BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசுயம்வர காண்டம் பக்கம் 2 Button10

 

 சுயம்வர காண்டம் பக்கம் 2

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

சுயம்வர காண்டம் பக்கம் 2 Empty
PostSubject: சுயம்வர காண்டம் பக்கம் 2   சுயம்வர காண்டம் பக்கம் 2 Icon_minitimeFri Apr 02, 2010 12:45 pm

காதல் உறுதி.
—————————-

‘பூவின்வாய் வாளி புகுந்த வழியேயென்
ஆவியார் போனாலும் அவ்வழியே – பாவியேன்
ஆசைபோ காதெ’ன் றழிந்தாள் அணியாழின்
ஓசைபோற் சொல்லாள் உயிர்த்து.

அழகிய யாழிசை போன்ற இனிய சொல்லையுடைய தமயந்தியானவள், ‘ மன்மதனுடைய மலர் அம்புகள் என் உடலில் பாய்ந்த துவரத்தின் வழியே என் உயிர் சென்று விட்டாலும் , அது போனவழியே ( நளன்பாலுள்ள ) பாவியான என் ஆசை மாத்திரம் போகாது!’ என்று கூறிப் பெருமூச்சு விட்டு அறிவு மயங்கினாள்.

ஞாயிற்றின் மறைவு.
—————————–

வையம் பகலிழப்ப வானம் ஒளியிழப்பப்
பொய்கையும் நீள்கழியும் புள்ளிழப்பப் – பையவே
செவ்வாய அன்றில் துணையிழப்பச் சென்றடைந்தான்
வெவ்வாய் விரிகதிரோன் வெற்பு.

கதிரவன் மறைகின்றன், இதன் பின் ஆசிரியர் அழகிய வருணனைகளைப் பொழிகின்றார். நம் நெஞ்சம் இங்கே ஆழ்கின்றது! வருனனைகளைப் பார்ப்போம்.

இவ்வுலகம் முழுவதும் பகற்பொழுதை இழக்கவும், விண்ணிடமெங்கும் ஒளி நீங்கவும், பொய்கைகளும் நீண்ட கடற்கரை உப்பங்கழிகளும் இரைதேர்ந்து உண்ணும் பறவைகளை இழக்கவும் , சிவந்த வாயையுடைய அன்றிற்பறவைகள் ஒன்றை ஒன்று பிரியாத இரட்டை எஙிற தன்மையை இழக்கவும், வெம்மையான கதிர்களையுடைய சூரியன் மெல்ல மெல்லச் சென்று மேற்கு மலையை அடைந்து மறைந்தான்.

கதிரவன் கூத்து.
————————-

மாயிரு ஞாலத் துயிர்காண வானரங்கிற்
பாயிரு ளென்னும் படாம்வாங்கிச் – சேய்நின்று
அறைந்தா ரணம்பாட ஆடிப்போய் வெய்யோன்
மறைந்தான் குடபால் வரை.

கதிரவன் என்கின்ற கூத்தன், மிகப் பெரிய இம்மண்ணுலகில் இருக்கின்ற உயிர்கள் அனைத்தும் கண்டு மகிழுமாறு, வானவெளி என்னும் நாடகமேடையில் பரந்துள்ள இருளாகிய திரைச்சீலையை ஒதுக்கி நின்று பாடுகின்றவர் உரத்த ஒலியில் மறைமொழிப் பாடல்களைப் பாடக் கூத்தாடி மேற்கில் போய் மறைந்தான்.

அந்தியின் வருகை.
————————–

மல்லிகையே வெண்சங்கா வண்டுத, வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப ,- முல்லையெனும்
மென்மாலை தோளசைய , மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது.

கதிரவனது வியக்கத்தகுந்த கூத்தைக் கண்ட நாம் அந்திப் பொழுதின் வருகையைக் காண்போம்:

வண்டுகள் மல்லிகை அரும்பையே வெண்ணிறச்சங்காகக் கொண்டு ஊதவும் , சிறந்த கரும்பு வில்லையுடைய மன்மதனானவன் மலர் அம்புகளை ஆராய்ந்து எடுத்துத் தன் உடம்பைப் பாதுகாத்துக்கொண்டு வரவும், முல்லை மலர் என்னும் மென்மையான மாலை தன் தோள்களில் அணியப் பெற்று அசைந்துகொண்டிருக்கவும் சிறிய மாலைக்காலம் என்னும் அரசு, மெல்ல நடந்து வந்தது.

அந்தியின் இயல்பு.
—————————

புற்கென்றார் அந்தி புனைமலர்க்க ணீரரும்ப
நிற்கின்ற தந்தோ நிலங்காப்பான் – முற்கொண்டு
அடைகின்ற வேந்தர்க்கும் ஆண்டஞ்சி நோர்க்கும்
இடைநின்ற காலம்போல் இன்று.

( புற்கு = பசலை நிறம் )

அந்திப்பொழுதானது, காதலால் உடல் பசலை நிறங்கொண்டவருடைய அழகிய தாமரை மலர் போன்ற கண்களிலிருந்து நீர் சுரக்கும்படி , உலகத்தைத் தங்கள் தங்களாட்சிக்குக் கொண்டு வருவதற்காக முன்னேறி நின்று அவ்விடத்தை அடைகின்ற அரசருக்கும் , அதற்கு அஞ்சி நிற்கும் அரசருக்கும் இடைப்பட்ட காலம் அவர்களுக்குக் கலக்கத்தைத்தருவது போல இப்போதிருந்தது! அந்தோ!

அந்திப் பெண் சிரித்தாள்! அதுவே நிலவு!
————————————————–

பைந்தொடியா ளாவி பருகுவான் நிற்கின்ற
அந்தி முறுவலித்த தாமென்ன – வந்தால்
மையார்வேற் கண்ணாள் வனமுலைமேல் ஆரழலைப்
பெய்வான் அமைந்த பிறை.

( பைந்தொடியாள் = பசுமையான வளையலை அணிந்த தமயந்தி, வனமுலை = அழகிய முலை, ஆர் அழல் = பெருந்தீ )

மைதீட்டப் பெற்ற வேல்போலும் கண்ணையுடைய தமயந்தியின் அழகிய முலைகள்மேல் மிக்க நிலவொளியாகிய நெருப்பைச்சொரிவதற்கு நின்ற நிலா, பசுமை நிறம் பொருந்திய வளையலை அணிந்த தமயந்தியின் உயிரை உண்பதற்குப் பொருந்தியிருக்கின்ற அந்திப் பொழுது என்னும் பெண்ணானவள் சிரித்தது என்று சொல்லும்படி வானில் தோன்றியது.

கொங்கைமேல் நெருப்பு!
—————————

கூட்டுமை போற்சிறந்த கூரிருளைக் கூன்கோட்டால்
கோட்டுமண் கொண்ட குளிர்திங்கள் – ஈட்டுமணிப்
பூணிலா மென்முலைமேற் போதாச் சொரிந்ததே
நீணிலா என்னும் நெருப்பு.

(கூட்டு மை = சேர்க்கப்பட்ட மை, பூணிலாம்= ( பூண்+ நிலார்ம்) அணிகள் விளங்கும், ‘ நிலாவும் ‘ என்பது ‘ நிலாம்’ எனத் தொக்கி நின்றது. )

கூட்டப்பட்ட மையைப் போலக் கரிய நிறம் மிக்க இருளினை , வளைவுள்ள தன் கொம்பினால் பெயர்ந்தெடுத்து மண்போல அதன் நுனியில் ஒட்டிக்கொண்டிருக்கும் குளிர்ச்சி மிகுந்த என்னும் ஆனேறு , சேர்க்கப்படுகின்ற மணிக்கற்களினால் ஆக்கிய நகைகள் விளங்குகின்ற தமயந்தியின் மெல்லிய முலைகளில் வளரும் தன்மையுடைய நிலவு என்னும் தீயை வேண்டிய மட்டில் கொட்டியது!

அன்னங்களை விளித்துக் கூறல்.
————————————–

அன்னங்காள் ! நீங்களுமவ் வாதித்தன் தானும்போய்
மன்னும் படியகலா வல்லிரவில் – மின்னும்
மழைத்தாரை வல்லிருட்டும் வாடைக்கும் நாங்கள்
பிழைத்தால்வந் தேனென்னும் பேர்.

‘அன்னப் பறவைகளே , நீங்களும் அந்த ஞாயிறும் மறைந்துபோனபின் , வந்து நீங்காது நிலைத்திருப்பது போன்ற கடினமான இரவில் , மின்னுகின்ற மேக நீர் ஒழுக்கோடு கூடிய கொடிய இருளுக்கும் வாடைக் காற்றுக்கும் நாங்கள் தப்பி உயிருடன் இருந்தால், ‘ நானும் பிழைத்து வந்தேன்!’ என்று என் பெயர் உங்களுக்குச் சொல்லும்.’

விண் மீன்களோ! கொப்புளங்களோ !
—————————————

‘செப்பிளங் கொங்கைமீர்! திங்கட் சுடர்பட்டுக்
கொப்புளங் கொண்ட குளிர்வானை – இப்பொழுதும்
மீன்பொதிந்து நின்ர விசும்பென்ப தென்கொலோ
தேன்பொதிந்த வாயால் தெரிந்து!

( செப்பு = நீர்க்கரகம், கொங்கைமீர் = கொங்கைகளை உடையவர்களே, விசும்பு = வானம் )

தமயந்தி தன் தோழிகளைப் பார்த்து, ‘ நீர்க்கரகத்தைப் போன்ற கொங்கைகளையுடைய பெண்களே , நிலவு ஒளி என்னும் வெம்மை தாக்கியதனால் கொப்புளம் கொண்டுள்ள குளிர்ச்சி பொருந்திய வானத்தை, ( அவை கொப்புளங்களே என அறிந்தும் ) உங்களது தேன் போன்ற இனிய வய்ச்சொற்களால் ‘ விண் மீன்கள் நிறைந்த வானம் ‘ என்று கூறுகின்றீர்களே ! என்ன காரணம் ?’ என்றாள்.

சிவன் காமனை எரித்தான் என்பது பொய்.
———————————————–

‘கானுந் தடங்கவுங் காமன் படைவீடு;
வானுந்தேர் வீதி; மறிகடலும் – மீனக்
கொடியாடை; வையமெல்லாங் கோதண்ட சாலை;
பொடியாடி கொன்றதெல்லாம் பொய்!’

( கான் = காடு, தடங்கா = பெரிய சோலை, மறிகடல் = அலைகள் மடிந்து விழும் கடல்.)

காடும் அகன்ற சோலைகளும் மன்மதனுக்கு ஆயுதச்சாலைகள் ; வான வெளி மன்மதனுக்குத் தேரோடும் வீதி; அலைகள் மடிந்து விழும் கடல், அவன் மீன் வடிவு பொறித்த துகிற்கொடி; இவ்வுலகம் முழுவதும் அவனுக்கு வில்வன்மை காட்டும் இடமாகும்; இங்ஙனம் இருக்க, சிவபெருமான் அவனைக் கொன்றது ( தன் நெற்றிக் கண்ணால் எரித்தான் என்று கூறுகிறார்களே, அது ) , முழுவதும் பொய்யே ஆகும்! அவன் அழிந்திருப்பின், இவைகளைக் காண முடியாதன்றோ?

‘காதலால் வருந்துகிற தமந்தி வருந்தக் காரணம் அந்தக் காமனே அல்லனோ! அவன் எரிக்கப் பெற்றது உண்மையாயின், இவ்வருத்தம் ஏன் ஏற்படப்போகிறது ?’ என்பது கருத்து. சிவபெருமான் மன்மதனை எரித்தார் என்பது புராணக் கதை.

உயிர் கொள்ளை போகின்றதே!
—————————————

‘கொள்ளைபோ கின்ற துயிர்!’என்னும் ; ‘கோளரவின்
முள்ளெயிறோ மூரி நிலா?’என்னும் ; – உள்ளம்
கொடிதிரா!’ என்னும் ; குழையுந் தழல்போல்
நெடிதிரா வாய்புலரா நின்று.

தமயந்தி, ‘என் உயிர் கொள்ளை போகின்றதே!’ என்பாள் ;’வலிமை பொருந்திய பிறை நிலவு கொடுமை மிகுந்த பாம்பினுடைய நச்சுப்பல்லோ!’ என்பாள்; ‘இந்த இரவுக் கொழிதினது உள்ளம் கொடுமையானது!’ என்பாள்; நெருப்பைப் போலச் சுடுகின்ற தொலையாத இருள் பொழுதில் வாய் உலர்ந்து போக அரற்றி மனம் வருந்துவாள்.

சுடுகின்றதே! காரணமென்?
————————————-

‘வெங்கதிரோன் றன்னை விழுங்கிப் புழுங்கியோ
கொங்கை அனலிற் கொளுந்தியோ, – திங்கள்
விரிகின்ற வெண்ணிலவால் வேகின்ற தேயோ,
எரிகின்ற தென்னோ இரா!’

இப்பாடலில் தமயந்தியின் புலம்பலின் முழு வடிவையும் காணலாம்.

‘இவ்விரவுப் பொழுதானது சுடுகின்றதே! காரணம் யாது? தெரியவில்லையே ! வெம்மையுடைய கதிரவனைத் தான் விழுங்கியதால் தன்னுள் கொதிப்புக் கொண்டோ, அல்லது என் கொங்கை முற்றத்தில் தோன்றிய நெருப்பினால் கொளுத்தப்பெற்றோ , திங்களினின்றும் வெளிப்பட்டு வருகின்ற வெண்மையான நிலவொளியாலோ , எதனால்? அறிய முடியவில்லையே ! என்னைச்சுட்டெரிக்கின்றதே! என் செய்வேன்!’

இரவோ, யுகமோ!
——————–

‘ஊழி பலவோர் இரவாயிற் றோ!’என்னும்;
‘கோழி குரலடைந்த தோ!’என்னும்;- ‘ஆழி
துயிலாதோ!’ என்னும் சுடர்மதியம் கான்ற
வெயிலால் உடலுருகா வீழ்ந்து.

( ஊழி = யுகம், ஆழி = கடல், என்னும் = என்பாள் , செய்யுமென் வாய்பாட்டு வினைமுற்று. )

ஒளியையுடைய மதி பொழிந்த கதிரொளியால் தமயந்தி உடம்பு உருகி விழுந்து , ‘ பல ஊழிக்காலம் ஒன்றாய்த் திரண்டு ஒரே இரவுப் பொழுதாயிற்றோ!’என்பாள்; ‘சாமந்தோறும் கூவும் கோழி குரல் அடைக்கப்பெற்றதோ!’ என்பாள் ; ‘இக்கடல் இரவும் பகலும் தூங்க மாட்டாதோ!’ என்பாள்.

அடங்காத துயர்.
——————————

ஆடி வரிவண் டருகே பறக்கவே
வாடி மெலிவாள் வனமுலைமேல் – ஓடிப்
பொறையாகச் சோர்வாள் பொறுக்குமோ மோகத்
துறைவாய் அடங்காத் துயர்?

புள்ளிகளையுடைய வண்டுகள் மகரந்தப் பொடியில் முழுகித் தமயந்தியின் பக்கத்தில் வந்து பறக்க ( அவற்றின் சிறகால் எழுந்த காற்றினால் ) உடல் வாட்டம் கொண்டு மெலிபவளாகிய தமயந்தி, அழகிய கொங்கைகள் ( காதலால் பருத்து ) மேலெழுந்து பாரமுடையனவாகத் தளர்ச்சி அடைவாள் ; காதலென்னும் வழியில் பொறுக்க முடியாத துன்பத்தைப் பொறுக்கும் தன்மையுடையாளோ? பொறாள்!

ஈரமதியே ! ஈரம் இல்லையோ!
————————————-

‘ஈர மதியே ! இளநிலவை இங்ஙனே
சோர்குழலின் மீதே சொரிவதெவன்? – மாரன்
பொரவளித்தான் கண்ணி உனக்கு; புலரா
இரவளித்தா நல்லனோ இன்ரு?’

‘குளிர்ச்சி பொருந்திய வெண்ணிலவே, காமன் எண்ணிப்பார்த்து இன்று உன்னைப் போர் செய்யும்படி அனுப்பினான்! அதுவுமின்றி, என்றும் விடியாத இரவுப் பொழுதையும் கொடுத்திருக்கின்றான் அன்றோ? இவ்வாறு அவன் உனக்குக் கொடுத்திருந்தும் என்னிடத்து என் நீண்ட தாழ்ந்த கூந்தலின் மேல் உன் இளங்கதிர்கலைக் கொட்டி வருத்துவது என்ன கருதி? சொல்வாயாக!’

மாலையும் கருகியது!
——————————–

தாங்கு நிலவின் தழல்போய்த் தலைகொள்ளத்
தேங்குழல்சேர் வண்டு சிறைவதும்ப – ஓங்குயிர்ப்பின்
தாமங் கரியாத் தனியே தளர்கின்றாள்
யாமங் கரியாக இன்று.

( தாங்கும் நிலவின் தழல் = சந்திரன் சுமக்கும் ஒளிக்கதிர்களாகிய நெருப்பு, தாமம் = மலர் மாலை, கரியாக = சான்றாக )

நிலவிடத்துப் பொருந்திய ஒளிக்கதிர்களாகிய நெருப்பு, தமயந்தியின் தலைமேல் சென்று தாக்கியது ; அதனால் , மணம் மிக்க கூந்தலில் மொய்க்கின்ற வண்டுகளின் சிறகுகள் தீய்ந்தன; நீண்ட பெருமூச்சினால் தமயந்தியணிந்துள்ள மாலைகள் யாவும் கரிந்து போயின; இவற்றிற்குச் சான்று , இந்நாள் இரவுப்பொழுதேயாகத் தன்னந் தனியாகத் தவித்தாள்.

தமயந்தியும் தவம் செய்தாள்!
—————————————-

மையிட்டகண்ணருவி வார வளைசோரக்
கையிற் கபோலத் தலம்வைத்து – மெய்வருந்தித்
தேனிருந்த பூங்கணையே தீயாகத் தேமொழியாள்
தானிருந்து செய்வாள் தவம்.

தேனைப் போன்ற இனிமையான சொற்களையுடைய தமயந்தியின் மை தீட்டப்பெற்ற கண்களிலிருந்து அருவிபோல நீர் பெருகி வந்தது. உடல் மெலிந்தால், கை வளையல்கள் சுழன்றன. தன் கையில் தாடையைச் சாய்த்து வைத்துக் கொண்டு , தேன் பொருந்திய மலராகிய அம்புகளே நெருப்பாக அவைகளுக்கு நடுவில் அவள் தவம் செய்வாள் போன்றிருந்தாள்.

பொது மகளிர் உள்ளமே இரவு
—————————————-

அள்ளிக் கொளலாய் அடையத் திரண்டொன்றாய்க்
கொள்ளிக்கும் விள்ளாத கூரிருளாய் – உள்ளம்
புதையவே வைத்த பொதுமகளிர் தங்கள்
இதயமே போன்ற திரா.

( ஆய் = அள்ளிக்கொள்ளும் தன்மை, விள்ளாத = பெயர்ந்து செல்லாத, பொது மகளிர் = தாசிகள் )

அன்றைய இரவுப் பொழுதானது கைகளால் அள்ளிக் கொள்ளும் தன்மையுடையதாய் இருள் எல்லாம் ஒன்றாகச்சேர்ந்து தீயொளிக்குங்கூடப் பெயர்ந்து செல்லாத கூட்டமாய், தங்கள் வஞ்சத்தை மறைத்து வைத்த விலை மகளிருடைய உள்ளத்தைப் போன்றதாய் விளங்கியது.

ஊர் காவலர்.
——————-

ஊக்கிய சொல்லர் ஒலிக்குந் துடிக்குரலர்
வீக்கிய கச்சையர் வேல்வாளர் – காக்க
இடையாமங் காவலர் போந்தார் இருளின்
புடைவாய் இருள்படைத்தாற் போன்று.

( ஊக்கிய சொல் = உரத்த ஒலியையுடைய சொல், துடிக்குரலர் = உடுக்கை ஒலி போன்ற குரலையுடையவர், வீக்கிய = கட்டிய , கச்சையர் = இடையில் கட்டப்படும் கச்சினையுடையவர். )

அந்த இரவுப் பொழுதினுடைய நள்ளிரவில் ஊர்காவரர் உரத்த ஒலியோடு பேசுவோராய் , ஒலிக்கின்ற பறையோசையுடையவராய் , வேலையும் வாளையும் உடையவராய் , இருளானது ஒரு வடிவம் எடுத்து வந்தது போன்று நகரைக் காக்க வந்தனர்.

உலகம் உறங்கல்!
———————–

சேமங் களிறுபுகத் தீம்பாலின் செவ்வழியாழ்
தாமுள் ளுறைபுகுதத் தார்வண்டு – காமன்றன்
பூவாளி ஐந்திற் புகத்துயில் புக்கத்தே
ஓவாது முந்நீர் உலகு.

( தீம்பாலின் = இனிமை பொருந்திய துறையினையுடைய , செவ்வழி = ஒரு பண், பூ வாளி ஐந்தில் = ( தாமரை , அசோகு, மா, முல்லை, கருங்குவளை எனும்) மலரம்புகளாகிய ஐந்தில் , ஓவாது = இடையறாமல் )

களிறுகள் தாம் கட்டப்படும் இடத்திற்குச்c கெல்லவும், இனிமை பொருந்திய துறையினையுடைய செவ்வழி என்னும் பண்ணை இசைக்கின்ற யாழ் எனும் இசைக்கருவிகள் தங்கள் உறைகளுக்குள் நுழையவும், மலர் மாலைகளில் மொய்க்கின்ற வண்டுகள் மன்மதனுக்குரியனவான ஐவகை மலரம்பின் உள்ளே புகுந்து துயிலவும், கடலால் சூழப்பெற்ற உயிர்கள் எல்லாம் இடையறாது நன்கு தூங்கின.

பேய்களும் உறங்கின!
—————————

ஊந்தின் றுவகையால் உள்ள உயிர்புறம்பே
தோன்றும் கழுதும் துயின்றதே – தான் தன்
உரைசோரச் சோர உடல்சோர வாயின்
இரைசோரக் கைசோர நின்று.

இறைச்சியை உண்டு அதனால் உண்டான களிப்பினால் உள்ளிடத்துள்ள மூச்சும் மிக வெளிப்படுகின்ற வாயுள்ள பேய்களும் தங்கள் சொற்கள் மிகவும் தளரவும், உடலின் நிலை தளரவும் , வாயில் கொண்ட உணவு நழுவி விழவும், கைகளெல்லாம் செயலற்றுப் போகவும் நின்ற வண்ணமே தூங்கலாயின!

அன்றில் குரல் கேட்ட தமயந்தி.
—————————————-

‘அன்றில் ஒருகண் துயின்றொருகண் ஆர்வத்தால்
இந்துணைமேல் வைத்துறங்கும், ‘ என்னுஞ்சொல் – இன்று
தவிர்ந்ததே போலரற்றிச் சாம்புகின்ற போதே
அவிழ்ந்ததே கண்ணீர் அவட்கு.

‘ஆண் அன்றிலானது ஒரு கண்ணை மூடிக்கொண்டு மற்றொரு கண்ணைத் தன் பெட்டைமேல் கொண்ட மிக்க அன்பினால் அதன்மேல் செலுத்தித் தூங்கும்,’ என்று உலகத்தார் கூறும் மொழி, இன்றைக்கே பொய்யாயிற்று என்பதை அறியப் பெண் அன்றில் கூவி ஒடுங்குகின்ற அந்நேரத்திலேயே தமயந்திக்குக் கண்களினின்றும் நீர் பெருகி ஓடிற்று.

இரவோ ! அதற்கு நான் இரையோ!
————————————

‘ஏழுலகுஞ் சூழிருளாய் என்பொருட்டால் வேகின்ற
ஆழ்துயரம் ஏதென் றறிகிலேன்! – பாழி
வரையோ எனும்நெடுந்தோள் மன்னவோ! தின்னும்
இரையோ இரவுக் கியான்?

‘வலிமையுடைய மலை என்று சொல்லும்படி நீண்ட தோள்களையுடைய அரசரே, ஏழு உலகங்களையும் வளைத்துக் கொண்டிருக்கின்ற இருளையுடையதாய் என்னை வருத்திக் கொன்டிருக்கின்ற மிக்க துன்பத்திற்குக் காரணம் என்ன வென்று அறியேனாய் இருக்கின்றேன்! இவ்வாறு இருப்பதால் நான் இந்த இரவிற்கு உண்ணுகின்ற இரையோ!

என்னை உண்ணவே வாடை வந்தது!
——————————————

‘கருவிக்கும் நீங்காத காரிருள்வாய்க் கங்குல்
உருவிப் புகுந்ததால் ஊதை – பருகிக்கார்
வண்டுபோ கட்ட மலர்போல் மருள்மாலை
உண்டுபோ கட்ட வுயிர்க்கு.’

( மருள் மாலை = மயக்கம் தருகின்ற மாலை )

வாள் முதலிய எந்த ஆயுதங்களாலும் நீக்க ஒண்ணாத கரிய இருளில் இவ்விரவுப் பொழுதை ஊடுருவிக் கொண்டு வாடைக்காற்று உள்ளே நுழைந்தது , கரு நிற வண்டுகள் தேனைக் குடித்துவிட்டுப் போட்டுவிட்ட பூவைப் போல மயக்கத்தை உண்டாக்குகின்ற மாலைப் பொழுது என் உடல் வலிமையெல்லாம் உண்டுவிட்டதால் வன்மையற்றிருக்கும் என் உயிரையும் உண்பதற்கோ?

தூணைத் தழுவினாள் ! துவண்டாள்!
—————————————————

எழுந்திருக்கும் ஏமாந்து; பூமாந் தவிசின்
விழுந்திருக்கும்; தன்னுடம்பை மீளச் – செழுந்தரளத்
தூணோடு சேர்க்கும்; துணையேதும் இல்லாதே
நாணோடு நின்றழிவாள் நைந்து.

தமயந்தி, அழகிய மாமரத்தினது கொழுந்து பரப்ப பெற்ற மலர்ப் படுக்கையினின்றும் ( தனது நினைவினால் நளனது உருவெளித் தோற்றத்தைப் பார்த்து ) மகிழ்ந்து எழுந்து நிற்பாள்; அவ்வுருவம் மறைந்துவிடுவதால், வாடி கீழே விழுந்து கிடப்பாள்; பின்னர்த் தன் உடலைக் குளிர்ச்சி பொருந்திய முத்துகள் பதித்துள்ள தூணுடன் அணைத்துக் கொள்வாள் ; ஒரு துணையுமில்லாமையால் வெட்கமடைந்து ஒரு பக்கமாய் நிறு கொண்டு தளர்ந்து வருந்துவாள்.

பெருமூச்செறிந்து வருந்துதல்.
———————————————-

விரிகின்ற மெல்லமளி வெண்ணிலவின் மீதே
சொரிகின்ற காரிருள்போற் சோரும் – புரிகுழலைத்
தாங்கும்; தளரும் ; தழலே நெடிதுயிர்க்கும்;
ஏங்கும் துயரோ டிருந்து.

வெண்மையான நிலவின் மேல் பொழிகின்ற கரிய இருள்திரட்சி போல மெல்லிய பஞ்சணை மேல் அவிழ்ந்து தொங்கும் சுருண்ட கூந்தலைத் தன் கையால் ஏந்திக்கொள்வாள்; சோர்வாள் ; நெருப்புப் போலச்சுடும் நீண்ட பெருமூச்சு விடுவா: துன்பத்தோடு வருந்துவாள்.

இரவே ! செல்லாயோ !
—————————

‘உடைய மிடுக்கெல்லாம் என்மேலே ஓச்சி
விடிய மிடுக்கின்மை யாலே – கொடியன்மேல்
மாகாதல் வைத்ததோ மன்னவர்தம் இன்னருளோ
ஏகாத தென்னோ இரா!

தன்னிடமுள்ள வலிமை எல்லாவற்றையும் என்னிடமே செலுத்திப் பொழுது விடிவதற்கு வலிமை இல்லாமையோ, கொடியனாகிய மன்மதனிடத்து மிக்க அன்பு கொண்டிருப்பதோ , நளமகராசரது இனிய திருவருளோ, இந்த இரவுப் பொழுதானது போகாததற்குக் காரணம் எது? இன்னது என அறியேன் !

பெருகும் துன்பம்.
—————————-

மயங்கும் ;தெளியும் ; மனம் நடுங்கும் ; வெய்துற்று
உயங்கும்; வறிதே உலாவும்; – வயங்கிழைபோய்ச்
சோரும் ; துயிலும் துயிலாக் கருநெடுங்கண்
நீருங் கடைசோர நின்று.

தமயந்தி மயங்குவா; சிறிது கழித்துத் தெளிவடைவாள் ; மனம் நடுங்குவாள் ; வெப்பம் மிகுந்து வருந்துவாள் ; ஒரு காரணமுமின்றி இங்குமங்கும் உலவுவாள் ; விளங்குகின்ற ஆபரணங்கள் கழன்று விழ தளர்ச்சி அடைவாள் ; தூக்கம் கொள்ளாத கரிய பெரிய கண்களிலிருந்து நீரும் கடைக்கண் வழியாக பாய்ந்தோட நின்றபடியே தூங்குவாள்.

பேயும் வழி தேடும் பேரிருள்.
—————————————

விழுது படத்திணிந்த வீங்கிருள்வாய்ப் பட்டுக்
கழுதும் வழிதேடுங் கங்குற் – பொழுதிடையே
நீருயிர்க்கும் கண்ணோடு நெஞ்சுருகி வீழ்வார்தம்
ஆருயிர்க்கும் உண்டோ அரண்!

ஆலமரம் விழுது விடுவது போல விழுது உண்டாகும்படி மிகுந்த நெருங்கிய இருளில் அகப்பட்டுக்கொண்டு பேய்களுங்கூட வழி தெரியாமல் மயங்கி வழியை ஆராய்கின்ற இரவு நேரத்தில் நீரைப் பொழிகின்ற கண்களுடனே மனங்கரைந்து வீழ்ந்து வருத்தப்படுகின்றவர்களாகிய காதலர்களுடைய அருமையான உயிர்களுக்கும் பாதுகாப்பு உண்டோ!

விடியா இரவும் விடிந்தது!
—————————————

பூசுரர்தம் கைம்மலரும் பூங்குமுத மும்முகிழ்ப்பக்
காசினியும் தாமரையும் கண்விழிப்ப – வாசம்
அலர்ந்ததேங் கோதையாள் ஆழ்துயரத் தோடு
புலர்ந்ததே அற்றைப் பொழுது.

அந்தணர்களுடைய கைகளாகிய மலர்களும் அல்லிப் பூக்களும் குவிய , உலக மக்கள் முதலிய எல்லாவுயிர்களும் தாமரை மலர்களும் கண்விழித்துத் திறக்க , மணமுள்ள தேன் பொருந்திய மலர் மாலையை அணிந்த தமயந்தியின் மிக்க துன்பத்துடன் அன்றை இரவு நீங்கியது!

பகலவன் தோற்றம்.
——————————–

வில்லி கனையிழப்ப வெண்மதியம் சீரிழப்பத்
தொல்லை இருள்கிழியத் தோன்றினான் -வல்லி
மணமாலை வெட்டிடுதோள் வாளரசர் முன்னே
குணவாயிற் செங்கதிரோன் குன்று.

பூங்கொடியை போன்ற தமயந்தியின் மணமாலையைப் பெறவிரும்பிய தோள்களையும் வளாயுதத்தையுமுடைய மன்னர்களுக்கு எதிராகக் கரும்பு வில்லையுடையோனாகிய மன்மதன் தன் மலரம்புகளை இழக்கவும், வெண்மையான கதிர்களையுடைய மதி தன் ஒளியின் அழகு குறையவும், தமயந்திக்குத் துன்பம் நீங்கவும் கிழக்குப் பக்கமுள்ள மலையில் சிவந்த ஒளிக்கதிர்களையுடையவனாகிய கதிரவன் தோன்றினான்.

மன்னர் மணமண்டபத்துக்கு வருதல்.
—————————————————-

முரைசெறிந்த நாளேழும் முற்றியபின் கொற்ற
வரைசெறிந்த தோள்மன்னர் வந்தார் – விரைசெறிந்த
மாலை துவள முடிதயங்க வால்வளையும்
காலை முரசுங் கலந்து.

திருமணம் ஏழு நாட்களில் நடைபெறும் என்று முரசறைந்தார்களே, அவ்வேழு நாட்களும் கடந்தன; சுயம்வர நாளும் வந்தது.

சுயம்வரத்தைக் குறித்துப் பேரிகை அடித்துத் தெரிவித்த ஏழு நாட்களும் சென்ற பின் வெற்றி பொருந்திய மலையைப் போன்ற தோள்களையுடைய அரசர்கள், மணம் மிக்க மலர் மாலைகள் அசைய, தலையில் முடி ஒளி விட்டு விளங்க , வெண்ணிறம் பொருந்திய சங்கு ஒலியும் காலையில் முழங்குகின்ற பேரிகை ஒலியும் ஒன்று சேர்ந்து மிக்க ஒலி எழுப்பச் சுயம்வர மண்டபத்துக்கு வந்தார்கள்.

நளமகராசனும் வந்தான்.
———————————————

மன்றலந்தார் மன்னர் நடுவனைய வந்திருந்தான்
கன்று குதட்டிய கார்நீலம் – முன்றில்
குறுவிழிக்கு நேர்நாடன் கோதைபெருங் கண்ணின்
சிறுவிழிக்கு நோற்றிருந்த சேய்.

கன்றுகள் வாயால் குதட்டி உமிழ்ந்த கருங்குவளை மலர்கள் வீட்டின் முன் பக்கங்களில் பெண்களுடைய குறுகிய பார்வைக்கு ஒத்துச் சுருங்கிக் கிடந்தன; இத்தகைய சிறப்பு வாய்ந்த நிடத நாட்டையுடையவன் நளன்; மலர் மாலை அணிந்த பெரிய கண்களையுடைய தமயந்தியின் சிறிய பார்வைக்காகத் தான் தவஞ்செய்து கொண்டிருந்த முருகக் கடவுளைப் போன்றவன் நளன்; அவன் மணத்தையுடைய அழகிய மலர் மாலையை அணிந்த அரசர்கள் சூழ்ந்த சபையின் நடுவில் சார்ந்து அமர்ந்திருந்தான்.

தமயந்தியும் வந்தாள்.
————————————

நித்திலத்தின் பொற்றோடு நீலமணித் தோடாக
மைத்தடங்கண் செல்ல வயவேந்தர் – சித்தம்
மருங்கே வரவண்டின் பந்தர்க்கீழ் வந்தாள்
அருங்கேழ் மணிப்பூண் அணங்கு.

அருமையான நிறத்தையுடைய மணியால் ஆன அணிகளை அணிந்த தமயந்தி, தன் காதுகளிலுள்ள முத்துப் பதித்துச்செய்யப்பட்ட குண்டலம் என்று சொல்லும்படி , மைதீட்டப்பட்ட நீண்ட கண்களின் பார்வை சுழன்று சுழன்று போக , வெற்றி மிக்க அரசர்களுடைய மனமானவை வண்டுகளைப்போல் அவள் பக்கங்களில் வரச் சுயம்வர மண்டபத்தில் போடப்பட்டிருந்த பந்தலுக்கு வந்தாள்.

மன்னர்களின் பார்வை.
——————————

பேதை மடமயிலைச் சூழும் பிணைமான்போல்
கோதை மடமானைக் கொண்டணைந்த – மாதர்
மருங்கின் வெளிவழியே மன்னவர்கண் புக்கு
நெருங்கினவே மேன்மேல் நிறைந்து.

வஞ்சம் இல்லாத இளமை பொருந்திய மயிலைச் சுற்றி இருக்கின்ற பெண்மான்கலைப் போல மாலையணிந்த பெண்மான் போன்ற தமயந்தியை அழைத்துக்கொண்டு வந்த தோழிப் பெண்களின் இடுப்பின் வெளி வழியாக அரசர்களின் பார்வை நுழைந்து மேலும் மேலும் நெருங்கி நிறைந்தன!

தமயந்தி என்னும் அன்னம்.
————————————

மன்னர் விழித்தா மரைபூத்த மண்டபத்தே
பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் – மின்னிறத்துச்
செய்யதாள் வெள்லைச் சிறையன்னஞ் செங்கமலப்
பொய்கைவாய்ப் போவதே போன்று.

மின்னல் நிறம் போல ஒளியை வீசுகின்ற சிவந்த கால்கலையும் வெண்மையான சிறகுகளையுடைய அன்னப்பறவை செந்தாமரை மலர்கள் மலர்ந்துள்ள தடாகத்தினிடத்தே செல்வது போல, திருமகளைப் போன்ற அழகுடைய தமயந்தி , அரசர்களுடைய கண்களாகிய தாமரை மலர்கள் மலர்ந்துள்ள சுயம்வர மண்டபத்தினிடையே சென்று புகுந்தாள்.

அழகிய உவமை இது! சுயம்வர மண்டபம், பொய்கை. அதில் மலர்ந்த மலர்கள் யாவை? மன்னர் தம் கண்களாகிய தாமரை மலர்கள். அப்பொய்கையில் செல்லும் அன்னமாம் தமயந்தி.

பாவையின் பார்வை படர்வது எவர்மேல்?
———————————————————

வடங்கொள் வனமுலையாள் வார்குழைமேல் ஓடும்
நெடுங்கட் கடைபார்த்து நின்றாள் – இடங்கண்டு
பூவாளி வேந்தன்றன் பொன்னாடும் பின்னேயிட்டு
ஏவாளி நாணின்மேல் இட்டு.

மன்மத மன்னன் தன்னுடைய அழகு பொருந்திய அம்பறாத்தூணியை முதுகிலே கட்டித் தொங்க விட்டு , அம்பை வில் நாணின் மெல் வைத்துத் தொடுத்து , ஏற்ற இடத்தைத் தெரிந்து கொண்டு , அங்கிருந்தபடியே குறியைக் கண்டு , முத்து மாலையை அணிந்துள்ள அழகிய கொங்கைகளையுடைய தமயந்தியின் நீண்டுள்ள காதுகளின்மேல் செல்கின்ற நீண்டகடைக்கண் பார்வையை எதிர் நோக்கி நின்றான்.

அரிவைக்கு அரசரை அறிமுகப்படுத்துதல்.
————————————————————

மன்னர் குலமும் பெயரும் வளநாடும்
இன்ன பரிசென் றியலணங்கு – முன்னின்று
தார்வேந்தன் பெற்ற தனிக்கொடிக்குக் காட்டினாள்
தேர்வேந்தர் தம்மைத் தெரிந்து.

அம்மண்டபத்தே அமர்ந்திருந்த அரசர்களைத் தோழி தமயந்திக்கு அறிமுகப்படுத்துகிறாள். இவ்வெண்பாவிலிருந்து 15- ஆம் பாடல் முடிய இவ்வுலகத்தரசர்களின் அறிமுகமாய் அமைந்துள்ளன.

சோழன் அறிமுகம்.
——————————–

‘பொன்னி அமுதப் புதுக்கொழுந்து பூங்கமுகின்
சென்னி தடவுந் திருநாடன் – பொன்னிற்
சுணங்கவிழ்ந்த பூண்முலையாய்! சூழமரில் துன்னார்
கணங்கவிழ்ந்த வேலனிவன் காண்.

முதலில் சோழ நாட்டு மன்னனை அறிமுகப்படுத்துகிறாள் தோழி. இவ்வாறு ஆசிரியர் அமைத்ததற்குக் காரணம் , சோழ நாட்டின் மேல் ஆசிரியருக்குள்ள பற்றாகும்.

‘பொன்னின் நிறம் போன்ற பசலை படர்ந்த அணிகள் அமைந்துள்ள கொங்கையையுடைய தமயந்தியே , நெருங்கிச் செய்கின்ற போரிலே பகைவர் கூட்டம் தலை வணங்குவதற்குக் காரணமாகக் கொண்ட வேலையுடைய இவ்வரசர், காவிரியின் புதிய நீரோட்டமானது அழகிய பாக்கு மரத்தினுடைய உச்சி வரையிர் செல்லும் அழகிய சோழ நாட்டுக்குரிய சோழ மன்னர். காண்பாயாக!’

பாண்டிய மன்னன் அறிமுகம்.
————————————–

‘போர்வாய் வடிவேலாற் போழப் படாதோருஞ்
சூர்வாய் மதரரிக்கண் தோகாய்!கேள்;- பார்வாய்ப்
பருத்தோர் மால்வரையைப் பண்டொருகாற் செண்டால்
திரித்தகோ இங்கிருந்த சேய்.

போர்வாய் = போரில்
வடிவேல் = கூர்மையாக்கப்பட்ட வேல்.
சூர் = அச்சம்.
அரிக்கண் = செவ்வரி படர்ந்த கண்கள்.
தோகாய் = மயிலைப் போன்றவளே.
பார்வாய் = உலகில்.
மால் வரை = பெரிய மலை ( மேருமலை )
செண்டு = ஓர் ஆயுதம்.

சோழனுக்கு அடுத்தபடி பாண்டியனைக்கூறக் காரணம் , புகழேந்தியார் கொண்ட பாண்டிய நாட்டு பற்றே ஆகும். அவர் பாண்டியன் அவைக்களத்தே இருந்தார் எஙிறது ஒரு செவிவழிக் கர்ணபரம்பரைக் கதை.

‘செருக்களத்தில் வடிக்கப்பட்ட வேலினால் பிளக்க வொண்ணாத வீரர்களும் அச்சங்கொள்ளுமாறு செய்கின்ற மதர்த்த செவ்வரிகளையுடைய கண்கள் பொருந்திய மயில் போன்றவளே , இம்மண்ணுலகில் பெருத்து நிகரற்றதாய் விளங்குகின்ற நீண்ட பொன் மாலையை முன்னொரு நிகரற்றதாய் விளங்குகின்ற நீண்ட பொன் மலையை முன்னொரு காலத்தில் செண்டாலடித்து நிலை பெயரச் செய்த பாண்டிய மன்னர் இதோ இங்கு வீற்றிருக்கும் மன்னர்.’

முன்னொரு காலத்தில் உக்கிரகுமார பாண்டியன் என்பான் மேருமலையைச் செண்டால் எறிந்தான். ஆகவே அச்செயல் அவன் வழி வந்த மற்றையோருக்கும் ஏற்றி உரைக்கப்படும்.

சேரன் அறிமுகம்.
—————————–

வென்றி நிலமடந்தை மென்முலைமேல் வெண்டுகில்போற்
குன்றருவி பாயுங் குடநாடன் – நின்றபுகழ்
மாதே! இவன்கண்டாய் மானத் தனிக்கொடியின்
மீதே சிலையுயர்ந்த வேந்து.

வென்றி = வெற்றி.
வெண்துகில்போல் = வெண்மையான ஆடையைப்போல்.
குடநாடன் = மேற்கு நாட்டவன்.

பாண்டியனுக்குப் பிறகு சேரனைக் கூறக் காரணம் , ‘மூவேந்தர்களுள் அவனும் ஒருவன்’ என்பதாம்.

‘னிலைத்த புகழையுடைய பெண்ணே , இவர், வெற்றியையுடைய நிலமகளின் மெல்லிய கொங்கைகளின் மேலுள்ள வெண்ணிறமான ஆடையைப்போல மலையினின்றும் அருவி நீர் பாய்ந்தோடுகின்ற குடநாட்டு மன்னரான பெருமை பொருந்திய ஒப்பற்ற கொடியில் வில்லுக்குறி எழுதி உயர்த்திய சேர மன்னராவர்.’

யதுகுல மன்னர்.
——————————–

‘ஆழிவடி யம்பலப நின்றானும் அன்றொருகால்
ஏழிசைநூற் சங்கத் திருந்தானும் – நீள்விசும்பில்
நற்றேவர் தூது நடந்தானும் பாரதப்போர்
செற்றானும் கண்டாயிச் சேய்.

ஆழி = கடல்.
வடியம்பலம்ப = வடி + அம்பு + அலம்ப = வடிக்கப்பட்ட அம்பினை கழுவ.
நீள் விசும்பு = பெரிய வானம்.

கடலில் வடிக்கப்பட்ட அம்புகளைக் கழுவும்படி நின்றவரும் , முன்னொருகாலத்திலே ஏழு வகை இசைகளையுடைய பேரவையில் தலைவராய் வீற்றிருந்தவரும், நீண்ட வானவர் அவதாரமாகிப் பாண்டவர்கட்குத் தூதுவராய் நடந்து சென்ற வரும், பாரதப் போரினை நடத்தி முடிக்கக் காரணமாய் இருந்தவரும் இந்த அரசிளங்குமரரேயாவர்.’

இச்செய்யுளில் கூறப்பட்டவன் வடமதுரையை ஆண்ட அரசன். யதுகுலத்தவன். ‘ஆழி வடியம்பு அலம்ப நின்றவனும் இசைச் சங்கத்து இருந்தவனும் எவன்?’ எனின், யது குலத்தானாகிய கார்த்த வீரியார்ச்சுனன் என்பவன். ‘தூது நடந்தவனும் பாரதப் போர் நடந்திவனும் யாவனோ?’ எனின், அவன் கண்ணபிரான். முந்தையோர் புரிந்த இச்செயல்களையெல்லாம் இவ்வரசன் மேல் ஏற்றி உரைத்தார் ஆசிரியர்.

குருநாட்டு மன்னன்.
—————————-

‘தெரியலிவன் கண்டாய் செங்கழுநீர் மொட்டை
அரவின் பசுந்தலையென் றஞ்சி – இரவெல்லாம்
பிள்ளைக் குருகிரங்கப் பேதைப்புள் தாலாட்டும்
வள்ளைக் குருநாடர் மன்.

தெரியல் = மலர்மாலை.
மொட்டை = அரும்பை.
அரவின் பசுந்தலை = பாம்பினது பசுமையான தலை.
குருகு = நாரை
பேதைப்புள் = பெண் நாரை.

‘செங்குவளை அரும்பை பாம்பினது பசுமையான தலை என நினைத்து அச்சங்கொண்டு நாரையின் குஞ்சுகள் வாய் விட்டுக் கதற , தாயாகிய பெண்ணாரை இருஅவு முழுவதும் தாலாட்டிகொண்டிருப்பதும், வள்ளைக் கொடிகள் படர்ந்திருப்பதுமாகிய இத்தகைய சிறப்பு மிக்க குருநாட்டில் வாழ்வோர்க்கு மலர் மாலை சூடியுள்ள இவரே அரசராவார். அறிவாயாக.’

மத்திர நாட்டரசன்.
——————————–

‘தேமருதார்க் காளை இவன்கண்டாய் செம்மலர்மேல்
காமருசங் கீன்ற கதிர்முத்தைத் – தாமரைதன்
பாத்திரத்தால் ஏற்கும் படுகர்ப் பழனஞ்சூழ்
மத்திரத்தார் கோமான் மகன்.’

தேமரு = தேன் பொருந்திய
தார் = மாலை.
காளை = காளையைப் போன்றவன்
காமரு = அழகிய .
சங்கு ஈன்ற = சங்கு வெளியிட்ட.
பத்திரம் = இஅலை.
படுகர் = பள்ளம் .
பழனம் = கழனி.

‘தேன் பொருந்திய மலர் மாலையை அணிந்த இளைஞராகிய இம்மன்னர், செந்தாமரை மலர்களின்மேல் அழகிய சங்கினங்கள் ஈன்ற ஒளி பொருந்திய முத்துகளைத் தாமரை காற்றால் அலைப்புண்டு நீரில் விழுகின்ற போது விழாதவாறு தன் கைகளாகிய இலைகளால் தாங்கிக்கொள்ளுகிற பள்ளம் பொதிந்துள்ள வயல்கள் சூழ்ந்த மத்திர நாட்டு அரசருக்கு மைந்தராகிய அரசர். அறிவாயாக!’

மச்ச நாட்டு மன்னன்.
——————
Back to top Go down
 
சுயம்வர காண்டம் பக்கம் 2
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நளவெண்பா { சுயம்வர காண்டம் -1 }
» கலிநீங்குகாண்டம் – பக்கம் 1
» கலிநீங்குகாண்டம் பக்கம் - 2
» கலிதொடர்காண்டம் – பக்கம் 1
» கலிதொடர்காண்டம் – பக்கம் 2

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: