில் அபாயம் அதிகமா? வந்தியத்தேவனுடைய உள்ளம் ஊசலாடியது! அவனுடைய கால்களும், எழும்பி எழும்பிக் குதித்த நாயின் வாயில் அகப்படாமல் இருப்பதற்காக ஊசலாடின








Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 9. நாய் குரைத்தது!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 15. காலாமுகர்கள்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. நம் விருந்தாளி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 4. நள்ளிரவில்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: