காலாவதி மருந்து மோசடி வழக்கு விசாரணை மாற்றம் : சி.பி.சி.ஐ.டி., போலீஸ் வசம் ஒப்படைத்தது அரசு
ஏப்ரல் 04,2010,00:00 IST
சென்னை : காலாவதி, போலி மருந்துகளை தமிழகம் முழுவதும் சப்ளை செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து, பொதுமக்களின் உயிருடன் விளையாடிய மோசடிக் கும்பல் வழக்கு, சென்னை போலீசாரிடமிருந்து சி.பி. சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது. இன்று முதல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையைத் துவங்குகின்றனர். போலி மருந்துகள் தயாரித்தும், காலாவதி மருந்துகளின் லேபிள் களை தேதி மாற்றம் செய்தும், புதியது போல் தயாரித்தும் தமிழகம்முழுவதும் விற்பனைக்கு அனுப்பிய சம்பவம், மக்களை அச்சமடைய வைத்துள் ளது.
போலி, காலாவதி மருந்துகள் மூலம் பொதுமக்களின் உயிருடன் விளையாடிய சென்னையைச் சேர்ந்த மோசடி மன்னன் மீனாட்சி சுந்தரம், போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். கடந்த 26ம் தேதி திடீரென ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் சரணடைந்தார். போலீசார் எட்டு பேரை கைது செய்தனர். மேலும், ஐந்து பேர் கோர்ட்டில் சரணடைந்தனர். மீனாட்சி சுந்தரத்தை கொடுங்கையூர் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக நடந்து வரும் விசாரணையில், மோசடிக் கும்பல் போலி, காலாவதி மருந்துகளை விற்பனைக்கு அனுப்பி 400 கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளது தெரிய வந்துள்ளது.
தமிழகம் மட்டுமின்றி, டில்லி, கர்நாடகா, புதுவை உள்ளிட்ட பிற மாநிலத்திற்கு மருந்துகளை அனுப்பியது தெரியவந்துள்ளது. மங்களூரைச் சேர்ந்த, 'ஸ்ரைடஸ், கிராண்டிக்ஸ்' மருந்து நிறுவனங்களைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வந்தனர். இவர்களுடன் போலீசாரும், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளும் சென்னையில் பல்வேறு நிறுவனங்களில் சோதனை நடத்தினர். 'ஸ்ரைடஸ்' நிறுவன தயாரிப்புகளில் பேட்ச் எண்கள் போலியானது என்பதும், அவற்றில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் போலியானது என்பதும் உறுதி செய்யப்பட்டது.
மீனாட்சி சுந்தரத்துக்கு உடந்தையாக இருந்த சஞ்சய் குமார், பிரதீப் சோர்டியாவையும் போலீசார் விசாரிக்க உள்ளனர். மோசடிக் கும்பலுக்கும் வெளிமாநில மருந்துக் கம்பெனிகளுக்கும் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கிடுக்கிப்பிடி விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், சங்கிலித் தொடர்போல அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. விசாரணை முடிந்து மீனாட்சி சுந்தரம் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இந்நிலையில், தமிழக மக்களின் உயிருடன் விளையாடிய காலாவதி, போலி மாத்திரை மோசடி வழக்கை நேற்று திடீரென சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி., லத்திகா சரண் உத்தரவு பிறப்பித்துள்ளார். டி.ஜி.பி., வெளியிட்டுள்ள உத்தரவில், 'கொடுங்கையூர் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, கூர்மையான புலன் விசாரணைக்கு ஏதுவாக, தற்போது, இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப் பட்டு விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்துவார்கள்' என, கூறப்பட்டுள்ளது.
சிக்குகிறார் பெண் இயக்குனர்! இ.எஸ்.ஐ., மருத்துவ இயக்குனராக பணியாற்றியவர் எழிலரசி. மருத்துவமனைக்கு தேவையான மருந்துகளுக்கு ஆர்டர் தருவதற்காக மருந்துக் கம்பெனி பிரதிநிதியிடமிருந்து 4.5 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றபோது, கடந்த ஆகஸ்டில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார். பதவியில் இருந்த காலத்தில் குறிப்பிட்ட மருந்துகளை, குறிப்பிட்ட நிறுவனங்களில்தான் வாங்க வேண்டுமென உத்தரவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. தற்போது போலி மருந்து, காலாவதி மாத்திரைகள் சப்ளை செய்து மோசடியில் சிக்கியுள்ள கும்பலுக்கும், எழிலரசிக்கும் தொடர்பிருப்பிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே, லஞ்ச வழக்கில் சிக்கிய அவர், போலி மருந்து மோசடிக்கு உதவிய வழக்கில் கைதாக வாய்ப்புள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.