BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  13. குந்தவை கேட்ட வரம் Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. குந்தவை கேட்ட வரம்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  13. குந்தவை கேட்ட வரம் Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. குந்தவை கேட்ட வரம்   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  13. குந்தவை கேட்ட வரம் Icon_minitimeThu Jun 02, 2011 3:33 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

13. குந்தவை கேட்ட வரம்


ஜோதிடரின் வீட்டுக்குள் பழுவேட்டரையர் பிரவேசித்த போது அங்கு உண்மையாகவே குந்தவைப் பிராட்டியும், வானதியும் இருந்தார்கள். ஈழத்து ராணியைப் பொழுது விடிந்ததும் காணாததிலிருந்து குந்தவையின் மனம் அமைதியை இழந்துவிட்டது. அதே சமயத்தில் பூங்குழலியும் காணாமற் போனது அவளுடைய கலக்கத்தை அதிகமாக்கிற்று. முதன் மந்திரி அநிருத்தரைப் பார்க்கச் சென்றாள். அச்சமயத்தில் அங்கே அருள்மொழிச் சோழனைப் பற்றிச் செய்தி வந்திருந்தது. நாகைப்பட்டினத்தில் அடித்த புயலின் காரணமாக அவன் வெளிப்பட நேர்ந்ததென்றும் திரளான மக்கள் கூடி அவனை வெற்றி முழக்கத்துடன் தஞ்சைக்கு அழைத்து வருகிறார்கள் என்றும் அறிந்தாள். குந்தவையின் பரபரப்பு எல்லையைக் கடந்துவிட்டது. இதனால் ஏதோ விபரீதம் வரப்போகிறது என்று கருதினாள். பொன்னியின் செல்வனை வழியில் சந்தித்துப் பேசித் தஞ்சையில் நடந்ததையெல்லாம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினாள். அவன் பெரும் ஜனக் கூட்டம் புடை சூழத் தஞ்சைக் கோட்டையில் பிரவேசிக்க விரும்பினால், பழுவேட்டரையரின் படைவீரர்கள் அவனைத் தடுத்து நிறுத்த முயலுவார்கள். இதற்கிடையில் பூதி விக்கிரம கேசரி தென் பிரதேசத்துப் படைகளுடனே கொடும்பாளூர் வரைக்கும் வந்துவிட்டார் என்று தெரிய வந்திருந்தது. இரண்டு படைகளும் தஞ்சைக்கருகில் மோதிக் கொள்ளும்படி நேரிடலாம். அதனால் தந்தையின் உள்ளம் புண்படும் என்பது நிச்சயம். அதனால் அவருடைய உயிருக்கே அபாயம் நேர்ந்து விடலாம். மேலும் என்னென்ன விளையுமோ, யாருக்குத் தெரியும்? புயற்காற்றின் காரணமாகக் குடிமக்களின் உள்ளங்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. ஏதாவது ஒரு வியாஜம் ஏற்பட வேண்டியதுதான்; சோழ நாடே அழியும்படியான பெரும் உள் நாட்டுக் கலகம் மூண்டு விடக் கூடும். பிறகு அதை நிறுத்துவது எப்படி? வந்த பின்னர் நிறுத்த முயலுவதைக் காட்டிலும், முன்னாலேயே தடுக்கப் பார்ப்பது அவசியம் அல்லவா? இல்லாவிடில் இத்தனை காலமும் செய்த முயற்சியெல்லாம் வீணாகிவிடுமே? ஆதலின் அருள்மொழிச் சோழனை வழியிலேயே சந்தித்துப் பழையாறையில் சிறிது காலத்துக்கு நிறுத்திக் கொள்ள வேண்டும். கடம்பூரிலிருந்து பெரிய பழுவேட்டரையரையும் தருவிக்க வேண்டும். அருள்மொழிக்கு இராஜ்யம் ஆளும் ஆசை இல்லை என்பதை அவருக்குத் தெரிவித்து, அவருடைய சம்மதம் பெற்ற பிறகுதான், தஞ்சைக்கு அவனை அழைத்துப் போக வேண்டும்...

இவ்விதம் தனக்குள் சிந்தித்து முடிவு செய்துகொண்டு, தந்தையிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல், அன்னையிடமும் அநிருத்தரிடமும் மட்டும் சொல்லிவிட்டு, இணை பிரியாத வானதியையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டாள். பழையாறைக்குப் போகுமுன்பு குடந்தை ஜோதிடரை இன்னொரு தடவை பார்த்து விட விரும்பினாள். கவலை அதிகம் ஏற்படும்போது வருங்காலத்தைப் பற்றி ஜோதிடம் பார்த்து அறிய விரும்புவது மனித இயல்பு அல்லவா?

வழக்கம் போல் அம்மன் கோவிலுக்கு அருகில் ரதத்தை விட்டு விட்டு, ஜோதிடர் வீட்டுக்குள் புகுந்தாள். ஜோதிடரிடம் அவளுடைய கவலையைத் தெரிவிக்கத் தொடங்கிச் சிறிது நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் வீட்டு வாசலில் ஏதோ தடபுடல் நடைபெறும் சத்தம் கேட்டது. முக்கியமாக, பழுவேட்டரையரின் ஹுங்காரம் அவளுக்கு ரோமாஞ்சனம் உண்டு பண்ணியது. அந்த மாதிரி கம்பீரமாக ஹுங்காரம் செய்யக் கூடியவர் பெரிய பழுவேட்டரையர் ஒருவர்தான். தடுக்க முயன்ற ஜோதிடரின் சீடனைத் தள்ளிவிட்டுப் பழுவேட்டரையர் உள்ளே வருவதாகக் காணப்பட்டது. அவர் எப்படி இங்கே வந்தார்? எதற்காக வருகிறார்? அதுவும் இந்த வேளையில்?

ஆகா! ஒருவேளை ஜோதிடம் கேட்கத்தான் வருகிறார் போலும்! அவர் ஜோதிடருடன் பேசுவதைக் கேட்டால் ஒரு வேளை அவருடைய மனத்தில் உள்ள எண்ணங்கள் தெரியக் கூடும். இராஜ்யத்துக்கும், இராஜ குலத்துக்கும் பெரிய நெருக்கடி நேர்ந்திருக்கும் இச்சமயத்தில், பெரிய பழுவேட்டரையரின் மனப்போக்குத் தெரிந்தால் எவ்வளவோ சௌகரியமாயிருக்கும். அதைத் தெரிந்து கொள்ள இப்போது ஒரு சந்தர்ப்பம் நேர்ந்திருக்கிறது. மேலும், தானும், வானதியும் அங்கு இருப்பதைப் பார்த்தால், அவர் என்ன எண்ணிக் கொள்வாரோ என்னமோ ஏன்? தவறாகத்தான் எண்ணிக் கொள்வார்! சந்தேகமில்லை. ஆகையால் அவர் கண்ணில் படாமல் மறைந்திருப்பது தான் நல்லது...

குந்தவை, ஜோதிடரிடம் ஜாடையினால் தனது நோக்கத்தைத் தெரிவித்துவிட்டு வானதியையும் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அவசரமாக அடுத்த அறைக்குள்ளே சென்றாள். அவர்கள் புகுந்த அறையின் கதவு சாத்தப்பட தட்சணமே பழுவேட்டரையர் உள்ளே பிரவேசித்தார். பரபரப்புடன் எழுந்து நின்று கும்பிட்ட ஜோதிடரை உற்றுப் பார்த்துவிட்டுச் சுற்று முற்றும் நோக்கினார். அவர் முகத்தில் வியப்புக்கும், ஏமாற்றத்துக்கும் அறிகுறி தென்பட்டது. இது ஒரு கண நேரந்தான். உடனே சமாளித்துக்கொண்டு, "ஜோதிடரே! நான் யார் தெரிகிறதா? தனாதிகாரி பெரிய பழுவேட்டரையனே தான்! ஏன் இவ்வாறு பேந்த விழிக்கிறீர்? அவ்வளவு உருமாறிப் போயிருக்கிறேனா? உம்மால் எனக்கு ஒரு முக்கியமான காரியம் ஆக வேண்டியிருக்கிறது! ஒரு பெரிய உதவி நீ எனக்குச் செய்ய வேண்டும். முதலில் சாப்பிடுவதற்கு ஏதேனும் இருந்தால் கொண்டு வாரும்; ரொம்பப் பசியாயிருக்கிறது. சாப்பிட்டுக் கொண்டே சொல்ல வேண்டியதைச் சொல்கிறேன்" என்றார்.

ஜோதிடர் தட்டுத் தடுமாறி, "ஐயா! இந்த ஏழை எளியவனால் தங்களுக்கு என்ன பெரிய உதவி தேவையாயிருக்க முடியும்? இந்தக் குடிசையைத் தேடித் தாங்கள் வந்தது என் முன்னோர் செய்த பாக்கியம். தங்களுடைய அந்தஸ்துக்கு தக்கபடி விருந்து அளிக்க என்னால் இயலாது. ஆனாலும் இந்தக் குடிசையில் உள்ளவையெல்லாம் தங்களுடையவைதான். தயவு செய்து அமருங்கள், நின்று கொண்டிருக்கிறீர்களே? தங்களைப் பார்த்தவுடனே திடுக்கிட்டுப் போனேன். அதனால் தங்களைத் தக்கபடி வரவேற்று உபசரிப்பதற்குத் தவறிவிட்டேன். ஆகா! இந்த எளியவனுடைய குடிசையில் தாங்கள் அமருவதற்குத் தகுதியான ஆசனம் கூட இல்லை. பெரிய மனது செய்து அந்தப் பலகையிலே உட்கார வேண்டும்" என்று சற்று முன் குந்தவையும் வானதியும் உட்கார்ந்திருந்த பலகைகளைச் சுட்டிக் காட்டினார்.

பழுவேட்டரையர் அப்பலகைகளையும் அவற்றின் அருகில் சிந்தியிருந்த மலர்களையும் உற்றுப் பார்த்துவிட்டு, "ஜோதிடரே! இல்லை; எனக்கு உட்கார நேரமில்லை. ஏதாவது சாப்பிடுவதற்குக் கொடுக்கக் கூடியது இருந்தால் இலையிலே சுற்றிக் கையிலே கொடுத்து விடுவீர். தஞ்சைக்கு அவசரமாக ஒரு செய்தி அனுப்ப வேண்டும் என் சகோதரன் காலாந்தக கண்டனுக்கு... ஓலையும், எழுத்தாணியும் தருகிறீரா?....வேண்டாம்! ஓலை எழுதிக் கொண்டிருக்க நேரமில்லை. என் முத்திரை மோதிரத்தைக் கொடுக்கிறேன். அதை எடுத்துக் கொண்டு நீர் தஞ்சாவூர் உடனே போக முடியுமா? அல்லது வாசலில் நின்றானே உமது சீடன், நல்ல தடியனாக இருக்கிறான். அவனை அவசரமாக அனுப்ப முடியுமா?" என்று கேட்டார்.

"தங்கள் கட்டளை எதுவோ, அப்படியே செய்கிறேன். நானும், என் சீடனும், இரண்டு பேரும் வேணுமானாலும் போகிறோம். ஆனால், தனாதிபதி! பெரிய மனது செய்து சிறிது நேரம் இந்த ஏழையின் குடிசையில் அமர்ந்து, இந்த எளியவன் அளிக்கும் அமுதைத் தாங்கள் அருந்திவிட்டுப் போக வேண்டும்!"

"ஜோதிடரே! எதற்காக உம்மை ஏழை என்றும் எளியவன் என்றும் அடிக்கடி சொல்லிக் கொள்கிறீர்? உம்முடைய வீட்டைத் தேடி அரசர்களும், அரசிளங்குமரிகளும் அடிக்கடி வருவதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நான் ஒருவனே உம்மிடம் ஜோதிடம் கேட்க வராதவன். அது தவறு என்பதை உணர்ந்து கொண்டேன். ஒருவேளை உம்மிடம் கேட்டிருந்தால் இம்மாதிரி பயங்கர விபத்துகள் ஏற்படாமலிருந்திருக்கலாம்..."

"ஐயா! தங்கள் மொழிகள் எனக்குப் பெரிதும் கவலையைத் தருகின்றன. என்ன விபத்து நேர்ந்தது? தங்களை இந்தக் கோலத்தில் பார்த்ததும் நான் திடுக்கிட்டது சரிதான். புயலிலும், வெள்ளத்திலும் சிக்கிக்கொண்டீர்களா? கொள்ளிடம் உடைப்பு எடுத்துக்கொண்டது என்று கேள்விப்பட்டேன். ஒருவேளை, அதனால்...? தனாதிபதி!..."

"பழுவூர் இளையராணி சௌக்கியமாயிருக்கிறார்கள் அல்லவா?" என்று ஜோதிடர் கேட்டது, பழுவேட்டரையர் பயங்கரத்தொனியில் சிரித்தார்.

"இல்லை, இல்லை! பழுவூர் இளையராணிக்கு ஒன்றும் நேரவில்லை. அவள் கொள்ளிடத்தில் முழுகிச் செத்துப் போய் விடவில்லை. இது வரையில் கடம்பூர் அரண்மனையில் சௌக்கியமாகவே இருக்க வேண்டும். ஆனால் அந்தச் சண்டாளி நாளை இந்த நேரம் வரையில் உயிரோடு இருப்பாளா என்று நான் சொல்லமுடியாது. ஜோதிடரே! நீர் சொல்ல முடியுமா? இராஜ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாருடைய ஜாதகங்களும் உம்மிடம் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையா? நந்தினியின் ஜாதகம், நான் கிழ வயதில் அறிவு கெட்டு மணந்து கொண்ட மோகினிப் பேயின் ஜாதகம் இருக்கிறதா?"

ஜோதிடர் மேலும் பதறிப் போனவராய், "தனாதிபதி! இது என்ன சொல்கிறீர்கள்? என்னைச் சோதனை செய்கிறீர்களா? இளைய ராணியின் ஜாதகம் என்னிடம் இல்லை. அவர் பிறந்த நாளும் வேளையும் தாங்கள் தெரிவித்தால் ஜாதகம் கணிக்க முடியும்" என்றார்.

"வேண்டாம்; வேண்டாம், நந்தினியின் ஜாதகத்தை நானே கணித்துக் கொள்வேன். அவளுடைய ஆயுளை நானே, என் கையினாலேயே, முடிவு கட்டத் தீர்மானித்து விட்டேன். மற்றவர்களுடைய ஜாதகத்தைப் பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள். சக்கரவர்த்தியின் ஆயுர்ப் பாவம் எப்படியிருக்கிறது?... ஆகா! தலையை அசைக்கிறீர்! நீர் சொல்ல மாட்டீர். உம்மை நான் சோதிப்பதாகவே எண்ணுவீர். அல்லது உம்முடைய ஜோதிட சாஸ்திரம் எல்லாமே வெறும் புரட்டோ , என்னமோ, யார் கண்டது?... ஜோதிடரே! ஜாதகம் ஒருபுறம் இருக்கட்டும். சில காலமாக வானத்தில் தோன்றிக் கொண்டிருந்த தூமகேது இன்று காலையில் வானத்திலிருந்து பூமியில் விழுந்து மறைந்ததே, அது உமக்குத் தெரியுமா? தெரிந்தால், அதன் பொருள் என்ன என்று சொல்லக் கூடுமா? அது ஏதேனும் பெரிய உற்பாதத்தைக் குறிப்பிடுகிறதா? சக்கரவர்த்திக்கோ, அவருடைய மக்களுக்கோ நேரப் போகிற விபத்தைக் குறிப்பிடுகிறதா? இதைக்கூட நீர் சொல்ல மறுப்பதாயிருந்தால் உம்முடைய ஜோதிடம் வெறும் புரட்டுத்தான்!"

"தனாதிபதி! அப்படி முடிவு கட்ட வேண்டாம். இராஜாங்க சம்பந்தமான காரியங்களில் ஜோதிடம் பார்க்கக் கூடாது என்பது எங்கள் தொழிலின் பரம்பரை மரபு. இன்று காலையில் தூமகேது விழுந்ததை நான் கண்ணால் பார்க்கவில்லை. ஏதோ ஜகஜ்ஜோதியான வெளிச்சம் தோன்றியதைக் கண்டு ஆச்சரியப்பட்டு உடனே எழுந்து வெளியில் சென்று பார்த்தேன். சில நாளாக வால் குறுகி வந்து கொண்டிருந்த தூமகேதுவைக் காணவில்லை. தூமகேது தோன்றுவதும் விழுவதும் அரசகுலத்தினர்க்கு அதிர்ஷ்டத்தைக் குறிப்பிடுவதாகச் சொல்லுவார்கள். ஆனால் அது ஜோதிட சாஸ்திரத்தைச் சேர்ந்ததல்ல. ஜனங்களின் தொன்று தொட்ட நம்பிக்கை. அதில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. இன்று காலையில் கூடச் சக்கரவர்த்தி சௌக்கியம் என்று தெரிந்து கொண்டிருக்கிறேன்."

"அது நமது அதிர்ஷ்டந்தான். இன்றிரவு சக்கரவர்த்திக்கு ஒன்றும் நேரிடாமலிருக்க வேண்டும். நாளை வரையில் அவர் சும்மாயிருந்தால் அப்புறம் கவலையில்லை. பொன்னியின் செல்வனைப் பற்றி ஏதேனும் தெரியுமா?...

"நேற்றிரவு வெகு நேரத்துக்குப் பிறகு இளவரசர் திருவாரூர் வந்து சேர்ந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். தனாதிபதி! பதினாயிரம், லட்சம் மக்கள் அவரைச் சூழ்ந்து வந்து கொண்டிருக்கிறார்களாம். அவருடைய விருப்பத்துக்கு விரோதமாக அவரைத் தஞ்சைக்கு அழைத்து வருகிறார்களாம்."

"ஆகா! அவர்கள் மட்டும் இளவரசரைத் தஞ்சையில் கொண்டு போய்ச் சேர்த்_துவிட்டால் எவ்வளவோ நன்றாயிருக்கும். ஆனால் முடியுமா? லட்சக்கணக்கானவர்கள் சூழ்ந்திருந்தாலும், யமனைத் தடுத்து நிறுத்த முடியுமா? சொல்லும், ஜோதிடரே, சொல்லும்! நீர் ஜோதிடம் சொல்லாவிட்டாலும் நான் சொல்லுகிறேன். சக்கரவர்த்திக்கும், அவருடைய குமாரர்கள் இருவருக்கும் இன்றைக்குப் பெரிய கண்டம் காத்திருக்கிறது. யமதர்மன் அவர்களை நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறான். சக்கரவர்த்தியின் யமன் பழுவூர் மாளிகையைச் சேர்ந்த பொக்கிஷ நிலவறையில் மறைந்திருக்கிறான். அருள்மொழியின் யமன் யானைப் பாகனுடைய அங்குசத்திலே ஒளிந்திருக்கிறான். அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்திச் சக்கரவர்த்தியையும் பொன்னியின் செல்வனையும் காப்பாற்றுவது உம்முடைய பொறுப்பு. என் முத்திரை மோதிரத்தை எடுத்துக்கொண்டு உம் சீடன் தஞ்சைக்குப் போகட்டும். நீர் திருவாரூர் சென்று இளவரசருக்கு எச்சரிக்க வேண்டும், செய்வீரா? உடனே புறப்படுவீரா?"

ஜோதிடர் தத்தளித்துப் போனார். பழுவேட்டரையருக்கு சித்தப் பிரமை பிடித்துவிட்டதா என்ற சந்தேகம் அவன் மனத்தில் தோன்றியது. ஆனால் அப்படியும் நிச்சயமாகச் சொல்லுவதற்கில்லை. கூறுவதெல்லாம் அறிவுக்குப் பொருத்தமாகவே இருக்கிறது. ஆத்திரத்துடனும் பரபரப்புடனும் பேசினாலும், உண்மையைச் சொல்லுகிறவராகவே தோன்றுகிறது. இந்தப் பேச்சையெல்லாம் இளைய பிராட்டியும் கேட்டுக் கொண்டிருப்பார். அவளுடைய கருத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். எப்படியாவது இந்தக் கிழவரை இங்கிருந்து உடனே அனுப்பி விட வேண்டும்.

"துர்க்கா பரமேசுவரியின் அருளினால் தங்களுடைய கட்டளையை என்னால் இயன்றவரை நிறைவேற்றி வைப்பேன்?"

இப்படி ஜோதிடர் கூறியபோது உள்ளேயிருந்து பெண்கள் அணியும் பாதச் சிலம்பின் ஒலி கேட்டது.

"ஆகா! துர்க்கா பரமேசுவரி பாதச் சதங்கையை ஒலித்து அருள் புரிகிறாள். இனி, நான் கடம்பூருக்குத் திரும்பலாம், இதோ புறப்படுகிறேன்...."

"தனாதிபதி! பசியாயிருக்கிறது என்றீர்களே? இந்த எளியவன் வீட்டில் அமுது செய்து விட்டு..."

"வேண்டாம், வேண்டாம்! என் பசி, தாகம் எல்லாம் பறந்து போய்விட்டன. நானும் கடம்பூருக்குப் பறந்து போகவேண்டும். ஆலயத்துக்கு அருகில் ரதம் ஒன்று நிற்கிறதே. அது யாருடையது, ஜோதிடரே? அதை நான் எடுத்துச் செல்லப் போகிறேன். கொள்ளிடக்கரை சென்றதும் திருப்பி அனுப்பி விடுகிறேன். ஓடத்தை மட்டும் எடுத்துக் கொண்டு...."

"ஐயா! அந்த ரதம்... அந்த ரதம்... என் பேரில் கருணை கூர்ந்து அதை எடுத்துப் போக வேண்டாம்..."

"ஜோதிடரே! நீர் வீணாகக் கவலைப்படாதீர். சோழ நாட்டின் பட்டத்து இளவரசருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக நான் அந்த ரதத்தை எடுத்துப் போகிறேன். துர்க்கா தேவியே அதற்குச் சம்மதம் தருவாள். மறுபடியும் பாதச் சிலம்பை ஒலிக்கச் செய்து தேவி அருள் புரிந்தால், சம்மதம் கிடைத்ததாக அறிந்து கொள்வேன் அதோ, கேளும்."

இவ்விதம் பெரிய பழுவேட்டரையர் கூறிக் கொண்டிருக்கையில், இளைய பிராட்டி குந்தவை பக்கத்து அறையின் கதவைத் திறந்து கொண்டு இலேசாகப் பாதச் சிலம்பு ஒலிக்க நடந்து வந்தாள். பெரிய பழுவேட்டரையர் அவளைப் பார்த்து வியப்படையவில்லை; திடுக்குறவும் இல்லை.

"தாயே! நான் ஊகித்தது சரிதான். அடுத்த அறையில் நீ இருக்க வேண்டும் என்று கருதினேன். உன் முகத்தைப் பார்த்துப் பேசுவதற்கு எனக்குத் தைரியம் இல்லை. ஆகையினாலேயே உன் காதில் விழட்டும் என்று இவ்வளவு சத்தம் போட்டுப் பேசினேன்; ஜோதிடரிடம் நான் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டாய் அல்லவா?"

"ஐயா! மன்னிக்க வேண்டும். நான் செய்த பிழையை மன்னிக்க வேண்டும். இந்த வீட்டில் தாங்கள் திடீரென்று பிரவேசித்த போது, தாங்கள்தான் என்பதை என்னால் நிச்சயமாக அறிய முடியவில்லை. அதனால் தங்களுடைய பேச்சை ஒட்டுக் கேட்கும்படி நேர்ந்தது, மன்னிக்க வேண்டும்!" என்றாள் குந்தவை.

"தாயே! நான் உன்னை மன்னிப்பதற்கு ஒரு காரணமும் ஏற்படவில்லை. உன்னிடந்தான் நான் மன்னிப்புக் கேட்க வேண்டும். மன்னிப்புக் கோரத் தகுதியுடையவனா என்பதே எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. இன்றிரவுக்குள் கடம்பூர் சென்று, பட்டத்து இளவரசருக்கு எதுவும் நேராமல் தடுத்தேனானால், உன்னிடம் மன்னிப்புக் கோருவதற்கு நான் தகுதி பெறுவேன். மூன்று வருஷங்களாக இந்தக் கிழவனின் கண்கள், மோகாந்தகாரத்தினால் மூடியிருந்தன. என் கண்களைத் திறப்பதற்கு நீ எவ்வளவோ பிரயத்தனம் செய்தாய். எத்தனையோ குறிப்புகள் சொன்னாய். ஒன்றும் என் காதில் ஏறவில்லை. என் சகோதரன் காலாந்தக கண்டனும் என் கண்களைத் திறக்க முயன்றான். அவன் முயற்சியும் பலிக்கவில்லை. நேற்றிரவு துர்க்கா பரமேசுவரியின் கருணையினால் பாண்டிய நாட்டுச் சதிகாரர்கள் இருவரின் சம்பாஷணையை ஒட்டுக் கேட்க நேர்ந்தது. அதன் பலனாகவே உண்மையை அறிந்தேன். அந்தச் சண்டாளியை, சதிகாரியை, விஷநாகத்தை, என் அரண்மனையிலேயே வைத்திருந்து பாலூட்டிச் சீராட்டி வளர்த்தேன். அவள் என்னைக் குலத்துரோகியாக்கினாள்; இராஜத் துரோகியாக்கினாள். சோழநாட்டுப் பொக்கிஷத்திலிருந்த பொருளை எடுத்துப் பாண்டியநாட்டுச் சதிகாரர்களுக்குக் கொடுத்தாள். அந்தப் பாதகி நந்தினியை இன்று இரவு கழிவதற்குள் என் கையினாலேயே கொன்றாலொழிய என் நெஞ்சில் கொழுந்துவிடும் நெருப்பு அணையாது..."

இவ்வாறு பழுவேட்டரையர் கூறி வந்தபோது அவர் சற்று எதிர்பாராத ஒரு காரியத்தைக் குந்தவை செய்தாள். திடீரென்று அவர் காலடியில் விழுந்து வணங்கினாள். பழுவேட்டரையர் இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றபோது, இளையபிராட்டி எழுந்து நின்று, "ஐயா! எனக்கு ஒரு வரம் கொடுத்து அருள வேண்டும்!" என்றாள்.

"இளவரசி என்னைச் சோதிக்கிறாய் போலத் தோன்றுகிறது. வேண்டாம்! என்னுடைய பாவச் செயல்கள் எவ்வளவு பயங்கரமானவை என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன். அவற்றுக்கு என்ன பிராயச்சித்தம் செய்து கொள்வது என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு முன்னால், இன்றையக் கண்டத்திலிருந்து சோழ குலத்தைச் சேர்ந்த மூன்று பேரையும் தப்புவித்தாக வேண்டும். உன் தந்தைக்கும், சகோதரர்களுக்கும் இன்று தீங்கு ஒன்றும் நேரிடாமலிருக்க வேண்டும். அதற்கு எனக்கு உதவி செய். இன்று ஒருநாள் போகட்டும், நாளைக்கு நானே உன்னிடம் வந்து, "எனக்கு தண்டனை என்ன?" "பிராயசித்தம் என்ன?" என்று கேட்பேன்!" என்றார்.

"ஐயா! தங்களுக்குத் தண்டனை கொடுக்கவோ, பிராயச்சித்தம் சொல்லவோ, நான் முற்பட மாட்டேன். தாங்கள் என் பாட்டனாரின் ஸ்தானத்தில் உள்ளவர். என் தந்தையின் போற்றுதலுக்கு உரியவர். உண்மையாகவே, தங்களிடம் ஒரு வரம் கேட்கிறேன்..."

"அப்படியானால், உடனே கேள் அம்மா! வெறும் பேச்சுப் பேசுவதற்கு இப்பொழுது நேரமில்லை."

"கொடுப்பதாக வாக்கு அளியுங்கள்!"

"உனக்கும், உன் குடும்பத்துக்கும் நான் செய்து விட்ட துரோகத்துக்கு நான் கொடுக்கக் கூடியது எதுவும் ஈடாகாது. நீ எது கேட்டாலும் கொடுக்கிறேன். சீக்கிரம் கேள்!"

"இளையராணி நந்தினி தேவியைத் தாங்கள் ஒன்றும் செய்வதில்லை என்று வாக்கு அளிக்க வேண்டும். அதுதான் நான் கோரும் வரம்!"

"அம்மா! இது எது என்ன விளையாட்டா? விளையாட இதுதானா சமயம்? என் முதுமைப் பிராயத்தில் நான் புத்திகெட்டுப்போனது உண்மைதான். அதற்காக என்னை முழுப் பைத்தியக்காரனாக்கி விடப் பார்க்கிறாயா? அந்தச் சதிகாரிக்கு நான் தக்க தண்டனை கொடுக்காவிட்டால், மற்ற சதிகாரர்களை எப்படித் தண்டிக்க முடியும்? என் கையினால் அவளைக் கொன்றுவிட்டுத்தான் மறு காரியம் பார்ப்பேன். என் மனத்திலுள்ளதையெல்லாம் சொல்லி விட்டு, இந்தக் கிழவனை அவளால் கடைசி வரையில் ஏமாற்ற முடியவில்லையென்பதை எடுத்துக் காட்டிவிட்டு, அவளை என் வாளினாலேயே வெட்டிக் கொல்லுவேன். அதற்குக் குறைந்த தண்டனை எதுவும் அவளுக்குக் கொடுத்தால் நியாயம் செய்தவனாக மாட்டேன். அதற்குப் பிறகு, எனக்கு என்ன நியாயமான தண்டனை என்பதையும் யோசிப்பேன். போ! அம்மா! போ! உன் தந்தையையும், தம்பியையும் இன்று வரப்போகும் கண்டத்திலிருந்து காப்பாற்றுவதற்கு வேண்டிய பிரயத்தனம் செய்!..."

"செய்கிறேன், ஐயா! ஆனால் என் சகோதரியைப் பாதுகாக்கவும் முயற்சி செய்ய வேண்டாமா? இளைய ராணி நந்தினி என் சகோதரி. அவருக்குத் தாங்கள் என்ன தீங்கு செய்தாலும், அதுவும் சோழ குலத்துக்குச் செய்த துரோகமாகும்!"

பழுவேட்டரையர் எல்லைக் கடந்த திகைப்பில் ஆழ்ந்தார். "நான் இன்னமும் கனவு கண்டு கொண்டிருக்கிறேனா?" என்று அவர் உதடுகள் முணு முணுத்தன.

"இல்லை, இல்லை! தாங்கள் கனவு காணவில்லை. தாங்கள் காண்பதும் கேட்பதும் உண்மைதான். சிறிது யோசித்துப் பாருங்கள்; பழைய சம்பவங்களை நினைத்துப் பாருங்கள். என் சகோதரன் அருள்மொழிவர்மனைக் காவேரியில் முழுகிப் போகாமல் ஒரு மாதரசி காப்பாற்றியது நினைவிருக்கிறதா? அவள்தான் இளையராணி நந்தினியின் தாயார். இளைய ராணியைத் தாங்கள் மணம் புரிந்து அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு வந்த நாளில், என் தந்தை நினைவிழந்து விழுந்தது நினைவிருக்கிறதா? இளைய ராணியின் அன்னையைக் காண்பதாக நினைத்தே சக்கரவர்த்தி மூர்ச்சை அடைந்தார். அவள் இறந்து விட்டதாக வெகுகாலம் எண்ணிக் கொண்டிருந்தார். ஆகையால் திடீரென்று இளைய ராணியைப் பார்த்ததும் ஞாபகத்தை இழந்தார்...."

பழுவேட்டரையருக்கு வேறு சில சம்பவங்களும் நினைவுக்கு வந்தன. நள்ளிரவில் நந்தினியை அவர் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் முன்னால் கொண்டுபோய் நிறுத்தியதும், அவளைக் கண்டு சக்கரவர்த்தி அலறியதும் அதற்கு நந்தினி கற்பித்துக் கூறிய காரணங்களும் அவருக்கு அப்பொழுது நினைவு வந்தன.

"தாயே! நீ பேசுவது விளையாட்டு அல்ல என்பதை உணர்கிறேன். விதியின் விளையாட்டுத்தான் மிக விசித்திரமாயிருக்கிறது. இளையராணி உன் தமக்கை என்றால், ஆதித்த கரிகாலனுக்கும் அவள் சகோதரியாகிறாள். இந்த உறவு உனக்கு மட்டுந்தான் தெரியுமா, இன்னும் யார் யாருக்கெல்லாம் தெரியும்? சக்கரவர்த்திக்குத் தெரியுமா?

"சக்கரவர்த்தி இரண்டு நாளைக்கு முன்பு வரையில் என்னுடைய பெரியன்னை இறந்துவிட்டதாகவே எண்ணிக் கொண்டிருந்தார். முந்தாநாள் அந்த மூதாட்டி நேரில் வந்தபோது கூடப் பேய் என்று எண்ணி விளக்கை விட்டு எறிந்தார், பிறகுதான் நம்பினார்..."

"அதைப்பற்றிக் கேட்கவில்லை, அம்மா! இளைய ராணி தன் சகோதரி என்பது கரிகாலனுக்குத் தெரியுமா?"

"அவனுக்கு இதற்குள் தெரிந்திருக்க வேண்டும். எனக்கு அவன் வாணர்குலத்து வீரர் ஒருவரிடம் ஓலை கொடுத்து அனுப்பியிருந்தான். அவரிடம் நான் சொல்லி அனுப்பினேன்..."

"ஆகா! வந்தியத்தேவன் வல்லவரையனை சொல்கிறாயாக்கும்!"

"ஆம், ஐயா!"

"அவன் கரிகாலனிடம் சொல்லியிருப்பான் என்று தோன்றவில்லை. சொல்லியிருந்தாலும், கரிகாலன் நம்பியிருக்க மாட்டான். எனக்கே நம்பிக்கை உண்டாகவில்லையே? அவன் எப்படி நம்புவான்? இளைய ராணிக்கு இச்செய்தி தெரிந்திருக்க முடியாது; தெரிந்திருந்தாலும் பயனில்லை. சதிகாரர்கள் வேறு விதத்தில் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளப் பார்ப்பார்கள். இன்றிரவு அதற்குக் கட்டாயம் முயற்சி செய்வார்கள். அம்மா! நீ தெரிவித்த செய்தி என்னுடைய பொறுப்பை இன்னும் பயங்கரமாக்குகிறது. இளையராணி நந்தினி, சகோதர ஹத்தி செய்யாமல் பாதுகாக்கும் கடமை எனக்கு ஏற்படுகிறது. நான் உடனே கடம்பூர் போகிறேன். நீங்கள் வந்த ரதத்தை எடுத்துக் கொண்டு போகிறேன். சக்கரவர்த்திக்கும், பொன்னியின் செல்வனுக்கும் ஒன்றும் நேராமல் பாதுகாப்பது உன்னுடைய பொறுப்பு!" என்றார்.

"ஐயா! தாங்கள் கவலைப்பட வேண்டாம். நான் இதோ தஞ்சைக்குப் புறப்படுகிறேன். பழையாறையிலிருந்து வாகனம் தருவித்துக் கொண்டு போகிறேன். பொன்னியின் செல்வனைப் பற்றிச் சிறிதும் கவலைப்படத் தேவையில்லை. அவன் பிறந்த நாளும் வேளையும் அவனைப் பாதுகாக்கும்!" என்றாள்.

"பெண்ணே! ஜோதிடத்தை நம்பி அஜாக்கிரதையாக இருந்துவிடாதே! ஜோதிடர்கள் மனத்திற்குள் உண்மை தெரிந்திருந்தாலும் வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள்! இரண்டு பொருள் தொனிக்கும்படி ஏதேனும் கூறி வைப்பார்கள். காரியம் நடந்த பிறகு 'முன்னமே சொல்லவில்லையா?' என்பார்கள். ஜோதிடத்தை நம்பினாலும் ஜோதிடக்காரர்களை நம்ப வேண்டாம்!" என்று போகிற போக்கில் ஒரு சொல்லம்பைப் போட்டு விட்டுப் பழுவேட்டரையர் வெளியேறினார்.

அவர் அப்பால் சென்ற சில வினாடி நேரத்துக்கெல்லாம் ஆழ்வார்க்கடியான் உள்ளே பிரவேசித்தான். "ஆம், ஆம்! தனாதிகாரி கூறியதை நான் ஆமோதிக்கிறேன். ஜோதிடத்தை நம்பினாலும், ஜோதிடக்காரர்களை நம்பவே கூடாது!" என்றான்.











Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. குந்தவை கேட்ட வரம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 51. மணிமேகலை கேட்ட வரம்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 5. நடுக்கடலில்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 33. வானதி கேட்ட உதவி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 26. இரத்தம் கேட்ட கத்தி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: