BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  82. சீனத்து வர்த்தகர்கள் Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 82. சீனத்து வர்த்தகர்கள்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  82. சீனத்து வர்த்தகர்கள் Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 82. சீனத்து வர்த்தகர்கள்   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  82. சீனத்து வர்த்தகர்கள் Icon_minitimeSat Jun 18, 2011 3:54 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

82. சீனத்து வர்த்தகர்கள்



ஆதி காலத்திலிருந்து பற்பல தேசங்களிலும் மக்கள் வருங்கால நிகழ்ச்சிகளைப் பற்றி அறிவதற்குப் பிரயத்தனங்கள் செய்து வந்திருக்கிறார்கள். ஏழை எளியவர்களையும் படிப்பில்லாத பாமர மக்களையும் போலவே அரச குலத்தவர்களும், புலமை மிக்க அறிவாளிகளும் எதிர்காலத்தை ஊடுருவிப் பார்க்க முயன்றிருக்கிறார்கள். ஜோதிட சாஸ்திரிகள், ஆரூடக்காரர்கள், நிமித்தங்கூறுவோர், குறி சொல்லுவோர், ரேகை பார்ப்போர், முதலியவர்கள் கல்வியறிவிலும், நாகரிகத்திலும் சிறந்த சமூகங்களிலும் பல்கிப் பெருகியிருந்திருக்கிறார்கள். அதைப் போலவே, ஜோதிட சாஸ்திரத்தின் உண்மையைப் பற்றிச் சந்தேகித்து, அந்தக் கலையையே கண்டனம் செய்தவர்களும் இருந்து வந்திருக்கிறார்கள்.

அறிவிற் சிறந்த மங்கையர் திலகமான இளையபிராட்டி குந்தவையின் உள்ளத்திலும் இத்தகைய போராட்டம் அடிக்கடி எழுந்து கொண்டிருந்தது. ஆயினும் சோழ சாம்ராஜ்யத்தின் வருங்காலத்தைப் பற்றிக் கவலைப்பட நேர்ந்த போதெல்லாம், அந்தக் கவலை குந்தவை தேவியைச் சோதிடர் வீட்டைத் தேடிப் போகும்படி செய்தது.

நியாயமாகப் பார்க்கப் போனால், இப்போது குந்தவையின் உள்ளம் சுந்தர சோழ சக்கரவர்த்தி பெற்றிருந்த மன அமைதியைப் பெற்றிருக்க வேண்டும். எதிர்பாராத நிகழ்ச்சிகள் என்னென்னவோ நேர்ந்து, அருள்மொழிவர்மர் சோழ சிங்காதனம் ஏறி முடிசூட்டிக் கொள்வது நிச்சயமாகி விட்டது. பிள்ளைப் பிராயத்திலிருந்து குந்தவை தன் இளைய சகோதரனிடம் கொண்டிருந்த எல்லையில்லா வாஞ்சையை நாம் அறிந்திருக்கிறோம். கரங்களில் சங்கு, சக்கர ரேகைகளுடன் பிறந்த அருள்மொழிவர்மனால் சோழப் பேரரசு மகோந்நதத்தை அடையப் போகிறது என்று அவள் உள்ளத்தில் பலமான நம்பிக்கை குடிகொண்டிருந்தது. காவேரி வெள்ளத்தில் தவறி விழுந்தவனை, தெய்வமே போன்று வந்த பெண்மணி ஒருத்தி எடுத்துக் காப்பாற்றிய நிகழ்ச்சியும் இன்னும் இது போன்ற வேறு பல சம்பவங்களும் அவளுடைய நம்பிக்கையை மேலுல் வலுவடையச் செய்து வந்தன. அந்த நம்பிக்கை மெய்யாகும் காலம் இப்போது நெருங்கி வந்திருந்தது. ஆனாலும் அந்த அரசிளங் குமாரியின் உள்ளத்தில் இன்னமும் அமைதி ஏற்படாமற் போன காரணம் என்ன?

அருள்மொழிவர்மனைப் பற்றிக் கூறியது போலவே கொடும்பாளூர் இளவரசி வானதியின் ஜாதக விசேஷத்தைப் பற்றியும் பலர் கூறி வந்தார்கள். உண்மையாக நாளையும் கோளையும் ஆராய்ந்து வருங்காலத்தை உணர்ந்துதான் கூறினார்களோ, அல்லது அச்சமயம் குந்தவை தேவிக்கு உகப்பாக இருக்கட்டும் என்றுதான் சொன்னார்களோ, தெரியாது. ஒரு முகமாகப் பலர் சேர்ந்து கூறும் வாக்கு சில சமயம் அதிசயமாக உண்மையாகி விடுவதைப் பார்க்கிறோம். இன்னும் சிலருடைய வாக்கிலேயே ஏதோ விசேஷம் இருக்கிறது. அவர்கள் சொன்னது சொன்னபடி பலித்து விடுகிறது. குடந்தையிலிருந்து, திருவையாற்றுக்கு வந்து குடியேறிய ஜோதிடர், அன்றைக்கு மார்கழி மாதத் திருவாதிரை நாள் என்பதை நினைவு கூர்ந்து, "சோழ குலத்துக்கு மிக்க சிறப்பை அளிக்கப் போகும் நன்னாள் அது!" என்று சற்று அழுத்தமாகக் கூறி வைத்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதே மார்கழித் திருவாதிரையில் சோழர் குலத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தை வளர்ந்து உரிய பிராயம் அடைந்த போது சந்திரகுப்தன், அசோகன், விக்கிரமாதித்தன், ஹர்ஷவர்த்தனன் ஆகியவர்களுடன் ஒப்பிடக்கூடிய சக்கரவர்த்தியாகி விளங்கினான். இராஜேந்திரன் என்ற அபிஷேகப் பெயர் பெற்று இலங்கை முதல் கங்கை வரையில், லட்சத்தீவு முதல் ஸ்ரீஅவிஜயத் தீவு வரையில் வெற்றி கொண்டு ஆணை செலுத்தினான்.

ஜோதிடர் கூறிய வார்த்தை இவ்விதம் அதிசயமான முறையில் பின்னால் பலித்துவிட்டது. ஆனால் அன்றைக்கு அவர் அவ்விதம் கூறியபோது குந்தவைக்கு அதில் பூரண நம்பிக்கை ஏற்படவில்லை. வானதிக்கோ ஜோதிடரின் வார்த்தைகள் கோபத்தையே உண்டாக்கின. அந்தக் கோபத்தை உடனே காட்டுவதற்கு ஒரு வழியும் ஏற்பட்டது. ஜோதிடர் சுவடியைத் தூக்கி அந்தப் பெண்ணரசி பூனையின் மேல் எறிந்து விட்டு, "ஜோதிட சாஸ்திரத்துக்கும் உபயோகம் உண்டு!" என்று கூறினாள்.

அதைக் கேட்ட ஜோதிடர் திரும்பிப் பார்த்து விஷயம் இன்னதென்பதைத் தெரிந்துகொண்டு, "இளவரசி! வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். அதுபோல் தங்கள் திருக்கரம் பட்ட மகிமையினால் இந்த ஓலைச்சுவடியும் ஓர் உயிரைக் காப்பாற்றியது. வருங்காலத்தில் எத்தனை எத்தனையோ உயிர்களுக்கு அபயம் அளித்துக் காப்பாற்றப் போகும் மலர்க்கரம் அல்லவா!" என்றார்.

வானதி "அக்கா! இந்த ஜோதிடர் முகஸ்துதி கூறுவதில் மிகவும் கெட்டிக்காரர் வாருங்கள் போகலாம்!" என்றாள்.

"தேவி! இன்றைக்கு நான் சொல்லும் வார்த்தைகள் தங்களுக்குப் பிடிக்கவில்லை. ஒரு காலத்தில் நான் கூறியவையெல்லாம் உண்மையாகியே தீரும். அப்போது இந்த ஏழையை மறந்துவிடாதீர்கள்!" என்றார் ஜோதிடர்.

குந்தவைப் பிராட்டி குறுக்கிட்டு "ஐயா! இந்தப் பெண்ணுக்குத் தங்கள் வார்த்தைகள் பிடிக்காமலில்லை. கேட்கக் கேட்க இவள் மனத்திற்குள் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் 'யோசனையில்லாமல் ஏதோ ஒரு சபதம் செய்து விட்டோ மே' என்று ஆத்திரப்படுகிறாள்! அந்த ஆத்திரத்தைத் தங்கள் ஓலைச்சுவடியின் பேரில் காட்டினாள்! அதைத் தாங்கள் பொருட்படுத்த வேண்டாம்!" என்று கூறினாள்.

"நல்லவர்களுக்கு வரும் ஆத்திரமும் நல்ல பலனையே அளிக்கும்! தங்களை இனிய மொழியால் அழைத்த என் அருமைக் கிளி பிழைத்தது அல்லவா?" என்றார் ஜோதிடர்.

பின்னர் குந்தவை ஜோதிடரிடம் இன்னும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள். முக்கியமாக அருள்மொழிவர்மருக்குத் திருமணம் எப்போது நடக்கும் என்று கேட்டாள். அதைப்பற்றி இளைய பிராட்டி குந்தவைக்குக் கவலை ஏற்படக் காரணம் இருந்தது. ஏனெனில் நேற்றைய தினம் சேனாதிபதி பூதிவிக்கிரம கேசரி இளைய பிராட்டியிடம் வந்து, "தாயே! நான் கொடும்பாளூர் போகிறேன். என் சகோதரன் மகள் வானதியையும் அழைத்துச் செல்லலாம் அல்லவா?" என்று கேட்டார்.

குந்தவை திடுக்கிட்டு, "மாமா! இது என்ன அவசரம்? பட்டாபிஷேகத்துக்கு இல்லாமலா போகிறீர்கள்?" என்றாள்.

"தாயே! பட்டாபிஷேகத்தின் போது வந்து விடுவேன் அது வரையில் இங்கு ஏன் காத்திருக்க வேண்டும்? நான் வரும்போது பெரும் சைனியத்தோடு வந்தேன். தெய்வாதீனமாக, நம்முடைய மனோரதம் சண்டை ஒன்றுமில்லாமலே நிறைவேறுவதாகி விட்டது. சக்கரவர்த்தித் திருமகன் முடிசூட இணங்கி விட்டார். அதை எல்லாச் சிற்றரசர்களும் ஒப்புக்கொண்டு விட்டார்கள். இனி இவ்வளவு பெரிய சைன்யத்தை இங்கு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வளவு பேருக்கும் உணவு அளித்து நிர்வகிப்பதும் தஞ்சை நகரத்தாருக்குச் சிரமமாக இருந்து வருகிறது. ஆகையினால் என் சைன்யத்தை அழைத்துப் போய் அங்கங்கே பிரித்து விட்டு விட்டு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது!" என்றார் சேனாதிபதி.

"அப்படியே செய்யுங்கள்! ஆனால் என் தோழி வானதியை எதற்காக அழைத்துப் போக வேண்டும்?" என்று கேட்டாள் குந்தவை.

"தேவி! அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நேற்று சிற்றரசர்களாகிய நாங்கள் எல்லோரும் கூடி யோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம். தங்கள் பாட்டனார் அரிஞ்சய தேவரின் தந்தையாகிய பராந்தக சக்கரவர்த்தி பெண்ணரசிகள் அறுவரை மணந்திருந்தார். என்னுடைய குலத்திலிருந்தும், மிலாடுடையார் குலத்திலிருந்தும், பழுவேட்டரையர், மழவரையர், சம்புவரையர் குலங்களிலிருந்தும் ஒவ்வொரு பெண்ணை மணந்து கொண்டிருந்தார். ஆகையால் அவருடைய காலத்தில் சிற்றரசர்களிடையில் பூசல் ஏதும் இல்லாமலிருந்தது. தங்களுடைய பாட்டனார் அரிஞ்சயரும் அவ்வாறே பல சிற்றரசர் குலப் பெண்களை மணந்து கொண்டார். அவர் வெற்றி கொண்ட வைதும்பராயர் குலத்திலிருந்து தங்கள் பாட்டியாரை மணந்து கொண்டார். ஆனால் தங்கள் தந்தை இந்த நல்ல வழக்கத்தை அனுசரிக்கவில்லை. தங்கள் அன்னையாகிய மலையமான் மகளாரை மட்டும் மணந்தார். அதனால் சிற்றரசர்களுக்குள்ளே பொறாமையும், பூசலும் விளைந்தன. இனி, இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்கிறவர்கள் பராந்தக சக்கரவர்த்தியையும், அரிஞ்சய தேவரையும் போல் பல சிற்றரசர் குலங்களிலிருந்தும் பெண் கொள்ள வேண்டும் என்று நேற்றைக்கு ஏகமனதாக முடிவு செய்திருக்கிறோம். பொன்னியின் செல்வரின் முடிசூட்டு விழா நடந்த பிற்பாடு அவரிடம் இவ்வாறு விண்ணப்பம் செய்து கொள்ள எண்ணியிருக்கிறோம். வானதியை ஏன் ஊருக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன் என்று தாங்கள் ஊகித்துக் கொள்ளலாமே? அவளை இங்கே விட்டிருந்தால் நான் உடன்படிக்கைக்கு விரோதமாக நடக்கப் பார்க்கிறேன் என்று மற்றவர்கள் சந்தேகிக்கக்கூடும்?" என்றார் கொடும்பாளூர் வேளார்.

இதைக் கேட்ட குந்தவைக்கு உள்ளத்தில் பெரிதும் ஆத்திரம் உண்டாயிற்று. அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளாமல் "சேனாதிபதி! அன்னை தந்தையை இழந்த தங்கள் தம்பி மகளுக்கு நானே தந்தையும் தாயுமாக இருக்க வேண்டும் என்று முன்னொரு சமயம் கேட்டுக் கொண்டீர்கள், அதை மறந்து விட்டீர்களா? வானதியைக் கொடும்பாளூருக்கு அனுப்ப முடியாது. அவளை விட்டுக் கண நேரமும் என்னால் பிரிந்திருக்க இயலாது. நான் வேண்டுமானால் வானதியையும் அழைத்துக்கொண்டு பழையாறைக்குப் போய்விடுகிறேன். முடிசூட்டு விழாவுக்குக் கூட வராமல் அங்கேயே இருந்து விடுகிறோம். கல்யாணத்தைப் பற்றிய பேச்சே இப்போது வேண்டாம். பட்டாபிஷேகம் ஆன பிறகு சிற்றரசர்களின் விருப்பத்தைப் பொன்னியின் செல்வரிடம் சொல்லுங்கள்! பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம்!" என்றாள்.

சேனாதிபதியும் அதை ஒப்புக்கொண்டு போய்விட்டார்.

குந்தவை தேவி ஜோதிடரைத் தேடிக்கொண்டு வருவதற்கு இது ஓர் அதிகப்படியான காரணம் ஆயிற்று. ஆகையினாலேயே பொன்னியின் செல்வரின் திருமணத்தைக் குறித்து அவ்வளவு கவலையுடன் ஜோதிடரிடம் கேட்டாள்.

அதே சமயத்தில் வானதியின் நினைவு பழையதொரு சம்பவத்துக்குப் போயிருந்தது. அதிலும் ஒரு பறவையும் பூனையும் பாத்திரங்களாயிருந்தன. பூனையுடன் ஒரு யானையும், யானைப் பாகனும் அதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள்.

மரக்கிளையிலிருந்து தொங்கிய ஒரு பறவையின் கூட்டை அந்தக் காட்டுப் பூனை தாக்கி அதிலிருந்து பறவைக் குஞ்சுகளைக் கபளீகரம் செய்ய முயன்றது. தாய்ப் பறவை கூட்டைச் சுற்றி வந்து பூனையைத் தடுக்கப் பார்த்தது. வானதி அதைக் கண்டு செய்வதறியாது அலறினாள். நதியில் நீந்திக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் ஓடி வந்து பார்த்தான். பிறகு அவன் விரைந்து சென்று ஒரு யானையின் மீது ஏறி வந்தான். பறவைகள் கூண்டையும் அதிலிருந்த பச்சிளம் குஞ்சுகளையும் அந்தக் காட்டுப் பூனையின் வாயிலிருந்து காப்பாற்றினான்.

அந்த இளைஞன் யானைப்பாகன் என்று வானதி அப்போது கருதினாள். பின்னால் அவன்தான் பொன்னியின் செல்வன் என்று தெரிந்தது. ஆகா! அவன் வெறும் யானைப்பாகனாகவே இருந்திருக்கக் கூடாதா? அல்லது சாதாரண வீரனாயிருந்திருக்கக் கூடாதா? அவன் சுந்தர சோழச் சக்கரவர்த்தியின் திருமகனாக இருப்பதால் அல்லவா தான் இத்தகைய தொல்லைகளுக்கு ஆளாக நேர்ந்தது? தன்னை ஒத்த தோழிமார்களும், பூங்குழலி போன்றவர்களும், சோழ நாட்டுப் பட்டத்தரசியாக விரும்பும் கள்ள நோக்கமுடையவள் என்று என்னைப் பற்றி அவதூறு கூறும்படி நேர்ந்தது...!

வானதி இத்தகைய நினைவுகளிலும், குந்தவை வருங்காலத்தைப் பற்றி ஜோதிடம் கேட்பதிலும் ஈடுபட்டிருந்த சமயத்தில், ஜோதிடரின் வீட்டு வாசலில் "சீனத்துப் பட்டு வேண்டுமா? சீனத்துப் பட்டு!" என்ற பெருங்குரல் ஒன்று கேட்டது; வேறு குரல்களும் கேட்டன.

குந்தவையும், வானதியும் தாங்கள் வந்து நேரமாகி விட்டது என்பதை உணர்ந்து எழுந்தார்கள்.

அப்போது ஜோதிடரின் சீடன் உள்ளே வந்து, "சுவாமி! சீனத்து வர்த்தகர்கள் இருவர் வந்திருக்கிறார்கள். தங்களிடம் ஜோதிடம் கேட்க வேண்டுமாம்! அவர்களை நாளைக்கு வரும்படி சொல்லட்டுமா?" என்று கேட்டான்.

குந்தவை, "வேண்டாம்! இப்பொழுதே வரட்டும், நாங்கள் விடைபெற்றுக் கொள்கிறோம்" என்று சொல்லி விட்டு வானதியின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு புறப்பட்டாள்.

இளவரசிகள் இருவரும் வாசலில் வந்தபோது, அங்கே ஒரு யானை நிற்பதையும், அதன் மேல் இரண்டு சீன வர்த்தகர்கள் பெரிய துணி மூட்டைகளுடன் உட்கார்ந்திருப்பதையும் பார்த்தார்கள். கீழே நின்ற யானைப்பாகனிடம் அந்தச் சீனத்து வர்த்தகர்கள் ஏதோ கேட்டுக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.

அவர்கள் மீது அதிக கவனம் செலுத்தாமல் இளவரசிகள் தங்களுடன் வந்த வீரனை அழைத்துக்கொண்டு சோழ மாளிகையை போய்ச் சேர்ந்தார்கள்.







Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 82. சீனத்து வர்த்தகர்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 9. "இது இலங்கை!"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 18. இடும்பன்காரி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 34. லதா மண்டபம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: