BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  81. பூனையும் கிளியும் Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 81. பூனையும் கிளியும்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  81. பூனையும் கிளியும் Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 81. பூனையும் கிளியும்   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  81. பூனையும் கிளியும் Icon_minitimeSat Jun 18, 2011 3:50 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

81. பூனையும் கிளியும்



பொன்னியின் செல்வர் ஊகித்து ஆருடம் கூறிய வண்ணமே நடந்தது. குந்தவை தேவியும், வானதியும் திருவையாற்றில் இருந்த சோழ மாளிகை போய்ச் சேர்ந்ததும், அங்கேயே பல்லக்கையும் பரிவாரங்களையும் நிறுத்தினார்கள். செம்பியன் மாதேவியும், அவருடைய மகனும், மருமகளும் கோவிலுக்குச் சென்றிருப்பதைத் தெரிந்து கொண்டார்கள். தாங்களும் கோயிலுக்குப் போவதாக மாளிகைக் காவலர்களிடம் சொல்லி விட்டு, ஒரே ஒரு வீரனை மட்டும் துணைக்கு அழைத்துக் கொண்டு சோதிடர் வீட்டைத் தேடிச் சென்றார்கள்.

ஆம்; குடந்தை சோதிடர் அங்கே வெள்ளத்தில் தமது வீடு அடித்துக் கொண்டு போகப்பட்ட பிறகு திருவையாற்றுக்கு வந்து விட்டார். நகரில் கிழக்கு ஓரத்தில் காவேரிக் கரையில் சிறிய வீடு ஒன்று கட்டிக் கொண்டு அங்கே குடியிருக்கத் தொடங்கினார்.

இனிமேல் பழையாறை நகரைக் காட்டிலும் தஞ்சாவூர் அதிக முக்கியத்துவம் பெறலாம் என்று அவர் ஜோசியத்தின் மூலம் அறிந்து கொண்டதும், ஒருவேளை அவர் திருவையாற்றுக்கு வந்து குடியேறியதற்குக் காரணமாயிருக்கலாம்.

ஜோசியர் வீட்டின் வாசற்படியில் அவர்கள் பிரவேசிக்கும் போதே உள்ளேயிருந்து மிக இனிய மழலைக் குரலில், "வாருங்கள், ஆடலரசிகளே வாருங்கள்! நடன ராணிகளே, வாருங்கள்!" என்று யாரோ வரவேற்றதைக் கேட்டுத் தேவிமார்கள் இருவரும் வியப்படைந்தார்கள். முன்னே ஒரு முரட்டுச் சீடனைக் காவற்காரனாக வைத்திருந்தவர் இப்போது இப்படி பரிந்து உபசரித்து அழைப்பதற்கு யாரை அமர்த்தியிருக்கிறார் என்ற எண்ணத்துடன் உள்ளே பிரவேசித்தார்கள்.

கூரையிலிருந்து தொங்கிய கூண்டில் அழகிய பச்சைக் கிளி ஒன்றைக் கண்டதும் அவர்களுடைய வியப்பு நீங்கியது. அந்த பச்சைக் கிளியும் தலையை இப்படியும் அப்படியும் அசைத்து, குன்றி மணி போன்ற அதன் சிறிய கண்களால் அவர்களை உற்றுப் பார்த்து விட்டு, மறுபடியும் "வாருங்கள், ஆடல் அரசிகளே, வாருங்கள்!" என்றது.

கிளியின் குரலையும், பெண்மணிகளின் பாதச் சிலம்பின் ஒலியையும் கேட்டு விட்டுச் சோதிடரும் உள்ளேயிருந்து கூடத்துக்கு வந்தார்.

தேவிமார்களைப் பார்த்துத் திடுக்கிட்டவராய், "வாருங்கள்! தேவிமார்களே! வாருங்கள்! இந்தக் குடிசை இன்றைக்குத்தான் பாக்கியம் செய்தது!" என்றார்.

பச்சைக் கிளியும் தன் பவளவாயைத் திறந்து, "இந்தக் குடிசை இன்றைக்குத் தான் பாக்கியம் செய்தது!" என்றது.

ஜோதிடர் அதைப் பார்த்து, "சீச்சீ! சற்று நேரம் சும்மா இரு! வாயை மூடிக் கொள்!" என்றார்.

"ஐயா! அதை ஏன் கோபித்துக் கொள்கிறீர்கள்? வருகிறவர்களுக்கு நல்ல முறையில்தான் வரவேற்பு அளிக்கிறது. தினந்தினம் இங்கு பலர் வந்து இந்தக் குடிசையை 'இன்றைக்குத்தான் பாக்கியம் செய்த குடிசை'யாகச் செய்வார்கள் போலிருக்கிறது. அதிலும் இங்கே ராணிகளும் அரசிகளும் ஓயாமல் வந்து கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது!" என்றாள் இளைய பிராட்டி குந்தவை.

"வாருங்கள்! நடன ராணிகளே! வாருங்கள்!" என்றது கிளி.

ஜோதிடர் மறுபடியும் அதை அதட்டிவிட்டு, "தேவிமார்களே! மன்னிக்க வேண்டும்! திருஞான சம்பந்தப் பெருமான் இந்த திருவையாற்றுக்கு வந்திருந்த போது வீதிதோறும் ஆடல் அரங்குகளைக் கண்டார். அவற்றில் மங்கைமார்கள் நடனம் பயிலும்போது பாதச் சதங்கைகள் 'கலீர் கலீர்' என்று ஒலிப்பதையும் கேட்டார். அவருடைய தெய்வீகப் பாசுரங்களிலும் பாடியிருக்கிறார். அந்த நாளில் போலவே இன்றைக்கும் இந்தத் திருவையாற்றில் நடனக்கலை பயிலும் நங்கைமார்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் அடிக்கடி சோதிடம் கேட்க இந்தக் குடிசையைத் தேடி வருகிறார்கள்! அவர்களுக்கு உகப்பாக இருக்கட்டும் என்று இந்தக் கிளிக்கு இவ்வாறு சொல்லப் பழக்கி வைத்தேன்! தயவு செய்து மன்னிக்க வேண்டும்!" என்றார்.

"இன்றைக்கு அந்த ஆடல் அரசிகள், நடன ராணிகள் யாரையும் இங்கே காணவில்லையே?" என்றாள் குந்தவை.

"தேவி! இன்றைக்குத் திருவாதிரைத் திருநாள். ஆகையால் ஆடலரசிகளும் நடன ராணிகளும் ஐயாற்று இறைவன் சந்நிதியில் சேவை செய்யப் போயிருப்பார்கள். ஆனால் உண்மை அரசிகளாகிய நீங்களே வந்து விட்டீர்கள். இந்தக் குடிசை பாக்கியம் செய்தது. நான் பாக்கியம் செய்தவன்!" என்று பரவசமாகக் கூறினார் ஜோதிடர்.

பிறகு, "தயவு செய்து அமருங்கள்! இந்த ஏழையிடம் என்ன கேட்க வந்தீர்களோ, அதைக் கேளுங்கள்! தெரிந்த வரையில் சொல்லுகிறேன்!" என்றார்.

இளவரசிகள் இருவரும் உட்கார்ந்தார்கள். குந்தவை ஒரு முறை பெருமூச்சுவிட்டு, "ஜோதிடரே! என்னத்தைக் கேட்பது? இந்த ஜோதிட சாஸ்திரத்தில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? என்ற கேள்வியைத்தான் முதலில் கேட்கத் தோன்றுகிறது!" என்றாள்.

"தேவி! தாங்கள் இப்படிக் கேட்டால், நான் என்ன சொல்லட்டும்? நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஜோதிட சாஸ்திரம் உண்மை. நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அது பொய்தான்!" என்று சொன்னார் ஜோதிடர்.

"நான் ஜோதிட சாஸ்திரத்தில் பூரண நம்பிக்கை வைத்துத்தான் இருந்தேன். ஆனால் அந்த சாஸ்திரம்தான் என்னைக் கைவிட்டு விட்டதே!"

"எந்த விதத்தில் தங்களைக் கைவிட்டு விட்டது, அம்மணி?"

"தாங்கள் ஜோதிடம் பார்த்துச் சொன்னபடி எது நடந்திருக்கிறது? என் தமையன் இப்படி அகால மரணம் அடைவான் என்று நீர் எப்போதாவது என்னிடம் சொன்னீரா?"

"நான் சொல்லலாமா, தேவி. தெரிந்திருந்தாலும் என் வாயைத் திறந்து சொல்லலாமா? சொல்லியிருந்தால், என்னையும் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுடனே சேர்த்திருக்க மாட்டார்களா? இராஜ குடும்பங்களையும் இராஜாங்க காரியங்களையும் பற்றி ஏதோ பொதுப்படையாகத்தான் சொல்லலாம். 'கண்டம் இருக்கிறது, இடையூறு வருகிறது, கெட்ட கிரஹம் பார்க்கிறது' என்று சொல்வதே ஆபத்தானது. மேலும் ஆதித்த கரிகாலரின் ஜாதகம் என்னிடம் இல்லவும் இல்லை. அதை நான் பார்த்ததும் இல்லை!" என்றார் ஜோதிடர்.

"நீங்கள் பார்த்திருந்தாலும் சொல்லியிருக்க மாட்டீர்கள். சொல்லியிருந்தாலும் அந்த விபத்தைத் தடுத்திருக்க முடியாது அல்லவா?"

"அது எப்படி முடியும், தாயே! நான் என்ன பிரம்மாவா? எழுதின எழுத்தைப் பிரம்மாவினால்தான் அழித்து எழுத முடியுமா?"

"அப்படியென்றால், ஜோதிடம் பார்ப்பதில் என்ன பயன், ஜோதிடரே!"

"தாயே! இது என்ன இப்படிக் கேட்டீர்கள்? தங்களைப் போன்றவர்கள் ஜோதிடம் பார்க்காவிட்டால், என்னைப் போன்றவர்கள் பிழைப்பது எப்படி? இந்த ஏழையின் குடிசையில் இராஜ குமாரிகளின் பாதங்கள் படுவதுதான் எப்படி?" என்றார் ஜோதிடர்.

இதைக் கேட்டுக் குந்தவை கலகலவென்று சிரித்து விட்டாள். வானதியின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

"ஜோதிடரே! இங்கே ஜோதிடம் கேட்க வருகிறவர்கள் எல்லாரிடமும் இப்படித்தான் சொல்லுவீர்களா?" என்று இளைய பிராட்டி கேட்டாள்.

"எல்லாரிடமும் இப்படிச் சொல்லுவேனா? கலைமகளும், திருமகளும் ஓர் உருக்கொண்டு அவதரித்திருப்பதாகத் தங்களைப் பற்றி உலகமெல்லாம் புகழ் பரவியிருக்கிறது. அத்தகைய தங்களிடம் விவாதம் செய்து என்னால் சமாளிக்க முடியுமா? அதனாலே அவ்வாறு சொன்னேன். ஆனாலும் தாயே! நான் ஜோதிடம் பார்த்துச் சொல்லாததை வைத்துக் கொண்டு ஜோதிட சாஸ்திரத்தின் உண்மையைத் தாங்கள் முடிவு கட்டலாமா? சொன்னதை வைத்துக்கொண்டு அல்லவா முடிவு கட்டவேண்டும்? பொன்னியின் செல்வரின் அதிர்ஷ்ட ஜாதகத்தைப் பற்றிச் சொன்னேன். இடையில் என்னென்னமோ நேர்ந்தது, கடைசியில் இந்தப் பூமண்டலத்தின் சக்கரவர்த்தியாகும் கட்டம் நெருங்கி விட்டதல்லவா? பட்டாபிஷேகத்துக்குக் கூட நாள் வைத்தாகிவிட்டதாமே?" என்றார் ஜோதிடர்.

"ஐயா! பொன்னியின் செல்வரின் பட்டாபிஷேகத்துக்கு நாள் பார்ப்பதற்குத் தங்களிடம் யாரும் வரவில்லையா?"

"இல்லை, தேவி! அதற்கு அரண்மனைப் புரோகிதர்கள் இருக்கிறார்களே! முதன்மந்திரி அநிருத்தரே ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவர் ஆயிற்றே!"

"ஆம்; தை மாதம் ஏழாம் தேதி நாள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அது நல்ல நாள்தானா ஜோதிடரே!"

"ரொம்ப நல்ல நாள், அம்மா! மிக நன்றாக ஆலோசித்துப் பார்த்துத்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்".

"பட்டாபிஷேகத்துக்கு உகந்த நல்ல நாளாக இருக்கலாம். ஆனால் பட்டாபிஷேகம் அன்று நிச்சயம் நடக்குமா என்று பார்த்துச் சொல்லுங்கள்!"

"இது என்ன கேள்வி, தேவி ஏன் நடக்காமற் போக வேண்டும்?"

"ஸ்ரீ ராமருடைய பட்டாபிஷேகத்துக்கு நல்ல நாளாகத்தான் பார்த்துக் குறிப்பிட்டார்கள். ஆனால் அன்று அவருக்குப் பட்டாபிஷேகம் நடக்காமற் போய்விடவில்லையா?"

"தேவி! வெறும் பட்டாபிஷேகம் செய்து கொள்வதைக் காட்டிலும் கோடி மடங்கு பெருமை அன்று ஸ்ரீ ராமருக்கு ஏற்பட்டது. அதனாலேயே இராமாயணம் பிறந்தது! அது போகட்டும்! அம்மாதிரி சந்தேகம் தங்களுக்கு ஏன் இப்போது ஏற்பட வேண்டும்? தாங்களே பட்டாபிஷேகம் அன்று நடைபெறக்கூடாது என்று விரும்புவதாகக் காண்கிறதே!"

"தங்கள் ஊகம் உண்மைதான்!"

"பொன்னியின் செல்வர் சிங்காதனம் ஏறுவதில் தங்களைக் காட்டிலும் ஆனந்தமடையக் கூடியவர் வேறு யாருமில்லை என்று அல்லவா உலகம் கருதுகிறது?"

"நியாயமாக நான் அத்தகைய ஆனந்தம் அடைய வேண்டியவள்தான். ஆனால் இந்தக் கொடும்பாளூர்ப் பெண்ணின் மூடப் பிடிவாதம் எனக்கு அதில் சந்தோஷம் இல்லாமற் செய்துவிட்டது. குடந்தையில் தங்கள் வீட்டில் இவள் செய்த சபதம் நினைவிருக்கிறதா?"

"சபதமா? அன்று பல விபரீத சம்பவங்கள் நிகழ்ந்தன ஒன்றும் சரியாக நினைவில் இல்லை!" என்றார் ஜோதிடர்.

"இவளிடம் அசூயை கொண்ட ஓடக்காரப் பெண் பூங்குழலி ஏதோ சொன்னாள் என்பதற்காக இவள் ஒரு சபதம் செய்தாள். தன் உயிர் உள்ள வரையில் சிங்காதனம் ஏறுவதில்லையென்று கூறினாள்! உயிர் போனபிறகு சிங்காதனம் ஏற முடியுமா, ஜோதிடரே!"

"முடியாதுதான்!"

"அத்தகைய விபரீதமான சபதத்தைக் கேட்டு விட்டுத்தான் காவேரித்தாய் கோபங்கொண்டு பொங்கி வந்து இவனை வெள்ளத்தோடு அடித்துக் கொண்டு போகப் பார்த்தாள்!"

"ஆமாம்; எனக்குகூட நினைவு வருகிறது. அந்தச் சபதம் ஏதோ விளையாட்டு என்றல்லவா நினைத்தேன்?"

"அதுதான் இப்போது வினையாக முடிந்திருக்கிறது! இவள் சிங்காதனம் ஏற மாட்டாளாம். என் சகோதரனுடன் சிங்காதனம் ஏறிப் பட்டமகிஷியாக விளங்குவதற்கு வேறு யாரையாவது அவன் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமாம். இவள் அவனுடைய அரண்மனையில் தாதிகளோடு தாதியாக இருந்து தொண்டு செய்து வருவாளாம்! இதையெல்லாம் கேட்பதற்கே எனக்குச் சகிக்கவில்லை, ஜோதிடரே! தாங்கள் இந்தப் பெண்ணைப் பற்றிக் கூறியது எல்லாம் நினைவிருக்கிறதா?"

ஜோதிடர் முகமலர்ச்சியுடன் "நன்றாக நினைவிருகிறது. தேவி! நான் சேர்த்து வைத்திருந்த ஜோதிட நூல்களுடன் பற்பல தேசங்களின் இராஜகுமாரர்கள் இராஜகுமாரிகளின் ஜாதகங்களையும் காவேரித்தாய் கொண்டு போய் விட்டாள். ஆனால் இந்தப் பெண்ணரசியின் ஜாதகம் மட்டும் என் மனச் சுவடியில் படிந்திருக்கிறது. இவருடைய கையில் உள்ள ரேகைகள் என் கண் முன்னாலேயே நிற்கின்றன. அம்மணி! நான் கூறிய ஜோதிடத்தில் வேறு எது பலித்தாலும் பலிக்காவிட்டாலும் இவரைப் பற்றி நான் கூறியது பலிக்காமல் போகாது!"

"இந்தப் பெண்ணைப் பற்றி என்ன சொன்னீர்கள் என்பது தங்களுக்கு இப்போது நினைவிருக்கிறதா?"

"நன்றாக நினைவிருக்கிறது இவரை மணந்து கொள்ளும் பாக்கியசாலி திருமடந்தையையும் நில மடந்தையையும் ஓருருவத்தில் மணந்து கொண்டவனாவான் என்று சொன்னேன். இந்த மாதரசியைப் பார்க்கும் பாக்கியத்துக்காகத் தேச தேசாந்தரங்களில் உள்ள பேரரசிமார்கள் தவங்கிடப்பார்கள் என்று கூறினேன். இவருடைய திருவயிற்றில் உதிக்கப் போகும் புதல்வன் பிறக்கும் போதே ஜயக்கொடி நாட்டிக் கொண்டு பிறப்பான். அவன் போகுமிடமெல்லாம், அவன் பார்க்குமிடமெல்லாம் வெற்றி என்று சொன்னேன்."

"ஐயா! நீங்கள் இப்படியெல்லாம் சொல்லச் சொல்ல என்னுடைய கவலைதான் அதிகமாகிறது!"

ஜோதிடர் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து, "தேவி! கவலையா? எதற்குக் கவலை? சோழ சாம்ராஜ்யத்துக்கும் சோழர் குலத்துக்கும் கவலைப்படவேண்டிய காலமெல்லாம் போய்விட்டது. இன்றைக்கு ஒரு விசேஷ நாள் என்பது நினைவிருக்கிறதா?"

"ஆம்; இன்றைக்கு மார்கழித் திருவாதிரை நாள்! சிவனுக்கு உகந்த நாள்!"

"இது சோழர் குலத்துக்கும் உகந்த நாள். தெய்வத் தமிழகத்துக்கும் உகந்த நாள், தேவி! கேளுங்கள்! இதே மார்கழித் திருவாதிரையில் வருகிற ஆண்டுகளிலே ஒன்றில் ஓர் அற்புதம் நடக்கப் போகிறது! சங்கு சக்கரம் கையில் ஏந்தாமலே திருமாலின் பூரண அம்சமான குழந்தை ஒன்று உதிக்கப் போகிறது! அந்தக் குழந்தையின் மூலம் இந்தச் சோழ நாடு இதற்குமுன் என்றும் கண்டிராத மகோந்நதத்தை அடையப் போகிறது! ஆகா! என்னென்ன அதிசயங்கள் நடக்கப் போகின்றன! அவற்றைப் பார்க்க நான் ஒருவேளை உயிரோடு இருக்க மாட்டேன். தாங்கள் பார்த்து மகிழ்வதற்கு நீண்ட காலம் வாழ்வீர்கள்!"

இப்படி ஜோதிடர் ஆவேசம் வந்தவர்போல் பேசி வருகையில் குந்தவையும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.

திடீரென்று ஏதோ சத்தம் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

கூண்டிலிருந்த கிளி சடசடவென்று சிறகுகளை அடித்துக் கொண்டிருந்தது. அதன் மேல் தாவ முயன்றுகொண்டிருந்த பூனையின் மீது வானதி ஓர் ஓலைச்சுவடியை எடுத்து எறிந்தாள்!

எறிந்து விட்டு, "அக்கா! ஜோதிட சாஸ்திரம் பயனுள்ளது தான். ஜோதிடர் சுவடியைக் கொண்டுதான் இந்த அழகான இனிய வார்த்தை பேசும் கிளியைக் காப்பாற்ற முடிந்தது! இல்லாவிட்டால் அதன் சிறகுகளைப் பூனை இத்தனை நேரம் பிய்த்துப் போட்டிருக்கும்!" என்றாள்.









Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 81. பூனையும் கிளியும்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 34. அநுராதபுரம்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 11. திடும்பிரவேசம்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 43. பழையாறை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: