BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 39. "விபத்து வருகிறது!" Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 39. "விபத்து வருகிறது!"

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 39. "விபத்து வருகிறது!" Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 39. "விபத்து வருகிறது!"   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 39. "விபத்து வருகிறது!" Icon_minitimeSun May 29, 2011 3:49 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

நான்காம் பாகம் : மணிமகுடம்

39. "விபத்து வருகிறது!"



பழுவேட்டரையர் சிரித்தார். நந்தினியின் வார்த்தையைக் கேட்டுப் பரிகாசமாகச் சிரிப்பதாய் எண்ணிக் கொண்டு இலேசாகத்தான் சிரித்தார். அந்தச் சிரிப்பின் ஒலியால் அந்த அறையும் அதிலிருந்த சகல பொருள்களும் நடுநடுங்கின. தம்மை அவமதித்தவர்களை நந்தினி தன் கையினாலேயே கத்தி எடுத்துக் கொன்றுவிடுவதாகக் கூறியதைக் கேட்ட போது அவருடைய உள்ளத்தில் ஒரு பெருமிதம் உண்டாயிற்று. தம்முடைய மரியாதையைப் பாதுகாப்பதில் நந்தினிக்கு அவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதை அறிந்ததில் பழுவேட்டரையருக்கு இறும்பூது ஏற்பட்டது. அதே தோரணையில் அவள் மேலும் பேசிக் கேட்க வேண்டுமென்ற ஆசை அவர் மனதில் ஒரு பக்கம் பெருகியது. மற்றொரு பக்கத்தில் அவள் அம்மாதிரியெல்லாம் பேசுவதைத் தாம் விரும்பவில்லை என்று காட்டிக் கொள்ளவும் ஆசைப்பட்டார்.

"ஐயா! ஏன் சிரிக்கிறீர்கள்! என் வார்த்தையில் அவநம்பிக்கையினால் சிரிக்கிறீர்களா?" என்று கேட்டாள்.

"தேவி! மந்தார மலரின் இதழைப் போல் மென்மையான உன் கையினால் கத்தியை எப்படி எடுப்பாய் என்று எண்ணிச் சிரித்தேன். மேலும் நான் ஒருவன் இரண்டு நீண்ட கைகளை வைத்துக் கொண்டு உயிரோடிருக்கும்போது.."

"ஐயா! தங்கள் கரங்களின் பெருமையையும் வலிமையையும் நான் அறிவேன். யானைத் துதிக்கையை யொத்த நீண்ட கைகள், இந்திரனுடைய வஜ்ராயுதத்தைப் போன்ற வலிமையுள்ள கைகள். போர்க்களத்தில் ஆயிரமாயிரம் பகைவர்களை வெட்டி வீழ்த்திய கைகள், சோழ சக்கரவர்த்திகளின் சிரத்தில் மணிமகுடத்தை வைத்து நிலைநாட்டிவரும் கைகள். ஆனாலும் அதையெல்லாம் இன்று நினைத்துப் பார்ப்பாரில்லை. நேற்றுப் பிறந்த பிள்ளைகள் தங்களைக் 'கிழடு' என்று சொல்லி ஏளனம் செய்யும் காலம் வந்து விட்டது. தாங்களோ மந்திரத்தால் கட்டுண்ட சர்ப்பராஜனைப் போல் சோழ குலத்தாரிடம் கொண்ட பக்திக்குக் கட்டுப்பட்டுச் சும்மா இருக்க வேண்டியிருக்கிறது. என்னுடைய கரங்கள் வளையல் அணிந்த மென்மையான கரங்கள்தான். ஆனாலும் வீராதி வீரராகிய தங்களை அக்கினி சாட்சியாகக் கைப்பிடித்த காரணத்தினால் எனது கைகளுக்கும் சிறிது சக்தி ஏற்பட்டிருக்கிறது. என் கற்பைக் காத்துக் கொள்வதற்கும் என் கணவரின் மரியாதையை நிலை நிறுத்துவதற்கும் அவசியம் ஏற்படுமானால் என் கைகளுக்கும் கத்தி எடுக்கும் வலிமை உண்டாகி விடும். இதோ பாருங்கள்...!" என்று நந்தினி கூறிவிட்டு, மஞ்சத்துக்கு அடியிலிருந்த பெட்டியை வெளிப்புறமாக நகர்த்தினாள். பெட்டியைத் திறந்து அதன் மேற்புறத்தில் கிடந்த ஆடைகளை அப்புறப்படுத்தினாள். அடியில் தகதகவென்று பிரகாசித்துக் கொண்டிருந்த நீண்ட வாளை ஒரு கையினால் அலட்சியமாக எடுத்துத் தலைக்கு மேலே தூக்கிப்பிடித்தாள்.

பழுவேட்டரையர் அதைப் பார்த்த வண்ணமாகச் சிறிது நேரம் பிரமித்துப் போய் நின்றார். பின்னர், "இந்த பெட்டிக்குள்ளே இந்த வாள் எத்தனை காலமாக இருக்கிறது? உன் ஆடை ஆபரணங்களை வைத்திருப்பதாகவல்லவோ நினைத்தேன்?" என்றார்.

நந்தினி வாளைப் பெட்டியில் திரும்ப வைத்துவிட்டு, "ஆம்; என் ஆடை ஆபரணங்களை இந்தப் பெட்டியிலேதான் வைத்திருக்கிறேன். என் ஆபரணங்களுக்குள்ளே மிக முக்கியமான ஆபரணம் இந்த வாள். என் கற்பையும் என் கணவருடைய கௌரவத்தையும் பாதுகாப்பதற்குரியது" என்றாள்.

"ஆனால் இதை நீ உபயோகப்படுத்துவதற்கு அவசியம் ஒன்றும் ஏற்படப் போவதில்லை நான் ஒருவன் உயிரோடிருக்கும் வரையில்!"

"அதனாலேதான் இந்த வாளை நான் வெளியில் எடுப்பதில்லை. ஈழ நாட்டிலிருந்து வேங்கி நாடு வரையில் சோழ ராஜ்யத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் தங்கள் தோள் வலிமையால் தங்கள் கௌரவத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதா? அல்லது பேதையாகிய என்னைத்தான் பாதுகாக்க முடியாதா? என்றாலும், முக்கியமான ராஜரீக காரியங்களில் ஈடுபட்டிருக்கும் தாங்கள் எப்போதும் என்னைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்க முடியாது. தங்களைப் பிரிந்திருக்கும் நேரங்களில் என்னை நான் பாதுகாத்துக் கொள்ள ஆயத்தமாய் இருக்க வேண்டும் அல்லவா?"

"தேவி! அதற்கு அவசியம் என்ன? போனது போகட்டும், இனி நான் உன்னைப் பிரிந்திருக்கப் போவதே இல்லை...."

"ஐயா! என்னுடைய விருப்பமும் அதுதான்; ஆனால் இந்த ஒரு தடவை மட்டும் தாங்கள் என்னைப் பிரிந்து தஞ்சைபுரிக்குப் போய் வாருங்கள்...."

"இது என்ன பிடிவாதம்? எதற்காக இந்தத் தடவை மட்டும் நான் உன்னை இங்கே விட்டுவிட்டுப் போக வேண்டும்?" என்று பழுவேட்டரையர் கேட்டபோது அவருடைய புருவங்கள் நெரிந்தன.

"சுவாமி! அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. என்னை நீங்கள் இப்போது தங்களுடன் அழைத்துப் போனால் இந்த மூடர்கள் மேலும் நம்மைக் குறித்துப் பரிகசித்துச் சிரிப்பார்கள். 'கிழவருக்கு இளைய ராணியிடம் அவ்வளவு நம்பிக்கை!' என்று சொல்லுவார்கள். அதை நினைத்தாலே எனக்கு ரத்தம் கொதிக்கிறது. மற்றொரு காரணம் இன்னும் முக்கியமானது சம்புவரையரைத் தங்களுடைய அத்தியந்த சிநேகிதர் என்று இத்தனை காலமும் தாங்கள் சொல்லி வந்தீர்கள்; நம்பியும் வந்தீர்கள். ஆனால் இளவரசர் வந்ததிலிருந்து அவருடைய பேச்சிலும், நடவடிக்கைகளிலும் ஏற்பட்டிருக்கும் மாறுதலைக் கவனித்தீர்களா? தாங்கள் கவனிக்காவிட்டாலும் நான் கவனித்துக் கொண்டு வருகிறேன்...."

"நானும் அதைக் கவனித்துத்தான் வருகிறேன். அந்த மாறுதலுக்குக் காரணம் என்னவாயிருக்குமென்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறேன்...."

"தாங்கள் கபடமற்ற உள்ளமுடையவர்; ஆகையால் ஆச்சரியப்படுகிறீர்கள். எனக்கு அதில் ஆச்சரியம் இல்லை. மனிதர்களுடைய பேராசை இயல்புதான், சம்புவரையரின் மாறுதலுக்குக் காரணம். இளவரசர் ஆதித்த கரிகாலர் பெண்களை முகமெடுத்தே பார்ப்பதில்லையென்றும் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லையென்றும் வதந்தியாயிருந்தது. இங்கு அவர் வந்ததிலிருந்து அதற்கு நேர்மாறாக நடந்து வருவதைப் பார்த்திருப்பீர்கள். பெண்கள் இருக்குமிடத்துக்கு அடிக்கடி வருகிறார், கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறார். இதற்கெல்லாம் காரணம் சம்புவரையர் மகள் மணிமேகலை மீது அவருடைய மனது சென்றிருப்பதுதான். 'மணிமேகலையை வேட்டையாடுவதற்கு அழைத்துப் போகலாமா' என்று கூடக் கரிகாலர் கேட்டார் அல்லவா? இது சம்புவரையருக்கும் தெரிந்திருக்கிறது. ஆகையால் பழைய ஏற்பாடுகளையெல்லாம் அவர் மறந்து விட்டார். தம் அருமை மகள் தஞ்சாவூர்த் தங்கச் சிங்காதனத்தில் வீற்றிருக்கப் போவது பற்றிக் கனவு காணத் தொடங்கி விட்டார்...."

"ஆமாம்; நீ சொல்லுவதுதான் காரணமாயிருக்க வேண்டும். சம்புவரையன் இத்தகைய நீச குணம் படைத்தவன் என்று நான் கனவிலும் எண்ணவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் இதே மாளிகையில் மதுராந்தகரைத் தஞ்சைச் சிம்மாதனத்தில் ஏற்றிவைப்பதாக எல்லோரும் கூடிச் சபதம் செய்தோம். சீச்சீ! இப்படிப் பேச்சுத் தவறுகிறவனும் ஒரு மனிதனா?" என்று பழுவேட்டரையர் சீறினார்.

"சுவாமி! அதனாலேதான் நான் தங்களுடன் வரவில்லை என்று சொல்கிறேன். தாங்கள் இல்லாத சமயத்தில் இவர்கள் இங்கே என்ன சதி செய்கிறார்கள் என்பதைக் கவனித்து கொள்வேன். ஏதேனும் இவர்கள் சூழ்ச்சி செய்தால் அது பலிக்காமற் செய்ய வழி தேடுவேன்."

"நந்தினி! இதிலேயெல்லாம் நீ எதற்காகப் பிரவேசிக்க வேண்டும்?"

"கணவர் சிரத்தை கொண்டுள்ள காரியத்தில் மனைவிக்கும் சிரத்தை இருக்க வேண்டாமா? 'வாழ்க்கைத் துணைவி' என்று பிறகு எதற்காக எங்களைச் சொல்கிறது?"

"என்ன இருந்தாலும் இந்த மூர்க்கர்களுக்கும் நீசர்களுக்கும் நடுவில் உன்னைத் துணையின்றி விட்டுவிட்டு நான் போகிறதா? அது எனக்குச் சிறிதுமே சம்மதமாயில்லையே!"

"எனக்கு இங்கே துணையில்லாமற் போகவில்லை. மணிமேகலை இருக்கிறாள்; எனக்காக அந்தப் பெண் என்ன வேண்டுமானாலும் செய்வாள்..."

"அது உண்மைதான் நானும் கவனித்தேன். உன்னுடைய மோகன சக்தி அவளை உன் அடிமையாக்கி இருக்கிறது. ஆனாலும் அது எவ்வளவு தூரம் நிலைத்திருக்கும்? ஆதித்த கரிகாலன் சிங்காதனத்தில் ஏறி அந்தப் பெண்ணை சக்கரவர்த்தினியாக்கிக் கொள்ளப் போவதாக ஆசை காட்டினால்..."

"ஐயா! அது விஷயத்தில் தங்களுக்குச் சிறிதும் சந்தேகம் வேண்டியதில்லை. மணிமேகலை என் கருத்துக்கு மாறாகத் தேவலோகத்து இந்திராணி பதவியையும் ஏற்றுக் கொள்ள மாட்டாள். 'கரிகாலன் இந்தக் கத்தியால் குத்திக் கொன்று விட்டு வா!' என்று நான் சொன்னால், உடனே அவ்விதம் செய்து விட்டு வருவாள். என்னுடைய மோகன சக்தியைப் பற்றி அடிக்கடி தாங்களே சொல்வீர்கள் அல்லவா? அது மணிமேகலையை முழுதும் ஆட்கொண்டிருக்கிறது! வேணுமானால், இப்போதே தங்களுக்கு அதை நிரூபித்துக் காட்டுகிறேன்!" என்றாள் நந்தினி.

பழுவேட்டரையரின் உடம்பு படபடத்தது. அந்தக் கிழவர் உதடுகள் துடிக்க, தொண்டை அடைக்க, நாத்தழுதழுக்கக் கூறினார்: "தேவி! உன்னுடைய சக்தியை நான் அறிவேன். ஆனால் கரிகாலன் விஷயத்தில் நீ அம்மாதிரி எதுவும் பரீட்சை பார்க்க வேண்டாம். அவன் அறியாச் சிறுவன். ஏதோ தெரியாமல் உளறினான் என்பதை நாம் பெரிது படுத்தக் கூடாது. கரிகாலன் மணிமேகலையை மணந்து கொள்ள இஷ்டப்பட்டால் நாம் அதற்குத் தடையாக இருக்க வேண்டாம்!"

"ஐயா! நாம் தடை செய்யாமலிருக்கலாம். ஆனால் விதி ஒன்று இருக்கிறதே! அதை யார் தடை செய்ய முடியும்? மணிமேகலை என்னிடம் பிரியங் கொண்டவளாயிருப்பது போல் நானும் அவளிடம் பாசம் வைத்திருக்கிறேன். என் கூடப் பிறந்த தங்கையைப் போல் அவளிடம் ஆசை கொண்டிருக்கிறேன். அற்பாயுளில் சாகப் போகிறவனுக்கு அவளை மணம் செய்து கொடுக்க நான் எப்படி இணங்குவேன்?" என்றாள் நந்தினி. அப்போது அவளுடைய பார்வை எங்கேயோ தூரத்தில் நடக்கும் எதையோ பார்த்துக் கொண்டிருப்பது போல தோன்றியது.

பழுவேட்டரையர் இன்னும் அதிக பரபரப்பை அடைந்து கூறினார்: "நந்தினி! இது என்ன வார்த்தை? சோழ சக்கரவர்த்தியின் வேளக்காரப் படைக்கு நான் ஒரு சமயம் தலைவனாயிருந்தேன். சக்கரவர்த்தியையும் அவருடைய சந்ததிகளையும் உயிரைக் கொடுத்தேனும் பாதுகாப்பதாகச் சத்தியம் செய்திருக்கிறேன்...."

"ஐயா! அந்தச் சத்தியத்தைத் தாங்கள் மீற வேண்டுமென்று நான் சொல்லவில்லையே?"

"உன்னால் கரிகாலனுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தாலும் அந்தக் குற்றம் என்னையே சாரும். 'சிறு பிள்ளையின் பரிகாசப் பேச்சைப் பொறுக்காமல் கிழவன் படுபாதகம் செய்து விட்டான்' என்று உலகம் என்னை நிந்திக்கும். ஆறு தலைமுறையாக எங்கள் குலம் சோழர்களுக்குப் பாதுகாப்பாக இருந்து எடுத்திருக்கும் நல்ல பெயர் நாசமாகும்..."

"அப்படியானால் தாங்கள் இந்த ஊரைவிட்டு உடனே போக வேண்டியது மிகவும் அவசியம்!" என்று நந்தினி மர்மம் நிறைந்த குரலில் கூறினாள்.

"எதனால் அவ்விதம் சொல்லுகிறாய்?" என்று பழுவேட்டரையர் கேட்டார்.

"தங்களிடம் எப்படிச் சொல்வதென்று தயங்கிக் கொண்டிருந்தேன். இப்போது சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. துர்க்கா பரமேசுவரி எனக்குச் சில அபூர்வ சக்திகளை அளித்திருக்கிறாள் இது தங்களுக்கே தெரியும். சுந்தர சோழர் இளம் வயதில் ஸ்திரீஹத்தி தோஷத்துக்கு உள்ளானவர் என்பதை நான் என் மந்திர சக்தியினால் அறிந்தேன். அதைத் தங்களுக்கும் நிரூபித்துக் காட்டினேன். அதே போல் ஆதித்த கரிகாலனுடைய இறுதிக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் இப்போது என் அகக் கண்ணினால் காண்கிறேன். அது தங்கள் கையினாலும் நேரப் போவதில்லை; என் கையினாலும் நேரப் போவதில்லை. ஆனால் யமனுடைய பாசக் கயிறு அவனை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். காட்டிலே வேட்டையாடப் போன இடத்திலே அவனுக்கு இறுதி நேரலாம்; அல்லது அரண்மனையில் படுத்திருக்கும் போதும் நேரலாம்; புலி, கரடி முதலிய துஷ்ட மிருகங்களினால் நேரலாம்; அல்லது அவனுடைய சிநேகிதர்கள் விடும் அம்பு தவறி விழுந்தும் அவன் சாகலாம். அல்லது மென்மையான பெண்ணின் கரத்திலே பிடித்த கத்தியினால் குத்தப்பட்டும் அவனுக்கு மரணம் நேரலாம். ஆனால், ஐயா, அவனுடைய மரணம் தாங்கள் கைப்பிடித்து மணந்த என்னுடைய கரத்தினால் நேராது என்று தங்களுக்குச் சத்தியம் செய்து கொடுக்கிறேன். சாலை ஓரத்திலே அநாதையாக நின்ற என்னைத் தாங்கள் உலகறிய மணந்து இளைய ராணி ஆக்கினீர்கள். அத்தகைய தங்களுக்கு என்னால் ஒரு பழியும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன். அதற்காகவே தாங்கள் இச்சமயம் இங்கு இருக்க வேண்டாம், போய் விடுங்கள் என்று வற்புறுத்திச் சொல்கிறேன். தாங்கள் இங்கு இருக்கும் சமயம் கரிகாலனுக்கு என்ன விதமான விபத்து நேர்ந்தாலும் உலகத்தார் தங்களை அத்துடன் சம்பந்தப்படுத்துவார்கள். அருள்மொழிவர்மனைக் கடல் கொண்டதற்கு தங்கள் மீது பழி கூறவில்லையா? அம்மாதிரி இதற்கும் தங்கள் பேரில் குற்றம் சாட்டுவார்கள். தங்களால் விபத்து நேர்ந்ததென்று சொல்லாவிட்டாலும் தாங்கள் ஏன் அதைத் தடுக்கவில்லை என்று கேட்பார்கள்! ஆனால் தங்களுடைய வஜ்ராயுதம் போன்ற கரங்களாலும் கரிகாலனுக்கு வரப் போகும் விபத்தைத் தடுக்க முடியாது. ஆகையால், தாங்கள் உடனே போய்விட வேண்டும். என்னைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு போனால், அதைப் பற்றியும் வீண் சந்தேகம் ஏற்படும். முன்னதாக தெரிந்திருந்தபடியினால் என்னையும் அழைத்து கொண்டு போய் விட்டதாகச் சொல்வார்கள். ஆகையால், தாங்கள் மட்டுமே போகவேண்டும். என்ன நேர்ந்தாலும், எப்படி நேர்ந்தாலும் அதனால் தங்களுக்கு அபகீர்த்தி எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள நான் இங்கிருப்பேன். ஐயா! என்னிடம் அவ்வளவு நம்பிக்கை தங்களுக்கு உண்டா?" என்று நந்தினி கேட்டுவிட்டுத் தன் கரிய பெரிய விழிகளால் பழுவேட்டரையரின் நெஞ்சை ஊடுருவிப் பார்ப்பவள் போலப் பார்த்தாள். பாவம்! அந்த வீரக் கிழவர் நந்தினியின் சொல்லம்பினால் பெரிதும் கலங்கிப் போயிருந்தார். அவளுடைய கண் அம்புக்கு முன்னால் கதிகலங்கிப் பணிந்தார்









Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 39. "விபத்து வருகிறது!"
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 15. காலாமுகர்கள்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. நம் விருந்தாளி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 4. நள்ளிரவில்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: