BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  11. மண்டபம் விழுந்தது Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 11. மண்டபம் விழுந்தது

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  11. மண்டபம் விழுந்தது Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 11. மண்டபம் விழுந்தது   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  11. மண்டபம் விழுந்தது Icon_minitimeThu Jun 02, 2011 3:26 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

11. மண்டபம் விழுந்தது!



மின்னல் வெளிச்சத்தில், அங்கே நின்று பேசியவர்கள் இருவருடைய தோற்றங்களையும் பழுவேட்டரையர் ஒரு கணம் பார்த்துத் தெரிந்து கொண்டார். அவர்களில் ஒருவனாகிய ரவிதாஸனை இரண்டொரு தடவை அவர் தமது அரண்மனையிலேயே பார்த்ததுண்டு. அவன் மந்திர வித்தைகளில் தேர்ந்தவன் என்று நந்தினி கூறியதுண்டு. அவருடைய சகோதரன் காலாந்தக கண்டன் இந்த மந்திரவாதியைப் பற்றியே தான் சந்தேகப்பட்டு அவரை எச்சரித்திருக்கிறான். இன்னொருவன், கடம்பூர் அரண்மனையில் வேலனாட்டம் ஆடிய தேவராளன். அவனைத் தாம் பார்த்தது அதுதானா முதல் தடவை? அவனுடைய உண்மைப் பெயர் என்ன?... அப்படியும் ஒரு வேளை இருக்க முடியுமா? நெடுங்காலத்துக்கு முன்பு அவரால் அரசாங்க உத்தியோகத்திலிருந்து விலக்கப்பட்ட பரமேச்சுவரனா அவன்?... இருக்கட்டும்; இவர்கள் மேலும் என்ன பேசுகிறார்கள் கேட்கலாம்.

"ரவிதாஸா! நீ இப்படித்தான் வெகு காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாய். 'நாள் நெருங்கிவிட்டது' 'யமன் நெருங்கிவிட்டான்' என்றெல்லாம் பிதற்றுகிறாய்? யமன் வந்து யார் யாரையோ கொண்டு போகிறான்! ஆனால் மூன்று வருஷங்களாகப் படுத்த படுக்கையாய்க் கிடக்கும் சுந்தர சோழனைக் கொண்டு போவதாக இல்லை. அவனுடைய குமாரர்களையோ, யமன் நெருங்குவதற்கே அஞ்சுகிறான். ஈழநாட்டில் நாம் இரண்டு பேரும் எத்தனையோ முயன்று பார்த்தோமே?..."

"அதனால் குற்றமில்லை, அப்பனே! யமதர்மராஜன் உன்னையும் என்னையும் விடப் புத்திசாலி! மூன்று பேரையும் ஒரே தினத்தில் கொண்டு போவதற்காக இத்தனை காலமும் காத்துக் கொண்டிருந்தான். அந்தத் தினம் நாளைக்கு வரப் போகிறது. நல்ல வேளையாக, நீயும் இங்கே வந்து சேர்ந்தாய்! சரியான யம தூதன் நீ! ஏன் இப்படி நடுங்குகிறாய்! கொள்ளிட வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டாயா? படகு கொண்டு வந்து வைத்திருக்கிறாய் அல்லவா?"

"வைத்திருக்கிறேன், ஆனால் படகை வெள்ளமும் காற்றும் அடித்துக்கொண்டு போகாமல் காப்பாற்றுவது பெரும் பாடாய்ப் போய்விட்டது! உன்னை இத்தனை நேரம் எங்கெல்லாம் தேடுவது?... ரவிதாஸா! ஏன் என் உடம்பு நடுங்குகிறது என்று கேட்டாய் அல்லவா? சற்று முன்னால், யமதர்மராஜனை நான் நேருக்கு நேர் பார்த்தேன். இல்லை, இல்லை; யமனுக்கு அண்ணனைப் பார்த்தேன். அதனால் சற்று உண்மையிலேயே பயந்து போய் விட்டேன்..."

"பரமேச்சுவரா! என்ன உளறுகிறாய்? யமனாவது, அவன் அண்ணனாவது? அவர்களைக் கண்டு உனக்கு என்ன பயம்? அவர்கள் அல்லவோ உன்னைக் கண்டு அஞ்ச வேண்டும்?"

ரவிதாஸன் மற்றவனைப் 'பரமேச்சுவரன்' என்று அழைத்ததும் பழுவேட்டரையர் துணுக்குற்றார். தாம் சந்தேகப்பட்டது உண்மையாயிற்று! யமதர்மனுடைய அண்ணன் என்று அவன் குறிப்பிட்டது தம்மைத்தான் என்பதையும் அறிந்துகொண்டார். அவனை உடனே நெருங்கிச் சென்று கழுத்தைப் பிடித்து நெறித்துக் கொல்ல வேணுமென்று அவர் உள்ளமும் கைகளும் துடித்தன. மேலும் அவர்களுடைய பேச்சைக் கேட்கவேணும் என்ற ஆவலினால் பொறுமையாக இருந்தார். நந்தினியைப்பற்றி அவர்கள் இன்னும் பேச்சு எடுக்கவில்லை. சுந்தர சோழரின் குடும்பத்துக்கே நாளை யமன் வரப் போகிறான் என்று மந்திரவாதி கூறியதன் கருத்து என்ன? உண்மையிலேயே ஜோதிடம் பார்த்துச் சொல்கிறானா? இவனுடைய மந்திர சக்தியைப் பற்றி நந்தினி கூறியதெல்லாம் உண்மைதானோ? ஒரு வேளை இவன் கூறுகிறபடி தெய்வாதீனமாக நடந்துவிட்டால்?... தம்முடைய நோக்கம் நிறைவேறுவது எளிதாகப் போய் விடும்! சோழ சாம்ராஜ்யத்தைப் பங்கீடு செய்யவேண்டிய அவசியம் ஏற்படாது! ஆனால் இந்தப் பரமேச்சுவரன்?... இவனுக்கு என்ன இந்த விஷயத்தில் கவலை? ஆம்; ஆம்; இருபது வருஷங்களுக்கு முன்னால் 'சோழ குலத்தையே அழித்துவிடப் போகிறேன்' என்று சபதம் செய்துவிட்டுப் போனவன் அல்லவா இவன்?... ஆகா! தம்மைப் பற்றித்தான் அவன் ஏதோ பேசுகிறான்! என்ன சொல்லுகிறான் என்று கேட்கலாம்!

"நீ என்னிடம் சொல்லியிருந்தபடி இன்று காலையே இங்கு நான் வந்தேன். ஆனால் உன்னைக் காணவில்லை. காற்றிலும் மழையிலும் அடிபட்டு எங்கேயாவது சமீபத்தில் ஒதுங்கி இருக்கிறாயா என்று சுற்றுப்புறமெல்லாம் தேடி அலைந்தேன். கொள்ளிடத்து உடைப்புக்கு அருகில் ஒரு சிறிய கோவில் இருக்கிறது. அதில் யாரோ படுத்திருப்பதுபோலத் தோன்றியது. ஒரு வேளை நீதான் அசந்து தூங்குகிறாயோ என்று அருகில் போய்ப் பார்த்தேன்... யாரைப் பார்த்தேன் என்று நினைக்கிறாய்? சாக்ஷாத் பெரிய பழுவேட்டரையனைத் தான்!..."

மந்திரவாதி, 'ஹாஹாஹா' என்று உரத்துச் சிரித்தான். அதைக் கேட்ட வனத்தில் வாழும் பறவைகள் 'கீறீச்' 'கீறீச்' என்று சத்தமிட்டன; ஊமைக் கோட்டான்கள் உறுமின.

"பழுவேட்டரையனைப் பார்த்தாயா? அல்லது அவனுடைய பிசாசைப் பார்த்தாயா?" என்று ரவிதாஸன் கேட்டான்.

"இல்லை; பிசாசு இல்லை. குப்புறப்படுத்திருந்தவனைத் தொட்டுப் புரட்டிப் போட்டு முகத்தை நன்றாக உற்றுப் பார்த்தேன். ரவிதாஸா! யமனுக்கு அண்ணன்கள் இரண்டு பேர் இருக்கமுடியுமா? பழுவேட்டரையனைப் போலவே, அதே முகம், அதே மீசை, அதே காய வடுக்கள் - இவற்றுடன் மனிதன் இருக்க முடியுமா?"

"நீ பார்த்தவன் பழுவேட்டரையன்தான்! சந்தேகமில்லை. நேற்று மாலை பழுவேட்டரையன் படகில் ஏறிக் கொள்ளிடத்தைத் தாண்டிக் கொண்டிருந்தான். கரையருகில் வந்தபோது படகு காற்றினால் கவிழ்ந்துவிட்டது. அவனுடைய பரிவாரங்களில் தப்பிப் பிழைத்துக் கரையேறியவர்கள் இப்போதுகூடக் கொள்ளிடக் கரையோரமாகப் பழுவேட்டரையனைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவன் வெள்ளத்தில் மூழ்கிச் செத்துப் போயிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார்கள். உடைப்பு வரையில் போய்ப் பார்த்துவிட்டு அவர்கள் திரும்பி வரும்போது பேசியதை நான் கேட்டேன். ஆகையால், நீ பார்த்தவன் பழுவேட்டரையனாகவே இருக்கக்கூடும். ஒரு வேளை அவனுடைய பிரேதத்தைப் பார்த்தாயோ, என்னமோ!"

"இல்லை, இல்லை. செத்துப்போயிருந்தால் கண் விழிகள் தெரியுமா? நான் புரட்டிப் பார்த்தவனுடைய கண்கள் நன்றாக மூடியிருந்தன. களைத்துப்போய்த் தூங்கிக் கொண்டிருந்தான் போலிருக்கிறது?..."

"முட்டாளே! நீ என்ன செய்தாய்! அவனைச் சும்மா விட்டு விட்டு வந்தாயா? தலையிலே ஒரு கல்லைத் தூக்கிப் போட்டிருக்கக் கூடாதா?..."

"பழுவேட்டரையன் தலையைப் பற்றி உனக்குத் தெரியாது. அவன் தலையிலே கல்லைப் போட்டால், கல்தான் உடைந்து தூள்தூளாகும்!"

"அப்படியானால், கொள்ளிடத்து உடைப்பு வெள்ளத்திலாவது அவனை இழுத்துவிட்டிருக்கலாமே?"

"நான்தான் சொன்னேனே? அவனைக் கண்டதும் எனக்கு யமனுடைய அண்ணனைக் கண்டதுபோல் ஆகிவிட்டது. கடம்பூரில் அவன் முன்னால் வேலனாட்டம் ஆடியபோதுகூட என் நெஞ்சு 'திக், திக்' என்று அடித்துக் கொண்டுதானிருந்தது. என்னை அவன் அடையாளங் கண்டு கொண்டானானால்..."

"அதை நினைத்து, இப்போது எதற்கு நடுங்குகிறாய்?"

"அவன் உயிரோடிருக்கும் வரையில் எனக்குக் கொஞ்சம் திகிலாய்த்தானிருக்கும். நீ சொன்னபடி செய்யாமற் போனோமே, அவனை வெள்ளத்தில் புரட்டித் தள்ளாமல் வந்து விட்டோ மே என்று கவலையாயிருக்கிறது..."

"ஒரு கவலையும் வேண்டாம், ஒரு விதத்தில் பெரிய பழுவேட்டரையன் உயிரோடிருப்பதே நல்லது. அப்போதுதான், சுந்தரசோழனும், அவனுடைய பிள்ளைகளும் இறந்து ஒழிந்த பிறகு சோழ நாட்டுச் சிற்றரசர்கள் இரு பிரிவாய்ப் பிரிந்து நின்று சண்டையிடுவார்கள். பழுவேட்டரையர்களும் சம்புவரையர்களும் ஒரு பக்கத்திலும், கொடும்பாளூர் வேளானும் திருக்கோவலூர் மலையமானும் இன்னொரு பக்கத்திலும் இருந்து சண்டையிடுவார்கள். அது நம்முடைய நோக்கத்துக்கு மிக்க அநுகூலமாயிருக்கும். அவர்கள் தங்களுக்குள் சண்டையிடும்போது நாம் பாண்டிய நாட்டில் இரகசியமாகப் படை திரட்டிச் சேர்க்கலாம்..."

"ரவிதாஸா! 'அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா' என்ற கதையாகப் பேசுகிறாய்! சுந்தர சோழனுக்கும் அவனுடைய இரு புதல்வர்களுக்கும் நாளைக்கு இறுதி நேர்ந்தால் அல்லவா நீ சொன்னபடி சோழநாட்டுத் தலைவர்கள் சண்டை போட்டுக் கொள்வார்கள்? மூன்று பேருக்கும் நாளைக்கே முடிவு வரும் என்பது என்ன நிச்சயம்? உனக்கு ஒரு செய்தி தெரியுமா?..."

"எதைச் சொல்லுகிறாய்?"

"நாகைப்பட்டினத்தில் அருள்மொழிவர்மன் உயிரோடிருக்கிறானாம்! மக்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு அவனே சோழ நாட்டின் சக்கரவர்த்தி ஆக வேண்டும் என்று ஆர்ப்பரிக்கிறார்களாம்! நீ கேள்விப்பட்டாயா?"

ரவிதாஸன் மறுபடியும் சிரித்துவிட்டு, "நான் கேள்விப்படவில்லை; எனக்கே அது தெரியும். அருள்மொழிவர்மனைப் புத்த விஹாரத்திலிருந்து வெளிப்படுத்தியது யார் என்று நினைக்கிறாய்? நம் ரேவதாஸக் கிரமவித்தனுடைய மகள் ராக்கம்மாள்தான்! அவள்தான் படகோட்டி முருகய்யனுடைய மனைவி!" என்றான்.

"அதனால் என்ன? அருள்மொழிவர்மன் வெளிப்பட்டதனால் என்ன லாபம்? அவனை இனி எப்போதும் லட்சக்கணக்கான ஜனங்கள் அல்லவா சூழ்ந்து கொண்டிருப்பார்கள்? ஈழ நாட்டில் அவன் இரண்டு மூன்று பேருடன் இருந்தபோதே நம்முடைய முயற்சி பலிக்கவில்லையே" என்றான் தேவராளன்.

"அதுவும் நல்லதுதான் என்று சொன்னேனே? மூன்று பேருக்கும் ஒரே நாளில் யமன் வருவதற்கு இருக்கும்போது..."

"ரவிதாஸா! லட்சம் பேருக்கு மத்தியில் உள்ள இளவரசனிடம் யமன் எப்படி நெருங்குவான்? அதை நீ சொல்லவில்லையே?"

"நெருங்குவான், அப்பனே நெருங்குவான்! யானைப் பாகனுடைய அங்குசத்தின் நுனியில் யமன் உட்கார்ந்திருப்பான்! சரியான சமயத்தில் இளவரசனுடைய உயிரை வாங்குவான்! பரமேச்சுவரா! சோழ நாட்டு மக்கள் இளவரசனை யானை மீது ஏற்றிவைத்து ஊர்வலம் விட்டுக் கொண்டு தஞ்சையை நோக்கி வருவார்கள். அந்த யானையை ஓட்டும் பாகனுக்கு வழியில் ஏதாவது ஆபத்து வந்துவிடும். அவனுடைய இடத்தில் நம் ரேவதாஸக் கிரமவித்தன் யானைப் பாகனாக அமருவான்? அப்புறம் என்ன நடக்கும் என்பதை நீயே ஒருவாறு ஊகித்துக்கொள்!"

"ரவிதாஸா! உன் புத்திக் கூர்மைக்கு இணை இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். கிரமவித்தன் எடுத்த காரியத்தை முடிப்பான் என்று நாம் நம்பியிருக்கலாம். சுந்தரசோழன் விஷயம் என்ன? அவனுக்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய்?" என்றான் தேவராளன்.

"பழுவேட்டரையனுடைய கருவூல நிலவரையில் சோமன் சாம்பவனை விட்டுவிட்டு வந்திருக்கிறேன். கையில் வேலாயுதத்துடன் விட்டு வந்திருக்கிறேன். அங்கேயிருந்து சுந்தர சோழன் அரண்மனைக்குச் சுரங்கப் பாதை போகிறது. சுந்தர சோழன் படுத்திருக்கும் இடத்தையே சோமன் சாம்பவனுக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். இரண்டு கண்ணும் தெரியாத குருடன் கூட நான் குறிப்பிட்ட இடத்தில் நின்று வேலை எறிந்து சுந்தர சோழனைக் கொன்று விடலாம். சோமன் சாம்பவனை 'அவசரப்படாதே; நாளை வரையில் பொறுத்துக் கொண்டிரு!' என்று எச்சரித்து விட்டு வந்திருக்கிறேன்..."

"அது எதற்காக? சமயம் நேரும்போது காரியத்தை முடிப்பதல்லவா நல்லது?"

"முட்டாள்! சுந்தரசோழன் முன்னதாகக் கொலையுண்டால், அந்தச் செய்தி கேட்டதும் அவன் குமாரர்கள் ஜாக்கிரதையாகி விடமாட்டார்களா? அந்த நோயாளிக் கிழவன் இறந்துதான் என்ன உபயோகம்? அது இருக்கட்டும்; நீ என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய்? கடம்பூர் மாளிகையில் எல்லோரும் எப்படியிருக்கிறார்கள்? அங்கே நாளை இரவு நடக்கப் போகிற காரியம் அல்லவா எல்லாவற்றையும் விட முக்கியமானது?"

"கடம்பூரில் எல்லாம் கோலாகலமாகத்தான் இருந்து வருகிறது. கலியாணப் பேச்சும், காதல் நாடகங்களுமாயிருக்கின்றன. நீ என்னமோ அந்தப் பழுவூர் ராணியை நம்பியிருப்பது எனக்குப் பிடிக்கவே இல்லை..."

"பழுவூர் ராணியா அவள்? பாண்டிமாதேவி என்று சொல்! வீர பாண்டியர் இறப்பதற்கு இரண்டு நாளைக்கு முன்னால் அவளைத் தம் பட்ட மகிஷியாக்கிக் கொண்டதை மறந்து விட்டாயா? வீர பாண்டியர் மரணத்துக்குப் பழிக்குப்பழி வாங்க அவள் சபதம் செய்திருப்பதை மறந்துவிட்டாயா? ஒரு வாரத்துக்கு முன்னால் இதே இடத்தில் அவள் பாண்டிய குமாரன் கையிலிருந்து பாண்டிய குலத்து வீரவாளைப் பெற்றுக் கொள்ளவில்லையா...?"

"ஆமாம், ஆமாம்! ஆனால் நேற்று மாலை உன் பாண்டிமாதேவி வீர நாராயண ஏரியில் உல்லாசப் படகு யாத்திரை செய்து விட்டுத் திரும்பி வந்ததை நீ பார்த்திருக்க வேண்டும்..."

"உல்லாசமாயிராமல் பின் எப்படியிருக்க வேண்டும் என்கிறாய்? மனத்தில் உள்ளதை மறைத்து வைக்கும் வித்தையை நந்தினியைப் போல் கற்றிருப்பவர் யாரும் கிடையாது. இல்லாவிட்டால், பழுவேட்டரையரின் அரண்மனையில் மூன்று வருஷம் காலந் தள்ள முடியுமா? அங்கே இருந்தபடி நம்முடைய காரியங்களுக்கு இவ்வளவு உதவிதான் செய்திருக்க முடியுமா? ஆமாம், பழுவேட்டரையனை நீ சற்று முன் கொள்ளிடக்கரைத் துர்க்கையம்மன் கோவிலில் பார்த்ததாகக் கூறினாயே? அவனை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததைப் பற்றி நானும் கேள்விப்பட்டேன். பழுவேட்டரையன் எப்போது கடம்பூரிலிருந்து புறப்பட்டான்? ஏன்?..."

"ஏன் என்று எனக்கு உறுதியாகத் தெரியாது. மதுராந்தகத் தேவனைக் கடம்பூருக்கு அழைத்து வரப் புறப்பட்டதாகச் சொன்னார்கள். நேற்றுக் காலை பழுவேட்டரையன் கிளம்பிச் சென்றான். அவன் சென்ற பிறகு இளவரசர்கள் வேட்டையாடச் சென்றார்கள். இளவரசிமார்கள் வீர நாராயண ஏரிக்கு ஜலக்கிரீடை செய்யச் சென்றார்கள். இளவரசர்களும் இளவரசிகளும் திரும்பி வந்த குதூகலமான காட்சியை நீ பார்த்திருந்தாயானால் இவ்வளவு நம்பிக்கையோடு பேசமாட்டாய்!..."

"அதைப் பற்றி நீ கொஞ்சமும் கவலைப்படவேண்டாம். பழுவேட்டரையனைத் தஞ்சைக்கு அனுப்பி வைத்ததிலிருந்தே பாண்டிமாதேவியின் மனதை அறிந்து கொள்ளலாமே?"

"பெண்களின் மனதை யாரால் அறிய முடியும்? அந்தக் கிழவனை ஊருக்கு அனுப்பியது பழிவாங்கும் நோக்கத்துக்காகவும் இருக்கலாம், காதல் நாடகம் நடத்துவதற்காகவும் இருக்கலாம்..."

"என்ன உளறுகிறாய், பரமேச்சுவரா! நந்தினி அந்தப் பழைய கதையை அடியோடு மறந்துவிட்டாள். கரிகாலனை அவள் இப்போது விஷம் போலத் துவேஷிக்கிறாள்!"

"கரிகாலனைப்பற்றி நான் சொல்லவில்லை. அவனுடைய தூதன் வந்தியத்தேவனைப் பற்றிச் சொல்லுகிறேன். இரண்டு மூன்று தடவை நந்தினி அவனைத் தப்பிச் செல்லும்படி விட்டதை நீ மறந்துவிட்டாயா?"

மந்திரவாதி கலகலவென்று சிரித்துவிட்டு, "ஆமாம்; வந்தியத்தேவன் எதற்காகப் பிழைத்திருக்கிறான் என்பது சீக்கிரத்திலேயே தெரியும். அது தெரியும்போது நீ மட்டுந்தான் ஆச்சரியப்படுவாய் என்று எண்ணாதே! இன்னும் ரொம்பப் பேர் ஆச்சரியப்படுவார்கள்! முக்கியமாக, சுந்தர சோழரின் செல்வக்குமாரி குந்தவை ஆச்சரியப்படுவாள். அவள் எந்தச் சுகுமார வாலிபனுக்குத் தன் உள்ளத்தைப் பறிகொடுத்திருக்கிறாளோ, அவனே அவளுடைய தமையன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவன் என்று அறிந்தால் ஆச்சரியப்படமாட்டாளா!" என்றான்.

"என்ன சொல்கிறாய், ரவிதாஸா! உண்மையாகவே வந்தியத்தேவனா கரிகாலனைக் கொல்லப் போகிறான்? அவன் நம்மோடும் சேர்ந்துவிட்டானா, என்ன?"

"அதெல்லாம் இப்போது கேட்காதே! கரிகாலனைக் கொல்லும் கை யாருடைய கையாக இருந்தால் என்ன? பாண்டிய குலத்து மீன் சின்னம் பொறித்த வீரவாள் அவனைக் கொல்லப் போகிறது. அவனைக் கொன்ற பழி வந்தியத்தேவன் தலைமீது விழப்போகிறது! நம்முடைய ராணியின் சாமர்த்தியத்தைப் பற்றி இப்போது என்ன சொல்லுகிறாய்?"

"நீ சொன்னபடி எல்லாம் நடக்கட்டும்; பிற்பாடு கேள், சொல்லுகிறேன்".

"வேறு எது நடந்தாலும் நடக்காவிட்டாலும், கரிகாலனுடைய ஆவி நாளை இரவுக்குள் பிரிவது நிச்சயம். நந்தினி ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்றியே தீருவாள். நம்முடைய பொறுப்பையும் நாம் நிறைவேற்ற வேண்டும்..."

"நம்முடைய பொறுப்பு என்ன?"

"நாளை இரவு கடம்பூர் மாளிகையிலிருந்து வெளியேறும் சுரங்கப் பாதையில் ஆயத்தமாக காத்திருக்க வேண்டும். காரியம் முடிந்ததும் நந்தினி அதன் வழியாக வருவாள். அவளை அழைத்துக் கொண்டு இரவுக்கிரவே கொல்லி மலையை அடைந்து விட வேண்டும். அங்கே இருந்து கொண்டு, சோழ நாட்டில் நடைபெறும் அல்லோலகல்லோலத்தைப் பார்த்துக் கொண்டிருப்போம். ஒருவேளை சௌகரியப்பட்டால்..."

"சௌகரியப்பட்டால், என்ன?"

"பழுவேட்டரையனின் கருவூல நிலவறையில் சேர்த்து வைத்திருக்கும் பொருள்களையெல்லாம் சுரங்கப் பாதை வழியாகக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். சோழ நாட்டுப் பொக்கிஷத்திலிருந்து கொண்டுபோன பொருள்களைக் கொண்டே சோழ நாட்டின்மீது போர் தொடுக்கப் படை திரட்டுவது எவ்வளவு பொருத்தமாயிருக்கும்?"

இவ்விதம் கூறிவிட்டு மறுபடியும் ரவிதாஸன் சிரித்தான்.

தேவராளனாக நடித்த பரமேச்சுவரன், "சரி, சரி! ஆகாசக் கோட்டையை ரொம்பப் பெரிதாகக் கட்டிவிடாதே! முதலில் கொள்ளிடத்தைத் தாண்டி அக்கரையை அடைந்து, கடம்பூர் போய்ச் சேரலாம். கடம்பூரில் நீ சொன்னபடி எல்லாம் நடக்கட்டும்! பிறகு, பழுவேட்டரையனுடைய பொக்கிஷத்தைக் கொள்ளையடிப்பது பற்றி யோசிக்கலாம். என்ன சொல்லுகிறாய்? இப்போதே கிளம்பலாமா? இரவே கொள்ளிடத்தைத் தாண்டி விடுவோமா?" என்றான்.

"வேண்டாம், வேண்டாம்! பொழுது விடிந்ததும் படகில் ஏறினால் போதும். அதற்குள் காற்றும் நன்றாக அடங்கிவிடும். ஆற்று வெள்ளமும் கொஞ்சம் குறைந்துவிடும்."

"அப்படியானால், இன்றிரவு இந்தப் பள்ளிப்படை மண்டபத்திலேயே படுத்திருக்கலாமா?"

ரவிதாஸன் சற்று யோசித்தான். அப்போது சற்று தூரத்தில் நரிகள் ஊளையிடும் சத்தம் கேட்டது. ரவிதாஸனுடைய உடல் நடுங்கிற்று.

"ரவிதாஸா! கேவலம் நரிகளின் குரலைக் கேட்டு ஏன் இப்படி நடுங்குகிறாய்?" என்றான் தேவராளன்.

"அப்பனே! கோடிக்கரைப் புதை சேற்றில் கழுத்து வரையில் நீ புதைபட்டிருந்து, சுற்றிலும் நூறு நரிகள் நின்று உன்னைத் தின்பதற்காகக் காத்திருக்கும் பயங்கரத்தை நீ அனுபவித்திருந்தால் இப்படி சொல்லமாட்டாய்! சிங்கத்தின் கர்ஜனையையும், மத யானையின் ஓலத்தையும் கேட்டு, எனக்குப் பயம் உண்டாவதில்லை. நரியின் ஊளையைக் கேட்டால் குலை நடுங்குகிறது. வா! வா! இந்தச் சுடுகாட்டில் இராத் தங்கவேண்டாம். வேறு எங்கேயாவது கிராமத்துக்குப் பக்கமாயுள்ள கோவில் அல்லது சத்திரத்தில் தங்குவோம். இல்லாவிட்டால், கொள்ளிடக் கரையிலுள்ள துர்க்கைக் கோவிலைப் பற்றிச் சொன்னாயே? அங்கே போவோம். இன்னமும் அந்தக் கிழவன் அங்கே படுத்திருந்தால், வெள்ளத்தில் அவனை இழுத்து விட்டு விடலாம். அதுவே அவனுக்கு நாம் செய்யும் பேருதவியாயிருக்கும். நாளைக்கு மறுநாள் வரையில் அவன் உயிரோடிருந்தால், ரொம்பவும் மனத்துயரத்துக்கு ஆளாக நேரிடும்!"

மேற்கூறிய சம்பாக்ஷணையை ஏறக்குறைய ஒன்றும் விடாமல் பெரிய பழுவேட்டரையர் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவருடைய செவிகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போலிருந்தது. அவருடை நெஞ்சு ஒரு பெரிய எரிமலையின் கர்ப்பத்தைப் போல் தீக்குழம்பாகிக் கொதித்தது. தாம் காதலித்துக் கலியாணம் செய்து கொண்ட பெண், வீரபாண்டியன் மரணத்துக்காகச் சோழ குலத்தின்மீது பழி வாங்க வந்தவள் என்பதும், மூன்று வருஷங்களாக அவள் தம்மை ஏமாற்றி வருகிறாள் என்பதும் சொல்ல முடியாத வேதனையும் அவமானத்தையும் அவருக்கு உண்டாக்கின.

ஆறு தலைமுறையாகச் சோழர் குலத்துக்கும், பழுவூர் வம்சத்துக்கும் நிலைபெற்று வளர்ந்து வரும் உறவுகளை அச்சமயம் பழுவேட்டரையர் நினைத்துக் கொண்டார். பார்க்கப் போனால், சுந்தர சோழனும் அவனுடைய மக்களும் யார்? சுந்தர சோழனுடைய பாட்டி பழுவூர் வம்சத்தைச் சேர்ந்தவள் அல்லவா? சுந்தர சோழனுடைய மக்கள் மீது தமக்கு ஏற்பட்ட கோபமெல்லாம் சமீப காலத்தது அல்லவா? ஆதித்த கரிகாலன் ஏதோ சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டான் என்பதற்காகவும், மலையமானை நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவும், எவ்வளவு பயங்கரமான சதிச் செயல்களுக்கு இடங் கொடுத்துவிட்டோ ம்? சோழர் குலத்தின் தீராப் பகைவர்களான பாண்டிய நாட்டுச் சதிகாரர்கள் நம்முடைய அரண்மனையிலிருந்துகொண்டு, நம்முடைய நிலைவறைப் பொக்கிஷத்திலிருந்து திருடிப்போன பொருளைக் கொண்டு சோழ குலத்துக்கு விரோதமாகச் சதிகாரச் செயல்களைச் செய்ய அல்லவா இடம் கொடுத்துவிட்டோ ம்! ஆகா! இந்தச் சண்டாளர்கள் சொன்னபடி நாளை இரவுக்குள் மூன்று இடங்களில் மூன்று பயங்கரமான கொலைகள் நடக்கப் போகின்றனவா? நம்முடைய உடலில் மூச்சு இருக்கும் வரையில் முயன்று அவற்றைத் தடுத்தேயாகவேண்டும். இன்னும் அறுபது நாழிகை நேரம் இருக்கிறது. அதற்குள் எவ்வளவோ காரியங்கள் செய்து விடலாம். இரவுக்கிரவே குடந்தை சென்று தஞ்சைக்கும், நாகைப்பட்டினத்துக்கும் செய்தி அனுப்பிவிட்டுக் கடம்பூருக்குக் கிளம்ப வேண்டும். இந்தப் பாதகர்கள் அங்கே போய்ச் சேர்வதற்குள் நாம் போய்விடவேண்டும்!"...

இவர்களைக் கடம்பூருக்கு வரும்படி விடுவதா? இந்த இடத்திலேயே இவர்களைக் கொன்று போட்டு விட்டுப் போய்விடுவது நல்லதல்லவா? நம்மிடம் ஆயுதம் ஒன்றுமில்லை, இல்லாவிட்டால் என்ன? வஜ்ராயுதத்தை நிகர்த்த நம் கைகள் இருக்கும்போது வேறு ஆயுதம் எதற்கு. ஆனால் இவர்கள் ஒரு வேளை சிறிய கத்திகள் இடையில் சொருகி வைத்திருக்கக்கூடும். அவற்றை எடுப்பதற்கே இடங்கொடுக்காமல் இரண்டு பேருடைய கழுத்தையும் இறுக்கிப் பிடித்து நெறித்துக் கொன்றுவிட வேண்டும்...

ஆனால் அவ்வாறு இவர்களுடன் இந்த இடத்தில் சண்டை பிடிப்பது உசிதமா? 'இவர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைத் தெரிந்து கொண்டாகி விட்டது. நாம் வழிபடும் குலதெய்வமாகிய துர்க்கா பரமேசுவரியே படகு கவிழச் செய்து, இந்தப் பயங்கர இரகசியங்களைத் தெரிந்து கொள்ளும்படியாயும் செய்திருக்கிறாள். சக்கரவர்த்திக்கும், அவருடைய குமாரர்களுக்கும் விபத்து நேரிடாமல் பாதுகாப்பதல்லவா நம்முடைய முக்கியமான கடமை? அதிலும்; கடம்பூரில் கரிகாலனுக்கு எதுவும் நேராமல் தடுப்பது மிக மிக முக்கியமானது. அப்படி எதாவது நேர்ந்து விட்டால் நமக்கும் நமது குலத்துக்கும் அழியாத பழிச் சொல் ஏற்பட்டு விடும். ஆறு தலைமுறையாகச் சோழ குலத்துக்குப் பழுவூர் வம்சத்தினர் செய்திருக்கும் உதவிகள் எல்லாம் மறைந்து மண்ணாகிவிடும். பெண் என்று எண்ணி, நமது அரண்மனையில் கொண்டு வந்து வைத்திருந்த அரக்கியினால் கரிகாலன் கொல்லப்பட்டால், அதைக் காட்டிலும் நமக்கு நேரக்கூடிய அவக்கேடு வேறு ஒன்றுமில்லை.'

'ஆகா! அத்தகைய அழகிய வடிவத்துக்குள்ளே அவ்வளவு பயங்கரமான ஆலகால விஷம் நிறைந்திருக்க முடியுமா? மூன்று உலகத்தையும் மயக்கக் கூடிய மோகனப் புன்னகைக்குப் பின்னால் இவ்வளவு வஞ்சகம் மறைந்திருக்க முடியுமா? இந்தச் சண்டாளர்கள் சற்று முன்னால் சொன்னதெல்லாம் உண்மையாக இருக்க முடியுமா?...'

பழுவேட்டரையருடைய உள்ளத்தில் கோபத் தீ கொழுந்து விட்டு எரியும்படி செய்த அந்தச் சதிகாரர்களின் வார்த்தைகள் ஒருவிதத்தில் அவருக்கு சிறிது திருப்தியையும் அளித்திருந்தன. நந்தினி சதிகாரியாக இருக்கலாம். தம்மிடம் அன்பு கொண்டதாக நடித்து வஞ்சித்து ஏமாற்றி வந்திருக்கலாம். ஆனால் அவள் கரிகாலன் மீதோ கந்தமாறன் அல்லது வந்தியத்தேவன் மீதோ மோகம் கொண்ட காரணத்தினால் தம்மை வஞ்சிக்கவில்லை! அந்த மௌடீகச் சிறுவர்களை அவள் பொருட்படுத்தவில்லை. அவளுடைய அந்தரங்க நோக்கத்துக்கு அவர்களையும் உபயோகப்படுத்துவதற்காகவே அவர்களிடம் சுமுகமாகப் பேசிப் பழகி வருகிறாள்!

இந்தச் செய்தி பழுவேட்டரையரின் அந்தரங்கத்தின் அந்தரங்கத்துக்குள்ளே அவரையும் அறியாமல் சிறிது திருப்தியை அளித்தது. கரிகாலன் கொல்லப்படாமல் தடுக்க வேண்டியது, தம் குல கௌரவத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், தமக்கு என்றென்றைக்கும் அழியாத அபகீர்த்தி நேராமல் தடுத்துக் கொள்ளவும் மட்டும் அல்ல; நந்தினியை அத்தகைய கோரமான பாவகாரியத்திலிருந்து தப்புவிப்பதற்காகவுந்தான். ஒருவேளை அவளுடைய மனத்தையே மாற்றி விடுதல்கூடச் சாத்தியமாகலாம். இந்தச் சண்டாளச் சதிகாரர்களிடம் அகப்பட்டுக் கொண்டிருப்பதால் அவள் வேறு வழியின்றி இவர்களுக்கு உடந்தையாயிருக்கலாம் அல்லவா? இவர்களை இங்கேயே கொன்று ஒழித்துவிட்டால் நந்தினிக்கு விடுதலை கிடைக்கலாம் அல்லவா?...

இவ்வாறு எண்ணி அந்த வீரக் கிழவர் தம்மையறியாமல் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். சிம்ம கர்ஜனை போன்ற அந்தச் சத்தம் சதிக்காரர்கள் இருவரையும் திடுக்கிடச் செய்தது.

"யார் அங்கே?" என்றான் தேவராளனாகிய பரமேச்சுவரன்.

அதற்குமேல் தாம் மறைந்திருப்பது சாத்தியம் இல்லை, உசிதமும் ஆகாது என்று கருதிப் பெரிய பழுவேட்டரையர் வெளிப்பட்டு வந்தார்.

மழைக்கால இருட்டில் திடீரென்று தோன்றிய அந்த நெடிய பெரிய உருவத்தைக் கண்டு சதிகாரர்கள் இருவரும் திகைத்து நின்றபோது, "நான் தான் யமனுக்கு அண்ணன்!" என்று கூறிவிட்டுப் பழுவேட்டரையர் சிரித்தார்.

அந்தக் கம்பீரமான சிரிப்பின் ஒலி அவ்வனப் பிரதேசம் முழுவதையும் நடுநடுங்கச் செய்தது.

வந்தவர் பழுவேட்டரையர் என்று அறிந்ததும் ரவிதாஸன், தேவராளன் இருவரும் தப்பி ஓடப் பார்த்தார்கள்! ஆனால் பழுவேட்டரையர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. தம் நீண்ட கரங்கள் இரண்டையும் நீட்டி இருவரையும் பிடித்து நிறுத்தினார். அவருடைய வலது கை ரவிதாஸனுடைய ஒரு புஜத்தைப் பற்றியது. வஜ்ராயுதத்தைக் காட்டிலும் வலிமை பொருந்திய அந்தக் கரங்களின் பிடிகள் அவ்விருவரையும் திக்கு முக்காடச் செய்தன.

எவ்வளவுதான் கையில் வலி இருந்தாலும் இருவரையும் ஏக காலத்தில் சமாளிக்க முடியாது என்று எண்ணிப் பழுவேட்டரையர் தேவராளனைத் தலைக்குப்புற விழும்படி கீழே தள்ளினார். கீழே விழுந்தவன் முதுகில் ஒரு காலை ஊன்றி வைத்துக்கொண்டு ரவிதாஸனுடைய கழுத்தை இரண்டு கைகளாலும் நெறிக்கத் தொடங்கினார். ஆனால் தேவராளன் சும்மா இருக்கவில்லை. அவனுடைய இடுப்பில் செருகியிருந்த கத்தியைச் சிரமப்பட்டு எடுத்துத் தன்னை மிதித்துக் கொண்டிருந்த காலில் குத்தப் பார்த்தான். பழுவேட்டரையர் அதை அறிந்து கொண்டார். இன்னொரு காலினால் அவனுடைய கை மணிக்கட்டை நோக்கி ஒரு பலமான உதை கொடுத்தார். கத்தி வெகு தூரத்தில் போய் விழுந்தது. தேவராளனுடைய ஒரு கையும் அற்று விழுந்து விட்டதுபோல் ஜீவனற்றதாயிற்று. ஆனால் அதே சமயத்தில் அவனை மிதித்திருந்த கால் சிறிது நழுவியது. தேவராளன் சட்டென்று நெளிந்து கொடுத்து வெளியே வந்து குதித்து எழுந்தான். உதைபடாத கையில் முஷ்டியினால் பழுவேட்டரையரை நோக்கிக் குத்தத் தொடங்கினான். அந்தக் குத்துக்கள் கருங்கல் பாறைச் சுவர்மீது விழுவன போலாயின. குத்திய தேவராளனுடைய கைதான் வலித்தது. அதுவும் இன்னொரு கையைப்போல் ஆகிவிடுமோ என்று தோன்றியது.

இதற்கிடையில் ரவிதாஸன் தன் கழுத்திலிருந்து பழுவேட்டரையருடைய கரங்களை விலக்கப் பெருமுயற்சி செய்தான்; ஒன்றும் பலிக்கவில்லை. கிழவருடைய இரும்புப்பிடி சிறிதும் தளரவில்லை. ரவிதாஸனுடைய விழிகள் பிதுங்கத் தொடங்கின. உளறிக் குளறிக் கொண்டே "தேவராளா! சீக்கிரம்! சீக்கிரம்! கோயில் மேலே ஏறு! மண்டபத்தைக் கீழே தள்ளு!" என்றான்.

தேவராளன் உடனே பாய்ந்து சென்று பள்ளிப்படைக் கோயிலின் மேல்மண்டபத்தின் மீது ஏறினான். அங்கே மண்டபத்தின் ஒரு பகுதியில் பிளவு ஏற்பட்டு இனிச் சிறிது நகர்ந்தாலும் கீழே விழக்கூடிய நிலையில் இருந்தது. அதை முன்னமே அவர்கள் கவனித்திருந்தார்கள். ரவிதாஸன் அதைத்தான் குறிப்பிடுகிறான் என்று தேவராளன் தெரிந்து கொண்டான். மண்டபத்தின் இடிந்த பகுதியைத் தன் மிச்சமிருந்த வலிவையெல்லாம் பிரயோகித்து நகர்த்தித் தள்ளினான். அது விழும்போது அதனுடனிருந்த மரம் ஒன்றையும் சேர்த்துத் தள்ளிக் கொண்டு விழுந்தது.

பழுவேட்டரையர், மேலேயிருந்த மண்டபம் நகர்ந்து விழப்போவதைத் தெரிந்துகொண்டார். ஒரு கையை ரவிதாஸனுடைய கழுத்திலிருந்து எடுத்து மேலேயிருந்து விழும் மண்டபத்தைத் தாங்கிக் கொள்ள முயன்றார். ரவிதாஸன் அப்போது பெருமுயற்சி செய்து அவருடைய பிடியிலிருந்து தப்பி அப்பால் நகர்ந்தான். மரமும், மண்டபமும் பழுவேட்டரையர் பேரில் விழுந்தன. பழுவேட்டரையர் தலையில் விழுந்து நினைவு இழந்தார்.











Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 11. மண்டபம் விழுந்தது
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 34. லதா மண்டபம்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 43. நந்தி மண்டபம்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 30. சித்திர மண்டபம்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 6. மறைந்த மண்டபம்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 59. சகுனத் தடை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: