tamilkings88
Posts : 85 Points : 255 Join date : 2011-03-26 Age : 35 Location : Erode
| Subject: *~*இந்த உயரமே எனக்கு சந்தோசந்தான்! - மோனிகா*~* Sun Apr 10, 2011 3:01 am | |
| இந்த உயரமே எனக்கு சந்தோசந்தான்! - மோனிகா 'முத்துக்கு முத்தாக' படத்தில் அன்னமயில் என்கிற கிராமத்து நர்ஸ் கதாபாத்திரத்தில் மோனிகாவின் நடிப்பைப் பார்த்து, பத்திரிகைகளும் நண்பர்களும் உறவினர்களும் பாராட்டிய சந்தோசம். கூடவே 'நஞ்சுபுரம்' படம் வெளியாக அதில் ஆட்டுக்காரப் பெண்ணாக வரும் மோனிகாவின் நடிப்பும் பேசப்படுவதில் கூடுதல் சந்தோசத்தில் இருக்கிறார் மோனிகா. இரண்டு வார இடைவெளியில் தான் நடித்த இரண்டு படங்கள் வெளியாகி இருக்கும் மகிழ்ச்சியில் மோனிகாவின் உற்சாக பேட்டி...
'முத்துக்கு முத்தாக' படத்தில் உங்களுக்கு கிடைத்த பாராட்டுகளை எப்படி உணர்கிறீர்கள்...?
'முத்துக்கு முத்தாக' ஷூட்டிங் நடக்கும்போதே, படக்குழுவில் உள்ள அத்தனை பேரும் என்னோட நடிப்பை பாராட்டுனாங்க. அதோட நான், விக்ராந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரிதும் பேசப்படும்னு சொன்னாங்க. படம் வெளியான பின் நிறைய தெரிஞ்சவங்க, தெரியாதவங்க, சினிமா இண்டஸ்ட்ரில இருக்கிறவங்கன்னு நிறைய பேர் போன் பண்ணி பாராட்டினாங்க. காதல் நிறைவேறாம தவிக்கிறத வெளிக்காட்டுற உங்க நடிப்பு கண்கலங்க வைக்குதுன்னு சொல்றாங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு. எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த ராசு.மதுரவன் சாருக்கு இந்த நேரத்துல நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.
அடுத்தது நஞ்சுபுரம் வெளியாகி இருக்கு. அது பற்றி சொல்லுங்க...?
இவ்வளவு சீக்கிரமா, அதாவது இரண்டு வார இடைவெளியில் நான் நடித்த இரண்டு படங்கள் வெளியாகி இருப்பது ரொம்ப சந்தோசமா இருக்கு. இப்படி என் படங்கள் வெளியாகி இருப்பது இதுதான் முதல் தடவை.
'நஞ்சுபுரம்' படத்துல மலர்ங்கிற ஆட்டுக்கார பொண்ணா நடிச்சிருக்கேன். ரொம்ப யதார்த்தமான கேரக்டர். இப்ப படம் வெளியாகி ஓடிட்டிருக்கு. நிறையபேர் என் கேரக்டரும் நடிப்பும் நல்லா இருக்குன்னு சொல்றாங்க. 2011ம் வருஷம் எனக்கு சந்தோசமா போயிட்டிருக்கு.
'அழகி' மோனிகா மீது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இருந்த அபிப்ராயம் இப்பவும் அப்படியே இருக்கிறதா?
கண்டிப்பா. முன்ன விட கூடுதலாவே இருக்கு. அது என்னோட ஈமெயில் பாத்தீங்கன்னா தெரியும். அவ்வளவு ரசிகர்கள் இப்பவும் என்னோட வெப்சைட் பார்த்து என் மெயில் அட்ரஸ் கண்டுபிடிச்சு பாசமா கடிதம் அனுப்புறாங்க. என்னோட ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அவங்க சந்தோசத்தையும் பாராட்டையும் சொல்வாங்க. இப்போ அடுத்தடுத்து 'முத்துக்கு முத்தாக', 'நஞ்சுபுரம்' வெளியாகி அனுபவங்கள் கூடினாலும் நான் எப்பவுமே 'அழகி' மோனிகா தான்.
உங்களுக்கு தனித்துவமான நாயகி என்ற அடையாளம் ஏன் இன்னும் கிடைக்கவில்லை?
அதுக்கான நேரம் இப்பதான் வர ஆரம்பிச்சிருக்குன்னு நினைக்கிறேன். ஏன்னா, எனக்குன்னு தனி அடையாளம் தர்ற மாதிரி படங்கள் 'அழகி'க்கு அப்புறம் எனக்கு அமையலேன்னு தான் சொல்லணும். இப்போ 'முத்துக்கு முத்தாக', 'நஞ்சுபுரம்' அதைக் கொஞ்சம் நிறைவேத்தி இருக்கு. மற்றபடி நான் சினிமாவுக்குள்ள வரும்போது, ஒரு ஹீரோயினா வரல. ஒரு ஹிட் படத்தோட ஹீரோயினா நான் அறிமுகம் ஆகி இருந்தா எனக்கு இன்னும் அடையாளம் கிடைக்கலேங்கிறது பற்றி நான் கவலைப்படலாம். ஆனா, நான் குழந்தை நட்சத்திரமா அறிமுகமாகி, அதுக்கப்புறம் சின்னச் சின்ன சப்போர்ட்டிங் கேரக்டர்ஸ் பண்ணினேன். அதுக்கப்புறம்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். என்னைப் பொறுத்தவரை நான் இப்ப இருக்கிற இடம் உயரமான இடம் தான். இந்த உயரமே எனக்கு சந்தோசந்தான். இதைவிட உயரமான இடத்திற்கு அடுத்தடுத்து அமைகிற படங்கள் என்னைக் கொண்டு போகும்னு நம்புறேன்.
'சிலந்தி' படத்துல கிளாமரா நடிச்சீங்க, அப்புறம் நடிக்க மாட்டேன்னு சொன்னீங்க... ஏன்?
கிளாமரா நடிக்கணும்னு நான் எப்பவும் ஆசைப்பட்டதில்ல. 'சிலந்தி' படம் ரொம்ப பெரிய அளவுல பேசப்படும்னு நம்பினேன். அதோட அது கதைக்கு தேவைப்படுதுன்னு இயக்குநர் விரும்பி கேட்டதால் நடிச்சேன். அதுக்கப்புறம் கமிட் பண்ண படங்கள் எல்லாமே கிளாமரா நடிக்க மாட்டேன்னு தான் கமிட் பண்ணேன். அதையும் மீறி அந்த படத்துல ஒரு பாட்டுக்கு மட்டும் கிளாமரா நடிக்கச் சொல்லி என்கிட்ட கெஞ்சினாங்க. நான் எவ்வளவோ பிடிவாதமா மறுத்தேன். அப்புறம் வீணா பிரச்சினை எதுக்குன்னு அந்தப் பாட்டுல மட்டும் கிளாமரா நடிச்ச வேண்டியதாப் போச்சு. அதுக்கப்புறம் யார் என்கிட்ட கேட்டாலும் நான் கிளாமரா நடிக்கிறதில்லேன்னு சொல்லிட்டேன்.
அதோட என் ரசிகர்கள் மறக்காம என்கிட்ட கேட்டுக்கிற ஒரு விஷயம் நான் கிளாமரா நடிக்கக் கூடாதுங்கிறதுதான். நான் அவங்க வீட்டுப் பொண்ணு மாதிரி இருக்கேனாம். நிறைய ரசிகர்கள் என் அத்தை பொண்ணு மாதிரி இருக்கீங்க. அதனால கிளாமரா நடிக்காதீங்கன்னு சொல்றாங்க. ஒரு பொண்ணை அழகா காட்டுனா, அதே கிளாமர் தான். அந்தக் கிளாமர் தேவை தான். முகம் சுழிக்க வைக்கிற கிளாமர்ல நான் நடிக்க மாட்டேன்.
பெரிய இயக்குநர்கள் படங்களில் நடிக்க மாட்டீங்களா?
அப்படிச் சொல்ல முடியாது. இப்ப ராசு. மதுரவன் சார் பெரிய டைரக்டர் தான். என்னை நம்பி எனக்கு வாய்ப்பு தந்தார். கண்டிப்பா அதை நான் காப்பாத்திருக்கேன்னு நம்புறேன். அதே மாதிரி என்னை நம்பி எனக்கு யார் வாய்ப்பு தந்தாலும் நான் சின்சியரா உழைக்க தயாரா இருக்கேன். அப்படி வாய்ப்புகள் இனி ஒவ்வொண்ணா அமையும்னு நம்புறேன்.
இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்கள்...?
'அகராதி' படம் வெளியாகத் தயாரா இருக்கு. 'அகராதி' படத்தில் கதையோட முக்கிய கதாபாத்திரம் நான் தான். அதுக்கப்புறம் 'வர்ணம்' படமும் வெளியாகத் தயாரா இருக்கு. அதுல நான் ஒரு டீச்சர் கேரக்டர் பண்ணியிருக்கேன். 'வர்ணம்' வரும்போது என்னோட நடிப்பு பேசப்படும்னு நான் நம்புறேன். அதோட 'வர்ணம்' என் சினிமா வாழ்க்கையின் வண்ணத்தையும் மாற்றும் என நம்புகிறேன்.
இது தவிர, தமிழ்ல 'நரன்' என்ற படத்தில் நடிக்கிறேன். கன்னடத்தில் 'ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' படத்தில் நடிக்கிறேன். 'நோ என்ட்ரி' இந்திப் படத்தின் ரீமேக் அது. இந்தியில் இஷா தியோல் நடிச்ச கேரக்டர்ல நான் நடிக்கிறேன். அப்புறம் இரண்டு தமிழ் படங்களில் நடிச்சிட்டிருக்கேன். அந்தப் படங்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் 'முத்துக்கு முத்தாக' படத்திற்கு அப்புறம் இரண்டு மூணு படங்களுக்காக பேசிட்டிருக்காங்க. கதை கேட்டுட்டிருக்கேன். இந்த வருஷம் எனக்கு ஆரம்பமே நல்லா இருக்கு. | |
|