BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 10. குடந்தை சோதிடர் Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 10. குடந்தை சோதிடர்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 10. குடந்தை சோதிடர் Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 10. குடந்தை சோதிடர்   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 10. குடந்தை சோதிடர் Icon_minitimeFri May 06, 2011 9:27 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

10. குடந்தை சோதிடர்


குடகு நாட்டில் பிறந்து வளர்ந்த பொன்னி நதி கன்னிப் பருவம் கடந்ததும் தன் மணாளனாகிய சமுத்திரம் ராஜனிடம் சென்றடைய விரும்பினாள். காடும் மேடும் கடந்து பாறைகளையும் பள்ளங்களையும் தாண்டிக் கொண்டு விரைந்து சென்றாள். சமுத்திர ராஜனை நெருங்க நெருங்க, நாயகனைக் காணப் போகிறோம் என்ற குதூகலத்தினால் அவள் உள்ளம் விம்மி உடல் பூரித்தது. இன்னும் சற்றுத் தூரம் சென்றாள், காதலனை அணைத்துக் கொள்ளக் கரங்கள் இரண்டு உண்டாயின. இரு கரங்களை விரித்தவாறு தாவிப் பாய்ந்து சென்றாள். ஆனால் உள்ளத்தில் பொங்கிய ஆர்வ மிகுதிக்கு இரு கரங்கள் போதுமென்று தோன்றவில்லை. அவளுடைய ஆசைக் கரங்கள் பத்து, இருபது, நூறு என்று வளர்ந்தன. அவ்வளவு கரங்களையும் ஆவலுடன் நீட்டிக் கொண்டு சமுத்திர ராஜனை அணுகினாள். இவ்விதம் ஆசைக் கணவனை அடைவதற்குச் சென்ற மணப் பெண்ணுக்குச் சோழ நாட்டுச் செவிலித் தாய்மார் செய்த அலங்காரங்கள் தான் என்ன? அடடா! எத்தனை அழகிய பச்சைப் புடவைகளை உடுத்தினார்கள்? எப்படியெல்லாம் வண்ண மலர்களைச் சூட்டினார்கள்? எவ்விதமெல்லாம் பரிமள சுகந்தங்களைத் தூவினார்கள்? ஆஹா! இரு கரையிலும் வளர்ந்திருந்த புன்னை மரங்களும் கடம்ப மரங்களும் முத்து மலர்களையும் ரத்தினப் பூக்களையும் வாரிச் சொரிந்த அருமையை எவ்விதம் வர்ணிப்பது? தேவர்கள் பொழியும் பூமாரியும் இதற்கு இணையாகுமா?

பொன்னி நதியே! உன்னைப் பார்த்துக் களிப்படையாத கன்னிப்பெண் யார்தான் இருக்க்முடியும்! உன் மணக்கோல ஆடை அலங்காரங்களைக் கண்டு உள்ளம் பொங்காத மங்கை யார் இருக்க முடியும்?

கலியாணப் பெண்ணைச் சுற்றி ஊரிலுள்ள கன்னிப் பெண்கள் எல்லோரும் சூழ்ந்து கொள்வதுபோல் உன்னை நாடிப் பெண்கள் வந்து கூடுவதும் இயற்கையே அல்லவா!

பொன்னி தன் மணாளனைத் தழுவிக் கொள்ள ஆசையுடன் நீட்டும் பொற்கரங்களில் ஒன்றுக்கு அரிசிலாறு என்று பெயர்! காவேரிக்குத் தென் புறத்தில் மிக நெருக்கத்தில் அரிசிலாறு என்னும் அழகிய நதி அமைந்திருக்கிறது. அப்படி ஒரு நதி இருப்பது சற்றுத் தூரத்தில் இருந்து வருகிறவர்களுக்குச் சொல்லித் தான் தெரியவேண்டும். இருபுறமும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் இனிய பசுமரங்கள் அப்படி அந்நதியை மறைத்து விடுகின்றன. பிறந்தது முதல் அந்தப்புரத்தை விட்டு வெளியேறி அறியாத அரச குலக் கன்னியென்றே அரிசிலாற்றைச் சொல்லலாம். அந்தக் கன்னி நதியின் அழகுக்கு இந்த உலகில் உவமையே கிடையாது.

நல்லது, அந்தப்புரம் என்னும் எண்ணத்தை மறந்துவிட்டு நேயர்கள் நம்முடன் அரிசிலாற்றை நெருங்கி வருவார்களாக. சோலையாக நெருங்கி வளர்ந்திருந்த மரங்களுக்கிடையே புகுந்து வருவார்களாக! அடடா! இது என்ன அருமையான காட்சி? அழகுக்கு அழகு செய்வது போலும் அமுதத்துக்கு இனிப்பு ஊட்டுவது போலும் அல்லவா இருக்கிறது?

சித்திர விசித்திரமாகச் செய்த அன்ன வடிவமான வண்ணப் படகில் வீற்றிருக்கும் இந்த வனிதாமணிகள் யார்? அவர்களில் நடு நாயகமாக, நட்சத்திரங்களுக்கிடையில் பூரண சந்திரனைப் போல் ஏழுலகங்களையும் ஆளப் பிறந்த சக்கரவர்த்தினியைப் போல், காந்தியுடன் விளங்கும் இந்த நாரீமணி யார்? அவளுக்கு அருகில் கையில் வீணையுடன் வீற்றிருக்கும் சாந்த சுந்தரி யார்? இனிய குரல்களில் இசை பாடி நதி வெள்ளத்துடன் கீத வெள்ளமும் கலந்து பெருகச் செய்து கொண்டு வரும் இந்தக் கந்தர்வப் பெண்கள் யார்? அவர்களில் ஒருத்தி மீனலோசனி; இன்னொருத்தி நீலலோசனி; ஒருத்தி தாமரை முகத்தாள்; இன்னொருத்தி கமல இதழ் நயனத்தாள்; ஆஹா வீணையை மீட்டுகிறாளே, அவளுடைய காந்தளை ஒத்த விரல்கள் வீணைத் தந்திகளில் அங்குமிங்கும் சஞ்சரிக்கும் அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

அவர்கள் இசைக்கும் கீதத்தின் இனிமையைத்தான் என்ன என்று சொல்வது? அதைக் கேட்பதற்காக நதியின் வெள்ளம் கூட அல்லவா தன் ஓசையை நிறுத்தியிருக்கிறது? நதிக்கரை மரங்களில் வாழும் கிளிகளும் குயில்களும் கூட வாய்திறவா மோனத்தில் ஆழ்ந்திருக்கின்றனவே! மனிதர்களாய்ப் பிறந்தவர்கள், கேட்கும் செவி படைத்த பாக்கியசாலிகள் - அந்த அமுத கானத்தை கேட்டுப் பரவசம் அடைவதில் வியப்பு என்ன?

படகில் வரும் அப்பெண்கள் என்ன பாடுகிறார்கள் கேட்கலாம்:

மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்தாய் வாழி! காவேரி!
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி! காவேரி!

பூவர் சோலை மயிலாடப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி! காவேரி!
காமர் மாலை அருகசைய
நடந்த வெல்லாம், நின் கணவன்
நாம வேலின் திறங்கண்டே
அறிந்தேன் வாழி! காவேரி!

இந்த அமுதத் தமிழ்ப் பாடல்களை எங்கேயோ கேட்டிருக்கிறோமல்லவா? ஆம், சிலப்பதிகாரத்தில் உள்ள வரிப் பாடல்கள் இவை. எனினும், இந்தப் பெண்கள் பாடும்போது முன் எப்போதுமில்லாத வனப்பும் கவர்ச்சியும் பெற்று விளங்குகின்றன. இவர்கள் பொன்னி நதியின் அருமைத் தோழிகள் போலும்! அதனாலேதான் இவ்வளவு பரவசமாக உணர்ச்சி ததும்பப் பாடுகிறார்கள். அடடா! பாடலும் பண்ணும் பாவமும் எப்படிக் கலந்து இழைந்து குழைந்து இவர்களுடைய குரலிலிருந்து அமுத வெள்ளமாகப் பொழிகின்றன? பாட்டாவது, பண்ணாவது, கானமாவது, இசையாவது! அதெல்லாம் ஒன்றுமில்லை. இது ஏதோ மாயக் கலை! பாடுகிறவர்கள், கேட்பவர்கள் எல்லாரையும் பித்துப் பிடிக்கச் செய்யும் மந்திர வித்தை!

படகு மிதந்து கொண்டே வந்து, மரங்கள் சிறிது இடைவெளி தந்த ஓடத்துறையில் ஒதுங்கி நிற்கிறது. இரண்டு பெண்கள் இறங்குகிறார்கள். அவர்களில் ஒருத்தி ஏழுலகத்துக்கும் ராணி எனத் தகும் கம்பீரத் தோற்றமுடைய பெண்மணி. இன்னொருத்தி வீணைத் தந்திகளில் விரல்களை ஓட்டி இன்னிசை எழுப்பிய நங்கை. இருவரும் அழகிகள் என்றாலும் ஒருவருடைய அழகுக்கும் இன்னொருவருடைய அழகுக்கும் மிக்க வேற்றுமை இருந்தது. ஒருத்தி செந்தாமரை மலரின் கம்பீர சௌந்தரியம் உடையவள். இன்னொருத்தி குமுத மலரின் இனிய அழகை உடையவள். ஒருத்தி பூரண சந்திரன்; இன்னொருத்தி காலைப்பிறை. ஒருத்தி ஆடும் மயில்; இன்னொருத்தி பாடும் குயில். ஒருத்தி இந்திராணி; இன்னொருத்தி மன்மதனின் காதலி. ஒருத்தி வேகவாஹினியான கங்காநதி; இன்னொருத்தி குழைந்து நெளிந்து செல்லும் காவேரி.

வாசகர்களை மேலும் சந்தேக ஆராய்ச்சி நிலையில் விட்டு வைக்காமல் இவர்கள் இருவரும் யார் என்று சொல்லி விடுகிறோம். கம்பீரத் தோற்றமுடைய மங்கைதான் சுந்தர சோழ மன்னரின் செல்வப் புதல்வி குந்தவை. சரித்திரத்தில் ராஜராஜன் என்று புகழ்பெற்ற அருள்மொழிவர்மனின் சகோதரி. அரசிளங் குமரி என்றும் இளைய பிராட்டி என்றும் மக்களால் போற்றப்பட்ட மாதரசி. சோழ ராஜ்யத்தின் மகோன்னதத்திற்கு அடிகோலிய தமிழ்ப் பெரும் செல்வி. ராஜராஜனுடைய புதல்வன் ராஜேந்திரனை எடுத்து வளர்த்து வீராதி வீரனாயும் மன்னாதி மன்னனாயும் ஆக்கிய தீரப் பெண்மணி.

இன்னொருத்தி, குந்தவைப் பிராட்டியுடன் இருக்கும் பாக்கியத்தை நாடி வந்த கொடும்பாளூர்ச் சிற்றரசர் குலப் பெண். பிற்காலத்தில், சரித்திரத்திலேயே இணையில்லாத பாக்கியவதியாகப் போகிறவள். இன்று அடக்கமும் இனிமையும் சாந்தமும் உருவெடுத்து விளங்குகிறவள்.

இந்த இரு மங்கைமார்களும் படகிலிருந்து கரையில் இறங்கினார்கள். குந்தவை மற்ற தோழிப் பெண்களைப் பார்த்து, "நீங்கள் இங்கேயே இருங்கள். ஒரு நாழிகை நேரத்தில் திரும்பி வந்துவிடுகிறோம்!" என்றாள். அந்தத் தோழிப் பெண்கள் அனைவரும் தெய்வத் தமிழ்நாட்டில் பற்பல சிற்றரசர்களின் அரண்மனையில் பிறந்த அரசகுமாரிகள். குந்தவை தேவிக்குத் தோழியாக இருப்பதைப் பெறற்கரும் பேறாகக் கருதிப் பழையாறை அரண்மனைக்கு வந்தவர்கள். இப்போது தங்களில் ஒருத்தியை மட்டும் அழைத்துக் கொண்டு குந்தவைப் பிராட்டி கரையில் இறங்கி 'போய்விட்டு விரைவில் வருகிறேன்' என்றதும் அவர்களுடைய கண்களில் ஏமாற்றமும் அசூயையும் தோன்றின.

கரையில் குதிரை பூட்டிய ரதம் ஒன்று சித்தமாயிருந்தது. "வானதி! ரதத்தில் ஏறிக்கொள்!" என்றாள் குந்தவை தன் தோழியைப் பார்த்து. வானதி ஏறியதும் தானும் ஏறிக் கொண்டாள். ரதம் வேகமாய்ச் சென்றது.

"அக்கா! நாம் எங்கே போகிறோம்? எனக்குச் சொல்லலாமா?" என்று வானதி கேட்டாள்.

"சொல்லாமல் என்ன? குடந்தை சோதிடர் வீட்டுக்குப் போகிறோம்!" என்றாள் குந்தவை.

"சோதிடர் வீட்டுக்கு எதற்காகப் போகிறோம், அக்கா? என்னத்தைப் பற்றிக் கேட்பதற்காக?"

"வேறு எதற்கு? உன்னைப் பற்றிக் கேட்பதற்காகத்தான். சில மாத காலமாக நீ இப்படிப் பிரமை பிடித்தவள் போலும், உடல் மெலிந்தும் வருகிறாயே? உனக்கு எப்போது பிரமை நீங்கி உடம்பு தேறும் என்று கேட்பதற்காகத்தான்!"

"அக்கா! தங்களுக்கு ரொம்ப புண்ணியமுண்டு; எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை. என்னைப் பற்றிக் கேட்பதற்காகப் போக வேண்டாம். திரும்பி விடுவோம்!"

"இல்லையடி, அம்மா, இல்லை! உன்னைப் பற்றிக் கேட்பதற்காக இல்லை. என்னைப் பற்றிக் கேட்பதற்காகத்தான் போகிறேன்."

"தங்களைப் பற்றி என்ன கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்? ஜோசியரிடம் கேட்டு என்ன தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்?"

"எனக்குக் கலியாணம் ஆகுமா? அல்லது கடைசி வரையில் கன்னிப் பெண்ணாகவே இருந்து காலம் கழிப்பேனா என்று கேட்கப் போகிறேன்."

"அக்கா! இதற்கு ஜோசியரிடம் போய்க் கேட்பானேன்! தங்களுடைய மனதையே அல்லவா கேட்க வேண்டும்? தாங்கள் தலையை அசைக்க வேண்டியதுதான்! இமய மலை முதல் குமரி முனை வரையில் உள்ள ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் போட்டி போட்டுக்கொண்டு ஓடி வர மாட்டார்களா? ஏன், கடல் கடந்த தேசங்களிலேயிருந்தெல்லாம் கூட வருவார்களே! தங்களைக் கை பிடிக்கும் பேறு எந்த வீர ராஜகுமாரனுக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ? அதைத் தாங்கள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்!"

"வானதி! நீ சொல்வதெல்லாம் உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அதற்கு ஒரு தடை இருக்கிறது. எந்தத் தேசத்து அரச குமாரனையாவது மணம் புரிந்து கொண்டால் நான் அவனுடைய நாட்டுக்குப் போக, வேண்டி வருமல்லவா? எனக்கு இந்தப் பொன்னி நதி பாயும் சோழ நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்குப் போகப் பிடிக்கவேயில்லையடி! வேறு நாட்டுக்குப் போவதில்லை என்று நான் சபதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்..."

"அது ஒரு தடையாகாது. தங்களை மணம் புரிந்து கொள்ளும் எந்த ராஜகுமாரனும் தங்கள் காலில் விழுந்து கிடக்கும் அடிமையாகவே இருப்பான். இங்கேயே இருக்க வேண்டும் என்றாலும் இருந்து விட்டுப் போகிறான்."

"ஆகா! எலியைப் பிடித்து மடியில் வைத்துக் கட்டிக் கொள்வதுபோல் வேறு தேசத்து ராஜகுமாரனை நம் ஊரிலேயே கொண்டு வைத்துக்கொள்ளவா சொல்கிறாய்? அதனால் என்னென்ன தொல்லைகள் எல்லாம் விளையும் தெரியுமா!"

"எப்படியும் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் ஒருநாள் கலியாணம் செய்துகொண்டுதானே தீரவேண்டும்?"

"அப்படி ஒரு சாஸ்திரத்திலும் சொல்லியிருக்கவில்லையடி, வானதி! ஔவையாரைப் பார்! அவள் என்றும் கன்னி அழியாத கவீசுவரியாகப் பல காலம் ஜீவித்திருக்கவில்லையா?"

"ஔவையார் இளம் பிராயத்திலேயே கடவுளின் வரத்தினால் கிழவியாகப் போனவள். தாங்கள் அதைப்போல் ஆகவில்லையே?"

"சரி, அப்படிக் கல்யாணம் செய்து கொள்வது என்று புறப்பட்டால் அநாதையான சோழநாட்டு வீரன் ஒருவனையே நான் மணந்து கொள்வேன். அத்தகையவனுக்கு ராஜ்யம் இராது. என்னை அழைத்துக் கொண்டு வேறு ஒரு தேசத்துக்குப் போக வேண்டும் என்று சொல்ல மாட்டான். இங்கேயே சோழ நாட்டிலேயே, இருந்து விடுவான்..."

"அக்கா! அப்படியானால் இந்தச் சோழ நாட்டை விட்டுப் போகமாட்டீர்களே?"

"ஒரு நாளும் போக மாட்டேன். சொர்க்க லோகத்துக்கு என்னை அரசியாக்குவதாகச் சொன்னாலும் போகமாட்டேன்."

"இன்றைக்குத்தான் என் மனம் நிம்மதி அடைந்தது."

"அது என்னடி?"

"நீங்கள் வேறு நாட்டுக்குப் போனால், நானும் உங்களோடு வந்தே தீரவேண்டும். உங்களை விட்டுப் பிரிந்திருக்க என்னால் முடியாது. அதே சமயத்தில் இந்தச் சோழ வளநாட்டைப் பிரிந்து போகவும் எனக்கு மனமில்லை."

"கலியாணம் ஆனால் நீ பிரிந்து போய்த்தானே தீர வேண்டும்?"

"நான் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லை, அக்கா!"

"அடியே! எனக்கு செய்த உபதேசமெல்லாம் எங்கே போயிற்று?"

"தங்களைப் போலவா நான்?"

"அடி கள்ளி! எனக்கு எல்லாம் தெரியும். என் கண்ணில் மண்ணைத் தூவலாம் என்றா பார்க்கிறாய்? உனக்குச் சோழ நாட்டின் மீது அபிமானம் ஒன்றும் கிடையாது. நீ ஆசை வைத்திருக்கும் சோழநாடு, வாளும் வேலும் தாங்கி ஈழநாட்டுக்கு யுத்தம் செய்ய அல்லவா போயிருக்கிறது. உன் அந்தரங்கம் எனக்குத் தெரியாது என்றா நினைத்தாய்?"

"அக்கா! அக்கா! நான் அவ்வளவு மூடமதி உடையவளா? சூரியன் எங்கே? காலைப் பனித்துளி எங்கே? சூரியனுடைய நட்புக்குப் பனித்துளி ஆசைப்பட்டால் என்ன பயன்?"

"பனித்துளி சிறியதுதான்! சூரியன் பெரியது, பிரகாசமானது தான்! ஆனாலும் பனித்துளி அப்படிப்பட்ட சூரியனைச் சிறைப்படுத்தித் தனக்குள் வைத்திருக்கிறதா, இல்லையா?"

வானதி உற்சாகமும் ஆர்வமும் நிறைந்த குரலில், "அப்படியா சொல்கிறீர்கள்! பனித்துளிகூடச் சூரியனை அடையலாம் என்று சொல்கிறீர்களா?" என்றாள். பிறகு திடீரென்று மனச்சோர்வு வந்து விட்டது. "பனித்துளி ஆசைப்படுகிறது; சூரியனையும் சிறைப் பிடிக்கிறது. ஆனால் பலன் என்ன? சிறிது நேரத்துக்கெல்லாம் சரியான தண்டனை அடைகிறது. வெயிலில் உலர்ந்து, இருந்த இடம் தெரியாமல் மறைகிறது!"

"அது தவறு, வானதி! பனித்துளியின் ஆசையைக் கண்டு சூரியன் தன்னுடன் பனித்துளியை ஐக்கியப்படுத்திக் கொள்கிறான். தன் ஆசைக்குகந்த பனித்துளிப் பெண் பிற புருஷர் கன்ணில் படக் கூடாது என்று அவன் எண்ணம். இரவு வந்ததும் மறுபடியும் வெளியே விட்டு விடுகிறான். மறைந்த பனித்துளி மறுபடியும் வந்து உதிக்கிறது அல்லவா?"

"அக்கா! இதெல்லாம் என்னைத் தேற்றுவதற்காகச் சொல்கிறீர்கள்".

"அப்படியானால் உன் மனதில் ஒரு குறை இருக்கிறது என்று சொல்லு. இத்தனை நாள் 'இல்லவே இல்லை' என்று சாதித்தாயே? அதனால் தான் குடந்தை ஜோசியரிடம் போகிறேன்."

"என் மனதில் குறையிருந்தால், அதைப் பற்றிக் கேட்கச் சோதிடரிடம் போய் என்ன பயன்?" என்று கூறி வானதி பெருமூச்சொறிந்தாள்.

குடந்தை சோதிடரின் வீடு அந்த நகரின் ஒரு மூலையில் காளி கோயிலுக்கு அருகில் ஒரு தனித்த இடத்தில் இருந்தது. குடந்தை நகருக்குள் புகாமலேயே நகரைச் சுற்றிக் கொண்டு ரதம் அந்த வீடு சென்று அடைந்தது. ரதசாரதி ரதத்தைத் தங்கு தடையின்றி அங்கே ஓட்டிக்கொண்டு போய்ச் சேர்த்ததைப் பார்த்தால், அவன் அதற்கு முன் பலமுறை அங்கே ரதம் ஓட்டிக்கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று தோன்றியது.

வீட்டு வாசலில் சோதிடரும் அவருடைய சீடர் ஒருவரும் ஆயத்தமாகக் காத்திருந்தார்கள். சோதிடர் மிக்க பக்தி மரியாதையுடன் வந்தவர்களை வரவேற்று உபசரித்தார்.

"பெருமாட்டி! கலைமகளும் திருமகளும் ஓருருவாய் வந்த தாயே! வரவேணும் வரவேணும்! இந்த ஏழையின் குடிசை செய்த பாக்கியம், மறுமுறையும் தாங்கள் இக்குடிசையைத் தேடி வந்தீர்கள்!" என்றார்.

"சோதிடரே! இந்த வேளையில் தங்களைத் தேடிக்கொண்டு வேறு யாரும் இங்கு வரமாட்டார்கள் அல்லவா?" என்றாள் குந்தவை.

"வரமாட்டார்கள், தாயே! இப்போதெல்லாம் என்னைத் தேடி அதிகம் பேர் வருவதே இல்லை, உலகத்தில் கஷ்டங்கள் அதிகமாகும் போது தான் சோதிடர்களைத் தேடி மக்கள் அதிகமாக வருவார்கள். இப்போது, தங்களுடைய திருத் தந்தை சுந்தரசோழரின் ஆட்சியில், குடிகளுக்குக் கஷ்டம் என்பதே கிடையாது. எல்லோரும் சுக சௌக்கியங்களுடன் சகல சம்பத்துக்களையும் பெற்றுச் சந்தோஷமாக வாழ்கிறார்கள். என்னைத் தேடி ஏன் வருகிறார்கள்?" என்றார் சோதிடர்.

"அப்படியானால் எனக்கு ஏதோ கஷ்டம் வந்திருப்பதனால் தான் உம்மைத் தேடி வந்திருக்கிறேன் என்று சொல்லுகிறீராக்கும்!"

"இல்லை, பெருமாட்டி! இல்லவே இல்லை! நவநிதியும் கொழிக்கும் பழையாறை மன்னரின் திருக் குமாரிக்குக் கஷ்டம் வந்தது என்று எந்தக் குருடன் தான் சொல்லுவான்! உலகத்தில் மக்களுக்குக் கஷ்டமே இல்லாமற் போய்விட்டபடியால், இந்த ஏழைச் சோதிடனுக்கு மட்டும் கஷ்டம் வந்திருக்கிறது; இவனை மட்டும் கவனிப்பார் இல்லை. ஆகையால், இந்த ஏழையின் கஷ்டத்தைத் தீர்ப்பதற்காக அம்பிகையைப் போல் வந்திருக்கிறீர்கள். தாயே! குடிசைக்குள்ளே வந்தருள வேண்டும். இங்கேயே தங்களை நிறுத்தி வைத்திருப்பது நான் செய்யும் அபசாரம்!" என்று சோதிடர் சமத்காரமாகப் பேசினார்.

ரத சாரதியைப் பார்த்துக் குந்தவை, "ரதத்தைக் கோயிலுக்குச் சமீபம் கொண்டு போய் ஆலமரத்தின் நிழலில் நிறுத்தி வை!" என்றாள்.

பிறகு சோதிடர் வழிகாட்டி முன் செல்ல, குந்தவையும் வானதியும் அவ்வீட்டுக்குள்ளே சென்றார்கள்.

சோதிடர் தம் சீடனைப் பார்த்து "அப்பனே! வாசலில் ஜாக்கிரதையாக நின்று கொண்டிரு; தப்பித் தவறி யாராவது வந்தாலும் உள்ளே விடாதே!" என்று எச்சரித்தார்.

அரச குமாரியை வரவேற்பதற்கு உகந்ததாகச் சோதிடரின் கூடம் அழகு செய்யப்பட்டிருந்தது. சுவரில் ஒரு மாடத்தில் அம்பிகையின் படம் அலங்கரிக்கப்பட்டு விளங்கியது. அமருவதற்கு இரண்டு பீடங்கள் சித்தமாயிருந்தன. குத்து விளக்கு எரிந்தது. அங்குமிங்கும் கோலங்கள் பொலிந்தன. ராசி சக்கரங்கள் போட்ட பலகைகளும் ஓலைச் சுவடிகளும் சுற்றிலும் இரைந்து கிடந்தன.

பெண்மணிகள் இருவரும் பீடங்களில் அமர்ந்த பிறகு, சோதிடரும் உட்கார்ந்தார்.

"அம்மணி! வந்த காரியம் இன்னதென்பதைத் தயவு செய்து சொல்லி அருள வேணும்!" என்றார்.

"ஜோசியரே! அதையும் தங்கள் சோதிடத்திலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளக் கூடாதா?" என்றாள் குந்தவை.

"ஆகட்டும் தாயே!" என்று கூறிச் சோதிடர் கண்ணை மூடிக் கொண்டு சிறிது நேரம் ஏதோ மந்திரம் ஜபித்துக் கொண்டிருந்தார்.

பிறகு கண்ணைத் திறந்து பார்த்து "கோமாட்டி, இந்தக் கன்னிப் பெண்ணின் ஜாதகம் பற்றிக் கேட்பதற்காகவே இன்று முக்கியமாக வந்திருக்கிறீர்கள், அவ்விதம் தேவி பராசக்தியின் அருள் சொல்கிறது. உண்மைதானா?" என்றார்.

"ஆஹா! பிரமாதம்! உங்களுடைய சக்தியை என்னவென்று சொல்வது? ஆம், சோதிடரே! இந்த பெண்ணைப் பற்றிக் கேட்கத்தான் வந்தேன். ஒரு வருஷத்துக்கு முன்பு இவள் பழையாறை அரண்மனைக்கு வந்தாள். வந்து எட்டு மாத காலம் மிகக் குதூகலமாய் இருந்து வந்தாள். என் தோழியருக்குள்ளே இவள்தான் சிரிப்பும் விளையாட்டும் கலகலப்புமாக இருந்து வந்தாள். நாலுமாதமாக இவளுக்கு என்னவோ நேர்ந்திருக்கிறது. அடிக்கடி சோர்ந்து போகிறாள். பிரமை பிடித்தாற்போல் இருக்கிறாள்; சிரிப்பையே மறந்து விட்டாள். உடம்புக்கு ஒன்றுமில்லை என்கிறாள். இவள் பெற்றோர்கள் நாளைக்கு வந்து கேட்டால், என்ன மறுமொழி சொல்வதென்றே தெரியவில்லை..."

"தாயே! கொடும்பாளூர் இளைய வேளாரின் செல்வப் புதல்வி தானே? இவருடைய பெயர் வானதி தானே?" என்றார் சோதிடர்.

"ஆமாம், உமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதே!"

"இந்த அரசிளங்குமரியின் ஜாதகம் கூட என்னிடம் இருக்கிறது. சேர்த்து வைத்திருக்கிறேன்! சற்றுப் பொறுக்க வேணும்!" என்று சொல்லிவிட்டு, சோதிடர் பக்கத்திலிருந்த ஒரு பழைய பெட்டியைத் திறந்து சிறிது நேரம் புரட்டினார். பிறகு, அதிலிருந்து ஒரு ஜாதகக் குறிப்பை எடுத்துக் கவனமாய்ப் பார்த்தார்.












Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 10. குடந்தை சோதிடர்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 5. நடுக்கடலில்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 53. அபய கீதம்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 32. பிரம்மாவின் தலை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: