BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  12. வேல் முறிந்தது! Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 12. வேல் முறிந்தது!

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  12. வேல் முறிந்தது! Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 12. வேல் முறிந்தது!   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  12. வேல் முறிந்தது! Icon_minitimeTue May 24, 2011 3:34 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

நான்காம் பாகம் : மணிமகுடம்

12. வேல் முறிந்தது!



கந்தமாறன் அவனுடைய அருமை நண்பனாயிருந்த வந்தியத்தேவன் மீது கூறிய குற்றச்சாட்டைக் கேட்டு ஆதித்த கரிகாலன் இடி இடி என்று உடல் குலுங்கச் சிரித்தான்.

"கந்தமாறா! வந்தியத்தேவன் உன் முதுகில் குத்திவிட்டான் என்றா சொல்லுகிறாய்? நீ என்னத்திற்காக அவனுக்கு முதுகு காட்டினாய்?" என்று கேட்டுவிட்டு மறுபடியும் குலுங்கக் குலுங்கச் சிரிக்கத் தொடங்கினான்.

கந்தமாறனுடைய கரிய முகம் சிவந்தது; கண்கள் கோவைப் பழம் போலாயின உதடுகள் துடித்தன.

"ஐயா! தாங்கள் இதைச் சிரிக்கக் கூடிய விஷயமாகக் கருதுகிறீர்களா?" என்று கேட்டான்.

"கந்தமாறா! நான் சிரிக்கக் கூடாது என்று சொல்கிறாயா? சிரிப்பு என்பது மனிதர்களுக்குத் தெய்வம் கொடுத்திருக்கும் ஒரு வரப் பிரஸாதம். மாடு சிரிக்காது; ஆடு சிரிக்காது; குதிரை சிரிக்காது; சிங்கம் சிரிக்காது; வேடிக்கை விளையாட்டுகளில் மிக்க பிரியம் உள்ள குரங்குகள் கூடச் சிரிப்பதில்லை. மனித ஜன்மம் எடுத்தவர்கள் மட்டுந்தான் சிரிக்க முடியும். அப்படி இருக்க, நீ என்னைச் சிரிக்கக் கூடாது என்கிறாயே? நான் கூடச் சிரித்து ரொம்ப காலமாயிற்று. நண்பா! இப்போது நான் சிரிக்கும் சத்தத்தைக் கேட்டு, எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. நீ என்னைப் பார்த்துச் சிரிக்கக் கூடாது என்கிறாயே?" என்றான் ஆதித்த கரிகாலன்.

"ஐயா! தாங்கள் சிரித்து மகிழ்வது பற்றி எனக்கும் சந்தோஷந்தான். ஆனால் நான் இந்தச் சூராதி சூரனுக்கு முதுகு காட்டியதாக எண்ணிக் கொண்டு சிரிக்க வேண்டாம். நான் எதிர்பாராத சமயத்தில், பின்னால் மறைந்திருந்து இவன் என்னைக் குத்தினான். துர்க்காதேவியின் அருளாலும், நந்தினி தேவியின் அன்பான சிகிச்சையினாலுமே நான் பிழைத்து எழுந்து வந்தேன். இவன் செய்த அந்தத் துரோகச் செயலைக் குறித்துத் தாங்கள் விசாரித்து நியாயம் செய்யுங்கள். அல்லது நானே இவனைத் தண்டிப்பதற்கு எனக்கு உடனே அதிகாரம் கொடுங்கள்!" என்றான் கந்தமாறன்.

"நண்பனே! நானே அவசியம் விசாரித்து நியாயம் வழங்குகிறேன், செம்பியன் குலத்து மன்னர்களிடம் ஒருவன் நியாயம் கேட்டு அவனுக்கு நியாயம் கிட்டவில்லை என்ற பேச்சு இது வரையிலே கிடையாது. எங்கள் பரம்பரையின் ஆதி மன்னனாகிய சிபி, புறாவுக்கு நியாயம் வழங்குவதற்காகத் தன் சதையைத் துண்டு துண்டாக வெட்டிக் கொடுக்கவில்லையா? எங்கள் குலத்தைச் சேர்ந்த மனுநீதிச் சோழன் பசுவுக்கு நியாயம் வழங்குவதற்காக தன் குமாரனையே பலி கொடுக்கவில்லையா! நீ புறாவை விட, பசுவை விட மட்டமானவன் அல்ல. உனக்கு நான் நியாயம் வழங்க மறுக்கமாட்டேன். இவனை நான் விசாரிக்கும் வரையில் பொறுமையாயிரு! வல்லவரையா! உன் பிரயாணத்தைப் பற்றிய மற்ற விவரங்களைச் சொல்லுவதற்கு முன்னால், கந்தமாறனுடைய குற்றச்சாட்டுக்கு நீ மறு மொழி சொல்லிவிடுவது நல்லது. என்ன சொல்லுகிறாய்? இவனை நீ பின்னாலிருந்து முதுகில் குத்தியது உண்மையா? அப்படியானால், அத்தகைய வீர லட்சணமில்லாத, நீசத்தனமான காரியத்தை ஏன் செய்தாய்? எதற்காகச் செய்தாய்?" என்று கேட்டான்.

"இளவரசே! நான் இந்த வீராதி வீரனைக் குத்தவும் இல்லை; முதுகில் குத்தவும் இல்லை; அதுவும் பின்னால் மறைந்து நின்று முதுகில் குத்தவே இல்லை. முதுகில் குத்தப்பட்டு நினைவிழந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தவனைத் தோளில் தூக்கிக் கொண்டு போய்ச் சேந்தன் அமுதன் வீட்டில் போட்டுக் காப்பாற்றினேன். ஆனால் அப்படி இவன் உயிரைக் காப்பாற்றியதற்காக நான் இப்போது வருத்தப்படுகிறேன். இவனை மார்பிலே குத்திக் கொல்லாமற் போனோமே என்று பச்சாத்தாபப்படுகிறேன். சிநேக தர்மத்தை முன்னிட்டு என் அரசருக்குச் செய்ய வேண்டிய கடமையைப் புறக்கணித்து விட்டேன். ஐயா! இவன் என்னைச் சிநேகத்துரோகி என்று சொன்னான். ஆனால் இவன் சிநேகத்துரோகி மட்டுமல்ல; எஜமானத் துரோகி. இவன் முதுகில் குத்தப்பட்டது எங்கே, எந்தச் சந்தர்ப்பத்தில் என்று கேளுங்கள்! தஞ்சாவூர்க் கோட்டையின் இரகசிய சுரங்க வழியாக இவன் யாரைப் பழுவேட்டரையர் அரண்மனையில் கொண்டு போய்விட்டுத் திரும்பினான் என்று கேளுங்கள், பெரிய பழுவேட்டரையரின் பொக்கிஷ நிலவரையில் இவன் அன்றிரவு யாரைப் பார்த்தான் என்று கேளுங்கள். ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கு தினத்தில் இவனுடைய கடம்பூர் மாளிகையில் என்ன நடந்தது என்று கேளுங்கள். அன்றைக்கு அங்கே மூடுபல்லக்கில் மறைந்து கொண்டு வந்தது யார் என்று கேளுங்கள்!

இந்தச் சமயத்தில் கந்தமாறன், உடல் நடுங்க, நாக்குழற, "அடே! அற்பப் பயலே! நிறுத்து உன் அபத்தப் பேச்சை! இல்லாவிட்டால் இதோ இந்த வேலுக்கு இரையாவாய்!" என்று கூறி வேலைக் கையில் எடுத்தான்.

ஆதித்த கரிகாலன் அவனுடைய படபடப்பைக் கண்டு சிறிது வியப்படைந்தான். கந்தமாறனுடைய கையிலிருந்த வேலைப் பிடுங்கித் தனது இரும்பையொத்த கரங்களினால் அதன் அடிக்காம்பை வளைத்தான். வேல் படார் என்று முறிந்தது. அதன் இரு பகுதிகளையும் ஆதித்த கரிகாலன் வீசித் தூர எறிந்து விட்டு, "ஜாக்கிரதை! என் சிநேகிதர்கள் என் முன்னாலேயே சண்டையிடுவதை நான் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது... பார்த்திபேந்திரா! இவர்களில் யாராவது இனி வேலையோ, வாளையோ கையில் எடுத்தால் உடனே அவனைச் சிறைப்படுத்துவது உன் பொறுப்பு!" என்றான்.

