BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ Tamil Story ~~ என் பெயர் வசந்தம் ~~ Button10

 

 ~~ Tamil Story ~~ என் பெயர் வசந்தம் ~~

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ Tamil Story ~~ என் பெயர் வசந்தம் ~~ Empty
PostSubject: ~~ Tamil Story ~~ என் பெயர் வசந்தம் ~~   ~~ Tamil Story ~~ என் பெயர் வசந்தம் ~~ Icon_minitimeMon Nov 14, 2011 4:01 am




என் பெயர் வசந்தம்





வசந்தகாலத்தின் தொடக்க நாளில் நான் பிறந்தேனாம் அதனால் அம்மா எனக்கு 'வசந்தம்' என்று பெயர் வைத்ததாக அப்பாதான் சொன்னார். வாய் நிறைய 'வசந்தம்! வசந்தம்!' என்று என் அம்மா அழைக்க, அதைக் கேட்டு மகிழும் பேறினை நான் ஒருவயதிலேயே இழந்துவிட்டேன்.

வசந்தம்! எத்தனை அழகான பெயர்! அம்மாவிற்கு இந்தப்பெயர் வைக்க எப்படித்தோன்றியது? பிற்காலத்தில் தன் பெண் இந்தப்பெயரை மிகவும் நேசிப்பாள் என்று அம்மாவுக்கு அப்போதே தெரிந்திருக்குமோ?

எத்தனைபேருக்கு அவர்களின் பெயர்கள் பிடிக்கும்? என்னுடன் படித்த பல பெண்களுக்கு அவர்களின் பெயர் பிடித்ததாய் சொன்னதே இல்லை. ஏதோ ஒரு குறை அதில் இருப்பததயும் பெற்றோர் இன்னும் தனக்குப் பொருத்தமாய் வைத்திருக்கலாம் என்றும்புலம்புவார்கள் அப்படியே தங்கள் பெயரை விரும்பும் சிலரோ அந்தப்பெயரை முழுமையாய் அழைக்காமல் குறுக்கி வெட்டி அல்லது நீட்டி அழைப்பதைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள்.

ஆனால் எனக்கு அப்படி இல்லை என் பெயரை யாராவது அழகாய் வசந்தம் என்று அழைத்தால் செவியும் நெஞ்சும் குளிர்ந்துதான் போகிறது. மிகச்சிலரே வசந்தம் என்று அழைக்கின்றனர். பலருக்கு வசந்தா அல்லது வசந்தி அல்லது வசி. அம்மா மட்டும் இருந்திருந்தால் தினமும் வசந்தமான பொழுதுகளாயிருந்திருக்கும்.

அம்மாவைப்பற்றி அப்பா சொல்லியதிலிருந்தும், அம்மாவின் பழைய டைரிக்குறிப்புகளிலிருந்தும் அவள் அன்பும் பண்பும் அதிகம் கொண்ட ஒரு அபூர்வப் பெண்மணி என்று உணரமுடிகிறது. எழுத்தும் இசையும் அம்மாவுக்கு இருகண்களாக இருந்திருக்கின்றன. டைரியின் பலபக்கங்களில் கவிதைகளாய் எழுதித்தள்ளி இருக்கிறாள். அப்பாவின் ஊக்குவிப்பினாலும் ஆதரவினாலும் அம்மாவின் சிலபடைப்புகள் அந்த நாளில் பத்திரிகைகளிலும் வந்திருக்கின்றன.

சங்கீதத்தைப்பற்றி அம்மா எழுதிய ஒருகுறிப்பு இது. "நம்மை மறந்து நாம் லயிக்கும் கலை இசை. இசை கேட்கத்தான் செவிகள் திறந்தே இருக்கின்றனவோ? மற்ற எந்த அவயங்கள் மூடிக்கொண்டாலும் திறந்த செவிகளின் வழியே மனதில் இறங்கி ஆத்மாவைத் தொடுவது இசை என்றால் அது மிகை இல்லை. சில நேரங்களில் இந்தமானிட ஜீவிதமே ஒரு தொடர்ந்த இசைபோலத் தோன்றுகிறது"

அம்மாவின் கவிதைகளும் ஆத்மாவைத் தொடுபவை.

"இப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறது
ஏலத்தில் வீடு கைமாறியபோது
கூடத்தில் சிறகடித்துக்கத்திய
குருவிகளின் கூக்குரல்" என்பதுபோல பலகவிதைகள் அச்சிலும் கையெழுத்துப்பிரதியிலும்!

வல்லமை நிறைந்தவர்களை தன் வசம் இழுத்துக்கொள்வது இறைவனுக்குப் பிடித்த ஒன்றாக இருக்கவேண்டும் பாரதி விவேகாநந்தரைப்போல என் அம்மாவும் அவர்களை விடவும் இளம்வயதிலேயே விபத்து ஒன்றில் இறந்துவிட்டாள்.

அப்புறம் அப்பா என்னை வளர்க்கவேண்டுமே என்றுதான் மறுமணம் செய்துகொண்டார்.

சித்தி ராதிகா அம்மாவின் குணங்களுக்கு நேர் எதிராய் அப்பாவிற்கு வாய்த்திருக்கிறாள் என்பதிலிருந்தே என் நடைமுறை வாழ்க்கை எப்படி இருக்கிறது என நீங்கள் புரிந்துகொண்டிருக்கவேண்டும்

சித்திமூலம் எனக்குக் கிடைத்த தங்கைகள் மீனாவும் ஜனனியும் தம்பி அச்சுதனும் என்மேல் பிரியமாகவே இருக்கிறார்கள். ஆனால் பொம்மலாட்டத்தில் பொம்மைகளின் நூல்களைப் பிடித்து ஆட்டுவிக்கும் சூத்திரதாரியாய் சித்தி இருக்கும்போது அவர்களால் எதுவும் செய்ய இயலாத நிலமை.

இப்போதும் தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்தவளை அச்சுதன் ஓடிவந்து, "வசந்தக்கா உங்கள அம்மா கூப்பிட்றாங்க. சமையல் செய்யாம காலைல என்ன தோட்டத்துல செய்றா?அப்படீன்னு கண்டபடி கத்றாங்கக்கா" என்றான் பதட்டத்துடன்.

"அதிருக்கட்டும் அச்சுதா என்னை நீ 'வசந்தம் அக்கா'ன்னு சொல்லவே மாட்டியா?'

"வசந்தம் ரொம்ப கர்னாடகப் பேருக்கா. வசந்தக்காதான் சொல்வேன்" சிரித்தபடி போய்விட்டான் அச்சுதன்.

"இதென்ன பேரு வசந்தம்னு? வசந்தி வசந்த் வசு வசந்தா இப்படி இல்லாம வசந்தம்னு சகிக்கல,," என்று சித்தி இருபத்தி அஞ்சுவருஷம் முன்பு அப்பாவைக் கைபிடித்தபோதே கிண்டலாய் சீறினாள்.

.சித்திக்கு நான் துக்கிரிதான். பெத்ததாயை முழுங்கிய துக்கிரிப்பெண்ணாம் அதனால் ."ஏய் துக்கிரி பாத்திரம் தேய், ஏ துக்கிரி துணி துவச்சிபோடு" என்றே அதட்டுவாள். அப்பாவுக்கு வசந்தம் என அழைக்க ஆசை இருந்தும் சித்தியின் கண்டிப்பினால் வசி என்றழைக்க ஆரம்பித்துவிட்டாராம். இதை எனது ஏழாவது வயதில் சொல்லி விசும்பினார்.

பள்ளியில் கல்லூரியிலும் என்பெயரை வசந்தம் என்று கொடுத்திருந்தும் யாருமே அழைக்கவில்லை. வசந்தி என்றே சுருக்கிவிட்டனர்.

ஆசிரியர் பயிற்சி முடித்து எங்கள் கிராமத்தில் ஆசிரியை பணிக்குப்போன பள்ளிக்கூடத்தில் சக ஆசிரியர் எழிலன் என்னை 'வசந்தம் டீச்சர்' என அழைத்தபோது பரவசமாகிப் போனேன். எழிலன் சேலத்திலிருந்து புதிதாக பள்ளியில் வேலைக்கு சேர்ந்தவர்.

"வசந்தம்! ஆஹா! அழகான பெயர்!"...என்றார் முப்பதுவயது இருக்கும் எழிலான இளைஞர்தான் பெயருக்கு ஏற்றமாதிரி.

எழிலனுக்கு இசையிலும் கவிதை எழுதுவதிலும் மிகவும் ஆர்வமாம். "அப்படியே எங்கம்மாவின் குணங்கள் உங்ககிட்ட இருக்கு!" நெகிழ்ந்தேன் நான்.

என்ன செய்வது மனதின் இயல்பு அது. அன்பை மழையாய் பொழிபவர்களிடம் அடிமையாகித்தான் போகிறது அதிலும் ஏச்சும் பேச்சும் மட்டுமே கேட்டுக்கிடந்த வறண்ட பாலைவாழ்க்கைக்கு அன்புச்சுனை எங்கிருந்தாலும் அது அமுதமாகிவிடுகிறது.

"காலங்களில் அவள் வசந்தம்!" என்ற பாடலை பள்ளி ஆண்டுவிழாவின்போது எழிலன் பாடிய காரணத்தை நான்மட்டுமே அறிவேன்.

ஆனாலும் என்விருப்பத்தை எழிலனிடம் நான் சொல்லத் தயங்கினேன். சித்தியின் பிடிவாதமும் அரக்ககுணமும் அனைவரும் அறிந்த கதைதான். எழிலனுக்கும் என்குடும்பக் கதை தெரிந்திருந்தபடியால் என்னிடம் காதலை வற்புறுத்திச் சொல்லவில்லை. காதலைச் சொல்ல வார்த்தைகள் வேண்டுமா என்ன கண்களின் வார்த்தைகள் போதாதா?

தம்மை விரும்புகிறவர்களோடு வாழ பலருக்குக் கொடுத்து வைப்பதில்லை அதனாலேயே வந்த வாழ்க்கையை வேறுவழியின்றி விரும்பி ஏற்கிறார்கள்.

"வசந்தம்! உங்களுக்காக என் இதயக்கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். அதுமட்டும் உறுதி. எல்லாரையும் பகைத்துக்கொண்டு நாம் வாழமுடியாதுதான். ஆனால் உங்க நலனுக்காக என் மனம் வேண்டிக்கொண்டே இருக்கும் வசந்தம்!"

எழிலன் அண்மையில் இப்படிச்சொன்னபோது என்னையுமறியாமல் என் கண் கலங்கித்தான் போனது.

பூக்களை கை பறித்தாலும் மனசு எங்கங்கோ போய் ஏதேதோ எண்ணங்களைப் பறித்துப் போட்டது. திக்கற்றவர்களின் எண்ணங்கள்கூட உதிரிப்பூக்கள்தான்.

"ஏ துக்கிரி எங்கடிதொலைஞ்சே?"

சித்தியின் கூப்பாடு என்னைக் கலைத்துப்போட பின்கட்டு தோட்டத்திலிருந்து உள்ளே கூடத்துக்கு ஓடிவந்தேன்.

"ஏய்.. இப்போ அரைமணில.உன்னைய ஓமலூரிலேந்து பொண்ணு பாக்கவராங்க... டவுனுக்காரங்க.. பையனுக்கு பாங்குல ப்யூன் வேலையாம்.. ஒரேபையன், நாலுதங்கச்சியாம். காலுகொஞ்சம் ஊனமாம் பையனுக்கு. நான் பரவால்லன்னுட்டேன் அதனால சீர்வகைகள் நமக்கு கணிசமா குறையுதே அதான்."

அப்பா ஏதோ பேச வாய் திறந்தார் ஆனால் சித்தியின் உஷ்ணப்பார்வையில் மௌனமானார். பலி ஆடுபோல நான் பெண்பார்க்க வந்தவர்கள் முன்புவந்து நின்றேன்.

"பொண்ணைப் பிடிச்சிருக்கு எங்களுக்கு" என்று பையனின் தாயார் சொன்னதும் சித்தி வாயெல்லாம் பல்லானாள்.

"எதுக்கும் பொண்னையும் கேட்டுச் சொல்லுங்க"

"அவளை என்ன கேக்கறது? எல்லாம் பிடிச்சிருக்கும்.எங்களுக்குப்பிடிச்சா போதும்"

"அதுக்கில்ல பையனுக்கு கால் ஊனம்.."

"அது பரவால்லீங்க"

"பொண்ணு நலல் சிவப்பு. பையன் கறுப்பு"

"ஐய ஆம்பிளங்களுக்கு அழகே கருப்புதான்"

" பையனுக்கு நாலுதங்கச்சிங்க, கல்யாணம் ஆகணும் .. தனிக்குடித்தனமெல்லாம் நடக்காது. எல்லாரும் சேந்துதான் இருக்கணும்"

"அட அதுக்கென்ன அவ இருப்பா உங்ககூடத்தான்"

" பையனுக்கு கொஞ்சம் குடிப்பழக்கம் உண்டு அதனால வீட்டைகவனிக்காம இருக்கமாட்டான்."

"அது அப்டித்தான் இளவயசுல்ல ...பொறுப்புவந்தா எல்லாம் சரியாகும்"

"அப்றோம் ராதிகாம்மா...?'

"என்ன சொல்லுங்க.. கல்யாணத்தேதி குறிக்கறது பத்திதானே கேக்கப் போறீங்க?"

"அதுக்குமுன்னாடி.... உங்க வீட்டுப்பொண்ணு பேரு வசந்தம்னு இருக்கில்ல அதே பேர்ல எங்க மாமியார் பேரும் இருக்கு..எங்க மாமியார் பேரை நான் முகத்தில அடிச்சமாதிரிகூப்பிட ஆவாது அவங்க 94வயசுல வீட்டோட கிடக்கறாங்க.. அதனால பொண்ணு பேரை மாத்திடணும். வசந்தம் என்கிறது பழங்காலப்பேரு வேற .. என் மகனுக்குப் பிடிச்சமாதிரி மாடர்னா புதுசா வர்ஷான்னு மாத்திடலாம். கல்யாணப்பத்திரிகைல இந்தப்பேருதான் போடணும் என்ன இதுக்கு சம்மதமா?"

"ஆஹா வெறும் பேருதான மாத்தணும்? மாத்திட்டாப்போச்சி..வசந்தம் எனக்கும் பிடிக்காத பெயருதான் வர்ஷா நல்லாருக்கு..."

சித்தி இப்படிச்சொல்லும்போது நான் ஆவேசமாய் குறுக்கிட்டு கத்த ஆரம்பிக்கிறேன் "என்ன! பேரை மாத்தறதா? அதுக்கு என்கிட்ட அனுமதி கேட்டீங்களா? நான் இதுக்கு சம்மதம் தருவேன்னு நினச்சீங்களா?"

சித்தி என்னை எரிப்பதுப்போல பார்க்கிறாள். பிறகு,"நீ என்னடி அனுமதியும் சம்மதமும் தர்ரது? பொறந்த ஒரேவருஷத்தில பெத்தவளை முழுங்கின துக்கிரி அதிர்ஷ்டக்கட்டை! உனக்கு இத்தனை வயசாகி இந்த வாழ்க்கை கிடைக்க நாந்தான் காரணம் அதைமறந்து நடுச்சபைல கூச்சலா போடற?" என்றாள் வெறுப்போடு.

நான் ஒருக்கணம் அமைதியாய் நிற்கிறேன், பிறகு அனைவரையும் நோக்கி கைகுவித்தபடி, "எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கறேன்..மனிதர்கள் முதலில் தன்னை, தன் பெயரை நேசிக்கணும். அப்போதான் மத்தவர்களையும் மற்றவர்களின் பெயர்களிலும் ஒர் அபிமானமும் மரியாதையும் இருக்கும். நான் என்பெயரை நேசிக்றேன் செத்துப்போன என் அம்மா எனக்கு வைத்த பெயரை நான் எதுக்காக மாத்திக்கணும்? என் பெயரையும் என்னையும் மதிக்கிற ஆத்மா எனக்காக காத்திட்டிருக்கு, என் வாழ்க்கை இனி இங்கே தொடராது அங்கேதான்....." என்று பேசிவிட்டு அப்பாவை ஏறிட்டேன் அவர் கையசைத்து விடைகொடுத்தார். மௌனமாய் நான் வெளியேறியபோது சித்தியின் காட்டுக்கூச்சல் தெருக்கோடிவரை தொடர்கிறது.

எப்போதோ வாசித்த கவிதை ஒன்று அடிமனசிலிருந்து கீறிக்கொண்டு வருகிறது.

"நெடுந்தூரக்கனவில் நலிந்து
உடைந்ததென் கண்ணாடி
சிதறிய சில்லுகளில் தெறிக்கும்
தூரங்களில் சரிந்து செல்லும்
நினைவுகளின் ஆங்கார ஓசை
எதிரொலிக்கும் எல்லாதிசைகளிலும்
கனவுகளின் குரல்கசியும்'

கூர் அலகைவைத்துக்கொண்டு குருவி ஒன்று இதயத்தைக் குத்துவதுபோல வேதனை. அன்புச்சுனையில்தான் என் வேதனைகளை கழுவிக்கொள்ளவேண்டும்.

வாழ்க்கையின் வசந்தப்பாதையை அறிந்துவிட்டதுபோல கால்கள் எழிலனின் இருப்பிடத்தை நோக்கி வேகமாய் நடக்கின்றன.









Back to top Go down
 
~~ Tamil Story ~~ என் பெயர் வசந்தம் ~~
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story ~~ ரகசியப் பெயர்
» ~~ Tamil Story ~~ என் பெயர் ஒளரங்கசீப!
» ~~ Tamil Story ~~ பரிச்சயக்கோணங்கள்
» ~~ Tamil story ~~ டி.என்.ஏ
»  == Tamil Story ~~ பி ன் வா ச ல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: