arun. Administrator
Posts : 2039 Points : 6412 Join date : 2010-06-22
| Subject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 53. வானதியின் யோசனை Fri Jun 10, 2011 3:47 am | |
| கல்கியின் பொன்னியின் செல்வன்
ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்
53. வானதியின் யோசனை அருள்மொழிவர்மருக்கும் சிற்றரசர்கள் இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தைக் கேட்டுக் கொண்டு நின்ற குந்தவை தேவி இப்போது சற்று முன் சென்று, "தாத்தா! மாமா! வாசலில் நின்றே பேசவேண்டுமா? உள்ளே வாருங்கள்! உங்கள் பேச்சை மீறிப் பொன்னியின் செல்வன் ஒன்றும் செய்துவிட மாட்டான்" என்றாள்.
மலையமானும், வேளாரும் உள்ளே வந்தார்கள். இளைய பிராட்டியைப் பார்த்து வேளார், "தாயே! இளவரசர் மட்டும் பட்டத்தை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தால் ஒரு தொல்லையும் இல்லை. அவருடைய கட்டளையை நாங்கள் நிறைவேற்ற வேண்டியவர்களாவோம். சக்கரவர்த்தியோ இராஜ்யத்தை எப்போது இறக்கி வைப்போம் என்று இருக்கிறார். காஞ்சியில் கரிகாலர் கட்டியுள்ள பொன் மாளிகைக்குப் போய்த் தம்முடைய கடைசிக் காலத்தை நிம்மதியாகக் கழிக்க விரும்புகிறார்!" என்றார்.
"மாமா! நீங்கள் இருவரும் வந்தபோது நானும் இளவரசரிடம் அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். இந்தப் பெண் இடையில் வந்து முறையிட்டாள். அதைக் கேட்டு இளவரசர் மனமிரங்கிச் சிறைக்குப் போய் அவரை விடுதலை செய்ய விரும்பினார்..."
"இந்த பெண் யார்? எதற்காக இவள் இப்படி விம்மி விம்மி அழுகிறாள்?" என்று வேளார் கேட்டார்.
"தெரியவில்லையா, மாமா? இவள் தான் சம்புவரையர் மகள் மணிமேகலை..."
"ஓகோ! சம்புவரையர் சிறையில் இருப்பதை எண்ணி அழுகிறாளாக்கும். அழவேண்டாம் பெண்ணே! உன் தந்தையை விடுதலை செய்து அழைத்து வரும்படி சக்கரவர்த்தி கட்டளை பிறப்பித்து விட்டார். பாதாளச் சிறைக்குப் பார்த்திபேந்திர பல்லவன் போயிருக்கிறான்!" என்றார் மலையமான்.
"தாத்தா! இவள் தன் தந்தையைப் பற்றி மட்டும் கவலைப்படவில்லை. வாணர் குலத்து வீரரைப் பற்றிக் கவலைப்படுகிறாள். அவரை விடுதலை செய்யுங்கள். 'இளவரசரை நான்தான் கொன்றேன்' என்று புலம்புகிறாள்!" என்றாள் இளைய பிராட்டி.
"ஓகோ! அப்படி இவள் சொல்லுவதாயிருந்தால் இவளையும் வேண்டுமானால் பாதாளச் சிறையில் கொண்டு போய் அடைத்து விடுவோம். வல்லத்து இளவரசனை விடுவிக்க முடியாது!" என்றார் பெரிய வேளார்.
மணிமேகலை விம்மிக் கொண்டே குந்தவையைப் பார்த்து, "அதுதான் நான் கோருவதும் இளவரசி! என்னையும் அவர் இருக்குமிடத்தில் கொண்டு போய் அடைக்கச் சொல்லுங்கள்!" என்றாள்.
சேனாதிபதி வேளார் தமது நெற்றியை விரலால் தொட்டுச் சுட்டிக்காட்டி, மெல்லிய குரலில், "இந்தப் பெண்ணுக்குச் சித்தம் பேதலித்து விட்டதாகக் காண்கிறது!" என்று கூறினார்.
இதுவரை சும்மா இருந்த வானதி இப்பொழுது பேச்சில் குறுக்கிட்டு, "பெரியப்பா! மணிமேகலையின் சித்தம் சரியாகத் தான் இருக்கிறது. உங்களுக்கும், திருக்கோவலூர்ப் பாட்டனுக்கும்தான் சித்தம் சரியாக இல்லை என்று தோன்றுகிறது. சிறையில் உள்ள வல்லத்திளவரசர் பொன்னியின் செல்வருடைய அருமைத் தோழர். இளைய பிராட்டியிடமிருந்து ஓலை கொண்டுபோய் இலங்கையிலிருந்து பொன்னியின் செல்வரை அழைத்து வந்தவர். வீர சொர்க்கம் அடைந்த இளவரசருடைய பூரண நம்பிக்கைக்கும் பாத்திரமாயிருந்தவர். அவர் மீது குற்றம்சாட்டிச் சிறையில் வைத்திருப்பவர்களுக்குத்தான் சித்தம் கோளாறாக இருக்க வேண்டும்!" என்றாள்.
"ஆகா! இந்தப் பெண் எப்போது இவ்வளவு வாயாடி ஆனாள்? வானதி! இளைய பிராட்டியிடமிருந்து நீ கற்றுக் கொண்டது இதுதானா? பெரியவர்கள் முன்னால் வாயைத் திறக்காமல் சும்மா இருப்பதற்கு நீ இன்னும் பயிலவில்லையா? உன்னை ஏதாவது கேட்டால் பதில் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும்!" என்றார் பெரிய வேளார்.
மலையமான், "சேனாதிபதி! இந்தக் குழந்தையின் மீது ஏன் கோபித்துக் கொள்கிறீர்கள்? இங்கே உள்ளவர்கள் மனத்தில் உள்ளதையே இவள் வெளியிட்டாள்!" என்றார்.
குந்தவை, "ஆம்! மாமா! வானதியை நீங்களும் நானும் இனி விரட்ட நினைப்பது உசிதமாயிராது. நாளைக்கு அவள் சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினியாகிச் சிம்மாசனத்தில் அமர்வாள். அப்போது அவளுடைய கட்டளையைத் தாங்களும் நானும் நிறைவேற்ற வேண்டியதாகும்!" என்றாள்.
"அருள்மொழி மட்டும் இதற்கு இசைந்தால் ஒரு தொல்லையும் இல்லையே? மகுடாபிஷேகத்தன்று பாதாளச் சிறையில் உள்ளவர்கள் அத்தனை பேரையும் விடுதலை செய்யும்படி கட்டளையிடலாமே?" என்றார் மலையமான்.
"தங்களையும் என்னையும் வெளியில் உள்ளவர்கள் அத்தனை பேரையும் பாதாளச் சிறையில் பிடித்துப் போடும்படியும் கட்டளையிடலாம்!" என்றார் சேனாதிபதி பெரிய வேளார்.
"ஐயா! நீங்கள் இருவரும் பெரியவர்கள். உங்களை மறுத்துப் பேச வேண்டியிருக்கிறதே என்று வருத்தப்படுகிறேன். ஆயினும் அவசரமாகச் செய்ய வேண்டிய காரியத்தை விட்டு விட்டு ஏதேதோ பேசுகிறீர்கள்!" என்று இளவரசர் கூறுவதற்குள் சேனாதிபதி, "இளவரசே! சோழ நாட்டின் பட்டத்து உரிமையை நிர்ணயித்துக் குழப்பம் நேரிடாமல் தடுப்பது மிகவும் அவசரமான காரியம் அல்லவா?" என்றார்.
"சக்கரவர்த்தி ஒருவர் இருக்கிறார் என்பதையே மறந்து விட்டுப் போகிறீர்கள்!" என்றார் அருள்மொழி.
"நாங்கள் மறக்கவில்லை. சற்றுமுன் சக்கரவர்த்தியைப் பார்த்துவிட்டுத்தான் திரும்பினோம். அவர்தான் இராஜ்யப் பிரச்னையைத் தீர்த்து வைத்து விட்டுக் காஞ்சியில் கரிகாலர் கட்டிய பொன் மாளிகையில் போய் வசிக்கப் பிரியப்படுகிறார்."
"இதோ நான் சக்கரவர்த்தியிடம் போகிறேன். வந்தியத்தேவரின் விடுதலைக்குக் கட்டளை வாங்கிக் கொண்டு வருகிறேன். பிறகு, நீங்கள் ஆட்சேபிக்க மாட்டீர்கள் அல்லவா?"
"இளவரசே! சக்கரவர்த்தியிடம் தாங்கள் வந்தியத்தேவனைப் பற்றிப் பிரஸ்தாபிப்பதே உசிதம் அன்று. பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுடனும், நந்தினி தேவியுடனும் சேர்ந்து சதி செய்து வந்தியத்தேவன் தான் கரிகாலரைக் கொன்றிருக்க வேண்டும் என்று சக்கரவர்த்தி கருதுகிறார்..."
"ஆகா! அந்த எண்ணத்தை உண்டாக்கியது யார்?"
"நாங்கள் அல்ல, இளவரசே! பார்த்திபேந்திரன் தான் அந்த நம்பிக்கையை சக்கரவர்த்திக்கு உண்டாக்கியவன்..."
"அப்படியானால் பல்லவரையே நான் போய்ப் பார்க்கிறேன். எந்த ஆதாரத்தைக் கொண்டு அம்மாதிரி குற்றம் சாட்டுகிறார் என்று கேட்கிறேன்."
"பார்த்திபேந்திர பல்லவனைத் தாங்கள் இப்போது சந்திக்க முடியாது. சக்கரவர்த்தியின் கட்டளையுடன் அவன் சம்புவரையரை விடுதலை செய்து கொண்டு குடந்தைக்குப் போயிருக்கிறான். அங்கே பழுவேட்டரையரையும் மற்றச் சிற்றரசர்களையும் சந்தித்துப் பேசி உடனே அவர்களை அழைத்து வரும்படி சக்கரவர்த்தி சொல்லி அனுப்பியிருக்கிறார். இராஜ்ய உரிமையைப் பற்றி சமரசமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்ற செய்தி அனுப்பி இருக்கிறார். மதுராந்தகருக்கே பட்டம் கட்டச் சம்மதம் என்றும் தெரியப்படுத்தியிருக்கிறார்."
பொன்னியின் செல்வர் முக மலர்ச்சியுடன் இளைய பிராட்டியையும், வானதியையும் பார்த்துவிட்டு, "ரொம்ப நல்ல செய்தி சொன்னீர்கள்" என்றார்.
"கொஞ்சங்கூட நல்ல செய்தி அல்ல. குடிகளின் விருப்பத்துக்கும், போர் வீரர்களின் கருத்துக்கும் மாறாக, என்று மதுராந்தகன் சோழ சிங்காதனம் ஏறுகிறானோ, அன்றைக்கே நூறு ஆண்டுகளாக மேன்மை பெற்று வளர்த்த சோழ சாம்ராஜ்யத்துக்கு விநாசகாலம் ஆரம்பமாகும்" என்றார் சேனாதிபதி.
"அதில் சந்தேகமே இல்லை; ஈழ நாட்டிலிருந்து வட பெண்ணை நதி வரையில் குழப்பமும் கலகமும் தொடங்கும்" என்றார் மலையமான்.
"அதற்கெல்லாம் நீங்கள் இருவருமே தலைமை வகித்து நடத்துவீர்கள் போலிருக்கிறது, அது உங்கள் இஷ்டம். அதற்குள் நான் சக்கரவர்த்தியிடம் விண்ணப்பம் செய்து வந்தியத்தேவரை விடுதலை செய்யப் பார்க்கிறேன்!" என்று அருள்மொழிவர்மர் அங்கிருந்து வெளியேறுவதற்காகத் திரும்பினார்.
"இளவரசே! சக்கரவர்த்தியிடம் தாங்கள் இந்தக் கோரிக்கையுடன் போக வேண்டாம். அதனால் பெரும் விபரீதம் விளையும், தேவீ! தங்கள் தம்பியைத் தடுத்து நிறுத்துங்கள்!" என்றார் சேனாதிபதி பெரிய வேளார்.
"ஆம், குழந்தாய்! வயது சென்ற இந்தக் கிழவன் சொல்வதைக் கேள்!" என்றார் மிலாடுடையர்.
"அதனால் என்ன விபரீதம் நடந்துவிடும் என்று கருதுகிறீர்கள்?" என்று குந்தவை கேட்டாள்.
"யாரோ சில பாதகர்கள் ஒரு பொய்யான வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். அதைச் சொல்லவும் வாய் கூசுகிறது. பொன்னியின் செல்வர் தாம் இராஜ்யம் ஆளும் ஆசையினால் வந்தியத்தேவனை அனுப்பிக் கரிகாலரைக் கொல்லச் செய்ததாக நேற்று நம் சேனா வீரர்களிடம் இரண்டு பேர் வந்து சொன்னார்கள்..."
"தெய்வமே! இது என்ன பயங்கரமான அபவாதம்?" என்றாள் இளைய பிராட்டி குந்தவை.
"அந்த இருவரையும் நம் வீரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? வடவாற்று வெள்ளத்தில் அமுக்கி அமுக்கி எடுத்துக் கொண்டிருந்தார்கள். நான் தற்செயலாக அங்கே போய் அவர்களைக் காப்பாற்றினேன்..."
பொன்னியின் செல்வர் குறுக்கிட்டு, "இவ்வளவு கொடூரமான அபவாதத்தைச் சோழ நாட்டில் யாரும் நம்பப் போவதில்லை. நம் வீரர்களின் செய்கையிலிருந்தே தெரியவில்லையா?" என்றார்.
"இன்றைக்கு நம்பமாட்டார்கள், இளவரசே! மக்களுடைய இயல்பு தங்களுக்கு தெரியாது. சில காலத்துக்குப் பிறகு மறுபடியும் இந்த வதந்தி கிளம்பும். தங்களை அறியாதவர்கள் சிலர் நம்பக் கூடும். அன்னிய நாடுகளில் இராஜ்யத்துக்காக உறவினர்கள் ஒருவரை ஒருவர் கொன்று கொள்வது சர்வ சாதாரணமாயிருக்கிறது. ஈழ நாட்டு இராஜ வம்சத்தின் சரித்திரம் தங்களுக்குத் தெரியுமே?"
"சேனாதிபதி! பிற்காலத்தில் ஒரு பொய் வதந்தி பரவும் என்பதற்காக இன்றைக்கு என் பிராண சிநேகிதனைப் பாதாளச் சிறையில் விட்டு வைத்திருக்கச் சொல்கிறீர்களா?"
"பிற்காலத்தில் அல்ல, இளவரசே! இன்றைக்குத் தாங்கள் வந்தியத்தேவனின் விடுதலையில் ஊக்கம் எடுத்துக் கொண்டால் நாளைக்கே சிலர் அந்த வதந்தியில் நம்பிக்கை கொள்வார்கள். சக்கரவர்த்தியின் காதிலும் அது விழும் அதனால் தங்கள் தந்தையின் மனம் எவ்வளவு புண்படும் என்று யோசியுங்கள்!"
பொன்னியின் செல்வரின் திருமுகம் கருமேகத்தினால் மறைக்கப்பட்ட பூரண சந்திரனைப் போல் ஆயிற்று. குந்தவை தேவியைப் பார்த்து, "அக்கா! தாங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றார்.
இளைய பிராட்டியின் முகம் மிக்க வேதனையைக் காட்டியது. அவர் பெரிய வேளாரைப் பார்த்து, "சேனாதிபதி! இத்தகைய கொடூரமான வதந்தியைப் பரப்ப முயலுவோர் யாராயிருக்கும்?" என்று கேட்டார்.
"வடவாற்றில் நம் வீரர்கள் முழுக்கி முழுக்கி எடுத்துக் கொண்டிருந்தவர்களை நான் தனியே அழைத்துக் கொண்டு போய் அவர்களை நயத்திலும், பயத்திலும் கேட்டேன். சம்புவரையர் மகன் கந்தமாறன் தான் இவ்விதம் சொல்லி அனுப்பியதாகக் கூறினார்கள்."
அப்போது மணிமேகலை முன் வந்து, "என் தமையன் காரியத்துக்காக நான் வெட்கப்படுகிறேன். நல்லவனாயிருந்த என் அண்ணன் பழுவூர் இளைய ராணியின் போதனையினால்தான் இப்படிப் பாதகனாகி விட்டான். உண்மையில் ஆதித்த கரிகாலரைக் கொன்றவள் நான். என்னைச் சிறைப்படுத்துங்கள்! வல்லத்திளவரசரை உடனே விடுதலை செய்யுங்கள்!" என்று ஆத்திரமும் அழுகையும் பொங்கக் கூறினாள்.
இளைய பிராட்டி அவளுடைய முதுகை அன்புடன் தொட்டு, "மணிமேகலை! சாந்தமாயிரு! நீ இவ்விதம் சொல்வதை யாரும் நம்பமாட்டார்கள். மேலும் ஏதேனும் அபவாதத்தைக் கிளப்புவார்கள். இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு வழி கண்டுபிடிக்கலாம்" என்றாள்.
பிறகு சேனாதிபதியைப் பார்த்து, "ஐயா! தங்களுடைய புத்திமதியை நானும் என் சகோதரனும் ஒப்புக் கொள்கிறோம். இப்போது வல்லத்திளவரசரை விடுதலை செய்ய முயல்வதால் வீண் வதந்திகள் ஏற்பட இடமுண்டு என்பது உண்மைதான். உண்மையான குற்றவாளியை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இதைக் குறித்து முதன்மந்திரி அநிருத்தரிடம் நான் கலந்தாலோசிப்பேன். அவருடைய சீடன் ஆழ்வார்க்கடியான் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளைத் தேடிக் கொண்டு போயிருக்கிறான். அவன் ஏதேனும் தகவல் கொண்டு வருவான். பெரிய பழுவேட்டரையரும், பழுவூர் இளைய ராணியும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் உண்மை வெளியாகலாம். அதற்கிடையில் நான் இந்தப் பெண்ணிடம் கடம்பூரில் நடந்ததையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்! அதுவரையில் பாதாளச் சிறையில் வல்லத்திளவரசர் சௌகரியமாயிருப்பதற்கு வேண்டிய ஏற்பாடு செய்யுங்கள். அவர் இந்தப் பயங்கரமான கொலைக் குற்றத்தைச் செய்யவில்லை என்பது நிச்சயம்!" என்றாள்.
இச்சமயத்தில், "எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது; அக்கா?" என்றாள் கொடும்பாளூர் இளவரசி.
"சொல் வானதி!" என்றாள் குந்தவை.
"முன்னொரு தடவை நாம் இருவரும் பாதாளச் சிறைக்குப் போய்விட்டு வந்தோமே, நினைவிருக்கிறதா? அதுபோல் நாம் எல்லாருமாக இன்றைக்குப் போய்ப் பார்த்துவிட்டு வருவோம். கடம்பூர் இளவரசியையும் அழைத்துப் போவோம்!" என்றாள் வானதி.
குந்தவை பெரிய வேளாரைப் பார்த்து, "சேனாதிபதி! தங்கள் குமாரியின் யோசனையைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டாள்.
"என் குமாரியும் புத்திசாலித்தனமாகப் பேசக் கூடும் என்று தெரிகிறது. கரிகாலர் இறந்த அன்றிரவு அதே இடத்தில் அவருடன் இருந்தவன் வல்லத்திளவரசன். அவனிடம் விசாரித்தாலும் உண்மை புலப்படலாம்" என்றார் சேனாதிபதி பெரிய வேளார்.
உடனேயே எல்லாரும் பாதாளச் சிறைக்குச் சென்றார்கள். சின்னப் பழுவேட்டரையர் கோட்டையை விட்டுப் போவதற்கு முன்னாலேயே தங்க நாணயங்கள் அச்சிடும் வேலையை நிறுத்தி விட்டார். ஆகையால் நாணயத் தொழிற்சாலை வெறுமையாக இருந்தது. காவற்காரர்களும் சிலர்தான் இருந்தார்கள். புலிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தைத் தாண்டிச் சுரங்க வழியில் பிரவேசித்துச் சென்று வல்லத்திளவரசன் வந்தியத்தேவன் அடைக்கப்பட்டிருந்த அறையை அடைந்தார்கள்.
ஆனால் அங்கே வந்தியத்தேவனை அவர்கள் காணவில்லை! அவனுடைய அறையில் சுவரில் மாட்டியிருந்த வளையங்களில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த வைத்தியர் மகன் பினாகபாணியைக் கண்டார்கள். அவன் இவர்களைக் கண்டதும் "ஐயோ! ஐயோ! என்னை விடுதலை செய்யுங்கள், விடுதலை செய்யுங்கள்!" என்று பரிதாபமாக அலறினான்! | |
|