BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  32. "ஏன் என்னை வதைக்கிறாய்?" Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 32. "ஏன் என்னை வதைக்கிறாய்?"

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  32. "ஏன் என்னை வதைக்கிறாய்?" Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 32. "ஏன் என்னை வதைக்கிறாய்?"   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  32. "ஏன் என்னை வதைக்கிறாய்?" Icon_minitimeSat May 28, 2011 3:54 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

நான்காம் பாகம் : மணிமகுடம்

32. "ஏன் என்னை வதைக்கிறாய்?"



சுந்தர சோழர் மிக்க வியப்பு அடைந்தார். மேன்மாடத்திலிருந்து அவ்வாறு தூண்களின் விளிம்பின் வழியாக யார் இறங்கி வருகிறது? எதற்காக வரவேண்டும்! இத்தனை நேரம் கண்ட குழப்பமான கனவுகள் நினைவு வந்தன. இதுவும் கனவிலே காணும் தோற்றமா? இன்னும் தாம் தூக்கத்திலிருந்து நன்றாக விழித்துக் கொள்ளவில்லையா? இந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகச் சுந்தர சோழர் மறுபடியும் கண்களை மூடிக் கொண்டார். ஒரு நிமிஷ நேரம் அவ்வாறு இருந்துவிட்டுக் கண்களை நன்றாகத் திறந்து அந்த உருவம் இறங்கிய திக்கைப் பார்த்தார். அங்கே இப்போது ஒன்றும் இல்லை. ஆகா! அந்தத் தோற்றம் வெறும் பிரமையாகத்தான் இருக்க வேண்டும்.

அவர் உறங்குவதற்கு முன்னால் நிகழ்ந்தவற்றை ஞாபகப்படுத்திக் கொண்டார். முதன்மந்திரியும் அவருடைய சீடனும் இனிய குரலில் பாடிய தியாகவிடங்கரின் மகளும் தாம் தூங்கிய பிறகு போய்விட்டார்கள் போலும். மலையமான் மகளும் தாதிமார்களும் வழக்கம் போல் அடுத்த அறையிலே காத்திருக்கிறார்கள் போலும். குந்தவையைக் குறித்துத் தாம் முதன்மந்திரியிடம் குறை கூறியதைச் சக்கரவர்த்தி நினைத்துக் கொண்டு சிறிது வருத்தப்பட்டார். குந்தவை இணையற்ற அறிவும், முன் யோசனையும் படைத்தவள். இராஜ்யத்திலே குழப்பம் ஏற்படாமலிருக்கும் பொருட்டு இளவரசனை நாகப்பட்டினத்தில் இருக்கச் செய்திருக்கிறாள். அதைப் பற்றித் தவறாக எண்ணிக் கொண்டது தம்முடைய தவறு. தமது அறிவு சரியான நிலைமையில் இல்லை என்பது சில காலமாகச் சுந்தர சோழருக்கே தெரிந்திருந்தது. பின்னே, இளையபிராட்டியின் பேரில் கோபித்துக் கொள்வதில் என்ன பயன்? எதையும் அவளுடைய யோசனைப்படி செய்வதே நல்லது. இப்போது முக்கியமாகச் செய்ய வேண்டியது நாகப்பட்டினத்திலிருந்து இளவரசனை அழைத்து வர வேண்டியது. கடவுளே! புயலினால் அவனுக்கு யாதொரு ஆபத்தும் நேரிடாமல் இருக்க வேண்டுமே! உடன் குந்தவையிடம் அதைப் பற்றிக் கேட்க வேண்டும். பக்கத்து அறையில் இருப்பவர்களை அழைப்பதற்காகச் சுந்தர சோழர் கையைத் தட்ட எண்ணினார்....

ஆனால் இது என்ன? தம்முடைய தலைமாட்டில் யாரோ நடமாடுவதுபோல் தோன்றுகிறதே! ஆனால் காலடிச் சத்தம் மிக மெதுவாக - பூனை, புலி முதலிய மிருகங்கள் நடமாடுவது போல் கேட்கிறது. யாராயிருக்கும்? ஒருவேளை மலையமான் மகளா? தம் குமாரியா? தாதிப் பெண்ணா? தமது உறக்கத்தைக் கலைக்கக் கூடாது என்று அவ்வளவு மெதுவாக அவர்கள் நடக்கிறார்களா?

"யார் அது?" என்று மெதுவான குரலில் சுந்தர சோழர் கேட்டார் அதற்குப் பதில் இல்லை.

"யார் அது? இப்படி எதிரே வா!" என்று சற்று உரத்த குரலில் கூறினார் அதற்கும் மறுமொழி இல்லை.

சுந்தர சோழருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. அது அவருக்குக் குழப்பத்தையும் திகிலையும் உண்டாக்கியது. 'ஒருவேளை அவளாக இருக்குமோ? அவளுடைய ஆவியாக இருக்குமோ? கனவிலே தோன்றிய கிராதகி இப்போது நேரிலும் வந்து விட்டாளா? நள்ளிரவில் அல்லவா ஆடை ஆபரண பூஷிதையாக முன் மாலையிலேயே வந்துவிட்டாளா? அல்லது ஒருவேளை நள்ளிரவு ஆகிவிட்டதா? அவ்வளவு நேரம் தூங்கி விட்டோ மா? அதனாலேதான் ஒருவேளை மலையமான் மகளும், தம் குமாரியும் இங்கே இல்லையோ? தாதிப் பெண்களும் தூங்கி விட்டார்களோ? ஐயோ! அவர்கள் ஏன் என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போனார்கள்? அந்தப் பாதகி கரையர் மகளாக இருந்தால் என்னை இலேசில் விடமாட்டாளே? உள்ளம் குமுறி வெறி கொள்ளும் வரையில் போகமாட்டாளோ?'

'அடிபாவி! உண்மையில் நீயாக இருந்தால் என் முன்னால் வந்து தொலை! என்னை எப்படியெல்லாம் வதைக்க வேண்டுமோ, அப்படியெல்லாம் வதைத்துவிட்டுப் போ! ஏன் பார்க்க முடியாதபடி தலைமாட்டில் உலாவி என் பிராணனை வாங்குகிறாய்? முன்னால் வா! இரத்த பலி கேட்பதற்காக வந்திருக்கிறாயா? வா! வா! நீ தான் மடியில் கத்தி வைத்திருப்பாயே? புலி கரடிகளைக் கொன்ற அதே கத்தியினால் என்னையும் கொன்றுவிட்டுப் போய்விடு! என் மக்களை மட்டும் ஒன்றும் செய்யாதே! நான் செய்த குற்றத்துக்காக அவர்களைப் பழி வாங்காதே! அவர்கள் உனக்கு ஒரு துரோகமும் செய்யவில்லையடி! நான்தான் உனக்கு என்ன துரோகம் செய்தேன்? கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஏறிக் கடலில் விழுந்து சாகும்படி நானா சொன்னேன்? நீயே செய்த அந்தக் கோரமான காரியத்துக்கு என்னை எதற்காக வதைக்கிறாய்?..."

சுந்தர சோழர் தம்முடைய தலைமாட்டில் வெகு சமீபத்தில் ஓர் உருவம் வந்து நிற்பதை உணர்ந்தார். திகிலினால் அவருடைய உடம்பு நடுங்கியது. வயிற்றிலிருந்து குடல் மேலே ஏறி நெஞ்சை அடைத்துக் கொண்டது போலிருந்தது! நெஞ்சு மேலே ஏறித் தொண்டையை அடைத்துக் கொண்டது. கண் விழிகள் பிதுங்கி வெளியே வந்துவிடும் போலிருந்தது. அவள்தான் வந்து நிற்கிறாள் சந்தேகமில்லை. அவளுடைய ஆவிதான் வந்து நிற்கிறது. தாம் நினைத்தபடியே கடைசியாக இரத்தப் பழி வாங்குவதற்கு வந்திருக்கிறது. தம் நெஞ்சில் கத்தியால் குத்தித் தம்மைக் கொல்லப் போகிறது. அல்லது வெறுங் கையினாலேயே தம் தொண்டையை நெறித்துக் கொல்லப் போகிறதோ, என்னமோ? எப்படியாவது அவள் எண்ணம் நிறைவேறட்டும்! தாம் இனி உயிர் வாழ்ந்திருப்பதில் யாருக்கும் எந்த உபயோகமும் இல்லை. அந்தப் பேய் தம்மைப் பழி வாங்கி விட்டுப் போனால் தம் மக்களை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடும் அல்லவா?

இன்னும் சிறிது நிமிர்ந்து அண்ணாந்து பார்த்தால், மந்தாகினிப் பேயின் ஆவி வடிவம் தம் கண்களுக்குப் புலனாகும் என்று சுந்தர சோழருக்குத் தோன்றியது. தலைமாட்டில் அவ்வளவு சமீபத்தில் அந்த உருவம் வந்து நிற்பது போலிருந்தது. அதன் நிழல் கூட அவர் முகத்திலே விழுந்தது போலிருந்தது. ஒரு கணம் நிமிர்ந்து பார்ப்பதற்கு எண்ணினார் அவ்வளவு தைரியம் வரவில்லை. "நான் கண்களை இறுக மூடிக் கொள்கிறேன். அது செய்வதை செய்துவிட்டுப் போகட்டும்" என்று தீர்மானித்துக் கண்களை மூடிக் கொண்டார்.

சற்று நேரம் அப்படியே இருந்தார்; அவர் எதிர்பார்த்தது போல் அவர் நெஞ்சில் கூரிய கத்தி இறங்கவும் இல்லை. அவர் தொண்டையை இரண்டு ஆவி வடிவக் கைகள் பிடித்து நெறிக்கவும் இல்லை. அந்த உருவம் அவர் தலைமாட்டில் நின்ற உருவம் அங்கிருந்து நகர்ந்து போய்விட்டதாகத் தோன்றியது. ஆகா, கரையர் மகள் அவ்வளவு சுலபமாக என்னை விட மாட்டாள். இன்னும் எத்தனை காலம் என்னை உயிரோடு வைத்திருந்து சித்திரவதை செய்ய வேண்டுமோ செய்வாள்? இன்றைக்கு என் கண்ணில் படாமலே திரும்பித் தொலைந்து போய்விட்டால் போலும்! சரி, சரி யாரையாவது கூப்பிடலாம். யாராவது இந்த அறைக்குள்ளே வந்தால், இன்னும் இவள் ஒரு வேளை இங்கேயே இருந்தாலும் மறைந்து போய்த் தொலைவாள்!

"யார் அங்கே? எல்லாரும் எங்கே போனீர்கள்?" என்று உரத்த குரலில் கூவிக் கொண்டே சுந்தர சோழர் கண்களைத் திறந்தார்.

ஆகா! அவர் எதிரே, மஞ்சத்தில் கீழ்ப்புரத்தில், நிற்பது யார்? அவள்தான் சந்தேகமில்லை; அந்த ஊமையின் பேய்தான், தலைவிரி கோலமாக நிற்கிறது பேய்! அதன் நெற்றியிலே இரத்தம் கொட்டுகிறது! "இரத்தப் பழி வாங்க வந்தேன்!" என்று சொல்லுகிறது போலும்! சுந்தர சோழர் உரத்த குரலில் வெறி கொண்டவரைப் போல் அந்த ஆவி உருவத்தைப் பார்த்த வண்ணமாகக் கத்தினார்:

"அடி ஊமைப் பேயே! நீ உயிரோடிருந்த போதும் வாய் திறந்து பேசாமல் என்னை வதைத்தாய்; இப்பொழுதும் என்னை வதைக்கிறாய்! எதற்காக வந்திருக்கிறாய், சொல்லு! இரத்தப் பழி வாங்க வந்திருந்தால் என்னைப் பழி வாங்கிவிட்டுப் போ; ஏன் சும்மா நிற்கிறாய்? ஏன் முகத்தை இப்படிப் பரிதாபமாக வைத்துக் கொண்டிருக்கிறாய்? என்னிடம் ஏதாவது கேட்க வந்திருக்கிறாயா? அப்படியானால் சொல்லு! வாய் திறந்து பேச முடியவில்லையென்றால், சமிக்ஞையினாலே சொல்லு! வெறுமனே நின்று கொண்டு என்னை வதைக்காதே. உன் கண்ணில் ஏன் கண்ணீர் ததும்புகிறது? ஐயையோ! விம்மி அழுகிறாயா, என்ன? என்னால் பொறுக்க முடியவில்லையே! ஏதாவது சொல்லுகிறதாயிருந்தால் சொல்லு! இல்லாவிட்டால் தொலைந்து போ. போகமாட்டாயா; ஏன் போக மாட்டாய்? என்னை என்ன செய்ய வேண்டுமென்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறாய்? என் அருமை மகனை சின்னஞ்சிறு குழந்தையை காவேரி வெள்ளத்தில் அமுக்கிக் கொல்லப் பார்த்தவள்தானே நீ! கடவுள் அருளால் உன் எண்ணம் பலிக்கவில்லை. இனியும் பலிக்கப் போவதில்லை! அடி பாதகி! இன்னும் எதற்காக என் நெஞ்சைப் பிளக்கிறவள்போல பார்த்துக் கொண்டு இருக்கிறாய்? போ! போ! போக மாட்டாயா? போகமாட்டாயா! இதோ உன்னைப் போகும்படி செய்கிறேன் பார்!..."

இப்படிச் சொல்லிக் கொண்டே சுந்தர சோழர் தமதருகில் கைக்கெட்டும் தூரத்தில் என்ன பொருள் இருக்கிறதென்று பார்த்தார். பஞ்ச உலோகங்களினால் செய்த அகல் விளக்கு ஒன்றுதான் அவ்விதம் கைக்குக் கிடைப்பதாகத் தென்பட்டது. அதை எடுத்துக் கொண்டு, "போ! பேயே போ!" என்று அலறிக் கொண்டு மந்தாகினிப் பேயின் முகத்தைக் குறி பார்த்து வீசி எறிந்தார். திருமால் எறிந்த சக்ராயுதத்தைப் போல் அந்தத் தீபம் சுடர்விட்டு எரிந்த வண்ணம் அந்தப் பெண்ணுருவத்தை நோக்கிப் பாய்ந்து சென்றது.

அப்போது சுந்தர சோழர் பேய் என்று கருதிய அந்தப் பெண் உருவத்தில் வாயிலிருந்து ஓர் ஓலக்குரல் கிளம்பிற்று.

சுந்தர சோழருடைய ஏழு நாடியும் - ஒடுங்கி, அவருடைய உடலும் சதையும் எலும்பும் எலும்புக்குள்ளே இருந்த ஜீவ சத்தும் உறைந்து போயின. தீபம் அந்த உருவத்தின் முகத்தின் மீது விழவில்லை. சற்று முன்னாலேயே தரையில் விழுந்து உருண்டு 'டணங் டணங்' என்று சத்தமிட்டது.

அகல் விளக்கு அணைந்துவிட்ட போதிலும், நல்ல வேளையாக அந்த அறையின் இன்னொரு பக்கத்தில் வேறொரு தீபம் எரிந்து கொண்டிருந்தது. அதன் மங்கலான வெளிச்சத்தில் சுந்தர சோழர் உற்றுப் பார்த்து, மந்தாகினியின் ஆவி வடிவம் இன்னும் அங்கேயே நிற்பதைக் கண்டார். அதனுடைய முகத்தில் விவரிக்க முடியாத வேதனை ஒரு கணம் காணப்பட்டது. பின்னர் அது கடைசி முறையாக ஒரு தடவை சுந்தர சோழரை அளவில்லாத ஆதங்கத்துடன் பார்த்துவிட்டுத் திரும்பி அங்கிருந்து போவதற்கு யத்தனித்தது.

அந்த நேரத்திலேதான் சுந்தர சோழரின் உள்ளத்திலே முதன் முதலாக ஒரு சந்தேகம் உதித்தது. இது மந்தாகினியின் ஆவி உருவமா? அல்லது அவளை வடிவதில் முழுக்க முழுக்க ஒத்த இன்னொரு ஸ்திரீயா? அவளுடன் இரட்டையாகப் பிறந்த சகோதரியா? அல்லது ஒரு வேளை...ஒரு வேளை...அவளேதானா? அவள் சாகவில்லையா? இன்னமும் உயிரோடிருக்கிறாளா? தாம் நினைத்ததெல்லாம் தவறா? அவளேயாக இருக்கும் பட்சத்தில் அவள் பேரில் தாம் விளக்கை எடுத்து எறிந்தது எவ்வளவு கொடுமை! அவளுடைய முகத்தில் சற்று முன் காணப்பட்ட பரிதாபம் மாறி, விவரிக்க முடியாத வேதனை தோன்றியதே? தம்முடைய கொடூரத்தை எண்ணி அவள் வேதனைப் பட்டாளோ? ஆகா! அதோ அவள் திரும்பிப் போக யத்தனிக்கிறாள். எந்தப் பக்கம் போகலாம் என்று பார்க்கிறாள்.

"பெண்ணே! நீ கரையர் மகள் மந்தாகினியா? அல்லது அவளுடைய ஆவி வடிவமா? அல்லது அவளுடன் பிறந்த சகோதரியா? நில், நில்! போகாதே! உண்மையைச் சொல்லிவிட்டுப் போ!..."

இவ்விதம் சுந்தர சோழர் பெரும் குரலில் கூவிக் கொண்டிருந்த போது தடதடவென்று பலர் அந்த அறைக்குள் புகுந்தார்கள். மலையமான் மகள், குந்தவை, வானதி, பூங்குழலி, முதன்மந்திரி, அவருடைய சீடன், அத்தனை பேரும் அறைக்குள்ளே வருகிறார்கள் என்பதைச் சுந்தர சோழர் ஒரு கண நேரத்தில் தெரிந்து கொண்டார்.

"நிறுத்துங்கள்! அவள் ஓடிப் போகாமல் தடுத்து நிறுத்துங்கள்! அவள் யார், எதற்காக வந்தாள் என்பதைக் கேளுங்கள்!" என்று சுந்தர சோழர் அலறினார்.

உள்ளே வந்தவர்கள் அவ்வளவு பேரும் ஒரு கணம் வியப்பினால் திகைத்துப் போய் நின்றார்கள். சுந்தர சோழரின் வெறி கொண்ட முகத் தோற்றமும், அவருடைய அலறும் குரலில் தொனித்த பயங்கரமும் அவர்களுக்குப் பீதியை உண்டாக்கின. மந்தாகினி தேவியை அங்கே பார்த்தது அவர்களை வியப்பு வெள்ளத்தில் திக்குமுக்காடச் செய்தது. இன்னது செய்வது என்று அறியாமல் எல்லாரும் சற்று நேரம் அசைவற்று நின்றார்கள். முதன்மந்திரி அநிருத்தர், நிலைமை இன்னதென்பதையும் அது எவ்வாறு நேர்ந்திருக்கக் கூடும் என்பதையும் ஒருவாறு ஊகித்து உணர்ந்து கொண்டார். அவர் பூங்குழலியைப் பார்த்து, "பெண்ணே! இவள்தானே உன் அத்தை?" என்றார்.

"ஆம், ஐயா!" என்றாள் பூங்குழலி.

"திருமலை! ஏன் மரம் போல நிற்கிறாய்? மந்தாகினி தேவி ஓடப் பார்க்கிறாள்! அவளைத் தடுத்து நிறுத்து, சக்கரவர்த்தியின் கட்டளை!" என்றார்.

ஆழ்வார்க்கடியான் தன் வாழ்நாளில் முதன்முறையாகக் குருவின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தான்.

"ஐயா! அதைக் காட்டிலும் புயற் காற்றைத் தடுத்து நிறுத்தும்படி எனக்குக் கட்டளையிடுங்கள்!" என்றான்.

இதற்குள் பூங்குழலி சும்மா இருக்கவில்லை. ஒரே பாய்ச்சலாக ஓடிச் சென்று அத்தையின் தோளைப் பிடித்துக் கொண்டாள். மந்தாகினி அவளை உதறித் தள்ளிவிட்டு ஓடினாள்.

ஆழ்வார்க்கடியான் சட்டென்று ஒரு காரியம் செய்தான். சற்று முன்னால் முதன்மந்திரி முதலியவர்கள் நுழைந்து வந்த கதவண்டை சென்று அதைச் சாத்திக் தாளிட்டான். பிறகு கதவை யாரும் திறக்க முடியாதபடி கைகளை விரித்துக் கொண்டு நின்றான். வேடர்களால் சூழ்ந்து கொள்ளப்பட்ட மானைப் போல் நாலுபுறமும் பார்த்து மிரண்டு விழித்தாள் மந்தாகினி. தப்பிச் செல்வதற்கு வேறு வழி இல்லை என்று, தான் இறங்கி வந்த வழியாக ஏறிச் செல்ல வேண்டியதுதான் என்றும் தீர்மானித்துக் கொண்டாள். அவள் மேல் மாடியை நோக்கிய பார்வையிலிருந்து அவளுடைய உத்தேசத்தை மற்றவர்களும் அறிந்து கொண்டார்கள்.

சுந்தர சோழர், "பிடியுங்கள்! அவளைப் பிடித்து நிறுத்துங்கள்! அவள் எதற்காக வந்தாள், யாரைப் பழிவாங்க வந்தாள் என்று கேளுங்கள்!" என்று மேலும் கத்தினார். தூணின் வழியாக மேல் மாடத்துக்கு ஏறிச் செல்ல ஆயத்தமாயிருந்த மந்தாகினி தேவியிடம் மறுபடியும் பூங்குழலி ஓடி நெருங்கினாள். இம்முறை அவளைப் பிடித்து நிறுத்துவதற்குப் பதிலாகப் பூங்குழலி கையினால் சமிக்ஞை செய்து ஏதோ கூற முயன்றாள். மந்தாகினி அதன் பொருளைத் தெரிந்து கொண்டவள் போல், கீழே விழுந்து கிடந்த அகல் விளக்கைச் சுட்டிக் காட்டினாள்.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த குந்தவை, "அப்பா! பெரியம்மாவின் பேரில் தாங்கள்தான் விளக்கை எடுத்து எறிந்தீர்களா?" என்று கேட்டாள்.

"ஆம் மகளே! அந்தப் பேய் என்னைப் பார்த்த பார்வையை என்னால் சகிக்க முடியவில்லை. அதனால் விளக்கை எடுத்து எறிந்தேன்!" என்றார் சுந்தர சோழர்.

"தந்தையே! பேயுமல்ல; ஆவியும் அல்ல; உயிரோடிருக்கும் மாதரசியேதான். அப்பா! பெரியம்மா சாகவே இல்லை! முதன்மந்திரியைக் கேளுங்கள்! எல்லாம் சொல்லுவார்!" என்று குந்தவை கூறிவிட்டு, மந்தாகினியும் பூங்குழலியும் மௌன வாக்குவாதம் செய்து கொண்டிருந்த காட்சியைப் பார்த்தாள். உடனே அந்த இடத்துக்குப் பாய்ந்து சென்றாள்.

"மகளே! அவளிடம் போகாதே! அந்த ராட்சஸி உன்னை ஏதாவது செய்து விடுவாள்!" என்று சுந்தர சோழர் கூவிக் கொண்டே குந்தவையைத் தடுப்பதற்காகப் படுக்கையிலிருந்து பரபரப்புடன் எழுந்திருக்க முயன்றார்.

மலையமான் மகள் வானமாதேவி அவருடைய தோள்களை ஆதரவுடன் பிடித்துப் படுக்கையில் சாயவைத்தாள். "பிரபு! சற்றுப் பொறுங்கள்! தங்கள் திருமகளுக்கு அபாயம் ஒன்றும் நேராது!" என்று கூறினாள்





Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 32. "ஏன் என்னை வதைக்கிறாய்?"
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 10. கண் திறந்தது!
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 58. கருத்திருமன் கதை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 28. இராஜபாட்டை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: