BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  46. படகு நகர்ந்தது! Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 46. படகு நகர்ந்தது!

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  46. படகு நகர்ந்தது! Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 46. படகு நகர்ந்தது!   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  46. படகு நகர்ந்தது! Icon_minitimeMon May 30, 2011 4:02 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

நான்காம் பாகம் : மணிமகுடம்

46. படகு நகர்ந்தது!



வந்தியத்தேவன் ஒரு பக்கத்தில் விரைந்து வந்து கொண்டிருந்தான். மற்றொரு புறத்தில் மணிமேகலை, "அக்கா! உணவு சித்தமாயிருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டு நெருங்கி வந்து கொண்டிருந்தாள்.

கரிகாலர் இருபுறமும் பார்த்துவிட்டு, "நந்தினி, என்னைக் கடம்பூர் மாளிகைக்கு வரவேண்டாம் என்று தடுக்க வந்தியத்தேவன் மட்டும் முயலவில்லை. ஆழ்வார்க்கடியான் என்னும் வைஷ்ணவனும் அதே மாதிரி செய்தியைக் கொண்டு வந்தானே! என் தந்தையின் உயிர் நண்பரும் என் பக்திக்கு உரியவருமான முதன்மந்திரி அநிருத்தரும் சொல்லி அனுப்பினாரே?" என்றார்.

"முதன்மந்திரி அநிருத்தர்! தங்கள் தந்தையின் பிராண சிநேகிதர்! ஆகையினால் தங்கள் தந்தையின் பிராணனைத் தாமே அபகரிக்கப் பார்க்கிறார். தங்களுடைய பக்திக்கு உரியவர்! ஆகையால் தங்களுக்கு அடுத்த பட்டம் இல்லாமற் செய்யப் பார்க்கிறார்..."

"ஏன்? ஏன்?"

"தாங்கள் வெறிபிடித்தவர் என்றும், தெய்வ பக்தி இல்லாதவர் என்றும் அவருக்கு எண்ணம். தங்கள் தம்பிக்குப் பட்டம் கட்டி வைத்து அவனை வீர வைஷ்ணவனாக்கி இந்தச் சோழ நாட்டையே வைஷ்ணவ நாடாக்கிவிட வேண்டுமென்பது அவருடைய விருப்பம். தங்களுடைய தம்பி நடுக்கடலில் காணாமற்போனபோது அவருடைய எண்ணத்திலே மண் விழுந்தது!"

"அதற்காக என்னைக் கடம்பூர் வராமல் தடுக்க வேண்டிய அவசியம் என்ன?"

"அவர்களுடைய அந்தரங்கத்தையெல்லாம் தங்களிடம் நான் சொல்லிவிடலாம் அல்லவா?"

"உனக்கு எப்படி அவர்களின் அந்தரங்கம் தெரியும்?"

"ஐயா! அந்த வைஷ்ணவன் ஆழ்வார்க்கடியான் சகோதரி நான் என்பதை மறந்து விட்டீர்கள்...."

"உண்மையாக நீ அவனுக்கு உடன் பிறந்த சகோதரியா? அந்தக் கதையை என்னை நம்பச் சொல்கிறாயா?"

"நானும் அந்தக் கதையை நம்பவில்லை. தங்களை நம்புமாறு சொல்லவும் இல்லை. அவனுடைய தந்தையின் வீட்டில் நான் வளர்ந்து வந்தேன். ஆகையால் என்னைச் சகோதரி என்று அழைத்து வந்தான். என்னை ஆண்டாளின் அவதாரம் என்று அந்த வைஷ்ணவன் சொல்வது வழக்கம். ஊர் ஊராக அவனுடன் நான் சென்று ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடி வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பரப்ப வேண்டும் என்று அவனுடைய ஆசை!"

"புத்த சந்நியாசினிகளைப்போல் உன்னையும் வைஷ்ணவ சந்நியாசினியாக்க அவன் விரும்பினானா?" என்று ஆதித்தகரிகாலர் கேட்டார்.

"அப்படி ஒன்றுமில்லை. நான் அவனைக் கலியாணம் செய்து கொண்டு தம்பதிகளாகப் பாசுரம் பாடிக் கொண்டு ஊர் ஊராகப் போகவேண்டும் என்பது அவன் ஆசை. வைஷ்ணவத்தைப் பிரசாரம் செய்ய நான் பல குழந்தைகளைப் பெற்று அளிக்க வேண்டும் என்பதும் அவன் விருப்பம்..."

"சீச்சீ! அந்தக் குரங்கு மூஞ்சித் திருமலை எங்கே? நீ எங்கே? உன்னை அவன் தனக்கு மனைவியாக்கிக் கொள்ள விரும்பினானா?"

"ஐயா! என் துரதிர்ஷ்டம் அது! நான் பிறந்த வேளை அப்படி! என்னை நெருங்கி வரும் ஆண் பிள்ளைகள் எல்லாரும் துர் எண்ணத்துடனேயே என்னை நெருங்குகிறார்கள்..."

"கிழவன் பழுவேட்டரையனுடைய புத்தி போன பாட்டில் மற்றவர்களைப் பற்றிச் சொல்வானேன்?"

"கோமகனே! பழுவேட்டரையரைப் பற்றி என் காதில் படத் தூஷணையாக எதுவும் சொல்ல வேண்டாம். அவர் என்னிடம் ஆசை கொண்டார். என்னை உலகமறிய மணந்து கொண்டார். அநாதைப் பெண்ணாயிருந்த என்னை அவருடைய திருமாளிகையில் பட்டத்து ராணியாக்கிப் பெருமைப்படுத்தினார்...."

"ஆனால் உன்னுடைய விருப்பம் என்ன, நந்தினி? நீ அவரை உண்மையிலேயே உன் பதியாகக் கொண்டு பூஜிக்கிறாயா? அப்படியானால்..."

"இல்லை, இல்லை. அவரிடம் நான் அளவில்லாத நன்றியுடையவள். ஆனால் அவருடன் நான் மனை வாழ்க்கை நடத்தவில்லை. ஐயா! நான் ஏழைக் குடியில் பிறந்தவள். பிறந்தவுடனே கைவிடப்பட்டவள். ஆயினும் என்னுடைய நெஞ்சை ஒரே ஒருவருக்குத்தான் அர்ப்பணம் செய்தேன். அதை ஒரு நாளும் மாற்றிக் கொண்டதில்லை...."

"நந்தினி! அந்தப் பாக்கியசாலி யார்? வேண்டாம்; அதைச் சொல்ல வேண்டாம். நீ யார்? உண்மையைச் சொல்! நீ என் தந்தையின் மகள் இல்லாவிடில், என் சகோதரி இல்லாவிடில், ஆழ்வார்க்கடியானுடன் கூடப் பிறந்தவளும் இல்லை என்றால், பிறகு நீ யார்? அதை மட்டும் சொல்லிவிடு, நந்தினி! அதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்குப் பைத்தியம் உண்மையிலேயே பிடித்துவிடும்!" என்றார் கரிகாலர்.

"அதை தங்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்றுதான் நானும் விரும்புகிறேன். ஆனால் தங்களுடைய தோழரும் என்னுடைய தோழியும், இதோ நெருங்கி வந்துவிட்டார்கள். மறுபடியும் சந்தர்ப்பம் வாய்க்கும்போது அவசியம் சொல்லுகிறேன்" என்றாள் நந்தினி.

மிகச் சமீபத்தில் வந்துவிட்ட வல்லவரையனைப் பார்த்துப் பழுவூர் ராணி, "ஐயா! இது என்ன வெறுங்கையுடனே திரும்பி வந்திருக்கிறீர்கள்? புலியின் தலை எங்கே?" என்று கேட்டாள்.

"தேவி! புலியின் தலையைக் கொண்டு வந்து தங்கள் காலடியில் சமர்ப்பிக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை!" என்றான் வந்தியத்தேவன்.

"ஆகா! இவ்வளவுதானா உமது வீரம்? உமது முன்னோர்களின் வீரத்தைப் பற்றிப் பாட்டுகள் எல்லாம் சொன்னீரே? மூன்று குலத்து வேந்தர்களின் தலைகளைப் பறித்துக் கழனியில் நடவு நட்டார்கள் என்று சொன்னீரே?"

"அது என்ன அப்படிப்பட்ட பாடல்?" என்று கரிகாலர் கேட்டார்.

"ஐயா! நீர் சொல்கிறீரா? நான் சொல்லட்டுமா?" என்று நந்தினி வந்தியத்தேவனைப் பார்த்து வினவினாள்.

"ராணி! அப்படி ஒரு பாடல் சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லையே?" என்றான் வந்தியத்தேவன்.

"உமக்கு ஞாபகம் இல்லை. ஆனால் எனக்கு நன்றாய் நினைவு இருக்கிறது. நான் சொல்லுகிறேன் கேளுங்கள், ஐயா!

சேனை தழையாக்கிச் செங்குருதி நீர் தேக்கி
ஆனை மிதித்த அருஞ் சேற்றில் - மான பரன்
பாவேந்தர் தம் வேந்தன் வாணன் பறித்து நட்டான்
மூவேந்தர் தங்கள் முடி!

எப்படியிருக்கிறது பாட்டு! கோமகனே! தாங்கள் பாண்டியன் ஒருவனுடைய தலையை மட்டுமே கொண்டீர்கள். இந்த வீரருடைய முன்னோர்கள், சேர சோழ பாண்டியர்களுடைய தலைகளைப் பறித்துக் கொண்டு வந்து கழனியில் நடவு நட்டார்களாம்...!"

கரிகாலருடைய முகத்தில் அருவருப்பும் குரோதமும் தாண்டவம் ஆடின. "நல்ல உழவு! நல்ல நடவு!" என்று சொல்லிவிட்டு அவர் இடி இடி என்று வாய்விட்டுச் சிரித்தார்.

வந்தியத்தேவன் கரிகாலருடைய முகத்தையே ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. அவன் தட்டு தடுமாறி, "தேவி! இத்தகைய பாடல் ஒன்றை தங்களிடம் நான் சொல்லவே இல்லையே?" என்றான்.

"அதனால் என்ன? ஏற்கெனவே தெரிந்து கொண்டிராவிட்டால் உமது குலத்தின் பெருமையை இப்போதாவது தெரிந்து கொள்ளும்! அவ்வாறு முக்குலத்து வேந்தர்களின் முடிகளைப் பறித்து நட்ட வம்சத்தில் கேவலம் காயம்பட்ட புலி ஒன்றின் தலையைக் கொண்டு வர முடியவில்லையே?" என்றாள்.

"தேவி! காயம்பட்ட அந்தப் புலி செத்துத் தொலைந்து போய் விட்டது. செத்த புலியின் தலையை வெட்ட நான் விரும்பவில்லை."

"அது எப்படி? புலி தத்தித் தத்திப் படகில் ஏறியதை நான் பார்த்தேனே?" என்றார் கரிகாலர்.

"நான்தான் அந்தக் காட்சியைத் தங்களுக்குக் காட்டினேன். படகில் ஏறிப் படுத்துக் கொண்ட பிறகு அது செத்துப் போயிருக்கிறது. பழுவூர் இளைய ராணியின் திருமேனியைக் காயப்படுத்தி விட்டோ மே என்ற பச்சாத்தாபத்தினால் அது பிராணனை விட்டு விட்டதோ, என்னமோ?" என்றான் வந்தியத்தேவன்.

கரிகாலன் முகத்தில் கடுகடுப்புச் சிறிது தணிந்து புன்னகை அரும்பியது. "ஆனால் அது தண்ணீரிலேயே செத்துப் போயிருக்கலாமே? படகில் ஏறிச் சாக வேண்டியதில்லையே?" என்றார் கரிகாலர்.

"என்னைப்போல் அதற்கும் தண்ணீரைக் கண்டால் பிடிப்பதில்லை போலிருக்கிறது. எல்லாச் சாவுகளிலும் தண்ணீரிலே சாவது தான் எனக்குப் பயமளிக்கிறது!" என்றான் வந்தியத்தேவன்.

"ஆயினும் சற்று முன்னால் தைரியமாகத் தண்ணீரில் குதித்து விட்டீரே? இந்தப் பேதைப் பெண்களின் பேரில் அவ்வளவு கருணை போலிருக்கிறது?"

"தேவி! தண்ணீரைக் காட்டிலும் எனக்குப் பெண்களைக் கண்டால் அதிக பயம் உண்டாகிறது. இளவரசருடைய வற்புறுத்தலுக்காகத்தான் குதித்தேன். உண்மையில் அப்படிக் குதித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்று இப்போது தெரிகிறது" என்றான் வல்லவரையன்.

"ஆம், ஆம்! நீர் தண்ணீரில் விழுந்து சாவது பற்றித் தான் உமக்குப் பயம். பிறரை மூழ்க அடித்துச் சாகச் செய்வது பற்றி உமக்குப் பயமே இல்லை!" என்றாள் நந்தினி.

இந்தப் பேச்சுக்கள் ஒன்றும் மணிமேகலைக்குப் பிடிக்கவில்லை என்பது அவளுடைய முகபாவத்திலிருந்து நன்கு வெளியாயிற்று. "அக்கா, சமைத்த உணவு ஆறிப் போய்விடும்; வாருங்கள் போகலாம்!" என்றாள்.

நால்வரும் பளிங்கு மண்டபத்தை நோக்கி நடந்தார்கள். அப்போது இடையிடையே மணிமேகலை வந்தியத்தேவனை நோக்கினாள். அவனுடைய மனதில் ஏதோ சங்கடம் ஏற்பட்டிருக்கிறதென்றும், இளவரசரும் நந்தினியும் அவனுக்கு ஏதோ தொல்லை கொடுக்கிறார்கள் என்றும் அவள் தன் உள்ளுணர்ச்சியால் அறிந்தாள். "யார் தங்களுக்கு எதிரியானாலும் நான் தங்களுடைய கட்சியில் இருப்பேன்; கவலைப்பட வேண்டாம்!" என்று நயன பாஷையின் மூலம் வந்தியத்தேவனுக்கு ஆறுதல் கூற முயன்றாள். ஆனால் வந்தியத்தேவனோ அவள் பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை. அவன் கவலைக் கடலில் அடியோடு மூழ்கிப் போனவனாகக் காணப்பட்டான்.

நந்தினி தேவியின் வஞ்சக வார்த்தைகளும் வந்தியத்தேவன் மீது அவள் சுமத்திய பயங்கரமான பழியும் இந்தக் கதையைத் தொடர்ந்து படித்து வரும் நேயர்களுக்கு அருவருப்பை அளித்திருக்கக் கூடியது இயல்பேயாகும். எனினும், நாம் அறிந்துள்ள வரையில் அவளுடைய பிறப்பையும் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்தால் அவ்வளவாக வியப்பு அடைய மாட்டோ ம். மனிதர்களின் குணாதிசயங்கள் பரம்பரை காரணமாக ரத்தத்தில் ஊறியுள்ள இயல்புகளில் அமைகின்றன. சூழ்நிலையினாலும் பழக்க வழக்கங்களினாலும் வாழ்க்கை அனுபவங்களினாலும் மாறுதலடைகின்றன. ஊமையும் செவிடுமான மந்தாகினி காட்டிலே பெரும்பாலும் வாழ்ந்திருந்தவள். வனவிலங்குகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள அவள் எவ்வளவோ ஜாக்கிரதையாயிருக்க வேண்டியிருந்தது. தான் உயிர் தப்புவதற்காகச் சில சமயம் அந்த மிருகங்களைக் கொடூரமாகக் கொல்ல வேண்டியும் நேர்ந்தது.

வெகு காலம் வரையில் பால்போல் தூய்மையாக இருந்த அவள் உள்ளத்தில் ஒரு சமயம் அன்பு என்னும் அமுத ஊற்றுச் சுரந்தது. விரைவில், அந்த ஊற்று வறண்டு அவளுடைய நெஞ்சத்தை வறண்ட பாலைவனம் ஆக்கியது. விதியின் விளையாட்டு அவளை ஒரு பெரிய ஏமாற்றத்துக்கு உள்ளாக்கிவிட்டது. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி அவளுடைய புத்தியே பேதலித்துப் போகும்படி செய்துவிட்டது. எனினும், நாளடைவில் அவளுடைய நெஞ்சின் காயம் ஆறியது. அன்பாகிய அமுத ஊற்று மீண்டும் சுரந்தது. சுந்தர சோழரின் மீது கொண்ட காதலையெல்லாம் அவருடைய அருமைப் புதல்வனாகிய அருள்மொழிச் செல்வனிடம் பிள்ளைப் பிரேமையாக மாற்றிக் கொண்டாள்.

மந்தாகினியின் புதல்வியாகிய நந்தினியிடம் தாயின் குணாதிசயங்கள் பல இயற்கையில் தோன்றியிருந்தன. ஆனால் தாயை உலகம் வஞ்சித்ததைக் காட்டிலும் மகளை அதிகமாக வஞ்சித்தது. பெற்ற தாயினாலும் கைவிடப்பட்டாள். பிறர் வீட்டில் வளர்ந்தாள். காட்டு மிருகங்களினால் அன்னைக்கு ஏற்பட்ட தொல்லைகளைக் காட்டிலும் நாட்டு மனிதர்களால் மகள் அதிகக் கொடுமைகளுக்கு உள்ளானாள். இளம் பிராயத்தில் அரச குலத்தினரால் அவமதிக்கப்பட்டதெல்லாம் அவளுடைய நெஞ்சில் வைரம் பாய்ந்து நிலைத்து விஷத்தினும் கொடிய துவேஷமாக மாறியது. துவேஷத்துக்கு மாற்று அளிக்கக் கூடிய அன்பு என்னும் அமுதம் அவளுக்கு கிட்டவில்லை. அவள் யார் யாரிடம் அன்பு வைத்தாளோ அவர்கள் ஒன்று, அவளை அலட்சியம் செய்து புறக்கணித்தார்கள்; அல்லது துரதிர்ஷ்டத்துக்கு உள்ளாகி மாண்டு போனார்கள். அவளை அவமதித்தவர்களும் அவளால் வெறுக்கப்பட்டவர்களும் மேன்மையுடன் வாழ்ந்தார்கள். ஒரு பெண்ணின் உள்ளத்தை நஞ்சினும் கொடியதாக்குவதற்கு வேறு என்ன காரணங்கள் வேண்டும்? தன்னை வஞ்சித்தவர்களையும் அவமதித்தவர்களையும் பழி வாங்குவதைத் தவிர அவளுடைய உள்ளத்தில் வேறு எதற்கும் இடம் இருக்கவில்லை. அதற்கு வேண்டிய சூழ்ச்சித் திறன்கள் அன்னையின் கர்ப்பத்தில் இருந்த நாளிலேயே அவளுடைய இரத்தத்தில் சேர்ந்திருந்தன. வாழ்க்கையில் அவள் பட்ட அல்லல்களும் ஏமாற்றங்களும் பயங்கர அனுபவங்களும் அவளுடைய உள்ளத்திலிருந்து இரக்கம், அன்பு முதலிய மிருதுவான பண்புகளை அடியோடு துடைத்து இரும்பினும் கல்லினும் கடினமாக்கியிருந்தன. இக்கதையில் இனி வரப்போகும் நிகழ்ச்சிகளை நன்கு அறிந்து கொள்வதற்கு இந்தக் குணாதிசய விளக்கத்தை இங்கே குறிப்பிடுவது அவசியம் என்று கருதி எழுதினோம்.

உணவருந்தும் வேளையிலும் அவர்களுக்குள் உற்சாகமான பேச்சு எதுவும் நடைபெறவில்லை. நந்தினியும், கரிகாலரும் வந்தியத்தேவனும் அவரவர்களுடைய கவலையிலே ஆழ்ந்திருந்தார்கள். இதனால் மணிமேகலைக்குத்தான் மிக்க ஆதங்கமாயிருந்தது. பழுவூர் ராணியுடன் உல்லாசமாகப் பேசி உற்சாகமாகப் பொழுது போக்கும் எண்ணத்துடன் அவள், அன்று நீர் விளையாடலுக்கும் வன போஜனத்துக்கும் ஏற்பாடு செய்திருந்தாள். இளவரசரும் வந்தியத்தேவனும் எதிர்பாராமல் வந்து சேர்ந்து கொண்டவுடன் அவளுடைய உற்சாகம் அதிகமாயிற்று. ஆனால் அதற்குப் பிறகு மற்ற மூவரும் பேசிய வார்த்தைகளும் நடந்து கொண்ட விதமும் அவளுக்குச் சிறிதும் திருப்தி அளிக்கவில்லை. நந்தினியையும் வந்தியத்தேவனையும் சேர்த்துப் பார்த்த போது ஏற்பட்ட வேதனையை அவளுடைய குழந்தை உள்ளம் உடனே மறந்து விட்டது. அதைப் பற்றித் தவறாக எண்ணி அசூயைக்கு இடங்கொடுத்தது தன்னுடைய தவறு என்று எண்ணித் தேறினாள். அதற்கு பிறகு மற்ற மூன்று பேரும் கலகலப்பில்லாமல் சிடுசிடுவென்று முகத்தை வைத்துக் கொண்டிருந்ததும் கபடமாகப் பேசி வந்ததும் அவளுக்கு விளங்கவும் இல்லை; பிடிக்கவும் இல்லை.

எனவே, உணவருந்திச் சிறிது நேரம் ஆனதும் மணிமேகலை "அக்கா! நாம் திரும்பிப் பிரயாணப்படலாமா? படகைக் கொண்டு வரச் சொல்லட்டுமா? இவர்கள் இருவரும் நம்முடன் வருகிறார்களா அல்லது குதிரை மீது வந்த வழியே போகிறார்களா?" என்று கேட்டாள்.

அப்போதுதான் கரிகாலர் சிந்தனை உலகத்திலிருந்து வெளி உலகத்துக்கு வந்தார். "ஆ! ஆ! இந்தப் பெண்ணின் யாழிசையைக் கேட்காமல் திரும்புவதா? ஒரு நாளும் முடியாது. நந்தினி! மறந்து விட்டாயா, என்ன? மணிமேகலை! எங்களை ஏமாற்றி விடாதே!" என்றார்.

"அதை நான் மறக்கவில்லை. தங்களையும் தங்கள் சிநேகிதரையும் பார்த்தால் கானத்தைக் கேட்கக் கூடியவர்களாகத் தோன்றவில்லை. முள்ளின் மேல் நிற்பது போல் நிற்கிறீர்கள். ஆயினும் பாதகமில்லை. மணிமேகலை! எங்கே, யாழை எடுத்துக் கொண்டு வா!" என்றாள் நந்தினி.

"எதற்காக, அக்கா? விரும்பாதவர்களின் முன்னால் எதற்காக என்னை யாழ் வாசிக்கச் சொல்கிறீர்கள்?" என்று மணிமேகலை சிறிது கிராக்கி செய்தாள்.

"இல்லை, இல்லை! இளவரசர்தான் கேட்பதாகச் சொல்கிறாரே. அவருடைய நண்பருக்குப் பாட்டுப் பிடிக்காவிட்டால் காதைப் பொத்திக் கொள்ளட்டும்" என்றாள் நந்தினி!

"கடவுளே! அப்படியொன்றும் நான் இசைக்கலையின் விரோதி அல்ல! கோடிக்கரையில் பூங்குழலி என்னும் ஓடக்காரப் பெண்,

'அலைகடலும் ஓய்ந்திருக்க
அகக்கடல்தான் பொங்குவதேன்?'

என்று ஒரு பாட்டுப் பாடினாள். அதை நினைத்தால் இப்போதும் எனக்கு உடம்பு சிலிர்க்கிறது!" என்றான் வந்தியத்தேவன்.

"சில பேருக்குச் சிலருடைய பாட்டுத்தான் பிடிக்கும். என்னுடைய பாட்டு உங்களுக்குப் பிடிக்குமோ என்னமோ?" என்றாள் மணிமேகலை.

"பிடிக்காமற் போனால், யார் விடுகிறார்கள்? அதற்கு நான் ஆயிற்று. நீ யாழை எடுத்துக் கொண்டு வா!" என்றார் கரிகாலர்.

மணிமேகலை யாழை எடுத்துக்கொண்டு வந்தாள். பளிங்கு மண்டபத்தின் படிக்கட்டில் மேற்படியில் உட்கார்ந்து கொண்டாள். நரம்புகளை முறுக்கிச் சுருதி கூட்டினாள். ஏழு தந்திகள் கொண்ட யாழ் அது. ஒவ்வொரு தந்தியிலும் பாதி வரையில் ஒரு ஸ்வரமும் அதற்கு மேலே இன்னொரு ஸ்வரமும் பேசக் கூடியது. சிறிது நேரம் யாழை மட்டும் வாசித்து இன்னிசையைப் பொழிந்தாள். கரிகாலரும் வந்தியத்தேவனும் உண்மையிலேயே மற்றக் கவலைகளையெல்லாம் மறந்துவிட்டார்கள். யாழின் இசையில் உள்ளத்தைப் பறிகொடுத்துப் பரவசமானார்கள்.

பின்னர், மணிமேகலை யாழிசையுடன் குரலிசையையும் சேர்த்துப் பாடினாள். அப்பர், சம்பந்தர், சுந்தரரின் தெய்வீகமான பாசுரங்களைப் பாடினாள். சிறிது நேரமானதும் இளவரசர், "மணிமேகலை! உன்னுடைய கானம் அற்புதமாயிருக்கிறது. ஆனால் எல்லாம் பக்திமயமான பாடல்களையே பாடி வருகிறாய். அவ்வளவாக நான் பக்தியில் ஈடுபட்டவனல்ல. சிவபக்தியையெல்லாம் மதுராந்தனுக்கே உரிமையாக்கி விட்டேன். ஏதாவது காதல் பாட்டுப் பாடு!" என்று சொன்னார்.

மணிமேகலையின் அழகிய கன்னங்கள் நாணத்தினால் குழிந்தன. சிறிது தயக்கம் காட்டினாள்.

"பெண்ணே! ஏன் தயங்குகிறாய்? இங்கே நீ காதல் பாட்டுப் பாடினால் என்னை உத்தேசித்துப் பாடுகிறாய் என்று நான் எண்ணிக் கொள்ள மாட்டேன். என் சிநேகிதனும் எண்ணிக் கொள்ள மாட்டான், ஆகையால் தயக்கமின்றிப் பாடு!" என்றார் கரிகாலர்.

"அப்படி யாராவது எண்ணிக் கொண்டால் மணிமேகலை அதற்காகக் கவலைப்படவும் மாட்டாள்!" என்றாள் நந்தினி.

"போங்கள், அக்கா! இரண்டு புருஷர்கள் இருக்குமிடத்தில் இப்படிப் பரிகாசம் செய்யலாமா?" என்றாள் மணிமேகலை.

"இவர்கள் புருஷர்கள் என்று நீ நினைப்பதுதான் பிசகு. ஒரு செத்த புலியின் தலையைக் கொண்டு வர முடியாதவர்களை ஆண் பிள்ளைகள் என்று சொல்ல முடியுமா? முற்காலத்தில் தமிழ்நாட்டு வீர புருஷர்கள் உயிருடன் புலியைப் பிடித்து அதன் வாயைப் பிளந்து பற்களைப் பிடுங்கிக் கொண்டுவந்து தங்கள் நாயகிகளுக்கு ஆபரணமாகச் சூட்டுவார்களாம்! அந்தக் காலமெல்லாம் போய் விட்டது! போனால் போகட்டும்! நீ பாடு! அன்றைக்கு என்னிடம் பாடிக் காட்டினாயே? அந்த அழகான பாட்டைப் பாடு!" என்றாள் நந்தினி.

மணிமேகலை யாழ் வாசித்துக் கொண்டு பின்வரும் கீதத்தைப் பாடினாள். அது என்னமோ, இத்தனை நேரம் பாடியதைக் காட்டிலும் இந்தப் பாட்டில் அவள் குரல் இணையற்ற இனிமையுடன் அமுத வெள்ளத்தைப் பொழிந்தது:

"இனியபுனல் அருவி தவழ்
இன்பமலைச் சாரலிலே
கனிகுலவும் மரநிழலில்
கரம்பிடித்து உகந்ததெல்லாம்

கனவு தானோடி - சகியே
நினைவு தானோடி!

புன்னைமரச் சோலையிலே
பொன்னொளிரும் மாலையிலே
என்னைவரச் சொல்லி அவர்
கன்னல்மொழி பகர்ந்ததெல்லாம்

சொப்பனந் தானோடி - அந்த
அற்புதம் பொய்யோடி?

கட்டுக்காவல் தான்கடந்து
கள்ளரைப்போல் மெள்ள வந்து
மட்டிலாத காதலுடன்
கட்டி முத்தம் ஈந்ததெல்லாம்

நிகழ்ந்த துண்டோடி - நாங்கள்
மகிழ்ந்த துண்டோடி!"

இவ்வாறு மேலும் மேலும் பல கண்ணிகளை மணிமேகலை வெவ்வேறு பண்களில் அமைத்துப் பாடி வந்தாள். அந்தக் கான வெள்ளத்தில் மற்ற மூவரும் மூழ்கிப் போனார்கள். பல காரணங்களினால் நெஞ்சைக் கல்லினும் இரும்பினும் கடினமாக்கிக் கொண்டிருந்த நந்தினியின் கண்களிலும் கண்ணீர் ததும்பியது. ஆதித்த கரிகாலர் இந்த உலகத்தை அடியோடு மறந்துவிட்டார். வந்தியத்தேவன் அடிக்கடி திடுக்கிட்டு விழித்துக் கொண்டவன் போல் மணிமேகலையை நோக்கினான். அப்போதெல்லாம் அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தது கண்டு அந்த வீரனுடைய உள்ளம் மேலும் திடுக்கிட்டது. "ஐயோ! இந்தப் பெண்ணுக்கு நாம் என்ன தீங்கு செய்துவிட்டோ ம்?" என்று அவன் நெஞ்சம் பதைபதைத்தது.

கான வெள்ளத்திலும், உணர்ச்சி வெள்ளத்திலும் மூழ்கியிருந்தவர்கள் வரவரக் காற்று கடுமையாகிக் கொண்டு வருவதைக் கவனிக்கவில்லை. ஏரியில் முதலில் சிறிய சிறிய அலைகள் கிளம்பி விழுந்ததையும் வரவர அவை பெரிதாகி வந்ததையும் கவனிக்கவில்லை. காற்று கடும் புயலாக மாறிக் காட்டு மரம் ஒன்றை அடியோடு பெயர்த்துத் தள்ளியபோது தான் நால்வரும் விழித்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தார்கள். கடுமையான புயல் காற்று அடிப்பதையும் ஏரி கொந்தளித்துப் பேரலைகள் 'ஓ' என்ற இரைச்சலுடன் எழுந்து விழுவதையும் பார்த்தார்கள்.

திடீரென்று நந்தினி, "ஐயோ! படகு எங்கே?" என்று அலறினாள். கட்டிப் போட்டிருந்த இடத்தில் படகைக் காணவில்லை. உற்றுப் பார்த்தபோது வெகு தூரத்தில் படகு அலைகளால் மொத்துண்டு நகர்ந்து நகர்ந்து போய்க்கொண்டிருந்தது.

"ஐயோ! இப்போது என்ன செய்வது?" என்று நந்தினி அலறினாள்.

"உங்கள் இருவருக்கும் குதிரை ஏறத்தெரிந்தால் ஏறிப்போய் விடுங்கள். நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம்" என்றான் வந்தியத்தேவன்.

"இந்தப் புயல் காற்றில் காட்டு மரங்கள் பெயர்ந்து விழுந்து எங்களைச் சாக அடிப்பதற்கு வழி செய்கிறீர்களா?" என்று நந்தினி கேட்டாள்.

"அதெல்லாம் வேண்டாம்; புயலின் வேகம் தணியும் வரையில் இங்கேயே இருந்து விடுவோம். அங்கே போய் என்ன செய்யப் போகிறோம்? சமையலுக்குப் பண்டங்கள் இருக்கின்றன; பாடுவதற்கு மணிமேகலை இருக்கிறாள். இவ்வளவு சந்தோஷமாகச் சமீபத்தில் நான் இருந்ததில்லை!" என்றார் கரிகாலர்.

"இளவரசே! அது சரியல்ல! சம்புவரையரும், கந்தமாறனும் என்ன நினைப்பார்கள்?" என்றான் வல்லவரையன்.

"இவரே புலியைத் தேடிச் சென்றபோது படகை அவிழ்த்துவிட்டு விட்டார் போலிருக்கிறது!" என்றாள் நந்தினி.

"அக்கா! ஏன் வீண் பழி சொல்கிறீர்கள்? இவர் வந்தபோது படகு கரையோரமாகத்தானே இருந்தது. யாரும் கவலைப்படவேண்டாம், என் தந்தை இந்தப் புயல் காற்றைப் பார்த்ததும் நம் துணைக்குப் பெரிய படகுகளை அனுப்பி வைப்பார்!" என்றாள் மணிமேகலை.

அவள் கூறியது சற்று நேரத்துக்கெல்லாம் உண்மையாயிற்று. ஏறக்குறைய கப்பல் என்று சொல்லத் தக்க இரு பெரும் படகுகள் அத்தீவை நோக்கி வந்தன. அவற்றில் ஒன்றில் பெரிய சம்புவரையரே இருந்தார். நாலு பேரும் பத்திரமாய் இருப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அவர்களை ஏற்றிக் கொண்டு அலைகடல் போல் பொங்கிக் கொந்தளித்த ஏரியில் இரண்டு படகுகளும் திரும்பிச் சென்றன. சம்புவரையரைத் தவிர, மற்ற நால்வரின் உள்ளங்களிலும் கடும் புயல் வீசிக் கொந்தளிப்பை உண்டாக்கிக் கொண்டிருந்தது





Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 46. படகு நகர்ந்தது!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 52. உடைந்த படகு
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 43. பழையாறை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 34. அநுராதபுரம்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: