அவள், அவன் மற்றும் நிலா ~~ சிறுகதைகள்
புதிதாக வந்த பல்பொருள் அங்காடியைப் பற்றி ஊர் முழுவதும் ஒரே பேச்சு. வார மலர்கள், நாளிதழ்கள், தொலைக்காட்சி, வானொலி என்று லட்சக்கணக்கில் விளம்பரத்திற்காக செலவழித்திருந்தார்கள். முழுவதும் குளிர் ஊட்டப்பட்டது, வலை தளம் மூலம் பொருள் தேடல் வசதி, குறிப்பிட்ட பொருள் குறித்தான மாற்று கடைகளின் விலைப்பட்டியல், குழந்தைகளின் காப்பகம், இப்படி பல விற்பனை சேவைகள் இருந்தும், மக்களை மிகவும் கவர்ந்தது தானியங்கி ரோபோக்கள்தான். உங்களின் கையை பிடித்துக்கொண்டு வளாகத்தை சுற்றிக்காட்டும். குழந்தைகள் கூட வந்தால் சிறு சிறு கதைகள் கூறி சந்தோஷப்படுத்தும். இடையில் உங்களுக்குப் பிடித்த பாட்டுக்களை தனிப்பட்ட முறையில் கேட்கும் வசதியையும் செய்து கொடுக்கும். ஆங்கிலம் மற்றும் எல்லா இந்திய பிராந்திய மொழிகளையும் பேசுமாறு அந்த ரோபோக்களை வடிவமைத்திருந்தார்கள். நீங்கள் முதலில் எந்த மொழி பேசுகிறீர்களோ அதை முழுவதும் உள்வாங்கி உங்களிடம் அதே மொழியிலேயே தொடர்ந்து பேசிக்கொண்டுவரும். இந்தியாவில் எல்லா முக்கிய நகரங்களிலும் தன் கிளைகளைப் பரப்பியிருக்கும் அந்த பல்பொருள் அங்காடியை ஒரு தடவையாவது சென்று பார்க்க மக்களைத் தூண்டியவாறே இருந்தது தொடர்ந்து வரும் கவர்ச்சியான விளம்பரங்களும் அங்கு முன்பே சென்றுவந்த நுகர்வோர் வாய்வழிச் செய்திகளும்.
பார்கவியும் யுவாவும் மனம் விட்டுப்பேசி பல மாதங்கள் ஆகிவிட்டது. மாய்ந்து மாய்ந்து ஒரு வருடமாக நீ இல்லை என்றால் நான் இல்லை என்றபடிக்கு காதலித்து திருமணமும் செய்து கொண்டவர்கள்தான். ஆனால் முதலாம் ஆண்டு திருமண விழாவிற்கு முன்பே இருவருக்கும் ஏனோ வாழ்க்கை திகட்டிவிட்டது. சுய கௌரவம் சார்ந்த தொடர் விவாதங்கள், ஆளுமை குறித்தான அகந்தையென்று மனக்கசப்புகள் வளர்ந்து, பிரிந்து வாழ்தலே இருவருக்கும் நல்லது என்று பொதுவான தீர்மானத்தில் மட்டும் ஒத்த மனம் கொண்டவர்களாக இருந்தார்கள். சிறுசிறு மனக்கசப்பில் தொடங்கி மாதக்கணக்கில் மௌனம் காத்து, பிறகு வேண்டாவெறுப்புடன் பேசி மீண்டும் குற்றம் கண்டுபிடித்து இப்படியாகத் தொடர்ந்து கொண்டிருந்தது அவர்களின் இல்லற வாழ்க்கை. மனம் ஒத்துப்போகாமல் எதிரிகளாக இருப்பதை விட நண்பர்களாகப் பிரிந்து விட இருவரும் மனதிற்குள் தீர்மானித்திருந்தார்கள். அன்று இரவும் அப்படித்தான் வெகு நேரம் வரை விவாதம் நடந்தது. பேசிக்களைத்து அப்படியே உறங்கியும் போனார்கள்.
காலையில் செய்தித்தாளை புரட்டிப்பார்த்த யுவா அந்த அங்காடிக்குச்சென்று ஒரு பரிசுப்பொருளை பிரிவின் நிமித்தம் பார்கவிக்கு வாங்கிக்கொடுத்தால் என்ன என்று யோசித்தான். ”இன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரம் புறப்பட்டுவிடு. நாம் இருவரும் அந்த பல்பொருள் அங்காடிக்கு போகலாம்” என்று எங்கோ பார்த்தபடி பார்கவியிடம்
கூறினான். அடுக்களையில் இருந்தவளுக்கு அவன் கூறியது கேட்காமல் இல்லை.
-2-
மாலையில் இருவரும் வளாகத்தில் சந்தித்தார்கள். அடையாள அட்டையை இருவரும் தானியங்கி சாதனத்தில் சொருகி அனுமதி சீட்டைப் பெற்றுக்கொண்டார்கள். மேற்கத்திய இசை மெலிதாகப் பரவி அந்த வளாகம் முழுவதும் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. நுழைந்தவுடன் எதிரேயுள்ள திரையில் வளாகத்தின் வரைபடமும் வாடிக்கையாளர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்ற அம்புக்குறியும் இருந்தது. அவர்களை நோக்கி மூன்றடி உயரத்தில் ஒரு ரோபோ ஓடிவந்து யுவாவின் கையைப் பற்றிக்கொண்டு “நான் உங்களுக்கு உதவலாமா” என்று ஆங்கிலத்தில் கேட்டது. யுவா பார்கவியிடம் “பரிசுப் பொருள் பிரிவிற்குள் போகலாமா” என்று கேட்க ரோபோவும் தமிழில் “உங்களை நான் அங்கு கூட்டிக்கொண்டு போக என்னை அனுமதிப்பீர்களா” என்று கேட்டது. போகும் வழியில் இருவரின் கையைப் பிடித்துக்கொண்டு தணிவான குரலில் பாடிக்கொண்டே வந்தது. அதற்குப் பிறகு யுவாவும் பார்கவியும் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை.
அழகான தந்தப்பேழையில் வைத்திருந்த பளிங்கினால் செய்த இதயத்தை தேர்ந்தெடுத்தான் யுவா. கசிந்துருகிய பால் வெளிச்சத்தில் இதயத்திலிருந்து வானவில்லின் வர்ணங்கள் சுவரெங்கும் தெறித்துச்சிதறியது. பார்கவியும் யுவாவிற்காக சித்திரவேலைப்படுள்ள தங்க நிற சட்டத்தில் ஒரு ஓவியத்தைத் தேர்ந்த்தெடுத்தாள். கடற்கரையில் கை கோர்த்துக்கொண்டு நடந்து போகும் காதலர்களின் முன்னே அவர்களின் நீண்ட மாலை நிழலின் நெருக்கத்தை அவர்களே ரசிக்கும்படியான காட்சியை மிக தத்ரூபமாக வரைந்திருந்தார் அந்த ஓவியர். பார்கவியின் உள்ளங்கைகளை யுவாவிற்குத் தெரியாமல் சுரண்டிய ரோபோ “நீங்கள் காதலர்கள்தானே” என்று கேட்டது. ”உங்களுக்குப் பிடித்தால் நாம் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொள்ளலாமே” என்றது. இருவரும் தத்தம் பெயர்களைக் கூறினார்கள். பிறகு அவர்களைப் பார்த்து ரோபோ “என்னை நீங்கள் நிலா என்று அழைத்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்" என்றது. பரிசுப்பொருட்களை தள்ளுவண்டியில் வைத்து ஒரு குழந்தையின் துள்ளலோடு அவர்கள் முன் சென்றது. பதினைந்து நிமிடத்தில் வளாகம் மூடப்படுமென்று ஒரு பெண்ணின் குரல் மட்டும் எதிரொலித்துக்கொண்டேஇருந்தது.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த நிலா “நீங்கள் இருவரும் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள். உங்களுக்காக நான் வெளியே காத்துக்கொண்டிருந்தேன். தானியங்கி கதவுகள் எல்லாம் மூடிக்கொண்டு விட்டது. நாளை பத்து மணிக்குத்தான் மீண்டும் வளாகம் திறக்கும்” என்று மிகவும் பதட்டத்துடன் கூறியது. ஏதும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதை கவனித்த நிலா “என்ன ஆயிற்று உங்களுக்கு? ஏதாவது பிரச்சனையா” என்று குரல் எழுப்பி அவர்கள் இரண்டுபேரையும்
சுய நினைவிற்குக் கொண்டு வந்தது.
-3-
“ஆமாம் நிலா, பிரச்சனைதான். நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் பிரச்சனையாகத்தான் இருக்கிறோம். நான் நினைததுபோல் இவள் இல்லை. இவள் நினைத்தது போல் நான் இல்லை” என்று கூறினான் யுவா. பார்கவி உனக்கென்ன பிரச்சனை என்று நிலா கேட்க “வேண்டாம் நிலா, முதலிலிருந்து நான் ஆரம்பிக்க வேண்டியிருக்கும். எதிலும் துளியும் உடன்பாடில்லை. அனைத்து விஷயங்களிலும் முரண்பாடகவே நடந்து கொள்கிறான். எனக்குப் பிடித்த எதுவும் அவனுக்குப் பிடிக்காது. இதில் காதல் திருமணம் வேறு” என்று மிகவும் விரக்தியுடன் சிரித்தாள் பார்கவி. நிலா உடனே குறுக்கிட்டு “அது சரி, நீங்கள் காதலிக்கும்போது உங்களுக்கு எதுவும் தெரியவில்லையா” என்று கேட்டது. வழக்கம் போல் இருவரும் மீண்டும் அமைதியானார்கள். ஆங்காங்கே நிறுவியிருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் சுழலும் சப்தம் தான் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தது.
நிலா தொடர்ந்து பேசியது “நீங்கள் காதலிக்கும்போது உங்களுக்கிடையில் இருந்தது அன்பு மட்டும்தான். யுவாவை நீயும், நீ பார்கவியையும் அவரவர்கட்கு ஏற்றபடி மற்றவரின் குணங்களை மாற்றிவிடலாம் என்று நம்பி காதலித்தீர்கள். உங்களின் காதலும் அதற்கான தைரியத்தை உங்களுக்குக் கொடுத்தது. நான் கூறுவது சரிதானே” என்றது நிலா. அவர்கள் இருவரும் ஏதும் பேசாமல் நிலாவிற்கு மிக அருகில் வந்தார்கள்.
நிலா தொடர்ந்து “உங்களுக்குப் பிடிததுபோலவே நீங்கள் இருவரும் இருந்துவிடுங்களேன். எப்போது ஒருவர் மற்றவரின் பிறவிக்குணங்களை தன் அலைவரிசைக்கு ஏற்றபடி மாற்றி அமைக்க முயற்சிக்கிறீர்களோ அப்போதே தனி மனித கௌரவம், ஆளுமை என்று பிரச்சனைகள் தலைதூக்குகிறது. உங்களுக்குள் இருக்கும் நெருடல் என்னவென்றால் மாதங்கள் பல நீங்கள் சேமித்துவைத்த எல்லா மனக்கசப்புகளுக்கும் ஒரே தீர்வை எதிர்பார்க்கிறீர்கள். இது சாத்தியமே இல்லை என்று உங்களுக்கும் நன்றாகத் தெரியும்.” மீண்டும் நேரத்தை சரிபார்த்துக்கொண்ட நிலா யுவாவைப் பார்த்து “கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். உங்களின் இருவருக்கும் ஒரே ரசிப்பு, ஒரே உணவுப்பழக்கம், ஒரே குணங்கள் இருந்தால் பிறகு எதைத்தான் உங்களுக்குள் பகிர்ந்து கொள்வீர்கள். உங்களின் சொல் கேட்கும் மடிக்கணினியை திருமணம் செய்து கொண்டதுபோல்தான் இருக்கும் உங்களின் வாழ்க்கை. அதுவும் ஒரு வரையறைக்குட்பட்டுத்தான் இயங்கும், தெரியுமில்லையா? மீறியபடிக்கு உங்களின் எந்த கட்டளைகளையும் ஏற்காது” என்ற நிலா மிகவும் பலமாக சிரித்தது.
மணி 12 அடிக்க ஒரிரு நிமிடங்கள் இருக்கும்போது பத்து, பன்னிரண்டு ரோபோக்கள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் அவர்களை நோக்கி விரைந்து வந்தது. அவர்களின் அருகில் வந்ததும் “உங்களின் இருவருக்கும் எங்களின் அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள்” என்று எல்லா ரோபோக்களும் இருவரிடமும் மாறி மாறி கைகளை குலுக்கிக்கொண்டது. “உங்களின் அடையாள அட்டையிலிருந்துதான் விபரங்கள் தெரிந்து கொண்டேன்” என்று விஷமமாகச் சிரித்தது நிலா. வட்டமான ஸ்ட்ராபெரி கேக்கின்மேல் இருந்த மெழுகுவர்த்தியை யுவாவும் பார்கவியும் சேர்ந்து ஊதி அணைக்க எல்லா ரோபோக்களும் ஆரவாரமாக சேர்ந்து குரல் எழுப்பியது. நீண்ட நாட்கள் கழித்து அன்றுதான் இருவரும் மனம் விட்டு சிரித்தார்கள்.
-4-
புதுடெல்லியில் உள்ள மத்திய கட்டுப்பாட்டு அலுவலக ஆணைக்கிணங்க அங்காடியின் எல்லா கதவுகளும் காலை பத்து மணிக்கு திறக்கப்பட்டது. எல்லா ரோபோக்களும் யுவாவையும் பார்கவியையும் ஆரவாரத்துடன் வழியனுப்பி வைத்தது. அனைத்து ரோபோக்களின் சார்பாக நிலாவும் அவர்கள் தேர்ந்தெடுத்து வைத்திருந்த பரிசை திருமண நாள் பரிசாக கொடுத்தது.
வளாகத்தின் வெளியே மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆங்காங்கே சுழல் கேமராக்கள். வந்திருந்த மக்கள் எல்லோரும் வாழ்த்து அட்டைகளுடனும் மலர்க்கொத்துக்களுடனும் யுவா பார்கவி ஜோடியை நோக்கி கைகளை அசைத்து மகிழ்சிக்குரல் எழுப்பியவண்ணம் இருந்தார்கள். இந்த வளாகத்தை நடத்தும் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் விளம்பரப்பிரிவு இந்த ஜோடியின் மன மாற்றத்தை நேரடியாக ஒளிபரப்பும் அனைத்து உரிமையை தொலைக்காட்சிகளுக்குக் கொடுத்ததின் மூலம் பல மில்லியன் டாலர்கள் லாபம் ஈட்டியது.
யுவா பார்கவி ஜோடிக்கு வளாகத்தின் விளம்பரத்தொகையில் ஒரு சிறிய பங்கு ஊக்கத்தொகையாக கிடைத்தாலும் இழக்க இருந்த வாழ்க்கையை மீட்டுக்கொடுத்த நிலாவின் உண்மையான அன்பை விடவா அது உயந்தது?