BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  67. "மண்ணரசு நான் வேண்டேன்" Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 67. "மண்ணரசு நான் வேண்டேன்"

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  67. "மண்ணரசு நான் வேண்டேன்" Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 67. "மண்ணரசு நான் வேண்டேன்"   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  67. "மண்ணரசு நான் வேண்டேன்" Icon_minitimeMon Jun 13, 2011 3:43 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

67. "மண்ணரசு நான் வேண்டேன்"



பழுவேட்டரையர்கள் முதலான குறுநில மன்னர்களின் ஊர்வலம் அப்பால் சென்றதும், ஆழ்வார்க்கடியான் தன் ஆட்களுடனே சேந்தன் அமுதனுடைய பூந்தோட்டத்தை நோக்கி நடந்தான். பூந்தோட்டத்துக்குச் சமீபத்தில் ஒரு மரத்தடியில் சற்று மறைவாக மதுராந்தகத் தேவரின் சிவிகையும், அதைத் தூக்கும் ஆட்களும் நின்றார்கள். அவர்களிடம் விசாரித்து இளவரசர் கட்டளைப்படி அவர் திரும்பி வருவதற்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்ததை அறிந்துகொண்டான். பின்னர் மேலே சென்று பூந்தோட்டத்துக்குள் புகுந்தான். தன்னுடன் வந்தவர்களிடம் மெல்லிய குரலில் அத்தோட்டமெல்லாம் சுற்றித் தேடிப் பார்க்கும்படி கூறிவிட்டுத் தான் மட்டும் குடிசை வாசலில் போய் நின்று கொண்டான். உட்புறம் தாளிட்டிருந்த கதவண்டை காதை வைத்து ஒட்டுக் கேட்கலானான். சேந்தன் அமுதனும் பூங்குழலியும் கவலையுடன் பேசிக் கொள்ளும் குரல்கள் கேட்டன. இடையிடையே யாரோ ஒருவர் மரணாவஸ்தையில் முனகுவது போன்ற சத்தமும் கேட்டது.

தோட்டத்தைச் சுற்றித் தேடப் போனவர்களில் ஒருவன் விரைவில் திரும்பி வந்தான். அவன் கொண்டு வந்த பொருள்களைத் திருமலை நம்பி கதவிடுக்கின் வழியாக வந்த விளக்கின் ஔதக்கிரணத்தில் உற்றுப் பார்த்தான். அவை இளவரசர் மதுராந்தகத் தேவர் வழக்கமாக அணியும் கிரீடம், இரத்தின ஹாரம், வாகுவலயம் முதலிய ஆபரணங்கள் என்று அறிந்து கொண்டான். அவற்றுடன் மதுராந்தகர் உத்தரீயமாகத் தரிக்கும் பீதாம்பரமும் இருந்தது. இவற்றைப் பார்த்ததும் ஆழ்வார்க்கடியானுடைய மனத்தில் உண்டான திருப்தி அவனுடைய முகத்தில் பிரதிபலித்தது.

"சரி; தேடியது போதும்! மற்றவர்களையும் இங்கே கூப்பிடு. எல்லாரும் கையில் ஆயுதம் ஏந்தி எதற்கும் ஆயத்தமாக நில்லுங்கள்!" என்று கூறிவிட்டு, ஆழ்வார்க்கடியான் குடிசையின் கதவை இலேசாகத் தட்டினான்.

உள்ளிருந்து மறுமொழி வராமற் போகவே, மீண்டும் தடதடவென்று கதவை வலுவாகத் தட்டினான்.

"யார் அங்கே? இங்கு என்ன வேலை?" என்று பூங்குழலியின் குரல் கேட்டது.

"அம்மணி! நான்தான் ஆழ்வார்க்கடியான் என்கிற திருமலை நம்பிதாஸன். தயவு செய்து கதவைத் திறந்து அருள வேண்டும். முக்கியமான காரியம் இருக்கிறது!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

உள்ளே காலடிச் சத்தம் கேட்டது. பூங்குழலி கதவண்டையில் வந்து நின்று, "அப்படி என்ன முக்கியமான காரியம் இங்கே உமக்கு வைத்திருக்கிறது? நீரோ வீர வைஷ்ணவர். இதுவோ சிவனடியார்களின் குடிசை. இந்த வீட்டின் எஜமானருக்கு உடம்பு நலமில்லை என்பது உமக்குத் தெரியும். இரவு நேரத்தில் வந்து எதற்காகத் தொந்தரவு செய்கிறீர்?" என்றாள்.

ஆழ்வார்க்கடியான், "சமுத்திரகுமாரி! நான் வீர வைஷ்ணவன்தான்; அதனாலேயே துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனம் செய்யும் பொருட்டு வந்தேன். கதவை உடனே திறக்காவிட்டால், உடைத்துத் திறக்கப்படும்!" என்றான்.

"வைஷ்ணவரே! அவ்வளவு பெரிய வீராதி வீரரோ நீர்? உமது வீரத்தை எங்களிடம் காட்டவா வந்தீர்?" என்று சொல்லிக் கொண்டே பூங்குழலி குடிசைக் கதவைத் தடால் என்று திறந்தாள். அவளுடைய கயல் விழிகளில் கோபக் கனல் பறந்தது.

ஆழ்வார்க்கடியான் மீது தன் கோபத்தைக் காட்ட எண்ணியவள், அவனுக்கு அப்பால் வீரர்கள் சிலர் நிற்பது கண்டு திடுக்கிட்டாள். உடனே, கோபத்தைத் தணித்துக் கொண்டு, "ஐயா! இது என்ன? இவர்கள் யார்? எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள்? உம்முடனேதான் வந்தார்களா?" என்றாள்.

"ஆம்; என்னுடனேதான் வந்தார்கள். இராஜாங்கக் காரியமாக வந்திருக்கிறார்கள். இவர்களுடைய காரியத்தை தடை செய்கிறவர்கள் இராஜ தண்டனைக்கு உள்ளாக நேரிடும்" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"நல்ல இராஜாங்கக் காரியம். நல்ல இராஜ தண்டனை. இந்த மாதிரி பேச்சுக்களை எல்லாம் கேட்காமல் எப்போது கோடிக்கரைக்குப் போய் சமுத்திரத்தின் அலை ஓசையைக் கேட்டுக்கொண்டு நிம்மதியாக இருக்கப் போகிறோம் என்றிருக்கிறது. போகட்டும். இவர்களை எல்லாம் கொஞ்சம் தூரத்தில் இருக்கச் சொல்லிவிட்டுத் தாங்கள் மட்டும் உள்ளே வாருங்கள். இந்த ஓட்டைக் குடிசைக்குள்ளே என்ன இராஜாங்கக் காரியம் வைத்திருக்கிறதோ, தெரியவில்லை. அதைப் பார்ப்பதற்குத் தாங்கள் ஒருவரே போதாதா? அத்தான் அதோ கட்டிலில் படுத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர்கள் உள்ளே வந்தால் அவர் திடுக்கிடுவார், அதனால் அவர் உடம்பு இன்னும் சீர்கேடடையும்!" என்றாள்.

ஆழ்வார்க்கடியான் குடிசைக்குள் பிரவேசித்ததும் அவனாகவே கதவை மறுபடியும் சாதித்துத் தாளிட்டான்.

"பூங்குழலி! உன்னுடைய வார்த்தை மிக்க வியப்பாயிருக்கிறது. இராஜாங்கக் காரியங்களின் பேரில் உனக்கு இவ்வளவு அருவருப்பு எப்போது உண்டாயிற்று? பட்டத்து இளவரசரை மணந்து சிங்காதனம் ஏறும் உத்தேசம் என்ன ஆயிற்று? அவ்வாறு நடக்கும்போது இராஜாங்கக் காரியங்களில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தித்தானே ஆக வேண்டும்?" என்றான் திருமலை.

"ஐயா, வைஷ்ணவரே! அந்த உத்தேசத்தை நான் அடியோடு விட்டுவிட்டேன். சென்ற சில தினங்களில் இராஜ்ய பாரம் தாங்குவது என்பது எவ்வளவு சங்கடமான காரியம், எத்தனை மன வேதனை தரும் விஷயம் என்பதைத் தெரிந்து கொண்டேன். சிங்காசனம் இருக்குமிடத்துக்குப் பத்து காததூரத்திலே வருவதற்குக்கூட இனி நான் பிரியப்படமாட்டேன். வைஷ்ணவரே! உமக்கு ஒரு சந்தோஷச் செய்தி தெரிவிக்கிறேன். என் அத்தான் சேந்தன் அமுதனை மணந்துகொள்ள நான் முடிவு செய்து விட்டேன். சற்று முன் இங்கு வந்த செம்பியன் மாதேவியிடம் சொல்லி அவருடைய ஆசியும் பெற்றுக் கொண்டோ ம். அமுதனுக்கு உடம்பு கொஞ்சம் குணமானதும் இருவரும் கோடிக்கரைக்குப் புறப்பட்டுப் போய்விடுவோம்..."

ஆழ்வார்க்கடியான் குறுக்கிட்டு, "ஆகா! நல்ல தீர்மானம் செய்தீர்கள்!

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே!

என்று ஆழ்வார் அருளிச் செய்திருக்கிறார் அன்றோ? அதுபோல நீங்களும் இந்த 'மண்ணரசு வேண்டாம்' என்று தீர்மானித்துக் கடலில் மீன்களோடு மீன்களாக வாழலாம் என்று எண்ணினீர்கள் போலும்! ஆனாலும் யார் கண்டது? சிரசிலே கிரீடத்தைச் சுமந்து சிங்காதனத்தில் வீற்றிருக்க வேண்டும், என்கிற விதி இருந்தால், அந்தப்படியே நடந்து தீரும். வேண்டாம் என்றாலும் விடாது!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"போதும் ஐயா! பரிகாசம்! எதற்காக இங்கு வந்தீர்கள் என்பதைச் சொல்லுங்கள்!" என்றாள் பூங்குழலி.

"அம்மணி! தாங்கள் மண்ணரசு ஆளும் ஆசையை மட்டும் விட்டொழித்திருக்கிறீர்களா? அல்லது தாங்களும் சேந்தன் அமுதனும் இந்த மண்ணுலகில் உயிரோடு வாழும் ஆசையையே விட்டொழித்து விட்டீர்களா? இதைத் தெரிந்து கொண்டு போகவே வந்தேன்!" என்றான் வைஷ்ணவன்.

"இது என்ன கேள்வி? இம்மண்ணுலகில் இன்னும் சில காலம் வாழும் ஆசை எங்கள் இருவருக்கும் இருக்கிறது. இன்றைக்குத்தானே நாங்கள் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்திருக்கிறோம்? வைஷ்ணவரே! எங்களுக்கு வாழ்த்துக் கூறுங்கள்! அத்தான் விரைவில் குணமடையுமாறும் ஆசி கூறுங்கள்!" என்றாள் பூங்குழலி.

"நான் வாழ்த்துக் கூறவும், ஆசி கூறவும் சித்தமாயிருக்கிறேன். ஆனால் என் வாழ்த்தும் ஆசியும் வீணாகப் போகலாகாது. உங்களிருவருக்கும் இவ்வுலகில் உயிரோடு வாழும் எண்ணம் இருந்தால், பாதாளச் சிறையிலிருந்தவர்கள் தப்பி ஓடுவதற்கு ஏன் உதவி செய்தீர்கள்?" என்று கேட்டான் திருமலை.

பூங்குழலி முகத்தில் வியப்பை வருவித்துக் கொண்டு, "இது என்ன? எங்களுக்கு ஒன்றுமே தெரியாதே? யாரும் தப்பி ஓடுவதற்கு நாங்கள் உதவி செய்யவே இல்லையே?" என்றாள்.

"கரிகாலரைக் கொன்றவன் என்று குற்றம் சாட்டப்பட்டுப் பாதாளச் சிறையிலிருந்த வந்தியத்தேவனும், மற்றொரு பைத்தியக்காரனும் இன்று தப்பிச் சென்று விட்டார்கள். அவர்கள் இந்த நந்தவனம் வரையில் வந்ததாகத் தெரிகிறது. பிறகு, இங்கிருந்து இரண்டு குதிரைகளில் இருவர் ஓடிப் போயிருக்கிறார்கள். இந்தக் குடிசைக்குப் பக்கத்தில் ஓரிடத்தில் மண்ணில் இரத்தம் சிந்தியிருக்கிறது. பலர் இந்த இடத்துக்கு வந்துபோன அடையாளங்களும் இருக்கின்றன. ஆகையால் நீங்கள்தான் தப்பி ஓடியவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டுமென்று அனுமானிக்கப்படுகிறது. முதன்மந்திரி அநிருத்தருக்கு உங்கள் பேரில் உள்ள அபிமானத்தினால் என்னை அனுப்பி வைத்தார். கொடும்பாளூர் வேளாரின் ஆட்கள் வந்திருந்தால் உங்களை உடனே சிறைப்படுத்தி இருப்பார்கள்?" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"முதன்மந்திரிக்கும், உங்களுக்கும் மிக்க நன்றி வைஷ்ணவரே! அத்தானுக்கு இன்னும் இரண்டு தினங்களில் உடம்பு சரியாகிவிடும். உடனே நாங்கள் புறப்பட்டுக் கோடிக்கரை போய் விடுகிறோம். அப்புறம் இந்தத் தஞ்சாவூர்ப் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை. அது வரையில் தாங்கள்தான் எங்களை இராஜ சேவகர்கள் யாரும் தொந்தரவு செய்யாமல் உதவி புரிய வேண்டும்!" என்று வேண்டினாள் பூங்குழலி.

"நான் உதவி புரிவதில் தடையில்லை. ஆனால் நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும்! இங்கே உங்கள் மூன்று பேரையும் தவிர வேறு யாரும் வரவில்லையா?" என்று கேட்டான்.

"ஏன் வரவில்லை? இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள்! சற்று முன்னால் செம்பியன் மாதேவியும் இளவரசர் மதுராந்தகரும் வந்து அத்தானின் உடம்பைப் பற்றி அன்புடன் விசாரித்து விட்டுப் போனார்கள். இப்போதுதான் தஞ்சாவூர்க் கோட்டையைச் சுற்றி எங்கே பார்த்தாலும் போர் வீரர்களின் நடமாட்டமாயிருக்கிறதே? யார் வந்தார்களோ, யார் போனார்களோ, எங்களுக்கு எப்படித் தெரியும்? வைஷ்ணவரே! நீங்கள் முதலில் கேட்ட கேள்விக்கு மட்டும் மறுமொழி நிச்சயமாகச் சொல்லுகிறேன். இங்கிருந்து தப்பிப் போவதற்கு நாங்கள் யாருக்கும் உதவி செய்யவில்லை...!"

"இது சத்தியமான வார்த்தையா?"

"ஆம்; சத்தியமாகச் சொல்கிறேன். இங்கிருந்து யாரும் தப்பி ஓடுவதற்கு நாங்கள் உதவி செய்யவில்லை!"

"அப்படியானால், சிறையிலிருந்து தப்பி ஓடி வந்த வந்தியத்தேவன் இந்தக் குடிசையிலேதான் இப்போது இருக்க வேண்டும்!" என்றான் திருமலை.

அவன் இவ்விதம் சொல்லி வாய் மூடுவதற்குள் சேந்தன் அமுதன் படுத்திருந்த கயிற்றுக் கட்டிலின் அடியிலிருந்து வேதனை நிறைந்த பரிதாபமான முனகல் சத்தம் கேட்டது.









Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 67. "மண்ணரசு நான் வேண்டேன்"
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 28. இராஜபாட்டை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 40. "நான் கொன்றேன்!"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 43. "நான் குற்றவாளி!"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: