BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஒரு பன்னீர் ரோஜாப்பூ ~~ சிறுகதைகள் Button10

 

 ஒரு பன்னீர் ரோஜாப்பூ ~~ சிறுகதைகள்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

ஒரு பன்னீர் ரோஜாப்பூ ~~ சிறுகதைகள் Empty
PostSubject: ஒரு பன்னீர் ரோஜாப்பூ ~~ சிறுகதைகள்   ஒரு பன்னீர் ரோஜாப்பூ ~~ சிறுகதைகள் Icon_minitimeFri Mar 25, 2011 3:16 pm

ஒரு பன்னீர் ரோஜாப்பூ ~~ சிறுகதைகள்



கண்விழிக்கும்போதே சுப்புலட்சுமிக்கு தலை வெடித்துவிடும்போல வலித்தது. இரவு எந்த நினைவுடன் தூங்கினோம் என யோசிக்கும் நொடியில் ரகு நினைவில் தோன்றினான். அவன் நினைவு தோன்றியது என்று நினைப்பது அபத்தம், தூக்கத்திற்கும் விழிப்பிற்குமான இடைவெளியை கோர்ப்பதற்கான தாமத நொடிதான் அவனை மறந்தது.

இல்லை என்றால் அவனை மறுப்பதேது? இன்றுடன் பத்து நாளாயிற்று தொடர்பு கொண்டு. எங்கே இருக்கிறான், என்ன செய்கிறான், எந்தத் தகவலும் இல்லை. "அவன் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்று என்னை அதிகமாக வருத்திக் கொள்கிறேனா?" தன்னை ஒரு கழிவிரக்கம் சூழ்வதைக் கவனித்தாள். எப்போதும்போல அவன் ஒரு வார்த்தை பேசினால் போதும் என்று மனம் தீரா தாகத்துடன் அலைந்தது. இந்த அழுத்தம் தாங்க முடியாமல் கலையைப் பார்க்கப் போனபோது, "எப்பவுமே துக்கமாவே இருக்குடி. எவ்வளவோ நிம்மதியா இருந்தோம்? என்ன இழவுக்கு இந்த காதல் எல்லாம்? கார்த்திகை கடைவீதியில் மணி, வளையல் வாங்கினா எவ்வளவு சந்தோஷம்? கிட்டி வாசலில் சாமி, தெப்பம் பார்க்கிறது, மலை சுத்தறதுன்னு எவ்வளவு சந்தோஷம்? செல்போன் வந்து எல்லாம் ஒழிஞ்சது. மலையில் விளக்கு பூக்கிற நேரம், போன் வருமான்னு பார்த்துகிட்டு இருந்தேன். நிம்மதியே போச்சு!" என்று புலம்ப புலம்ப இன்னும் அழுத்தமாக இருந்தது.

"ஏதாவது பேசித்தொலைடி! பேசாம செல்போனை தூக்கிப் போட்டுட்டு மலைசுத்தப் போலாமா?" என்றாள். அது அவ்வளவு சுலபமா என்ன? எல்லா முன்முடிவுகளையும் ரகு தகர்த்து நாளாகிவிட்டது. மனசு, மூளை எதுவும் தன்னியல்பாய் செயல்படுவதே இல்லை.

இன்று அவனை எப்படியாவது பிடித்துவிடவேண்டும். அந்த முகத்தை பார்த்துவிடமுடிந்தால் போதும். அவள் பரபரப்புடன் தயாரானாள். அவனுக்குப் பிடித்த வெண்மைநிற ஆடையை எடுத்தாள். அவளுக்குப் பிடிக்காத வண்ணம் அது. ஆனால் இப்போது அவள் அரை எங்கும் வெண்மை. மனம் ஈடுபடும்போது ஒரு ஆளுமை படிப்படியாய் தீவிரத்தை செலுத்த ஆரம்பித்துவிடுகிறது.

சுப்புலக்ஷிமியை பார்த்ததும் அம்மா, "எங்க உலா கிளம்பியாச்சி. இன்னைக்கு உங்கக்கா வருவாள்." என்று சிடுசிடுத்தாள். வய‌தில் முதல் எதிரி அம்மாதான். அப்பா 'காலையில் அவளைத் திட்டாதே, அவள் யோசிக்கட்டும்" என்றார். அப்பாவின் மேலிருந்து வழியும் கருணையும் மென்மையும் குற்றவுணர்வைத் தந்தது. அக்கா திருமண செலவில் இருந்து, இன்று அவள் வந்து போனால் தரும் மஞ்சள் குங்குமப் பணம் வரை சுப்புலக்ஷ்மிக்காக என்று பாங்கில் ஒரு தனி அக்கவுண்டில் கட்டுகிறார். அவருக்காகவாவது அக்காவின் மைத்துனரைக் கல்யாணம் செய்துகொண்டால் நன்றாகத்தான் இருக்கும்.

அம்மா, "எக்கேடும் கேட்டு ஒழிங்க எல்லோரும் " என்று பையுடன் வெளியில் போனாள். சுப்புலட்சுமி வெளியில் கிளம்பும்போது நினைவு வந்தவளாய், "அப்பா. ட்டீ குடிச்சியாப்பா?" என்றாள். அவர் மென்மையாய் சிரித்துக்கொண்டே, "இல்லடா, அம்மா கோபமா இருந்ததால் ட்டீ கேன்சல்" என்றார். அவள் உள்ளே போய் ட்டீ போட்டபோது அப்பா பின்னால் நின்றார். அவள் அவர் முகத்தை தவிர்த்துக்கொண்டு அடுப்பில் அதி கவனமாக இருந்தாள்.

"வாழ்க்கைக்கு எது நல்லதுன்னு மட்டுமே நம்மால் யோசிக்க முடியாது சுபு. நாம் மனசு கொண்டு வாழறவங்க. உனக்கு எது வேணும்னு பாரு. முடிவு பண்ணப்புறம் ஒருநாளும் அதுக்காக வருத்தப்படாதே! குற்றவுணர்வா பீல் பண்ணாதே. முகம் வாடிக்கிடக்கு தலைவலியில்". சுப்பு என்று அழுத்தி கூப்பிட மாட்டார், சுபுதான்.

ரொம்பவும் மென்மையாய் அவர் தன்னை சுதந்திரத்தை நோக்கி தீவிரமாய் செலுத்திவிட்டார் என்று தோன்றியது. மனம் ஒன்றைப் பிடித்துக்கொண்டு அதற்கான எல்லா நியாயங்களையும் கற்பித்துக் கொண்டுவிடுகிறது. இதோ இப்போது ரகுவை விடமுடியாத, அவன் மூர்க்கங்களை, அதனால் ஏற்படும் வலிகளை, அப்பாவின் வளர்ப்பினோடு நியாயப்படுத்திக்கொள்வது போல.

சுப்புலட்சுமி வியர்க்க விறுவிறுக்க தெருமுனை தாண்டும்போது அக்கா, மாமாவின் பார்வை கூர்மையாய் அளந்தது. இத்தனை நாள் இருந்த அன்னியோன்யம் சமீப காலங்களில் மாறி இருந்தது. அக்காவிடம், "என் தம்பியைப் பிடிக்கலையா? என்னவோ திருட்டுத்தனம் பண்றா" என்றதில் இருந்து அவரிடம் ஓட்ட முடிவதில்லை. ஒரு காதல் இதுநாள் இருந்த எத்தனை உறவுகளை, வாழ்க்கை முறையை மாற்றிப் போட்டு விடுகிறது.

"சுப்பு" என்று ஹரி கழுத்தை கட்டிக்கொண்டான். அந்த மெத்தென்ற குழந்தைத்தனம் ரகுவை நினைவூட்டியது. அவனைப் பார்த்தேயாகவேண்டும் என்று தவிப்ப்பு ஒரு குழந்தையைத் தொலைத்துவிட்டு தேடும் தாயைப்போல தன்னை அலைக்கழிப்பதை உணர்ந்தாள்.

"நீ வீட்டுக்குப் போக்கா வந்துடறேன்" அக்கா வண்டியில் ஏறினபின், கண்ணாடியில் கவனிக்கும் கணவன் உணராதவாறு அவளிடம் ப்ளீஸ் என்றாள்.

எதற்கு ப்ளீஸ், வீட்டுக்கு வருவதற்கா அல்லது கல்யாணத்திற்கா என்று யோசித்து சிரிப்பதைத் தவிர்த்தாள்.

ரகுவின் ரூம் பூட்டி இருந்தது. கண்டிப்பாக இருப்பான் என்று எந்த நம்பிக்கையில் வந்தோம் என்று மனம் பொங்கியது. வீடு பூட்டிக்கிடக்கிறது என்பதாய் வராண்டாவெங்கும் தூசு மண்டிக்கிடந்தது. என்ன செய்வது என்ற திகைப்பும் வேதனையும் பெருகியபோது, "நம் இடம்" என்று செல்போனில் மேசெஜ்ஜ். ஒருகணம் தேடியது கிடைத்த ஆசுவாசத்தில் கோபம் எகிறியது. போகாமல் விட்டுவிட்டால் என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே ஆட்டோவில் ஏறி இருந்தாள்.

வெயில் ஏற ஆரம்பித்த இளம் சூட்டைப் பற்றி கவலைப்படாமல் ரகு பீச்சில் படுத்திருந்தான். சுப்புலக்ஷ்மிக்கு கோபமும், ஆற்றாமையும், துக்கமும் பொங்கியது.

"ஏண்டா இப்படி பண்ற என்னை?" என்று கதறி அழ நினைத்தாள். ஒரு குழந்தையைப் போல் அவளைப் பார்த்து களங்கமின்றி சிரித்தான். அவள் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

தொடர்ந்து அவள் முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தான். சில நிமிடங்களில் ரகுவின் முகம் பூரண நிம்மதியுடன் ஒளிர்ந்தது. அந்த முகமும் அதன் நிம்மதியும் அவளுள் இறங்கி தானே எடையற்று போவதுபோல் உணர்ந்தாள்.

ரகு பக்கவாட்டில் திரும்பிப் படுத்தான். அவள் பாதத்தில் கையை படிமானமாய் வைத்தான். சுப்புலட்சுமி பதறி காலை இழுக்க முயன்றபோது அவன் கை முரட்டுத்தனமாய் அவளை அனுமதிக்க மறுத்தது. அவள் தன்னை தளர்த்தி அனுமதிக்கும்வரை அவன் பிடி இறுகி இருந்தது. நகரமாட்டாள் என்று உறுதியானதும் அவன் பிடியைத் தளர்த்தி கையை பாதத்தில் எளிதாகப் போட்டுகொண்டான். சுப்புலட்சுமி அவனை நன்றாக திரும்பிப் பார்த்தபோது சீரான மூச்சோடும், இந்த உலகில் கவலைப்பட எதுவுமில்லை என்று நிம்மதியோடும் உறங்கி இருந்தான்.

அவன் கையிற்கும் அவள் பாதத்திற்கும் இடையில் கிடந்த சிறுமணல் அவளை உறுத்தவில்லை.








Back to top Go down
 
ஒரு பன்னீர் ரோஜாப்பூ ~~ சிறுகதைகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
»  அப்பத்தா ~~ சிறுகதைகள்
» ~~ வசை ~~ சிறுகதைகள்
» தண்டனை ~~ சிறுகதைகள்
» வயது 34 ~~ சிறுகதைகள்
» குரங்கேற்றம் ~~ சிறுகதைகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: