BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in-- Tamil Story ~~ காலத்தை தைப்பவனின் கிழிசல்  Button10

 

 -- Tamil Story ~~ காலத்தை தைப்பவனின் கிழிசல்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

-- Tamil Story ~~ காலத்தை தைப்பவனின் கிழிசல்  Empty
PostSubject: -- Tamil Story ~~ காலத்தை தைப்பவனின் கிழிசல்    -- Tamil Story ~~ காலத்தை தைப்பவனின் கிழிசல்  Icon_minitimeSun Apr 17, 2011 4:02 am

-- Tamil Story ~~ காலத்தை தைப்பவனின் கிழிசல்




உருளும் நூற்கண்டு
--------------------------

1.தஞ்சாவூர் சத்திரபதி அரண்மனையிலிருந்து தானமாய்ப் பெற்ற மட்டக்குதிரைகளில் வழிச்சுமைகளை ஏற்றிக்கொண்டு பூர்வதெய்வமாம் பாண்டுரங்கரை ஆசாட மாதத்து ஏகாதசி நாளில் சேவிக்க பண்டரிபுராவுக்கு யாத்திரை போகும் பண்டை வழக்கம் தற்காலத்திற்கேற்றாற்போல் மாறுதலடைந்திருக்கும் விதம்- காசுபணம் கைகுளிரச் செழித்து காலநேரம் கூடித்திரளுமானால், சப்பாத்தியும் தக்காளித் தொக்கும் நிரம்பியப் பையோடு ஷோலாப்பூருக்கு ரயிலேறி அங்கிருந்து இரண்டுமணித்தியால பஸ் பிரயாணத்தில் பண்டரிபுராவுக்கு போய், சத்திரங்களில் தங்கி, மராட்டியத்திலிருந்து கோவிலுக்கு வரும் தங்கள் தொப்புள்கொடி சொந்தங்களை அளவளாவித் திரும்புதல்- கை வற்றிய காலங்களில் தஞ்சாவூர் விட்டோபா திருக்கோயிலுக்காவது சென்று சேவித்து வருதல்- வீட்டுப்புழக்கத்தில் அக்கம்பக்கத்தாருக்கு அரிதில் புரியாத மராட்டி மொழி- பிஷே, புட்டானே, வாவலே என்பதான குடும்பப் பெயர்கள் - கருகமணித்தாலியும் கைநிறைய பச்சைவளையலும் சூடிய மணப்பெண்ணின் நாணச்சிவப்பையே தன்னினத்தின் நிறமாய் கொண்டிருத்தல் வழியாக தமது பூர்வோத்ர பூமியாய் மராட்டியத்தை நம்புகிறவர்களில் மனோகர்ராவும் ஒருவன்.

மேற்கேயிருந்து படையோடு கோல்காபூர் வழியாக தென்திசையேகி ராஜ்ஜியங்களை விஸ்தரித்த மராட்டிய மன்னர்கள்- அவர்களுடன் படைமேற்செல்லவும், படைசார்ந்த நானாவித பணி நிமித்தமும் வந்து தென்னாடு முழுதும் பரவியவர்கள்- தஞ்சையில் மராட்டியர் ஆட்சி- அடர்வாய் குடியேற்றம்- அரசருக்கு அணுக்க குலமாகி நிலபுலம் ஈட்டியவர்கள்- காரியத்துக்குக் கடவதானவர், கில்லேதார், சர்கேல், சுபேதார், சிரேஸ்தார், தளவாய்கள் என அரசாங்கப்பதவிகளில் வீற்றிருந்து அதிகாரம் மேவி அரட்டியவர்கள்- பழைய கித்தாப்பு நாளடைவில் மங்கி தரித்திரத்தில் புதைந்தவர்கள்- வண்டிமாட்டின் கழுத்து மணியோசையில்¢ கண்மூடி லயித்தபடி சாலையற்ற கிராமங்களுக்கும் தோல்பாவைகளைத் தூக்கி கலை வளர்த்தவர்கள்- என மராட்டியர்களின் வரலாற்றுக்குள் மனோகர்ராவ் குடும்பத்தை பொருத்ததல்.

தஞ்சையின் கடைசி மராட்டிய மன்னன் இரண்டாம் சிவாஜி ஏற்கனவே இருந்த மூன்று மனைவியர் போதாதென்று தான் இறப்பதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு கோலாப்பூர், சதாரா, கோங்கணம் பகுதிகளிலிருந்து சிறையெடுத்து வந்த பதினேழு பெண்களில் ஒருத்தி- யோகாம்பா பாயி- மனோகர்ராவுடைய முப்பாட்டனின் இளையதாரத்துக்குப் பிறந்தவள்- அவள் பொருட்டே மனோகர்ராவின் குடும்பம் மராட்டியத்திலிருந்து குடிபெயர்ந்ததாய் இவனது அப்பா சொல்வதுண்டு. ஊரழகியான அவளுக்குக் காபந்து பண்ண மங்களவிலாசத்தின் மாடச்சுவர்களிலும் மதில்களிலும் நஞ்சு தோய்த்த புதைகத்திகளும் சீசாத்துண்டுகளும் பதிக்கப்பட்டிருந்ததாம்- யோகாம்பா பாயி அதிகாரப்பூர்வ அந்தபுரத்தில் அல்லாமல் மங்களவிலாசத்தில் வசித்து வந்தாலும் மன்னனுக்கு இவள்மீது மாறாத மையலிருந்ததென்பதற்கு அவள் பெயரால் வெட்டப்பட்ட குளமும், குளக்கரையில் இருக்கும் கல்வெட்டுமே சான்றுகள்- இருந்தும் அவள் அரசனை அற்பனெனவே உதாசீனம் கொணடிருந்தாள்.

அரண்மனைக்கு வேண்டியவர்களாகவும் சாகும்வரை ‘மொய்ன்’ என்கிற சம்பளம் பெறுகிறவர்களாகவும் மாற விரும்பிய சிலர் தம்வீட்டுப் பெண்களை அரசன் சிறையெடுக்கமாட்டானா என்று ஏங்கிக் கிடப்பவர்களைக் கண்டால் அவளுக்கு அருவறுப்பு குமட்டும்- மந்தையில் ஒருத்தியாய் அடையாளமற்று கிடக்க விரும்பாமல் தன்நிலையை உயர்த்திக் கொள்ளும் பொருட்டு மன்னனை மானசீகமாய் வரித்துக்கொண்டு ‘ கத்திகட்டி விவாகம்’ செய்து கொண்டு, மன்னனின் சாவுக்குப் பிறகு சுமங்கிலிக்கோலம் நீங்கி விதவாக்கோலம் பூண்டு வாழத்துணிந்த சில பெண்களை பைத்தியக்காரிகள் என்று நிராகரித்தாள்.

அரசனுக்கு ஆண்மகவு பிறக்கவில்லையானால் அதை அவன் தன்குறையாய் உணர்ந்து, விரும்பும் ஆடவருடன் கூடி தனக்கொரு வாரீசை பெற்றுத்தருமாறு தன் மனைவியரை வேண்டி சோதித்துப் பார்ப்பதை விடுத்து அதிகாரத்தைப் பிரயோகித்து வாள்முனையில் தன்னையும் தன்னொத்த பெண்களையும் தூக்கி வந்தது குறித்து அவள் எப்போதும் மன்னன்மீது மாறாத சினம் கொண்டிருந்தாள். வசமாக கிடைத்தானானால் அவனது குறியை அறுத்து அவன் வாய்க்குள்ளேயே திணித்துவிடுவது என்ற வன்மத்தோடு தந்தத்தால் அழகுற இழைக்கப்பட்ட கிளியின்தலையை கைப்பிடியாய் கொண்ட குறுங்கத்தி ஒன்றை எப்போதும் தன்னுடனேயே வைத்திருந்தாள்.

ஒய்யாரமாக பழம் அரிந்துத் தின்பதற்கு வைத்திருப்பதைப் போல வெளித் தெரிந்தாலும் அந்த கத்தி அரசனின் உயிர்நிலை ரத்தம் குடிக்க காத்திருக்கிறது என்ற விசயத்தை, மங்களவிலாச மகளிரின் பணிவிடைப் பெண்களான ‘அக்காமார் கூட்டத்’திலிருந்த யாரோ ஒரு ஒற்றத்தி எப்படியோ துப்பு பிடித்து அரசனுக்கு உளவு சொல்லிவிட அவன் யோகாம்பாவை சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டது பற்றிய மோடி ஆவணத்தை இப்பத்தியின் தொடர்ச்சியாக இணைக்க வேண்டும். பின்னாளில் ரெசிடென்ட் கலெக்டருக்கு மனு செய்து அந்த குறுங்கத்தியை அரண்மனையிலிருந்து பெற்றுவந்த மனோகர் ராவின் முப்பாட்டனார் அதை சாமிமாடத்தில் வைத்து வழிபடுவதை நியமமாய்க் கொண்டிருந்தார். அவள் கொலையுண்ட நாளில் விரதமிருப்பதும் சாந்தப்படுத்தும் பொருட்டு வாழைப்பிஞ்சொன்றை கத்தியால் வெட்டும் சடங்கை நிகழ்த்துவதும் இன்றளவும் குடும்பத்தினர் கடைபிடிக்கிற விசயம்- முடிந்தால் திருநிலைப்படுத்தப்பட்ட அந்த கத்தியையும் சடங்கையும் புகைப்படம் எடுத்து இணைக்கவேண்டும்.

(300 பெண்களை காமக்கிழத்தியராக வைத்துக்கொள்கிற அரசர்களின் பெண்பித்தையும் இதன்பொருட்டு அவர்கள் நடத்திவந்த கல்யாணமகால், மங்களவிலாசம் பற்றியும் எழுதாமல் தவிர்ப்பது நலம்- இல்லையானால் சுவராஸ்யம் கூடி மொத்தமும் திசைமாறும் அபாயமிருக்கிறது. ஏனென்றால் அது அவ்வளவு விஸ்தாராமான பகுதி- யமுனாபாய், அகல்யாபாய் இருவரையும் கல்யாணம் முடிக்கும் முன்பே ஒரு நாயுடு பெண்ணை காதலித்து அவள் நினைவாக ஒரத்தநாடு சத்திரத்திற்கு முக்தாம்பாள் சரித்திரம் என்று பெயர் சூட்டிய இரண்டாம் சரபோஜி தொடங்கி ஒவ்வொரு அரசனும் கொண்டிருந்த காமக்கிழத்தியர்- இதற்காக அவர்கள் தனியே நடத்திவந்த கல்யாணமகால், மங்களாவிலாசம் ஆகியவற்றுக்கு மான்யமாக வழங்குவதற்காக மணவாளப்பேட்டையிலும் பூங்குடியிலும் வடமட்டத்திலும் சூரக்கோட்டையிலும் உழுகுடிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலம் என்று தன் போக்கில் இழுத்து வீழ்த்தும் சுழிகள் கொண்ட இப்பகுதியை எழுதாமல் தப்பிக்கும் கவனம் தேவை.)

அரசனுக்கு ஆண்வாரீசு இல்லாதநிலையில் 180 ஆண்டுகாலமாக பதிமூன்று மன்னர்களால் கட்டியாளப்பட்ட தஞ்சை மராட்டிய சாம்ராஜ்யத்தை 1855 ல் ஆங்கிலேயர் தம்வசம் எடுத்துக்கொண்டது பற்றி சரஸ்வதி மகால் நூல்நிலையத்தில் இருக்கின்ற ஆவணங்களில் சிலவற்றை இவ்விடத்தில் மேற்கோளிடுதல் வேண்டும். திப்பு சுல்தானின் கோட்டைக் கொத்தளங்களும் மெருகு குன்றாமல் பராமரிக்கப்படுகையில் அவனது வாரிசுகள் வேலூரில் பீடி சுற்றிப் பிழைப்பதைப் போல அரசவை உத்யோகங்களிலிருந்து நிறக்க வாழ்ந்த மராட்டியர்கள் நிலைகுலைந்த விதம்- யோகாம்பாளின் உறவுக்காரர்கள் பழம் பெருமைகளை தொண்டைக்குழிக்குள் ரகசியமாய் காத்துக்கொண்டு ஊசியும் நூலுமேந்தி தையல்காரர்களாய் உழைத்து வாழும் நிலை பற்றி ஒன்றிரண்டு பத்திகள் எழுதினால் போதும்.

சிறுமுடிச்சு-

நஞ்செனப் பரவுகின்றது பிரிட்டிசார் ஆட்சி- ஆண்டனுபவிக்கும் சுகபோகம் பறிபோகும் அங்கலாய்ப்பில் ஆங்காங்கே கொந்தளிக்கும் சுதேச அரசர்கள்- பிரிட்டிசாருக்கு ராணுவபலம் போதவில்லை- இங்கேயே படைதிரட்டும் முயற்சி- மராட்டிய பேஷ்வா பாஜிராவை 1819ல் வீழ்த்திய கிர்கி யுத்தத்தில் லார்ட் மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டனின் படையில் இருந்து அவனுக்கு வெற்றியை ஈட்டித் தந்தவர்கள் அனைவருமே மராட்டியத்தின் தீண்டத்தகாத மக்கள்தான்- வெள்ளையருக்கு சேவையாற்றுவது அவர்களது நோக்கமல்ல- எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற யுத்த தந்திரம்- தம்மை ஒடுக்கி ஒதுக்கிய பேஷ்வாக்களுக்கு எதிராய் ஆயுதமேந்திடக் கிடைத்த அரிய வாய்ப்யு- திரண்டனர் படையில்- தீண்டத்தகாத மக்கள் தமது எதிரிகளை இறுதியாய் வீழ்த்தி அவர்களது மகுடக்குழியை சிறுநீரால் நிறைத்த நாளில் முழுதேசமும் பிரிட்டிசார் கைக்கு வந்து சேர்ந்தது- ( உயிரையும் திரணமாய் கருதி யார் தமக்கு இறுதிவெற்றியைத் தேடித் தந்தார்களோ அந்த ஒடுக்கப்பட்ட மக்களிடம் விசுவாசம் கொள்ளாத வெள்ளையர்கள் 1892 க்குப்பிறகு தீண்டத்தகாதாரை ராணுவத்தில் சேர்க்க தடைவிதித்ததை இவ்வத்தியாயத்தில் விவரிப்பது பொருந்திவருமா என்பதை எழுத்தோட்டத்தின் போக்கில் தீர்மானிக்க வேண்டும்.

இதுகுறித்து எழுதுவதற்கு முன்பு அம்பேத்கரின் தொகுப்பு நூல்களை ஒருமுறை நுணுகி வாசித்துப் பார்க்கவேண்டும். ஏனெனில் அவர்தான் இப்பிரச்னையை கடைசிவரை எழுப்பிக் கொண்டேயிருந்தார். ஆனால் ஒரு தையல்காரனின் வாழ்வைச் சொல்லும்போது அம்பேத்கர் எதற்கு வரவேண்டும்... என்று கோட்பாட்டு கொறடாக்கள் யாரும் கேள்வியெழுப்ப முடியாத வண்ணம் இவ்விசயத்தை கதைக்குள் இழைக்க வேண்டும்.).

படைவீரர்களுக்காக ஒவ்வொரு முகாமிலும் ஒரு நாவிதர், காலணி தைப்பவர் ஒருவர், சீருடைத் தைக்க ஒரு தர்ஜ் (தையல்காரர்) பணியமர்த்தப்படுதல்- அந்தந்தக் காலத்தின் நவீனத்தை உடுத்தக்கொடுக்கும் பாரம்பரிய தையல்காரர்கள் பம்பாயிலிருந்தும் சுற்றுவெளியிலிருந்தும் கிளம்பி ராவ் என்ற சாதிப்பெயரை பின்னொட்டாய்ச் சூடி பரவியவர்கள்- இவர்களில் கைநேர்த்தியும் கலைநுட்பமும் கூடிப்புனையும் வெங்கோஜியை மைசூர் மகாராஜா தனது தையல்காரராக அமர்த்திக்கொண்டார்- தன் முறைப்பெண்ணான யோகாம்பாவை தஞ்சாவூர் சத்திரபதி சிறையெடுத்துப் போய்விட்டதால் பேதலித்துக் கிடந்த வெங்கோஜி இங்கிருக்கப் பிடிக்காமல் வெள்ளைதுரைகளோடு கப்பலேறி இங்கிலாந்து போய் அங்கே தையல் படித்து திரும்பியவர்.

ஊதாரி ராஜாக்களுக்கு நல்ல ரசனை என்பது எப்படியோ பொருத்தமற்றத் தகுதியாய் வாய்த்துவிடுகிறது- மைசூர் மகாராஜா இவரது செய்நேர்த்தியில் மெய்மறந்து சிலாகித்துக் கொண்டேயிருப்பார்- கீர்த்திமிக்க வெங்கோஜியின் கொடிக்கால் ஒன்றில் துளிர்த்து வந்த தர்ஜிக்களின் பின்தோன்றல்களே தாங்கள் என்பதில் மனோகர்ராவுக்கு எப்போதும் பெருமையுண்டு. தசரா விழாவின்போது மைசூர் அரண்மனை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த மகாராஜாவின் கோட்- வண்ணங்குலையாமல் அந்திச்சூரியனின் கிரணங்கள் பட்டு தகதகக்கும் தங்க ஜரிகைகள் இழைந்து பின்னிய அதில் தனது முன்னோர்களின் வெளித்தெரியாத மாயத்தையல் மறைந்திருப்பதாய் கூறும்தோறும் பளபளக்கும் மனோகர்ராவின் கண்கள்- மகாராஜாக்கள், சாதா ராஜாக்கள், ஜமீன்தார்கள், மிட்டாமிராசுகள், ஊர்மைனர்களின் ஆடையலங்காரப் பொறுப்பு தம்வசமிருந்ததை எண்ணி பின்னுக்குத்தாவும் அவனது மனக்குதிரை.

கூத்துராஜாக்களைப்போல ‘யாரங்கே’ என்று சேவகனைக் கூப்பிடுவதன்றி வேறொன்றும் அறிந்திராத ராஜாக்களின் தர்பார் முடிவுக்கு வந்தது- மானியத்தில் அரிசி வாங்கித்தான் சோறு பொங்கித் தின்னுமாறு ஆகிவிடவில்லையானாலும் அதிகாரம் போனது- ஆடம்பரம் குறைந்தது- அந்தப்புரம் உட்பட எல்லாவிடத்திலும் ஆட்குறைப்பு- பிறந்தமண்ணை விட்டு வெளியேறியத் துயரறியாது அரண்மனையின் உறவாளிகளாய் இருந்ததெல்லாம் ஒரு அதிகாலையில் நிலைகுலைந்தது- வெங்கோஜியின் வம்சாவளியினர் அரண்மனைகளிலிருந்து வெளியேறி மக்களின் தையல்காரர்களாகின்றனர்- அறுபடும் நூலைக் கோர்த்து கோர்த்து தைத்துக் கொண்டேயிருந்தாலும் காலத்தின் கிழிசல் அடைபட மறுக்கிறது.

(இந்தப் பகுதி முழுவதும் வரலாற்றோடு தொடர்புடைய பகுதியாதலின் மிகுந்த கவனம் தேவை)

1. வெள்ளைக்காரனின் இந்தியப்பட்டாளத்திற்கு யூனிபாரம் தைக்க இங்கிலாந்துக்கே போய் பயிற்சியெடுத்த முதல்தலைமுறை மிஷின் தையற்காரர்கள் பற்றிய குறிப்புகளோடு அக்குழுவுக்கு தலைமையேற்றுத் திரும்பியவரும் மனோகர்ராவின் மூதாதையருமான வெங்கோஜி எழுதிய பயணக்குறிப்பிலிருந்து எடுத்தெழுத வேண்டிய பகுதிகள்- கடல் தாண்டினால் பாவம் என்று துறைமுகத்திலிருந்து தப்பி தலைமறைவான பிரதாப சிம்மர், மற்றவர்களின் முதல் கப்பல் பயணம்- கடல்காற்று ஒவ்வாமல் கப்பலிலேயே சுகவீனப்பட்டு இனி பிழைக்கும் தோதில்லையென நடுக்கடலில் உயிரோடு தூக்கிவீசப்பட்டவர்கள்- கொள்ளிவாய் பிசாசு போல சதாவும் உறையூர் சுருட்டை புகைத்துக்கொண்டும், மதுக்கோப்பைகளை காலி செய்தபடியே மனதிற்கினிய மங்கையரோடு நடனமாடிக்கொண்டும் சல்லாபித்தும் பயணத்தைக் கொண்டாடிய வெள்ளை அதிகாரிகள்- இளங்காலை வெயிலில் தகதகக்கும் கடல்- திமிங்கலமோ சுறாவோ கப்பலை கவிழ்த்துவிடக்கூடும் என்ற அச்சத்தில் இரவும்பகலும் உறங்காமல் குடும்பத்தை எண்ணி பிதற்றி பாண்டுரங்கா காப்பாற்று என்று இரைஞ்சிக்கொண்டேயிருந்த கிருஷ்ணாராவ்- கப்பலை மறிக்க வந்த கடற்கொள்ளையர் ‘நம் பெரியண்ணன் கப்பல்’ என்று வழிவிட்டது- இங்கிலாந்தின் குளிர்- அந்த குளிரிலும் குட்டை கவுன் அணிந்து வெளேரென்ற கால்களுடன் சிடுக்சிடுக்கென்று திரிந்த இளம்பெண்கள்- அவர்களில் ஒருவளும் யோகாம்பாள் அழகுக்கு நிகரில்லை என்ற குறிப்பு- பொது இடங்களிலும் கட்டிப் பிடித்தும் முத்தமிட்டும் திரிந்த இங்கிலாந்தியர்- கவச வண்டியில் ஏற்றப்பட்டு லண்டனின் புறநகர்ப் பகுதியிலிருந்த ராணுவ முகாமுக்கு பயிற்சிக்கு அனுப்பப்பட்டது-

ராணுவ முகாமுக்குள் தங்கியிருந்த ஆறுமாத காலத்தில் வெங்கோஜி சேகரித்த சில புகைப்படங்கள் அரிதானவை. லண்டன் ராயல் அகாதமி நூல்நிலையத்திலிருக்கும் இப்புத்தகத்தின் பழுப்பேறிய பிரதியன்றிலிருந்து நகலெடுக்கப்பட்ட அப்படங்கள், இந்தியாவை சுரண்டி இங்கிலாந்தியர் எவ்வளவு ஊதாரிகளாய் இருந்தார்கள் என்பதற்கும் சான்றானவை. குறிப்பாக இந்திய தந்தத்தாலான பூண்கள் பொருந்திய கத்தரிக்கோல்கள், சுடர்விடும் வைரம் பதித்த சட்டைப்பித்தான்கள், மயிரளவேயானதிலிருந்து வெவ்வேறு தடிமன்களில் தங்கத்தாலான ஹெமிங் ஊசிகள், பட்டுநூற்கண்டுகள்... நம்பகத்தன்மைக்காக இப்புகைப்படங்களை சேர்க்கவேண்டும்.

2. 1830ல் தையல் இயந்திரத்தை கண்டுபிடித்து புழக்கத்திற்கு கொண்டுவர முயற்சித்த திமோன்னியேர் பார்த்தல்மே என்ற தையற்காரரைத் தாக்கி குற்றுயிராக்கியதோடு, தங்களது வேலையைப் பறிக்கவந்த தையல்இயந்திரங்களையும் உடைத்து நொறுக்கிய பிரான்ஸ் கைத்தையற்காரர்களின் கலகத்தைப்போல இந்தியாவிலும் ஏதேனும் எதிர்ப்பு கிளம்பியதா இவர்களுக்கு- தமிழகத்தில் நுழைந்தபோது துன்னக்காரர் என்றறியப்பட்டிருந்த பூர்விக தையற்காரர்களின் எதிர்வினை என்னவாயிருந்தது? கரியால் இயங்கும் பஸ் அறிமுகமானபோது தங்களது வாழ்க்கையைத் தொலைக்கவந்த அந்த சனியனை எரித்தொழிப்பதென்று சேலத்தில் பல்லக்குத்தூக்கிகளும் குதிரைவண்டிக்காரர்களும் தீப்பந்தமேந்தியதைப் போன்ற போராட்டங்கள் எதுவும் தையல் இயந்திரத்திற்கு எதிராக நடந்திருக்கிறதா என்று தேடியறிய வேண்டும்.

3. தழையாடை, மரவுரி, தோல்ஆடை என்பதிலிருந்து நெய்தத் துணியை அப்படியே உடுத்துக் கொள்ளும் வழக்கத்திற்கு மாறிய மனிதன் தைத்து உடுக்கும் பழக்கத்தை எப்போது கைக்கொண்டான்? - என்பவை குறித்து மங்களூரில் பேராசிரியராயிருக்கும் இவனது பெரியப்பாவிடம் கேட்டு தெளிவுபெற வேண்டும். இவர் பெரிய விஷயதாரி. இந்தியாவில் தையற் கலை என்னும் மையப்பொருளில் ஏராளமான தரவுகளைத் தேடி வைத்திருக்கிறார்- ஒசூர், தேன்கனிக்கோட்டை போன்ற கர்நாடக தமிழக எல்லையோர ஊர்களில் பரவியிருக்கும் மனோகர்ராவின் உறவினர்களில் முதியவர்களை சந்தித்து உரையாடினால் அவர்களது தோற்றம் குறித்தத் தொன்மக்கதைகள் கிடைக்கக்கூடும்- மராட்டியர்களைப் பற்றி முழுமையாய் அறியத்தருமளவுக்கு ஏராளமான ஆய்வேடுகளை பாதுகாத்து வைத்திருந்தது புனே பண்டார்கர் ஆய்வுமையம்- போன வருடம் அதையும் சூறையாடிவிட்டனர்- இந்த விசயத்தில் பௌத்த கிறித்தவ இந்து வெறியர்கள் பேதமின்றி கைகோர்க்கின்றனர்- அறிவையும் பண்பாட்டையும் வரலாற்றையும் பாதுகாத்து ஞாபகமூட்டும் யாழ் நூலகமோ ஈராக் அருங்காட்சியகமோ பண்டார்கர் ஆய்வுமையமோ அவர்களுக்கு சகிக்கக்கூடியவையாய் இல்லை- தஞ்சை ரெசிடென்ட் கலெக்டரால் உபயோகமற்றவை என்று ஒதுக்கப்பட்டு ‘தஞ்சாவூர் அரச ஆவணங்கள் ஜிணீஸீழீஷீக்ஷீமீ ஸிணீழீ ஸிமீநீஷீக்ஷீபீs’ என்ற பெயரில் சென்னை ஆவணக்காப்பகத்தில் மக்கிக் கொண்டிருக்கும் 960 மூட்டைகளுக்குள் அவர்களது உண்மையான வரலாறும்கூட இருக்கும்.

2. இடைத்தையல்
---------------------------

இவனின் தந்தை சாம்பாஜிராவ்- தோற்றம் பற்றிய வர்ணணை (மீசைமயிர்மீது எப்போதும் துளிர்த்திருக்கும் மூக்குப்பொடி- பக்கம் நெருங்கினால் தும்மலைக் கிளப்பும் அதன் நெடி- தடித்த பிரேம் கண்ணாடி- கௌரவம் சிவாஜிகணேசனுக்குப் போல காதோரத்து செல்லநரை போன்ற விசயங்கள்) - மெழுகுவர்த்தியின் அடியில் இருட்டு என்பதுபோல கந்தைகளை உடுத்தியிருக்கும் எங்கள் ஊர் டைலர்களைப் போலன்றி வெகுநேர்த்தியான அவரது உடைகள்- மண்டித்தெருவிலிருந்து தெற்கே பிரியும் பெரியபஜாரின் முதல் சந்தில் யாவரும் நின்று ரசித்துப் போகும்படியான வசீகரத்துடன் நாகை ஜி.வியின் கைவண்ணத்தில் மிளிரும் பெயர்ப்பலகையுடன் கூடிய அவரது தையற்கடை- (இந்தப் பெயர்ப்பலகை வைத்தப் புதிதில் அதைப்பற்றியும் அதை வரைந்த ஓவியர் பற்றியும்- எலெக்ட்ரிக் பேனாவால் ஸ்கெட்ச் வரையுமளவுக்கு வேகமானவர்- பல்வேறு தகவல்கள் கதைபோல உலவின எங்கள் ஊரில்) எப்போதும் உடல் அதிர பெடல் செய்து தைத்தபடியே இருக்கும் ஐந்தாறு டெய்லர்கள்- மூலையில் அமர்ந்து கண்ணிடுக்கி ஊசிக்குள் நூலைக் கோர்க்க முயற்சித்தபடியே இருக்கும் காஜா பையன்கள் இருவர்- ஊருக்கே முதன்முதல் வந்த ஜிக்ஜாக், எம்ப்ராய்டரி மிஷின்கள்- பிரிட்டிஷ் ராயல் அகாடமியில் இருப்பதைப் போல தங்கத்தில் இல்லையென்றாலும் பித்தளையால் ஆன கத்திரி கொண்டு அவர் துணிகளை கத்தரிக்கும் அழகைக் காண்பதே தனியனுபவம்-

பாபி காலர் வைத்த சட்டையும் பெல்பாட்டம் பேண்ட்டும் தைக்க அதைவிட்டால் வேறுகடையில்லை ஊரில்- பொங்கல் தீபாவளி கிறிஸ்துமஸ் ரம்ஜான் காலங்களில் முண்டியடிக்கும் கூட்டம்- அப்படியான நாட்களில் ஸ்கூலுக்கு வராமல் அப்பாவுக்கு ஒத்தாசையாய் இரவும் பகலும் கடையிலேயே மனோகர் இருப்பான் (பட்டன் கட்டுவதிலிருந்து தைப்பதுவரை அவன் அப்போதுதான் கற்றுக்கொண்டான் என்பதை இந்தப் பாராவிலேயே சொல்லிவிட வேண்டும். அப்போதுதான், தன் அப்பாவின் சாவுக்குப் பிறகு கடையைப் பார்த்துக் கொள்வதற்காக அவன் பள்ளிக்கு வராமல் நின்றுவிட்டான் என்று பின்பகுதியில் சொல்லும்போது கோர்வையும் தர்க்கமும் இடிக்காமலிருக்கும்)- எத்தனை ரெஜிமன்டுகளுக்கு தைத்திருப்போம் என்கிற தனது பரம்பரைப் பெருமையில் மயங்கி யூனிபாரம் தைக்க அவ்வப்போது வந்துபோகும் போலிஸ் அரைமண்டைகள்- பிள்ளையாரைப்போலவோ பிள்ளைத்தாச்சி மாதிரியோ பருத்து முன்தள்ளியிருக்கும் அவர்களது தொந்திக்கு பாந்தமாய் தைப்பதில் கில்லாடி- இனி இதுதான் நின்று நிலைக்கப் போகிறது என்பதை முன்னுணர்ந்து புதிதாக வந்துவிட்ட மிஷின்தையலை கற்றுக்கொண்ட வெங்கோஜியின் பரம்பரையில் வந்ததாலோ என்னவோ அந்தந்த காலத்தில் எந்த பாணி பிரசித்தமாகிறதோ அதை உடனடியாக பயில்கிறவராகவும் அவ்வாறே தைத்து பிரபல்யம் காண்கிறவராகவும் மாறுகிற சாதுர்யம் அவருக்கு இயல்பாகவே இருந்தது - சபாரிசூட், கல்யாண சூட்கள், வடஇந்திய குர்தா வகைகள் எல்லாமே அவருக்கு அத்துபடி- மற்ற கடைகளைவிட அவரிடம் கட்டணம் ஜாஸ்தி என்றாலும் அவரிடம் ஒருமுறை தைத்துக்கொண்டவர்கள் அவரது வாடிக்கையாளராகவே தொடர்வதின் சூட்சுமம்-

வெயில்காலத்தில் சட்டையைக் கழற்றிவிட்டு வெற்றுடம்பில் பூணூல் நெளிய அமர்ந்திருக்கும் அவரது கோலம்- பூணூல் அணிவதற்கு தமது சாதியாருக்குரிய உரிமை குறித்து இவரிடம் எப்போதும் பரவசமான கதைகளுண்டு- சாதிப் பெருமைக்காக இதை தாங்கள் அணிவதில்லை என்றும், குறிப்பிட்ட சாதியாரே அணியமுடியும் என்கிற ஏகபோகத்தை எதிர்த்தே தாங்கள் அணிவதாகவும் அவர் கூறுவதில் ஜோடனையின் சாயலேதுமிருந்ததில்லை. யார் மாட்டிக் கொண்டாலும் தேமென்று கிடக்கும் வெறும் நூல்தானேயழிய அதற்கு எந்த புனிதமும் சக்தியும் இல்லை என்று நிரூபித்தவர்கள் தாங்களே என்பார். அப்படியானால் அந்த சனியனை கழற்றி எறிய வேண்டியதுதானே என்று சீண்டினால் அது ஒரு பெரிய போராட்டம் என்பார் கண்களை மூடியபடி. அந்தப் போராட்டத்தை அவர் ஒருபோதும் விவரித்துக் கூறியதில்லை என்றாலும் ‘எங்களது தாத்தாவின் தலைமுறை வரையிலும் எத்தனையோ பேரை விரட்டிவிரட்டி அவர்கள் பூணூலை அறுத்தார்கள். பதிலடியாக ஒவ்வொரு அக்ரஹாரமாய் நுழைந்து அவர்களது குடுமிகளை எங்களாட்கள் அறுத்திருக்கிறார்கள்... அதற்கப்புறம்தான் அவர்கள் எங்களை விரட்டுவதை நிறுத்தினார்களாம்... ‘ என்று மட்டும் சொல்வார். இதைச் சொல்கிற போது தானே போராட்டத்தில் பங்கு கொண்டதைப் போன்ற பாவனை அவரது முகத்தில் துலங்கும். இந்த வரலாறு தெரியாததால் இதை அணிவதற்கு உன்கூட்டாளிக்கு ஒம்புவதில்லை என்று மனோகர் மீது எப்போதும் புகார் கொண்டிருப்பார்.

எங்கள் வீட்டில் கறியாக்கும் தினங்களில் என் அப்பாவுடன் சாப்பிட வருதல்- சும்மா வையுங்க அம்மணி... மாடாயிருந்தா என்ன...? கறிதானே... என்று அம்மாவின் சங்கடத்தைப் போக்குவார். ‘என்ன கொடுமை பாத்தியா... இதே மாட்டைத்தான் வெள்ளைக்காரன் திங்கறான். அவனை தொரைன்னு கும்புடறானுங்க. அவன்கிட்ட கைகட்டி சேவகம் பண்றானுங்க. ஆனா அதே மாட்டைத் திங்கிற உங்களை தீட்டுன்னு ஒதுக்குறானுங்க... என்ன பம்மாத்து இது. இப்ப நான் திங்கறேன்... நீங்களே என்ன சொல்வீங்க? அவர் எங்க சாதி இல்ல, ஆனா எல்லாக்கறியும் திம்பார்னு பெருமையா சொல்வீங்க. நான் தின்னா பெருமை. நீங்க தின்னா தீட்டு. உள்ளவன் தின்னா மருந்து இல்லாதவன் தின்னா நரகல்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க...’ என்று விஸ்தாரமாய் போகும் அவரது பேச்சு. ஜோதிராவ் பூலேவுடன் சத்தியசோதக் மண்டலில் இணைந்து செயலாற்றிய தங்களது முன்னோரின் ரத்தம் தன்னுடம்பில் ஓடுவதாய் அவர் பெருமிதம் பொங்க சொல்லிக் கொள்வதில் நியாயமிருப்பதாய் தோன்றும்.

தாய் வயிற்றிலிருக்கும்போதே ஏராளமான தின்பண்டங்களை செய்யக் கற்றுக் கொண்டவளைப்போல சதாவும் ஏதேனுமொரு பட்சணம் செய்ய மாவு பிசையும் கையுடனேயே தென்படும் இவனது அம்மா- பெயர் ஞாபகத்திலில்லை- சாம்பாஜிராவின் மனைவி என்றோ மனோகர்ராவின் அம்மா என்றோ தான் படிந்திருக்கிறாள்- நல்ல குணவதி (போகும்போதெல்லாம் வாஞ்சையோடு ஏதாச்சும் தின்னக் கொடுத்தவளை வேறெப்படி விளிக்கமுடியும்?)- வஞ்சனையறியாதவள்- சிவகுமார் ஒரு கவிதையில் சொல்வதைப்போல சர்க்கரையுடன் சேர்த்தரைத்த கண்ணாடித்துண்டுகளையும் சர்க்கரை என்றே நம்புகிறவள்- இரண்டையும் பிரித்தறியும் பேதமறியாதவள்- அதனாலேயே கண்ணாடித்துண்டுகளை விழுங்கினாலும் அவளுக்கு ஒன்றும் ஆகாதென்று நினைக்கத் தோன்றும்- நெற்றியில் பெரிய திலகம்- காய்ந்த ரத்தம்போல் வியர்வையில் கலங்கிய குங்குமம் நடுவகிட்டில்- பளீர்வண்ணங்களிலான நூல்புடவை- என் அம்மாவுக்கு நல்ல ஜதையாள். முக்கியமாய் பாகுபாடின்றி வீட்டுக்குள் எங்களது புழக்கத்தை சகஜமாய் ஏற்றுக் கொண்டவள்-

டைப்ரைட்டிங் முடித்தக் கையோடு கல்யாணத்திற்குள் வீட்டுக்குதவும் வேறெதாவது கைத்தொழிலொன்றை பயிலவேண்டிய நியமத்திலிருந்த என் அக்காவுக்கு எம்ப்ராய்டரி போட கற்றுத்தந்தவள் மனோகர்ராவின் அக்கா ரமா- எடுப்பான அடர்வண்ணநூல்களில் பூக்கள், பறவைகள், மலைமுகடுகளுக்கிடையே உதிக்கும் சூரியனில் கீற்றாட்டும் தென்னைமரங்கள் நிறைந்திருக்கும் கைக்குட்டைகள், தலையணையுறைகள்- கோலார் மாவட்டம் சிந்தாமணியில் வாழ்க்கைப்பட்டிருக்கிறாள்-

மனோகரும் நானும் ஒரேநாளில் பள்ளியில் சேர்ந்தவர்கள்- அன்றிலிருந்துதான் நானும் அவனும் எங்களிருவரின் அப்பாக்களும் நண்பர்களானோம்- சேர்ந்தநாளின் சுவாரசியம் ( ஹெட்மாஸ்டர் காதைத் தொடச் சொன்னதும் எட்டி அவர் காதை நான் தொட்டுவிட, ஆச்சாரத்திற்கு பங்கம் நேர்ந்துவிட்டதாய் குமுறிக்கொண்டே அவர் வீட்டுக்குப்போய் குளித்துவிட்டு வந்த பிறகுதான் எனக்கு அட்மிஷன் கிடைத்தது. அதுவரை நானும் அவனும் புதுச்சட்டையின் நுனியை மென்றுகொண்டிருந்தது இங்கு முக்கியமான தகவலல்ல. ஆனால் அவர் ரிட்டையராகும் வரை எங்கள் தோட்டத்தில் விளைந்த வெண்டை கத்திரி தக்காளி போன்ற எதன்மீதும் தீட்டு பாராட்டியதில்லை என்பது முக்கியவிசயம். ஆனாலும் தலித் மாணவர்களை பிரம்பால் அடித்தாலும் கூட அதன்முனை வழியே தீட்டு பரவிவிடும் என்று மண்கட்டியால் அடித்த அம்பேத்கர் காலத்து வாத்தியாரில்லை இவர் ) - அப்புறம் ஹைஸ்கூல்- கமலா டீச்சர் வீட்டில் பிரைவேட் கிளாஸ்- பத்தாவது பி கிளாஸ் தாமரைக்கு எனது லவ் லட்டரை அவன் கொண்டுபோய் கொடுத்து பி.இ.டி. சாரிடம் அவனுக்கு முதுகு பழுத்தது- முள்ளிக்காடு டேமுக்கு ஸ்கவுட் கேம்ப் போனது- இங்கிலிஷ் பிரீயட்ல இங்கிலிஷ்லதான் பேசணும் என்று அடிக்கும் சாரை மடக்க, குழம்பு தாளிக்கறதையும் வாசல் பெருக்கி சாணி தெளிச்சு கோலம் போடறதையும் இங்கிலிஷ்ல எப்படி சார் சொல்லணும் என்று கேட்டு வாயடைக்க வைத்தது- இதுவரையான இளம்பிராயத்துக் கதைகளில் சொல்லப்படாத சேட்டைகள் சிலவற்றை இடம்பார்த்து நிரவிச் சேர்க்கவேண்டும்.

மகன் பத்தாவது படித்து முடிக்கட்டும் என்று காத்திருந்ததைப் போல அனலாடும் பத்தாவது முழுப்பரிட்சை லீவில் அவனப்பாவின் சாவு- அதற்கப்புறம் மனோகர்ராவ் பள்ளிக்கு வராமல் கடையைப் பார்க்க நின்றுவிட்டான்- அவ்வப்போது நான் கடைக்குப்போய் பார்த்துவருவதுண்டு- நான் கிருஷ்ணகிரியில் பி.யூ.சி சேர்ந்த வருடம் அவனுக்கு கல்யாணம்- செக்கச்செவேலென்று பாய்வீட்டுப் பையன் மாதிரி இருக்கும் இவனுக்கு அதேமாதிரி லட்சணமாய் ஒரு பெண்ணைத் தேடிப் பிடித்துவிட்டாள் அவனம்மா. பூரணி நல்ல தன்மையான பெண். வாய்நிறைய அண்ணா என்றழைப்பாள் என்னை- (கணவனின் சினேகிதனை அண்ணா என்று கூப்பிட்டுவிடுவதால் உடனடியாய் பெண்களுக்கு ஏற்பட்டுவிடுகிற பாதுகாப்புணர்வு அவளுக்குமிருந்தது) - அடுத்தடுத்து இரண்டு பையன்கள் பிறப்பு- நியதிப்படி இருவரும் என்னை மாமா என்றழைக்க பழக்கப்படுத்தப்பட்டனர் (சித்தப்பா அல்லது பெரியப்பா என்று கூப்பிடுவதாலேயே தன் தாய்க்கு பங்கம் ஏதும் நேர்ந்துவிடுமோ என்ற பயம் அந்த வயதில் அவர்களுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை )

3.வளரும் ஊசி
----------------------

மனோகரின் பொறுப்பில் கடை- பழகுவதற்கு தன்மையான அவனது சுபாவம்- புதிய தொடர்புகள்- மைசூர் மகாராஜாவின் தையற்கார பரம்பரை என்ற பெருமிதம் தந்த நம்பிக்கை- அரசனின்றி வேறொரு அயலார் நிழலும் தீண்ட அனுமதியற்ற அந்தபுர மகளிரைத் தொட்டு அளவெடுக்காமல் பார்வைஞானம் கொண்டே பாந்தமாய் தைக்கப் பழகியிருந்த அவர்களது கண்ணும் கையும் எவரொருவருக்கும் அளவெடுக்காமல் தைக்கும் நிபுணத்துவத்தைப் பெற்றிருந்தது பரம்பரை பரம்பரையாய்- பெங்களூரிலிருந்து புதிய கட்டிங் மாஸ்டர் நியமனம்- காலையிலிருந்து இரவு சாத்தும்வரை கடையிலேயே அவனது வாசம்- கடை சாத்தியப்பிறகு ஆற்றுமணலில் நடந்தபடியான எங்களது உரையாடல் காலப்போக்கில் நின்றுபோனது- நகரத்தின் நெ.1 கடையாக வளர்ச்சி- கண்ணாடி அலமாரிகளுடன் கடை விரிவாக்கம்- தொழிற்சாலை போல எந்நேரமும் தையல்மிஷின்களின் சத்தம்-

மகன்கள் இருவரையும் கூட்டிக்கொண்டு எப்போதாவது கடைப்பக்கம் வருவாள் பூரணி. பராக்கு பார்க்கும் ஆசையில் பையன்களுக்கு வீட்டை விடவும் கடை பிடித்திருந்தது. வீட்டுக்குத் திரும்ப அடம் பிடிக்கிறவர்களை சமாதானப்படுத்த பக்கத்து அடுமனையிலிருந்து தின்பண்டங்கள் வாங்கித்தருவது மனோகரின் வாடிக்கை. இருவரில் யார் தொழிலைக் கற்றுக் கொண்டு தனக்கடுத்து பொறுப்பெடுக்க வரப்போகிறார்கள் என்று தன்னால் யூகிக்க முடியவில்லை என்பான். இப்போதைக்கு படிக்க அனுப்புவோம். பிறகு பார்க்கலாம் என்று பூரணிதான் மன்றாடி பள்ளியில் சேர்த்தாள். மகன்கள் நிலைமீறிப் படித்து வெங்கோஜி காலத்திலிருந்து இத்தனை தலைமுறைகளாய் கைக்கொண்டிருக்கும் தொழிலை கைவிட்டுவிடுவார்களோ என்ற கவலையை எப்போதாவது வெளிப்படுத்துவான். வேலைப்பளுவிற்கிடையிலும் திடீரென்று சைக்கிளேறி வந்துவிடுவான் என் வேலையிடத்துக்கு. எதுவும் பேச வேண்டியிருக்காது. சும்மா பார்க்கணும்போலிருந்தது, வந்தேன்... என்பான்.

வெவ்வேறு சட்டவிரோதக் காரியங்களால் சம்பாதித்த பணத்தைக் கொண்டு நகரமெங்கும் கல்வித்தந்தைகள் தோன்றி சரஸ்வதியை வம்பிழுக்கத் தொடங்கிய காலம்- ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு விதமான சீருடை... பல்வேறு கான்வென்டுகளின் அங்கீகரிக்கப்பட்ட டெய்லர் கடை யாகிறது- ஏப்ரல் மே மாத வெக்கையில் இவனும் அவனப்பா மாதிரியே வெற்றுடம்போடு பூணூலைத் தடவிக்கொண்டு மேற்பார்வை- மகன்களில் பெரியவன் அப்பாவோடு கடைக்கு வருகிறான் இரண்டு வருடங்களாக. பத்தாவது படிக்கும் இளையவன் ஒழிந்த நேரங்களில் கடைக்கு வந்து போகிறான்.

ப்ரைட் ஸ்கூல் மணிகண்ட மூர்த்தி- நகரத்தின் கௌரவத்திற்குரிய பெரிய மனிதர்- மனோகரின் அப்பா தான் அவருக்கு ஜிப்பா தைப்பார் (முடிந்தால் அப்பா ஜிப்பா என்று அடுத்தடுத்து வருவதை எழுதும்போது தவிர்த்தல் நலம்)- தன்னை சந்திக்குமாறு அவர் மனோகருக்கு தகவல் அனுப்பியிருந்தார். என் ஸ்கூட்டரில்தான் அவரது வீட்டுக்குப் போயிருந்தோம்- ‘பேருக்குத்தான் யூனிபார்ம்... பிள்ளைங்க ஆளுக்கொரு நிறத்துல தைச்சிட்டு வருதுங்க... நீயே எங்கேயாச்சும் லாட்டுல துணி பிடிச்சுக் கொண்டாந்து தையேன்... உன்கிட்டதான் வாங்கணும் தைக்கணும்னு ஸ்டிரிக்ட
Back to top Go down
 
-- Tamil Story ~~ காலத்தை தைப்பவனின் கிழிசல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story ~~ பரிச்சயக்கோணங்கள்
» ~~ Tamil Story ~~ வெள்ளப்பெருக்கத்தில்...
» ~~ Tamil Story ~~ மழை
» ~~ Tamil Story ~~ பசி
» Tamil story

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: