BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  9. கரை உடைந்தது! Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 9. கரை உடைந்தது!

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  9. கரை உடைந்தது! Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 9. கரை உடைந்தது!   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  9. கரை உடைந்தது! Icon_minitimeWed Jun 01, 2011 4:00 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

9. கரை உடைந்தது!



பழுவேட்டரையரின் மனத்தில் குடி கொண்டிருந்த வேதனையைப் படகிலே இருந்த மற்றவர்கள் உணரக் கூடவில்லை. புயற் காற்றில் படகு அகப்பட்டுக் கொண்டதன் காரணமாகவே அவர் அவ்வளவு சங்கடப்படுவதாக நினைத்தார்கள். பெரிய பழுவேட்டரையர் மனோ தைரியத்தில் நிகரற்றவர் எனப் பெயர் வாங்கியிருந்தவர். அவரே இவ்வளவு கலங்கிப் போனதைப் பார்த்து, மற்றவர்களின் மனத்திலும் பீதி குடி கொண்டது. எந்த நேரம் படகு கவிழுமோ என்று எண்ணி, அனைவரும் தப்பிப் பிழைப்பதற்கு வேண்டிய உபாயங்களைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

கடைசியாக வெகு நேரம் படகு தவித்துக் தத்தளித்த பிறகு, கரை ஏற வேண்டிய துறைக்கு அரைக் காத தூரம் கிழக்கே சென்று, கரையை அணுகியது. "இனிக் கவலை இல்லை" என்று எல்லாரும் பெரு மூச்சு விட்டார்கள். அச்சமயத்தில் நதிக்கரையில் புயற் காற்றினால் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்த மரங்களில் ஒன்று தடார் என்று முறிந்து விழுந்தது. முறிந்த மரத்தைக் காற்று தூக்கிக் கொண்டு வந்து படகின் அருகில் தண்ணீரில் போட்டது. படகைத் திருப்பி அப்பால் செலுத்துவதற்கு ஓடக்காரர்கள் பெரு முயற்சி செய்தார்கள். பலிக்கவில்லை. மரம் அதி வேகமாக வந்து படகிலே மோதியது. படகு 'தடால்' என்று கவிழ்ந்தது. மறுகணம் படகில் இருந்தவர்கள் அனைவரும் தண்ணீரில் விழுந்து மிதந்தார்கள்.

மற்றவர்கள் எல்லாரும் படகு கவிழ்ந்தால் தப்பிப் பிழைப்பது பற்றியே எண்ணிக் கொண்டிருந்தார்களாதலால், அவ்வாறு உண்மையில் நிகழ்ந்து விட்டதும், அந்த அபாயத்திலிருந்து சமாளிப்பதற்கு ஓரளவு ஆயத்தமாயிருந்தார்கள். கரையை நெருங்கிப் படகு வந்து விட்டிருந்தபடியால் சிலர் நீந்திச் சென்று கரையை அடைந்தார்கள். சிலர் மரங்களின் மீது தொத்திக்கொண்டு நின்றார்கள். சிலர் கையில் அகப்பட்டதைப் பிடித்துக் கொண்டு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் பழுவேட்டரையர் வேறு சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தபடியால், படகுக்கு நேர்ந்த விபத்தை எதிர்பார்க்கவே இல்லை. படகு கவிழ்ந்ததும் தண்ணீரில் முழுகி விட்டார். அவரைப் பிரவாகத்தின் வேகம் வெகு தூரம் அடித்துக் கொண்டு போய் விட்டது. சில முறை தண்ணீர் குடித்து, மூக்கிலும் காதிலும் தண்ணீர் ஏறி, திணறித் தடுமாறி கடைசியில் ஒருவாறு சமாளித்துக் கொண்டு அவர் பிரவாகத்துக்கு மேலே வந்தபோது படகையும் காணவில்லை; படகில் இருந்தவர்கள் யாரையும் காணவில்லை.

உடனே அந்தக் கிழவரின் நெஞ்சில் பழைய தீரத்துவம் துளிர்த்து எழுந்தது. எத்தனையோ போர்களில் மிக ஆபத்தான நிலைமையில் துணிவுடன் போராடி வெற்றி பெற்ற அந்த மாபெரும் வீரர் இந்தக் கொள்ளிடத்து வெள்ளத்துடனும் போராடி வெற்றி கொள்ளத் தீர்மானித்தார். சுற்று முற்றும் பார்த்தார். சமீபத்தில் மிதந்து வந்த ஒரு மரக்கட்டையை எட்டிப் பிடித்துக்கொண்டார். கரையைக் குறி வைத்து நீந்தத் தொடங்கினார். வெள்ளத்தின் வேகத்துடனும், புயலின் வேகத்துடனும், ஏக காலத்தில் போராடிக் கொண்டே நீந்தினார். கை சளைத்தபோது சிறிது நேரம் வெறுமனே மிதந்தார். பலமுறை நதிக்கரையை ஏற முயன்றபோது மழையினால் சேறாகியிருந்த கரை அவரை மறுபடியும் நதியில் தள்ளி விட்டது. உடனே விட்டுவிட்ட கட்டையைத் தாவிப் பிடித்துக் கொண்டார்.

இவ்விதம் இருட்டி ஒரு ஜாமத்துக்கு மேலாகும் வரையில் போராடிய பிறகு நதிப் படுக்கையில் நாணற் காடு மண்டி வளர்ந்திருந்த ஓரிடத்தில் அவருடைய கால்கள் தரையைத் தொட்டன. பின்னர், வளைந்து கொடுத்த நாணற் புதர்களின் உதவியைக் கொண்டு அக்கிழவர் தட்டுத் தடுமாறி நடந்து, கடைசியாகக் கரை ஏறினார்.

அவரைச் சுற்றிலும் கனாந்தகாரம் சூழ்ந்திருந்தது. பக்கத்தில் ஊர் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. திருமலையாற்றுக்கு எதிரில் கரை ஏற வேண்டிய ஓடத்துறைக்குச் சுமார் ஒன்றரைக் காத தூரம் கிழக்கே வந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. ஆம், ஆம்! குடந்தை நகரத்துக்கு அருகிலேதான் தாம் கரை ஏறியிருக்க வேண்டும். இன்றிரவு எப்படியாவது குடந்தை நகருக்கு போய்விட முடியுமா?...

புயல் அப்போது தான் பூரண உக்கிரத்தை அந்தப் பிரதேசத்தில் அடைந்திருந்தது. நூறாயிரம் பேய்கள் சேர்ந்து சத்தமிடுவது போன்ற பேரோசை காதைச் செவிடுபடச் செய்தது. மரங்கள் சடசடவென்று முறிந்து விழுந்தன வானத்தில் அண்ட கடாகங்கள் வெடித்து விடுவது போன்ற இடி முழக்கங்கள் அடிக்கடி கேட்டன. பெருமழை சோவென்று கொட்டியது.

'எங்கேயாவது பாழடைந்த மண்டபம் அல்லது பழைய கோயில் இல்லாமலா போகும்? அதில் தங்கி இரவைக் கழிக்க வேண்டியதுதான். பொழுது விடிந்த பிறகுதான் மேலே நடையைத் தொடங்க வேண்டும்' என்று முடிவு கட்டிக் கொண்டு, தள்ளாடி நடுங்கிய கால்களை ஊன்றி வைத்த வண்ணம் நதிக்கரையோடு நடந்து சென்றார்.

நதியில் கரையின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. மழை பெய்தபடியால் கரை மேலேயும் ஓரளவு தண்ணீராயிருந்தது. இருட்டைப் பற்றியோ சொல்ல வேண்டியதாயில்லை. ஆகவே, அந்த வீரக் கிழவர் நடந்து சென்ற போது, தம் எதிரிலே நதிக் கரையின் குறுக்கே கொஞ்சம் தண்ணீர் அதிகமாக ஓடியதைப் பற்றி அதிக கவனம் செலுத்தவில்லை. திடீரென்று முழங்கால் அளவு ஜலம் வந்து விட்டதும், சற்றுத் தயங்கி யோசித்தார். தொடையளவு ஜலம் வந்ததும் திடுக்கிட்டார். அதற்கு மேலே யோசிப்பதற்கு அவகாசமே இருக்கவில்லை. மறுகணம் அவர் தலை குப்புறத் தண்ணீரில் விழுந்தார். கொள்ளிடத்தின் கரை உடைத்துக் கொண்டு அந்த இடத்தில் தெற்கு நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்த வெள்ளம் அவரை உருட்டிப் புரட்டி அடித்துக் கொண்டு போயிற்று. கரைக்கு அப்பால் பள்ளமான பிரதேசமானபடியால் அவரை ஆழமாக, இன்னும் ஆழமாக அதல பாதாளத்துக்கே அடித்துக் கொண்டு போவது போலிருந்தது. படகு கவிழ்ந்து நதியில் போய்க் கொண்டிருந்த வெள்ளத்தில் மூழ்கியபோது அவர் சற்று எளிதாகவே சமாளித்துக் கொண்டார். இப்போது அவ்விதம் முடியவில்லை. உருண்டு, புரண்டு, உருண்டு புரண்டு, கீழே கீழே போய்க் கொண்டிருந்தார். கண் தெரியவில்லை; காது கேட்கவில்லை. நிமிர்ந்து நின்று மேலே வரவும் முடியவில்லை, மூச்சுத் திணறியது. யாரோ ஒரு பயங்கர ராட்சதன் அவரைத் தண்ணீரில் அமுக்கி அமுக்கித் தலை குப்புறப் புரட்டிப் புரட்டி அதே சமயத்தில் பாதாளத்தை நோக்கி இழுத்துக் கொண்டு போனான்.

'ஆகா அந்த ராட்சதன் வேறு யாரும் இல்லை! கொள்ளிடத்தின் கரையை உடைத்துக்கொண்டு, உடைப்பின் வழியாக அதிவேகமாகப் பாய்ந்த வெள்ளமாகிய ராட்சதன்தான்! அவனுடைய கோரமான பிடியிலிருந்து பயங்கரமான உருட்டலிலிருந்து தப்பிப் பிழைக்க முடியுமா? கால் தரையில் பாவவில்லையே? கைக்குப் பிடி எதுவும் அகப்படவில்லை? மூச்சுத் திணறுகிறதே? கழுத்தைப் பிடித்துத் திருகுவது போலிருக்கிறதே? காது செவிடுபடுகிறதே! துர்க்கா பரமேசுவரி! தேவி! நான் இந்த விபத்திலிருந்து பிழைப்பேனா? அடிபாவி நந்தினி! உன்னால் எனக்கு நேர்ந்த கதியைப் பார்! ஐயோ! பாவம்! உன்னை அந்த தூர்த்தர்கள் மத்தியில் விட்டு விட்டு வந்தேனே? சீச்சீ! உன் அழகைக் கண்டு மயங்கி, உன் நிலையைக் கண்டு இரங்கி, உன்னை மணந்து கொண்டதில் நான் என்ன சுகத்தைக் கண்டேன்? மன அமைதி இழந்ததைத் தவிர வேறு என்ன பலனை அனுபவித்தேன்? கடைசியில், இப்படிக் கொள்ளிடத்து உடைப்பில் அகப்பட்டுத் திணறித் திண்டாடிச் சாகப் போகிறேனே! அறுபத்து நாலு போர்க்காயங்களைச் சுமந்த என் உடம்பைப் புதைத்து வீரக்கல் நாட்டிப் பள்ளிப்படை கூடப் போவதில்லை! என் உடலை யாரும் கண்டெடுக்கப் போவதுகூட இல்லை! எங்கேயாவது படு பள்ளத்தில் சேற்றில் புதைந்து விடப் போகிறேன்! என் கதி என்ன ஆயிற்று என்று கூட யாருக்கும் தெரியாமலே போய்விடப் போகிறது! அல்லது எங்கேயாவது கரையிலே கொண்டு போய் என் உடம்பை இவ்வெள்ளம் ஒதுக்கித் தள்ளிவிடும்! நாய் நரிகள் பிடுங்கித் தின்று பசியாறப் போகின்றன!...'

சில நிமிட நேரத்திற்குள் இவை போன்ற எத்தனையோ எண்ணங்கள் பழுவேட்டரையர் மனத்தில் தோன்றி மறைந்தன. பின்னர் அடியோடு அவர் நினைவை இழந்தார்!...

தடார் என்று தலையில் ஏதோ முட்டியதும், மீண்டும் சிறிது நினைவு வந்தது. கைகள் எதையோ, கருங்கல்லையோ, கெட்டியான தரையையோ - பிடித்துக்கொண்டிருந்தன. ஏதோ ஒரு சக்தி அவரை மேலே கொண்டுவந்து உந்தித் தள்ளியது. அவரும் மிச்சமிருந்த சிறிது சக்தியைப் பிரயோகித்து, கரங்களை ஊன்றி மேலே எழும்பிப் பாய்ந்தார். மறுநிமிடம், கெட்டியான கருங்கல் தரையில் அவர் கிடந்தார். கஷ்டப்பட்டுக் கண்களைத் திறக்கப் பிரயத்தனப்பட்டார். இறுக அமுங்கிக் கிடந்த கண்ணிமைகள் சிறிது திறந்ததும், எதிரே தோன்றிய ஜோதி அவருடைய கண்களைச் கூசச் செய்தது. அந்த ஜோதியில் துர்க்கா பரமேசுவரியின் திருமுக மண்டலம் தரிசனம் தந்தது! தேவி! உன் கருணையே கருணை! என்னுடைய அமைதியற்ற மண்ணுலக வாழ்வை முடித்து விண்ணுலகில் உன்னுடைய சந்நிதானத்துக்கே அழைத்துக் கொண்டாய் போலும்!...

இல்லை, இல்லை! இது விண்ணுலகம் இல்லை. மண்ணுலகத்திலுள்ள அம்மன் கோவில். எதிரே தரிசனம் அளிப்பது அம்மனுடைய விக்கிரகம். தாம் விழுந்து கிடப்பது கர்ப்பக் கிருஹத்தை அடுத்துள்ள அர்த்த மண்டபம். அம்மனுக்கு அருகில் முணுக் முணுக்கென்று சிறிய தீபம் எரிந்து கொண்டிருக்கிறது. அதன் வெளிச்சந்தான் சற்று முன் தம் கண்களை அவ்வளவு கூசச் செய்தது! வெளியிலே இன்னும் 'சோ' என்று மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. புயலும் அடித்துக்கொண்டிருக்கிறது. அவ்வளவு புயலும் மழையும் தேவி கோவிலின் கர்ப்பக் கிருஹத்தில் ஒளிர்ந்த தீபத்தை அசைக்க முடியவில்லை! அது ஒரு நல்ல சகுனமோ? துர்க்கா பரமேசுவரி தம்மிடம் வைத்துள்ள கருணைக்கு அறிகுறியோ? எத்தனை பெரிய விபத்துக்கள் வந்தாலும் தமது ஜீவன் மங்கிவிடாது என்று எடுத்துக் காட்டுவது போல அல்லவா இருக்கிறது? ஜகன் மாதாவின் கருணையே கருணை! தமது பக்தியெல்லாம், தாம் செய்த பூசனை எல்லாம் வீண் போகவில்லை.

கிழவர் தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க முயன்றார். அவர் உடம்பு நடுங்கியது. வெகு நேரம் வெள்ளத்திலேயே கிடந்த படியால் உடம்பு சில்லிட்டு நடுங்குவது இயல்புதான் அன்றோ? அம்மன் சந்நிதியில் திரை விடுவதற்காகத் தொங்கிய துணியை எடுத்து உடம்பை நன்றாகத் துடைத்துக்கொண்டார். தமது ஈரத் துணியைக் களைந்து எறிந்துவிட்டு திரைத் துணியை அரையில் உடுத்திக் கொண்டார்.

அம்மன் சந்நிதியில் உடைந்த தேங்காய் மூடிகள், பழங்கள், நிவேதனத்துக்கான பொங்கல் பிரசாதங்கள் - எல்லாம் வைத்திருப்பதைக் கண்டார். தேவிக்குப் பூஜை செய்வதற்காக வந்த பூசாரியும், பிரார்த்தனைக்காரர்களும் எல்லாவற்றையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு ஓடிப் போயிருக்கவேண்டும். ஏன் அவர்கள் அப்படி ஓடினார்கள்? புயலுக்கும் மழைக்கும் பயந்து ஓடினார்களா? அல்லது கொள்ளிடத்துக் கரையில் உடைப்பு ஏற்பட்டு விட்டதைப் பார்த்துவிட்டு ஓடினார்களா? எதுவாயிருந்தாலும் சரி, தாம் செய்த புண்ணியந்தான்! துர்க்கா பரமேசுவரி தம்மை உடைப்பு வெள்ளத்திலிருந்து காப்பாற்றியது மட்டுமல்ல. தம்முடைய பசி தீருவதற்குப் பிரசாதமும் வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள்.

இன்றிரவை இந்தக் கோயிலிலேயே கழிக்கவேண்டியது தான். இதைக் காட்டிலும் வேறு தக்க இடம் கிடைக்கப் போவதில்லை. உடைப்பு வெள்ளம் இந்தச் சிறிய கோவிலை ஒட்டித்தான் பாய்ந்து செல்ல வேண்டும். அதனால் கோவிலுக்கே ஆபத்து வரலாம். கோவிலைச் சுற்றிலும் வெள்ளம் குழி பறித்துக் கொண்டிருக்கும். அஸ்திவாரத்தையே தகர்த்தாலும் தகர்த்துவிடும். ஆயினும் இன்று இரவுக்குள்ளே அப்படி ஒன்றும் நேர்ந்துவிடாது. அவ்விதம் நேர்வதாயிருந்தாலும் சரிதான். இன்றிரவு இந்தக் கோவிலை விட்டுப் போவதற்கில்லை. உடம்பில் தெம்பு இல்லை; உள்ளத்திலும் சக்தி இல்லை...

பயபக்தியுடன் பழுவேட்டரையர் தேவியின் சந்நிதானத்தை நெருங்கினார். அங்கிருந்த பிரசாதங்களை எடுத்து வேண்டிய அளவு அருந்தினார். மிச்சத்தைப் பத்திரமாக வைத்து மூடினார். தேவியின் முன்னிலையில் நமஸ்காரம் செய்யும் பாவனையில் படுத்தார். கண்களைச் சுற்றிக்கொண்டு வந்தது. சிறிது நேரத்துக்குள் பழுவேட்டரையர் பெருந்துயிலில் ஆழ்ந்து விட்டார்.








Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 9. கரை உடைந்தது!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 16. அருள்மொழிவர்மர்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 32. பரிசோதனை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 39. "இதோ யுத்தம்!"

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: