BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபடித்ததில் பிடித்தது - 17 Button10

 

 படித்ததில் பிடித்தது - 17

Go down 
AuthorMessage
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

படித்ததில் பிடித்தது - 17 Empty
PostSubject: படித்ததில் பிடித்தது - 17   படித்ததில் பிடித்தது - 17 Icon_minitimeSun Jul 18, 2010 6:27 am


இனிய BTC உறவுகளே.. வணக்கம்!

நான் விரும்பிப் படிக்கும் தளங்களில் ஒன்று ஈழநேசன். அதில் பலவகையான நல்ல செய்திகள் வெளியாகின்றன. இன்று அதில் வெளியான ஒரு சிறு ஆக்கத்தை உங்களுடன் பகிர்கிறேன். இதனை எழுதியவர் திரு என். கணேசன் .

சில அனுமதிகள் ஆபத்தானவை

பழந் தமிழகத்தில் அரசர்கள் தங்கள் வள்ளல் தன்மைக்குப் புகழ் பெற்றவர்களாக இருந்தார்கள். வறுமையில் வாடும் புலவர்கள் தங்கள் கவித்திறமையை அரசர்களிடம் காட்டி பொருள் உதவி பெற்று வாழ்க்கையை நடத்திச் செல்வது அக்காலத்தில் இயல்பான ஒன்றாக இருந்தது. அப்படி வறுமையில் வாடிய ஒரு புலவர் வள்ளலான ஒரு மன்னரை நாடிச் சென்றார்.

அரசவையில் மன்னரை வணங்கிய புலவர் பாடல்கள் பாட அனுமதி கேட்டார். மன்னரும் மனமகிழ்ந்து ”என்ன பரிசு வேண்டும்?” என்று கேட்டார்.

புலவர் சாதுரியமாக மன்னருக்கு எதிரே இருந்த ஒரு சதுரங்கப் பலகையைக் காட்டி சொன்னார். “பாராளும் வேந்தரே. வள்ளல் பெருமகனே. இந்த சதுரங்கப் பலகையில் முதல் கட்டத்தில் ஒரு அரிசியை மட்டுமே வைத்து விட்டு பின்னர் வரும் ஒவ்வொரு கட்டத்திலும் முந்தைய கட்டத்தில் உள்ளதற்கு இரு மடங்காக அரிசிகளைப் பெருக்கிக் கொண்டே போய் கடைசியில் வருமளவு அரிசிமணிகளைத் தந்தால் நான் பெரிதும் மகிழ்வேன்”
அரசருக்கு ஆச்சரியம். பொற்காசுகள் கேட்கும் உலகில் அரிசிமணிகளை இவர் கேட்கிறாரே, அதுவும் மூட்டைகளாகக் கேட்காமல் எண்ணிக்கையில் கேட்கிறாரே என்று வியந்தவராக மன்னர் கேட்டார். “புலவரே சரியாக யோசித்துத் தான் கேட்கிறீர்களா? எண்ணிக்கையில் அரிசிமணிகள் போதுமா?”

புலவர் பணிவுடன் சொன்னார். “எனக்கு நான் கேட்டபடி அரிசிமணிகள் கொடுத்தால் அதுவே தாராளமாகப் போதும் அரசர் பெருமானே”

அரசர் வேடிக்கையாகச் சிரித்தபடி “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அரண்மனை சேவகர்களை புலவர் சொன்னபடியே அரிசிமணிகளை எண்ணி வைக்கச் சொன்னார்.

சேவகர்கள் அரிசிமணிகளை வைக்க ஆரம்பித்தார்கள். முதல் கட்டத்தில் ஒரு அரிசிமணி, இரண்டாம் கட்டத்தில் இரண்டு அரிசிமணி, மூன்றாம் கட்டத்தில் நான்கு அரிசிமணி, நான்காம் கட்டத்தில் எட்டு அரிசிமணி என வைத்துக் கொண்டு வந்தனர். இருபதாவது கட்டத்திற்கு வரும் போது சேவகர்கள் 524,288 அரிசிமணிகள் வைக்க வேண்டி வந்தது.

64 கட்டங்கள் கொண்ட சதுரங்கப் பலகையில் பாதி அளவிலான 32ஆம் கட்டத்திற்கு வருகையில் 2,147,483,648 அரிசிமணிகள் வைக்க வேண்டி வந்தது. பாதியிலேயே 214 கோடிக்கும் மேல் அரிசிமணிகள் தேவைப்பட்டதைக் கண்ட பிறகு தான் அரசருக்கு நிலைமையின் பூதாகரம் புரிய ஆரம்பித்தது. 64வது கட்டத்தை எட்டும் போது கோடிக்கணக்கான அரிசிமணிகள் தேவைப்படும் என்பது புரிந்த அவர் தன் நாட்டையே அந்த புலவருக்கு பணயம் வைக்க வேண்டியதாய் போயிற்று.

இந்த நிலைமை வெறும் ஒரு அரிசிமணியளவில் ஆரம்பித்தது தான்.

சில ஆரம்பங்கள் பார்வைக்கு இது போல ஆபத்தில்லாத, பிரச்னையில்லாத தோற்றத்தில் தெரியலாம். ஆனால் போகப் போக அவை சிறிது சிறிதாக விசுவரூபம் எடுக்கக் கூடியவையாகவும் இருக்கலாம். சில தீய பழக்கங்கள், சில தீய நட்புகள், சில வழிபிறழல்கள் எல்லாம் இந்த ரகத்தைச் சார்ந்தவையே.

போதை, சூது போன்ற பழக்கங்கள் ஒரு விளையாட்டாய் ஆரம்பிப்பவையே இதில் பெரிதாக என்ன ஆகி விடப் போகிறது என்று ஆரம்பத்தில் தோன்றக் கூடியவையே. ஆனால் ஆரம்பித்த பின் அந்தப் பழக்கங்களின் கரங்கள் இறுக ஆரம்பித்த பின் தான் விளையாட்டு விபரீதமாகிப் போன விதம் புரியும். எத்தனையோ பேர் தங்கள் வாழ்க்கையையும், தங்களைச் சேர்ந்தவர்களின் நிம்மதியையும் கெடுத்து சீரழிந்து போனதை நாம் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.

சில தீய நட்புகளும் அப்படித்தான். நல்ல குடும்பத்தில் பிறந்து நல்ல சூழ்நிலையில் வளர்ந்தும், கூடாத நட்பால் நல்ல குணங்களைப் படிப்படியாக இழந்து தீயவற்றை படிப்படியாக வளர்த்து பாழாகிப் போன இளைஞர்களும் சமூகத்தில் நிறைய பேர் உள்ளனர்.

போக வேண்டிய பாதையில் சென்று செய்ய வேண்டிய செயல்கள் நிறைய இருக்க அதை விட்டு விட்டு தேவையில்லாத வேறொரு பாதையில் மாறுதலுக்காக சிறிது தூரம் சென்று வரலாம் என்று எண்ணி அந்தப் பாதையில் பயணிக்க ஆரம்பித்து அதிலேயே அலைந்து திரிந்து அடையாளம் இழந்து போன ஆட்கள் ஏராளம் உள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் அதை உணரும் போது திரும்பி வர இயலாத தூரம் சென்றிருக்கும் வேதனை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.

இப்படியெல்லாம் நடக்க முதல் காரணம் நாம் ஆரம்பத்தில் அவற்றிற்குத் தருகிற அனுமதியே. என்ன ஆகி விடப் போகிறது, இதென்ன பெரிய விஷயமா என்று அலட்சியமாக எண்ணி, முழுக்கட்டுப்பாடும் நம்மிடம் இருக்கிறது என்று முட்டாள்தனமாக நம்பி, நம் வாழ்க்கையில் சிலவற்றை நாம் நுழைய அனுமதித்து விட்டால் பின் அதற்கு நாம் பெரிய விலை தர வேண்டி வந்து விடுகிறது.

எதையும் முளையிலேயே கிள்ளி விடுவது சுலபம். ஆனால் அது மரமாக வளர்ந்து விட்டால் அதை வெட்ட கோடாலி தேவைப்படுகிறது. அதை வெட்டி எடுக்க வேறு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அப்படியும் வேரோடு எடுத்து விட முடியாமல் போய் விடுவதுண்டு. நம் கையால் சுலபமாகக் கிள்ளி எறிவதைச் செய்யாமல் வளர்த்து ஆளாக்கி அதை அழிக்கப் படாத பாடு படுவது முட்டாள்தனமே அல்லவா?

எனவே ஆரம்ப தோற்றத்தை வைத்து சிலவற்றைக் குறைவாக எடைபோட்டு உங்கள் வாழ்க்கையில் நுழைய அனுமதித்து விடாதீர்கள். சிந்தித்து செயல்படுங்கள். பின் வருந்திப் பயனில்லை.

(நன்றி : ஈழநேசன்)
Back to top Go down
 
படித்ததில் பிடித்தது - 17
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» படித்ததில் பிடித்தது - 4
» படித்ததில் பிடித்தது - 8
» படித்ததில் பிடித்தது - 5
» படித்ததில் பிடித்தது - 6
» படித்ததில் பிடித்தது-1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: