பிறப்பின் முன்பும் அறியோம்,
இறந்த பின் ஆவதும் அறியோம்,
இருப்பது சொற்ப நாளே
அது மட்டும் திண்ணமாகும்.
ஓடும் புளியம் பழமுமாய்,
வாழ்ந்திடல் கடினமிங்கே,
பற்று வைத்துப் பாசம் காட்டி,
பின் ரத்த விளாறாய்
இதயம் பிளக்கத் தோன்றிடும்
இழப்புக்கெல்லாம் காலமே
மருந்தாம் இங்கே,
கரைகின்ற நாட்களிலே உடல்
காயமது மறைந்துவிடும்
கோபத்தில் சிந்திய வார்த்தைகளும்
நீர்க்கக் கூடும் - தொலைத்த
இழப்புக்கள் மீண்டு வரா,
அனுபவத்தில் நோப்பட்டுத்
தெரிந்ததனால் சொல்கிறேன்....
இன்று கொட்டி நாளை அள்ளி
இன்று முறுகி நாளை சிரித்து,
வதை படும் மனங்களுடன்
எதற்கிந்த நோக்காடு,
வார்த்தைகளைச் சிந்தாதீர், பின்
சிந்தித்துப் பயனில்லை,
நாளை என்பது நிச்சயமாய்
நம் கையில் இங்கில்லை,
இன்றே செய்வோம்
அதை நன்றே செய்வோம்
வாருங்கள் தோழர்களே