arun. Administrator
Posts : 2039 Points : 6412 Join date : 2010-06-22
| Subject: ~~ நம்முடன் உள்ள முதியோர்களை நினைவில் கொள்ளுங்கள்~~ Thu Nov 24, 2011 8:53 am | |
| நம்முடன் உள்ள முதியோர்களை நினைவில் கொள்ளுங்கள் நாம் நம் வாழ்நாளில் நமக்கென்று வசிக்க வீடு கட்டுவது ஒருமுறைதான். நாம் வீடு கட்டத் திட்டமிடும் பொழுது நம் மனைவியைக் கூட கலந்து ஆலோசித்துச் செயல்படுவது இல்லை. அப்படியே கலந்து பேசினாலும், நம் சக்திக்குத் தகுந்தாற்போல திட்டமிடும்பொழுது தன்னையும், தன் குழந்தைகளையும் மட்டுமே மனதில் கொள்கிறோம்.
வீடு என்றவுடன் வராந்தா (தாழ்வாரம்), ஹால், இரண்டு படுக்கை அறைகள், சமையல் அறை, சாப்பாட்டு அறை, பூஜை அறை, பொருள் வைப்பு அறை, குளியல் மற்றும் கழிப்பறை என்பது மட்டுமே நம் திட்டமாக இருக்கும். வராந்தாவிற்கு வெளியே கார், இருசக்கர வாகனம் நிறுத்த வசதியான மூடு முன்றில் (Porch) வேண்டும்.
வீட்டின் வடிவமைப்புக்கு தகுந்தாற்போல் நாம் அனுசரித்து இருக்கப் போகிறோமா அல்லது நம் தேவைக்குத் தகுந்தாற்போல் நாம் வடிவமைக்கிறோமா என்பதே கேள்வி. முக்கியமாக நம்முடன் இருக்கும் முதியோர்களையும் மனதில் வைத்து (எதிர் காலத்தில் நமக்கும் முதுமை வரலாம்) கட்டப் போகும் வீட்டை, கட்டிட வடிவமைப்பாளர் (Architect) ஆலோசனையுடன் வடிவமைத்தால் அனைவர்க்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
கட்டிட வடிவமைப்பின் போதும், கட்டுமானத்தின் போதும் செய்யக்கூடிய சிற்சில மாறுதல்களினால் நம்முடன் வசிக்கும் முதியோர்கள் வீட்டின் பல பகுதிகளுக்கும் எளிதாகவும் தடங்கலின்றியும் சென்று வரலாம். முதியோர்கள் தங்கள் அறையிலிருந்து கூடம், சாப்பாட்டு அறை, பூஜை அறை சென்று வரத் தகுந்தபடி வடிவமைப்பு அமைய வேண்டும்.
முதியோர்கள் வசதிக்காக வீட்டிற்குள் நுழைய சரிவுப்பாதை (Ramp) அமைக்கலாம். வீட்டின் நுழைவாயில் படிகளில் ஏறுமிடம், மாடிப்படி, குளியறைகளில் கைப்பிடிக் கிராதி (Hand rails) அமைப்பதும், குளிக்குமிடம், கழிவறைக்கருகில் கைப்பிடிக் கம்பி (Grab-bar) அமைப்பதும் அவர்கள் எளிதில் நடமாட உதவும். பெரும்பாலும் குளியலறையில் வழுக்கி விழுந்து தொடை எலும்பின் மேல் பகுதி முறிவு ஏற்படலாம். குளியறை தளத்தில் வழுக்காமலிருக்க Anti-skid tiles போடவேண்டும்.
தரையிலும், பிற அறைகளுக்குச் செல்லும் வழிப் பாதையிலும் சமதளமாகவும், வெளிச்சமாகவும், தளம் வழுக்காமலும் (Anti-skid tiles அல்லது சற்று சொரசொரப்பான சிமென்ட் தளம்) இருக்கவேண்டும். இந்த ஏற்பாட்டினால் முதியோர்கள் வீட்டினுள் சிரமமின்றி நடமாடுவது எளிது.
முதியோர்கள் வசிக்கும் அறை நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் கிடைக்கும் வகையில் சன்னல்கள் அமைந்திருக்க வேண்டும். அவர்கள் துணிமணிகளும், புத்தகங்களும் வைக்கும் அலமாரிகள் உயரம் அதிகமின்றி, சிரமமின்றி எடுக்க வசதியாக இருக்க வேண்டும். அவர்கள் உபயோகிக்கும் கட்டில்கள் உயரம் குறைந்து அகலமாகவும், நாற்காலி, மேசைகள் அதிக உயரமின்றி படிப்பதற்கு வசதியாகவும் இருக்க வேண்டும்.
விளக்கு, இரவு விளக்கு, காற்றாடி, குளிர்சாதனப் பெட்டி ஆகியவைகளின் விசை இயக்கிகள் (Switches) முதியோர்கள் கைக்கெட்டும் தூரத்தில் அமைக்கப்பட வேண்டும். தொலைபேசி, படுக்கைக்கு அருகில் கம்பிவடம் (Cable wire) தடுக்கி விடாமல் இருக்க வேண்டும். அவசரத்திற்கு உங்களை அழைக்க படுக்கைக்கருகில் அழைப்பு மணி அமைப்பது (Calling Bell) நல்லது.
பெரியோர்கள் முதியோர்கள் நம் வீட்டின் பொக்கிஷங்கள். அவர்கள் அனுபவங்கள் நாம் வாழ வழி காட்டுகின்றன. அவர்களை அலட்சியப்படுத்தாமல் பாதுகாப்போம். அவர்களிடம் ஒவ்வொரு நாளும் உரையாடி சிறிது நேரம் செலவு செய்வோம். அவர்கள் மகிழ்ந்தால் நாமும் மகிழ்வோம். அவர்கள் உடல் நலனிலும், மன நலனிலும் அக்கறை எடுத்துக் கொள்வோம். | |
|