BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 9. வழிநடைப் பேச்சு Button10

 

  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 9. வழிநடைப் பேச்சு

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 9. வழிநடைப் பேச்சு Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 9. வழிநடைப் பேச்சு     ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 9. வழிநடைப் பேச்சு Icon_minitimeFri May 06, 2011 9:20 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

9. வழிநடைப் பேச்சு



பாலாற்றுக்கு வடக்கேயுள்ள வறண்ட பிரதேசங்களிலேயே வந்தியத்தேவன் அதுகாறும் தன் வாழ்நாளைக் கழித்தவன். ஆகையால் ஆற்று வெள்ளத்தில் நீந்துவதற்கு அவனுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு சமயம் வடபெண்ணைக் கரையில் எல்லைக் காவல் புரிந்துவந்தபோது, குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினான். ஒரு பெரிய நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டான். அந்தப் பொல்லாத விஷமச் சுழல் அவனைச் சுற்றிச் சுற்றி வரச் செய்து வதைத்தது. அதே சமயத்தில் கீழேயும் இழுத்துக் கொண்டிருந்தது. சீக்கிரத்தில் வந்தியத்தேவனுடைய பலத்தையெல்லாம் அந்தச் சுழல் உறிஞ்சிவிட்டது. "இனிப் பிழைக்க முடியாது, சுழலில் மூழ்கிச் சாக வேண்டியதுதான்!" என்று வந்தியத்தேவன் நிராசை அடைந்த சமயத்தில் தெய்வாதீனமாக நதிச் சுழலிலிருந்து வெளிப்பட்டான். வெள்ளம் அவனை அடித்துக்கொண்டு போய்க் கரையில் ஒதுக்கிக் காப்பாற்றியது!

அன்றிரவு வந்தியத்தேவன் மீண்டும் சென்று படுத்தபோது அவனுக்கு நதியின் சுழலில் அகப்பட்டுத் திண்டாடியது போன்ற அதே உணர்ச்சி ஏற்பட்டது. ஒரு பெரிய இராஜாங்கச் சதிச் சுழலில் தன்னுடைய விருப்பமில்லாமலே விழுந்து அகப்பட்டுக் கொண்டதாகத் தோன்றியது. அந்த நதிச் சுழலிலிருந்து தப்பியது போல் இந்தச் சதிச் சுழலிலிருந்தும் தப்ப முடியுமா? கடவுள் தன்னை மறுமுறையும் காப்பாற்றுவாரா?

அன்று அவன் கடம்பூர் மாளிகையில் நடந்த நள்ளிரவு கூட்டத்திலிருந்து அறிந்து கொண்ட விஷயங்கள் அவனைத் திக்குமுக்காடச் செய்து விட்டன. சோழ மகா சாம்ராஜ்யத்துக்கு வெளிப்பகைவர்களால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் நீங்கிச் சில வருஷங்கள்தான் ஆகியிருந்தன. இளவரசர் ஆதித்த கரிகாலர் மகாவீரர், போர்க்கலையில் நிபுணர்; ராஜதந்திரத்தில் சாணக்கியர், தம்முடைய அறிவாற்றல்களையும் சோழ நாட்டுப் படைகளின் போர்த்திறனையும் பூரணமாகப் பயன்படுத்தி இரட்டை மண்டலத்துக் கிருஷ்ண மன்னனின் ஆதிக்கத்தைத் தொண்டை மண்டலத்திலிருந்து அடியோடு தொலைத்தார். வெளிப்பகை ஒருவாறு ஒழிந்தது. இந்த நிலைமையில் உட்கலகமும் சதியும் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன. வெளிப்பகையைக் காட்டிலும் அபாயகரமான இந்த உட்பகையின் விளைவு என்ன ஆகும்?

சோழ நாட்டின் புகழ்பெற்ற வீரர்களும் அமைச்சர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் அல்லவா இந்தப் பயங்கரமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்? பழுவேட்டரையரும் அவருடைய சகோதரரும் எப்பேர்ப்பட்டவர்கள்? அவர்களுடைய சக்தி என்ன? செல்வாக்கு என்ன? இங்கே இன்று கூடியிருந்த மற்றவர்கள்தான் எவ்வளவு பெயரும் புகழும் செல்வாக்கும் பராக்கிரமமும் வாய்ந்தவர்கள்? இத்தகைய கூட்டம் இதுதான் முதற் கூட்டமாயிருக்குமா? பழுவேட்டரையர் மூடுபல்லக்கில் மதுராந்தகரை வைத்து இவ்விதம் இன்னும் எத்தனை இடங்களுக்கு கொண்டு போயிருக்கிறாரோ? அடாடா! முதிய வயதில் ஓர் இளம்பெண்ணை மணந்து கொண்டது இவருக்கு இந்தச் சதிகார முயற்சிக்கு எவ்வளவு சாதகமாகப் போய் விட்டது.

சோழ சிம்மாசனத்துக்கு உரியவர் இளவரசர் ஆதித்த கரிகாலர்தான் என்பது பற்றி இன்று வரை வந்தியத்தேவனுடைய மனதில் எவ்விதச் சந்தேகமும் உதிக்கவில்லை. போட்டி ஒன்று ஏற்படக் கூடும் என்று அவன் கனவிலும் கருதவில்லை. கண்டராதித்தனுடைய புதல்வர் மதுராந்தகரைப் பற்றி அவன் கேள்விப்பட்டதுண்டு. தந்தையைப் போலவே புதல்வரும் சிவபக்திச் செல்வர் என்று அறிந்ததுண்டு. ஆனால் அவர் இராஜ்யத்துக்கு உரிமையுள்ளவர் என்றோ, அதற்காகப் போட்டியிடக் கூடியவர் என்றோ கேள்விப்பட்டதில்லை. அந்த எண்ணமே அவனுடைய மனத்தில் அது வரையில் தோன்றியதில்லை.

ஆனால் நியாய அநியாயங்கள் எப்படி? பட்டத்துக்கு உரியவர் உண்மையிலே யார்? ஆதித்த கரிகாலரா? மதுராந்தகரா? யோசிக்க யோசிக்க, இரு தரப்பிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றியது. போட்டி என்று உண்மையில் ஏற்பட்டால், இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள்? தன்னுடைய கடமை என்ன? ஆஹா! என்னென்னவோ மனக்கோட்டை கட்டிக் கொண்டு காஞ்சியிலிருந்து இந்த யாத்திரை கிளம்பினோமே? பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலருக்கு உகந்தபடி நடந்து கொண்டு சோழப் பேரரசில் பெரிய பதவிகளை அடையலாம் என்று ஆசைப்பட்டோ மே! காலாகாலத்தில் வாணர் குலத்தின் பூர்வீக ராஜ்யத்தைக் கூடத் திரும்பப் பெறலாம் என்று நினைத்தோமே? இதற்கெல்லாம் சாதனமாக எந்தப் புளியங்கொம்பைப் பிடித்தோமோ அதுவே முறிந்துவிடும் போலிருக்கிறதே?... இத்தகைய சிந்தனைகளினால் வந்தியத்தேவன் இரண்டாம் முறை வந்து படுத்த பிறகு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல் திண்டாடினான். கடைசியாக, இரவு நாலாம் ஜாமத்தில் கிழக்கு வெளுக்கும் நேரத்தில் அவனுக்கு ஒருவாறு தூக்கம் வந்தது.

மறுநாள் காலையில் உதய சூரியனுடைய செங்கிரணங்கள் சுளீர் என்று அவன் பேரில் பட்டபோதுகூட வந்தியத்தேவன் எழுந்திருக்கவில்லை. கந்தமாறன் வந்து தட்டி எழுப்பியபோதுதான் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்தான்.

"இராத்திரி நன்றாய்த் தூக்கம் வந்ததா?" என்று கந்தமாறன் விருந்தினரை உபசரிக்கும் முறைப்படி கேட்டான். பிறகு அவனாகவே, "மற்ற விருந்தினரெல்லாம் தூங்கச் சென்ற பிறகு நான் இங்கு வந்து பார்த்தேன். நீ நன்றாய்க் கும்பகர்ண சேவை செய்து கொண்டிருந்தாய்!" என்று சொன்னான்.

வந்தியத்தேவன் மனத்தில் பொங்கி எழுந்த நினைவுகளையெல்லாம் அடக்கிக் கொண்டு, "குரவைக் கூத்துப் பார்த்துவிட்டு இங்கு வந்து படுத்ததுதான் தெரியும். இப்போதுதான் எழுந்திருக்கிறேன். அடாடா! இவ்வளவு நேரம் ஆகிவிட்டதே! உதித்து ஒரு ஜாமம் இருக்கும் போலிருக்கிறதே! உடனே நான் கிளம்ப வேண்டும். கந்தமாறா! குதிரையை ஆயத்தம் பண்ணும்படி உன் வேலைக்காரர்களுக்குக் கட்டளையிடு!" என்றான்.

"அழகாயிருக்கிறது! அதற்குள்ளே நீ புறப்படுவதாவது? என்ன அவசரம்? பத்து நாளாவது இங்கே தங்கிவிட்டுத்தான் போகவேண்டும்" என்றான் கந்தமாறன்.

"இல்லை, அப்பனே! தஞ்சாவூரில் என் மாமனுக்கு உடம்பு செவ்வையாக இல்லை. பிழைப்பதே துர்லபம் என்று செய்தி வந்தது. ஆகையால் சீக்கிரத்தில் அவரைப் போய்ப் பார்க்க வேண்டும். உடனே புறப்பட வேண்டும்" என்று ஒரே போடாகப் போட்டான் வல்லவரையன்.

"அப்படியானால், திரும்பி வரும் போதாவது இங்கே சில நாள் கட்டாயம் தாமதிக்க வேண்டும்."

"அதற்கென்ன, அப்போது பார்த்துக்கொள்ளலாம், இப்போது நான் புறப்படுவதற்கு விடைகொடு!"

"அவ்வளவு அவசரப்படாதே! காலை உணவு அருந்திவிட்டுப் புறப்படலாம். நானும் உன்னுடன் கொள்ளிட நதி வரையில் வருகிறேன்."

"அது எப்படி முடியும்? யார், யாரோ, பெரிய பெரிய விருந்தாளிகள் உன் வீட்டுக்கு வந்திருக்கிறார்களே, அவர்களை விட்டுவிட்டு..."

"உன்னைவிடப் பெரிய விருந்தாளி எனக்கு யாரும் இல்லை!..." என்று கூறிய கந்தமாறவேள் சட்டென்று நிறுத்திக் கொண்டான். "வந்தவர்கள் பெரிய விருந்தாளிகள்தான். ஆனால் அவர்களைக் கவனித்துக்கொள்ள என் தந்தை இருக்கிறார். அரண்மனை அதிகாரிகளும் இருக்கிறார்கள். உன்னோடு நேற்று ராத்திரி கூட நான் அதிக நேரம் பேசவில்லை. வழி நடையிலாவது சிறிது நேரம் உன்னோடு சல்லாபம் செய்தால்தான் என் மனம் நிம்மதி அடையும். அவசியம் கொள்ளிடக்கரை வரையில் வந்தே தீருவென்!" என்றான்.

"எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை. உன் இஷ்டம், உன் சௌகரியம்" என்றான் வந்தியத்தேவன்.

ஒரு நாழிகை நேரத்துக்குப் பிறகு இரு நண்பர்களும் இரு குதிரைகளில் ஏறிச் சம்புவரையர் மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். குதிரைகள் மெதுவாகவே சென்றன. பிரயாணம் இன்பகரமாயிருந்தது. மேலக்காற்று சாலைப் புழுதியை வாரி அடிக்கடி அவர்கள் மேல் இறைத்ததைக் கூட அந்த நண்பர்கள் பொருட்படுத்தவில்லை. பழைய ஞாபகங்களைப் பற்றிய பேச்சில் அவ்வளவாக மனத்தைப் பறிகொடுத்திருந்தார்கள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் வந்தியத்தேவன் கூறினான்:- "கந்தமாறா! உன் வீட்டில் ஒரே ஒரு இரவுதான் தங்கினாலும் அது எனக்கு எவ்வளவோ பயனுள்ளதாயிருந்தது. ஆனால் ஒரே ஒரு ஏமாற்றம். உன் சகோதரியைப் பற்றி வடபெண்ணை நதிக்கரையில் என்னவெல்லாமோ வர்ணனை செய்துகொண்டிருந்தாய்! அவளை நன்றாய் பார்க்கக் கூட முடியவில்லை. உன் அன்னைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அவள் எட்டிப் பார்த்தபோது அவள் முகத்தில் எட்டில் ஒரு பங்கு தான் தெரிந்தது! நாணமும் மடமும் பெண்களுக்கு இருக்க வேண்டியதைவிட உன் தங்கையிடம் சற்று அதிகமாகவேயிருக்கிறது."

கந்தமாறனுடைய வாயும் உதடுகளும் ஏதோ சொல்வதற்குத் துடித்தன. ஆனால் வார்த்தை ஒன்றும் உருவாகி வரவில்லை.

"ஆயினும் பாதகமில்லை. நீதான் நான் திரும்பி வரும்போது சில நாள் உன் வீட்டில் தங்கவேண்டும் என்று சொல்கிறாயே? அப்போது பார்த்துப் பேசிக் கொண்டால் போகிறது. அதற்குள் உன் தங்கையின் கூச்சமும் கொஞ்சம் நீங்கிவிடலாம் அல்லவா? கந்தமாறா! உன் சகோதரியின் பெயர் என்னவென்று சொன்னாய்?"

"மணிமேகலை!"

"அடடா! என்ன இனிமையான பெயர்! பெயரைப் போலவே அழகும் குணமும் இருந்து விட்டால்..."

கந்தமாறன் குறுக்கிட்டு, "நண்பா! உன்னை ஒன்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். என் தங்கையை நீ மறந்து விடு. அவளைப்பற்றி நான் சொன்னதையெல்லாம் மறந்து விடு. அவள் பேச்சையே எடுக்காதே!" என்றான்.

"இது என்ன, கந்தமாறா! ஒரே தலைகீழ் மாறுதலாயிருக்கிறதே! நேற்று இரவு கூட உன் வீட்டுக்கு நான் மருமகனாக வரப் போவதைப் பற்றி ஜாடையாகச் சொன்னாயே!"

"அவ்விதம் நான் சொன்னது உண்மைதான். ஆனால் பிறகு வேறு நிலைமை ஏற்பட்டுவிட்டது. என் பெற்றோர்கள் வேறு இடத்தில் என் சகோதரியைக் கலியாணம் செய்து கொடுக்க முடிவு செய்து விட்டார்கள். மணிமேகலையும் அதற்குச் சம்மதித்து விட்டாள்!"

வந்தியத்தேவன் மனத்திற்குள் "மணிமேகலை வாழ்க!" என்று சொல்லிக் கொண்டான். மணிமேகலையை யாருக்குக் கொடுக்க நிச்சயத்திருப்பார்கள் என்று ஊகிப்பதிலும் அவனுக்குக் கஷ்டம் ஏற்படவில்லை. மூடு பல்லக்கிலிருந்து வெளிப்பட்ட இளவரசர் மதுராந்தகருக்குத்தான் நிச்சயித்திருப்பார்கள். மதுராந்தகருடைய கட்சிக்குப் பலம் தேட இப்படியெல்லாம் உறவுகளையும் ஏற்படுத்துகிறார்களாக்கும். பழுவேட்டரையர் பொல்லாத கெட்டிக்காரர்தான்!

"ஆஹா! நேற்று ராத்திரி வந்திருந்த பணக்கார விருந்தாளிகளில் ஒருவரை மாப்பிள்ளையாக்கத் திட்டம் செய்தீர்களாக்கும்! கந்தமாறா! இதில் எனக்கு வியப்பும் இல்லை; ஏமாற்றமும் இல்லை. ஒரு மாதிரி நான் எதிர்ப்பார்த்ததுதான்..."

"எதிர்பார்த்தாயா அது எப்படி?"

"என்னைப்போல் ஏழை அநாதைக்கு யார் பெண்ணைக் கொடுப்பார்கள்? ஊரும் வீடும் இல்லாதவனை எந்தப் பெண் மணந்து கொள்ள இணங்குவாள்? எப்போதோ என் குலத்தைச் சேர்ந்த முன்னோர்கள் அரசு செலுத்தினார்கள் என்றால், அது இப்போது என்னத்துக்கு ஆகும்."

"நண்பா! போதும், நிறுத்து, என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் அவ்வளவு கேவலப்படுத்தாதே! நீ சொல்வது ஒன்றும் காரணமில்லை. வேறு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. அதை அறிந்தால் நீயே ஒப்புக் கொள்வாய். ஆனால் அதை நான் இப்போது வெளிபடுத்துவதற்கில்லை. சமயம் வரும்போது நீயே தெரிந்து கொள்வாய்!"

"கந்தமாறா! இது என்ன ஒரே மர்மமாகவே இன்றைக்கு நீ பேசிக் கொண்டு வருகிறாயே?"

"அதற்காக என்னை மன்னித்துவிடு. உன்னிடம் கூட நான் மனம் விட்டுப் பேச முடியாதபடி அப்படி ஒரு பெரிய காரியந்தான். எது எப்படியானாலும் நம்முடைய சிநேகத்துக்கு எவ்வித பங்கமும் வராது என்பதை நம்பு. விஷயம் வெளியாக வேண்டிய சமயம் வரும்போது, ஓட்டமாக ஓடி வந்து உன்னிடந்தான் முதலில் சொல்வேன். அதுவரையில் என்னிடம் நம்பிக்கை வைத்திரு. உன்னை நான் ஒரு நாளும் கைவிட மாட்டேன். என்னை நம்பு!..."

"இந்த வாக்குறுதிக்காக ரொம்ப வந்தனம். ஆனால் என்னைக் கைவிடும்படியான நிலைமை என்ன என்பதுதான் தெரியவில்லை! அப்படி நான் இன்னொருவரை நம்பிப் பிழைக்கிறவனும் அல்ல, கந்தமாறா! என்னுடைய உடைவாளையும் கைவேலையுமே நான் நம்பியிருப்பவன்!"

"அந்த உடைவாளையும் வேலையும் உபயோகிக்க வேண்டிய சந்தர்ப்பம் சீக்கிரத்தில் வரலாம். அப்போது நாம் இருவரும் ஒரே கட்சியில் நின்று தோளோடு தோள் சேர்ந்து போரிடுவோம். அதனால் உன்னுடைய நோக்கமும் கைகூடும்..."

"இது என்ன? ஏதாவது யுத்தம் சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கிறாயா? அல்லது ஈழநாட்டில் நடக்கும் யுத்தத்துக்குப் போகும் உத்தேசம் உனக்கு உண்டா?"

"ஈழத்துக்கா? ஈழத்தில் நடக்கும் அழகான யுத்தத்தைப் பற்றிக் கேட்டால் நீ ஆச்சரியப்பட்டுப் போவாய்! ஈழத்தில் உள்ள நம் வீரர்களுக்காகச் சோழ நாட்டிலிருந்து அரிசியும் மற்ற உணவுப் பொருள்களும் போக வேண்டுமாம்! வெட்கக்கேடு! நான் சொல்வது வேறு விஷயம். கொஞ்சம் பொறுமையாயிரு. சமயம் வரும்போது சொல்லுகிறேன். தயவுசெய்து இப்போது என் வாயைப் பிடுங்காதே!"

"சரி, சரி! உனக்கு விருப்பம் இல்லை என்றால் ஒன்றும் சொல்ல வேண்டாம். வாயைக் கூடத் திறக்க வேண்டாம். அதோ கொள்ளிடமும் தெரிகிறது!" என்றான் வந்தியத்தேவன்.

உண்மையில் சற்றுத் தூரத்தில் கொள்ளிடப் பெரு நதியின் வெள்ளம் தெரிந்தது. சில நிமிஷ நேரத்தில் நண்பர்கள் நதிக் கரையை அடைந்தார்கள்.

ஆடிப் புதுப் பிரவாகம் அந்த மாநதியில் கரை புரண்டு சென்றது மறுகரை வெகு தூரத்தில் இருப்பதாகத் தோன்றியது. மறுகரையிலேயுள்ள மரங்கள் சிறிய செடிகளைப் போலிருந்தன. செக்கச் சிவந்த பெருநீர் வெள்ளம் சுழிகளும் சுழல்களுமாக, வட்ட வடிவக் கோலங்கள் போட்டுக் கொண்டு, கொம்மாளம் அடித்துக் கொண்டு, கரையை உடைக்கப் பிரயத்தனம் செய்து கொண்டு, 'ஹோ' என்று இரைந்து கொண்டு, கீழ்க் கடலை நோக்கி அடித்து மோதிக் கொண்டு விரைந்து சென்ற காட்சியை வந்தியத்தேவன் பார்த்துப் பிரமித்து நின்றான்.

தோணித்துறையில் ஓடம் ஒன்று நின்றது. ஓடந்தள்ளுவோர் இருவர் கையில் நீண்ட கோல்களுடன் ஆயத்தமாயிருந்தார்கள். படகில் ஒரு மனிதர் ஏற்கனவே ஏறியிருந்தார். அவரைப் பார்த்தால் பெரிய சிவபக்தி சிகாமணி என்று தோன்றியது.

கரையில் வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து, "சாமி! படகில் வரப்போகிறீர்களா?" என்று படகோட்டிகளில் ஒருவன் கேட்டான்.

"ஆம்; இவர் வரப்போகிறார். கொஞ்சம் படகை நிறுத்து!" என்றான் கந்தமாறன்.

இரு நண்பர்களும், குதிரை மீதிருந்து கீழே குதித்தார்கள்.

"யோசனை இல்லாமல் வந்துவிட்டேனே? இந்தக் குதிரையை என்ன செய்வது? படகில் ஏற்ற முடியுமா?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"தேவையில்லை. நம்மைத் தொடர்ந்து இதோ இரண்டு ஆட்கள் வந்திருக்கிறார்கள். ஒருவன் உன் குதிரையை இங்கிருந்து கடம்பூருக்கு இட்டு வருவான். இன்னொருவன் உன்னுடன் படகில் ஏறி வந்து அக்கரையில் உனக்கு வேறு குதிரை சம்பாதித்துக் கொடுப்பான்!" என்றான் கந்தன்மாறன்.

"ஆஹா! எவ்வளவு முன்யோசனை? நீ அல்லவா உண்மை நண்பன்!" என்றான் வந்தியத்தேவன்.

"பாலாற்றையும் பெண்ணையாற்றையும் போலத்தான் கொள்ளிடத்தைப் பற்றி நீ நினைத்திருப்பாய். இதில் குதிரையைக் கொண்டு போக முடியாது என்று நீ எண்ணியிருக்கமாட்டாய்!"

"ஆமாம்; அவ்விதம் உங்கள் சோழ நாட்டு நதியைப்பற்றி அலட்சியமாய் நினைத்ததற்காக மன்னித்துவிடு! அப்பப்பா! இது என்ன ஆறு? இது என்ன வெள்ளம்? சமுத்திரம் போலவல்லவா பொங்கி வருகிறது!"

இரு நண்பர்களும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு விடை பெற்றுக் கொண்டார்கள்.

வந்தியத்தேவன் நதிக்கரையோரமாகச் சென்று படகில் ஏறினான்.

கந்தமாறனுடன் வந்த ஆட்களில் ஒருவனும் ஏறிக் கொண்டான்.

படகு புறப்படுவதற்குச் சித்தமாயிருந்தது. ஓடக்காரர்கள் கோல்போட ஆரம்பித்தார்கள்.

திடீரென்று கொஞ்ச தூரத்திலிருந்து, "நிறுத்து! நிறுத்து! படகை நிறுத்து!" என்று ஒரு குரல் கேட்டது.

ஓடக்காரர்கள் கோல் போடாமல் கொஞ்சம் தயங்கி நின்றார்கள்.

கூவிக்கொண்டு ஓடி வந்தவன் அதிவிரைவில் கரைக்கருகில் வந்து சேர்ந்தான். முதற் பார்வையிலேயே அவன் யார் என்பது வந்தியத்தேவனுக்குத் தெரிந்து போயிற்று. அவன் ஆழ்வார்க்கடியான் நம்பிதான்.

வருகிறவர் வைஷ்ணவர் என்பதை அறிந்ததும் படகிலிருந்த சைவர், "விடு! படகை விடு! அந்தப் பாஷாண்டியுடன் நான் படகில் வரமாட்டேன். அவன் அடுத்த படகில் வரட்டும்!" என்றார்.

ஆனால் வந்தியத்தேவன் ஓடக்காரர்களைப் பார்த்து, "கொஞ்சம் பொறுங்கள், அவரும் வரட்டும்! படகில் நிறைய இடம் இருக்கிறதே! ஏற்றிக் கொண்டு போகலாம்!" என்றான்.

ஆழ்வார்க்கடியானிடமிருந்து நேற்றிரவு நிகழ்ச்சிகளைப் பற்றிப் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வந்தியத்தேவன் விரும்பினான்.











Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 9. வழிநடைப் பேச்சு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 34. அநுராதபுரம்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 11. திடும்பிரவேசம்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 43. பழையாறை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: