arun. Administrator
Posts : 2039 Points : 6412 Join date : 2010-06-22
| Subject: ~~ Tamil Story ~~ 99 அல்ல 100 சதவீத முழுத்தோல்வி ~~ Wed Nov 16, 2011 4:04 am | |
| 99 அல்ல 100 சதவீத முழுத்தோல்வி ‘ஹலோ”
‘ஹலோ”
‘என்ன பண்ணிகிட்டு இருக்க”
‘தூங்கிகிட்டு இருக்கேன்”
‘காலை 10 மணிக்கு என்ன தூக்கம் வேண்டி கிடக்கு”
‘நைட் ட்யூட்டி பாத்துட்டு வந்தேன் அதான்”
‘ஓ நைட் ட்யூட்டி பாத்தா, காலைல தூங்கணுமா... உனக்கு வெக்கமா இல்ல”
‘இல்ல”
‘என்னை உன்னால சமாளிக்க முடியல்ல”
‘சரியா புரிஞ்சுகிட்ட, வெரிகுட்”
‘உன்னை இப்படித்தான் கல்யாணத்துக்குப் பின் டெய்லி டார்ச்சர் பண்ணுவேன்”
‘சரி அப்புறம் டார்ச்சர் பண்ணு இப்ப வை”
உடனே கைபேசியை ஸ்விட்ச் ஆப் செய்தால் சிரச்சேதம் செய்தாலும் செய்துவிடுவாள். அதனால் 5 நிமிடங்கள் நான் விழித்திருக்க வேண்டியிருந்தது. இல்லையெனில் மீண்டும் 11 மணிக்கு நான் எழுப்பப்படுவேன், நான் தூங்கிக் கொண்டிருந்தேனா? இல்லை வேறு ஏதேனும் செய்து கொண்டிருந்தேனா? என்பது தெரிந்து கொள்ளப்படுவதற்காக. மதியம் 2 மணிக்கு செல்ல வேண்டிய அலுவலகத்திற்கு 3 மணிக்கு சென்றாலும் அங்கு என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது. 4 மணிக்கு வருபவர்களால் என்னை எப்படி கேள்வி கேட்க முடியும். ஆனால் நான் அப்படியில்லை. எனக்கு பன்ச்சுவாலிடி ரொம்ப முக்கியம் அதனால் 2.55க்கெல்லாம் அலுவலகத்திற்குள் சென்று விடுவேன். கடமை உணர்ச்சி உந்தித் தள்ள 1.30க்கு எழுந்து கைப்பேசியை ஸ்விட்ச் ஆன் செய்தால், தொடர்ச்சியாக 52 குறுஞ்செய்திகள், வாள்முனைக் கத்திகள் வெட்டிக் கொள்ளும் சப்தங்களுடன் வெளிப்பட்டன. அதில் கடைசி 25 குறுஞ்செயதிகள்..........
‘மனசாட்சி இல்லாதவனே” ------------------------
அவளுக்கு என்னிடம் எதை அறிந்து கொள்ளும் ஆர்வம் என்று தெரியவில்லை. என்னிடம் ஏதோ ஒன்று அவளை உறுத்திக் கொண்டே இருக்கிறது. இடைவிடாது என்னைக் கண்காணிக்க வேண்டும் என்கிற எந்த ஆர்வம் அவளை உந்தித் தள்ளுகிறது என்றுதான் புரியவில்லை. இதோபார் பெண்ணே, என்னிடம் மறைக்க ஒன்றுமே இல்லை. நான் எப்பொழுதும் வெளிப்படையாகவே இருக்கிறேன். நான் ஒரு திறந்த புத்தகம் என்று கூறினால், அவள் என்னை அடிப்பதற்கு தேர்ந்தெடுக்கும் புத்தகம் லிப்கோ டிக்ஷனரியாகத்தான் இருக்கும். இதைவிட எடை குறைந்த புத்தகம் அவளுடைய கோபத்துக்கு ஈடாகாது.
இரவு நேரம் சினிமா பார்த்து விட்டு வீட்டிற்கு செல்லும்போது, மௌண்ட் ரோட்டின் நடுவே வண்டியை மறைத்து சாவியை பிடுங்கிக் கொண்டு, ஓரமாக அழைத்துச் சென்று கண்களை இடுக்கி கூர்மையாக்கி, சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டே
‘உன்னைப்பார்த்தாலே தெரிகிறது, நீ குடித்துவிட்டுத்தான் வண்டி ஓட்டுகிறாய்' என்று கூறும் காவல்துறை அதிகாரிக்கும், உனக்கும் என்ன வித்தியாசம். உங்கள் இருவருக்கும் அதிகபட்சம் 6 வித்தியாசங்கள் கூட கிடையாது என்று கூறினால் நீ கோபித்துக் கொள்வாயா? என்று கேட்டதற்கு நீ என்ன கூறினாய்......
‘இந்த ஊரில் இருக்கும் ஒரு உண்மையான, நேர்மையான காவல்துறை அதிகாரியை எனக்கு அடையாளம் காட்டியதற்கு நன்றி' என்று கூறினாய்.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்
‘ஆண்களின் ஆன்மீகத் தேடலுக்கு பெண்கள் தான் முழுமுதற் காரணம் என்று சொன்னால் அது மிகையில்லை” என்று முணுமுணுத்ததற்கு நீ கூறினாய்,
‘என்னை உன்னால சமாளிக்க முடியல்ல”
நான் அவள் மீதிருந்த பார்வையை அகற்றாமல் கூறினேன்.
‘அது உனக்கே நல்லா தெரிஞ்சிருக்கே”
-----------------------------
அவள் : உனக்கு எந்தப்பட கதாநாயகி பிடிக்கும்
திரு. ஓ.பி. பன்னீர் செல்வத்தை, அம்மா 2 கடினமான வார்த்தைகளை உபயோகித்து திட்டிவிட்டால், என்னவிதமான கலவர உணர்ச்சிக்கு ஆளாவாரோ அதைப்போன்று 2 மடங்கு உணர்ச்சிக்கு ஆளாகிப்போனேன் நான். ஆண்கள் கலங்கக் கூடாது என்கிற வறட்டுத்தனமான வன்முறையை எத்தனை காலமாக இந்த சமுதாயம் திணித்து வைத்திருக்கிறது. ஒரு நல்லநேரம், கெட்டநேரம் பார்த்து அழுது தொலைக்க முடிகிறதா? கடவுளே, இனிமேல் உன்னை கடவுளே என்று கூப்பிட்டால் என்னை செருப்பால் அடி.......
அவள் என் மௌனத்தை கலைத்தபடி மீண்டும் கேட்டாள்.
‘உனக்கு எந்தபட ஹீரோயின் ரொம்ப பிடிக்கும்”
நான் என்ன கேணப்பயலா, பெண்களின் இந்தவிதமான அரசியல்தனங்கள் எல்லாம் எனக்கு புரியாதா என்ன? உஷாராக பதிலளித்தேன்...
‘கே.பி. சுந்தராம்பாள்”
சொல்லக்கூடாது என்றுதான் நினைத்தேன். இருந்தாலும் சொல்லித் தொலைத்து விட்டேன். சமாளித்துக் கொள்ளலாம் என்கிற தைரியத்தில். அவள் என்னை முறைத்துப் பார்த்தாள்.
‘அவங்க குரல் எவ்வளவு கணீர் என்று இருக்கும் தெரியுமா?”
மறுபடியும் முறைத்துப்பார்த்தாள்
‘தெய்வீகமான முகம், அவங்க முகம்”
அவள் முகம் சிவந்து போனது, உண்மைதான் கோப்ப்படும்போது, முகத்தில் ரத்தஓட்டம் அதிகரிக்கத்தான் செய்கிறது.
‘அந்த காலத்துலயே ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குனாங்க தெரியுமா?”
அவள் கூறினாள் ‘நீ ரொம்ப ஓவரா பொய் பேசுற”
எனக்கும் அப்படித்தான் தோன்றியது, சற்று குறைத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.
‘ம்ம்ம்.........(யோசிப்பதாக காட்டிக் கொண்டு, முன்னேற்பாடாக யோசித்து வைத்திருந்த அந்த பெயரைக் கூறினேன்) கே.ஆர். விஜயா கூட எனக்கு ரொம்ப பிடிக்கும்”
அவளிடமிருந்து என்னவிதமான ரியாக்ஷன் வருகிறது என்பதை பன்னாட்டு விஞ்ஞானிகள் குழு அமைத்துத்தான் கண்டுபிடிக்க வேண்டும். அவள் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தாள். நானே அந்த மௌனத்தை கலைத்தேன்.
‘அவங்க அம்மன் வேஷம் போட்டா எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா? அப்படியே கால்ல விழுந்து கும்பிடலாம்”
அவள் சிரித்துக் கொண்டே கூறினாள்,
‘எனக்குக் கூட அவங்கள ரொம்ப பிடிக்கும்”
அவள் சிரிப்பதை பார்த்தால் அதில் நிஜம் தெரியவில்லை. அந்த சிரிப்பு திருமதி செல்வம் சீரியலில் வரும் வில்லியை நியாபகப்படுத்தியது. அந்த சிரிப்பு புயலுக்கு முன் ஏற்பட்ட அனதியோ என்கிற சந்தேகம் இல்லாமல் இல்லை.
அவள் சிரித்துக் கொண்டே மேலும் ஒரு (கடைசி) கேள்வி கேட்டாள்.
அவள் கையில் என் செல்போன்
‘அப்படியென்றால் இது யாரு, இவங்க பேருதான் கே.ஆர். விஜயாவா?”
எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது நேற்று நான் அனுஷ்காவை செட் அஸ் வால்பேப்பர் கொடுத்தது கனவில் அல்ல நிஜத்தில் என்று.
நான் அந்த செல்போன் பழுதுபார்க்கும் கடைக்காரரிடம் கேட்டேன்.
‘ஓங்கி சுவற்றில் எறியப்பட்ட செல்போனை என்ன செய்யலாம்” என்று. அவர் கூறினார்.
‘இதே வரிசையில் 2 கடை தள்ளிச் சென்றால் எடைக்கு பேரிச்சம்பழம் கொடுப்பார்கள்” என்று
----------------------------
அன்று கடற்கரை மணிலில் அமர்ந்திருந்தோம்
திடீரென கேட்டாள் ‘உனக்கு எந்த கடவுள் பிடிக்கும்”
எனக்கு நிறைய பயிற்சி ஏற்பட்டு விட்டது. கேள்வி கேட்டவுடனே பதில் அளித்துவிடக்கூடாது என்பதில். ஆகையால் அந்த கேள்வியின் உள்ளே என்னவிதமான வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது என தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் அவளே கேள்வியை கேட்டாள்.
‘உனக்கு ராமர் புடிக்குமா? கிருஷ்ணன் புடிக்குமா?”
ஆஹா, இந்த கேள்விக்குத்தான் எனக்கு பதில் தெரியுமே, ராமருக்கு மட்டும் ‘ர்' போட்டு மரியாதையாக கூப்பிடுவார்களாம், கிருஷ்ணனுக்கு ‘ன்' போட்டு ஒருமையில் அழைப்பார்களாம். இதிலிருந்தே தெரியவில்லை. பெண்கள் எந்த கடவுளை விரும்புகிறார்கள் என்று, ஏற்கனவே இதுபோன்ற ஒரு கேள்வியில் (பிள்ளையாரா? முருகனா?) முருகன் என்று பதிலளித்து நான் வாங்கிக் கட்டியிருக்கிறேனே?
நான் யோசிக்கவேயில்லை, பட்டென்று பதில் சொன்னேன்.
‘ராமர்ர்ர்ர்ர்”
‘ஓஹோ, அப்படின்னா நீ என்னை சந்தேகப்படுவியா?”
ஐயையோ, சந்தேகமா ராமர் என்னத்தை பண்ணித் தொலைச்சார் என வேகமாக யோசித்துப் பார்த்ததில் ராமாயணத்தின் கிளைமாக்ஸ் நியாபகத்திற்கு வந்த்து. அவள் எப்பொழுதோ ட்ரையல் பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறாள். நான் வகையாக சிக்கிக்கொண்டேன். நான் அவளை சமாதானப்படுத்துவதற்காக எதையாவது கூறியாக வேண்டும். வேறு என்ன செய்வது. நான் என்ன கூற வேண்டும் என்று அவள் எதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாளோ அதைத்தானே கூறியாக வேண்டும். அவள் ஏற்கனவே என்னை பிக்ஸ் செய்துவிட்டாள். இனி அவளது எதிர்பார்ப்பு என்கிற நேர்கோட்டில் தானே நான் பயணித்தாக வேண்டும். அவள் எதிர்பார்த்த மற்றும் என்னுடைய சமாதான வார்த்தைகள்.
‘மனைவியை சந்தேகப்படுவது போன்ற மோசமான செயல் இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை. உண்மையிலேயே ராமர் செய்த்து மிகப்பெரிய தவறு, சீதைக்கும் மாதவிக்கும் வித்தியாசம் தெரியாதவரா அந்த ராமர்..............(மிக வருத்தமாக முகத்தை வைத்துக் கொண்டு) சே......”
‘நீ ஏன் அந்த எழுத்தாளர் மாதிரி மாத்தி, மாத்தி பேசுற”
எனக்குத் தெரியும் அவள் யாரை குறிப்பிடுகிறாள் என்று, நான் கோப்ப்பட வேண்டுமாம். அது இனிமேல் நடக்காது என்பது அவளுக்குத் தெரியாது.
‘நான் ஒன்றும் மாற்றி பேசவில்லை. நிஜமாகத்தான் கூறுகிறேன், இந்த நிமிடம் முதல் எனக்கு ராமரைப் பிடிக்காது”
‘ஆனால், எனக்கு ராமரைத்தான் பிடிக்கும், கிருஷ்ணனைப் பிடிக்காது”
ஏன் என் பக்கத்தில் முட்டிக் கொள்ள வசதியாக ஒரு தூண் இல்லை. நான் ஒரு ராசியில்லாதவன், திடீரென நான் மௌன விரதம் பூண்டுவிட்டேன். மேலும் அவளே தொடர்ந்தாள்.
‘நீ ராமர் மாதிரி இருக்கணும், ஆனா அவர் மாதிரி இருக்க்க் கூடாது, ஆனா என்னிக்குமே கிருஷ்ணன் மாதிரி மட்டும் இருக்கவே கூடாது”
நான் வட்டமாக தலையை ஆட்டினேன், அதற்கு எப்படி வேண்டுமானாலும் பொருள் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு நான் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறேன்
சிறிது நேர அமைதிக்குப் பின்னர்,
‘நீ இப்போ மனசுக்குள்ள என்ன நினைக்கிறன்னு சொல்லவா”
‘இவள வச்சு எப்படி சமாளிக்கிறதுன்னுதான யோசிக்கிற”
எங்கிருந்துதான் அவ்வளவு தைரியம் வந்த்தோ, கடைசியில் நான் பேசிவிட்டேன்
‘நீ புத்திசாலிப் பெண்”
-----------------------------------
திரையரங்கினுள் திரைப்படம் தொடங்கி சரியாக 40வது நிமிடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டாள்.
‘சூர்யா என்றைக்காவது பளார், பளார்ன்னு என் கன்னத்துல அறையனும்னு உனக்கு தோணுச்சுன்னா நீ என்ன பண்ணுவ”
சற்றும் யோசிக்காமல் கூறினேன்.
‘என் வலது கையை வெட்டிக் கொள்வேன்”
அவள் முகத்தில் புன்னகை
‘அப்போ உதைக்கனும்னு தோணுச்சுன்னா காலை வெட்டிக் கொள்வியா”
நான் அப்பாவியாய் சிரித்தேன். எனக்கு ஊனமுற்றோருக்கான உதவித் தொகையை வாங்கித்தராமல் விடமாட்டாள் போல. இப்பொழுது எதாவது நான் கூறியாக வேண்டுமே, பள்ளி காலங்களிலிருந்தே நான் இப்படித்தான். இந்தியாவின் தலைநகரம் என்ன என விஜய் படத்தில் முடியை விரித்துப் போட்டுக் கொண்டு வரும் வில்லன்களைப் போல வெறித்தனமாக முகத்தை வைத்துக் கொணடு ஆசிரியர் கேட்கும் போது கூட, வெள்ளைக்காரன் முன் நின்ற மகாத்மாக காந்தியைப் போல அமைதியாக நிற்பேன். 5ல் வளையாதது வேறு எப்பொழுதுதான் வளையப்போகிறது. நான் அந்த சீரியல் வசனத்தை கூறித் தொலைத்தேன்.
‘யாராவது அன்பானவங்கள காலால உதைப்பாங்களா?”
‘அப்போ அன்பு கொறைஞ்சா என்ன உதைப்ப......... அப்படித்தானே”
அவள் பிரில்லியண்டாக இருக்கிறாள்
‘அப்படியெல்லாம் நான் செய்ய மாட்டேன்....... என்னை நம்பு”
"உதைக்கனும்னு தோணுச்சுன்னா என்ன பண்ணுவ” முறைபாகவும் ஏதோ ஒரு குறிப்பிட்ட பதிலை எதிர்பார்த்தபடியும் கேட்டாள்.
எனக்கு புரிந்து விட்டது என்ன கூற வேண்டும் என்று. இது ஏன் எனக்கு ஆரம்பத்திலேயே தோன்றவில்லை. நான் கூறினேன்.
‘உதைக்கணும்னு தோணுச்சுன்னா என் வலது காலை வெட்டிக் கொள்வேன்”
அவள் முகத்தில் புன்னகை
பின் படம் முடிவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் அந்த கேள்வியைக் கேட்டாள்.
‘என்னை சமாளிக்க முடியலன்னு உனக்கு தோணுதா”
அப்பொழுதும் என் தெறிநிலை கலையவில்லையே...... நான் கூறினேன்.
‘சே..சே..”
அவளுக்கு முழு திருப்தி நான் முழுதாக வார்த்தெடுக்கப்பட்டு விட்டேன் என்பதில், நான் தயாராகிவிட்டேன், இனி பிரச்னையே இல்லை. என் 99 அல்ல 100 சதவீத முழுத் தோல்வி குறித்து அவள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. | |
|