BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதற்காலக் கவிதை: சில கேள்விகள், சில சித்திரங்கள் Button10

 

 தற்காலக் கவிதை: சில கேள்விகள், சில சித்திரங்கள்

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

தற்காலக் கவிதை: சில கேள்விகள், சில சித்திரங்கள் Empty
PostSubject: தற்காலக் கவிதை: சில கேள்விகள், சில சித்திரங்கள்   தற்காலக் கவிதை: சில கேள்விகள், சில சித்திரங்கள் Icon_minitimeSat Apr 10, 2010 1:12 pm

சமீபத்திய வருடங்களின் கவிதைப் பெருக்கத்தை யோசிக்கும்போதெல்லாம் திருச்சூர் பூரக் காட்சியும் மனத்தில் திரையீடாகும். இருபுறமும் யானைகள். அவற்றின் முதுகுகளில் முதுகு ஒன்றுக்கு இருவராக வண்ணக் குடைகளும் வெண்சாமரங்களும் பிடித்த மனிதர்கள். யானைகளுக்குக் கட்டியிருக்கும் பொன்முலாம் பூசிய பட்டங்கள் வெயிலில் மின்னுகின்றன. அந்த மினுக்கத்தால் வெயில் இன்னும் அதிகமாகப் பிரகாசிக்கிறது. யானைகளின் நேருக்கு நேரான வரிசைக்குப் பின்னால் பல வண்ண மக்கள் திரள். முன்னால் வெவ்வேறு வாத்தியக் கருவிகளுடன் ஏறத்தாழ இருநூறு கலைஞர்கள். வெவ்வேறு வாத்தியங்களிலிருந்து அவர்கள் வாசித்து எழுப்பும் வெவ்வேறு தாள ஒலிகள் ஒரே உயிரின் லயமாகக் கேட்கின்றன. சீரான ஒத்திசைவில் கலைஞர்களின் உடல்கள் இயங்குகின்றன. மக்கள் திரளின் பல்லாயிரம் கைகள் தாளத்துக்கு ஏற்ப உயர்ந்தும் தாழ்ந்தும் அசைகின்றன. உலகின் மிகப் பெரிய தாளவாத்தியக் கச்சேரியான பூரம் பஞ்சவாத்தியத்தின் உச்சக்கட்டம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. முத்தாய்ப்பான அந்தக் கட்டத்தில் எல்லா வாத்தியக் கருவிகளும் இயங்குகின்றன. ஒலியளவு செவியை அதிரச் செய்வதாகிறது. பிரதான மேளக்காரர்களில் ஒருவர் அத்தனை பரபரப்புக்கும் விமரிசைகளுக்கும் நடுவில் சகக்கலைஞரோடு உரையாடிக்கொண்டிருக்கிறார். அவரும் வாத்தியத்தைக் கொட்டியபடியே அதைக் கேட்டுப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். இருவரும் முகம் மலரச் சிரித்துக்கொள்கிறார்கள். ஒரு பெரும் நிகழ்வுக்குள் நடந்த இந்தக் குறுஞ்செயல் கவனத்தில் சாசுவதமாகத் தங்கிவிட்டது.

தமிழ்க் கவிதை பற்றிய சிந்தனையின்போது தவிர்க்க இயலாமல் இந்தக் கேரளச் சித்திரம் வந்து படரும். இதற்குத் தர்க்கரீதியான பொருத்தம் இருக்கிறதா என்று சந்தேகம் எழும். எனினும் ஏதோ ஓர் ஒற்றுமையை மனம் இனங்கண்டிருக்கிறது. இன்றைய கவிதைப் பெருக்கமும் அதன் செயல்களும் விவரித்த காட்சியுடன் ஒப்பிடக்கூடிய ஒன்றாகவும் தோன்றியிருக்கிறது. நூற்றுக்கணக்கான கவிஞர்கள் இருக்கிறார்கள். கவிஞர்கள் பரஸ்பரம் உரையாடிக்கொள்கிறார்கள். வெவ்வேறு கவிதைகளின் தனிக் குரல்கள் ஒன்று கலந்து ஒரே மொழியின் துடிப்பாகின்றன. இவையெல்லாம் ஒற்றுமைகள். வேற்றுமையும் இருக்கிறது. வாத்தியக் கலைஞர்களின் வாசிப்புக்கு எதிர்வினையாற்றும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். கவிதைக்கு வாசகர்கள் குறைவு. அல்லது இல்லவே இல்லை. கவிதை எழுதுபவர்கள், அதை வாசிப்பவர்கள் இருவரும் ஒரே பிரிவினராக இருக்கிறார்கள். புதிய நூற்றாண்டின் கவிதைகள் பற்றி யோசிக்கும்போது எழும் முதல் சித்திரம் இது.

n

நவீனத் தமிழ்க் கவிதை வெவ் வேறு கட்டங்களில் பெரும் அலை வீச்சாக எழுந்திருக்கிறது. எழுத்து பத்திரிகையின் வாயிலாக உருவான அறிமுக அலை. எழுபதுகளில் திரண்டு எண்பதுகளில் வீச்சடைந்த அங்கீகாரம். இவற்றைவிடத் தீவிரமாகவும் பரவலாகவும் கவிதை எழுந்தது தொண்ணூறுகளிலும் அதன் முத்தாய்ப்பாகப் புதிய நூற்றாண்டிலும். முந்தைய இருகாலப் பகுதிகளை ஒப்பிடும்போது மிக அதிக அளவில் கவிதைகளும் கவிஞர்களும் அறிமுகமாயிருப்பது கடந்த பத்து ஆண்டுகளுக்குள் என்று கருதுகிறேன். தொண்ணூறுகளுக்கு முன்பு வரையிலான கவிதைகளை வகைப்படுத்துவது எளிதாக இருந்தது. அபத்தமான பிரிவினை என்றாலும் அகவயமானவை, புறவயமானவை என்று பெரும்போக்காகச் சொல்லிவிட முடிந்தது. இன்று அது எளிதல்ல. புதிய கவிதைகளை வகைப்படுத்துவதென்பது தவளைகளைத் தராசிலிட்டு நிறுப்பதுபோல விநோதமாக முடியும்.

கவிதைப் பெருக்கத்துக்கான முகாந்திரங்களைச் சற்று யோசித்துப் பார்க்கலாம். இவை ஒரு கவிதைப் பயிற்சியாளனின் பார்வையில் தென்படுபவை. விமர்சன அடிப்படைகள் வலுவாகக் கொண்டிராதவை. கவிதைக்காரனாக என்னுடைய அக்கறைகள் கவிதையின் பிறப்பிலும் வளர்ச்சியிலும் செயலிலும் ஊன்றியவை. அதன் பிறப்புச் சான்றிதழில் அல்ல. அந்தக் கணிப்புகள் விமர்சகன் செய்ய வேண்டியவை. துரதிருஷ்டவசமாக இன்றைய கவிதைகளை நுட்பமாக உணர்ந்து அவற்றின் செழுமையையும் ஊனத்தையும் வரையறுத்துச் சொல்லும் விமர்சகன் இல்லை. இது புதிய கவிதைகள் பற்றிய சிந்தனையில் உருவாகும் இரண்டாவது சித்திரம்.

n

முந்தைய கவிதைகள் நகர்ப்புறக் கல்வி பெற்றவர்களின் பங்களிப்பாக இருந்தது. அதற்குப் பின்னர் ஒரு புதிய தலைமுறை கல்வியில் தேர்ந்து இலக்கியத்தில் செயல்பட ஆரம்பித்தது. அந்த எண்ணிக்கை இரண்டாயிரங்களில் அதிகம். கவிதை எழுதுவதும் எழுதிய கவிதையை இதழ்களில் வெளியிடுவதும் நூலாக அச்சியற்றுவதும் எளிதான செயலல்ல. கணிப் பொறியின் பயன்பாடு பரவலான பின்னர் இதழ் வெளியீடுகளும் நூல் தயாரிப்பும் இலகுவாயின. அண்ணா மறைவையொட்டி முதல் கவிதை எழுதிய கலாப்ரியாவுக்கு கவனத்துக்குரிய தொகுப்பு வர பாரதி நூற்றாண்டுவரை காத்திருக்க வேண்டியிருந்தது. இன்னொன்றையும் கருத்தில் கொள்ளலாம். அதுவரை எழுதப்பட்ட கவிதைகள் தளர்ச்சியான செய்யுள் தன்மையையும் பொருள் இறுக்கத்தையும் கொண்டிருந்தன. புதுக்கவிதை என்னும் வடிவமே மரபான வடிவத்துக்கு எதிரான கலகம் என எண்ணுகிறேன். அது உரைநடையில்தான் புதிய உணர்வின் வெளிப்பாடாக நிலை பெறுகிறது. செய்யுளைவிட உரைநடை அதிக ஜன நாயகத்தன்மை கொண்டது என்பதும் அதிக எண்ணிக்கையில் கவிஞர்கள் உருவாகக் காரணமாக இருக்கலாம்.

மேற்சொன்னவை கவிதைக்கான புறத்தூண்டுதல்கள் மட்டுமே. கவிதையை நிர்ணயிக்கும் அகத்தூண்டுதல் வேறு. நடுத்தரவர்க்கப் படிப் பாளிகளிடமிருந்து முந்தைய கவிதைகள் உருவாயின. அவை அல்லாத கவிதைகள் அரசியல் பிரச்சாரத்துக்காக எழுதப்பட்டன. புதிய நூற்றாண்டின் கவிதை வேறொரு தளத்திலிருந்து உயிர்த்தெழுந்தது. கல்வியறிவின் வெளிச்சத்துடனும் தமது இருப்பு நிலை பற்றிய விழிப்புணர்வுடனும் அறிமுகமான புதிய தலைமுறை கவிதைக்குள் பிரவேசித்தது. அதுவரை சொல்லப்படாத வாழ்வின் பாடுகளைச் சொல்ல முற்பட்டது. அதுவரை பேசப்பட்டிருந்த கவிதை மொழியைப் புனரமைத்தது. அதுவரை முன்வைக்கப்படாத நிலக் காட்சிகளைத் தீட்டியது. அதுவரை வெளியரங்கமாகாத மனக் கோலங்களைப் படரவிட்டது. இரண்டாயிரங்களின் கவிதையியலை இந்தப் புதிய தலைமுறை நிர்ணயித்தது. தனக்கு முன்னிருந்த கவிதைகளைப் புதிய கோணத்தில் பார்க்கவும் தனக்கு முன்பு கவிதையில் ஈடுபட்டவர்கள் தம்மைப் புதுப்பித்துக்கொள்ளவும் வலியுறுத்தியது.

பல கிளைகள் கொண்டது இரண்டாயிரங்களில் கவிதைக்குள் நுழைந்த தலைமுறை. தலித்தியம், பெண்ணியம், சூழலியல், பின்நவீனத்துவம் என்று விவாத வசதிக்காக இவற்றை வகைப்படுத்தலாம். இவை முன்வைக்கும் கவிதையியலின் கூறுகள் தமிழ்க் கவிதைப் பரப்புக்குள் முன்னரே மங்கலாக இடம்பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் தனது கவிதையியலுக்குள் பயிலாத ஒன்றை - அது வடிவமோ கருத்தாக்கமோ எதுவானாலும் ஒரு மொழி ஏற்றுக்கொள்வது அரிதெனத் தோன்றுகிறது. காரணம், மொழி கலாச்சாரத்தின் கொள்கலம். சானட் போன்ற ஆங்கிலக் கவிதை வடிவங்களையும் அந்நியப் பழக்க மரபுகளையும் தமிழ்க் கவிதை புறந்தள்ளக் காரணம் இதுதான். ஒரு நீக்ரோவின் உணர்வை நமது கவிதையியல் துலக்கமாக வெளிப்படுத்த இயலாது. ஆனால் பள்ளர்களின் வாழ்க்கையையும் நந்தனின் பதற்றத்தையும் உணரக்கூடிய சுரணையுள்ள மொழி அதை ஏற்று விரிவாக்கும். கடவுளின் விரிமார்பில் சேரத் தவிக்கும் தடமுலைகளைப் பேசக் குரல்கொடுக்கும் மொழி பெண்ணின் இருப்பை மதிக்கும். காமத்தையும் உடலெழுத்தையும் அங்கீகரிக்கும். இயற்கையை ஆராதிக்கும் கவிதையியல் சுற்றுச்சூழல் அக்கறைகளுக்கு வழிகோலும். கவிதையியலின் கலாச்சார இயல்பு இது என்று வரையறுக்கலாம். எனினும் கவிதை எப் போதும் மாமூல் கருத்தாடல்களுக்கு எதிரானது. அது அதிகம் வெளிப்பட்டது தற்காலத்தில் என்று பெருமிதப்படலாம். இந்த எதிர்க்குணமே கவிதையின் பெருக்கத்துக்குக் காரணியாக இருக்குமா? மூன்றாவது சித்திரத்தை மிளிரச் செய்யும் கேள்வி இது.

n

இந்தக் கிளைகள் ஒரு புறம். கூடவே எழுபது ஆண்டுக் காலமாக உருவாகி வளர்ந்த புதுக்கவிதையின் முதன்மைப் போக்கிலுள்ள கவிதைகளும் இரண்டாயிரங்களில் மாற்றமடைந்தன. நவீனத்துவம் என்ற அடையாளத்திலிருந்து விலக்கிப் பின்நவீனத்துவம் என்ற அடையாளத்துடன் விவாதிக்கப்படுகின்றன. இந்த அடையாளம் மேம்போக்கானது என்று கருதுகிறேன். தவிர இன்றைய உலகமயமாக்கலின் செல்லக் கருத்தாகவும் இந்த அடையாளம் மாறிவிட்டது. தொலைபேசியைப் பயன்படுத்துவது நவீனத்துவம். கைத்தொலைபேசி உபயோகிப்பது பின்நவீனத்துவம். உண்மையில் கவிதையின் நிரந்தரமான கோரிக்கை நவீனமாக - புதுமையாக - இருப்பது. எந்தக் கருத்தாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துவது, படிமம் போன்ற முந்தைய கவிதை அணிகளைத் துறப்பது, உரைநடைத் தன்மையிலேயே கவிதையை எழுதுவது, கடவுள் - சாத்தான் என்ற எதிரீடுகளில் இருவரையும் ஒன்றாக்குவது, மதிப்பீடுகளைக் கலைத்துப்போடுவது என்று பின்நவீனக் கவிதைக்குச் சொல்லப்படும் இலக்கணங்கள் எல்லாக் காலத்தையும் சேர்ந்த கவிதைக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. நம்முன் இருக்கும் படைப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் உருவாக்கப்பட்ட கருத்தாடல் என்றும் படுகிறது. இதை ஒதுக்கிவைத்து விட்டுப் பின்நவீனத்துக்கு நம்மிடையே இருக்கும் படைப்புகளை முன்னிறுத்தி மாற்றான வரையறைகளைக் கண்டடையலாம். இவை என் வாசிப்பிலிருந்து தொகுத்துக் கொண்ட வரையறைகள். இதன் மூலம் இன்றைய கவிதைகளை மேலும் விரிவான பின்புலத்தில் காண விரும்புகிறேன்.

ஒவ்வொரு பதிற்றாண்டிலும் மொழி மாறுகிறது. இந்த மாற்றம் புனைகதைகளை அதிகம் பாதிப்பதில்லை. ஏனெனில் அதில் ஓர் அனுபவப் பதிவோ கதையாடலோ நிகழ்கிறது. சரியாகச் சொன்னால் புனைகதை ஓர் அனுபவத்தை அதன் பின்னணித் தகவல்களுடன் வரலாறாக மாற்ற முனைகிறது. கவிதை ஓர் அனுபவத்தைக் காலத்தின் படிம மாக மாற்ற முற்படுகிறது. நிகழ்கால மொழியில் படிமமாக்கலை எந்தக் கவிதையியல் நிறைவேற்றுகிறதோ அதைப் பின்நவீனத்துவக் கவிதை என்று அழைக்க விரும்புகிறேன். இந்தப் படிமமாக்கலில் அதுவரை இருந்த தேய்வழக்குகள் உதறப்படுகின்றன. காட்சிகள் மாற்றமடைகின்றன. விலக்கப்பட்ட வாழ்க்கையின் பண்பாட்டுக் கூறுகள் கவிதையின் அலகுகளாகின்றன. பல தொனிகளில் வெளிப்படும் குரல்கள் கவிதை மொழியின் சாரமாகின்றன. குறிப்பாகக் கோட்பாடுகளின் உதாரணமாக அல்லாமல் மனித மனத்தின் - மனித இருப்பின் எல்லாக் கோணங்களையும் எந்தப் பார்வை சித்தரிக்க முனைகிறதோ அதைப் பின்நவீனத்துவக் கவிதை என்று சொல்ல விரும்புவேன். இதற்கான சான்றுகளைக் கவிதைமீது கவனமுள்ள வாசகரால் எளிதில் இனங்காண முடியும். இது தற்காலக் கவிதை எனக்குள் விரிக்கும் நான்காவது சித்திரம்.

n

ஈழக் கவிதைகளைக் குறிப்பிடாமல் தற்காலத் தமிழ்க் கவிதையின் சித்திரம் முழுமையடையாது. கடந்த மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்துக் கவிதைகள் தமிழகக் கவிதைகளையும் தமிழகக் கவிதைகள் ஈழத்துக் கவிதைகளையும் பாதித்துவந்திருக்கின்றன. இரண்டு நிலைகளில் இந்தப் பாதிப்பு செயலாற்றியிருக்கிறது. ஒன்று: அரசியல் சார்ந்து. மற்றது: பெண்மொழி சார்ந்து. ஈழத்துக் கவிதைகளின் செல்வாக்கில்லாமலிருக்குமானால் தற்காலக் கவிதையியலில் அரசியல் விவாதத்துக்கான தருணங்கள் இல்லாமலிருந்திருக்கும். நவீனத் தமிழ்க் கவிதை அரசியலைத் தீண்டத்தகாததாகவும் அரசியலை மையப்படுத்தி எழுதப்படும் கவிதைகளைப் பிரச்சாரக் கவிதைகள் என்றும் ஒதுக்கியேவைத்திருந்தன. அவசரநிலைக் காலம் பற்றித் தமிழில் எழுதப்பட்ட சீரிய கவிதை ஒன்றே ஒன்று மட்டுந்தான் என்பது இந்த இலக்கிய விலக்கைப் புரியவைக்கும். போருக்குள் நிகழும் வாழ்வு பற்றிய ஈழத்துக் கவிதைகள்தாம் தமிழ்க் கவிதைக்குள் அரசியலுக்கான இடத்தை உறுதிப்படுத்தின. பெண் நிலையில் வாழ்வை எதிர்கொள்ளும் பார்வைக்கும் ஈழத்துக் கவிதைகளிடம் கடன்பட்டிருக்கிறோம். சொல்லாத சேதிகள் என்னும் தொகுப்பு தமிழ்க் கவிதையியலில் உருவாக்கிய அதிர்வுகளின் பின்விளைவுகள் காத்திரமானவை.

இந்தப் பாதிப்புகளின் ஸ்தூல அடையாளங்களைத் தற்காலக் கவிதையில் எளிதில் காணலாம். ஈழத் தமிழின் சொல்வழக்குகள் பலவும் எந்தத் தடையுமின்றித் தமிழ்க் கவிதைகளில் பயன்படுத்தப்படுவதையும் மறுபக்கத்தில் தமிழ்க் கவிதைச் சொற்கள் ஈழக் கவிதையில் புகுந்திருப்பதையும் உணரலாம்.

n

கடந்த பதிற்றாண்டில் வெளியாகியிருப்பனவற்றில் கவிதை நூல்களே கணிசமாக இருக்கும். இதழ்களில் வெளியாகும் கவிதைகளைவிட மும் மடங்குக் கவிதைகள் இணையத்தில் வெளியாகின்றன. இந்தக் கவிதை வெளிப்பாட்டின் நோக்கங்களும் வெவ்வேறு. சிலருக்கு அது ஓர் அடையாள அட்டை. அதைப் புனைகதைக்கான ஒத்திகைச் சீட்டாகப் பயன்படுத்தலாம். திரைப் பிரவேசத்துக்கான கடவுச்சீட்டாகக் கொள்ளலாம். அரசியலில் எந்தப் பங்களிப்பும் செய்யாத ஒருவருக்குக் கௌரவப் பதக்கமாகலாம். இலக்கியத்தில் அதிகாரம் செலுத்தக்கூடிய மாய நாற்காலியாகலாம். எதிர் பாலினரை வசீகரிக்கும் ஒப்பனையாகலாம். இதுவும் பின் நவீனத்துவச் செயல்பாடுதான். பாவம், தமிழ்க் கவிதை. இத்தனை நோக்கங்களுக்கும் அது ஈடுகொடுக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாக இப்படித்தான் ஈடுகொடுத்திருக்கிறது. சீட்டுக்கவியாக, ஆருடக் கருவியாக, பரிசல் இரக்கும் பாத்திரமாக, தற் பெருமையை அறைந்துசொல்லும் முரசாக, கடவுளின் பல்லக்காக என்று பலவிதமாக ஈடுகொடுத்த மரபில் அவற்றையெல்லாம் மீறி வாழ்வின் கணங்களை நிரந்தரப்படுத்தியும் மனத்தின் உள் ஆழங்களைத் திறந்து காட்டியும் மனித இருப்பின் சிக்கல்களை ஆராய்ந்தும் விரிந்த சுதந்திர வானத்துக்காக வேட்கை கொண்டும் கவிதை தொடர்ந்து உயிர்ப்புடன் இருந்துவருகிறது. தற்காலப் பெருக்கத்தில் அது எங்கே என்று கண்டடைவதுதான் இரண்டாயிரங்களில் கவிதை வாசகன்முன் நிற்கும் சவால்.
[b]
Back to top Go down
 
தற்காலக் கவிதை: சில கேள்விகள், சில சித்திரங்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 38. சித்திரங்கள் பேசின!
» ~~ Tamil Story ~~ கேள்விகள்
» Beauty Tips - அழகுக் கேள்விகள்
» ~~ராஜராஜ சோழன் - நெஞ்சில் உறுத்தும் கேள்விகள்!~~

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: