BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகலிதொடர்காண்டம் – பக்கம் 2 Button10

 

 கலிதொடர்காண்டம் – பக்கம் 2

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

கலிதொடர்காண்டம் – பக்கம் 2 Empty
PostSubject: கலிதொடர்காண்டம் – பக்கம் 2   கலிதொடர்காண்டம் – பக்கம் 2 Icon_minitimeFri Apr 02, 2010 12:50 pm

தமயந்தி பறவையைப் பிடித்துத்தர
————————————————
நளனை வேண்டல்.
———————-

தேன்பிடிக்கும் தண்டுழாய்ச் செங்கட் கருமுகிலை
மான்பிடிக்கச் சொன்ன மயிலேபோல் – தான்பிடிக்கப்
‘பொற்புள்ளைப் பற்றித்தா,’ என்றாள் புதுமழலைச்
சொற்கிள்ளை வாயாள் தொழுது.

தேன் = வண்டு.
தண் துழாய் = குளிர்ச்சி பொருந்திய துளசி மாலையை அணிந்த.
பொன் புள்ளை = பொன்போலும் நிறத்தையுடைய பறவையை.
கிள்ளை வாயாள் = கிளியைப் போன்று பேசும் வாயையுடைய தமயந்தி.

தேன் பொருந்தியுள்ள குளிர்ச்சியையுடைய துளசி மாலையை அணிந்த சிவந்த கண்களையுடைய கரிய நிறத்தையுடைய இராமனை மானை பிடித்துத் தருமாறு சொல்லிய மயில் போன்ற சாயலையுடைய சீதையைப்போல, புதுமையுடைய மழலைச் சொற்களை பேசுகின்ற வாயையுடைய கிளி போன்றவளாகிய தமயந்தி கைகுவித்துக் கணவனைத் தொழுது , தனது கையில் பிடித்துப் பார்த்து மகிழ்ச்சி அடைய, ‘ அப்பொன்னிறமுள்ள பறவையைப் பிடித்துத் தருக,’ என்று வேண்டினாள்.

வஞ்சப் பறவை.
—————————–

பொற்புள் ளதனைப் பிடிப்பான் நளன்புகுதக்
கைக்குள்வரு மாபோற் கழன்றோடி – எய்க்கும்,
இளைக்குமா போல இருந்ததுகண் கன்றே
வளைக்குமா றெண்ணினான் மன்.

புகுத = செல்ல.
எய்க்கு இளைக்குமா போல = களைப்பும் இளைப்பும் அடைந்தாற்போல.

நளன் பொன்னிறமுடைய பறவையைப் பிடிக்கும் பொருட்டுச் சென்றான்; அது கைக்குள் அகப்படுவது போலக் காட்டித் தப்பி ஓடியது ; களைப்பை அடைந்தது போலவும் அதனால் இளைப்பது போலவும் காட்டிற்று. அதை உணர்ந்த வேந்தன் அதை வளைத்து பிடிக்கும் வகையை எண்ணினான்.

‘ஆடையால் பிடிக்க முயல்வோம்,’ எனல்.
———————————————

‘கொற்றக் கயற்கண் கொடியே! இருவேகமும்
ஒற்றைத் துகிலால் உடைபுனைந்து – மற்றிந்தப்
பொற்றுகிலால் புள்வளைக்கப் போதுவோம்,’ என்றுரைத்தான்
பற்றகலா உள்ளம் பரிந்து.

கொற்றம் = வெற்றி பொருந்திய
கயற்கண் = கயலைப் போன்ற கண்களையுடைய.

நளன் தமயந்தியிடம் காதல் குறையாத உள்ளத்தனாய் அவள்பால் விருப்பமடைந்து, ‘ வெற்றியையுடைய கெண்டை மீனைபோன்ற கண்களையுடைய பூங்கொடியைப் போன்றவளே , நாம் இருவரும் ஒரே ஆடையை உடுத்துக்கொண்டு நான் உடுத்துள்ள இந்த அழகிய ஆடையால் இந்தப் பறவையைப் பிடிப்பதற்குச் செல்வோம்,’ என்று கூறினான்.

ஆடையால் பறவையைப் பிடிக்க முயலல்.
————————————————–

‘எற்றித் திரைபொரநொந் தேறி இளமனலிற்
பற்றிப் பவளம் படர்நிழற்கீழ் – முத்தீன்று
வெள்வளைத்தாய் ஓடும்நீர் வேலைத் திருநாடன்
புள்வளைத்தான் ஆடையாற் போந்து.

அலைகள் வீசிக் கரையை மோதுவதால் வருந்தி, நுட்பமான மணலின் மேல் ஊர்ந்து சென்று அதைப் பற்றிப் பிட்த்துக்கொண்டு பவளக்கொடிகள் படர்தலால் உண்டான நிழலில் முத்துகளை ஈன்று விட்டு , வெண்மையான சங்காகிய தாய் திரும்பிச் செல்லும் நீர் வளம் பொருந்திய கடற்கரையைச் சார்ந்த நிடதம் எனும் அழகிய நாட்டுக்கு மன்னனாகிய நளன், பக்கத்தில் வந்து தன் ஆடையால் அப்பறவையை வளைத்துக்கொண்டான்.

வஞ்சக்கலியின் வாக்கு.
———————————-

கூந்தல் இளங்குயிலும் கோமானுங் கொண்டணைத்த
பூந்துகில்கொண் டந்தரத்தே போய்நின்று – ‘ வேந்தனே!
நன்னாடு தோற்பித்தோன் நானேகாண்!’ என்றதே
பொன்னோடும் மாநிறத்த புள்.

பொன் போன்ற ஒளியை வீசுகின்ற சிறப்பு மிக்க நிறத்தையுடைய அப்பறவை, கூந்தலையுடைய இளங்குயிலைப் போன்ற குரலையுடைய தமயந்தியும் நளனும் சென்று வளைத்த அழகிய ஆடையைப் பற்றிக்கொண்டு வானவெளியிலே பறந்துபோய் நின்று, ‘ அரசனே, நீ இழந்த நின் நிடதம் முதலியவற்றைச் சூதினால் இழக்கச் செய்தவன் யானே என்பதை அறிந்துகொள்வாயாக!’ என்றது.

உயிர் போல ஆடையும் ஒன்றானது!
—————————————–

காவிபோல் கண்ணிக்கும் கண்ணியந்தோட் காளைக்கும்
ஆவிபோல் ஆடையுமொன் றானதே – பூவிரியக்
கள்வேட்டு வண்டுழலும் கானத் திடைக்கனகப்
புள்வேட்டை ஆதரித்த போது.

நளனும் தமயந்தியும் மலர்கள் மலர அவற்றினிடமுள்ள தேனை விரும்பி வண்டுகள் சுற்றித் திரிகின்ற காட்டில் பொன் போன்ற நிறத்தையுடைய பறவையைப் பிடிக்கும் வேட்டையை விரும்பிச் செய்தபோது , நீல மலர் போன்ற கண்களையுடைய தமயந்திக்கும் கண்ணியாகத் தொடுத்த மலர் மாலையை அணிந்த அழகிய தோள்களையுடைய நளனுக்கும் உயிர் ஒன்றாய் இருந்தது போல், ஆடையும் ஒன்றாயிற்று!

தமயந்தியின் வருத்தம்.
——————————-

‘அறம்பிழைத்தார் பொய்த்தார் அருள்சிதைத்தார் மானத்
திறம்பிழைத்தார் தெய்வம் இகழ்ந்தார் – புறங்கடையில்
சென்றார் புகும்நரகம் சேர்வாய்கொல்!’ என்றழியா
நின்றாள் விதியை நினைத்து.

தமயந்தி கலியை நோக்கிச் சினங்கொண்டு ,’ அறவழி பிறழ்ந்தவரும், பொய்யுரை கூறுவோரும், இரக்கமற்ற கொடியோரும் , மானத்தின் பெருமையை அழித்தவரும், கடவுள் கொள்கையை இகழ்ந்து பேசியவரும் ஆகியோர்களுடைய தலை வாயிலில் , அவருடைய நட்பு வேண்டிச்சென்றவர்கள் செல்கின்ற நரகத் துன்பத்தில் நீயும் புகுவாயோ!’என்று கலியைச் சபித்து பின் தனது விதியை நினைத்து நின்றாள்.

தெய்வம் கெடுத்தால் செய்வதென்ன?
————————————————-

‘வையம் துயருழப்ப மாயம் பலசூழ்ந்து
தெய்வம் கெடுத்தாற் செயலுண்டோ? -மெய்வகையே
சேர்ந்தருளி நின்றதனிச்செங்கோலாய்! இங்கொழியப்
போந்தருளு கென்றாள்’ புலந்து.

கலியை இகழ்ந்து கூறிய தமயந்தி, நளனைப் பார்த்து ‘உண்மை வழிகளையே கடைப்பிடித்து ஒப்பற்ற ஆட்சியைச் செய்த வேந்தரே, நாட்டு மக்கள் யாவரும் துன்பங் கொள்ள, வஞ்சனைகள் பலவற்றை எண்ணிச் செய்து , தெய்வமே முன் நின்று இவ்விதம் நம்மைக் கெடுத்தால், அதை எதிர்த்து நிற்க நமக்கு வலியுள்ளதோ? என்று கூறி வருந்தி, ‘இவ்விடத்தை விட்டுச் செல்வோம் ; வருக , ‘ என்று கூறினாள்.

சூரியன் மறைந்தான்.
——————————–

அந்த நெடுஞ்சுரத்தின் மீதேக ஆங்கழலும்
வெந்தழலை ஆற்றுவான் மேல்கடற்கே – எந்தை
குளிப்பான்போற் சென்றடைந்தான் கூரிருளாற் பாரை
ஒளிப்பான்போற் பொற்றே ருடன்.

என்னுடைய தந்தை போன்ற சூரியன், அந்த நீண்ட பாலை வனத்தின் மேலே செல்லும்போது அங்குள்ள வெம்மையை ஆற்றிக்கொள்ளும்படி மேலைக் கடலில் போய்க் குளிப்பவனைப் போலவும் மிகுந்த இருளால் உலகையெல்லாம் மறைத்து வைப்பவன் போலவும், தன் பொன்னிறமுள்ள தேரோடு போய் சேர்ந்தான்!

பேயும் திகைக்கும் பேரிருள்.
————————————-

பானு நெடுந்தேர் படுகடலிற் பாய்ந்ததன்பின்
கான அடம்பின் கவட்டிலைகள் – மானின்
குளம்பேய்க்கும் நன்னாடன் கோதையொடுஞ் சென்றான்
இளம்பேய்க்கும் தோன்ற இருள்.

மான் குளம்புகளைப் போன்ற பிளவுபட்ட இலைகளையுடைய அடப்பங்கொடிகளின் காடுகள் சூழ்ந்துள்ள நீர் வளம் மிகுந்த நிடத நாட்டு மன்னனான நளன் , கதிரவனுடைய நெடிய தேரானது நாடோறும் மறைகின்ற மேலைக் கடலில் சென்று மறைந்தபிறகு இளமை பொருந்திய பேய்களுங்கூட வழி தெரியாமல் மயங்கி நிற்கும் பேரிருளையுடைய இரவில் மலரை அணிந்த கூந்தலையுடைய தமயந்தியோடு சென்றான்.

பாராண்டவனுக்குப் பாழ் மண்டபம்.
————————————————-

‘எங்காம் புகலிடம்?’என் றெண்ணி இருள்வழிப்போய்
வெங்கா நகந்திரியும் வேலைதனில் – அங்கேயோர்
பாழ்மண் டபங்கண்டான் பால்வெண் குடைநிழற்கீழ்
வாழ்மண் டபங்கண்டான் வந்து.

இரவை கழிப்பதற்கு எங்கு இடம் கிடைக்கும் என்று நினைந்து அவ்விரவில் விழிக்கொண்டு நடந்து சென்று, கொடிய காட்டில் இடத்தைத் தேடித் திரிந்த போது , பால் போன்ற வெண்ணிறம் பொருந்திய தனது குடையின் கீழ் அரசாட்சி செய்துகொண்டிருந்த மண்டபத்தை முன் கண்டிருந்தவன் வந்து, அக்காட்டில் பாழடைந்து கிடக்கின்ற ஒரு மண்டபத்தைக் கண்டான்.

பாழ் மண்டபமே பள்ளியறை.
———————————-

‘மூரி இரவும்போய் முற்றிருளாய் மூண்டதால்
சாரும் இடம்மற்றுத் தானில்லை – சோர்கூந்தல்
மாதராய்! நாமிந்த மண்டபத்தே கண்துயலப்
போதராய்,’ என்றான் புலர்ந்து.

நளன் தமயந்தியைப் பார்த்து , ‘ நீண்ட கூந்தலையுடைய பெண்ணே , வலிய இரவுப்பொழுதும் போய் முற்றிய இருளாய் மாறியது; நாம் தங்குவதற்குரிய இடம் வேறு இல்லை; இந்த மண்டபத்தில் படுத்துக் கண்ணுறங்க வருவாயாக!’ என்று மனம் வருந்திக் கூறினான்.

தமயந்தி வருத்தம்.
———————————

‘வைய முடையான் மகரயாழ் கேட்டருளும்
தெய்வச் செவிகொதுகின் சில்பாடல் – இவ்விரவில்
கேட்டவா!’ என்றழுதாள் கெண்டையங்க ணீர்சோரத்
தோட்டவார் கோதையாள் சோர்ந்து.

மலர் முடித்த கூந்தலையுடைய தமயந்தி, ‘ மண்ணுலக வேந்தருடைய மகர வீணையின் அருமையான இசையைக் கேட்டு இன்பமடையும் சிறந்த செவிகள் , இந்த நள்ளிருளில் கொசுகளின் இன்பமற்ற ஒலியைக் கேட்கும்படியன்றோ நேர்ந்தது!’ என்று கூறித் தளர்ந்து சேல் மீன் போன்ற அழகிய தன் விழிகளிரிருந்து நீர் பெருக அழுதாள்.

தமயந்தி தனக்காக வருந்தவில்லை ; தன் கணவன் துன்பம் கண்டு அதற்காகவே வருந்தினாள்’ கற்புடைய பெண்டிர்க்கு அஃது இயல்பாதலின்.

வினைப்பயனை வெல்வார் யார்?
——————————————

‘பண்டை வினைப்பயனைப் பாரிடத்தில் ஆர்கடப்பார்?
கொண்டல் நிழலிற் குழைதடவும் – கெண்டை
வழியல்நீர் ‘ என்றான்; ‘மனம்நடுங்கி வெய்துற்று
அழியல்நீ என்றான் அரசு.

இவ்வண்ணம் தமயந்தி அழுவஃதைக் கண்ட நளன், ‘ முன்பு செய்த தீவினையினது பயனை இம்மண்ணுலகத்தில் கடப்பவர் யாருள்ளார்? ஒருவருமில்லை! மேகம் போன்ற குழலினது நிழலிலே இருந்து செவி வரை சென்று தடவுகின்ற கெண்டைமீனைப் போன்ற உன் கண்களிலிருந்து கண்ணீரை வடிக்காதே !’ என்று கூறினான்; ‘ மன நடுக்கம் கொண்டு பெருமூச்சை விட்டு வருத்தப்பட்டு அழாதே !’ என்று தேற்றினான்.

தமயந்தி பின்னும் வருந்துதல்.
—————————————–

‘விரைமலர்ப்பூ மெல்லணையும் மெய்காவல் பூண்ட
பரிசனமும் பள்ளி அறையும் – அரைசே!நான்
காணேனிங் கென்னாக்’ கலங்கினாள் கண்பனிப்பப்
பூணேர் முலையாள் புலர்ந்து.

அணிகளை அணிந்த முலையையுடைய தமயந்தியானவள் வருத்தம் கொண்டு, ‘ அரசரே , மணம் பொருந்திய மலர் பரப்பிய அழகுள்ள மென்மையான படுக்கைகளும், படுக்கைக்குரிய தனி வீடும், இங்கு நான் காணவில்லையே!’ என்று கண்களில் நீர் தோன்ற வாடி அழுதாள்.

செய்யக்கடவது உறங்கல்!
———————————–

‘தீய வனமும் துயின்று திசைதுயின்று
பேயும் துயின்றதாற் பேர்யாமம்; – நீயுமினிக்
கண்மேல் துயில்கை கடன்; என்றான் கைகொடுத்து
மண்மேல் திருமேனி வைத்து.

நளன் புழுதியில் தன் அழகிய உடலைக் கிடத்தி, தமயந்திக்குத் தன் கையை மடக்கித் தலையணையாகக் கொடுத்து, ‘ இந்தக் கொடிய காட்டில் வாழ்கின்ற மக்களும், விலங்கு முதலியவைகளும், மற்றெல்லா இடங்களிலுமுள்ள உயிர்களும் உறங்க, இரவிலே தூங்காமல் திரிகின்ற பேய்களும் தூங்கிவிட்டன; ஆதலின், இந்த நள்ளிரவில் நீயும் இனி விழித்துக்கொண்டிராமல் தூங்குதல் முறையாகும்,’ என்று கூறினான்.

மண்மேல் படுக்கை கொண்டு நளன் வருந்தல்.
————————————————

‘புன்கண்கூர் யாமத்துப் பூமிமேல் தான்படுத்துத்
தன்கண் துயில்வாளைத் தான்கண்டும் – என்கண்
பொடியாதால்! உள்ளாவி போகாதால்! நெஞ்சம்
வெடியாதால்!’ என்றான் விழுந்து.

நளன் எழுந்து , மறுபடியும் கீழே விழுந்து, ‘ துன்பம் மிகுந்த இவ்விரவுப் பொழுதில் மண்மீது கிடந்து தூங்குகின்ற தமயந்தியைப் பார்த்தும் என் கண் வெந்து சாம்பலாகாமல் இருக்கின்றதே! என் உடம்பில் உள்ள உயிர் இன்னம் போகாமல் இருக்கின்றதே! என் மனம் இன்னும் வெடியாமல் இருக்கின்றதே!’ என்று வருந்தினான்.

தமயந்தி நளனை பார்த்து வருந்துதல்.
———————————————————–

‘முன்றிறனின் மேற்படுக்க முன்ற நையுமின்றி
இன்று துயில இறைவனுக்கே – என்றனது
கைபுகுந்த தென்னுடைய கால்புகுந்த தென்’றழுதாள்
மைபுகுந்த கண்ணீர் வர.

தமயந்தி விழிப்புற்று, ‘ அரசருக்கு இன்று இப்பாழான மண்டபத்தின் முற்றத்தில் படுத்து தூங்குவதற்கு ஆடையினது முன் பகுதியுமில்லாமல் , என் கையும் காலுமே உதவி செய்தன!’ என்று கூற்கிகூறிக் மை தீட்டிய கண்களிலிருந்து நீர் பெருக்கெடுத்தோட அழுதாள்.

தையலாள் தூங்கினாள்! செங்கோலான் வருந்தினான்!
—————————————————————–

‘வீமன் திருமடந்தை விண்ணவரும் பெற்றிலாத்
தாமம் எனக்களித்த தையலாள் – யாமத்துப்
பாரே அணையாப் படைக்கண் துயின்றாள்;மற்று
ஆரே துயரடையார் ஆங்கு?

தமயந்தி தூங்கிய பின் நளன் , ‘ வீமனுடைய செல்வ மகள் – வானுலக இந்திரன் முதலியோர் விரும்பியும் கிடைக்காத மணமாலையை எனக்கே சூட்டியவள் – இந்த நடு இரவில் இம்மண் தரையையே படுக்கையாகக் கொண்டு வேல் போன்ற விழிகள் மூடித் தூங்கினாள்; ஆகவே, விதியால் யார்தாம் இத்தகைய துன்பத்தை அடையாதவர்? ஒருவருமில்லை!’ என்று வருந்தினான்.

நளன் மனத்தைக் கலி கலைத்தல்.
————————————————-

பெய்ம்மலர்ப்பூங் கோதை பிரியப் பிரியாத
செம்மை யுடைமனத்தான் செங்கோலான் – பொய்ம்மை
விலக்கினான் நெஞ்சத்தை வேறாக்கி நின்று
கலக்கினான் வஞ்சக கலி.

வஞ்சகமான சூழ்ச்சி மிகுந்த கலி, சூட்டப்பட்ட மலர்களை உடைய அழகிய கூந்தலையுடைய தமயந்தியை நளனை விட்டு தனியாகப் பிரிப்பதற்கு நினைத்து, எக்காலத்திலும் நீங்காத சிறந்த பண்புடைய மனமுள்ளவனும், செங்கோலாட்சியை உடையவனும், பொய்யான வழிகளை ஒதுக்கி நடப்பவனுமான நளனுடைய மனத்தை முன்னிருந்த உறுதியினின்றும் மாற்றமடைந்து கலங்குமாறு செய்தான்.

நளன் மனைவியைப் பிரியத் துணிந்தான்!
——————————————–

வஞ்சக் கலிவலியால் மாகத்து அராவளைக்கும்
செஞ்சுடரின் வந்த கருஞ்சுடர்போல் -விஞ்ச
மதித்தேர்த் தானை வயவேந்தன் நெஞ்சத்து
உதித்ததே வேறோர் உணர்வு.

வஞ்சமுடைய கலியினது வன்மையால், வானத்தில் இராகு என்னும் பாம்பு சூழ்ந்து பிடிக்கின்றபோது கதிரவனில் தோன்றுகின்ற கருமையான ஒளியைப்போல , பகைவர்கள் மேன்மையாக எண்ணிய தேர்ப்படையையும், வெற்றியையும் உடைய நளமன்னன் நெஞ்சிலே தன் இயல்பான குணத்தினின்றும் வேறுபட்ட புதிய ஓர் எண்ணம் தோன்றியது.

ஓருயிர் ஈருயிர் ஆயிற்று!
———————————

காரிகைதன் வெந்துயரங் காணாமல் நீத்தந்தக்
கூரிருளிற் போவான் குறித்தெழுந்து – நேரே
இருவர்க்கும் ஓருயிர்போல் எய்தியதோ ராடை
அரிதற் கவனினைந்தான் ஆங்கு.

நளன் , தமயந்தி தன்னுடன் வருகின்ற கொடிய துன்பத்தைத்தான் பாராமல் இருப்பதற்காக , அவளை அக்காட்டில் விட்டு, அந்நள்ளிருளில் பிரிந்து போவதற்கு எண்ணி , எழுந்து , இருவருக்கும் ஓர் உயிரைப் போன்றிருந்த அவள் ஆடையை துண்டாக்க நினைத்தான்.

கலி வாளாய்க் கிடந்தான்.
————————————

எண்ணிய எண்ணம் முடிப்ப இகல்வேந்தன்
கண்ணி யதையறிந்து காய்கலியும் – பண்ணினுக்குக்
கேளான தேமொழியை நீக்கக் கிளரொளிசேர்
வாளாய் மருங்கிருந்தான் வந்து.

இவ்வண்ணம் வலிமை பொருந்திய நளன் நினைப்பதைக் கலி அறிந்து , இசைக்கு உறவு என்று சொல்லத்தகுந்த தேன் போலும் இனிமை பொருந்திய சொற்களையுடைய தமயந்தியை நளனிடமிருந்து வேறாகப் பிரிக்கத் தான் முன்பே நினைத்திருந்த நினைப்பை முடிக்க , விளங்குகின்ற ஒளியையுடைய ஒரு வாளினது வடிவத்தோடு அவன் பக்கத்தே வந்து கிடந்தான்

நளன் திகைப்பு.
————————–

ஒற்றைத் துகிலும் உயிரும் இரண்டாக
முற்றுந்தன் அன்பை முதலோடும் – பற்றி
அரிந்தான்; அரிந்திட் டவள்நிலைமை நெஞ்சில்
தெரிந்தான் ; இருந்தான் திகைத்து.

நளன் இருவரும் உடுத்திருந்த ஒரே ஆடையை இருவர் உயிரும் இரண்டாகப் பிரியுமாறு, நாள் தோறும் பெருகிவருகின்ற பேரன்பை அடியோடு பிடித்து அரிவானைப் போல அரிந்தான்; அரிந்த பின் தமயந்தி அக்காட்டில் தனியாய் இருக்கும் நிலைமையை ஆராய்ந்தான் ; ஒன்றும் தோன்றாமல் திகைத்திருந்தான்.

அலைபாயும் மனம்.
————————

போயொருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டேகும்;
ஆயர் கொணர்ந்த அடுபாலின் – தோயல்
கடைவார்தம் கைபோலும் ஆயிற்றே காலன்
வடியாய வேலோன் மனம்.

இவ்வாறு திகைத்து நின்ற காலனது வடிவத்தைப் போன்ற வடிவத்தையுடைய வேற்படையைக் கொண்ட நளனது நெஞ்சம் , ஒரு முறை தமயந்தியிடம் சென்று திரும்பும்; மறுமுறையும் தமயந்தியிடம் செல்லும் ;அச்செயல் இடையர் கொண்டுவந்த காய்ச்சிய பாலால் ஆன தயிரினைக் கடைகின்றவராகிய ஆய்ச்சியருடைய கைகளின் செயலைப் போன்றதாய் இருந்தது.

உறுதி கொள்ளல்.
———————–

சிந்துரத்தால் தெய்வ முனிவன் தெரிந்துரைத்த
மந்திரத்தால் தம்பித்த மாநீர்போல – முந்த
ஒலித்தேர்த் தானை உயர்வேந்தன் நெஞ்சம்
வலித்ததே தீக்கலியால் வந்து.

தெய்வ முனிவராகிய நாரதர் நன்கு உரைத்த மந்திர மொழியால் , ஐராவதம் என்னும் யானை செய்த செயலால், அசைவற நின்ற பெரிய கங்கையாற்றைப் போலப் போலப் போர்களத்தில் முன்னணியாய் நின்று முழக்கம் செய்கின்ற தேர்ப்படையினது வஞ்சத்தால் தமயந்தியிடமிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் உறுதியானது.

( கங்கை நீர் தம்பித்த வரலாறு:
______________________________________

………….. ஒருகால் நாரதர் கங்கைக் கரையில் பிள்ளையாரை வழிபாடு செய்து கொண்டிருந்தார். அது போது கங்கை பெருகி வந்து அவரது வழிபாட்டுக்கு இடையூறாய் நின்றது. ஆதலின் , இதை அறிந்த ஐராவதம் நீரை அவர்மீது சொரிந்து உணரச் செய்தது. அதனால் உணர்ந்த நாரதர் , மந்திரத்தைக் கூறிக் கங்கை உறைந்து போகுமாறு செய்தார். இது புராணக் கதை )

நீரானது சலனமற்று நின்றது போல , தமயந்தியிடம் உருகி நின்ற நளன் மனம் இறுகியது.

தெய்வங்காள் , வீமன் மகளைக் காத்தருள்க!
————————————————————–

‘தீக்கா நகத்துறையும் தெய்வங்காள் ! வீமன்றன்
கோக்கா தலியைக் குறிக்கொண்மின் ; – நீக்காத
காதலன்பு மிக்காளைக் காரிருளிற் கைவிட்டினின்று
ஏதிலன்போற் போகின்றேன் யான்.

‘ கொடுமையான காட்டிலே வாழ்கின்ற தெய்வங்களே, வீமன் மகளான அரசிளங்குமரியை – யாராலும் பிரிக்க முடியாத ஆசையும் அன்பும் கொண்ட தமயந்தியை – இந்தக்கருமையான இருளிலே தனியாயிருக்க விட்டுவிட்டு, நான் முன்பின் தொடர்பில்லாத அயலானைப் போலப் போகிறேன்! நீங்கள் இவளை உங்கள் பாதுகாப்புக்குள்ளாக்கிக் கொண்டு தீமை வராமல் பாதுகாப்பீர்களாக! என்று நளன் கூறினான்.

பிரியாதான் பிரிந்தான்.
———————————-

ஏந்தும் இளமுலையாள் இன்னுயிரும் தன்னருளும்
பூந்துகிலும் வேறாகப் போயினான் – தீந்தேன்
தொடைவிரவு நாள்மாலை சூட்டினாள் தன்னை
இடையிருளிற் கானகத்தே இட்டு.

நளன் இனிமையான தேனையுடைய மலர்களில் வண்டுகள் பொருந்திய புதுமலர் மாலையைத் திருமண நாளில் சூட்டி மணம் செய்துகொண்ட தமயந்தியை நள்ளிருளில் காட்டில் தனித்து உறங்கும் வண்ணம் விட்டுவிட்டு , நிமிர்ந்த கொங்கையை உடையவளான தமயந்தியின் இனிய உயிரும் தன் இரக்கப் பண்பும் அழகான ஆடையும் வேறு வேறாகப் பிரியும்படி சென்றான்!

கவிஞர் நன்றி.
————————

தாருவெனப் பார்மேல் தருசந் திரன்சுவர்க்கி
மேருவரைத் தோளான் விரவார்போல் – கூரிருளில்
செங்கால் நகஞ்சிதையைத் தேவியைவிட் டேகினான்
வெங்கா நகந்தனிலே வேந்து.

நளன் , இம்மண்ணுலகில் விண்ணுலகக் கற்பக மரம் என்று சொல்லும்படி இரவலர்க்கெல்லாம் அளவற்றுக் கொடுக்கும் சந்திரன் சுவர்க்கி என்னும் பெயரையுடைய இமயமலைபோலும் உயர்ந்த தோள்களையுடையவனை எதிர்த்த பகைவர்கள் தோற்றோடுவதைப்போல, மிக்க இருளையுடைய இரவுக் காலத்தில் தமயந்தியைக் காட்டில் தனியே விட்டு நீங்கித் தன் கால் நகங்கள் தேயும்படி நடந்து சென்றான்.

நளன் தமயந்தியைவிட்டு மறைந்து சென்றது சந்திரன் சுவர்க்கியின் பகைவர் அஞ்சி ஓடியடு போன்றிருந்தது!

மங்கை மனத்துயர்.
——————————–

நீலம் அளவே நெகிழ நிரைமுத்தின்
கோல மலரின் கொடியிடையாள் , – ‘ வேல்வேந்தே!
எங்குற்றாய்?’ என்னா இனவளைக்கை நீட்டினாள்
அங்குத்தான் காணா தயர்ந்து.

மலரையுடைய கொடி போன்ற இடுப்பினையுடையவளாகிய தமயந்தி விழித்து, நளனைக் காணாது வருந்தி, கண்ணீர்த் துளிகள் கருமையான நீல மலர் போன்ற விழிகளிலிருந்து ஒழுக , ‘வெற்றிப்படைக்குரிய வேந்தரே , என்னை விட்டு எங்கே சென்றீர் ?’ எனக் கூறிப் பல வளையலை அணிந்த தன் கைகளை நீட்டி , நிலத்தைத் தடவிப்பார்த்தாள்.

தரையைத் தடவிப்பார்த்துக் காணாது மயங்கல்.
——————————————————————-

வெய்ய தரையென்னும் மெல்லமளி யைத்தடவிக்
கையரிக்கொண் கெவ்விடத்துங் காணாமல் – ‘ ஐயகோ’!
என்னைப்போய் வீழ்ந்தாள் இனமேதி மென்கரும்பைத்
தின்னப்போம் நாடன் திரு.

அவள் விழித்த நேரம் இரவு; இருள் செறிந்தது. ஆகவே ,அவள் தரையைத் தடவிப் பார்த்தாள்.

எருமை மந்தைகள் மென்மையான கரும்புகளித் தின்பதற்குப் போகின்ற வயல் வளம் பொருந்திய நாட்டையுடைய வீமன் மகள், கரடு முரடான தரையைத் தன் கைகளால் தடவிப்பார்த்து, நளனைக் காணாமல் , பல இடங்களிலும் , ‘ஐயகோ ‘!
என்று அழுதுகொண்டு கீழே விழுந்தாள்.

இளமயில் போல ஏங்கி விழுந்தால்.
———————————————

அழல்வெஞ் சிலவேடன் அம்புருவ ஆற்றாது
உழலுங் களிமயில்போல் ஓடிக் -குழல்வண்டு
எழுந்தோட வீழ்ந்தாள் இருகுழைமேற் கண்ணீர்க்
கொழுந்தோட வீமன் கொடி.

வீமன் பெற்றெடுத்த கொடி போன்ற தமயந்தி, வேடனுடைய கொடிய வில்லிலே தொடுத்து விடப்பட்ட தீயைப் போன்ற அம்பானது தைத்துச் செல்ல அதைப்பொறுக்க முடியாமல் வருந்துகின்ற இளமயிலைப்போல, ஓடி அலைந்து கூந்தலில் மொய்த்திருந்த வண்டுகள் பறந்து போகவும், இரண்டு செவிகளின் பக்கங்களில் கண்ணீர் பெருகவும் கீழே விழுந்தாள்.

வான்முகிலும் மின்னும் போல வனிதை விழுந்தாள்!
——————————————————–

வான்முகிலும் மின்னும் வறுநிலத்து வீழ்ந்ததுபோல்
தானும் குழலும் தனிவீழ்ந்தாள் – ஏனம்
குளம்பால் மணிகிளைக்கும் குண்டுநீர் நாடன்
இளம்பாவை கைதலைமேல் இட்டு.

பன்றிகள் குளம்பால் தோண்டி , மணிகளை மேலெழச்செய்கின்ற , ஆழம் மிக்க நீர் நிலைகலையுடைய விதர்ப்ப நாட்டரசன் மகளான இளமைத் தன்மை பொருந்திய பாவையைப் போன்ற தமயந்தி, தன் கைகளைத் தலை மேல் வைத்துக்கொண்டு, விண்ணில் உள்ள மேகமும் மின்னலும் வெறுந்தரையில் விழுந்தது போல, விரிந்த கூந்தலுடன் தன்னந்தனியாய் விழுந்தாள்.

கோழிகளும் வருந்தினவோ?
——————————–

தையல் துயிர்க்குத் தரியாது தஞ்சிறகாம்
கையால் வயிறலைத்துக் காரிருள்வாய்-வெய்யோனை
‘வாவுபரித் தேரேறி வா!’என் றழைப்பனபோல்
கூவினவே கோழிக் குலம்.

கோழிகள், தமயந்தியினது துன்பத்தைக் கண்டு மனம் பொறாமல் சிறகாகிய கைகளால் வயிற்றிலடித்துக்கொண்டு கதிரவனைத் ‘தாவிச் செல்கின்ற பரிகள் பூட்டிய தேரின் மேல் ஏறிக்கொண்டு ஓடிவா!’ என்று அழைப்பன போலக் கூவின.

கதிரவன் தோற்றம்.
—————————-

வான நெடுவீதி செல்லும் மணித்தேரோன்
தான மடந்தைக்குத் தார்வேந்தன் -போனநெறி
காட்டுவான் போலிருள்போய்க் கைவாங்கக் கானூடே
நீட்டுவான் செங்கரத்தை நின்று.

வானத் தெருவில் செல்லும் அழகிய தேரையுடைய சூரியன், தான் தோன்றிய மலையிலிருந்து மாலையை அணிந்த நளன் மறைந்து சென்ற வழியைத் தமையந்திக்குக் காட்டுகின்றவனைப்போல , இருட்பொழுதானது நீங்கி ஓட அக்கானகத்தின் உள்ளிடமெல்லாம் தன் செந்நிறமான ஒளியையுடைய கதிர்களாகிய கைகளை நீட்டுவானாயினான்.

மங்கையின் மறுக்கம்.
—————————-

‘செய்தபிழை ஏதென்னும்’;'தேர்வேந்தே! ‘ என்றழைக்கும்;
‘எய்துதுய ரக்கரைகா ணேன்!’என்னும்; – ‘பையவே
என்னொன்றா தென்?’என்னும்; இக்கானில் விட்டேகும்
மன்’என்னா வாடும் மயர்ந்து.

தமயந்தி, ‘ நான் செய்த பிழை யாது?’ என்பாள்; ‘தேரையுடைய அரசரே ,’ என்று அழைப்பாள்; ‘ எனக்கு நேர்ந்த துன்பத்துக்கு எல்லையில்லையே !’ என்பாள் ; ‘மெள்ள வாயைத்திறந்து, ‘ ஏன் வருந்துகிறாய்?’ என்று கேளாத காரணம் என்ன?’ என்பாள்; இக்கொடிய காட்டில் என்னைத் தனியாக விடுத்துச் சென்ற வேந்தரே ,’ என்று சொல்லி வருத்தமடைந்து மெலிவாள்.

அடிச்சுவடு கண்டு அலமரல்.
————————————-

அல்லியந்தார் மார்பன் அடித்தா மரையவள்தன்
நல்லுயிரும் ஆசையும்போல் நாறுதலும் – ‘மல்லுறுதோள்
வேந்தனே!’ என்னா விழுந்தாள் விழிவேலை
சாய்ந்தநீர் வெள்ளத்தே தான்.

உள்ளித்தழையுடைய மலர்மாலையை அணிந்த மார்பை உடையவனாகிய நளனது தாமரை மலர் போன்ற அடிகளின் சுவடுகள் தமயந்தியினுடைய நல்ல உயிரும் பேரன்பும் போலத் தோன்றியவுடனே , ‘மற்போரில் சிறந்த தோள்களையுடைய அரசரே!’ என்று வருந்திக் கூறிக் கண்ணாகிய கடலிலிருந்து வழிந்த நீர்ப்பெருக்கில் விழுந்தாள்.

‘மானே, மயிலே , மன்னரைக் காட்டீரோ!’
———————————————-

‘வெறித்த இளமான்காள்’ மென்மயில்காள் ! இந்த
நெறிக்கண் நெடிதூழி வாழ்வீர்! – பிரித்தெம்மைப்
போனாரைக் காட்டுதிரோ? என்னாப் புலம்பினாள்
வானாடர் பெற்றிலா மான்.

விண்ணவர் விரும்பியும் அவர்க்குக் கிட்டாத மானைப் போன்ற தமயந்தியானவள் , அக்காட்டின் கண் வாழும் மான் மயில் முதலியவற்றைப் பார்த்து, ‘ என்னக் கண்டு அஞ்சி ஓடும் இளமை மிக்க மான்களே , மென்மை போருந்திய மயில்களே , நீங்கள் இந்த வழியில் நீண்ட காலம் வாழ்ந்திருப்பீர்கள்! என்னை வேறாகப் பிரித்து நீங்கிப்போன எம் அரசரை நீங்கள் காட்டமாட்டீர்களோ!’ என்று புலம்பினாள்.

மலைப்பாம்பருகே மங்கை சேரல்.
———————————————

வேட்ட கரியை விழுங்கிப் பெரும்பசியால்
மோட்டு வயிற்றரவு முந்தோன்ற – வீட்டதனை
ஓரா தருகணைந்தாள்; உண்தேன் அறற்கூந்தல்
போரார் விழியாள் புலர்ந்து.

மலர் மாலையிலுள்ள மதுவை வண்டுகள் உண்கின்ற கருமணலைப் போன்ற கூந்தலையும் செவிகளோடு போரைச் செய்கின்ற விழியையுமுடைய தமயந்தி, வாட்டங்கொண்டு, அளவு கடந்த பசியால் தான் உண்ண விருமிய யானையைப் பற்றி விழுங்கி அதனால் உயர்ந்திருக்கின்ற வயிற்றையுடைய ஒரு மலைப்பாம்பு தன்னை நோக்கி வரத் திரும்பிப் பார்த்து, அதன் தன்மையை அறியாதவளாய், அதன் அருகில் சென்றாள்.

மலைப்பாம்பு மங்கையை விழுங்கல்.
————————————————

அன்ஙண் விசும்பின் அவிர்மதிமேற் சென்றடையும்
வெங்கண் அரவுபோல் மெல்லியலைக் – கொங்கைக்கு
மேலெல்லாந் தோன்ற விழுங்கியதே வெங்கானின்
பாலெல்லாம் தீயுமிழும் பாம்பு.

அழகிய இடத்தையுடைய வானத்தில் ஒளியை வீசும் திங்களின் மேல் சென்று அதை விழுங்குகின்ற கொடிய கண்களையுடைய கேது என்னும் பாம்பைப்போல் , வெம்மையுடைய காட்டில் செல்லுமிடம் எல்லாம் நஞ்சாகி தீயைக் கக்குகின்ற கொடிய அந்தப் பாம்பானது , தமயந்தியைக் கொங்கைகளுக்கு மேற்பட்ட உடல் பகுதிகள் வெளியே தோன்றும் வண்ணம் விழுங்கியது.

‘மன்னவனே , காவாயோ!
——————————-

‘வாளரவின் வாய்ப்பட்டு மாயாமுன் மன்னவ!நின்
தாளடைந்து வாழுந் தமியேனைத் -தோளால்
விலக்காயோ?’ என்றழுதாள் வெவ்வரவின் வாய்க்கங்
கிலக்காகி நின்றாள் எடுத்து.

அக்காட்டில் கொடிய பாம்பின் வாய்க்கு இரையாகிய தமயந்தி, ‘அரசரே , இக்கொடிய மலைப்பாம்பின் வாய்க்குள் அகப்பட்டு யான் இறந்து போவதற்கு முன்பு, உம் திருவடிகளை அடைந்து உயிர் தாங்கி நின்ற ஆதரவற்றவளை, உம்முடைய தோள் வலிமையால் இம்மலைப்பாம்பினுடைய வாயிலிருந்து காப்பாற்ற வர மாட்டீரோ!’ என்று பெருங் குரலில் அழுதாள்.

‘மாள்கின்றேன் ! திருமுகம் காண்கிலேன்!’
————————————————

‘வென்றிச் சினவரவின் வெவ்வா யிடைப்பட்டு
வந்துயராற் போயாவி மாள்கின்றேன் ! – இன்றுன்
திருமுகம்நான் காண்கிலேன் தேர்வேந்தே! என்றாள்
பொருமுகவேற் கண்ணாள் புலர்ந்து.

போர் செய்கின்ற கூரிய நுனியையுடைய வேலைப் போன்ற கண்களையுடைய தமயந்தி, ‘ தேரையுடைய மன்னவரே , அஞ்சாத சினத்தையுடைய மலைப்பம்பினுடைய நஞ்சையுடைய வாயில் அகப்பட்டுக்கொண்டு கொடிய துன்பத்தால் உயிர் தளர்ந்து சாகும் தருவாயில் இருக்கின்றேன்! அவ்வாறிருந்தும் ,இப்பொழுது உமது அழகிய முகத்தைக் காணாதவளாய் இருக்கின்றேன்!’ என்று அழுதாள்.

மக்களை நினைத்து மனங்கசிதல்.
——————————————

‘மற்றெடுத்த தோள்பிரிந்தும் மாயாத வல்வினையேன்
பெற்றெடுத்த மக்காள்! ப்ரிந்தேகும் – கொற்றவனை
நீரேனுங் காண்குதிரோ!’ என்றழுதாள் நீள்குழற்குக்
காரேனும் ஒவ்வாள் கலுழ்ந்து.

நீட்ட்சியையுடைய தனது கூந்தலுக்கு மேகமும் ஒவ்வாத தன்மையையுடைய தமயந்தி, ‘மற்போரில் சிறந்த தோள்களையுடைய மன்னரை விட்டுப் பிரிந்தும், இறக்காத கொடிய தீவினையையுடைய் நான் பெற்றெடுத்த மக்களே, விட்டுப் பிரிந்து சென்ற வெற்றி பொருந்திய மன்னரை நீஙளேனும் காண்பீர்களோ! ‘ என்று கலங்கி அழுதாள்.

‘மாள்கின்றேன் ! மன்னவரே , விடை தாரும்!
————————————————-

‘அசையுங் கடுங்கானில் ஆடரவின் வாய்ப்பட்டு
உடையுமுயிர் நாயகனே! ஓகோ! – விடையெனக்குத்
தந்தருள்வாய் என்னாத்தன் தாமரைக்கை கூப்பினாள்
செந்துவர்வாய் மென்மொழியாள் தேர்ந்து.

செம்பவளத்தைப் போன்ற வாயையும் மென்மையான சொற்களையும் உடைய தமயந்தி , ‘ என் தலைவரே , இக்கொடிய காட்டில் ஆடுகின்ற மலைப்பாம்பினுடைய வாயிலாகப் பட்டு என் உயிர் போகின்றது! இறந்து போகின்ற எனக்கு விடை கொடுப்பீராக!’ என்று கூறித் தாமரை மலர் போன்ற தன் கைகளைக் குவித்து வணங்கினாள்.

வனிதை நிலை வனசரன்.
———————————-

‘உண்டோர் அழுகுரல்!’என் றொற்றி வருகின்ற
வெண்தோடன் செம்பங்கி வில்வேடன் – கண்டான்
கழுகுவாழ் கானகத்துக் காரரவின் வாயில்
முழுகுவாள் தெய்வ முகம்.

‘இந்தக் காட்டில் அழுகின்ற ஒலி கேட்கின்றது!’ என்று உற்றுக் கேட்டு வருகின்றா வெண்ணிறச் சங்கினால் ஆன காதணியை அணிந்தவனும், செம்பட்டை மயிரையும் வில்லையுமுடையவனுமாகிய ஒரு வேடன் , கழுகினங்கள் வாழ்கின்ற கரிய மலைப்பாம்பு வாயிலே அகப்பட்டு மறைபவளாகிய தமயந்தியின் முகத்தைப் பார்த்தான்.

‘ஐயன்மீர் , உங்கட்கு அபயம்!’
———————————–

‘வெய்ய அரவின் விடவாயி நுட்பட்டேன்
ஐயன்மீர்! உங்கட் கபயம்!யான் -உய்ய
அருளீரோ?’ என்னா அற்றினாள் அஞ்சி
இருளீரும் பூணாள் எடுத்து.

இருளை ஓட்டுகின்ற அணியை அணிந்த தமயந்தி, ‘ ஐயன்மீர், கொடுமையான பாம்பினது நஞ்சு பொருந்திய வாயினுள் அகப்பட்டுக்கொண்டேன்! உங்களிடம் நான் அடைக்கலமாகின்றேன்! இந்தப் பாம்பின் வாயிலிருந்து யான் தப்பிப் பிழைக்க அருள் செய்ய மாட்டீரோ!’ எனக் கூறி அச்சம் கொண்டு குரல் எடுத்து அழுதாள்.

பாம்பின் வாய்ப்பட்ட பாவையை மீட்டல்.
——————————————–

சங்க நிதிபோல் தருசந் திரன்சுவர்க்கி
வெங்கலிவாய் நின்றுலக மீட்டாற்போல் – மங்கையைவெம்
பாம்பின்வாய் நின்று பறித்தான் பகைகடிந்த
காம்பின்வாய் வில்வேடன் கண்டு.

மூஙிலால் செய்யப்பட்ட பகையை வென்ற வில்லையுடையவ் ஏடனானவன், தமயந்தியின் நிலையை பார்த்துத் இரவலர்க்கும் புலவர்க்கும் இல்லையென்னாது பொருளை வழங்குகின்ற சந்திரன் சுவர்க்கி என்னும் வேந்தன் தனது கொடைத் திறத்தால் உலகத்தைக் கொடிய வறுமையிலிருந்து மீட்டதைப் போலத் தமயந்தியை அக்கொடிய பாம்பின் வாயிலிருந்து மீட்டான்.

நங்கை நவின்ற நன்றி.
———————————–

‘ஆருயிரும் நானும் அழியாமல் ஐயா!இப்
பேரரவின் வாயிற் பிழைப்பித்திஆய்; – தேரில்
அதற்குண்டோ கைம்மா றெனவுரைத்தாள் வென
Back to top Go down
 
கலிதொடர்காண்டம் – பக்கம் 2
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கலிதொடர்காண்டம் – பக்கம் 1
» கலிநீங்குகாண்டம் – பக்கம் 1
» கலிநீங்குகாண்டம் பக்கம் - 2
» சுயம்வர காண்டம் பக்கம் 2
» நபிகளை இழிவுபடுத்தும் படங்கள் இடம் பெற்ற ஃபேஸ்புக் பக்கம் நீக்கம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: