முத்துசாமிக்கு என்ன மனக்குறை என்று எனக்கு
தெரியாது-ஜெயலலிதாஅதிமுகவில் இருந்து யாரையும் இழக்க விரும்பவில்லை என்று அக்கட்சியின்
பொதுச் செயலாளர் ஜெயலிலதா கூறியுள்ளார்.
எம்ஜிஆர் விசுவாசிகளில்
முக்கியமானவராகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.முத்துசாமி திமுகவில்
இணைய திட்டமிட்டுள்ளார்.
மிகச் சிறந்த நிர்வாகியான முத்துசாமியை
ஜெயலலிதா நீண்ட காலமாகவே ஒதுக்கி வைத்துள்ளதையடுத்து அவர் இந்த முடிவுக்கு
வந்துள்ளார்.
இந் நிலையில் இன்று சென்னையில் அண்ணா தொழிற்சங்கப்
பேரவையைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவி தொகைகளை
வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயலலிதா நிருபர்களை சந்தித்தார்.
அப்போது
அவரிடம், முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு அதிமுகவில் மன வருத்தம்
ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் அவர் திமுகவில் இணையப் போவதாகவும் செய்திகள்
வெளிவருகின்றனவே என்று நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த
ஜெயலலிதா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய மக்கள்
இயக்கம். இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தில் ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள்
இருக்கிறார்கள். அத்தனைப் பேருக்கும் நான் பொதுச் செயலாளர்.
ஆகவே
இவ்வளவு பெரிய மக்கள் இயக்கத்திற்கு, ஒரு மாபெரும் அரசியல் கட்சிக்குத்
தலைவர் என்கிற முறையில் என்னுடைய பொறுப்பு மிகப் பெரியது. என்னுடைய
கடமையும் மிகப் பெரியது.
கழக உறுப்பினர்கள் யாருக்காவது, மனக்குறை
இருக்குமானால், அவர்கள் எப்போது விரும்பினாலும், என்னை சந்திக்கலாம்.
தங்களுக்குள்ள மனக்குறையைப் பற்றி என்னிடம் மனம் விட்டுப் பேசலாம்.
பேச்சுவார்த்தை
மூலம் நிச்சயமாக தீர்வு காண முடியும். முன்னாள் அமைச்சர் முத்துசாமியை
பொருத்த வரையில் அவருக்கு என்ன மனக்குறை இருக்கிறது என்று எனக்கு தெரியாது.
ஆனால் எதுவாக இருந்தாலும், முத்துசாமி அவர்கள் எப்போது விரும்பினாலும்
என்னை சந்திக்கலாம்.
அவருக்கு என்ன பிரச்சனையோ அதைப்பற்றி என்னிடம்
பேசலாம். நிச்சயமாக அதற்கு தீர்வு காணலாம் என்று நம்புகிறேன்.
என்னைப்
பொருத்தவரை ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள் கொண்ட இந்த இயக்கத்திற்கு பொதுச்
செயலாளர் என்ற முறையில் நான் ஒரு உறுப்பினரைக் கூட இழக்க விரும்பவில்லை
என்றார்.