BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  44. மலைக் குகையில் Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 44. மலைக் குகையில்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  44. மலைக் குகையில் Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 44. மலைக் குகையில்   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  44. மலைக் குகையில் Icon_minitimeWed Jun 08, 2011 3:38 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

44. மலைக் குகையில்



கொள்ளிடத்தின் தென்கரையை அடைந்ததும் ஆழ்வார்க்கடியான் மேற்றிசையை நோக்கிப் போனான். கொள்ளிடத்தின் உடைப்பினால் எங்கும் வெள்ளக் காடாக இருந்ததைப் பார்த்தான். ஆயினும் கொள்ளிடத்தில் தண்ணீர் மட்டம் குறைந்து வந்ததைப் போல் உடைப்பினால் தண்ணீர் பரவியிருந்த இடங்களிலும் வேகமாகத் தண்ணீர் வடிந்து கொண்டு வந்தது. கடைசியாகத் திருப்புறம்பயத்தை அடைந்தான். அந்த ஊர் மட்டும் அவ்வளவு வெள்ளத்தினாலும் பாதிக்கப்படாமல் இருந்ததைப் பார்த்து வியந்தான். ஆதிகாலத்தில் உலகமே பிரளயத்தில் ஆழ்ந்தபோது திருப்புறம்பயம் மட்டும் தண்ணீரில் முழுகாமலிருந்தது என்னும் வரலாறு இதனாலே தான் ஏற்பட்டது போலும் என்று எண்ணிக் கொண்டு பள்ளிப்படைக் காட்டை நெருங்கினான். அங்கே புயலினால் பல மரங்கள் சாய்ந்து விழுந்திருந்த போதிலும் அவன் ஒளிந்து பார்ப்பதற்கு வேண்டிய அடர்த்தியில்லாமற் போகவில்லை. அவ்விதம் பார்த்தபோது, பள்ளிப்படைக் கோயில் வாசலில் ஆண்கள் மூவரும், ஒரு ஸ்திரீயும் நின்று பேசுவது தெரிந்தது. நன்றாய் உற்றுப் பார்த்தபோது, எல்லாரும் அவனுக்கு முன்னாலே தெரிந்தவர்கள் என்று அறிந்தான். அதே பள்ளிப்படைக் காட்டில் முதன் முதலில் சதியாலோசனைக்காகக் கூடியவர்களில் இந்த மூன்று ஆண்பிள்ளைகளும் இருந்தார்கள். ஒருவன் சோமன் சாம்பவன், இன்னொருவன் கிரமவித்தன், மூன்றாவது ஆள் இடும்பன்காரி, ஸ்திரீ படகோட்டி முருகய்யனுடைய மனைவி. அவர்களில் இடும்பன்காரி மற்றவர்களுக்கு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அச்செய்தி அவர்களுக்கு உற்சாகத்தை அளித்ததாகத் தெரிந்தது. "சரி ! அப்படியானால் நாமும் பச்சைமலை அடிவாரத்துக்கு உடனே புறப்படலாம். போய்ச்சேர இரண்டு நாள் பிடிக்கும்" என்று சோமன் சாம்பவன் கூறியது ஆழ்வார்க்கடியான் காதில் விழுந்தது.

அவர்களுக்கு முன்னால் தான் அங்கிருந்து புறப்பட்டு விடலாம் என்று எண்ணி ஆழ்வார்க்கடியான் திரும்பினான். அவனுடைய மார்புக்கு நேரே சிறிய கத்தியைக் கண்டு திடுக்கிட்டான். அதைப் பிடித்திருந்த கை பூங்குழலியின் கை என்று தெரிந்தது. திகைப்பு நீங்கியது. இருவரும் ஒருவரையொருவர் தெரிந்து புன்னகையினால் தங்களின் வியப்பைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

சதிகாரர்கள் அங்கிருந்து போய்விட்டார்கள் என்று தெரிந்த பிறகு ஆழ்வார்க்கடியான், பூங்குழலி! தஞ்சாவூரிலிருந்து நீ எப்படி இங்கே வந்தாய்? எதற்காக வந்தாய்?" என்று கேட்டான்.

"பழி வாங்குவதற்காக வந்தேன்" என்றாள் பூங்குழலி.

"என்ன பழி? எதற்காக?"

"இவர்களிலே ஒருவன் என் அத்தையைக் கொன்றுவிட்டு ஓடி வந்த பாதகன். அப்பாதகனை விடாமல் பின்தொடர்ந்து இவ்விடத்தில் வந்து பிடித்தேன். இங்கே இன்னும் மூன்று பேர் அவனுக்கு முன்னால் வந்திருந்தார்கள். அதிலும் என் அண்ணன் மனைவியை அவர்களுடன் பார்த்ததும் திகைத்துப்போனேன்! அதற்குள் நீ ஒருவன் வந்து குறுக்கிட்டாய்! இப்போது என்ன செய்யலாம்? நீ எனக்கு உதவி செய்வதாயிருந்தால், இவர்களை விடாமல் தொடர்ந்துபோய் என் அத்தையைக் கொன்றவனைக் கொன்றுவிட்டு வருவேன்!" என்றாள்.

"ஐயோ! பாவம்! உன் அத்தை என்றால், அந்த ஊமை ராணி மந்தாகினிதானே? அவளை எதற்காக இவர்களில் ஒருவன் கொன்றான்?" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.

"அத்தையைக் கொல்லவேண்டும் என்று நினைத்துக் கொல்லவில்லை. சக்கரவர்த்தியைக் கொல்ல நினைத்து அவர் மேல் எறிந்த வேலை என் அத்தை தாங்கிக் கொண்டாள்!" என்றாள்.

"ஓகோ! அப்படியா? ஊமை ராணி தன் உயிரைக் கொடுத்துச் சக்கரவர்த்தியைக் காப்பாற்றினாளா? இதெல்லாம் எப்படி நடந்தது? சற்று விவரமாகச் சொல், கேட்கலாம்!"

"விவரமாகச் சொல்லுவதற்கு இதுதானா சமயம்? அவர்கள் தப்பித்துக்கொண்டு போய்விடுவார்களே?"

"பூங்குழலி! அவர்கள் போகுமிடம் எனக்குத் தெரியும். எதற்காக, யாரைச் சந்திப்பதற்காகப் போகிறார்கள் என்றும் ஊகித்துக் கொண்டேன். வழியிலே அவர்களைத் தடை செய்யாமலிருப்பதே நல்லது. அவர்கள் போகுமிடத்துக்கு நாமும் போகலாம். அங்கே நான் தெரிந்துகொள்ள விரும்புவதைத் தெரிந்துகொண்ட பிறகு, நீ உன் பழியை முடித்துக் கொள்ளலாம்" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"அப்படியானால் புறப்படு! போகும் போதே தஞ்சாவூரில் நடந்ததையெல்லாம் உனக்கு விவரமாகச் சொல்கிறேன்!" என்றாள் பூங்குழலி.

இருவரும் கொள்ளிடத்தைப் படகின் மூலமாகக் கடந்து அக்கரை அடைந்தார்கள். வடமேற்குத் திசையை நோக்கிப் பிரயாணம் செய்தார்கள். மூன்று தினங்கள் இரவும் பகலும் பிரயாணம் செய்த பின்னர், பச்சை மலையின் அடிவாரத்தை அடைந்தார்கள். அந்த அடிவாரத்தில் அடர்ந்த காடு மண்டிக் கிடந்தபடியால் இவர்கள் தேடிச் சென்றவர்கள் எங்கே இருக்கக் கூடும் என்பதை இலேசில் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வளவு பிரயாசையுடன் பிரயாணம் செய்து வந்ததே வீணாகிவிடுமோ என்று மனச் சோர்வு அடைந்தார்கள்.

திடீர் என்று ஆந்தையின் குரல் ஒன்று கேட்டது. பதிலுக்கு மற்றொரு குரல் அதே மாதிரி கேட்டது. ஆழ்வார்க்கடியானுடைய முகம் மலர்ந்தது. பூங்குழலிக்குச் சமிக்ஞை மூலமாகப் பேசாமல் தன்னுடன் வரும்படி தெரிவித்தான். ஆந்தைகளின் குரல் கேட்ட இடத்தில் இடைவெளி தென்பட்டது. அங்கே ஏழெட்டுப் பேர் இருந்தார்கள். சிலர் நெருப்பு மூட்டிச் சமையல் செய்து கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். முன்னமே அங்கு இருந்தவர்களும் புதிதாக வந்து சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் ஏதோ வியப்பான செய்தி சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்று தெரிந்தது.

முன்னமே அங்கிருந்தவர்களில் ரவிதாஸனும் ஒருவன். அவன் அப்போது புதிதாக அங்கே வந்து சேர்ந்தவர்களுக்குச் சற்றுத் தூரத்தில் இருந்த மலைக்குகையொன்றைச் சுட்டிக் காட்டி ஏதோ தெரிவித்துக் கொண்டிருந்தான். இதை ஆழ்வார்க்கடியான் கவனித்துக் கொண்டான். மெல்லிய குரலில், "பூங்குழலி! நான் தேடி வந்தவர்கள் அந்த குகைக்குள்ளேதான் இருக்கவேண்டும். நான் மெள்ளக் குகைக்குள்ளே நுழைந்து பார்க்கிறேன். இவர்களில் யாராவது குகையை நெருங்கி வந்தால் நீ ஒரு குரல் கொடு!" என்றான்.

"ஆந்தை கத்துவது போல் என்னால் கத்த முடியாது. குயில் கூவுவதுபோலக் கூவுகிறேன்" என்றாள் பூங்குழலி.

மலைக் குகைக்குள்ளே காற்றும், வெளிச்சமும் நுழைவதற்காகச் சில பெரிய துவாரங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆகையால் உள்ளே வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் ஆழ்வார்க்கடியான் ஓர் அபூர்வமான காட்சியைக் கண்டான். பெரிய பழுவேட்டரையர் காளாமுகச் சாமியார்களைப் போல் புலித்தோல் உடை தரித்திருந்தார். அவர் பக்கத்தில் மண்டை ஓட்டு மாலை கிடந்தது. அவர் உடம்பிலிருந்து ரத்தம் மிகச் சேதமாகியிருக்க வேண்டும் என்று அவர் முகம் வெளுத்துப் போயிருந்ததிலிருந்து ஊகிக்கும்படியிருந்தது. தரையிலே படுத்திருந்தவர் அப்போதுதான் சுய நினைவு பெற்று எழுந்து உட்கார முயன்றதாகத் தோன்றியது. ஏதோ பயங்கர சொப்பன உலகிலிருந்து அப்போதுதான் விழித்தெழுந்தவர் போல் காணப்பட்டார். அவருடைய கண்கள் திருதிருவென்று விழித்தன.

அவர் பக்கத்தில் நந்தினி இருந்தாள். அவள் ஆபரண அலங்காரங்கள் கலையப் பெற்றுத் தலைவிரி கோலமாக இருந்தாள். ஆயினும் அவளுடைய வசீகர சௌந்தரியம் முன்னைவிடப் பன்மடங்கு அதிகமாகப் பிரகாசித்தது. அன்பும் ஆதரவும், பரிதாபமும் பச்சாத்தாபமும், ததும்பிய குரலில், "ஐயா! இந்தக் கஞ்சியை அருந்துங்கள்!" என்று கூறிக் கொண்டே ஒரு மண் பாத்திரத்தை அவரிடம் நீட்டிக் கொண்டிருந்தாள்.

பழுவேட்டரையர் அவளைத் திரும்பிப் பார்த்தார். அவர் முகத்தில் ஒரு கணநேரம் எல்லையற்ற இன்பத்துக்கு அறிகுறியான புன்னகை மலர்ந்தது.

"நந்தினி! என் பேரரசி! நீதானா இப்போது பேசினாய்? உன் குரல்தானா இது? நாம் இப்போது எங்கே இருக்கிறோம்? மரணத்தின் வாசலுக்குச் சென்றிருந்த என்னை நீயா திரும்பக் கொண்டுவந்து சேர்த்தாய்? அன்று சாவித்திரி சத்தியவானுக்குச் செய்ததை இன்று நீ எனக்குச் செய்தாயா? எனக்கு நினைவு வந்த போது உன்னுடைய மலர்க் கையினால் என்னுடைய மார்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியதே! அது உண்மையா? மூன்று ஆண்டு காலமாக என்னைத் தொடவும் மறுத்தவள் கடைசியாக மனமிரங்கி விட்டாயா? எங்கே? கொடு! கஞ்சியைக் கொடு! உன் கையினால் கஞ்சி கொடுத்தால் அதுவே எனக்குத் தேவாமிர்தமாகும்!" என்றார்.

இவ்விதம் சொல்லிக்கொண்டே நந்தினியின் கையிலிருந்த மண்பாண்டத்தை வாங்கிக் கொண்டவர் திடீரென்று அவளை வெறித்துப் பார்க்கத் தொடங்கினார்! அடியோடு மாறிப்போன பயங்கரமான குரலில், "அடி பாதகி! ராட்சஸி! நீதானா? என்னைத் தொடுவதற்கு உனக்குத் தைரியம் வந்ததா? என் நெஞ்சில் கத்தியால் குத்தப் பார்த்தாயா? அப்போது நான் விழித்துக் கொண்டேனா? இந்தப் பாத்திரத்தில் இருப்பது உண்மையில் கஞ்சிதானா? அல்லது என்னைக் கொல்லுவதற்கான நஞ்சா? உன் கையால் கொடுப்பது தேவாமிர்தமானாலும் எனக்கு அது விஷமல்லவோ?" என்று கூறிவிட்டு அம்மண்பாண்டத்தை வீசி எறிந்தார். அது தடாலென்று குகைச் சுவரில் மோதிச் சுக்கு நூறாகிச் சிதறி விழுந்தது







Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 44. மலைக் குகையில்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 43. பழையாறை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 30. குற்றச்சாட்டு
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 11. திடும்பிரவேசம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: