BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in   ~~ Tamil Story ~~ கால் எழுத்து   Button10

 

  ~~ Tamil Story ~~ கால் எழுத்து

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

   ~~ Tamil Story ~~ கால் எழுத்து   Empty
PostSubject: ~~ Tamil Story ~~ கால் எழுத்து       ~~ Tamil Story ~~ கால் எழுத்து   Icon_minitimeTue May 03, 2011 4:09 am

~~ Tamil Story ~~ கால் எழுத்து



இதெல்லாம் உண்மையல்ல என்றே நினைக்க அவன் பிரியப்பட்டான். உண்மையல்ல என்றால் பொய். பொய் என்பதென்ன? பொய் என்பது நிழல். நிழலுக்கு உருவம் அத்தியாவசியம் அல்லவா? தமிழில் துணையெழுத்து போன்றது பொய். துணையெழுத்து தனியே அமையுமா?. துணைக்கால் எழுத்து.

தனியே அவனை நோக்கிப் பிய்த்து வீசப்பட்டது கால்தான். அது முற்றிய இரவு. நிலா அற்ற இரவு. ரயில் தண்டவாளத்தில் அவன் - அந்த இன்னொரு. அவன் நடந்து வருகிறான். நான் இரு தண்டவாளப் பாதை கருங்கல் குவியல்களுக்கு நடுவே. என்னைப்போல அவனும் மாதக்கடைசி எனும் பிசாசின் வாயில் அகப்பட்டவனா? பெண்களுக்கு மாதாந்திர உபாதை போல, ஆண்ஜென்மங்களுக்கு இது. கிழவன். தாறுமாறாக புதரிட்டிருந்த கன்னம். வெண்மை கருமை என முடிக்கற்றை. காவி வேட்டி. சட்டை முழுக்கைச்சட்டை. நான் அலுத்திருந்தேன்.

அவன் அந்நேரம் அங்கே கூட நடந்து வருவது எனக்குப் பிடிக்கக்கூட இல்லை. ஆனால் அவனில்லாத வெளி மேலும் அச்சுறுத்துவதாக இருந்திருக்கலாம். ஆ அவனே அச்சுறுத்தலாகிப் போனான்.

அவனுடன் பேச - அலுத்திருந்தேன்... முயற்சிக்கக் கூட இல்லை. பஸ்சுக்குக் - எரிச்சல் - காசில்லை. டிக்கெட் இல்லாமல் ரயிலேறி - ரயிலையும் காணவில்லை. இறங்கி நடக்க - அலுப்பு... ஆரம்பித்தேன். நேரமாகி விட்டது. சற்று பயந்தவன்தான் நான். ஒருவேளை ரயில் வந்துவிடும் - வரவில்லை... நடை. தண்டவாளத்தை விட்டு இறங்கி கல்லற்ற பாதையில் நடந்த சிறிது நேரத்தில் எனது இடப்பக்கமாய் அவனை - அந்த இன்னொரு அவனை - கிழவன்...

அவனைத் தண்டவாளம் வழியே நடக்க வைத்தது எந்த விதி தெரியாது. கையில் கழி. பிச்சைக்காரர்கள் கட்டாயம் கழி வைத்திருக்கிறார்கள். வழிமறிக்கிற ஆட்சேபிக்கிற தெருநாய்களை விரட்ட சௌகரியம். சற்று தூக்கக் கலக்கமாய்த்தான் இருந்தது. நினைவுகள் கனவுச்சாயை கொண்டிருந்தன. அலுப்பு வேறு. ரயில் வரா... அது - அந்தப் பொய் நடந்தது.

கழி அவனது மூன்றாவது கால் எனக் கூடக் கூட எட்டி வந்தது. நிஜக்காலுடன் தனியே கழி, சூம்பிய கால். பிச்சைக்காரன்... காரன், முந்தைய ஸ்டேஷனிலேயே ஒதுங்கிக் கொண்டிருந்திருக்கலாம். கடும் இரவில் நான் வீடு என்கிற சம்பிரதாயக் கூட்டுக்கு அலுப்புடன் போகிறேன். அதைவிட வியர்வையற்ற காற்றுப்போக்கான நல்லிடம் ஸ்டேஷன் பிளாட்பார ஓரங்கள். ஏன் நடக்கிறான் கிறுக்குப்பயல்... வேலை மெனக்கெட்டு.

சாவை நோக்கி நடந்திருக்கிறான்.

என்ன ஜரூர். தூக்கமாய்க்கூட அவன் இல்லை போல.

நகரத்தில் ஊர்நடுவே கூவம். மற்றும் தண்டவாளப் பூநூல். பூமிக்கு உபநயனம் செய்து வைச்சாப்போல. ரெண்டு பக்கமும் ஊர் கிடந்தாலும் ஒரு பக்கம் குடியிருப்புகள். மறுபுறம் முள்ளுக்காடு. சாக்கடை. குடிசை. யாராவது எந்த ராத்திரியிலும் குடிசைக்கு வெளியே தடுக்கு மறைப்பில் குளிக்கிறார்கள். யார் வரப் போகிறார்கள் என சில பெண்கள் அலட்சியக் குளிப்பு குளிப்பதும் காணக் கிடைக்கக் கூடும். பூப்சி ரப்பரை ஒட்ட வெச்சாப்போல விநோத உதடமைப்பு கொண்ட பன்றிகள். அவைகளின் விகார உருமல்கள். சாக்கடையை உழப்பித் திரிகின்றன. சில குடிசைவாசிகளை விடவும் சுத்தமாக.

வலது சிறு ஊடு பாதை. திடீரெனத் தவளைகள் முன்கிடந்து, அவன் கிட்டே நெருங்க துள்ளி கலவரப்... பிச்சைக்காரன் கவலையே படாமல் கழியை வீசி வீசி நடை போடுகிறான். பிச்சையெடுப்பதில் ஒரு சுதந்திர உணர்வு இருக்கத்தான் செய்கிறது. காலை திரும்பவும் இவன் வேலைக்கு ஓட வேண்டும். அந்தப் பிச்...

அவனை மற. யாரோ ஒருவன். கிழவன். ஓஹ். பிச்சைக்காரன். இருளில் தெரியவில்லை. எனினும் அருவருப்பானவனாக அங்கங்கள் குறுகியவனாக அவன் இருக்கவும் கூடும். காலும் அரைக்கால் என உரு சிறுத்திருக்கக் கூடும். காலே சிறுத்துப் போனான் அதற்கப்புறம்.

கற்பாதையில் வெளிச்சம் சீராக இல்லை. மூத்திரம் போய்க் காயாத மாதிரி சில இடங்களில் கருப்பு கட்டிய இருட்டு. சில இடத்தில் தௌ¤ந்து ஆனால் மூத்திர வாடை மாத்திரம் அடிக்கிறது. நாயொன்று எதையோ குதறியிழுத்து பல்தெரியச் அக் அக்கென சுவைக்கிறது. தேவையில்லாமல் அவன் மணி பார்த்துக்...

சத்தம். ரயில். தூக்கக் கலக்கத்தில் முன்பக்கமா பின்பக்கமிருந்தா எனப் பதட்டம். தண்டவாளங்களுக்கிடையே மண்பாங்கான பிரதேசத்தில் இருந்தாலும் அதன் அதிர்வுகள் துடிப்புகள் எப்போதும் அவனைக் கலவரப்படுத்தும். ஒவ்வொரு தடவையும் படுத்தும். அந்தப் பக்கம் வளைவான ரயில்ப்பாதை. இடுப்புப் பாதை. தண்டவாள பெல்ட். பயம். நின்று விடுவது நல் ... மூளை உதறியது. ஆ ஆ ஆ ஆ. அந்தக் கிழ... ரயில். பெரும் பசி... வீராணம் திட்டப் பெருங்குழாயில் இருந்து தண்ணீர் - வெளிச்சம் பீய்ச்சியபடி திருப்பத்தில் - பாம்பு, பெரும் வேகம், அவன் - ஊஊஊஊஊஊ - ஊமையின் ஊளை. மனிதக் குரலே அல்ல. ரயில்க்கூவல் தனி ரகம். ரயில் இவனைப் பார்க்க எடுத்த பயப் பேரதிர்வில் இவன் ஊஊஊளை கலந்து, பீய்ச்சியடித்த தண்ணீர் போன்ற வெளிச்சப் பாய்ச்சலில் அப்படியே... உட்கார்ந்தான். இவை பொய்கள். நினைக்கிறேன். அந்தக் கழி எட்டிவந்து என்னை நெற்றிப்பொட்டில் மோதியது. முட்டியது. சமாளிக்க முடியாமல் தள்ளாட்டம். விநாடிக்கும் குறைந்த நேரம் ஒரு - கால் - என் முன்னே ரத்தம் தெறிக்க வந்து, விழுந்து, எப்பா என்ன ஆட்டம். ஜி ஜி ஜி ஜிங்குசக்கா ஜினுக்குஜிக்கா. என்னவோ தாளம். என்ன குரூர ஆட்டம். காலுக்கு மாத்திரம் பைத்தியம் பிடித்திருந்தது.

அடித்துச் சுருட்டி வீசிவிட்டது ரயில். உடம்பின் பிற அவயவங்கள் எங்கெங்கோ... மளுக். காட்டு மிருகம் உணவெடுக்கிறது. வெளிச்சத்துக்குப் பயப்படாத காட்டு மிருகம் ரயில். நர மாமிசம்.

நடந்ததெல்லாம் பொய்தான். பெரிய அதிர்ச்சியுடன் உடல் நடுங்க ஓட ஆரம்பித்தான். பெருங் குளிரென பயம் பயம்ம்ம்ம் ஆட்டியது. கால் பேசுமா? பேசியது. என்னை விட்டுப் போகாதே. போகாதே. இது உண்மை. என்னைக் கூட்டிப் போ, என்று கூட நொண்டி நொண்டி ஓடி வந்தது கால். யாரோ பாண்டி விளையாடுகிறார்கள். யாருடன்? கிழவனுக்கு இந்த ராத்திரியில் என்ன ஆட்டம் வேண்டிக் கிடக்கிறது. ஓடிக் கொண்டிருந்தான்.

எனக்குத்தான் பைத்தியம் பிடித்திருக்கிறது. அதுவே உண்மை. நான் ஓடிக் கொண்டிருந்தேன். டயர்ச் சக்கரம் கழட்டிக் கொண்டாப் போல... திடீர்னு என் கால் எனக்கு முன்னே ஓட, நான் மடிந்து விழு... நாயொன்று தூக்கம் கலைந்த எர்ரிச்சலில் 247ல் ர்ர்ர் என ஒற்றை எழுத்து அதற்கு ஞாபகம் வந்தது. தமிழில் மீதி எழுத்துகள் எங்கே? ர் நாயின் பீதி எழுத்தா? பிச்சைக்காரனிடம் கழி... என்னிடம் இல்லை. பிச்சைக்காரனின் மூன்றாவது கால். நிஜக்கால். அது பொய்யானது நிஜம். கால் பேசியது. நானும் உன்னோடு வருகிறேன். அடம் பிடிக்கும் குழந்தை. ர்ர்ர். நான் பயந்தவன்தான். நாயே 'என்' காலைக் கடித்து விடாதே. நான் ஓட கால்கள் தேவை. சீ என்ற எழுத்து ஞாபகம் வந்தது. மீதி 246ஐ நான் மறந்து விட்டேன். ஆமாம் எனக்குப் பைத்தியம்.

செத்துப்போனான். ஒழுங்காக பிளாட்பார ஓரத்தில் அனந்த சயனம் கொண்டிருக்கலாம். கழி அல்ல, மந்திரக் கோல். சூ மந்திரக்காளி. கழியை விட்டெறிந்தான். என் நெற்றிப் பொட்டு தெரித்தது. நான் ஓடிக் கொண்டிருந்தேன். கூட காலே இல்லாமலே அவன் எப்படி என்கூட வந்து கொண்டேயிருக்கிறான். என்ன அவசர சரஅவ அரசவ நடை நடந்து போனான். பத்தடி முன்னே அவன் போனான். எனக்கு என்னவோ அவன் துணை திடீரெனத் தேவையாய் இருந்தது. பேசவில்லை. ஆனாலும் உருவசாட்சியாக அவன். நான் முடிந்த விரைவில் பின் தொடர்ந்தேன். மண்பாதை. கண்ட நாற்றமும் இருந்தது. இரவு. தூக்கக் கலக்கம். நான் ஓடிக் கொண்... நாய்கள் எங்கே... நிற்கிறேன். மூச்சிறைத்தது.

ரயில் வெளிச்சம். பெட்ரோமாக்ஸ். கிளைமாக்ஸ். கால் நடனம். உருண்டு புரண்டு டுண்புர அழுகிற குழந்தை. வியர்க்கிறது. மூச்சு முட்டுகிறது. என்ன பயங்கரமான பொய்யான இரவு. ரயிலின் மறுபக்கம் அவன் அறையப்பட்டு விழுந்... கால் கூட என்னிடம் அல்ல, அவனிடம்தான் பேசியிருக்கும். நான் பயந்... என்னிடம் ஏன் அது முறையிட வேண்டும்.

ஒருவேளை நான் செத்து, அவன் பிழைத்திருப்பானோ? காவி வேட்டி. முழுக்கைச் சட்டை நானா இது? கழி எங்கே? சூ மந்திரக் கழி. அது மோதிய கணம் நிகழ்வுகள் வேகம் பிடித்தன.

தெருவோரம். சற்று நீள காம்பவுண்டு சுவர்ப்பக்கம் ஒண்ணுக்கடித்தேன். என்ன அழுத்தமாய் வெளியேறியது. ரயிலின் மண்டைபோல என் ஆண்குறி. ஹா ஹா என மூச்... மூச்... மூச்சு வாங்கியது. ஹா.. என வாய் திறந்து மூச்சு விட்டேன். வியர்த்திருந்தது. க--ல்கள் வலித்தன.

... நான் இறந்த கணம் அது. ஒரு மனிதன். இல்லை பிணம் இப்போது. நான் பயந்தலறி ஓடி ஒளிகிறேன். என்னாயிற்று தெரியாது. நான் அவதானித்திருக்க வேண்டும். ரயில் நிற்காமல் போகிறது. டிரைவரும் தூக்கக் கலக்கத்தில் இருந்திருக்கிறானா? உயிரின் பயந்த ஊளை. அதுதான் மனிதனின் உண்மைக் குரல். மற்ற நேரம் மனிதர்கள் பாசாங்குக் குரலில் பேசுகிறார்கள். பொய்க்குரலில் பாடுகிறார்கள்.

ரயில் அந்தப் பிச்சைக்காரனை தாயக்கட்டையாக ஆடியது.

மற. அனைத்தையும் மற. போய்ப்படு. காலையில் சீக்... வீதி விளக்கு வெளிச்சத்தில் யா... அந்தப் பிச்சைக்... அவன் இறந்து விட்டதாக... பொய். சௌக்கியமா? - சிரிக்கிறான். எனக்கு இடது பக்கம். ஜோரான நடை. பேசாமல் போய்க் கொண்டிருந்தான். உண்மை. செத்தபின் பேச ஆரம்பிக்... கூட வந்திட்டிருந்தியே. தனியே விட்ட்டுப் போயிட்டா எப்டி? கால் மாத்திரம்... இல்லை. பொம்மலாட்ட பொம்மையாய் ஆடியபடி நின்றான். மூக்கு கூட சிறிது நசுங்கி, குஷ்டரோகி. வேட்டி காவி. இல்லை அது ரத்தம். வெத்திலைக் கறையோ.

நானும் கூட வர்றேன். என்னை விட்ட்டுப் போறியே. நான் திரும்ப ஓட ஆரம்பித்தேன். அப்ப நீ என்கூட வர நினைச்சே. நான் கவனிச்சேன். இப்ப என்னை மாத்திரம் நீ... ஓட ஆரம்பித்... நாய் துரத்தும் இந்தா. கழியை எறிகிறான். சூ மந்திரக் கழி. என்னால் உறங்க முடியுமா இன்று? விழித்திருக்கவும் முடியாது. எத்தனை நேரங் கழித்து கடை மூடினாலும் காலையில் தாமதமாகப்போக முடியாது. ஆமாம், ஹி... என்கிறான் பிச்சைக்காரன். உன்னைக் கேட்டனா? நீ ஏன் தொந்தரவு பண்றே? - என்னையும் கூடக் கூட்ட்டுப் போ. அழும் பிடிவாதக் குழந்தை. சூ மந்திரக் கழி. கோலாட்டம். பிறகு காலாட்டம். ஐயோ. தூங்க... உன்னால ஆமா முடியாது ஹிஹ்ஹி... உன்னக் கேட்டனாய்யா?

குப்பென்று விளக்குகள் அணைந்தன. ஐயோ வெளிச்சம்.... ரயில் வெளிச்சம் வேணுமா? ஹிஹ்ஹீஹி... துணைக்கு நான் கூட வர்றேன். பிறகென்ன பயம். நில்லு. ஏ நில்லு. பெருஞ்சிரிப்பு அருவருப்பு. இல்லை. விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. திடீரென பயத்தில் எனக்குக் கண்ணை இருட்டியிருக்கிறது. மூச்சிறைக்கிறது. நான் எங்கே போய்க்... என் வீடு எங்கிருக்கிறது? பிளாட்பாரத்திலேயே தூங்கி யிருக்க... என்னுடனேயா, ம்... சரி, வா. /சிரிக்காதே பொணமே/. நான் செத்தப்போ ரயில் டிரைவர் டாடா காட்டினான்.

தாள முடியாமல் நின்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஓங்கரித்து வாந்தி எடுத்தேன். தலை சுற்றியது. கையேந்தி பவன் பரோட்டா செரிக்காமல்... காலியோ காலியாய்த் தெரு. என்ன பயங்கரமான இரவு. நாயுங் கூட இல்லா இரவு. நடை தடுமாறியது. மாறியது. மாடுதறியது. யதுடுமாதறி. இதெல்லாம் தமிழா? எழுத்தை மறந்தவன் வார்த்தையே மறந்து விட்டதா... கிழவனும் இப்பிடி உடம்பைக் கன்னாபின்னா என்று உருக்குலைத்துக் - உருக்குறைத்துக் கொண்டு விட்டான். கிழவன். ழகிவன். வகிழன். கின்வழ. வன்ழகி. வழன்கி. எனக்கு என்னாச்சி. தூக்கம் வராது இன்றைக்கு. என்ன செய்யப் போகிறேன். இராத் தூக்கம் முழித்து காலையில் தூங்கி விட எனக்குக் கட்டுப்படியாகாது. தலை சுற்றியது. மளுக். அந்தப் பக்கம் ஓட இருந்தான். கால் மாத்திரம், தீபாவளி ராக்கெட், என் முன் ஜிங்கு ஜினுக்கு ... என்ன ரத்தத் தெறிப்பு. அவனின் குரல். ரயில் நிற்கவே இல்லை.

அட அந்தக் காட்சியைப் பார்க்க என் கூட யாருமே... நான் இருந்தேன் - ஹிஹீ... தலையை உதறிக் கொண்டான்.

அவன் வீடு மிதந்து அவனை நோக்கி வந்தது. தள்- கள் குடித்தாற் போல -ளாடி கதவைத் திற... விளக்கைப் போட்... படுக்கை யெங்கும் ரத்தம். ரயில் தண்டவாளம் போலக் கிடந்தது போர்வை. படுக்கையில், நிஜம். அந்தப் பிணம் கிடந்தது. நான் உன்னை மாதிரி இல்லை. என்னைவிட்டுட்டு நீ போனே. நான் உன்னை விட்டுப் போக மாட்டேன்.

திரும்பவும் வாந்தி வரும் போலிரு... ஓவென்று பெரிசாய் அழ... பிணம் அவனையே... நேரமாச்சி, வா என்னோடு படுத்துக்கோ.






Back to top Go down
 
~~ Tamil Story ~~ கால் எழுத்து
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story ~~ பரிச்சயக்கோணங்கள்
» ~~ Tamil Story ~~ வெள்ளப்பெருக்கத்தில்...
» Tamil story
» ~~ Tamil Story ~~ மழை
» ~~ Tamil Story ~~ பசி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: