ப்ரியமான BTC இதயங்களுக்கு இனிய வணக்கங்கள். என்றும் போல் இன்றும் ஒரு படித்து சுவைத்த புத்தகத்திலிருந்து ஒரு பகுதியைப் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்தியாவின் பிரபல மனிதவள முகாமைத்துவ நிறுவன இயக்குனர் பேராசிரியர் திரு. தி.க. சந்திரசேகரன் அவர்களின் “அணுகுமுறை” என்ற ஒரு கையேட்டிலிருந்து இன்றைய பதிவு அமைகிறது.
நன்மை தரும் அணுகுமுறைகள்.
நம்முடைய வாழ்க்கை நமக்கு மிகவும் முக்கியமானது ! நாம் வாழப் போவது ஒருமுறை தான் ! கிடைத்தற்கரிய இந்த மானிட வாழ்வை நாம் ஏன் மகிழ்ச்சியாகவும், சாதனை நிறைந்ததாகவும், பயன் உள்ளதாகவும் வாழக் கூடாது !
மகிழ்ச்சி, சாதனை, வேதனை, தோல்வி இவையனைத்தும் நாம் நம்மைச் சுற்றியிருப்பவர்களை எப்படி அணுகுகிறோம் என்பதைப் பொறுத்தது. மற்றவர்கள் ஓடிவந்து நமக்கு மகிழ்ச்சியையும், வெற்றியையும் தருவார்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பதற்கு மாறாக, நாம் ஓடிப் போய் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் வெற்றியையும் கொடுக்கும் போது, நமக்கும் அதே மகிழ்ச்சியும், வெற்றியும் கிடைக்கும் அல்லவா !
மற்றவர்கள் மீது மணங்கமழும் பன்னீரையும், சந்தனத்தையும் தெளிக்கும் போது, நமக்கும் தெரியாமல் நம்மீது அது விழுந்து அது நம்மையும் மணக்கச் செய்யுமல்லவா !
மாறாக, மற்றவர்கள் மீது சேற்றயும், சாக்கடையையும் அள்ளிக் கொட்டும் போது, நம் மீது அது விழுந்து நாமும் அல்லவா நாறிப் போவோம் !
இந்த உண்மை தெரிந்தவர்கள் யாரை அணுகினாலும் தக்க அணுகுமுறையை மேற்கொள்வார்கள்.
யாரோடு தொடர்பு கொள்வது ? எப்படி ?
சிறிய கதை…
ஒரு காட்டில் 3 நண்பர்கள்.. சிங்கம், முதலை, நரி. இந்தக் கூட்டணி ஒரு முடிவெடுத்தது. வேட்டையில் கிடைக்கும் விலங்கினைப் பொதுச் சபையில் வைக்க வேண்டும், பின் மூவரும் பகிர்ந்து உண்ண வேண்டும், இதனால் 3 வகை உணவு கிடைக்கும் என்பதே அது.
முடிவெடுத்த நாளில் சிங்கம் ஒரு முயலுடனும், முதலை ஒரு மாட்டுடனும், நரி ஒரு மானுடனும் ஆஜராகின. சிங்கம் கேட்டது எப்படிப் பங்கு போடுவோம் என்று. உடனே முதலை அவசரமாகச் சொல்லியது, ”மஹாராஜா பெரியவர் நீங்கள் மாட்டைச் சாப்பிடுங்கள், நான் மானையும் பொடிப்பயன் நரி முயலையையும் சாப்பிடட்டும்” என.
முதலை வாயை மூட முதல் சிங்கம் அதன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது, “ எனக்குப் புத்தி சொல்லக் கூடிய அளவுக்கு பெரிய நிலைக்கு நீ வந்து விட்டாயா !” எனக் கர்ஜித்தது. பல்லிழந்த முதலை இரத்தம் கொட்ட தலையைக் குனிந்தது.
“உன் பதில் என்ன ?” என்று நரியைப் பார்த்தது சிங்கம் . ” ராஜா, மதிய உணவாக மாட்டையும், மாலைச் சிற்றுண்டியாக முயலையும், இரவுணவாக மானையும் சாப்பிடுங்கள் “ எனப் பணிவாகக் கூறியது நரி. “அபாரம் ! அற்புதம் ! இவ்வளவு சிறப்பாகத் திட்டமிட எப்படி முடிந்தது உன்னால் !” என நரியைப் புகழ்ந்தது சிங்கம்.
அது சொன்னது “ எப்போது முதலை பல் இரண்டை இழந்து இரத்தம் சொட்ட நின்றதோ அப்போதே எனக்கு ஞானம் பிறந்து விட்டது, சரியாகப் பேசக் கற்றுக் கொண்டேன்” என.
நாம் நம்மைவிட வலிமையானவர்களுடனும், முரடர்களுடனும் கூடிய வரையில் ஒதுங்கியிருப்பது நல்லது. அப்படியே பழக நேர்ந்தாலும் அவர்களுடன் மெல்ல ஒத்துப் போவதும், பின் ஒதுங்கி நடப்பதுவுமே நல்லது, இல்லையேல் முதலையின் நிலை தான் நமக்கும்.
இக்கதையின் பிற்பகுதியில் மூவரின் கூட்டணி நீடித்திருக்குமா நண்பர்களே ?
விடையை ஆராய்ந்து பாருங்கள் நீங்களே..!
இவ்வுலகில் நாம் பலரோடு பழகித்தான் ஆக வேண்டியுள்ளது. தொழிலைப் பலருடன் கூட்டு சேர்ந்து தான் நடத்த வேண்டியுள்ளது. பேராசையும், சுயநலமும் மிக்க, மற்றவர் உழைப்பில் உடம்பு வளர்க்கும் சிங்கங்கள் இருக்கக் கூடும்.
அவர்கள் பற்றி அவதானமாக இருப்பதும், இலாவகமாகக் கையாள்வதும் மிக அவசியம்.
- நன்றிகளுடன் ......... ப்ரியமுடன்