முழுக் கவனம்; முழு வெற்றி
ஒரு ஜென் குரு வில் வித்தையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். பலருக்கும் தனக்குத் தெரிந்த வித்தையை ஒளிக்காமல் பயிற்சி அளித்தவர். அவருடைய முதுமைக்காலத்தில் அவரிடம் கற்றுக்கொண்ட மாணவன் ஒருவன் அகம்பாவத்துடன் வந்து அறைகூவல் விடுத்தான். 'உங்களுக்குத் தைரியமிருந்தால் வந்து என்னுடன் போட்டி இடுங்கள்' என்று அவன் சொன்னதைக்கேட்டு சுற்றியிருந்தவர்கள் திகைத்தார்கள். அவன் செய்து காட்டிய வித்தைகளைப்பார்த்து மலைத்தார்கள். வயதானதால் தளர்ந்து போய் இருக்கும் ஜென் குருவால் அவனை வெல்ல முடியாது என்றும் அவர்களுக்குத் தோன்றி விட்டது.
ஆனால், ஜென் குரு கலங்கவில்லை. 'என்னுடன் வா. நான் செய்வதை உன்னால் செய்ய முடியுமானால் நீயே வெற்றியாளன்.' என்று சொல்லி, தனது மாணவனை அதாவது போட்டியாளனை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த காட்டுப்பகுதிக்குச் சென்றார். அங்கு ஆற்றுக்கு மத்தியில் பழைய தொங்கும் பாலம் ஒன்று இருந்தது. அப்பாலத்தின் கயிறுகள் நைந்திருந்தன, பல இடங்களில் பலகைகள் விரிந்தும் உடைந்தும் இருந்தன. குரு தனது போட்டியாளனை நிற்கச் சொல்லிவிட்டு தான் அந்தப் பாலத்தில் நடந்து சென்றார். இருக்கிற பலகைகளிலேயே மிகவும் சிதிலமாகி இருந்த ஒரு பலகையில் நின்றுகொண்டார். தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது இருந்த பழம் ஒன்றைக் குறி வைத்து அம்பு விடுத்தார். அம்பு பழத்தின் காம்பில் பாய்ந்து, அதை வீழ்த்தியது.
குரு திரும்பிவந்தார். 'மகனே! இது உன் முறை. நீயும் போய் அந்த இடத்தில் நின்று அந்த மரத்தில் உள்ள பழம் ஒன்றை வீழ்த்து.' என்றார். மாணவன் மெல்ல அந்தப் பாலத்தின்மேல் நடந்தான். பயம் அவனைப் பின்னியது. அந்தப் பலகையில் காலை வைக்கவே அவனுக்கு நடுக்கம். குறி பார்க்கையில் உயிர் பயத்தில் அவன் கைகள் நடுங்கின. அம்பு எங்கேயே சென்று விழுந்தது.
தலையை வெட்கத்தால் கவிழ்த்தவாறு திரும்பி வந்த அவர் குருவைப் பணிந்து மன்னிப்புக் கேட்டான். குரு புன்னகைத்தார். 'மகனே! நீ வில் வித்தையைக் கற்றிருக்கிறாய். ஆனால், உன் மனத்தை ஒருமுகப்படுத்தக் கற்கவில்லை. அதைக் கற்றுக்கொள். உன்னை யாராலும் வெல்ல முடியாது.' என்று அறிவுரை கூறினார்.
உண்மைதான். எவ்வளவு அறிவுக்கூர்மையும் திறமையும் இருந்தாலும், மனம் ஒருமுகப்படவில்லை எனில் வெற்றி என்னும் கனியைக் குறி பார்த்து வீழ்த்த முடியவே முடியாது. பல திசைகளிலும் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி அதை ஒருமுகப்படுத்தப் பயன்படும் சில குறிப்புகளைப் பார்ப்போமா?
தேவையற்ற ஒலிகளைக் குறையுங்கள்: ஒலிகள் நம் கவனத்தைச் சிதறடிக்கும் என்பது நாம் எல்லாரும் அறிந்ததுதான். ஆனாலும் நாம் அதைக் கட்டுப்படுத்துவதில்லை. முக்கியமான வேலைகள் இருக்கையில், கோயிலுக்குச் செல்லுகையில், ஏதாவது சந்திப்புகள் அல்லது அலுவலகக் கூட்டங்களின் பொழுது அலைபேசியை மௌனமாக்குங்கள். வேலை செய்யும்பொழுது இசை ஒலித்தால் சிலருக்குப் பிடிக்கலாம். ஆனால் அந்த இசை , கூடியவரை இசைக்கருவி ஒலிகளாயிருப்பது நல்லது. பாடல்வரிகள் உங்கள் கவனத்தைத் திருப்பக் கூடியவை. எந்த ஒலியுமே இல்லாமல் இருப்பது வேலையில் மட்டுமே கவனம் செலுத்த உதவும்.
கணிப்பொறியில் வேலை பார்ப்பவரா? ஒவ்வொரு மின்னஞ்சல் வரும்பொழுதும் தகவல் தெரியும்படி தகவமைத்திருக்கிறீர்களா? எப்படி உங்களால் கண்ணும் கருத்துமாய் வேலை செய்ய முடியும்? அடிக்கடி உங்கள் கவனம் திசை திருப்பப் படுமே! அதை முதலில் நிறுத்துங்கள். மின்னஞ்சலைப் பார்ப்பதற்கென்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிப் பார்த்தால், உங்கள் நேரம் மிச்சமாகும், மனம் ஒரு வேலையில் முழுதும் குவியும்.
உங்கள் அலுவலக மேசை அலங்கோலமாயிருக்கிறதா? கண்டிப்பாக உங்களால் முழுக்கவனத்துடன் வேலை செய்ய முடியாது. உங்கள் மேசையைச் சுத்தமாக வைத்திருங்கள். ஒரு பென்சிலையும், குண்டூசியையும் கூடத் தேட வேண்டியிருக்குமானால், பாதி நேரம், பாதி கவனம் அங்கேயே சென்றுவிடுமே.
ஒன்றே செய், ஒழுங்காய்ச் செய்: ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் (Multitasking) மனிதர்களையும், ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்யும் மனிதர்களையும் ஒரு ஆய்விற்கு உட்படுத்தியதில் ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்பவர்கள் நினைவாற்றல் அதிகம் உடையவர்களாகவும், குறித்த நேரத்தில் வேலையை முடிப்பவர்களாகவும், அவர்கள் வேலைகளில் தவறுகள் குறைவாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்யுங்கள். அதிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தி அதைச் செய்யுங்கள்.
மாவீரன் நெப்போலியனைப் பற்றி ஒரு கதை சொல்வதுண்டு. நெப்போலியன் ஒரு விருந்தில் கலந்து கொண்டார். அனைவரும் மதுக் கோப்பையைக் கையில் ஏந்தி இருந்த பொழுது ஒரு பலத்த சத்தம் கேட்டது. அதிர்ச்சியில் அத்தனை பேரும் தமது கோப்பையைத் தவற விட்டு விட்டனராம் - நெப்போலியனைத் தவிர. ஆச்சரியத்துடன் அவரை 'எப்படி உங்களால் அதிர்ச்சியடையாமல் இருக்க முடிந்தது?' என்று கேட்டபொழுது, 'இப்பொழுது என் வேலை மதுவை ருசித்து அருந்துவது. அதில் கவனமாக இருந்ததால், மற்ற காரணிகள் என்னைப் பாதிக்கவில்லை' என்றாராம் அவர்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்? தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுகிறோம். அலைபேசியில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுகிறோம். பாட்டுக்கேட்டுக்கொண்டோ அல்லது குறுந்தகவல்களைப் பரிமாறிக்கொண்டோ படிக்கிறோம். கடைசியில் ஒன்றையும் கவனத்துடன், மனம் ஒருமுகப்பட்டுச் செய்வதில்லை.
தாமஸ் ஆல்வா எடிசன் காது மந்தமானவர். அவரிடம், அவரது நண்பர்கள் நீங்கள் ஏன் உங்கள் காதுகளின் பழுதுகளை நீக்கிக் கொள்ள சிகிச்சை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கேட்டபொழுது, 'இது எனக்குக் கடவுள் அளித்த வரம். வெளிப்புற ஓசைகள் எதுவும் கேட்காதவாறு என் காதுகள் என்னைப் பாதுகாப்பதால்தான் என்னால் மனத்தை ஒருமுகப்படுத்தி ஆராய்ச்சி செய்ய முடிகிறது' என்றாராம் அவர். நாம் நமது காதுகளைப் பழுதுள்ளதாக ஆக்க வேண்டிய அவசியமில்லை. மனத்தை ஒருமுகப்படுத்தவேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
தியானம் செய்யுங்கள்: இந்தியாவில் தோன்றிய மூச்சுப் பயிற்சியும் தியானமும் இன்று உலகம் முழுவதும் பாராட்டப்படுகின்றன. இவை ஒன்றுக்கொன்று இணைந்தவை. கவனத்துடன் நமது மூச்சை நாம் கட்டுப்படுத்தி விடப்பழகுவது தியானத்திற்கு இட்டுச் செல்லும் பாதை. குரங்கு போல் தாவும் மனத்தை ஒரே திசையில் செலுத்த உதவுவது தியானம். தினமும் சில நிமிடங்கள் தியானம் செய்ய ஒதுக்குவது, உங்கள் திறன் அதிகரிக்கவும், உங்கள் மனம் ஒரு வேலையில் குவியவும் உதவி செய்கிறது.
ஒரு பழைய உதாரணம்தான். எல்லா இடத்திலும் பரவியுள்ள சூரிய ஒளியால் ஒரு காகிதத்தை எரிக்க முடியாது. அதுவே ஒரு ஆடியால் குவிக்கப் படுகையில்? நமது திறமைகள் அதிகமிருக்கலாம். ஆனால் அவை நம்மால் ஒருமுகப்படுத்தப் படுகையில்தான் நாம் சாதனையாளராக முடியும். இல்லையெனில் நம் திறமைகள் சிதறி வீணாகிவிடக் கூடும்.
வாழ்க வளமுடன்
ப்ரியமுடன்