உடனே வந்தியத்தேவன் தன்னிடமிருந்த வாளை எடுத்துப் பார்த்திபேந்திரனிடம் கொடுத்தான். பார்த்திபேந்திரனும் வேண்டாவெறுப்பாக அந்த வாளைப் பெற்றுக் கொண்டான். "கந்தமாறா! உன்னுடைய குற்றச்சாட்டுக்கு வல்லவரையன் மறுமொழி கூறினான். அதன் உண்மையைக் குறித்து நானே சாவகாசமாக விசாரித்துத் தீர்ப்பு கூறுகிறேன். அவன் கேட்ட கேள்விகளுக்கு நீ விடை சொல்லப் போகிறாயா?" என்று கரிகாலன் கேட்டான்.

கந்தமாறன் தட்டுத்தடுமாறி மென்று விழுங்கிக் கொண்டு, "ஐயா! அந்த விஷயங்களைப்பற்றி நான் யாரிடமும் சொல்லுவதில்லை என்று சத்தியம் செய்திருக்கிறேன்" என்றான்.

பார்த்திபேந்திரன் இப்போது தலையிட்டு, "அரசே! இவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவது ஏதோ பெண்ணை பற்றிய விஷயமாகக் காண்கிறது. ஆகையால் இவர்களைத் தனித் தனியாகக் கேட்டுத் தெரிந்து கொள்வது நலம்!" என்றான்.

"ஆம், பார்த்திபா! நானும் அப்படித்தான் கருதுகிறேன். நீங்கள் மூன்று பேரும் தனித்தனியாகப் பழுவூர் இளையராணியைப் பார்த்து அவளுடைய மோக வலையில் விழுந்திருக்கிறீர்கள். ஆகையினால் தான் ஒருவரை ஒருவர் விழுங்கிவிடப் பார்க்கிறீர்கள்!" என்று கரிகாலர் கூறிவிட்டு மறுபடியும் சிரித்தார்.

பார்த்திபேந்திரனுடைய முகம் சிணுங்கியது; அவன் "பிரபு! தாங்கள் இன்றைக்கு எந்த முக்கிய விஷயத்தையும் இலேசாகக் கருதிச் சிரிக்கத் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. நல்லது நானும் சொல்ல வேண்டியதைச் சொல்லி விடுகிறேன். இந்த வந்தியத்தேவன் பேரில் எனக்கும் பல சந்தேகங்கள் இருக்கின்றன. முக்கியமானதை மட்டும் இப்போது சொல்லுகிறேன். இவனைத் தீப்பிடித்த கப்பலிலிருந்து காப்பாற்றுவதற்காகவே தங்கள் அருமைச் சகோதரர் நடுக்கடலில் கடும் புயலில் குதித்தார். பிறகு பொன்னியின் செல்வரைக் காணவே இல்லை. இவன் மட்டும் அன்றிருந்த மேனிக்கு அழிவில்லாமல் கொட்டாப் புளியைப் போல் இங்கே வந்து முளைத்திருக்கிறான். தங்கள் சகோதரர் என்ன ஆனார் என்று இவனைக் கேளுங்கள். அவரைக் கடல் கொண்டிருந்தால் அதற்கு இந்தப் பாதகனே காரணமாவான்!" என்றான்.

கரிகாலர் வந்தியத்தேவனைப் பார்த்து "இதற்கு என்ன மறுமொழி சொல்லுகிறாய்?" என்று கேட்டார்.

"ஐயா! நான் இவருடைய கேள்விக்கு மறுமொழி சொல்லுவதற்கு முன்னால், இவர் ஒரு கேள்விக்கு விடை சொல்லட்டும். பொன்னியின் செல்வரை இலங்கையிலிருந்து இவர்தான் தம்முடைய கப்பலில் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். முதன் மந்திரி அநிருத்தரும், சேநாதிபதி பூதிவிக்கிரம கேசரியும் இலங்கையிலேயே இருக்கும்படி பொன்னியின் செல்வரைக் கேட்டுக் கொண்டார்கள். ஆயினும் தமையன் கட்டளையைப் பெரிதாய் மதித்து இளவரசர் இவருடைய கப்பலில் ஏறிக் கிளம்பினார், அவரை ஏன் இவர் பத்திரமாகத் தங்களிடம் கொண்டு வந்து சேர்க்கவில்லை? நடுக்கடலில் பொன்னியின் செல்வர் குதித்த போது இவர் ஏன் பார்த்துக் கொண்டு நின்றார்? ஏன் இளவரசரைத் தடுக்கவில்லை? ஏழையும் அநாதையுமான என்னைக் காப்பாற்றுவதற்காகப் பொன்னியின் செல்வர் தம் உயிருக்குத் துணிந்து இறங்கினாரே! வீர பல்லவ குலத்தின் தோன்றலாகிய இவரும், இவருடைய ஆட்களும் இளவரசரைப் பாதுகாப்பதற்காக ஏன் கடலில் குதிக்கவில்லை? அவரைக் கடல் கொண்டுபோவதை வேடிக்கை என்று எண்ணிப் பார்த்துக் கொண்டு நின்றார்களா...?"

பார்த்திபேந்திரனுடைய முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவனுடைய கைகள் துடித்தன; உதடுகளும் துடித்தன; உடல் ஆடியது. "ஐயா! இந்த மூடன் என் மீது குற்றம் சுமத்துகிறான் என்று தோன்றுகிறது. இளவரசரை நானே கொன்று விட்டேன் என்று கூடச் சொல்லுவான் போலிருக்கிறது. இதை நான் ஒரு கணமும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது!" என்றான்.

கரிகாலன் அவனை உற்று நோக்கி, "பார்த்திபா! நான் தான் சொன்னேனே? என் அருமைத் தோழர்களாகிய நீங்கள் மூன்று பேரும் ஒருவரையொருவர் கடித்துத் தின்றுவிடும் நிலைக்கு வந்துவிட்டீர்கள். இதற்கெல்லாம் நான் உங்கள் பேரில் குற்றம் சொல்லவில்லை. அந்தப் பழுவூர் ராணியின் சக்தி அப்படிப்பட்டது என்பதை நானே உணர்ந்திருக்கிறேன். நீயும் கந்தமாறனும் குதிரை மீது ஏறிச் சற்று முன்னால் மெதுவாகப் போய்க் கொண்டிருங்கள். இவனுடைய பிரயாண விவரங்களைக் கேட்டுக் கொண்டு நான் சற்றுப் பின்னால் வருகிறேன். உங்கள் குற்றச்சாட்டுகளைப் பற்றி விசாரித்து உண்மையைக் கண்டுபிடிக்கிறேன். ஆனால் ஒன்று நிச்சயமாய் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மூன்று பேரும் சிநேகமாக இருந்தே தீரவேண்டும். ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டீர்களானால், அதைக் காட்டிலும் எனக்கு அதிருப்தி உண்டாக்குவது வேறொன்றுமிராது!"

பார்த்திபேந்திரனும், கந்தமாறனும் வேறு வழியின்றித் தத்தம் குதிரை மீது ஏறி முன்னால் சென்றார்கள். அப்போது ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவன் அருகில் வந்து அவன் காதோடு, "அப்பனே! நீ வெகு கெட்டிக்காரனாகி விட்டாய்! பொய்யும் சொல்லாமல் உண்மையையும் வெளியிடாமல் வெகு சாமர்த்தியமாகப் பேசித் தப்பித்துக் கொண்டாய்!" என்றான்.

அப்போதுதான் ஆதித்த கரிகாலன் பார்வை அங்கு வந்த ஆழ்வார்க்கடியான் மீது விழுந்தது.

"ஓகோ! இவன் யார்? எப்போதோ, எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறதே!" என்று கேட்டான்.

"ஆம், அரசே! சில ஆண்டுகளுக்கு முன்பு என்னைப் பார்த்திருக்கிறீர்கள்!"

"உன் குரல் கூடக் கேட்ட குரலாகத்தானிருக்கிறது."

"ஆம் ஐயா! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மிக முக்கியமான ஒரு தருணத்தில் என் குரலைக் கேட்டீர்கள்..."

ஆதித்த கரிகாலரின் முகத்தில் திடீரென்று ஒரு கரிய நிழல் வேகமாகப் படர்வது போலிருந்தது. "மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்...முக்கியமான தருணம்.. அது என்ன?.. வைகை நதித் தீவில் பகைவனைத் தேடி அலைந்த போது நான் கேட்ட குரலா? அப்படியும் இருக்க முடியுமா?"

"அந்தக் குரல் என் குரல்தான் அரசே! பகைவன் ஒளிந்திருந்த இடத்தைத் தங்களுக்கு மரத்தின் மறைவிலிருந்து சொன்னவன் நான்தான்!"

"ஆகா! என்ன பயங்கரமான தினம் அது? அன்றைக்கு எனக்குப் பிடித்திருந்த வெறியை நினைத்தால் இன்றுகூட உடல் நடுங்குகிறது. வைஷ்ணவனே! நீ ஏன் அன்று காட்டில் மறைந்திருந்தாய்? எதற்காக உன்னை அசரீரியாக மாற்றிக் கொண்டாய்?"

"அரசே! சற்று முன் தாங்களே சொன்னீர்களே! தங்களுக்கு அன்று பிடித்திருந்த வெறியைப் பற்றி! எதிரில் கண்டவர்களையெல்லாம் வெட்டி வீழ்த்திக் கொண்டு போனீர்கள் சில காலம் நான் உயிர் வாழ விரும்பினேன்..."

"அது மட்டுந்தானா காரணம்? 'அசரீரி வெளி வந்து எனக்கு வழிகாட்டட்டும்' என்று எவ்வளவோ முறை தொண்டை வலிக்கக் கூவினேனே? அப்போதும் நீ ஏன் வெளி வரவில்லை?"

"நான் வளர்த்த சகோதரி - இப்பொழுது பழுவூர் இளையராணி அவளுடைய தீராத கோபத்திற்கு ஆளாக நான் விரும்பவில்லை..."

"அவளுடைய தீராத கோபத்திற்கு நான் மட்டும் ஆளாகலாம் என்று எண்ணினாயாக்கும்! அட சண்டாளா!" என்று கூறி கரிகாலர் இடையிலிருந்த கத்தியை உருவினார். வந்தியத்தேவன் பயந்து போனான். ஆழ்வார்க்கடியானுடைய வாழ்வு அன்றோடு முடிந்தது என்றே எண்ணினான். மிக்க நயத்துடன் "ஐயா! இந்த வைஷ்ணவன் முதன் மந்திரியிடமிருந்து வந்திருக்கிறான். இவன் கொண்டு வந்த செய்தியைக் கேட்டுக் கொண்டு தண்டியுங்கள்!" என்றான்.

"ஆகா! இவனைத் தண்டித்து என்ன பிரயோஜனம்? இனி யாரைத் தண்டித்து என்ன பயன்?" என்று கூறிக் கரிகாலன் கத்தியை உறையில் போட்டான்.

கரிகாலன் கோபத்தைக் கண்டு வந்தியத்தேவன் பயந்தது போல் ஆழ்வார்க்கடியான் பயந்ததாகத் தெரியவில்லை. முகத்தில் விசித்திரமான புன்னகையுடன், "அரசே! தங்கள் கோபத்தை என் பேரில் திருப்புவீர்கள் என்று எண்ணித்தான் இத்தனை நாளும் தங்களை நான் நேரில் சந்திக்காமலிருந்தேன். என் பேரில் என் சகோதரி கொண்ட கோபமும் இன்னும் தீரவில்லை. இன்று வரையில் என்னைப் பார்ப்பதற்குப் பிடிவாதமாக மறுத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் தங்கள் பேரில் அவளுடைய கோபம் தீர்ந்து விட்டதாகக் காண்கிறது. நந்தினி தேவியின் அன்பான திருமுக ஓலையைப் பார்த்து விட்டுத்தானே தாங்கள் கடம்பூர் அரண்மனைக்கு விருந்துக்குப் புறப்பட்டீர்கள்?" என்றான்.

"ஆகா! துஷ்ட வைஷ்ணவனே! அது உனக்கு எப்படித் தெரிந்தது?" என்று கரிகாலன் கேட்டான்.

"ஐயா! முதன் மந்திரி அநிருத்தன் பணியாளன் நான். முதன் மந்திரிக்குத் தெரியாமல் இந்தச் சோழ ராஜ்யத்தில் எந்தச் சிறிய காரியமும் நடக்க முடியாது!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"பார்த்துக் கொண்டே இரு! ஒருநாள் அந்த அன்பில் அநிருத்தனையும் உன்னையும் சேர்த்துத் தேசப் பிரஷ்டம் செய்து விடுகிறேன்!... இப்போது இருவரும் குதிரை மீது ஏறிக் கொள்ளுங்கள்! என் இரு பக்கத்திலும் வந்து கொண்டிருங்கள் பேசிக் கொண்டே போகலாம்" என்றான் ஆதித்த கரிகாலன்








Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 12. வேல் முறிந்தது!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 15. காலாமுகர்கள்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. நம் விருந்தாளி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 4. நள்ளிரவில்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: