BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசங்கம் காண்போம் (03) Button10

 

 சங்கம் காண்போம் (03)

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

சங்கம் காண்போம் (03) Empty
PostSubject: சங்கம் காண்போம் (03)   சங்கம் காண்போம் (03) Icon_minitimeMon Apr 05, 2010 12:48 pm

தோழன், நேற்று தலைவனிடம் "நீ விரும்பும் தலைவியின் உயிர்த்தோழி, கோவிலுக்கு அருகில் இருக்கும் நந்தவனத்தில் உன்னைச் சந்திப்பாள். நீ உன் மனதில் உள்ளவற்றை அவளிடம் கூறலாம்" என்று சொன்னதன் பேரில் இதோ.. இங்கே.. தலைவன் நந்தவனத்தில் காத்திருக்கின்றான் தோழியின் வருகையை எதிர்நோக்கி!!

தான் இது போல் ஒரு பெண்ணை யாசித்து நிற்போம் என்று அவன் நினைத்திருக்கவில்லை. 'எப்படி இந்த நிலைமை ஏற்பட்டது..?' என்று எண்ணிப் பார்த்தான். 'எப்போது முதன்முதலாக தலைவியைப் பார்த்தேன்' என யோசித்தான். நினைவலைகள் பின்னோக்கிச் சென்றன.

ஆம்..! ஒரு நாள் நண்பர்களோடு பூங்காவில் அமர்ந்திருந்தான். தோழர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கேலி செய்தவாறு அமர்ந்திருந்தனர். அப்போது இவன் மீது ஒரு பந்து வந்து விழுந்தது. திரும்பினான்... ஒரு பெண்! அன்றலர்ந்த மலரில் காணப்படும் பனித்துளி போல புத்துணர்வோடு இருந்தாள். அலை போன்ற கூந்தல் முகத்தில் விழ, கைகளால் அவற்றை ஒதுக்கியவாறு.. "பந்து.." என்று மெதுவாகக் கேட்டாள். தலைவனும் முகத்தில் புன்னகையோடு பந்தை எடுத்துக் கொடுக்க அந்தப் பெண்ணும் புன்னகையோடு பந்தை வாங்கிக் கொள்ள, கைகளை நீட்டினாள். அதற்குள் அங்கிருந்த தோழன் "..முடியாது.. பந்தைக் கொடுக்க முடியாது" என்று கோபமாகக் கூறினான். அதற்குள் அந்தப் பெண்ணின் கண்களில் வருத்தம் தெரிந்தது. அப்போது அவளை விட மூத்தவளாக இருந்த ஒரு பெண் ஓடி வந்தாள். அவள் அந்தப் பெண்ணின் தோள்களில் தட்டி, ஆறுதல் கூறி.. இவர்களிடமிருந்து பந்தை வாங்கிக் கொள்ள, இருவரும் ஓடி விட்டனர். இதுதான் முதல் சந்திப்பு! காதல் என்ற உணர்வு தோன்றுவதற்கு முன் ஏற்பட்ட சந்திப்பு. அன்றோடு அந்தப் பெண்ணை மறந்தான் தலைவன்.

'சொத்'தென்ற சத்தத்துடன் ஒரு காய் விழ அவனுடைய எண்ண ஓட்டம் தடைப்பட்டது. 'எங்கே தோழி..? வரவில்லையே.. வருவாள்... நிச்சயம் வருவாள்.. வரும்போது வரட்டும்' என்று வாட்டமாக ஒரு இருக்கையைப் பார்த்து அமர்ந்தான்.

'இரண்டாவது முறையாக எப்போது பார்த்தேன்..? ஆம்! முதல் சந்திப்பிற்குப் பின், சரியாக இரண்டாம் நாள்... ஊரில் இருக்கும் சிற்பக் கலைக்கூடத்தில்..' என்று அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தான். ஒவ்வொரு தூணிலும் மிக அழகாகவும், திறமையோடும், தத்ரூபமாகவும் செதுக்கியிருந்த சிற்பங்களை ரசித்துக்கொண்டே வந்தவன்... ஒரு பெண்ணின் மேல் மோதி விட அப்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தாள். கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பார்க்காமல் நிகழ்ந்ததற்காக பல்முறை மன்னிப்புக் கேட்டு வருந்தினான். அதற்குள் அப்பெண் சுதாரித்துக் கொண்டு எழுந்து விட்டாள். "சிற்பங்களைப் பார்த்துக் கொண்டு வந்ததில்... உங்களைப் பார்க்கவில்லை. இடித்து விட்டேன்.. அடி ஏதேனும் பட்டுவிட்டதா" என்று கேட்ட போதுதான் அவளைப் பார்த்தான்.

அதே பெண்! அதே அழகான முகம்!. மீண்டும் பேச ஆரம்பிப்பதற்குள்.. அன்று பார்த்த அதே தோழி வந்தாள். "என்ன இது! பார்த்து வரக்கூடாதா? ஏதாவது ஆகியிருந்தால்.." என்று சற்றுக் கடுமையாக தலைவனிடம் கேட்டாள். உடனே தலைவி, "இல்லை.. நானும்தான் கவனிக்காமல் வந்து விட்டேன்.." என்று கூற, தோழி அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றாள். வானத்தில் மின்னல் தோன்றி சட்டென்று மறைந்தது போல் இருந்தது தலைவனுக்கு. ஒன்றும் விளங்காமல் அங்கே நின்று கொண்டிருந்தான்.

சற்று தூரம் சென்ற அந்தப் பெண் தலைவனைத் திரும்பிப் பார்த்தாள்… சிரித்தாள்… தலைவனின் உச்சந்தலையில் இரத்தம் சூடாக பாய்வது போல உணர்ந்தான். அவனுக்கு அப்பெண்ணை மீண்டும் பார்க்க வேண்டும் போல் தோன்றியது.. 'இதுதான் காதலா..' என்று யோசித்தான். யார் அவள்..?

'மூன்றாவது முறை எப்போது சந்தித்தேன்..?' என்று யோசித்தவாறு.. நிகழ்ந்ததை எண்ணிப் பார்த்தான். ஒரு நாள் தலைவன் தன் வீட்டின் வாசலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான். அப்போது தூரத்தில் அந்தப் பெண் தன் தோழிகளுடன் வந்துகொண்டிருந்தாள். 'கனவா? நனவோ?' என்று தடுமாறினான் தலைவன். இல்லை உண்மைதான்! தலைவியின் அழகு முகத்தைப் பார்த்து ரசித்தான். முகத்தில் என்ன பொலிவு! 'மழைக் காலத்தில் பூக்கும் பிச்சிப் பூவின் இளமையான செழிப்பான மொட்டுகள் போன்ற கண்கள்... அந்த மொட்டுகளின் புறப்பகுதியின் இளம்சிவப்பு போல.. செவ்வரியோடிய கண்கள்' என்று மனதிற்குள் கவிதையே எழுதி விட்டான். அவளும் அவனைப் பார்த்தாள். ஆனால் நாணத்தால் தலை குனிந்தவாறு.. கால்கள் பின்னலிட... ஓரக்கண்ணால் இவனைப் பார்த்தவாறு.. இவனைக் கடந்து சென்றாள். இதயம் துள்ள வீட்டினுள் சென்று உடை மாற்றிக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தான் தலைவன்.

அவர்கள் பேச்சும் சிரிப்பொலியுமாக ஆற்றங்கரைக்குச் சென்று அங்கிருக்கும் தெப்பத்தில் ஏறிக் கொண்டனர். தலைவன் ஆற்றங்கரையில் நின்றவாறு அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவளின் அழகை இங்கிருந்தும் அவனால் உணர முடிந்தது. அசைந்து அசைந்து செல்லும் தெப்பத்திற்கேற்ப அவள் அசைவது நாட்டியமாக இருந்தது அவனுக்கு. அன்று பூங்காவிலும், சிற்பக்கூடத்திலும் பார்த்த அந்தத் தோழி, தாய் போல் அன்பும், அரவணைப்பும், உரிமையும் கொண்டவளாக, எல்லோரையும் வழி நடத்திக் கொண்டிருந்தாள். கூட்டத்தில் இருக்கும் மற்றப் பெண்களைக் காட்டிலும் தலைவி இவளிடமே மிகுந்த அன்பு உடையவளாக இருக்கின்றாள் என்பதைப் புரிந்து கொண்டான் தலைவன்.

'அதோ அந்தத் தோழி தெப்பத்தின் தலைப் பகுதியைப் பிடித்துக் கொண்டால் நம் தலைவியும் அதே இடத்தைப் பிடிக்கின்றாள். தோழி தெப்பத்தின் கடைப் பகுதியைப் பிடித்தால் தானும் அதையே செய்கிறாள். அவள் நின்றால் இவளும் நிற்கிறாள். அவள் அமர்ந்தால் இவளும் அமர்கிறாளே..' என்று சிரித்துக் கொண்டான் தலைவன். 'ஒரு வேளை தோழி தவறுதலாக கைகளை விட்டு விட்டு தண்ணீரில் விழுந்து நீரோடு முழ்கிப் போனால்.. .நம் தலைவியும் நிச்சயம் அவளைப் போலவே மூழ்கி விடுவாள்' என்று நினைத்துக் கொண்டான். உடனே அவனுக்கு ஒரு எண்ணம் பளிச்சிட்டது. 'இந்தத் தோழியின் மூலம் நம் காதலைத் தெரிவிக்க முடிந்தால்..?' அந்த நினைவே அவனுக்கு இன்பமாக இருந்தது. தன் தோழனின் உதவியோடு இதோ.. இன்று.. தோழியை சந்திக்கக் காத்திருக்கின்றான்.

அதோ துரத்தில் தோழி வருவது தெரிய, தன் காதல் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் தோழியை வரவேற்க ஆயத்தமாகின்றான்.

இக்காட்சி குறுந்தொகையில் அமைந்துள்ளது.

தலைவன் கூற்று
குறிஞ்சித்திணை

தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும்
கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும்
புணைகை விட்டுப் புனலோடு ஒழுகின்
ஆண்டும் வருகுவள் போலும்! மாண்ட
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச்
செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்
துளிதலைத் தலைஇய தளிரன் னோளே
- சிறைக்குடி ஆந்தையார்.

தெப்பத்தின் தலைப்பக்கத்தைத்
தோழி பிடித்தால்
தானும் அதையே பிடிக்க..
கடைப்பக்கத்தைப் பிடித்தால்
தானும் அதையே செய்ய..
தவறுதலாய், தோழி,
தெப்பத்தைக் கைவிட்டு நீரில் மூழ்கினால்..
நிச்சயமாய்
அதையும் செய்வாள்,
மழைக் காலப் பிச்சிப்பூவின்
நீர் ஒழுகும் இளமொட்டின்
புறப்பகுதி சிவப்பு போல
செவ்வரியோடிய கண்களையும்
பனித்துளி தவழும் தளிர் மேனியையும்
உடையவளாகிய என் தலைவியே![b]
Back to top Go down
 
சங்கம் காண்போம் (03)
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சங்கம் காண்போம் (05)
» சங்கம் காண்போம்
» சங்கம் காண்போம் (02)
» சங்கம் காண்போம் (04)
» தமிழ்ச் சங்கம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: