BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 33. "ஐயோ! பிசாசு!" Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 33. "ஐயோ! பிசாசு!"

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 33. "ஐயோ! பிசாசு!" Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 33. "ஐயோ! பிசாசு!"   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 33. "ஐயோ! பிசாசு!" Icon_minitimeMon Jun 06, 2011 3:22 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

33. "ஐயோ! பிசாசு!"



அதே சமயத்தில் வந்தியத்தேவன் மிக்க மனச் சோர்வுடன் மாளிகையைச் சேர்ந்த நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தான். அந்த நந்தவனம் மாளிகையில் வெளி மதில் சுவர் ஓரமாக அமைந்திருந்தது. இரவில் மலரும் புஷ்பங்கள் அப்போதுதான் மடல் அவிழ்ந்து கொண்டிருந்தன. பன்னீர், பாரிஜாதம், மல்லிகை, முல்லை முதலிய மலர்களின் நறுமணத்தை ஐப்பசி மாதத்தின் வாடைக் காற்று அவன் பக்கமாகக் கொண்டு வந்து வீசியது. "ஆகா! இந்த நேரத்தில் பழையாறை அரண்மனை நந்தவனத்தில் நாம் இருக்கக் கூடாதா? அப்படியிருக்கும்போது திடீரென்று குந்தவை தேவியின் பாதச் சிலம்பு ஒலிக்கக் கூடாதா?" என்று அவன் மனம் எண்ணமிட்டது. "இங்கே வந்து கடம்பூர் அரண்மனையில் அகப்பட்டுக் கிடக்கிறோமே? வெறி பிடித்த இளவரசரிடம் அகப்பட்டுக் கொண்டு விழிக்கிறோமே?" என்று நினைத்தான். ஆதித்த கரிகாலர் என்றுமில்லாத வண்ணம் அன்று மாலை அவன்மீது சீறி எரிந்து விழுந்ததும், "இனி என்றைக்கும் என் முகத்தில் விழிக்காதே! நாளைப்பொழுது விடிந்தபிறகு உன்னைப் பற்றி என் முடிவைத் தெரிவிக்கிறேன்" என்று கூறியதும் அவன் மனத்தைப் புண்படுத்தியிருந்தன. ஒரு நாளுமில்லாத விதமாக அவர் இன்று கோபித்துக் கொண்டு விட்டார். பாவம்! அவர்மீது குறைப்பட்டு என்ன பயன்? அவர் உள்ளம் அவ்விதமாக குழம்பிவிட்டிருக்கிறது. அவர் நிலையை நினைத்துப் பார்க்கும் போது வந்தியத்தேவனுக்கு அவர் மீது பரிதாபமே உண்டாயிற்று.

அன்றெல்லாம் ஆதித்த கரிகாலரின் உன்மத்தம் உச்ச நிலையை அடைந்திருந்தது. உற்சாகமும் சோர்வும், கோபமும், குதூகலமும், சிநேகப் பான்மையும், கொடூரப் பகைமையும், மாறிமாறி அவரைப் பிடித்து ஆட்டி வைத்தன. அவரும் தம்மைச் சுற்றியிருந்தவர்களை அம்மாதிரி ஆட்டி வைத்துக் கொண்டிருந்தார். அடுத்த நிமிஷம் அவருடைய போக்கு எப்படியிருக்குமோ, என்ன செய்வாரோ என்று அருகிலிருந்தவர்கள் கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள்.

அன்றைக்குச் சூரியன் உதயமானதிலிருந்து வந்து கொண்டிருந்த செய்திகள் அவருடைய உன்மத்தத்தை அதிகமாக்க உதவி செய்து கொண்டிருந்தன. சம்புவரையர் முதன் முதலாக அவரிடம் வந்து, திருக்கோவலூர் மலையமான் படை திரட்டிக் கொண்டு வருகிற செய்தியைத் தெரிவித்தார். அதைப்பற்றித் தமது ஆட்சேபத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

"மலையமான் தொண்டு கிழவர். வயது எண்பதுக்கு மேலாகிறது. அவர் வருவதைக் குறித்து உங்களுக்கு என்ன பயம்?" என்றார் இளவரசர்.

"ஐயா! கொல்லிமலைத் தலைவன் வல்வில் ஓரியின் வம்சத்தில் வந்தவர்கள் நாங்கள். பயம் என்றால் இன்னதென்று அறியாதவர்கள். தாங்கள் இங்கு விஜயம் செய்திருப்பதை முன்னிட்டே தயங்குகிறேன். தாங்கள் மட்டும் அனுமதி கொடுத்தால்..."

"கிழவரோடு போர் புரிவதற்கு உடனே புறப்பட ஆயத்தமாயிருக்கிறீர்கள். அவ்வளவுதான்! சம்புவரையரே! என் பாட்டனைப் படையுடன் புறப்பட்டு வரும்படி நான்தான் செய்தி அனுப்பினேன்!"

"எதற்காக, இளவரசே?"

"நான் இங்கே உங்களிடம் தனியாக அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன் அல்லவா? இங்கே இருக்கும்போது எனக்கு ஏதாவது நேர்ந்தால்..."

"கோமகனே! அப்படிப்பட்ட சந்தேகம் அணுவளவும் தங்கள் மனத்தில் இருந்தால், இந்தக் கணமே..."

"இங்கிருந்து என்னைக் கிளம்பிவிடச் சொல்கிறீர்களாக்கும்!"

"ஐயா! இது தங்களுடைய இராஜ்யம். இது தங்களுடைய அரண்மனை. இதன் உச்சியில் புலிக்கொடி பறக்கிறது. இங்கிருந்து தங்களைப் போகச் சொல்வதற்கு நான் யார்? தாங்கள் அனுமதி கொடுத்தால் நானும் என் குடும்பத்தாரும் இங்கிருந்து போய் விடுகிறோம். மிலாடுடையார் மலையமானை வரவழைத்து வைத்துக் கொண்டு தாங்கள் நிர்ப்பயமாக இங்கே இருக்கலாம்."

"ஓகோ! வல்வில் ஓரியின் வம்சத்தில் பிறந்த நீங்கள் பயமறியாதவர்கள் என்றும், விஜயாலய சோழரின் குலத்தில் பிறந்த நான் பயங்கொள்ளி என்றும் சொல்லிக் காட்டுகிறீரா?"

"இளவரசரின் வைர நெஞ்சமும், வீர தீரமும் உலகம் அறிந்தவை. பன்னிரண்டாம் பிராயத்தில் தாங்கள் சேவூர்ப் போர்க்களத்தில் புகுந்து பகைவர்களைச் சின்னா பின்னம் செய்து வீராதி வீரன் என்று பெயர் பெற்றீர்கள். பதினெட்டாம் பிராயத்தில் மறுபடி போருக்கு வந்த வீரபாண்டியனைத் தொடர்ந்து துரத்திச் சென்று ஒளிந்திருந்த இடத்தில் அவனைக் கண்டுபிடித்து அவன் சிரத்தைத் துண்டித்துக் கொண்டு வந்தீர்கள்..."

இதைக்கேட்ட ஆதித்த கரிகாலன், "தெரியும், ஐயா! தெரியும்! ஓடியவனைத் துரத்திய வீரப்புலி நான் என்றும், செத்துப் போன வீர பாண்டியனுடைய தலையை வெட்டிக் கொண்டு வந்தவனென்றும் நீங்கள் எல்லோரும் என்னைப் பரிகசித்துப் பேசுவது எனக்குத் தெரியும்; அந்தப் பழுவூர் மோகினிப் பேய் அத்தகைய வதந்திகளைக் கிளப்பி விட்டிருக்கிறாள் என்பதும் எனக்குத் தெரியும்!" என்று கூறிவிட்டுப் பயங்கரத் தொனியில் சிரித்தார்.

சம்புவரையருக்கு ஏன் இந்த வெறிகொண்ட இளவரசரிடம் பேச்சுக் கொடுத்தோம் என்று ஆகிவிட்டது.

"கோமகனே! நான் எது சொன்னாலும் தவறாகப் போய் விடுகிறது. தங்கள் உசிதம் எப்படியோ அப்படிச் செய்யுங்கள். நான் போய் வருகிறேன்."

"போய் வருவது சரிதான்; ஆனால் இந்தக் கோட்டையை விட்டுப் போகும் எண்ணத்தை மட்டும் விட்டு விடுங்கள். இந்த அரண்மனையில் நான்கு மாதங்களுக்கு முன்னால் நடந்த சதியாலோசனையைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்ளும் வரையில் நானும் இந்த இடத்தை விட்டுப் போகப் போவதில்லை; நீங்கள் போவதற்கும் விடப்போவதில்லை!" என்றார் ஆதித்த கரிகாலர்.

சம்புவரையரின் உதடுகள் துடித்தன. உடம்பு நடுங்கியது. அவருடைய கண்களில் கண்ணீர் ததும்பியது.

இந்த நிலையைப் பக்கத்தில் இருந்த பார்த்திபேந்திரன் பார்த்தான். "கோமகனே! சோழக் குலத்தவர் வீரத்திற்குப் புகழ் பெற்றது போலவே நீதிக்கும் பெயர் பெற்றவர்கள். இந்தப் பெரியவருக்குத் தாங்கள் நீதி செய்யவில்லை. தங்கள் வார்த்தைகளினால் அவருடைய மனத்தைப் புண்படுத்துகிறீர்கள். இங்கு நடந்த சிற்றரசர் கூட்டத்தைப் பற்றிச் சம்புவரையர் முன்னமே தக்க சமாதானம் சொல்லித் தாங்களும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். தாங்கள் இராஜ்யம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருப்பதாலும், தஞ்சாவூருக்குப் போகவே மறுப்பதாலும், சிற்றரசர்கள் சோழ ராஜ்யத்தின் நன்மையைக் கருதி அடுத்த பட்டத்துக்கு யார் என்பதைப் பற்றி யோசித்தார்கள். தாங்கள் ராஜ்ய பாரத்தை வகிக்க இசைந்தால், அவர்கள் ஏன் வேறு யோசனை செய்ய வேண்டும்? உலகமெல்லாம் வீரப் புகழ் பரப்பிய ஆதித்த கரிகாலர் இருக்கும்போது, போர்க்களத்தையே பார்த்தறியாத மதுராந்தகத்தேவனைப் பற்றி இவர்கள் கனவிலும் கருதுவார்களா?..."

ஆதித்த கரிகாலர் குறுக்கிட்டு, "ஆமாம், ஆமாம்! நான் உயிரோடிருக்கும்போது இன்னொருவன் சோழ சிங்காதனம் ஏறுவது இயலாத காரியந்தான். அதற்காகத்தான் என்னை வேலை தீர்த்துவிடப் பார்க்கிறார்கள்!" என்று கூறிவிட்டு மறுபடியும் ஹா ஹா ஹாவென்று உரத்துச் சிரித்தார்.

"பார்த்திபேந்திரா! நீயும் இவர்களுடன் சேர்ந்து கொண்டதை நான் அறியவில்லையென்றா நினைத்தாய்? கந்தமாறனும் நீயும் அன்று நாம் வேட்டைக்குப் போனபோது என் பின்னாலேயே வேலைக் குறி பார்த்துக்கொண்டு வந்தது எனக்குத் தெரியாது என்றா நினைத்தாய்? என் உண்மை நண்பனாகிய இந்த வந்தியத்தேவன் மட்டும் தெய்வாதீனமாக இங்கு வந்து சேர்ந்திராவிட்டால் இதற்குள் என்னை யமனுலகத்துக்கு அனுப்பியிருக்க மாட்டீர்களா?" என்று சொன்னார்.

பார்த்திபேந்திரன் வந்தியத்தேவனைக் கண்ணாலேயே கொன்று விடுகிறவனைப்போல் பார்த்துவிட்டு, "ஐயா! இந்தப் பாதகன் ஏதேதோ சொல்லித் தங்கள் மனத்தைக் கெடுத்து விட்டான். தங்களுக்கு நான் மனத்தினாலும் துரோகம் எண்ணியதாக இவன் நிரூபித்துவிட்டால், இந்தக் கணமே..." என்றான்.

"அப்பனே! உன் மனத்தில் எண்ணிய துரோகத்தை யார் எப்படி நிரூபிக்க முடியும்? நான் கேட்கும் கேள்விக்குப் பதில் பேச்சைக் கேட்டு மயங்கித்தானே என்னை இங்கே அழைத்து வர இவ்வளவு பிரயத்தனம் செய்தீர்கள்? இதை இல்லையென்று நீ மறுக்க முடியுமா?"

"அதை மறுக்கவில்லை, இளவரசே! மறுக்க வேண்டிய அவசியமும் இல்லை. பழுவூர் ராணி மிக நல்ல நோக்கத்துடனே இந்தக் காரியத்தில் தலையிட்டிருக்கிறார் என்பதை நான் நிச்சயமாய் அறிவேன். தங்களை இங்கு தருவித்துக் கந்தமாறனுடைய சகோதரியைத் தங்களுக்கு மணம் புரிவித்துச் சோழ நாட்டில் எவ்வித உட்கலகமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதே அவருடைய நோக்கம். தங்களுடைய சிரஸில் சோழகுலத்து மணி மகுடத்தை அணிந்து பார்ப்பதைக் காட்டிலும் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றுமில்லை. என்னை யாராவது குறை கூறினாலும் பொறுத்துக்கொள்வேன். பழுவூர் ராணியைப் பற்றி நிந்தை சொன்னால், அவனை அக்கணமே இந்த வாளுக்கிரை யாக்குவேன்!" என்று பார்த்திபேந்திரன் வந்தியதேவனைப் பார்த்துக்கொண்டே கூறி, அதே சமயத்தில் வாளையும் உறையிலிருந்து உருவினான்.

"ஆகா என் வீர நண்பா! வாளை உறையிலே போட்டு வை! நல்ல சமயம் வரும்போது சொல்கிறேன். அப்போது வெளியில் எடுக்கலாம். வந்தியத்தேவன் பழுவூர் ராணியைப் பற்றி ஒன்றும் குறை கூறவில்லை. அவனும் உங்களைப் போலத்தான் மதி மயங்கி நிற்கிறான். உண்மையில், பழுவூர் இளையராணி என் உடன்பிறந்த சகோதரி என்று சத்தியம் செய்து கொண்டிருக்கிறான். அதைச் சொல்வதற்காகவே ஓடோ டியும் வந்தான். உன் பேரில் அவன் வேறு குற்றம் சாட்டுகிறான். என் சகோதரனை நீ ஈழ நாட்டிலிருந்து உன் கப்பலில் அழைத்துக் கொண்டு வந்து வழியில் கடலில் தள்ளி மூழ்க அடித்துவிட்டாய் என்று அவன் சொல்கிறானே? அதற்கு உன் பதில் என்ன?" என்றார் ஆதித்த கரிகாலர்.

அந்தச் சமயத்தில், "நான் அதற்குப் பதில் சொல்கிறேன்!" என்று கூறிக் கொண்டே கந்தமாறன் அங்கு வந்தான்.

"கோமகனே! மிகச் சந்தோஷமான செய்தி கொண்டு வந்திருக்கிறேன். சின்ன இளவரசர் கடலில் முழுகிச் சாகவில்லை. பொன்னியின் செல்வர் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் இத்தனை நாளும் மறைந்து இருந்து வந்தாராம். புயல் அடித்துக் கடல் பொங்கி நாகைப்பட்டினம் நகரில் புகுந்த போது அவர் வெளிப்பட நேர்ந்ததாம். லட்சக்கணக்கான ஜனங்கள் புடை சூழ இப்போது தஞ்சாவூரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறாராம்!" என்று கந்தமாறன் குதூகலத்துடன் கூறினான்.

இந்தச் செய்தியினால் கரிகாலர் உற்சாகமடைவார் என்று, எதிர்பார்த்ததில் அவன் பெரும் ஏமாற்றமடைந்தான்.

கரிகாலருடைய குரோதம் இப்போது வேறு திசையில் திரும்பியது. "என்ன? என்ன? அருள்மொழி தஞ்சாவூரை நோக்கிப் போகிறானா? லட்சக்கணக்கான ஜனங்கள் புடை சூழப் போகிறானா? எதற்காக? வல்லவரையா? நீ என்ன சொன்னாய்? இப்போது நடப்பதென்ன? என்னுடைய கருத்தை அறிந்து கொள்ளும் வரையில் அருள்மொழி நாகைப்பட்டினத்திலேயே இருப்பான் என்று சொன்னாய் அல்லவா? இப்போது ஏன் தஞ்சாவூரை நோக்கிப் போகிறான்?..."

வந்தியத்தேவன் குறுக்கிட்டுப் பேசினான்:- "ஐயா! இளைய பிராட்டி அவ்வாறுதான் உறுதியாகக் கூறினார். அதற்குப் பின்னர் என்ன காரணம் நேர்ந்ததோ தெரியவில்லை. நான் வேணுமானால் போய்..."

"ஆகா! நீயும் போய்விடுகிறேன் என்கிறாயே? நல்லது நல்லது! எல்லாருமே என் விரோதிகள் ஆகிவிட்டீர்கள். உங்கள் சூழ்ச்சியெல்லாம் எனக்குத் தெரிகிறது. அருள்மொழி ஏன் தஞ்சாவூரை நோக்கிப் போகிறான் என்று எனக்குத் தெரியும். அது அந்தக் கொடும்பாளூர்ப் பெரிய வேளானின் சூழ்ச்சி. அவனுடைய தம்பி மகளை என் சகோதரன் கழுத்தில் கட்டி அவர்களைச் சோழ சிங்காதனத்தில் ஏற்றி வைக்க வேண்டுமென்பது அக்கிழவனுடைய விருப்பம். கொடும்பாளூர் வேளானும் தென்திசைப் படையுடன் தஞ்சையை நோக்கி வருவதாகக் கேள்விப்பட்டேன். என் சகோதரி இளையபிராட்டியும் இந்தச் சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கிறாள். ஆமாம்; நீயும் கூடத்தான்..."

வந்தியத்தேவன், "இளவரசே! மன்னியுங்கள்! பொன்னியின் செல்வருக்காவது, இளையபிராட்டிக்காவது அத்தகைய எண்ணம் சிறிதும் கிடையாது. இது சத்தியம், நான் வேணுமானால், போய் உண்மையை அறிந்து வருகிறேன்!" என்றான்.

"ஆமாம், நீயும் போய் அவர்களுடைய சூழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்கிறாய்! கந்தமாறா! இவனை உடனே பிடித்து இந்த அரண்மனையில் சுரங்கச் சிறை ஏதாவது இருந்தால் அதில் அடைத்துவிடு!" என்றதும் கந்தமாறன் வெகு குதூகலத்துடன் வந்தியத்தேவனை அணுகினான்.

உடனே கரிகாலர் தமது கட்டளையை மாற்றிக்கொண்டு, "வேண்டாம்! வேண்டாம்! சோழர் குலத்தவர்கள் நீதி தவறாதவர்கள். குற்றம் நிச்சயமாகிறவரையில் தண்டிக்க மாட்டார்கள். வல்லவரையா! இனிமேல் இன்று முழுவதும் என் முகத்தில் விழிக்காதே! அதுதான் உனக்குத் தண்டனை! உன்னைத் தஞ்சைக்கு அனுப்புகிறேனா, சிறைக்கு அனுப்புகிறேனா? என்பதைப் பற்றி நாளைக்குச் சொல்கிறேன் போ! போ! இனி ஒரு கணமும் இங்கே நில்லாதே! போய்விடு" என்றார்.

கரிகாலருடைய முகத்தை அப்போது வந்தியத்தேவன் பார்த்தான். அவருடைய கடைக் கண்ணின் சமிக்ஞை "இதெல்லாம் விளையாட்டு!" என்று குறிப்பிடுவதுபோல் தோன்றியது. ஆயினும் உன்மத்தம் கொண்டிருந்த இளவரசர் பக்கத்தில் இல்லாமலிருப்பதே நல்லது என்று ஒரு நொடியில் தீர்மானித்துக்கொண்டு வந்தியத்தேவன், "ஐயா, தங்கள் சித்தம் என் பாக்கியம்!" என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.

பின்னர் அன்று பிற்பகலில் இளவரசரின் கட்டளையின் பேரில் சம்புவரையரும், பார்த்திபேந்திரனும் திருக்கோவலூர்க் கிழாரை எதிர்கொண்டு அழைத்து வருவதற்காகப் போனார்கள் என்று வல்லவரையன் வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான்.

இளவரசரும், கந்தமாறனும் நெடுநேரம் அந்தரங்கமாக வார்த்தையாடிக் கொண்டிருந்ததையும் அறிந்தான்.

இந்தச் சம்பவங்களெல்லாம் வந்தியத்தேவனுக்கு மிக்க மனச்சோர்வை உண்டாக்கியிருந்தன. மறுநாள் காலையில் இளவரசர் தனக்கு என்ன கட்டளை பிறப்பிப்பார்? தஞ்சாவூருக்குப் போகும்படி பணிப்பாரா? வழியில் பழையாறைக்குப் போகும்படியும் சொல்வாரா? சொன்னால் எவ்வளவு நன்றாயிருக்கும்? இந்தக் கடம்பூர் மாளிகை வாழ்வு அவனுக்குப் பிடிக்கவே இல்லை. இங்கே யாரும் உற்சாகமாக இருப்பதில்லை. இங்கே உள்ளவர்கள் எல்லாரும் எப்போதும் எதையோ பறி கொடுத்தவர்களைப் போலிருக்கிறார்கள். அஸ்தமித்து விட்டால் இந்த மாளிகை, மனிதர்கள் வாழும் மாளிகையாகவே தோன்றவில்லை. பேய் பிசாசுகள் குடி கொண்டிருக்கும் பாழடைந்த மாளிகையாகத் தோன்றுகிறது. இங்கேயிருந்து எப்போது, எப்படிக் கிளம்பப் போகிறோம்?...

இப்படி வந்தியத்தேவன் எண்ணமிட்டபோது ஒரு பெண்ணின் குரல், "ஐயோ பிசாசு!" என்று அலறியது அவன் காதில் விழுந்தது.




Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 33. "ஐயோ! பிசாசு!"
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 8. "ஐயோ! பிசாசு!"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 65. "ஐயோ, பிசாசு!"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 52. விடுதலைக்குத் தடை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: