BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ Tamil Story ~~ பதவி உயர்வு   Button10

 

 ~~ Tamil Story ~~ பதவி உயர்வு

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ Tamil Story ~~ பதவி உயர்வு   Empty
PostSubject: ~~ Tamil Story ~~ பதவி உயர்வு    ~~ Tamil Story ~~ பதவி உயர்வு   Icon_minitimeSat Apr 09, 2011 3:42 am

~~ Tamil Story ~~ பதவி உயர்வு





24 மணி நேரமும் சுறுசுறுப்புடன் இயங்கக் கூடிய அந்த அலுவலகம் இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருந்தது. வேலை செய்வதற்கென்றே பிறந்தவன் போல கம்யூட்டரும் பிரதீப்பும் ஒரு வித கடினமான பிணைப்போடு போராடிக் கொண்டிருந்தார்கள்.

பிரதீப் 26 வயது இளைஞன். அனுபவிக்க வேண்டிய வயதில் கடினமாக உழைத்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்று யாரோ சொல்லியதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு கடினமாக போராடிக்கொண்டிருந்தான். ஆனால் வாழ்க்கையில் இனிமைதான் இன்னும் வர வில்லை. ஆனால் பழக்கம் என்று ஒன்று இருக்கிறதே. விடாமல் போராடிக்கொண்டிருந்தான். இது வரை பதவி உயர்வு என்ற ஒன்றை அனுபவிக்கவே இல்லை. ஆனால் வேலையை மட்டும் கடைசி சொட்டு ரத்தம் சுண்டும் வரை வாங்கி விடுவார்கள். இந்த வேலையும் யாரோ ஒருவரின் சிபாரிசின் பேரில் கிடைத்தது. இந்த டேட்டா பேஸ் மெயிண்டைன் பண்ணும் தொழில் இத்தனை துயரம் இருக்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை. எத்தனை சிக்கல்கள். எந்த ஒரு சின்ன தவறானாலும் சுற்றி வளைத்து பிரதீப்பையே வந்தடைந்தது. ஒரு நாளைக்கு எத்தனை பேருக்குத்தான் பதில் சொல்வது? வேலைக்கு சேர்ந்த ஆரம்ப காலங்களில் அவன் பேச்சு வாங்காத ஆளில்லை. ஆளாளுக்கு விரட்ட ஆரம்பித்தார்கள். பிறகு தான் புரிந்தது தான் எதுவும் பேசாமல் அமைதியாக திட்டுக்களை வாங்கிக் கொள்வதால் தான் ஏறி மிதிக்கிறார்கள். திருப்பி தாக்க வேண்டும். தாக்குதல் என்றால் என்னவென்று புரிய வைக்க வேண்டும். அடுத்தவர்கள தன்னிடம் பேசுவதென்றாலே யோசித்து பேசவேண்டும். அணுகுவதற்கு அபாயகரமானவனாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த பிழைப்பையாவது தக்க வைத்துக்கொள்ள முடியும். இல்லையென்றால் ஏறி உட்கார்ந்து குதிரை சவாரி செய்து விடுவார்கள்.

இன்று அலுவலகத்தில் பிரதீப்பின் நிலைமையே வேறு. இன்னும் அதே கிளார்க் போஸ்ட் தான். ஆனால் கிடைக்கும் மரியாதையோ, மேனேஜரை விட ஒரு படி அதிகம். காரணம். பிரதீப்பின் அதிரடி பேச்சு தாக்குதல் தான். அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒவ்வொருத்தரின் மறுபக்கத்தையும் விரல் நுனியில் வைத்திருந்தான். யாராவது பிரதீப்பை நோக்கி ஒரு குற்றம் கூறினால் அவ்வளவுதான் அடுத்ததாக பிரதீப்பிடமிருந்து அம்பு மலையாக குற்றச்சாட்டுகள் வரும். அவனது அதிரடிப் போரை தாக்குப் பிடிக்கும் அளவிற்கு தகுதி படைத்தவர்கள் யாரும் இல்லை.

மேனேஜரும் இதற்கு விதிவிலக்கல்ல. இவனோடு சண்டைபோட்டு மூக்குடைந்த பலர் மாற்றுதல் வாங்கிக் கொண்டு சென்று விட்டார்கள். வலுவாக காலை ஊன்றிவிட்டான் பிரதீப். யாரை எப்படி கையாள்வது என்ற கலையை கரைத்து குடித்து வைத்திருந்தான். யாரேனும் ஒருவர் உன்னை நோக்கி ஒரு விரலை உயர்த்தினால், பதிலுக்கு அவரை நோக்கி 10 விரல்களையும் சுட்டி காட்ட வேண்டும். ஒட்டு மொத்தமாக ஒரு பேரலை எழும்பி வந்து அமுக்குவது போல. அவர் அடுத்த வார்த்தையைப் பேசுவதற்கு வாய் திறப்பதற்குள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி அப்படியே அமுக்கி விடவேண்டும். இதைத்தான் கடந்த நான்காண்டுகளாக பயிற்சி செய்து தேறியிருந்தான்.

அலுவலர்கள் அனைவரும் அவனைப் பழி வாங்குவதற்கான நேரம் பார்த்து கொண்டிருந்தார்கள். அடிக்கடி கூடி பேசிக்கொண்டார்கள். திட்டம் தீட்ட ஆரம்பத்ததார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை பொது எதிரி ஒருவன் தோன்றிவிட்டால் போதும், ஒற்றுமை என்ற விஷயம் வெடி குண்டை போல கிளம்பும். அலுவலர்கள் அனைவரும் ஒற்றுமைக்கு உதாரணமானார்கள். யாராவது இருவர் கூடிபேசினால் அது பிரதீப்பை பற்றியதாகத்தான் இருக்கும். பிரதீப்புக்கெதிரான வலை சிறிது சிறிதாக பின்னப்பட்டது. பொதுவாக முதுகுக்குப் பின்னால் நடக்கும் விஷயங்களில் ஆர்வம் காட்டும் பிரதீப் ஏனோ இந்த விஷயத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. ஆம் அப்படிதான். ஒருவன் அழிவை நோக்கி போய்கொண்டிருக்கிறான் என்றால் அவனுக்குப் பாதகமான விஷயங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கத்தான் செய்யும். வலையில் மாட்டப் போகும் மீனுக்கென்ன தெரியும் விரிக்கப்பட்டிருக்கும் வலை தனக்குத்தான் என்று. சிறிது சிறிதாக பின்னப்பட்ட வலை திறம்பட முடிக்கப்பட்டது. மீனுக்குரிய இரை தேர்ந்தெடுக்கப்பட்டது. பழிகொடுகக வேண்டிய நாளும் குறிக்கப்பட்டது.

பிரதீப் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை லேசாக உணர தலைப்பட்டாலும், தன் மேல் உள்ள அபார நம்பிக்கையால் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டான். அவனுடைய அதிகாரம் நாளுக்குநாள் பெருக ஆரம்பித்தது. அலுவலக மேலிடத்தின் பார்வை பிரதீப்பின் மேல் விழுந்தது. அலுவலகப் பணியாளர்களை விரல் நுனியில் வைத்திருக்கும் திறமை நிர்வாக வளர்ச்சிக்கு உதவும் என்கிற ஒரே காரணத்தால் அவனுக்குப் பதவி உயர்வு அளிக்கலாம் என்று பரிசீலிக்க ஆரம்பித்தார்கள். முதலாளியின் கையில் சாட்டை இருந்தால் தான் தொழிலாளி ஒழுங்காக வேலை செய்வான். இதற்கு முன்னர் இருந்த மேனேஜர்கள் கூட அவ்வளவாக நிர்வாகத்தை கவனிக்கவில்லை. அவர்கள் அனைவரும் சரியான வழவழா கொள கொளா.

பிரதீப்புக்கு அளிக்கப்பட வேண்டிய பதவி உயர்வு பற்றிய கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இந்த விஷயம் பிரதீப்புக்குத் தெரிய வந்தாலும் அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டாதவனாக காணப்பட்டான். ஏனெனில் யார் தனக்கு ஆதரவாக வாக்களிக்கப்போகிறார்கள்? இவர்களைப் பற்றித் தெரியாதா? தன்னை வேலையை விட்டு நீக்குவதென்றால் அனைவரும் கூடி சேர்ந்து வாக்களிப்பார்கள். அதைப் பற்றிய சிரத்தை ஏதுமின்றி தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

ஒரு மாதம் கடந்தது

வாக்களிப்பு நடந்ததா நடக்கவில்லையா? ஒன்றும் தெரியவில்லை. அடுத்த மேனேஜர் யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் பெரிய கேள்விக்குறியாக வடிவெடுத்தது. ஆனால் எந்தக் கவலையும் அற்றவனாக தன் வேலையில் மூழ்கிப் போயிருந்தான் பிரதீப். யார் மேனேஜராக வந்தால் என்ன தன்னை சீண்டிப் பார்ககட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம். இவர்களால் அப்படி என்னதான் செய்யமுடியும்? முடிந்த வரை குற்றம் சுமத்துவார்கள். சண்டை போடுவார்கள். இவர்களை சமாளிக்கத் தெரியாதா? வாழ்நாள் பூரா இதைத்தான் செய்கிறோம். எது நடந்தாலும சரி ஒரு கை பார்த்துவிடலாம். தன்னை யாரும் அசைத்து விட முடியாது என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தான்.

மேலும் பத்து நாட்கள் கடந்து போயிருந்தன.

சென்னை டிராபிக்கை கடந்து வருவதற்கு, ஆபிசிலேயே தங்கி கூடுதல் நேரமாக வேலையைப் பார்க்கலாம். ஏதோ போர்க்கள முயற்சியை செலவழித்து வீட்டிலிருந்து அலுவலகம் வந்து சேர்ந்தான் பிரதீப். லிப்டில் ஏறி முதல் அறைக்குள் நுழைந்து கதவைத் திறந்தான். ஏசி அறையின் ஜில்லிப்பை ஏக்கத்துடன் எதிர்பார்த்தபடி உள்ளே நுழைந்தவன் அப்படியே உறைந்து போனான். மேலும் வியர்க்க ஆரம்பித்தது. அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைவரும் அவனைச் சுற்றி அரைவட்ட வடிவமாய் நின்றிருந்தார்கள்.

இன்றைக்கு தன் கதையை முடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்களா? என்ன செய்யப் போகிறார்கள்? ரத்தம் வர அடித்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் அவரவர் வேலையைப் பார்க்க போகிறார்களா? ராணுவத்தில் சோல்ஜர்கள் எல்லாம் ஹவுல்தாரிடம் இப்படித்தான் நடந்து கொள்வார்கள். இதற்காகாத்தான் இவ்வளவு நாள் கூடிப்பேசினார்களா?

கூட்டத்தினர் அனைவரும் ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்தபடி பிரதீப்பை நெருங்கினார்கள். தட்ட ஆரம்பத்ததர்கள். மெதுவாக ஆரம்பித்தவர்கள் பின் வேகமாக சடசடவென கைகள் வலிக்கும்படி தட்டினார்கள். கைகளைத் தட்டியபடி கை கொடுத்ததார்கள். ‘கங்ராட்ஸ். மிஸ்டர் பிரதீப் நீங்கதான் இனிமே இந்த ஆபிஸோட புது மேனேஜர். வாழ்த்துக்கள். எம். டி உள்ள இருக்கார். போய்ப் பாருங்க. உங்க அப்பாயின்மெண்ட் ஆர்டர் ரெடியா இருக்கு.’

சிறிதாய் தயங்கி பயத்தில் தளர்ந்து பின்வாங்கிய பிரதீப் பின் சுதாரித்தவனாய் அனைத்து பாராட்டுக்களையும் ஏதொ ஏற்கனவே எதிர்பார்த்தவனை போல ஏற்றுக்கொண்டான். இதெல்லாம் தனக்கு மிகவும் சாதாரணம் என்பது போல நடந்து கொண்டான். நேராக கூட்டத்தை விளக்கிக் கொண்டு எம். டி அறைக்குள் நுழைந்தவன், அப்பாயின்மென்ட் ஆர்டர் ரெடியாக இருந்ததை பார்த்தவுடன் தான் நம்பிக்கையே வந்தது. "அனைத்தும் உண்மைதான்” ஆழ்ந்த பெருமூச்சு ஒன்று நுரையீரலை நிறைத்து வெளியே வந்தது. எத்தனை நாள் கனவு. நிறைவேறிவிட்டது. இனி இவர்களை பந்தாடிவிட வேண்டியதுதான். ஏற்கனவே அனைவரின் கண்களிலும் விரலை விட்டு ஆட்டி எடுத்து கொண்டிருந்தவன் நான். மேனேஜர் பதவி வேறு கிடைத்து விட்டது இனி ஒருகை பார்த்துவிட வேண்டியது தான். அனைவரும் அலற வேண்டும். என்னை என்னவென்று நினைத்து விட்டார்கள் இந்த மனிதர்கள்.

ஒரு 5 நிமிடம் அந்த மதிப்பு மிகுந்த நாற்காலியில் அமர்ந்து அந்த சுகத்தை அநுபவித்தான். நினைவுக்கு வந்தவனாய் மேஜையிலிருந்த அழைப்பு மணியை தட்டினான். பியூன் பதறியவனாய் உள்ளே ஓடிவந்தான். அசட்டையாக மேலும் கீழும் பார்த்தான் பிரதீப். அந்த கசங்கிய வெள்ளை சட்டை, பேண்ட். எண்ணெய் வைக்காத களைந்த தலைமுடி. ஷூ போடாத அறுந்த செருப்பு கால்கள் இவையெல்லாம் பிரதீப்பை என்னமோ செய்தது. அவ்வளவுதான் அடுத்த அரை மணி நேரம் அர்ச்சனைதான். தொடர்ச்சியாக விடாமல் வெகுநேரம் அர்ச்சனை செய்வது பிரதீப்பால் மட்டும் தான் முடியும் அது அவனது தனித்திறமை. அதோடு நிறுத்தவில்லை 2 நாட்கள் சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்பிவிட்டான். ப்யூன் வெளியேறுவதற்கு முன் கடைசியாக மிகுந்த வேதனையுடன் ஒரு வார்த்தை கூறிவிட்டு சென்றான்.

‘நாளைக்கு பார்க்கலாம் சார். வர்றேன்”

‘சர்தான் போ போ”

அடுத்த குறி அந்த ஹெட்கிளார்க் சதாசிவம். 45 வயசு கிழம். ஆரம்பக் காலங்களில் என்னை என்ன பாடு படுத்தியிருக்கு. இன்றைக்கு ஒரு வழி பண்ணிவிடவேண்டும். அடுத்த அரை நிமிடத்தில் ஹெட்கிளார்க் அமர்நதிருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தான் பிரதீப். இந்த சதாசிவத்தை தன்னந்தனியாக ருமில் வைத்து திட்டக் கூடாது. அனைவரின் முன்னிலையிலும் ஆடையை அவிழ்த்தது போல் அவமானப்படுத்த வேண்டும்.

10:45 க்கு ஆரம்பித்தான். மணி 11:30. ஹெட்கிளார்க் அனைத்து வசவுகளையும் கேட்டு விட்டு கற்சிலை போல் நின்றிருந்தார். அலுவலகத்தில் அனைவரும் கப்சிப் தலையை குனிந்தவாறு தங்கள் வேலையைப் பார்த்து கொண்டிருந்தார்கள். அந்த டைப்பிஸ்ட் கலா மட்டும் கீழே குனிந்தவாறு நமுட்டுச்சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தாள். ஆத்திரம் தலைக்கேறியது பிரதீப்புக்கு. அவளை ரூமுக்குள் வரச்சொல்லிவிட்டு நேராக தனது அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். 2 நிமிடங்களுக்கு பிறகு மேனேஜர் அறைக்குள் ஒரே கலவரம். மணி 12:00. அழாத குறையாக வெளியே வந்தாள் கலா.

அப்படி இப்படி என்று மதிய இடைவேளை. அனைவரும் தங்களுக்குள் கூடி நின்று பேசிக்கொண்டார்கள். இந்தச் சூழ்நிலையிலும் சில சிரிப்பொலிகள் கேட்டன. சரியாக அரைமணிநேரம். பிரதீப் டைனிங் ஹாலுக்குள் ஆஜரானான். ஹிட்லர் தோற்றான் அப்படி ஒரு விரட்டல். பாதி சாப்பிட்டும் சாப்பிடாமலும் எழுந்து அனைவரும் அவரவர் சீட்டில் உட்கார்ந்து வேலையை கவணிக்க ஆரம்பத்ததார்கள். ஒரு 5 நிமிடம் அனைவர் முன்னிலையிலும் சாப்பிடும்போது நடந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் பற்றியும், குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பாட்டை முடித்து விட்டு குறிப்பிட்ட நேரத்தில் சீட்டில் வந்தமர்வதை பற்றியும், கடைபிடிக்க வேண்டிய ருல்ஸ் அண்ட் ரெகுலேஷன்கள் பற்றியும் நீண்டதொரு கலாட்சேபம் பண்ணினான். அனைவரும் கண்ணிமைக்காமல் உள்ளுர ஆச்சர்யத்தோடு, காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு. சுவாசிக்க மறந்தவர்களாய் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பேச்சின் முடிவில் பிரதீப், ஒரு குண்டூசியை எடுத்து தரையில போட்டான். சத்தம் தெளிவாக அனைவருக்கும் கேட்டது.

“இந்த சைலண்டை எப்பவும் மெயிண்டைன் பண்ணனும்” கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் அறையை நோக்கி நடந்தான்.

அந்த நரக மணித்துளிகள் ஒவ்வொன்றாக கழன்றது. கிட்டத்தட்ட அலுவலகத்தில் உள்ள அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக தாக்குதலுக்குள்ளானார்கள். மணி 6ஐத் தொட்டது. அனைவரும் விடுதலை உணர்ச்சியுடன் கிளம்பத் தயாரானார்கள். அதற்காகவே காத்திருந்தவன் போல உள்ளே வந்தான் பிரதீப். அடுத்த நாள் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள், நேரந்தவறாமை, நீட்நெஸ் போன்றவற்றைப் பற்றி அரைமணி நேர ஸ்பீச். பிறகு அனைவரும் கிளம்பினார்கள்.

இன்றைய பொழுது 3 பேர் சஸ்பெண்ட் ஆகியிருந்தார்கள். 5 பைல்கள் கிழித்துப் போடப்பட்டிருந்தது. சில அலுவலகப் பொருட்கள் தூக்கி எறியபட்டிருந்தன. மேஜையில் 10 முறையாவது டங் டங் என குத்தியிருப்பான். திட்டுவதில் சில புதிய வார்த்தைகளை புகுத்தியிருந்தான். ஆக இன்றைய பொழுது முழு திருப்தி.

அடுத்த நாள்

ஒரு மேனேஜருக்கு தகுந்த உடைகளை அணிந்து டிப்டாப்பாக கிளம்பினான். வழக்கம் போல் சென்னை டிராபிக். கால் டாக்ஸி ஒன்றை அமர்த்திக் கொண்டு கிளம்பினான்.

“சீக்கிரம் ஒரு காரை லோன் ஏற்பாடு செய்து வாங்க வேண்டும்” மனதிற்குள் கூறிக்கொண்டான்.

இன்று யாரையெல்லாம் எப்படியெல்லாம் வதைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டியபடி அலுவலகத்தை வந்தடைந்தான். லிப்டில் ஏறி முதல் தளத்தை அடைந்தான்.

“இந்த ப்யூன் எப்பொழுதுமே கதவின் அருகில் இருப்பதில்லை வரட்டும் அவனை வைத்துக்கொள்கிறேன்”

சில விநாடிகளுக்கு பிறகு தான் ஞாபகம் வந்தது.

“ஓ நாம் தான் 2 நாட்கள் சஸ்பெண்ட் செய்தோமோ”

கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். அலுவலர்கள் அனைவரும் அரைவட்டமாய் சுற்றி நின்றபடி வழியை மறைத்துக் கொண்டு நின்றார்கள் நேற்றை போலவே. இந்த முறை அதிர்ச்சியாகவில்லை பிரதீப். திட்ட ஆரம்பித்தான்.

‘என்ன......? எதுக்காக இப்படி சுற்றி நிக்கிறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா....”

அனைவரும் அமைதியாக நின்றிருந்தார்கள் நடுவில் அந்த ப்யூன் அதே கசங்கிய அழுக்கு சட்டையுடன்.

“ஹேய் உன்னை 2 நாள் சஸ்பெண்ட் பண்ணிருக்கேன்ல. நீ எப்படி உள்ள வந்த? கெட் அவுட் ஐ சே’

கதவைத் திறந்தபடி ஆட்காட்டி விரலை வெளியே நீட்டியபடி ப்யூனுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தான். சும்மா இருக்க முடியாமல் ப்யூனும் சிரித்து வைத்தான். பிரதீப்பின் கோபம் தலைக்கேறியது. கத்துவதற்கு வாயைத் திறந்தான். அதற்குள் ஹெட்கிளார்க் சதாசிவம் கையமர்த்தினார்.

‘மிஸ்டர். பிரதீப் நீங்க ஒரு விசயத்தை இன்று தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில எதுவுமே நிரந்திரமில்லை. குரங்கு கையில பூ மாலையக் கொடுத்தா அது என்ன பண்ணும்னு நாங்க தெரிஞ்சுக்க ஆசைப்பட்டோம் தெரிஞ்சுக்கிட்டோம். இன்றைக்கு தேதி ஏப்ரல் 2. நேற்று ஏப்ரல் 1. ஆகையால் நேற்று உங்களுக்கு கொடுக்கப்பட்ட பதவி ஒரு ஏமாற்று வேலை. நீங்க விரும்பினா உங்க பழைய வேலையைத் தொடரலாம். அதோ உங்க சேர்”

இரத்தின சுருக்கமான வார்த்தைகள் தான். ஆனால் பிரதீப்பைப் பொருத்தவரை அது தலையில் விழுந்த இடி. இல்லை இல்லை நெஞ்சில் பாய்ந்த ஈட்டி. எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

அனைவரும் நமுட்டுச் சிரிப்புடன் அவரவர் சீட்டில் சென்று அமர்ந்தார்கள். பிரதீப் இன்னும் அதிர்ச்சியில் இருந்து விலகாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அடுப்பை பூனை சுற்றி வருவதைப் போல பிரதீப்பை சுற்றி வந்து முகர்ந்து பார்த்து முகத்துக்கு நேராக வந்து நின்றான் ப்யூன்.

‘என்ன சார் யோசிக்கிறீங்க......... நீங்க என்ன யோசிக்கிறீங்கன்னு எனக்கு நல்லாப் புரியுது. இந்த விஷயத்துக்கு எம்.டி. எப்படி ஒத்துக்கிட்டார்னு தான யோசிக்கிறிங்க. புதுசா வேலைக்கு வந்திருக்கறாங்களே டைப்பிஸ்ட் கலா. அவுங்களும் எம். டியும் க்ளாஸ் மேட்ஸ். அவுங்க கேட்டுக்கிட்டதால தான் அவரும் ஒத்துக்கிட்டார்........ போங்க சார்... போய் வேலையப் பாருங்க”

‘ஒரு நாள் அதிகாரம் கைக்கு வந்தா இந்தக் காலத்துல என்ன ஆட்டம் போடுறாங்க..........” புலம்பிக்கொண்டே சென்றான்.

திக் பிரமை பிடித்தவன் போல் அமைதியாக நடந்து சென்று சீட்டில் அமர்ந்தான். என்ன செயவதென்று தெரியாமல் 5 நிமிடம் அப்படியே உட்கார்ந்திருந்தான். பின் ஏதோ முடிவுக்கு வந்தவனாய், பேனாவை எடுத்து ஒரு ராஜினாமா லெட்டரை எழுதி விட்டு திரும்பிப் பார்க்காமல் வெளியேறி விட்டான்













Back to top Go down
 
~~ Tamil Story ~~ பதவி உயர்வு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Tamil story
» ~~ Tamil Story ~~ மழை
» ~~ Tamil Story ~~ பசி
» ~~ Tamil Story ~~ படுக்கையறைக்கொலை - 3
» ~~ Tamil Story ~~ எனக்குப்பின்தான் நீ

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: