நரைத்து விட்ட
ஞாபகத்தின்
நாடி தொட்டுப் பார்க்கிறேன்..
நேற்று வரை
நடந்து வந்த
கால்தடத்தைப் பார்க்கிறேன்..
வேதனைகள்
சோதனைகள்
வித விதமாய்ப் பார்க்கிறேன்..
வானில் மட்டும்
அதே
ஓவியங்கள்
வியப்புடனே பார்க்கிறேன்..!
வாழ்ந்த வரை
வாழ்க்கை எங்கே
தேடித் தேடிப் பார்க்கிறேன்..
கால் தடுக்கி
விழுந்த இடம்
காணவில்லை வேர்க்கிறேன்...!
சிரிப்பொலிகள்
அழுகுரல்கள்
காதில் விழக் கேட்கிறேன்..
நியாயமில்லா
வாழ்க்கை தன்னை
நினைத்து நினைத்துப்
பார்க்கிறேன்..!
நாணயமே இல்லாதார்
பை நிறைய
நாணயம்..
நாணயமாய் வாழ்பவனை
நகைக்கிறது
ஆணவம்...!
பொதுநலத்தின்
பின்னணியில்
சுயநலத்தின் சுவடுகள்..
சுய நலத்தின்
கௌரவத்தில்
சோரம் போன கொள்கைகள்..!
உலக மகா
தத்துவங்கள்
உரக்க உரக்க பேசுவார்..
ஒன்றிரண்டை
தப்பித்தவறி
ஒப்புவித்தால் ஏசுவார்..!!
தனக்கென்றால்
தலைவலி..
அதுவே பிறர்க்கு
தலைவிதி..!!!