BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  55. "பைத்தியக்காரன்" Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 55. "பைத்தியக்காரன்"

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  55. "பைத்தியக்காரன்" Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 55. "பைத்தியக்காரன்"   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  55. "பைத்தியக்காரன்" Icon_minitimeFri Jun 10, 2011 3:55 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

55. "பைத்தியக்காரன்"



கடம்பூரிலிருந்து தஞ்சைப் பிரயாணத்தின் முதற்பகுதியில் வந்தியதேவன் பெரும்பாலும் நினைவிழந்த நிலையில் இருந்தான். கட்டை வண்டி ஒன்றில் அவனைக் கட்டிப் போட்டிருந்தார்கள். கரிகாலன் உயிரிழந்த அன்றிரவு புகையும் தீயும் அவனை வெகுவாக வாட்டியிருந்தன. பிரயாணத்தின் போது சிறிது நினைவு தோன்றிய போதெல்லாம் கண்களின் எரிச்சலும், உடம்பின் நோவும் அவனுக்கு அளவில்லாத வேதனையை உண்டாக்கின. அரை நினைவாக இருந்தபோது ஏதேதோ பயங்கரமான தோற்றங்கள் அவன் முன்னே தோன்றி அவனை வாட்டி எடுத்தன. வீர பாண்டியனுடைய தலை மட்டும் அவன் முகத்தருகில் வந்து "அடே! நீயா என் பழிக்குக் குறுக்கே நிற்கிறாய்?" என்று கூறிவிட்டுக் கோபமாக விழித்தது. நந்தினி சில சமயம் அணிபணி அலங்காரங்களுடன் அவன் முன்னால் நின்று புன்னகை புரிந்து, அவனைத் தன் மாயவலையில் அகப்படுத்தப் பார்த்தாள். இன்னொரு சமயம் தலைவிரிகோலமாக நின்று கண்ணீர் விட்டுப் புலம்பினாள். மற்றொரு சமயம் பேய்க்கோலம் பூண்டு பயங்கரமாகச் சிரித்தாள். ஆதித்த கரிகாலனைத் தொடர்ந்து ஒரு நிழலுருவம் கையில் கத்தியுடன் வந்து கொண்டிருந்தது வந்தியத்தேவன் அதைத் தடுப்பதற்காகப் பாய்ந்து சென்ற போதெல்லாம் இன்னொரு ராட்சத நிழல் வடிவம் பின்புறமாக வந்து அவன் கழுத்தைப் பிடித்து இறுக்கியது. கொழுந்து விட்டு எரிந்த நெருப்பில் அவனை ரவிதாஸனும், அவனுடைய தோழர்களும் தூக்கிப் போட்டார்கள். அவன் உடம்பு பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, கந்தமாறன் அவனைப் பார்த்து, "அடே சிநேகத் துரோகி! உனக்கு நன்றாய் வேணும்!" என்றான். பார்த்திபேந்திரன் அவனைப் பார்த்தும், "அடே! உனக்கும் இளைய பிராட்டி குந்தவைக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டதா? முகூர்த்தம் எப்போது?" என்று கேட்டுவிட்டு இடி இடி என்று சிரித்தான். சேந்தன் அமுதன் அவனைத் தீயிலிருந்து தப்புவிப்பதற்காக எங்கிருந்தோ ஓடி வந்தான். வைத்தியரின் மகன் பினாகபாணி ஒரு மரத்தடியில் ஒளிந்திருந்து சேந்தன் அமுதன் தலையில் ஒரு பெரிய தடியால் அடித்தான்.

உடம்பெல்லாம் தீப்பற்றி எரிந்தபோது வந்தியத்தேவனுக்குச் சகிக்க முடியாத தாகம் எடுத்தது. "தண்ணீர் தண்ணீர்!" என்று அலற எண்ணினான். ஆனால் சத்தம் வரவில்லை. தொண்டை வறண்டு நாக்கு வீங்கி மேலண்ணத்துடன் ஒட்டிக் கொண்டு அவனைப் பேச முடியாமல் செய்தது. இந்த நிலையில் மணிமேகலை கையில் பொற்கிண்ணத்தில் தேவாமிர்தத்தை எடுத்துக் கொண்டு வந்து அவன் வாயில் ஊற்றினாள். அவளுக்கு அவன் நன்றி கூற எண்ணுவதற்குள் அவள் இருளில் மறைந்து விட்டாள்!... ஆகா இந்தப் பெண்ணின் அன்புக்குப் பிரதியாக மூன்று உலகங்களையும் அளிக்கலாம்! ஆனால் தனக்கு என்று ஒரு சாண் அகலம் உள்ள இராஜ்யம் கூட இல்லாத நிலையில் மணிமேகலைக்கு மூன்று உலகங்களையும் கொடுப்பது பற்றி நினைப்பது என்ன அறிவீனம்?

அதோ பூங்குழலி! என் "காதலர்களைப் பார்!" என்று கொள்ளிவாய்ப் பிசாசுகளை அவள் சுட்டிக் காட்டுகிறாள். என்ன அதிசயமான பெண்! "இந்த மண்ணுலகத்தில் ஏன் உழலுகிறாய்? பொன்னுலகத்துக்கு உன்னை அழைத்துச் செல்லுகிறேன் பார்!" என்று கூறுகிறாள். "பொன்னியின் செல்வன் உள்ள உலகத்தைத்தானே சொல்லுகிறாய்?" என்கிறான் வந்தியத்தேவன். உடனே நாலாபுறத்திருந்தும் கொள்ளிவாய்ப் பிசாசுகள் வந்து அவனைச் சூழ்ந்து கொள்ளுகின்றன. வந்தியத்தேவன் பீதியடைந்து கண்களை மூடிக் கொள்கிறான். பிசாசுகள் அவனைக் கட்டித் தூக்கிக் கொண்டுபோய்க் கோடிக்கரையின் மணல் மேட்டின் மேலேறிக் கீழே உருட்டி விடுகின்றன...

வந்தியத்தேவன் திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்க்கிறான். கையில் தீவர்த்திகளைப் பிடித்த காவல் வீரர்கள் இவனை ஒரு படகில் ஏற்றியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்கிறான். இது என்ன நதியோ, தெரியவில்லை. கொள்ளிடம் அல்லது காவேரி அல்லது குடமுருட்டி ஆறாக இருக்கலாம்... இதற்குள் மறுபடியும் இருள் வந்து கவிந்து அவன் அறிவை மறைத்துக் கொள்கிறது.

இப்படி எத்தனையோ விதமான அனுபவங்களுக்கு பிறகு திடீரென்று ஏழு கடலும் கொந்தளித்துப் பொங்குவது போன்ற சத்தம் கேட்கிறது. அவன் மேலே ஒரு பெரிய அலை வந்து மோதி அவனை மூழ்க அடிக்கிறது. இப்போது வந்தியத்தேவன் பூரணப் பிரக்ஞை வந்தவனாகக் கண் விழித்துப் பார்க்கிறான். எதிரே சற்றுத் தூரத்தில் தஞ்சாவூர்க் கோட்டை வாசல் தெரிகிறது. அவன் கட்டுண்டு கிடந்த கட்டை வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் நாலா புறங்களிலும் ஜனசமுத்திரமாகக் காட்சி அளிப்பதைக் காண்கிறான். அத்தனை பேரும் சேர்ந்து ஓலமிடும் ஓசைதான் ஏழு கடலும் பொங்குவது போன்ற சத்தமாகத் தனக்குக் கேட்டது என்று அறிகிறான். ஆதித்த கரிகாலரின் கடைசி ஊர்வலம் தஞ்சைக் கோட்டையை நெருங்கி விட்டபடியால் தான் அவ்வளவு கூட்டம் என்று தெரிந்து கொள்கிறான்.

சிறிது நேரத்துக்கெல்லாம் அத்தனை கூட்டமும் அவ்விடம் விட்டு அகன்று சென்றுவிடுகிறது. அவனும், சம்புவரையரும் மட்டும் காவலர்கள் சிலர் புடைசூழத் தஞ்சைக் கோட்டைக்குள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆகா! அந்த மகா வீரரின் இறுதிக் கிரியைகள் நடக்கும் போது, அவருடைய அந்தரங்கத்துக்குரிய தோழனாக இருந்த தனக்கு அருகில் இருக்கவும் இயலாமற் போயிற்று. அவனுடைய துரதிர்ஷ்டம் இது மட்டுமா? கடைசி வரையில் அவருடைய உயிருக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க எவ்வளவோ முயற்சி எடுத்துத் தோல்வியடைந்ததன் பேரில் அவரைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள்! அவருடைய திருமேனி கடம்பூர் மாளிகையில் பிடித்த தீயிலேயே எரிந்து போகாமல், இத்தகைய மகா வீரனுக்குரிய மரியாதைகளைப் பெருந்திரளான மக்கள் செய்வது சாத்தியமாகும்படி செய்தவன் அவன். அப்படிப்பட்ட தன்னை இப்போது கொலைக்காரர்களையும், சதிகாரர்களையும் அடைக்கும் பாதாளச் சிறைக்குக் கொண்டு போகிறார்கள். கொண்டு போனால் என்ன? சீக்கிரத்திலேயே தன்னைப் பற்றி இளைய பிராட்டியும், பொன்னியின் செல்வரும் விசாரிப்பார்கள். விசாரித்துத் தான் சிறையில் அடைக்கப்பட்டது தெரிந்ததும் பதைபதைப்பார்கள். உடனே சிறையின் சாவியை எடுத்துக் கொண்டு ஓடி வருவார்கள், தன்னை விடுதலை செய்வார்கள். கரிகாலரின் உயிரைத் தன்னால் காப்பாற்ற முடியாமற் போனபோதிலும் அவருக்காகத் தான் செய்த முயற்சிகளையெல்லாம் அறிந்து பாராட்டுவார்கள்....

ஆனால் உண்மையாகவே பாராட்டுவார்களா? தன்னுடைய ஞாபகம் அவர்களுக்கு இருக்குமா? சகோதரனைப் பறிகொடுத்தவர்கள் அந்தத் துக்கத்தில் மற்றதையெல்லாம் மறந்துவிட மாட்டார்களா? தான் குற்றவாளி இல்லை என்று சொன்னால்தான் நம்புவார்களா? நம்பினாலும் முன்போல் தன் பேரில் நட்புரிமை பாராட்டுவார்களா?

தங்க நாணயத் தொழிற்சாலையின் வழியாக அவனைப் பாதாளச் சிறைக்குக் கொண்டு போனபோது அவனுடைய நம்பிக்கை வரவரக் குறைந்து கொண்டு வந்தது. அந்தத் தொழிற்சாலையைச் சின்னப் பழுவேட்டரையர் சற்று முன்னதாகவே மூடிவிட்டார். அந்த வழியில் அப்போது ஆங்காங்கே சிற்சில காவலர்கள் மட்டுமே நின்றார்கள். அவர்கள் பனைமரச் சின்னம் பொறித்த பட்டயங்களைப் பூண்டிருக்கவில்லை. கொடும்பாளூர் வேளார் பழைய சிறைக் காவலர்களையெல்லாம் அனுப்பி விட்டுத் தம்முடைய ஆட்களை ஆங்கே காவலுக்குப் போட்டிருந்தார். புதிதாகச் சிறைக்குள் வந்த இருவரையும், அவர்கள் வெறிக்க வெறிக்கப் பார்த்தார்கள். ஒருவரோடொருவர் "இவன்தான் கடம்பூர் சம்புவரையன்; இவன் வாணர் குலத்து வந்தியத்தேவன்; இளவரசரைக் கொன்ற சண்டாளர்கள்" என்று பேசிக் கொண்டது வந்தியத்தேவன் காதில் விழுந்தது. புலிக் கூண்டுகள் இருந்த அறை வழியாக அவர்களை அழைத்துச் சென்ற போது சோழர் குல மன்னர்களின் மறக் கருணைக்கு அவை சின்னங்களாகத் தோன்றின. மறுபடியும் கீழிறங்கிய படிகள் வழியாக அழைத்துச் சென்று வந்தியத்தேவனை ஒரு தனி அறையில் அடைத்துப் பூட்டிவிட்டுக் காவலர்கள் சென்றபோது, அவனுடைய நம்பிக்கை முழுதும் போய்விட்டது. அங்கிருந்து தான் விடுதலையாகப் போவதில்லை. உயிர் போன பிறகு தன் உடலைத்தான் ஒருவேளை அங்கிருந்து அப்புறப்படுத்துவார்கள் என்று எண்ணிக்கொண்டான். சின்னப் பழுவேட்டரையருக்கு முன்னமேயே தன் பேரில் சந்தேகம். பார்த்திபேந்திரனுக்கோ தன் பேரில் ஒரே துவேஷம். கிழவன் மலையமானுக்குப் பார்த்திபேந்திரன் பேச்சில்தான் நம்பிக்கை. பழுவேட்டரையர்கள் பரிந்து பேசிச் சம்புவரையர் பேரில் குற்றமில்லை என்று சீக்கிரத்தில் விடுதலை செய்து விடுவார்கள். தன்னை விடுதலை செய்வதற்கு யார் சிரத்தை எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்? ஒருவரும் இல்லை. தன் பேரில் கொலைக் குற்றமே சாட்டி விடுவார்கள். குற்றம்சாட்டிப் பகிரங்கமாக விசாரணை செய்வார்களா? விசாரித்தால் ஒருவேளை அவன் உண்மையை எடுத்துச் சொல்லிப் பார்க்கலாம். இல்லை, இல்லை! விசாரணையே செய்யமாட்டார்கள். விசாரணை நடத்தினால், நந்தினியைப் பற்றியும், ரவிதாஸன் கூட்டத்தைப் பற்றியும் உண்மை வெளியாக வேண்டியிருக்கலாம். அதையெல்லாம் யாரும் விரும்பமாட்டார்கள். தன்னை அச்சிறையிலேயே கிடந்து சாகும்படி விட்டுவிடுவார்கள். அல்லது விசாரணை ஒன்றுமின்றிக் கரிகாலரைக் கொன்றவன் என்பதாகத் தீர்மானித்து, நாற்சந்தியில் கொண்டுபோய்க் கழுமரத்தில் ஏற்றிவிடுவார்கள்.

தெய்வமே! முதன்முதலில் தஞ்சைக்குப் புறப்பட்டு வந்தபோது அவன் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்த உற்சாகம் என்ன? என்னவெல்லாம் பகற் கனவு கண்டு கொண்டிருந்தான்? முக்கியமாக குடந்தை ஜோதிடர் வீட்டில் இளைய பிராட்டி குந்தவையையும், வானதியையும் சந்தித்ததிலிருந்து அவன் எப்படிப்பட்ட குதூகலக் கடலில் மிதந்து கொண்டு இந்தத் தஞ்சைக்கு வந்தான்! அப்போது சின்னப் பழுவேட்டரையர் தன்னை ஒற்றன் என்று சந்தேகித்துப் பாதாளச் சிறையில் அடைத்து விடுவாரோ என்று அவன் அஞ்சியதுண்டு. அது இப்போது வேறொரு விதத்தில் உண்மையாகி விட்டதே! வானவெளியில் உல்லாசமாகத் திரிந்து பறக்கும் பறவையைப் போல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த தன்னை இந்த இருளடைந்த அறையில் பூட்டி விட்டார்களே! இதில் தன்னால் எத்தனை காலம் இருக்க முடியும்? முடியாது! முடியாது! உயிரை விடுவதற்கு ஏதேனும் விரைவில் வழி தேட வேண்டியதுதான்... இவ்வாறெல்லாம் எண்ணி எண்ணி ஏக்கமடைந்து செயலற்று உட்கார்ந்திருந்தான் வந்தியத்தேவன்.

அந்தச் சமயத்தில் பக்கத்து அறையில் யாரோ தொண்டையைக் கனைப்பது கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம் கர்ணகடூரமான குரலில்,

"பொன்னார் மேனியனே....!"

என்ற தேவாரப் பாடலும் கேட்டது. வந்தியத்தேவனுக்கு உடனே சேந்தன் அமுதனுடைய ஞாபகம் வந்தது. பாடியவன் அவன் இல்லை. சேந்தன் அமுதனுடைய குரல் தெய்வீகமான இனிமை பொருந்தியது. இப்போது பாடுகிற குரல் கர்ணகடூரமானது. ஆயினும் அதே பாடலை இங்கே பாதாளச் சிறையில் இருப்பவன் பாடும் காரணம் என்ன?

சிவ, சிவா! காதால் கேட்க முடியவில்லை. பாதாளச் சிறையில் அடைப்பட்டிருப்பது போதாது என்ற இந்த அபூர்வமான சங்கீதத்தைக் கேட்கும் தண்டனை வேறேயா?

"யார், அப்பா அங்கே?" என்றான் வந்தியத்தேவன்.

"நான்தான் பைத்தியக்காரன்!" என்று பதில் வந்தது.

"அப்பா! பைத்தியக்காரா! கருணை கூர்ந்து உன் பாட்டை நிறுத்து!"

"ஏன்? என்னுடைய பாட்டு உனக்குப் பிடிக்கவில்லையா?"

"பிடிக்காமல் என்ன? உன் பாட்டு எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது?"

"பாட்டை நிறுத்திய பிறகு ரொம்பப் பிடிக்கிறதாக்கும்?"

"அப்படி ஒன்றும் நீ பைத்தியக்காரனாகத் தெரியவில்லை. இந்தப் பாட்டை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தது?"

"நீ இப்போது இருக்கும் அறையில் சில காலத்துக்கு முன்பு இன்னொரு வாலிபன் வந்திருந்தான். சில நாட்கள் தான் அவன் இருந்தான். அப்போது அவன் ஓயாமல் இந்தப் பாட்டைப் பாடிக் கொண்டிருந்தான்! எனக்கு அது பாடமாகி விட்டது" என்றான்.

வந்தியத்தேவன் உடனே அந்த வாலிபன் சேந்தன் அமுதன் தான் என்று தீர்மானித்துக் கொண்டான். தான் தப்பித்துச் செல்வதற்கு உதவி செய்வதற்காகச் சேந்தன் அமுதனைச் சின்னப் பழுவேட்டரையர் சில நாட்கள் பாதாளச் சிறையில் அடைத்திருந்தார் என்பதைக் கேள்விப்பட்டிருந்தான். இந்த அறையில் இருந்தவன் அவனாகத்தான் இருக்க வேண்டும். ஆகா! சேந்தன் அமுதன் எவ்வளவு தங்கமான பிள்ளை! எத்தகைய அருமையான சிநேகிதன்!

"இந்த அறையில் சில நாட்கள் இருந்த வாலிபன் யார்? உனக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.

"தெரியாமல் என்ன? அவன் பெயர் சேந்தன் அமுதன். யாரோ ஒரு ஊமைச்சியின் மகனாம்! உண்மையில் அவன் யார் என்பது மட்டும் உலகத்துக்குத் தெரிந்தால்....?"

"தெரிந்தால் என்ன ஆகும்?"

"உலகமே தலைகீழாகப் போய்விடும்!"

"உலகம் தலைகீழானால், நமக்கு இந்தப் பாதாளச் சிறையிலிருந்து விடுதலை கிடைக்குமா?"

"நிச்சயமாகக் கிடைக்கும்."

"அப்படியானால் அவன் யார் என்றுதான் சொல்லேன்?"

"அவ்வளவு சுலபமாக உன்னிடம் சொல்லிவிடுவேனா? அதைச் சோழ சக்கரவர்த்தியின் காதிலே மட்டுந்தான் சொல்வேன்! இன்னும் சுந்தர சோழர்தானே சோழ நாட்டின் சக்கரவர்த்தியாயிருக்கிறார்?" என்று கேட்டான்.

"ஆமாம்; அதைப்பற்றி உனக்கு என்ன சந்தேகம்?"

"சில நாளைக்கு முன்பு இங்கே சில மாறுதல்கள் நடந்தன. பழைய சிறைக் காவலர்கள் எல்லாம் மாறிப் புதிய சிறைக் காவலர்கள் வந்தார்கள். தங்க நாணய வார்ப்படச் சாலையை மூடிவிட்டார்கள். அதை மூடாதிருந்தபோது, கன்னார்கள் வேலை செய்யும் சத்தம் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருக்கும்."

"ஏன் மூடிவிட்டார்கள்? ஏன் காவற்காரர்கள் மாறினார்கள்?"

"சின்னப் பழுவேட்டரையர் கோட்டைக் காவலை விட்டு ஓடிப் போய்விட்டாராம். கொடும்பாளூர் வேளார் தஞ்சைக் கோட்டையைப் பிடித்துக் கொண்டாராம். காவற்காரர்களின் பேச்சிலிருந்து தான் இவைகளைத் தெரிந்து கொண்டேன்..."

"ஓகோ! அதுவும் அப்படியா?" என்றான் வந்தியத்தேவன் உண்மையிலேயே அவன் பெரு வியப்படைந்தான்.

கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரி தன்னை நன்கு சோதித்து அறிந்தவர். அவர் ஒருவேளை தன் பேச்சை நம்பித் தன்னை விடுதலை செய்வாரா? அவரால்தான் அது எப்படி முடியும்? இளவரசர் கரிகாலரைக் கொன்றவன் என்று குற்றம் சாட்டப்பட்டவனை யார்தான் எளிதில் விடுதலை செய்துவிட முடியும்?

"என்ன, தம்பி மௌனமாகிவிட்டாய்? மறுபடியும் பாடத் தொடங்கட்டுமா?" என்று பைத்தியக்காரன் தொண்டையைக் கனைத்தான்.

"வேண்டாம், வேண்டாம்! நீ கூறியதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். சேந்தன் அமுதன் ஊமைச்சியின் மகன் அல்லவென்று சொன்னாயே? பின் அவன் யாராயிருக்கும் என்று யோசிக்கிறேன்."

"அந்தப் பேச்சை விட்டுவிட்டு வேறு ஏதாவது சொல்லு?"

"உன்னை எதற்காகப் பைத்தியக்காரன் என்று சொல்லிக் கொள்கிறாய்?"

"இங்கே வந்தவர்கள் எல்லாரும் என்னைப் பைத்தியக்காரன் என்று சொல்லுவதினாலேதான்."

"ஏன் அப்படி அவர்கள் எல்லாரும் சொல்லுகிறார்கள்?"

"ஈழத்தில் பாண்டிய வம்சத்து மணி மகுடமும், தேவேந்திரன் அளித்த இரத்தின ஹாரமும் இருக்குமிடம் எனக்குத் தெரியும். என்னை விடுதலை செய்தால் அவை இருக்குமிடம் சொல்வேன் என்று இங்கே வருகிறவர்களிடமெல்லாம் நான் சொல்வதுண்டு. அதற்காக என்னைப் பைத்தியம் என்கிறார்கள்!"

"உன்னைப் பைத்தியம் என்கிறவர்கள் தான் உண்மைப் பைத்தியக்காரர்கள்."

"நீ என் வார்த்தையை நம்புகிறாயா?"

"பரிபூரணமாக நம்புகிறேன்; ஆனால் நான் நம்பி என்ன பயன்? உனக்கு என்னால் ஒரு உதவியும் செய்ய முடியாதே?"

"அப்படி சொல்லாதே! நீ இப்போது இருக்கும் அறையில் அடைக்கப்படுகிறவர்கள் எல்லாரும் சீக்கிரத்தில் விடுதலை செய்யப்படுவது வழக்கமாயிருந்து வருகிறது" என்று சொன்னான்.

"அது என்ன வழக்கம்? உதாரணங்கள் சொல் பார்க்கலாம்."

"யாரோ வைத்தியர் மகன் ஒருவன், பினாகபாணி என்கிறவன், உன் அறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவனைப் பழுவூர் ராணி நந்தினி தேவி வந்து விடுதலை செய்து அழைத்துப் போனாள். அந்த அறையிலேயே சேந்தன் அமுதன் இருந்தான். அவனை குந்தவை தேவியும் கொடும்பாளூர் இளவரசியும் வந்து விடுதலை செய்தார்கள்."

வந்தியத்தேவன் ஒரு நெடிய பெருமூச்சு விட்டுவிட்டு, "அந்த மாதிரி என்னை வந்து விடுதலை செய்ய எந்த ராணியும் இளவரசியும் வரமாட்டார்கள்!" என்றான்.

"அப்படியானால் நானே உன்னை விடுதலை செய்கிறேன்" என்றான் அடுத்த அறையில் இருந்தவன்.

"இப்போதுதான் நீ பைத்தியக்காரன் போலப் பேசுகிறாய்!" என்றான் வந்தியத்தேவன்.

"இல்லை, என் வார்த்தையை நம்பு?"

"வேறு வழியில்லை, உன்னை நம்பித்தான் தீரவேண்டும்."

"அப்படியானால், இன்றிரவு காவலர்கள் வந்து நமக்கு உணவு அளித்துவிட்டுப் போகும் வரையில் பொறுமையுடன் இரு!" என்றான் பைத்தியக்காரன் என்று பெயர் வாங்கியவன்









Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 55. "பைத்தியக்காரன்"
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 25. கோட்டைக்குள்ளே
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 41. நிலவறை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 57. மாய மோகினி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: