தேவதை..
நாத்திகம் பூசாத என் கனவுகளில்
நேற்றும் அந்த தேவதை வந்தாள்
ஒவ்வொரு முறையும்
இறக்கையைப் பார்த்துதான்
அவள் தேவதையென்பதை உறுதிசெய்கிறேன்
எங்கிருந்து வந்தாள்?
எதற்காக வந்தாள்?
எதையுமே கேட்டதில்லை
அவளும் சொன்னதில்லை
பார்த்த முகமாக இல்லை
ஆனால் அவள் முகம்
பார்த்துப் பழக்கப்பட்ட முகம்
வேடிக்கை தவிர
வேறொன்றும் பார்த்ததில்லை
விண்மீன் பார்க்கும் பரவசம்தான்
அவளைப் பார்க்கும் கணமெல்லாம்...
காதலுமில்லை கலவியுமில்லை
இந்த உறவுக்கு இன்றுவரை
எந்தப் பெயருமில்லை
ஒன்று மட்டும் சொல்வேன்
அவளோடிருந்த இரவுகளனைத்தும்
பிரகாசமாயிருந்தன...
அவள் இல்லாது
புலரும் பொழுதுகளில்
மீண்டும் கவ்விக்கொள்கிறது இருள்!
- நான் ரசித்த கவிதைகளுடன்.... ப்ரியமுடன்