BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 3.  விண்ணகரக் கோயில் Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 3. விண்ணகரக் கோயில்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 3.  விண்ணகரக் கோயில் Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 3. விண்ணகரக் கோயில்   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 3.  விண்ணகரக் கோயில் Icon_minitimeFri May 06, 2011 4:59 am

கல்கியின் பொன்னியின் செல்வன்


முதல் பாகம் : புது வெள்ளம்

3. விண்ணகரக் கோயில்


சில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள் விளைகின்றன. வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு சிறிய நிகழ்ச்சி இப்போது நேர்ந்தது.

சாலையோரத்திலே நின்று பழுவேட்டரையரின் பரிவாரங்கள் போவதை வந்தியத்தேவன் பார்த்துக் கொண்டிருந்தான் அல்லவா? அவன் நின்ற இடத்துக்குச் சற்றுத் தூரத்திலேயே அவனுடைய குதிரை நின்று கொண்டிருந்தது.

பழுவேட்டரையரின் ஆட்களிலே கடைசியாகச் சென்ற சிலரின் பார்வை அக்குதிரை மீது சென்றது.

"அடே! இந்தக் குருதையைப் பாரடா!" என்றான் ஒருவன்.

"குருதை என்று சொல்லாதேடா! குதிரை என்று சொல்!" என்றான் இன்னொருவன்.

"உங்கள் இலக்கோண ஆராய்ச்சி இருக்கட்டும்; முதலில் அது குதிரையா அல்லது கழுதையா என்று தெரிந்துகொள்ளுங்கள்!" என்றான் இன்னொரு வேடிக்கைப் பிரியன்.

"அதையும் பார்த்துவிடலாமா!" என்று சொல்லிக் கொண்டு அந்த ஆட்களில் ஒருவன் குதிரையை அணுகி வந்தான். அதன் தாவி ஏற முயன்றான். ஏறப் பார்க்கிறவன் தன் எஜமானன் அல்ல என்பதை அந்த அறிவுக் கூர்மையுள்ள குதிரை தெரிந்து கொண்டது. அந்த வேற்று மனிதனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று முரண்டு பிடித்தது.

"இது பொல்லாத குதிரையடா! இதன்பேரில் நான் ஏறக் கூடாதாம்! பரம்பரையான அரசகுலத்தவன் தான் இதன் மேல் ஏறலாமாம். அப்படியென்றால் தஞ்சாவூர் முத்தரையன் திரும்பி வந்துதான் இதன்மேல் ஏறவேண்டும்!" என்று அவன் சமத்காரமாய்ப் பேசியதைக் கேட்டு மற்ற வீரர்கள் நகைத்தார்கள்.

ஏனென்றால், தஞ்சாவூர் முத்தரையர் குலம் நசிந்துப்போய் நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது சோழர்கள் புலிக்கொடி தஞ்சாவூரில் பறந்து கொண்டிருந்தது.

"குதிரையின் எண்ணம் அவ்விதம் இருக்கலாம். ஆனால், என்னைக் கேட்டால், செத்துப் போன தஞ்சாவூர் முத்தரையனைக் காட்டிலும் உயிரோடு இருக்கிற தாண்டவராயனே மேல் என்பேன்!" என்றான் மற்றொரு வீரன்.

"தாண்டவராயா! உன்னை ஏற்றிக்கொள்ள மறுக்கும் குதிரை நிஜக்குதிரைதானா என்று பார்த்துவிடு! ஒருவேளை, பெருமாளின் திருநாளுக்கு வந்த பொய்க்கால் குதிரையாயிருந்தாலும் இருக்கலாம்!" என்றான் மற்றொரு பரிகாசப் பிரியன்.

"அதையும் சோதித்துப் பார்த்து விடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டு குதிரை மீது ஏறப்போன தாண்டவராயன் அதனுடைய வாலை முறுக்கினான். ரோஷமுள்ள அக்குதிரை உடனே பின்னங்கால்களை நாலு தடவை விசிறி உதைத்துவிட்டு ஓட்டம் பிடித்தது.

"குருதை ஓடுகிறதடா! நிஜக் குருதைதானடா!" என்று அவ்வீரர்கள் கூச்சலிட்டு, "உய்! உய்!" என்று கோஷித்து, ஓடுகிற குதிரையை மேலும் விரட்டினார்கள்.

குதிரை, திருநாள் கூட்டத்துக்கிடையே புகுந்து ஓடிற்று. ஜனங்கள் அதன் காலடியில் மிதிபடாமலிருப்பதற்காகப் பரபரப்புடன் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டார்கள். அப்படியும் அவர்களில் சிலர் உதைபட்டு விழுந்தார்கள். குதிரை நெறி கெட்டு வெறிகொண்டு ஓடியது.

இவ்வளவும் வந்தியத்தேவன் கண்ணெதிரே அதி சீக்கிரத்தில் நடந்துவிட்டது. அவனுடைய முகத் தோற்றத்திலிருந்து குதிரை அவனுடைய குதிரை என்பதை ஆழ்வார்க்கடியான் கண்டு கொண்டான்.

"பார்த்தாயா, தம்பி! அந்தப் பழுவூர்த் தடியர்கள் செய்த வேலையை! என்னிடம் நீ காட்ட வந்த வீரத்தை அவர்களிடம் காட்டுவதுதானே?' என்று குத்திக் காட்டினான்.

வந்தியத்தேவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. எனினும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையைக் கடைபிடித்தான். பழுவூர் வீரர்கள் பெருங்கூட்டமாயிருந்தனர். அவ்வளவு பேருடன் ஒரே சமயத்தில் சண்டைக்கு போவதில் பொருள் இல்லை. அவர்கள் இவனுடன் சண்டை போடுவதற்காகக் காத்திருக்கவும் இல்லை. குதிரை ஓடியதைப் பார்த்துச் சிரித்து விட்டு, அவர்களும் விரைந்து மேலே நடந்தார்கள்.

குதிரை போன திசையை நோக்கி வந்தியத்தேவன் சென்றான். அது கொஞ்ச தூரம் ஓடிவிட்டுத் தானாகவே நின்று விடும் என்று அவனுக்குத் தெரியும். ஆகையால் அதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. பழுவேட்டரையரின் அகம்பாவம் பிடித்த ஆட்களுக்கு என்றைக்காவது ஒருநாள் நன்றாகப் புத்தி கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்தது.

புளியந்தோப்புக்கு அப்பால், ஜன சஞ்சாரமில்லாத இடத்தில் குதிரை சோகமே வடிவமாக நின்று கொண்டிருந்தது. வந்தியத்தேவன் அதன் அருகில் சென்றதும், குதிரை கனைத்தது. "ஏன் என்னைவிட்டு பிரிந்து சென்று, இந்தச் சங்கடத்துக்கு உள்ளாக்கினாய்?" என்று அந்த வாயில்லாப் பிராணி குறை கூறுவதுபோல் அதன் கனைப்புத் தொனித்தது. வந்தியத்தேவன் அதன் முதுகைத் தட்டிச் சாந்தப்படுத்தினான். பிறகு அதைத் திருப்பி அழைத்துக் கொண்டு சாலைப்பக்கம் நோக்கி வந்தான். திருவிழாக் கூட்டத்தில் இருந்தவர்கள் பலரும் அவனைப் பார்த்து, "இந்த முரட்டுக் குதிரையை ஏன் கூட்டத்தில் கொண்டுவந்தாய், தம்பி! எத்தனை பேரை அது உதைத்துத் தள்ளிவிட்டது?" என்றார்கள்.

"இந்தப் பிள்ளை என்ன செய்வான்? குதிரைதான் என்ன செய்யும்? அந்தப் பழுவேட்டரையரின் முரட்டு ஆட்கள் அல்லவா இப்படிச் செய்துவிட்டார்கள்?" என்று இரண்டொருவர் சமாதானம் சொன்னார்கள்.

ஆழ்வார்க்கடியான் இன்னமும் சாலையில் காத்துக்கொண்டு நின்றான். "இதேதடா சனியன்? இவன் நம்மை விடமாட்டான் போலிருக்கிறதே!" என்று எண்ணி வந்தியத்தேவன் முகத்தைச் சுளுக்கினான்.

"தம்பி! நீ எந்தப் பக்கம் போகப் போகிறாய்?" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.

"நானா? கொஞ்சம் மேற்குப் பக்கம் சென்று, பிறகு, தெற்குப் பக்கம் திரும்பி, சிறிது கிழக்குப் பக்கம் வளைத்துக்கொண்டு போய் அப்புறம் தென்மேற்குப் பக்கம் போவேன்!" என்றான் வந்தியத்தேவன்.

"அதையெல்லாம் நான் கேட்கவில்லை. இன்று ராத்திரி எங்கே தங்குவாய் என்று கேட்டேன்".

"நீ எதற்காக அதைக் கேட்கிறாய்?"

"ஒருவேளை கடம்பூர் சம்புவரையர் அரண்மனையில் நீ தங்குவதாயிருந்தால் எனக்கு அங்கே ஒரு வேலை இருக்கிறது..."

"உனக்கு மந்திரதந்திரம் தெரியுமா, என்ன? நான் கடம்பூர் அரண்மனைக்குப் போகிறேன் என்பதை எப்படி அறிந்தாய்?"

"இதில் என்ன அதிசயம்? இன்றைக்குப் பல ஊர்களிலிருந்தும் பல விருந்தாளிகள் அங்கே வருகிறார்கள். பழுவேட்டரையரும் அவர் பரிவாரமும் அங்கேதான் போகிறார்கள்.

"மெய்யாகவா?" என்று வந்தியத்தேவன் தன் வியப்பை வெளியிட்டான்.

"மெய்யாகத்தான்! அது உனக்கு தெரியாதா, என்ன? யானை, குதிரை, பல்லக்கு, பரிவட்டம் எல்லாம் கடம்பூர் அரண்மனையைச் சேர்ந்தவைதான். பழுவேட்டரையரை எதிர்கொண்டு அழைத்துப் போகின்றன. பழுவேட்டரையர் எங்கே போனாலும் இந்த மரியாதையெல்லாம் அவருக்கு நடைபெற்றே ஆக வேண்டும்."

வந்தியத்தேவன் மௌன யோசனையில் ஆழ்ந்தான். பழுவேட்டரையர் தங்குமிடத்தில் தானும் தங்குவதென்பது எளிதில் கிடைக்ககூடிய வாய்ப்பு அல்ல. அந்த மாபெரும் வீரருடன் பழக்கம் செய்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் அவருடைய முரட்டுப் பரிவாரங்களுடன் ஏற்பட்ட அனுபவம் இன்னும் அவனுக்குக் கசந்து கொண்டிருந்தது.

"தம்பி! எனக்கு ஒரு உதவி செய்வாயா?" என்று ஆழ்வார்க்கடியான் இரக்கமான குரலில் கேட்டான்.

"உனக்கு நான் செய்யக்கூடிய உதவி என்ன இருக்கமுடியும்? இந்தப் பக்கத்துக்கே நான் புதியவன்."

"உன்னால் முடியக்கூடிய காரியத்தையே சொல்வேன். இன்றிரவு என்னைக் கடம்பூர் அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போ!"

"எதற்காக? அங்கே யாராவது வீர சைவர் வருகிறாரா? 'சிவன் பெரிய தெய்வமா? திருமால் பெரிய தெய்வமா?' என்று விவாதித்து முடிவு கட்டப் போகிறீர்களா?"

"இல்லை, இல்லை, சண்டை பிடிப்பதே என் வேலை என்று நினைக்க வேண்டாம். இன்றிரவு கடம்பூர் மாளிகையில் பெரிய விருந்து நடைபெறும். விருந்துக்குப் பிறகு களியாட்டம், சாமியாட்டம், குரவைக் கூத்து - எல்லாம் நடைபெறும். குரவைக் கூத்துப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை!"

"அப்படியிருந்தாலும், நான் உன்னை எப்படி அழைத்துப் போக முடியும்?"

"என்னை உன் பணியாள் என்று சொன்னால் போகிறது."

வந்தியத்தேவனுக்கு முன்னால் ஏற்பட்ட சந்தேகம் வலுப்பட்டது.

"அந்த மாதிரி ஏமாற்று மோசடிக்கெல்லாம் நீ வேறு யாரையாவது பார்க்கவேண்டும். உன்னைப் போன்ற பணியாளன் எனக்குத் தேவையில்லை. சொன்னால் நம்பவும் மாட்டார்கள். மேலும் நீ சொன்னதையெல்லாம் யோசித்துப் பார்த்தால் என்னையே இன்று கோட்டைக்குள் விடுவார்களோ என்ற சந்தேகம் உண்டாகிறது."

"அப்படியானால், நீ கடம்பூருக்கு அழைப்புப் பெற்றுப் போகவில்லையென்று சொல்லு!"

"ஒரு வகையில் அழைப்பு இருக்கிறது. சம்புவரையர் மகன் கந்தமாறவேள் என்னுடைய உற்ற நண்பன். இந்தப் பக்கம் வந்தால் அவர்களுடைய அரண்மனைக்கு அவசியம் வரவேணுமென்று என்னைப் பலமுறை அழைத்திருக்கிறான்."

"இவ்வளவுதானா? அப்படியானால் உன் பாடே இன்றைக்குக் கொஞ்சம் திண்டாட்டமாகத்தான் இருக்கும்!"

இருவரும் சிறிது நேரம் மௌனமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

"ஏன் என்னை இன்னும் தொடர்ந்து வருகிறாய்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"அந்தக் கேள்வியையே நானும் திருப்பிக் கேட்கலாம். நீ ஏன் என்னைத் தொடர்கிறாய்? உன் வழியே போவதுதானே?"

"வழி தெரியாத குற்றத்தினால் தான், நம்பி! நீ எங்கே போகிறாய்? ஒருவேளை கடம்பூருக்குத்தானா?"

"இல்லை; நீ தான் என்னை அங்கு அழைத்துப் போக முடியாது என்று சொல்லிவிட்டாயே? நான் விண்ணகரக் கோயிலுக்குப் போகிறேன்."

"வீரநாராயணப் பெருமாள் சந்நிதிக்குத்தானே?"

"ஆம்."

"நானும் அந்த ஆலயத்துக்கு வந்து பெருமாளைச் சேவிப்பதற்கு விரும்புகிறேன்."

"ஒருவேளை விஷ்ணு ஆலயத்துக்கு நீ வரமாட்டாயோ என்று பார்த்தேன். பார்க்க வேண்டிய கோயில்; தரிசிக்க வேண்டிய சந்நிதி. இங்கே ஈசுவரமுனிகள் என்ற பட்டர், பெருமாளுக்குக் கைங்கரியம் செய்துவருகிறார். அவர் பெரிய மகான்."

"நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரே கூட்டமாயிருக்கிறதே! கோயிலில் ஏதாவது விசேஷ உற்சவம் உண்டோ?"

"ஆம்; இன்று ஆண்டாள் திருநட்சத்திரம். ஆடிப் பதினெட்டாம் பெருக்கோடு ஆண்டாளின் திருநட்சத்திரமும் சேர்ந்து கொண்டது. அதனால்தான் இவ்வளவு கோலாகலம். தம்பி! ஆண்டாள் பாசுரம் ஏதாவது நீ கேட்டிருக்கிறாயா?"

"கேட்டதில்லை."

"கேட்காதே! அதைக் காதினாலேயே கேட்காதே!"

"ஏன் அவ்வளவு வைஷம்யம்?"

"வைஷம்யமும் இல்லை; விரோதமும் இல்லை; உன்னுடைய நன்மைக்குச் சொன்னேன். ஆண்டாளின் இனிய பாசுரத்தைக் கேட்டு விட்டாயானால், அப்புறம் வாளையும் வேலையும் விட்டெறிந்து விட்டு என்னைப் போல் நீயும் கண்ணன் மேல் காதல் கொண்டு விண்ணகர யாத்திரை கிளம்பி விடுவாய்!"

"உனக்கு ஆண்டாள் பாசுரங்கள் தெரியுமா? பாடுவாயா?"

"சில தெரியும்; வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார் பாசுரங்களில் சில தெரியும். பெருமாள் சந்நிதியில் பாடப் போகிறேன் வேணுமானால் கேட்டுக் கொள்! இதோ கோவிலும் வந்து விட்டது!"

இதற்குள் உண்மையிலேயே வீரநாராயணப் பெருமாள் கோயிலை அவர்கள் நெருங்கி வந்து விட்டார்கள்
* * * * *

விஜயாலய சோழனின் பேரனான முதற் பராந்தக சோழன் 'மதுரையும், ஈழமும் கொண்ட கோப்பரகேசரி' என்ற பட்டம் பெற்றவன். சோழப் பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன் அவனே. தில்லைச் சிற்றம்பலத்துக்கு அவன் பொன் கூரை வேய்ந்து சரித்திரப் புகழ் பெற்றவன். சோழ சிகாமணி, சூரசிகாமணி முதலிய பல விருதுப் பெயர்களோடு வீரநாராயணன் என்னும் சிறப்புப் பெயரையும் அவன் கொண்டிருந்தான்.

பராந்தகனுடைய காலத்தில் வடக்கே இரட்டை மண்டலத்து ராஷ்டிரகூட மன்னர்கள் வலிமை பெற்று விளங்கினார்கள். மானிய கேடத்திலிருந்து அவர்கள் படையெடுத்து வரக் கூடுமென்று பராந்தகன் எதிர்பார்த்தான். எனவே, தனது முதற் புதல்வனாகிய இளவரசன் இராஜாதித்தனை ஒரு பெரிய சைன்யத்துடன் திருமுனைப்பாடி நாட்டில் இருக்கச் செய்தான். அந்தச் சைன்யத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான வீரர்கள் வேலையின்றிச் சும்மா இருக்க நேர்ந்த காலத்தில் இராஜாதித்தன் ஒரு யோசனை செய்தான். குடிமக்களுக்கு உபயோகமான ஒரு பெரும் பணியை அவர்களைக் கொண்டு செய்விக்க எண்ணினான். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று மற்றவர்களாலும் அழைக்கப்பட்ட பெருநதியின் வழியாக அளவில்லாத வெள்ள நீர் ஓடி வீணே கடலில் கலந்துகொண்டிருந்தது. அதில் ஒரு பகுதியைப் பயன்படுத்த எண்ணித் தன் வசமிருந்த வீரர்களைக் கொண்டு கடல் போன்ற விசாலமான ஏரி ஒன்றை அமைத்தான். அதைத் தன் அருமைத் தந்தையின் பெயரால் வீரநாராயண ஏரி என்று அழைத்தான். அதன் கரையில் வீரநாராயண புரத்தை ஏற்படுத்தி அதில் ஒரு விண்ணகரையும் எடுத்தான். விஷ்ணுக்கிருஹம் என்பது அந்நாளில் விண்ணகரம் என்று தமிழாக்கப்பட்டு வழங்கிற்று. ஸ்ரீமத் நாராயணமூர்த்தி நீரில் பள்ளிகொண்டு நீர்மயமாக இருப்பவர் அல்லவா? எனவே, ஏரிகளைக் காத்தருளுவதற்காக ஏரிக் கரையையொட்டி ஸ்ரீ நாராயண மூர்த்திக்குக் கோயில் எடுப்பது அக்காலத்து வழக்கம். அதன்படி வீரநாராயணபுர விண்ணகரத்தில் வீரநாராயணப் பெருமாளைக் கோயில் கொண்டு எழுந்தருளச் செய்தான்.

அத்தகைய பெருமாளின் கோயிலுக்குத்தான் இப்போது வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் சென்றார்கள். சந்நிதிக்கு வந்து நின்றதும் ஆழ்வார்க்கடியான் பாட ஆரம்பித்தான். ஆண்டாளின் பாசுரங்கள் சிலவற்றைப் பாடிய பிறகு நம்மாழ்வாரின் தமிழ் வேதத்திலிருந்து சில பாசுரங்களைப் பாடினான்:-

"பொலிக பொலிக பொலிக
போயிற்று வல்லுயிர்ச்சாபம்
நலியும் நரகமும் நைந்த
நமனுக் கிங்கு யாதொன்றுமில்லை
கலியும் கெடும் கண்டு கொள்மின்
கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசைபாடி
ஆடி உழி தரக் கண்டோம்
கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக் கினியன கண்டோம்!
தொண்டீர் எல்லீரும் வாரீர்!
தொழுது தொழுது நின்றார்த்தும்!
வண்டார் தண்ணந் துழாயான்
மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்டான் பாடி நின்றாடிப்
பரந்து திரிகின்றனவே!"

இவ்விதம் பாடி வந்தபோது ஆழ்வார்க்கடியானுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகித் தாரை தாரையாய் அவன் கன்னத்தின் வழியாக வழிந்தோடியது. வந்தியத்தேவன் அப்பாடல்களைக் கவனமாகவே கேட்டுவந்தான். அவனுக்கு கண்ணீர் வராவிட்டாலும் உள்ளம் கசிந்துருகியது. ஆழ்வார்க்கடியானைப் பற்றி அவன் முன்னர் கொண்டிருந்த கருத்தும் மாறியது. 'இவன் பரமபக்தன்!' என்று எண்ணிக்கொண்டான்.

வந்தியதேவனைப் போலவே கவனமாக அப்பாசுரங்களை இன்னும் சிலரும் கேட்டார்கள். கோவில் முதலிமார்கள் கேட்டார்கள். அர்ச்சகர் ஈசுவரப்பட்டரும் கண்ணில் நீர் மல்கி நின்று கேட்டார். அவருக்கு அருகில் நின்று கொண்டு அவருடைய இளம் புதல்வன் பால்மணம் மாறாப் பாலகன் ஒருவன் கேட்டிருந்தான்.

ஆழ்வார்க்கடியான் பத்துப் பாசுரங்களைப் பாடிவிட்டு

"கலி வயல் தென்னை குருகூர்க்
காரி மாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்தும்
உள்ளத்தை மாசறுக்குமே"

என்று பாசுரத்தை முடித்தான்.

கேட்டிருந்த பட்டரின் குமாரனாகிய பாலகன் தன் தந்தையிடம் ஏதோ கூறினான். அவர் மல்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு "ஐயா! குருகூர்ச் சடகோபர் என்னும் நம்மாழ்வார் மொத்தம் ஆயிரம் பாடல்கள் பாடியிருப்பதாகத் தெரிகிறதே? அவ்வளவும் உமக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.

"அடியேன் அவ்வளவு பாக்கியம் செய்யவில்லை. சில பத்துக்கள்தான் எனக்குத் தெரியும்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"தெரிந்தவரையில் இந்தப் பிள்ளைக்குச் சொல்லிக்கொடுக்க வேணும்" என்றார் ஈசுவரமுனிகள்.
* * * * *

பின்னால், இந்த ஊர் பல பெருமைகளை அடையப் போகிறது. பால் வடியும் முகத்தில் தேஜஸ் பொலிய நின்று நம்மாழ்வார் பாசுரங்களைக் கேட்ட பாலகன் வளர்ந்து, நாதமுனிகள் என்ற திருநாமத்துடன் வைஷ்ணவ ஆச்சாரிய பரம்பரையில் முதலாவது ஆச்சாரியார் ஆகப் போகிறார். குருகூர் என்னும் ஆழ்வார் திருநகருக்குச் சென்று 'வேதம் தமிழ் செய்த நம்மாழ்வாரின்' ஆயிரம் பாசுரங்களையும் தேடிச் சேகரித்து வரப்போகிறார். அப்பாசுரங்களை அவருடைய சீடர்கள் இசையுடன் பாடி நாடெங்கும் பரப்பப் போகிறார்கள்.

நாதமுனிகள் பேரராக அவதரிக்கப் போகும் ஆளவந்தார் பல அற்புதங்களைச் செய்தருளப் போகிறார்.

இந்த இருவரும் அவதரித்த க்ஷேத்திரத்தைத் தரிசிக்க, உடையவராகிய ஸ்ரீ ராமானுஜரே ஒரு நாள் வரப்போகிறார். வரும்போது வீரநாராயண ஏரியையும் அதன் எழுபத்து நான்கு கணவாய்களையும் பார்த்து அதிசயிக்கப் போகிறார். ஏரித் தண்ணீர் எழுபத்து நாலு கணவாய்களின் வழியாகப் பாய்ந்து மக்களை வாழ வைப்பது போலவே, நாராயணனுடைய கருணை வெள்ளத்தை ஜீவகோடிகளுக்குப் பாயச் செய்வதற்காக எழுபத்து நாலு ஆச்சார்ய பீடங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அம்மகானின் உள்ளத்தில் உதயமாகப் போகிறது. அதன்படியே எழுபத்து நான்கு 'சிம்மாசனாதிபதிகள்' என்ற பட்டத்துடன் வைஷ்ணவ ஆச்சாரிய புருஷர்கள் ஏற்படப் போகிறார்கள்.

இந்த மகத்தான நிகழ்ச்சிகளையெல்லாம் வைஷ்ணவ குரு பரம்பரைச் சரித்திரம் விவரமாகச் சொல்லட்டும் என்று விட்டு விட்டு, மறுபடியும் நாம் வந்தியத்தேவனைக் கவனிப்போம்.

பெருமாளைச் சேவித்துவிட்டு ஆலயத்துக்கு வெளியில் வந்ததும் வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, "நம்பிகளே! தாங்கள் இத்தகைய பரம பக்தர் என்றும், பண்டித சிகாமணி என்றும் எனக்குத் தெரியாமல் போயிற்று, ஏதாவது அபசாரமாக நான் பேசியிருந்தால் மன்னிக்க வேண்டும்" என்றான்.

"மன்னித்து விடுகிறேன்; தம்பி! ஆனால் இப்போது எனக்கு, ஒரு உதவி செய்வாயா, சொல்!"

"தாங்கள் கேட்கும் உதவி என்னால் முடியாது என்றுதான் சொன்னேனே? நீங்களும் ஒப்புக் கொண்டீர்களே?"

"இது வேறு விஷயம். ஒரு சிறிய சீட்டுக் கொடுக்கிறேன். கடம்பூர் அரண்மனையில் நீ தங்கினால் தக்க சமயம் பார்த்து ஒருவரிடம் அதைக் கொடுக்க வேண்டும்."

"யாரிடம்?"

"பழுவேட்டரையரின் யானைக்குப் பின்னால் மூடு பல்லக்கில் சென்றாளே, அந்தப் பெண்மணியிடம்!"

"நம்பிகளே! என்னை யார் என்று நினைத்தீர்கள்? இம்மாதிரி வேலைக்கெல்லாம் நான் தானா அகப்பட்டேன்? தங்களைத் தவிர வேறு யாராவது இத்தகைய வார்த்தையை என்னிடம் சொல்லியிருந்தால்..."

"தம்பி! படபடப்பு வேண்டாம்! உன்னால் முடியாது என்றால் மகாராஜனாய்ப் போய் வா! ஆனால் எனக்கு மட்டும் இந்த உதவி நீ செய்திருந்தால், ஏதாவது ஒரு சமயத்தில் உனக்கும் என் உதவி பயன்பட்டிருக்கும். பாதகமில்லை, போய் வா!"

வந்தியத்தேவன் பிறகு அங்கே ஒரு கணம் கூட நிற்கவில்லை. குதிரை மீது தாவி ஏறி விரைவாக விட்டுக்கொண்டு கடம்பூரை நோக்கிச் சென்றான்.


















Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 3. விண்ணகரக் கோயில்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 40. மந்திராலோசனை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 19. சமயசஞ்சீவி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 55. "பைத்தியக்காரன்"

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: