விருப்பப் பட்டியல் - வைரமுத்து
கேள் மனமே கேள்
சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன்
சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன்
ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன்
ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்
சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன்
சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன்
யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன்
உலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன்
கண்ணிரண்டில் முதுமையிலும் பார்வை கேட்பேன்
கடைசிவரை கேட்கின்ற செவிகள் கேட்பேன்
பின்னிரவில் விழிக்காத தூக்கம் கேட்பேன்
பிழையெல்லாம் மன்னிக்கும் பெருமை கேட்பேன்
வெண்ணிலவில் நனைகின்ற சாலை கேட்பேன்
விண்மீனை மறைக்காத வானம் கேட்பேன்
மென்காற்று வீசிவரும் இல்லம் கேட்பேன்
மின்சாரம் போகாத இரவு கேட்பேன்
தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்
தங்கத்தைச் செங்கல்லாய் காணக் கேட்பேன்
விண்வெளியில் உள்ளதெல்லாம் அறியக் கேட்பேன்
விஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்
மண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்
மனிதஇனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்
பொன்னுலகம் பூமியிலே தோன்றக் கேட்பேன்
போர்க்களத்தில் பூஞ்செடிகள் பூக்கக் கேட்பேன்
கோடையிலும் வற்றாத குளங்கள் கேட்பேன்
குளத்தோடு கமலப்பூக் கூட்டம் கேட்பேன்
மேடையிலே தோற்காத வீரம் கேட்பேன்
மேதைகளை சந்திக்கும் மேன்மை கேட்பேன்
வாடையிலும் நடுங்காத தேகம் கேட்பேன்
வாவென்றால் ஓடிவரும் கவிதை கேட்பேன்
பாடையிலே போகையில்என் பாடல் கேட்டால்
பட்டென்று விழிக்கின்ற ஆற்றல் கேட்பேன்
அதிராத குரல்கொண்ட நண்பர் கேட்பேன்
அளவோடு பேசுகின்ற பெண்கள் கேட்பேன்
உதிராத மலர்கொண்ட சோலை கேட்பேன்
உயிர்சென்று தடவுகின்ற தென்றல் கேட்பேன்
முதிராத சிறுமிகளின் முத்தம் கேட்பேன்
மோகனத்து வீணைகளின் சத்தம் கேட்பேன்
பதினாறு வயதுள்ள உள்ளம் கேட்பேன்
பறவையோடு பேசுமொரு பாஷை கேட்பேன்
முப்பதுநாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்
முற்றத்தில் வந்தாடும் முகிலைக் கேட்பேன்
எப்போதும் காதலிக்கும் இதயம் கேட்பேன்
இருக்கும்வரை வழங்கவரும் செல்வம் கேட்பேன்
தப்பேதும் நேராத தமிழைக் கேட்பேன்
தமிழுக்கே ஆடுகின்ற தலைகள் கேட்பேன்
இப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்
இருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்பேன்
வானளந்த தமிழ்த்தாயின் பாலைக் கேட்பேன்
வைகைநதி புலவர்களின் மூளை கேட்பேன்
தேனளந்த தமிழ்ச்சங்க ஓலை கேட்பேன்
தென்னாழி தின்றதமிழ்த் தாளைக் கேட்பேன்
மானமகன் குட்டுவனின் வில்லைக் கேட்பேன்
மாமன்னன் பாண்டியனின் வேலைக் கேட்பேன்
ஞானமகன் வள்ளுவனின் கோலைக் கேட்பேன்
ராஜராஜன் வைத்திருந்த வாளைக் கேட்பேன்
1995வருகிறது. காரை நிறுத்துங்கள் என்கிறேன். ஒரு புளிய மரத்தடி. தாள் கொடுங்கள் என்கிறேன்; தாள் இல்லை. அழைப்பிதழ்களின் வெள்ளைப் பக்கங்களில் எழுதத் தொடங்குகிறேன். எழுத வசதி எண்சீர் விருத்தம், புளிய மரத்தடியில் பூத்த கவிதை இது. -வைரமுத்து
பெரியகுளம் - திண்டுக்கல் நெடுஞ்சாலை. ஒரு விழா முடிந்து நண்பர்களோடு காரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். விழாவில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசைப் பிரித்துப் பார்க்கிறார் நண்பர் ஒருவர். அது ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு. நல்ல வெள்ளிதானா என்று தேய்த்துப் பார்க்கிறார் இன்னொரு நண்பர். "விளக்கை அதிகம் தேய்க்காதீர்கள்; பூதம் வந்துவிடப் போகிறது" என்று சிரிக்கிறேன் நான். அப்படி பூதம் வந்துவிட்டால் யார் யார் என்னென்ன கேட்பார்கள் என்ற சுவையான கற்பனை தொடங்க ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கேட்கிறார்கள். கடைசியில் கேள்வி எனக்கு வருகிறது. காரை நிறுத்துங்கள் என்கிறேன். ஒரு புளிய மரத்தடி. தாள் கொடுங்கள் என்கிறேன்; தாள் இல்லை. அழைப்பிதழ்களின் வெள்ளைப் பக்கங்களில் எழுதத் தொடங்குகிறேன். எழுத வசதி எண்சீர் விருத்தம், புளிய மரத்தடியில் பூத்த கவிதை இது. -வைரமுத்து