இனிய BTC இதயங்களுக்கு எமது வணக்கம்!
இன்றைய பகிர்வில் Dr.M.R. காப்மேயர் அவர்களின் அருமையான ஒரு கட்டுரையைப் உங்களுக்காக இனனத்துள்ளேன். அன்றாட வாழ்வில் நாம் பல சம்பவங்களுக்கு முகம் கொடுக்கிறோம். அவ்வாறு நாம் எதிர் கொள்ளும் சம்பவங்களுக்கு எவ்வாறு எமது எதிர் கொள்ளல் இருத்தல் சிறந்தது என அவர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
எதை எப்படி எதிர் கொள்ளப் போகிறீர்கள்.
உங்களுக்கு எவ்வகையான நிகழ்வுகள் நடந்தாலும் நீங்கள் செய்யக் கூடியவை ஐந்தே ஐந்து செயல்கள் தான். இந்த 5 வகையான முறைகளில் எது மிகுந்த வெற்றியைத் தரும் என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
1) மிதமிஞ்சிய எதிர் கொள்ளல்.
2) குறைவான எதிர் கொள்ளல்.
3) தாமதித்த எதிர் கொள்ளல்.
4) பூஜ்ஜிய எதிர் கொள்ளல்.
5) எதிர் மறையான எதிர் கொள்ளல்.
நிகழ்ச்சியின் தரத்திற்கேற்ப உங்கள் தெரிவு அமையட்டும்.
வரிசையில் 5 ஆவதாக உள்ள எதிர் மறையான எதிர் கொள்ளல் பற்றி முதலில் பார்ப்போம்.
இந்த 5 வகை எதிர் கொள்ளலிலும் எந்னேரத்திலும் எச் சூழ்நிலையிலும் கையாளக் கூடிய ஒரே முறை இதுவாகும்.
யாரேனும் ஒருவர் அல்லது ஏதேனும் ஒரு நிகழ்ச்சி உங்களுக்கு எரிச்சல் மூட்டினால், நீங்கள் சினம் கொள்வீர்கள் என்பது எதிர் பார்க்கப்பட்ட எதிர் கொள்ளல்..!
இந்த விவகாரத்தில் நீங்கள், சிரித்து விடுவது தான் எதிர் மறையான எதிர் கொள்ளலாகும்.
சினமடைவதை விட எதிர்மறையாகச் சிரித்து விடல் மிகுந்த பலனைத் தருகிறது என்பதை மகிழ்ச்சிகரமாகக் கண்டு பிடிப்பீர்கள். சினம் பகைமையாக, குரோதமாக வளரும். சிரிப்போ சூழ்நிலையின் இறுக்கத்தைத் தணிக்க உதவும். உங்கள் சிரிப்பு பிறரை அவமதிக்கிற ரீதியில் அவரின் சினத்தைத் தூண்டும் வகையில் அமைந்து விடக் கூடாது. உங்கள் நகைச்சுவை உணர்வு மற்றவரின் மனதைப் புண்படுத்தாமல் அவதானமாக இருங்கள்.
“உங்களுக்கு என்ன நேர்ந்தாலும் உங்கள் சிரிப்பின் மூலம் பழக்கத்தால் வென்று விடுவீர்கள்”
வாழ்க்கையின் அசெளகரியங்கள், உறுத்தல்கள் ஏற்கப்பட வேண்டும். அவை கூடிய அளவில் எதிர்மறையான எதிர் கொள்ளலான நகைச்சுவை உணர்வின் மூலமேயன்றி, எரிச்சல் காட்டுவதன் மூலம் அல்ல.
ஒரு மனிதனின் மகிழ்ச்சி அவன் மனதின் சுபாவத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது. நீங்கள் மகிழ்சியாய் இருப்பது என மனதளவில் தீர்மானித்து விட்டால் இனிமையைக் கையாளுங்கள். இல்லையெனில் உங்கள் மகிழ்சியுடன் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் மகிழ்ச்சியும் இழக்கப்படும் என்பது நினைவிருக்கட்டும். உங்கள் மகிழ்ச்சி மற்றவரை எப்படி தொற்றிக் கொள்வது போல், உங்கள் மகிழ்சியற்ற மனநிலையும் விரைவில் மற்றவர்களைப் பாதிக்கும்.
குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக எதிர்மறையான எதிர் கொள்ளல் பாராட்டி விடுவது. உண்மையான பாராட்டின் மூலம் நீங்கள் புகார்களையும் வெளிப்படுத்தலாம். யோசித்துப் பாருங்கள் , உங்களால் அது முடியும்.
மற்றவரின் விரும்பத்தகாத பழக்கத்திற்கு உங்கள் எதிர் கொள்ளல், நல்லெண்ணத்துடனும் பரிவுடனும் கூடிய புரிந்து கொள்ளல் தான்.
விமர்சனத்திற்கு நாம் எதிராளி எதிர்பார்க்கும் விதத்தில் எரிச்சலைக் காட்டக் கூடாது. மாறாக விமர்சனத்தில் அடங்கி இருக்கிற நல்ல படியான அறிவிரைக்கு நாம் மனப்பூர்வமான பாராட்டுத் தெரியப்படுத்த வேண்டும்.
உங்களுடன் விரோதம் பாராட்டும் ஒருவரை எப்படிக் கையாள வேண்டும் ? அவருக்கு ஒரு சகாயம் செய்ய முன்வர வேண்டும். அவரிடம் நல்ல அபிப்ராயம் பெறுவதற்காக மட்டுமல்ல, எதையும் எதிர்பாராத ஆதரவான நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளவும் இது உதவும்.
உங்கள் முதுகுக்குப் பின்னால் தவறாகப் பேசுவர்கள் பற்றி, நீங்கள் மற்றவரிடம் அவரின் நல்ல பண்புகள் குறித்துப் பேசுங்கள். இச்செய்தி அவர் காதுகளுக்கு எட்டும் போது உங்களுடனான அவர் குணாதிசயம் எப்படி மாறுகிறது என நீங்களே அறிவீர்கள்.
உங்களின் எதிர் கொள்ளல் பொறுத்தே வாழ்க்கையின் வெற்றியும், மகிழ்ச்சியும் அடங்கியுள்ளது.
- நன்றியுடன்... ப்ரியமுடன்