BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ Tamil Story ~~ பௌர்ணமி பால் நிலா மற்றும் சித்தப்பா  Button10

 

 ~~ Tamil Story ~~ பௌர்ணமி பால் நிலா மற்றும் சித்தப்பா

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ Tamil Story ~~ பௌர்ணமி பால் நிலா மற்றும் சித்தப்பா  Empty
PostSubject: ~~ Tamil Story ~~ பௌர்ணமி பால் நிலா மற்றும் சித்தப்பா    ~~ Tamil Story ~~ பௌர்ணமி பால் நிலா மற்றும் சித்தப்பா  Icon_minitimeSun May 01, 2011 9:14 am

~~ Tamil Story ~~ பௌர்ணமி பால் நிலா மற்றும் சித்தப்பா




“என்னமோ போடா... நீ பேசும் போதுதான் நம்ம ஸ்கூல் டேஸ் எல்லாம் ஒன் பை ஒன்னா ஞாபகம் வருது... அதெல்லாம் ஒரு பொற்காலம்..” - என்றார் என் அப்பா நெக்குருகிய குரலில்.

மிக நீண்ட ப்ளாஷ்பேக்... அதுவும் அவர்களுடைய பாடாவதி பள்ளிப் பருவத்தைப் பற்றி பேசி பேசியே.. (நடு நடுவே எம்.ஜி.ஆர் பாட்டு வேற) நள்ளிரவு பன்னிரன்டை கடத்திய அப்பாவும் சித்தப்பாவும் தூங்கலாமென ஒரு மனதாக தீர்மானிந்தனர். அதன் முதற்கட்ட நடவடிக்கையாக

“பவுனு தண்ணி கொண்டா.. குடிச்சுட்டு தூங்கப் போகணும்” என்றார் சித்தப்பா.

அடுத்த நிமிடமே மெட்டி ஒலி சிணுங்கலோடு, வளையோசை கொஞ்ச, பளிச்சென்று துலக்கிய சில்வர் செம்பில் தளும்ப தளும்ப தண்ணீரை புன்னகையோடு எங்கள் அழகிய சித்தி தந்திருப்பார்கள் என நீங்கள் நினைத்தால்... மன்னிக்கவும்.. அவ்வாறு எதுவும் நிகழவில்லை. அம்மாவும் சித்தியும் உள்ளறையில் போய் தூங்கி ரெண்டு மணி நேரம் ஆகி விட்டது. அப்படியே அவர்கள் விழித்திருந்தாலும் வித்யாசமாய் ஏதும் நிகழ்ந்துவிடாது.

சித்தியை தண்ணீர் கொண்டு வரும்படி கட்டளை இட்டது சித்தப்பாவே எதிர்பாராத ஓர் அனிச்சை செயல்தான்.. பேச்சு ஸ்வாரஸ்யத்தில் யாரிடம் என்ன ஆணையிடுவதென்பதை மறந்தே போய் விட்டார். பாதுகாப்பிற்காக அண்ணனும் அண்ணனின் மக்கள் நாங்களிருவரும் இருக்கும் தைரியத்தில்தான் அவர் இவ்வாறெல்லாம் துணிந்து பேசி விட்டார். ஊருக்கு போனதும் இந்த கணக்கு சுமூகமாகவோ அல்லது அசுமூகமாகவோ தீர்க்கப்படலாம்.

நானும் எனது தம்பியும் இச் சகோதரர்களின் ப்ளாஷ்பேக் அரட்டையை சிரித்து ரசித்தோம்... வாஸ்தவம் தான்.. அதுக்காக கழுத்து வரை இழுத்து போர்த்திய கம்பளியை விலக்கி, படுக்கையின் முழு செட்டப்பையும் கலைத்து .. எழுந்து போயி தண்ணீரெல்லாம் கொண்டு வந்து தரும் அளவுக்கு நாங்கள் அவரது பின்புல நினைவு கூறல்களால் சிலாகித்து விட்டோம் என கூற முடியாது. எனவே உடனடியாக உறங்கி விட்டதை போல நடித்தோம். தம்பி வழக்கம் போல ஓவர் ஆக்ட் செய்தான்.

“டேய்.. இப்ப யாராவது தண்ணி கொண்டு வந்து தரப்போறீங்களா இல்லயா..?”

போனால் போகட்டுமென்று தண்ணீர் கொண்டு வந்து தந்துவிட்டு.. “சரி.. சித்தப்பா நீங்க அந்த வயர் கட்டில்ல படுத்துக்குங்க.. கொஞ்சம் தான் கிழிஞ்சிருக்கு.. உங்க வெயிட்டுக்கு இன்னிக்கி ராப்பொழுது தாங்கும்” - என்றேன்

இங்கே சித்தப்பாவின் தோற்றத்தைப் பற்றி விவரிப்பது தவிர்க்க இயலாததாகி விட்டது. குடும்பத்தின் கடைகோட்டி.. பாட்டியின் செல்லம்.. எனவெ நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் கொண்டாலும்.. அவர் + அவரது உடைகள் + அவர் புகைக்கும் சிகரெட் + வத்திப்பெட்டியோடு சேர்த்து மொத்தம் ஒரு நாற்பது கிலோ இருக்கலாம், சமய சந்தர்ப்பங்களில் இதை விட குறையலாம்.

சித்தப்பாவை பார்த்து பார்த்திபன் கவிதை எழுதினால்.. பின் வருமாரு சொல்வார்

“ஒரு வெள்ளை சிகரெட்

(கூமுட்டை.. சிகரெட் விள்ளையாத்தான்(here it is spelling mistake veLLai instead of viLLai) இருக்கும் முண்டம்)

இன்னொரு

வெள்ளை சிகரெட்டை பிடிக்கிறதே..

கமா.. ஆச்சர்ய குறி..!”

“எது..? இங்கயா.. இந்த எட்டடி குச்சுலயா? நெவெர் (நோட் பண்ணிக்குங்க.. அந்தக்கால பி.யூ.சி அதனாலத்தான் இந்த நெவெர் எல்லாம்) வீட்டுக்குள்ளே மனுஷன் படுப்பானா இந்த மெட்ராஸ்ல?”

“அதுக்கு...?

“நான் மேலபோயி படுத்துக்கறேன்”

“என்னது...? மொட்ட மாடிலயா..? சித்தப்பா ரிஸ்க் எடுக்காதீங்க.. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிப்போச்சுன்னா..? இப்பத்தான் பாட்டிய பறி கொடுத்துட்டு பறி தவிச்சு நிக்கறோம் நாங்க”

“அங்க கிராமத்துல சிலு சிலுன்னு காத்துல வயகாட்டுல தூங்கி பழக்கப்பட்டவன் நான்... சீறும் சிங்கத்தை சிறுநரி கூண்டில் அடைக்காதீங்க” என்றார் அடுத்த அறையில் சித்தி தூக்கம் கலையவில்லை என்பதை உறுதி செய்தபடி.

எத்தனை கருத்தம்மா வந்தாலும் .. கிராமம் என்றாலே சிலுசிலு காத்து, ஆறு கரை, மழை மடுவு, பச்சை கலர் என்னும் மாயையை யார் மனதிலிருந்தும் அகற்றவே இயலாது என்பதில் எனக்கு வருத்தம்தான். தொன்னூறு வயது பாட்டி இறந்து இன்னும் முழுசா மூணு நாள் கூட முடியல.. அவர் பெற்றெடுத்த இந்த பாசப் பறவைகளின் பாடாவதி ப்ளாஷ்பேக், பாட்டு கச்சேரி அரட்டையை கூட மன்னித்து மறந்தோம்.. ஆனா இப்டி..தன்னந்தனியா.. ஒத்தை ஆளா ..மொட்டை மாடிலதான் படுப்பேன்னு அடம் பிடிக்கறது ரொம்ப ஓவர். தண்மையாக சொல்லிப் பார்க்கலாம் என எழுந்தான் தம்பி

“சித்தப்பா வேணாம்.. சாயந்திரம் கடைக்கு போயிட்டு வரும் போது.. மழைகாலம் கூட இல்ல.. இப்ப போய் தும்பி பறக்குதுன்னு சொன்னீங்க.. அப்பவே அது தும்பி இல்ல.. கொசுன்னு நான் சொல்லி இருக்கணும்.. நீங்க வந்து தங்கப் போறது ஒரு ரெண்டு நாளு.. ஏற்கெனவே சித்தி வேற கூட இருக்காங்க.. உங்கள இன்னும் பயமுறுத்த வேணாமேன்னு நெனைச்சேன்.. சொல்றத கேளுங்க..இங்க ஹால்லயே படுங்க”

“டேய்.. ஒரு பெட்ஷீட்டும்.. ஒரு கொசுவர்த்தியும் தாங்கடா.. ஜம்முன்னு நிலாவ பார்துகிட்டே தூங்கி ப்ரெஷ்ஷா வரேன்”

“பாட்டியோட ஆவி வரப் போகுது.. நீங்க செல்ல பிள்ளை வேற”

“எங்கம்மாதானேடா வந்தா வந்துட்டு போகட்டும்”

“அவ்வளவா..? சித்திகிட்ட பர்மிஷன் வாங்கினீங்களா? வேணாம் சித்தப்பா..இதெல்லாம் ஆவறதில்ல.. ரிஸ்க் மேல ரிஸ்க் எடுக்கறீங்க.. உங்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர்ரது எங்க கடமை” - என்றேன் நான்

“விடும்மா.. அவன் அந்த பெரிய ரெண்டு கட்டு வீட்லயே மொட்ட மாடிலதான் தூங்குவான்.. நீ போடா ராமு” என்றார் அப்பா.

“அப்பா.. உங்க காலத்துல இருந்த கொசு பூச்சி இனத்தை சேர்ந்தது.. இந்த காலத்துல பறவை இனமா மாறிடுச்சுப்பா.. சித்தப்பாவை சுருளா சுருட்டி பின்னாடி சவுக்குதோப்புக்கு தூக்கிட்டு போய் ரத்தத்தை உறிஞ்சி துப்பப் போகுது”

சென்னையில் சவுக்குத்தோப்பா...?ன்னு பதறி அடிச்சு எழுந்துக்காதீங்க.. சென்னையின் புற புற அதையும் தாண்டிய புறநகர்ப் பகுதிகளில் சவுக்குத்தோப்பு இருப்பது ஜீரணிக்க இயலாத உண்மைதான்.

நாங்கள் இவ்வளவு பண்பட்ட மொழிகளில் எடுத்து சொல்லியும்.. தன் முயற்சியிலிருந்து மனம் தளராத வேதாளம் போல.. (விக்ரமாதித்தன் தானே இந்த வாக்கியத்துக்கு பொருந்தும்னு நீங்க நினைக்கலாம்.. ஆனா.. எங்க சித்தப்பாவுக்கு பொருத்தமா எதை கம்பேர் பண்ணனுங்கற உரிமை கதாசிரியையாகிய எனக்குத்தான் இருக்கணும் ..ஓகே?)

பழைய முழு கை ஸ்வெட்டெர், கம்பளி, பாய் தலகாணி, ஒரு சொம்பு, அதுக்குள்ள கொஞ்சம் தண்ணி, ஒரு கொசுவர்த்தி சுருள், ஒரு சீட்டா பைட் வத்திப்பெட்டி, ஒரு டார்ச் லைட் (ஆத்திர அவசரத்துக்கு எரியவே எரியாது) எடுத்துக்கொன்டு நள்ளிரவு ஒண்ணரை மணிக்கு பால் நிலவொளியில் பள்ளிகொள்ளச் சென்றார். இவ்ளோ ஓவர் கெட்டப்புக்கு அவர் நிலாவுக்கே போயிருக்கலாம்.

மேற்சொன்ன உபகரணங்களை ரெண்டு நடையா ஏறி இறங்கி வந்து அவரே எடுத்துட்டு போனாரே ஒழிய நானோ, என் தம்பியோ, அவரது அண்ணானோ எடுத்துச் சென்று தந்து அவரை உபசரிக்கவில்லை. தொன்னூறு வயதானாலும்.. பாட்டியே ஆனாலும்.. ஆவி ஆவிதானுங்களே?

சித்தப்பாவின் இந்த அராஜக அத்துமீறல்களை, அடங்காபிடாரிதனத்தை, அவரது எதிர்கால நல்வாழ்வை கருத்தில் கொண்டு, சித்தியிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டாமென நாங்கள் மூவரும் அமைதி தீர்மானம் நிறைவேற்றினோம்.

ஏற்கெனவே எங்கள் ஊரில் ஒண்ணு மண்ணா பழகி தூக்கு மாட்டி செத்தவங்க ஆவி, அவுட் ஸிட்டி பேய், பிசாசு, ரத்த காட்டேரி, கொள்ளிவாய் கருப்பு, முனீஸ்வரன் நடமாட்டம், நல்ல பாம்பு படமாட்டம் என பின்னிரவு தொடங்கி நள்ளிரவு வரை சித்தப்பா சொன்ன கதைகளால் நாங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலியே நகருவதைப்போல உணர்ந்துக் கொண்டிருக்கையில், படுக்கையில் கண்களை திறந்து சிரித்தபடியே உயிர் விட்ட பாட்டியின் முகம் வேறு அடிக்கடி நினைவுக்கு வந்தது.

சித்தியின் மாங்கல்ய பாக்கியம் அவரை காப்பாற்ற வேண்டுமென வேண்டுவதை தவிர வேறொன்றறியோம் பராபரமே.

அப்பா மேற்கொண்டு அவரது தனிப்பட்ட ப்ளாஷ்பேக்கை துவங்க விடாமல் தடுத்து “தூங்குங்கப்பா.. ப்ளீஸ்” என்றோம். நாங்களும் தூங்க ஆரம்பித்தோம்.

“வாடி.. என் மவளே.. நான் அங்கிட்டும் இங்கிட்டும் அலையறேன்.. நிம்மதியா தூங்கறியா நீயி”

“ஐயோ... பாட்டீ.. என்ன விட்டுறு.. உனக்கு பிடிச்ச புளி கொழம்பு செஞ்சு படைக்கறேன்.. பாட்டீ..ஈ ஈஈ”

அப்பாவும் தம்பியும் உலுக்கி எழுப்பி தண்ணீர் குடிக்க வைத்தார்கள்.. நல்லவேளை கனவுதானா? குப்புறப் படுத்து கம்பளியை தலைமுழுதும் இழுத்து போர்த்திக்கொண்டால் ஆவிகளிடமிருந்து தப்பிக்கலாம் என்று ஒரு சீன அறிஞர் சொன்ன அறிவுரையை நினைவுகூர்ந்து ஒரு இஞ்ச் கேப் விடாமல் இழுத்து போர்த்திக் கொண்டேன்.

பத்து நிமிடங்கள் மெல்லக் கழிந்தது.. தூரத்தில் நாய் குரைத்திருக்கலாம், சுவர் கோழி க்ரீச்சிட்டிருக்கலாம்.. தவளை கத்தியிருக்கலாம்.. இதெல்லாம் எங்களுக்கு கேக்கவே இல்லை. எல்லா கதவு ஜன்னல இழுத்து மூடிட்டா எப்டிங்க இதெல்லாம் கேக்கும்..? அமைதியின் மடியில் ஆழ் நித்திரை கொள்ள துவங்கையில்

டொக்..டொக்..

சீ..ப்ரம்மை

டொக்.. டொக்..

இதுவும் ப்ரம்மைதான்

டொக்..டொக்.. டொக்..

அப்பா, தம்பி, நான் மூவரும் எழுந்து உட்கார்ந்து விட்டோம்

“பாட்டிதான்பா கதவ தட்டுது”

“ஆவிக்கு கதவு ஏது.. ஜன்னல் ஏது.. நேரா உள்ள வந்துரும்” - என்றார் அப்பா

“அப்பா.. என்னப்பா இது.. இப்ப வந்து இப்டி சொல்றீங்க”

டொக்..டொக்..

ஒரு வேளை.. பாட்டி இறந்ததுக்கு வர முடியாத நம்ம ஊர்காரங்க.. அந்தி சந்தியில புறப்பட்டு இப்ப வந்து சேர்ராங்களோ? எங்க ஊர்க்காரங்களே அலாதிதான்.. முழு சுதந்திரம் எதிலயும்.. எப்பவும்

“யாரது..?” தைரியமா இந்த கேள்வியை கதவை பார்த்து கேட்டே கேட்டுட்டான் என் தம்பி.

பதிலில்லை

“மனப் ப்ராந்திதான்.. பேசாம விபூதி வெச்சுகிட்டு தூங்கலாம்” - என்றார் அப்பா.

விபூதி டப்பா ஜன்னலோரமாக இருப்பதால் அதை எடுப்பதில்லை என்பதில் முழு தீர்மானத்தோடு இருந்தோம் நாங்கள் மூவரும்.

“எதுக்கும் வாசக்கதவ திறந்து பார்த்துடலாமா?” என்றேன்

“எதுக்கு? ரத்தம் கக்கி சாவவா?” - முறைத்தான் தம்பி. விட்டால் அறைந்துவிடுவான் போலிருந்தது.

“பேயை விடுங்க.. திருடனா இருந்தா..?” - எதிர்க் கேள்வி கேட்டார் அப்பா. எங்களது பதட்டத்தை ரசித்து நமட்டு சிரிப்பு சிரிக்கிற மாதிரியும் தோன்றியது.

டொக்.. டொக்..டொக்.. டொக்.. டொக்.. டொக்..

இதற்கு மேலும் தாள் திறவாமலிருந்தால் ஊரிலிருந்து வந்திருப்பவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடுமென.. அனைத்து விளக்குகளையும் எரிய விட்டு.. வெளிவாசல் லைட்டையும் போட்டு

“இதுக்குத்தான்.. மெயின் டோர்க்கு முன்னாடி கிரில் கேட் போடனும்னு சொன்னேன்.. இப்ப பாருங்க கதவ திறந்ததும் திருடன் தள்ளிக்கிட்டு உள்ள நுழையப் போறான். இந்த ஒட்டட குச்சி தான் இருக்கு.. எதுக்கும் நீ இதை கையில வச்சிகிட்டே கதவ திறடா.. - என்றேன்

“எது... நான் கதவ திறக்கனுமா? இதோடா.. போவியா” - என்றான்.

அப்பாவின் தைரியம் உலகப் ப்ரசித்தி.. சொந்தக்காரர்களாகத்தான் இருக்கும் என துணிந்து அசால்ட்டாக கதவை திறந்த அவர் உறைந்து போய் நின்றார்... என் கண்களையே நம்ப முடியவில்லை... அங்கே.. அங்கே.. யாருமே இல்லை. அப்பாவும் பயந்து விட்டார் என்பது அவரது கைகால்களின் நடுக்கத்திலிருந்து நான் கண்டு பிடித்தேன்.அப்பாவை பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமையாச்சே. எனவே

“அப்பா... பேசாம.. அப்டியே டக்குன்னு உள்ள வந்துட்டு.. டக்குன்னு கதவ மூடிடுங்க.. டக்குன்னு உள்ள வாங்கப்பா.. ம்.. சீக்கிரம்”.

(“டக்குன்னு” என்ற வார்த்தையை மொத்தம் மூன்று முறை உபயோகித்திருந்தேன்)

டக்குன்னு உள்ள வந்த அப்பா டக்குன்னு கதவை மூடி, மேல் கீழ், மற்றும் நடு, சைட் தாழ்பாள்களை போட்டுவிட்டு.. மேற்கொண்டு போட தாழ்ப்பாள்கள் ஏதும் இல்லாத பட்சத்தில்... சரோஜா தேவி மூடிய கதவுமேல் முதுகு சாய்த்து மூச்சு வாங்கி எக்ஸ்ப்ரெஷன் கொடுப்பதைப் போல ஓவர் எக்ஸ்ப்ரெஷன் கொடுத்தார்.

“என்னப்பா இது..?!!!!! பாட்டி நல்லவங்கதானே... நம்மள இப்டி சோதிக்கறாங்க..?”

அப்பா ஏதும் பேச முடியாமல் நாக்கு மேலண்ணத்தில் இருந்தது. பயத்திலிருக்கும் போது பதில்கள் வருவதில்லைதான்.

ஆனால் அந்த அமானுஷ்ய சத்தம் மட்டும் மீண்டும் வந்தது

டொக்.. டொக்..

(கவனிக்கவும்: நள்ளிரவு, ஆவி, அமானுஷ்ய சத்தம், டொக்.. டொக், தூரத்தில் நாய் குறைத்தது - அப்டீன்னு பேய் கதைக்கு வேண்டிய எல்லா வார்த்தைகளையும் போட்டு கதை எழுதி இருக்கேன்)

“பேசாம அம்மா, சித்தியை எழுப்பிடலாம்ப்பா.. தைரியமா இருக்கறவங்க அட்லீஸ்ட் ரெண்டு பேராவது கூட இருக்கணும்” - என்றேன் நான்.

சைகையாலேயே ஒப்புதல் அளித்தார் அப்பா. அம்மாவும் சித்தியும் எழுந்து விலாவாரியாக நாங்கள் விவரித்ததை கேட்டுக் கொண்டிருக்கும் போதே...

ரத்தத்தை உறைய வைக்கும்.. டொக்.. டொக்...

அவர்களும் ஒரு நிமிடம் ஆடித்தான் போனார்கள். அமைதி காக்கும்படி சித்தி சைகை செய்தார்கள்.

மீன்டும்.. அதே..மன்னிக்கவும்.. வேறு..டொக்..டொக்..

சித்தி நேராக அந்த ஹாலின் மறு மூலையிலிருந்த மாடிப்படி கதவை நோக்கிச் சென்றார்கள். நின்றார்கள். நாங்களும் அவர் பின்னாடியே சென்றோம்.. நின்றோம்..

அங்கேயும் டொக்.. டொக்.. டொக்

“பார்த்தீங்களா.. இங்கயும் அதே சத்தம்.. ப்ரம்மை”

“உங்க சித்தப்பா எங்கடி? என்றார்கள் சித்தி

“மேல தூங்கறாரு”

பேசாமல் கதவை திறந்தார்கள்.. அங்கே... அங்கே..அங்கே நின்று கொண்டிருந்தது.....வேற யாரு...சித்தப்பாவே தான்.

வள்ளலார் போல வெள்ளை வேஷ்டியை தலைக்கு முக்காடிட்டு, ஸ்வெட்டர், பாய் தலகாணி, எவர்சில்வர் சொம்பு, மஸ்கிட்டோ காயில், வத்திப் பெட்டி.. இன்னும் பல பொருட்கள் கைகளில் இருக்க.. வாயில் டார்ச் லைட்டை கவ்வி பிடித்தபடி நின்றிருந்தார். அவர் வாயிலிருந்த டார்ச் லைட்டை சித்தி பிடுங்கியதும் “கொசு கொஞ்சம் ஜாஸ்திதான்” என்றார்.

திருமணத்திற்குப் பிறகு அவரை அடித்து பின்னி தொலைத்துக் கட்டும் முழு உரிமை சித்திக்கு மட்டுமே ஆர்ஜிதம் செய்யப்பட்டதால்.. ஏதும் செய்ய இயலாமல் வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றோம் நாங்கள் மூவரும்.









Back to top Go down
 
~~ Tamil Story ~~ பௌர்ணமி பால் நிலா மற்றும் சித்தப்பா
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அவள், அவன் மற்றும் நிலா ~~ சிறுகதைகள்
» ~~ Tamil Story ~~ பசி
» Tamil story
» ~~ Tamil Story ~~ மழை
» ~~ Tamil Story ~~ வெள்ளப்பெருக்கத்தில்...

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: