என் அன்பார்ந்த தோழமைகளே, பாசத்துக்குரிய BTC உறவுகளே, யாவருக்கும் இனிதான வணக்கங்கள் ! கடந்த பதிப்பில் நம்மைச் சுற்றியுள்ளவர்களைக் கவர நம் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் எனப் பார்த்தோம், அதில் ஒரு பகுதியான CRAVE U எனப்படும் ஒரு முறையை பேராசிரியர். தி. க. சந்திரசேகரன் அவர்களின் கையேட்டில் இருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். யாவரும் வாசித்துப் பயனடையுங்கள்.
CRAVE U பயனுள்ள பார்முலா.
நீங்கள் மற்றவர்களைக் கவர்ந்திழுக்க வேண்டுமா ? CRAVE U என்ற ஒவ்வொரு எழுத்தும் சுட்டி நிற்கும் ஆற்றல் மிக்க சக்தியைக் கடைப்பிடியுங்கள்.
C CARE – அக்கறை
ஒவ்வொரு மனிதனும் தன் மேல் பிறர் அக்கறை செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறான். நீங்கள் அக்கறை செலுத்தும் போது, என் மீது அக்கறை செலுத்த ஒருவர் இருக்கிறார் என உணரும் அவரின் மதிப்பில் நீங்கள் உயர்வீர்கள்.
நாம் யாரோடு பழகினாலும் அவர் நலமாக, மகிழ்வாக வாழ வேண்டும், அவருக்கு நம்மாலான நல்லதைச் செய்யவேண்டும் என்று உண்மையான அக்கறையைச் செலுத்துங்கள்.
R- RESPECT – மரியாதை
பிறர் தன்னை மதிக்க வேண்டும் என அடிப்படையில் மனிதர்கள் விரும்புகிறார்கள். தம் படிப்பை, வயதை, அறிவை, திறமையைப் பிறர் மதிக்க வேண்டும் என ஒருவர் எதிர்பார்ப்பது இயற்கை. இதில் தவறில்லை.
பிறரை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். மரியாதை கொடுக்கத் தயக்கம் காட்டாதீர்கள். ஒருவரின் தகுதிக்குரிய மரியாதை அளிப்பது நாம் பழக வேண்டிய இன்றியமையாத நல்லியல்பாகும்.
A-ACCEPT – 2 ஏற்றுக் கொள்ளுங்கள்
படைக்கப்பட்ட அனைவரும் ஒரே மாதிரியாக அமைந்துவிடவில்லை. கல்வி, பணம், அறிவு, உடல் வளர்ச்சி, குணாதிசயம் எனப் பல விடயங்களில் ஏராளமான ஏற்றத் தாழ்வுகள். யாருடன் பழகுகிறோமோ, அவர்களை அவர்களின் பலவீனங்களோடு அப்படியே ஏற்றுக் கொள்வது தான் நல்மனிதப் பண்பு. நம்முடைய அன்பும் அக்கறையும் அவர்களை மாற்றக் கூடும்.
V- VALUES- கொள்கைகளை மதியுங்கள்
ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்கும் சில தனிப்பட்ட நம்பிக்கைகள், இலட்சியங்கள், கொள்கைகள் உண்டு. அவற்றை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், நாம் அவமதிக்காலிருக்கவும், முடிந்தால் மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
மற்றவர்களின் கொள்கைகளை ஏளனம் செய்தல் அல்லது அவர்களைப் புண்படுத்தல் தவறு. அவர்களின் உணர்வுகளை மதித்து நடந்தோமேயானால் நமக்கான மதிப்புத் தானே தேடி வரும்.
E-ENCOURAGE – ஊக்கமூட்டுங்கள்
ஒவ்வொருவரும் தன்னை யாராவது தட்டிக் கொடுத்துப் பாராட்ட மாட்டார்களா என ஏங்குகின்றனர்.என்னை யாராவது ஊக்குவித்திருந்தால் எவ்வளவோ சாதித்திருப்பேன் என மனதில் குமைபவர்கள் ஏராளம். ஒரு நல்ல காரியத்தை சுமாராக ஒருவர் செய்தாலும் மனமுவந்து அவர்களைப் உற்சாகமூட்டிப் பாராட்டுங்கள். மரத்துக்கு உரம்; மனிதனுக்கு உற்சாகம் இரண்டுமே முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணை.
U- UNDERSTANDING- புரிந்து கொள்ளல்
உலகில் உள்ள எல்லோரையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் நம் வாழ்வைப் பாதிக்கின்ற, நம்மைச் சுற்றியுள்ள நாம் அதிகமாகப் பழகுகின்ற சிலருடைய வாழ்க்கையையாவது நாம் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் எப்படிப் பட்டவர் ? அவரின் நிறை குறைகள் யாவை ? அவருக்கு என்ன பிரச்சனைகள் இருக்கு ? எதனால் அவர் இப்படி நடந்து கொள்கிறார் ? என்றெல்லாம் ஆராய ஆரம்பித்தால் அவர் மீது உங்களுக்குக் கோபம் வராது; அனுதாபமும் அன்புமே ஏற்படும்.
ஆக, புன்னகை பூத்து, நான் என்கிற உணர்வை மூட்டை கட்டிவிட்டு, நகைச்சுவை உணர்வுடன் CRAVE U பார்முலா அடிப்படையைக் கடைப்பிடித்து செயற்பட்டால், முழு உலகமுமே உங்களைப் பார்த்துப் புன்னகைக்கும். மேக்கப்மேன் இல்லாமலேயே நீங்கள் கவர்ச்சித் திலகமாகத் துலங்குவீர்கள்.
நீங்கள் அன்பு செலுத்துபவர்கள் யாவரும் உங்கள் மீதும் அன்பு சொரிய வாழ்த்துக்கள் நண்பர்களே......!!!!
- நன்றியுடன்.. ப்ரியமுடன்