BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ Tamil Story ~~ மண்டித்தெரு பரோட்டா சால்னா   Button10

 

 ~~ Tamil Story ~~ மண்டித்தெரு பரோட்டா சால்னா

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ Tamil Story ~~ மண்டித்தெரு பரோட்டா சால்னா   Empty
PostSubject: ~~ Tamil Story ~~ மண்டித்தெரு பரோட்டா சால்னா    ~~ Tamil Story ~~ மண்டித்தெரு பரோட்டா சால்னா   Icon_minitimeThu Apr 07, 2011 3:28 am

~~ Tamil Story ~~ மண்டித்தெரு பரோட்டா சால்னா




கேட்க நினைத்து, கேட்க நினைத்து இருபத்தாறு வருடங்கள் போய்விட்டன. அப்பா! கேட்க முடியாத கேள்விகளைத்தான் நோட்டில் எழுதி வைத்திருக்கிறேன். அவைகளைதான் கவிதைகள் என்கின்றனர் நண்பர்கள். சுய புலம்பல்கள் என்கின்றனர் இலக்கிய நண்பர்கள். எனக்கு ஏதப்பா கவிதையும், கதையும்? எனக்குச் சொந்தமானதெல்லாம் ஒரே கவிதையும் ஒரே கதையும்தானே! இரைச்சலால் கேட்டு அடைந்து போயிருக்கும் என் காதுகளுக்கும், சோடியம் வேப்பர் வெளிச்சத்திலேயே இத்தனை வருஷமும் தூங்கிப் பழக்கப்பட்ட என் கண்களுக்கும், தூக்கம் மிகுந்த கண்களைக் கசக்கி முன் ஜாமத்திலேயே மண்டிக்காரர்களுக்கு ‘டீ’ வாங்கிவர ஓடிக் கொண்டிருந்தவனுக்கு எப்படி அப்பா கதையும், கவிதையும் சாத்தியம்?

உன் அன்பின் வன்முறைதான் இந்த மாதிரியான நிறைய்ய கேள்விகளைக் கேட்க முடியாதவனாக்கி விட்டது அப்பா. பாசம், ஆறுதல், கட்டுப்பாடு இப்படி நிறைய வார்த்தைகளால் நீ போட்டு வைத்திருந்த இரும்புக் கம்பிவேலிகளுக்குப் பின்னால், புது மழையில் பூத்த சிறு பூக்களைக்கூட நான் நின்று கவனித்ததில்லை. எனக்கு ஸ்கூலுக்கு நேரமாகி விடும். அந்தத்தேவடியாவுக்கு எதிரா நான் படிச்சி கலக்டராவணும். இதையெல்லாம் அந்தச் சின்னஞ்சிறிய பூக்களின் மென்மையும் அழகும் பாதிக்கலாம், இல்லையா அப்பா!

ஒரே ஒரு கேள்விதான் அப்பா எனக்கு.

கெட்ட வார்த்தைகளற்ற அம்மாவின் பெயரை ஒரு முறை நீ சொல்லி நான் கேட்க வேண்டும். சொல், எளிமையாக.... நிதானமாக. என் மீதான உன் பாச வன்முறையை எல்லாம் தூரத் துடைந்தெறிந்து விட்டு, மூன்று மாதக் குழந்தையாய், அம்மாவின் இளஞ்சூட்டில் ஒட்டிக்கிடந்து அவள் கவுச்சியேறிய உடலிது. உன்னையும், என்னையும் ஒரே நிமிடத்தில் உதறி எறிந்தாளா?

இதை ஒரு குற்றமாக, கையாலாகாத்தனத்திற்காகவெல்லாம் கேட்கவில்லை. தாய்ப்பறவை தன் செட்டைக்குள் தன் குஞ்சை வெதுவெதுப்போடு வைத்திருந்ததை விடவும் பாதுகாப்பாக, நீ என்னை வைத்திருந்தாய். நீ பறக்கச் சொன்னபோது நான் பறந்தேன். நீ சொன்ன மரக்கிளைகளில் மட்டும் பழருசி அறிந்தேன். உடன் வேலை பார்ப்பவர்கள் இசை பற்றி பேசுகிறார்கள். விவாதிக்கிறார்கள். இசை மனிதனை மெய்மறக்க வைக்கிறது என்கிறார்கள். நீ தூங்கிக் கொண்டிருந்த ஒரு பின்னரவில் நானும் மிக ரகசியமாய் இசை கேட்டேன் அப்பா.

கடா முடா சத்தங்களும் நவுரு, நவுரு என்கிற இரைச்சலும் இடைஇடையே மாடுகளின் குரலும், வண்டிகளின் ஹாரன் ஒலியும்... முடியலை அப்பா, இதற்கு மேல் போக தூக்கமும், துக்கமும் அழுத்துகிறது. முப்பத்தி மூன்று வருஷமாக காது இச்சத்தத்திற்குப் பழக்கப்பட்டு பழுத்துப்போயிருக்கிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட சத்தங்கள்தான் இசையாம்! நான் கேட்க நேரும் சத்தங்கள் எப்போது ஒழுங்குப்படுத்தப்பட்டன?

ஸ்கூலில் படிக்கிறபோது எந்த வாத்தியாரும் இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருந்ததில்லை.

‘உங்க வீடு எங்க இருக்கு?’

எல்லோரும் தெரு சொல்வார்கள். சிலர் வீட்டின் எண் சொல்வார்கள். இன்னும் சிலர் வீட்டுக்குப் பேர்கூடச் சொன்னார்கள். நான் மட்டும்தான் எழுந்து ‘மண்டித்தெரு’ என்பேன்.

‘மண்டித்தெருவுல எங்க?’

இந்த கேள்வி என்மீது எறியப்படும் தீஜ்வாலை. என்ன சொல்வது? மணி முதலியார் மண்டி, ராஜமாணிக்கம் கமிஷன் மண்டி, சீத்தாபதி நாய்க்கரின் நெல்தரகு மண்டி என நீளும் என் பட்டியலில் எந்த மண்டி சீக்கிரம் மூடுவார்களோ அதுதான் அன்றைய இரவு என் வசிப்பிடம். அசைவற்றிருந்த அந்த கணங்கள் நினைவிலிருந்து அகலாதவைகள் அப்பா. தொண்டை அடைக்க, உடல் நடுங்க மொய்க்கும் பார்வைகளைத் தவிர்த்து, சொல்லி முடித்து ஒரு பிணம் மாதிரி...

எல்லோரும் கேட்டார்கள். உன் அப்பா இல்லாத நீ சாத்தியமே இல்லையா?

சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சம் விழும் மண்டிகளின் வராண்டாக்களில் நான் படித்து முடிக்கிற வரை என்றைக்கு நீ தூங்கி இருக்கிறாய்? என் விழிப்பிற்குப் பிறகு ஒருநாளும் நீ எழுந்ததில்லை, ஒரு வீட்டைப் பாதுகாக்கும் கூர்காவின் கூர்மையை விட நுட்பமானது உன் விழிப்பு. வரம் வேண்டும் ஒரு முனிவனின் தவம் போல எனக்காக நீ காத்திருந்தாய்.

குளிரில், புழுக்கத்தில், நடத்திக் கூட்டிப்போய் டீயும், எப்போதாவது பன்னும் வாங்கித் தந்து என் விடிதல்களை உற்சாகப்படுத்திய கூட்டாளி நீதான் அப்பா. இருட்டு பிரியும் முன்பே, ஒரு மைலுக்கும் அப்பால் இருக்கிற தாமரைக்குளத்துக்குக் கூட்டிப் போய், குளிர்ந்த தண்ணீரில் என்னை முக்கி, சோப்பு போட்டு உடம்பு கழுவி நூலிழைத் துண்டால் துவட்டிவிட்டதெல்லாம் எந்த அப்பனும் செய்யாததுதான். பத்தாவது படிக்கிறவரைகூட கால் சட்டையோடு நிற்கவைத்து குளிப்பாட்டிவிடுவாய். ஒரு நாளும் அடுத்த படியில் இறங்கவிடவோ நீந்தத் துடித்த என் சிறகுகளையோ நீ கவனித்ததேயில்லை. எனக்கு ஏதாவதொன்று ஆகிவிட்டால் உனக்கு யார் இருக்கிறார்கள் அப்பா? இதைத்தான் அப்பா அன்பின் வன்முறை என நான் வார்த்தைப்படுத்தி இருக்கின்றேன்.

முதல்முதலில் நாம் வீடு என்று வாடகைக்கு வந்தது என் பிரைவேட் ஸ்கூல் வாத்தியார் வேலைக்குப் பிறகுதானே. என் அவஸ்தையின் உச்சம், நான்கு சுவர்களாலான ஒரு அறையில் படுப்பதென்பது. ட்யூப் லைட்டும், ஸிக்ஸ்டி வாட்ஸ் பல்பும் போட்டுப் படுத்தால்கூடத் தூக்கம் வர மறுக்கிறது. சோடியம் வேப்பருக்குப் பழகிய தூக்கம். அதைவிட புது அனுபவம் கக்கூஸில் உட்கார்ந்து வெளிக்கிருப்பது. ஸ்கூலில், காலேஜில் மட்டும் பார்த்து, எப்போதாவது ஆசையாய்ப் போனது. தினம் தினம் அதில்தான் எனும்போது பரவசமாகிறது. பன்னிரண்டுக்கும் இரண்டுக்குமான இரவின் இடைவெளியில் தானே அப்பா வழக்கமாக நாம் சேர்ந்து போவோம். வெங்காயத்தோல்களும், அழுகிய காய்கறியும், புடைத்த மிளகாய் வத்தலில் மீந்த காம்புகளும் மிதக்கும் முனிசிபாலிட்டி கால்வாயில் கால்களை அகட்டி... இரவின் அடர்த்திகளானாலும் அப்பாவும் மகனும் எதிர் எதிர் கால்வாய்களில் உட்கார்ந்து கழிப்பதென்பது கல்லூரிப் படிக்கிற எந்தப் பையனையும் நடுங்க வைத்துவிடும்தானே அப்பா?

அதைவிட அவஸ்தை, இதே மாதிரி நீயும் கால்களை அகட்டி எதிர்க் கால்வாயில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துக் கொண்டே கழிப்பது. இரண்டாம் ஆட்டம் முடிந்து வருகிறவர்களைப் பார்த்து பார்த்து எழுந்து முகத்தைத் திருப்பி நிற்பது. நிழல்கள் மறைகிற வரை காத்திருப்பது.

இறந்த கால அவமானங்களால் நத்தை கூட்டுக்குள்ளே உடலை இழுத்துக்கொள்வது மாதிரி என்னைச் சுருக்கிக் கொள்கிறேன் அப்பா. எப்போதுமே மண்டித்தெருவின் நெரிசல் மிகுந்த சாலைகளைத் தவிர்க்கிறேன், எதேச்சையாகத் திரும்ப நேர்கிற மண்டிகளின் வராண்டாக்கள் உடம்பு முழுக்க எதையோ பாய்ச்சுகிறது.

காக்கி கால்சட்டைத் துணிக்கும், எட்டு ரூபாய்க்கும் குறைவான கஞ்சி வடிக்கும் வெள்ளைத்துணியைச் சட்டைத்துணி என அவர்கள் வாங்கிக் கொடுத்ததற்கும் நீ பல நாட்கள், இந்தப் பெரிய மனிதர்களின் முன்னால் கூனிக் குறுகியும், நான் டீ வாங்கி வரவும், அவங்க வீட்டு அம்மாக்களுக்குப் புடவை தேய்த்துக் கொண்டுபோய் கொடுக்கவுமான என் இறந்தகால நடுக்கம் இன்னும் நீடிக்கிறதப்பா.

நடுத்தெருவில் நடந்து போய்க்கொண்டிருக்கையில் ‘டேய் ஈஸ்வரா ஓட்றா ஓட்றா நாலு ஸ்டிராங் டீ,’ என்று ஒரு குரல் வந்துவிடுமோ என்ற பதட்டத்தில் ஒரு வாத்தியார் வாழ்ந்து கொண்டிருப்பதின் அதிகபட்ச காயம் உனக்கு இன்னும்கூடப் புரிப்படவில்லை என்பது பெரிய துயரம்தான்.

உனக்கு, நான் இன்னமும் மண்டிக்காரர்களுக்கு ஓடுகிறவனாக, கால்சட்டை போட்டுக்கொண்டு, உன்னைக் கழுவிவிடச் சொல்லித் தாமரை குளக்கரையில் தலைகுனிந்து நிற்பவனாக நீடிப்பது சந்தோசமாக இருக்கலாம். என் உடல் முழுக்க அவமானம் சேறு மாதிரி பூசப்பட்டிருக்கிறது. நானேக் கழுவிக் கொள்கிறேன், கொஞ்சம் வழி விடு அப்பா!

பரோட்டா சால்னா பார்க்கும் போதல்ல, நினைக்கும்போதே குமட்டுகிறது அப்பா. மீந்த காய்கறிகளும், அழுகிய தக்காளியும், நம் நிலைமைக்கு இதுதான் என்ற உன் நியாயமும் சேர்த்து குமைய வைக்கிறது. தர்மலிங்க நாயக்கர் வீட்டில், பவுர்ணமிக்கு, இலைபோட்டுப் பரிமாறிய சுடுசோற்றை, சாப்பிட முடியாமல் திணறி, பிசைந்துகொண்டே இருந்தேனே. அது பரோட்டா சால்னாவைத் தாண்டிப் போய்விட்டோம் என்ற ஆனந்தமில்லை. ‘தின்னு தின்னு’ என்ற உன் வார்த்தைகளுக்குப் பதிலாக, என் கண்கள் இத்தனைக்காலம் கழித்துத் திரண்டிருந்ததே, அதுதான் அப்பா பதில்.

இதெல்லாம் சொல்ல என்ன வந்தது எனக்கு இப்போது? இதுதானே நீ?

மூன்று மாதக்குழந்தையை அம்மாவின் பழம்புடவையால் சுற்றித் தூக்கிக்கொண்டு வந்து, மாரி மண்டி வாசலில் கிடத்தி விட்டு மூட்டை தூக்கிச் சம்பாதித்துக் காப்பாற்றி இருக்காவிட்டால் தெரியும், நான் எப்படிப்பட்ட பொறுக்கியாய் மண்டித் தெருவில் சுற்றிக் கொண்டிருப்பேன் என்று.

‘ராக்கண் முழிச்சி உனக்கு பசிக்கிறபோது, எனக்கும் பசித்து, உன் வயிற்றைக் கழுவின மிச்சத்தில் நானும் வாழ்ந்த வாழ்க்கையைக் குத்தம்னா சொல்ற?’ என்று நீ ஆத்திரப்படாதே அல்லது ஆத்திரப் படு. யாரைப் பார்த்தாலும் அவமானப்பட்டு, உள்ளடங்கி பதுங்கிப் பதுங்கி ஒரு மனிதன் வாழ நேர்ந்த அவலத்தை உன்னிடம் பகிர்ந்து கொள்ளாமல், அல்லது உன் வாக்குப்படியே உன்னிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியலை அப்பா.

கடைசியாக ஒன்று, மனசுக்குள்ளேயே தேக்கி, தேக்கி வைத்த இந்தக் கேள்வி ஊத்துக்கண் மாதிரி கசிந்து, சில நேரம் பீச்சியடித்து, சில நேரம் வற்றி...

அம்மா செத்தா போனாள்?

திரும்பும் பக்கமிருந்தெல்லாம் புறப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தக் கேள்வியால் நொறுங்கி, சாவின் விளிம்பில் நின்றபோதெல்லாம், ஒரு நிழல்... ஒரு நிழல்... கைப்பிடித்திழுத்து, உச்சிமோர்ந்து, தலைக் கோதி, என் துக்கங்களை, உறிஞ்சிவிடத் துடிக்கும் கருணையும், காதலும் நிரம்பித் ததும்பும் அந்தக் கண்களால் மட்டுமே ஒவ்வொரு முறையும் தப்பிக்கிறேன் அப்பா.

மரத்திலிருந்து கழித்துப் போடப்பட்ட தனிக்கிளையாய் மண்டித்தெரு மூலையில் யாரோ ஒரு மூட்டை தூக்கும் குடிகாரனோடு சதா சண்டையும், சச்சரவுமாய் காலம் தள்ளும் அவளின் கண்களுக்கு, ஒரு உயிரைக் காப்பாற்றிப் பொத்தி வைத்திருக்கும் வல்லமையும் ஜீவனும் எப்படி அப்பா சாத்தியம்? ஒத்துக் கொள்கிறேன் அப்பா, அவளுக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

எனக்கு?







Back to top Go down
 
~~ Tamil Story ~~ மண்டித்தெரு பரோட்டா சால்னா
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story ~~ மழை
» Tamil story
» ~~ Tamil Story ~~ படுக்கையறைக்கொலை - 3
» ~~ Tamil Story ~~ பசி
» ~~ Tamil Story ~~ எனக்குப்பின்தான் நீ

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: