BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  53. அபய கீதம்  Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 53. அபய கீதம்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  53. அபய கீதம்  Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 53. அபய கீதம்    ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  53. அபய கீதம்  Icon_minitimeWed May 11, 2011 12:35 pm

கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

53. அபய கீதம்




இளவரசர் அருள்மொழிவர்மர் பார்த்திபேந்திரனுடைய கப்பலுக்குப் போய்ச்சேரும் வரையில், தொண்டைமான் நதியின் முகத்துவாரத்தில் நின்றவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கப்பலில் இளவரசர் ஏறிக்கொண்ட உடனே அவரை ஏற்றிச் சென்ற படகு திரும்பியது. சேநாதிபதி பூதி விக்கிரமகேசரி குதூகலம் அடைந்திருந்தார் என்று அவருடைய முகக்குறி காட்டியது.

"ஆண்டவன் நம் கட்சியில் இருக்கிறார்; சந்தேகமில்லை. இளவரசரின் திருமேனியில் உள்ள சங்குசக்கரச் சின்னங்கள் பழுதாகப் போய்விடுமா? பார்த்திபேந்திரன் அவரைப் பத்திரமாகக் காஞ்சி கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவான். நாமும் நம் படைகளுடன் தஞ்சையை நோக்கிப் புறப்பட வேண்டியதுதான்!" என்று தமக்குத்தாமே சொல்லுகிறவர் போல் கொடும்பாளூர் வேளார் உரத்துச் சொல்லிக் கொண்டார்.

உடனே பக்கத்திலிருந்த ஆழ்வார்க்கடியானைப் பார்த்தார். "வைஷ்ணவனே! நீ இங்கு நிற்கிறாயா? அதனால் பாதகம் இல்லை. முதன் மந்திரியின் அந்தரங்க ஒற்றனுக்குத் தெரியாதது என்ன இருக்கிறது? சரி, நீ என்ன செய்யப் போகிறாய்? மாதோட்டத்துக்கு என்னுடன் வரப் போகிறாயா?" என்று கேட்டார்.

"இல்லை, ஐயா! முதன் மந்திரி எனக்கு இட்ட இன்னும் ஒரு வேலை நான் செய்யவேண்டியிருக்கிறது..."

"அது என்ன, அப்பா?"

ஆழ்வார்க்கடியான் சற்றுத் தூரத்தில் ஊமை ராணியும் பூங்குழலியும் நின்ற இடத்தை நோக்கினான்.

"அந்தப் பெண்களைப் பற்றிய விஷயமா?" என்றார் சேநாதிபதி.

"அவர்களில் ஒருவரைப் பற்றியதுதான்; இலங்கையில் இத்தகைய ஊமை ஸ்திரீ ஒருத்தியைப் பார்க்க நேர்ந்தால் அவளை எப்படியாவது தஞ்சாவூருக்கு அழைத்து வரும்படி முதன் மந்திரி கட்டளையிட்டிருக்கிறார்."

"நல்ல வேலை உனக்குக் கொடுத்தார். அதைக் காட்டிலும் இலங்கைக் கடல்களில் அடிக்கும் புயற் காற்றுகளில் ஒன்றைப் பிடித்துக்கொண்டு வரும்படி உனக்குச் சொல்லியிருக்கலாம். அந்த ஊமை ஸ்திரீயைப் பிடித்துக்கொண்டு போவது அவ்வளவு சுலபமாயிருக்கும். அவள் யாரோ தெரியவில்லை. நம் இளவரசரிடம் மிக்க அபிமானம் வைத்திருக்கிறாள். உனக்கு ஏதாவது அவளைப்பற்றித் தெரியுமா?"

"அவள் ஊமை என்பதும், பிறவிச் செவிடு என்பதும் தெரியும். அவளை அழைத்துச் செல்வதைக் காட்டிலும் புயற்காற்றைக் கூண்டில் அடைத்துக்கொண்டு போவது சுலபம் என்றும் தெரியும். ஆயினும் என் எஜமானர் சொல்லியிருக்கிற படியால் ஒரு பிரயத்தனம் செய்து பார்ப்பேன்."

"இந்த ஓடக்காரப் பெண்ணுக்கும் அவளுக்கும் கூடச் சிநேகம் போலிருக்கிறது. இரண்டு பேரும் ஜாடைகளினால் பேசிக்கொள்வதைப் பார்! அந்தப் பெண்ணை இங்கே கூப்பிடு! அவளுக்கு ஓர் எச்சரிக்கை செய்ய வேண்டும்!..."

ஆழ்வார்க்கடியான் அந்தப் பெண்களின் அருகில் சென்று பூங்குழலியிடம் சேநாதிபதி அழைப்பதைக் கூறினான்.

பூங்குழலி ஊமை ராணியை விட்டுப் பிரிந்து சேநாதிபதியை அணுகினாள்.

"இதோ பார், பெண்ணே! நீ வெகு புத்திசாலி! நல்ல சமயத்தில் வந்து, முக்கியமான செய்தி சொன்னாய். சோழகுலத்துக்குப் பெரிய உதவி செய்தாய். இதை நான் என்றும் மறக்க மாட்டேன். தக்க சமயத்தில் தகுந்த பரிசில் கொடுப்பேன்" என்றார்.

பூங்குழலி, "வந்தனம், ஐயா! எனக்குப் பரிசில் எதுவும் தேவையில்லை" என்று பணிவுடன் சொன்னாள்.

"தேவையில்லை என்றால் யார் விடுகிறார்கள்? இந்தக் குழப்பமெல்லாம் கொஞ்சம் அடங்கட்டும். பிறகு...பிறகு சோழ நாட்டுச் சைன்யத்தில் வீராதி வீரனாகப் பார்த்து உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன். உனக்கு வாய்க்கின்ற கணவன் அற்ப சொற்பமானவனாய் இருந்தால் போதாது. பீமசேனனாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவனைக் கண்ணிலே விரலைக் கொடுத்து ஆட்டி வைத்துவிட மாட்டாயா?" என்று சேநாதிபதி கூறிப் புன்னகை புரிந்தார்.

பூங்குழலி தரையைப் பார்த்தபடி நின்றாள். அவள் உள்ளத்தில் கோபம் பொங்கியது. ஆனால் அதை அச்சமயம் காட்டிகொள்ள விரும்பவில்லை. இந்த முரட்டுக் கிழவரிடம் சண்டை பிடிப்பதில் பயன் என்ன? கோபத்தை அடக்கிக் கொள்ள முயன்றான்.

"ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள், இளவரசருக்கு ஏதோ உதவி செய்துவிட்டபடியால், அவர் பேரில் பாத்தியதை கொண்டாடலாம் என்று எண்ணாதே! கடலில் வலை போட்டு மீன் பிடிப்பதோடு நிறுத்திக்கொள்! இளவரசரை வலை போட்டுப் பிடிக்கலாம் என்று ஆசைப்படாதே! ஜாக்கிரதை, பெண்ணே! இனி அவர் அருகில் நெருங்கினாலும் உனக்கு ஆபத்து வரும்!" என்றார் சேநாதிபதி. அவருடைய குரல் அப்போது மிகக் கடுமையாக இருந்தது. அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் காய்ச்சிய ஈயத்துளியை விடுவது போல் பூங்குழலியின் காதில் விழுந்தது.

அந்தக் கிழவனாருக்குப் பதிலுக்குப் பதில் காரசாரமான வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்று பூங்குழலி விரும்பினாள். ஆனால் பேச இயலவில்லை தொண்டையை அடைத்தது. காதில் விழுந்த காய்ச்சிய ஈயத் துளிகள் கண் வழியாக வெளி வந்தன போல் வெப்பமான கண்ணீர்த் துளிகள் தோன்றிக் கண்களை எரியச்செய்தன.

குனிந்த தலை நிமிராமல் பூங்குழலி திரும்பினாள். கடற்கரைக்கு எதிர்ப்பக்கம் நோக்கி நடந்தாள். நடை மெதுவாக ஆரம்பமாயிற்று. வரவரவேகம் அதிகரித்தது. ஊமை ராணி இருந்த திசையை ஒரு கணம் கடைக்கண்ணால் பார்த்தாள். அவள் அருகில் ஆழ்வார்க்கடியான் நின்று ஏதோ அவளிடம் தெரிவிக்க முயன்று கொண்டிருப்பதைக் கண்டாள். மனிதர்கள் உள்ள இடத்திலேயே தான் இருக்கக்கூடாது என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றியது. மனிதக் குரலையே கேட்கப் பிடிக்கவில்லை. ஆ! மனிதர்கள் எத்தனை கொடூரமானவர்கள்? எதற்காக இவ்வளவு குரூரமான சொற்களைப் பேசுகிறார்கள்! எல்லாரும் ஊமைகளாகவே இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?

சிறிது தூரம் காட்டில் புகுந்து சென்ற பிறகு, தொண்டைமானாற்றின் கரையை அடைந்தாள். அந்தக் கரையோடு உள்நாட்டை நோக்கி நடந்தாள். அவளுடைய படகை விட்டிருந்த இடத்தைக் குறி வைத்து நடந்தாள். ஆம், சீக்கிரம் அந்தப் படகைப்போய்ச் சேரவேண்டும். படகில் ஏறிக் கொள்ளவேண்டும். தன்னந்தனியாகக் கடலில் செல்ல வேண்டும். மனிதர்களுடைய குரல் காதில் விழ முடியாத நடுக்கடலுக்கே போய்விட வேண்டும். துடுப்பைச் சும்மா வைத்துவிடவேண்டும். அலைகளில் மொத்துண்டு படகு மிதந்து மிதந்து போகவேண்டும். தானும் அதில் போய் கொண்டிருக்க வேண்டும். எல்லையில்லாத கடலில் முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அலைபட்ட தன் உள்ளம் அமைதி பெறும். சேநாதிபதியின் வார்த்தைகளினால் நொந்த உள்ளத்தின் வேதனை தீரும். ஆத்திரம் தணிந்து ஆறுதல் உண்டாகும்.

அந்தப் பொல்லாத கிழவன் என்ன சொன்னான்! "வலை போட்டுக் கடலில் மீன் பிடிப்பதோடு நிறுத்திக் கொள்! இளவரசருக்கு வலை போடாதே!" என்றான்.

நானா இளவரசருக்கு வலை போடுகிறேன்! சீச்சீ! அந்தக் கிழவனின் புத்தி போன போக்கைப் பார்!... ஆம்; தரையில் வாழும் மனிதர்களைக் காட்டிலும் கடலில் வாழும் மீன்கள் எவ்வளவோ நல்ல ஜந்துக்கள். அவை இப்படியெல்லாம் கொடூரமாகப் பேசுவதில்லை. ஆழ்கடலில் நீந்தியும் மிதந்தும் எவ்வளவு ஆனந்தமாகக் காலங்கழிக்கின்றன! அவற்றுக்குக் கவலை ஏது? துயரம் ஏது? ஆகா! நான் கடலில் வாழும் மீனாகப் பிறந்திருக்கக்கூடாதா? அப்படிப் பிறந்திருந்தால், இந்த உலகத்தின் துயரங்கள், துவேஷங்கள், ஆசாபாசங்கள், கோபதாபங்கள், இவற்றில் அகப்பட்டுக் கொள்ளாமல் சதா சர்வ காலமும் ஆழ்கடலில் நீந்தி நீந்திப் போய்க் கொண்டிருக்கலாம் அல்லவா? அப்போது தன்னையும் இளவரசரையும் பிரிப்பதற்கோ வஞ்சகம் செய்வதற்கோ விஷமமாகப் பேசுவதற்கோ யாரும் இருக்க மாட்டார்கள் அல்லவா?... இல்லை, இல்லை! அதுவும் நிச்சயமில்லை. அங்கேயும் இந்தப் பொல்லாத மனிதர்கள் வந்து வலை போட்டுப் பிடித்துக் கொண்டு போகப் பார்ப்பார்கள்! இரண்டு மீன்களில் ஒன்றை மட்டும் கொண்டு போனாலும் போவார்கள்! பாதகர்கள்!...

பூங்குழலியின் மனத்தில் பொங்கிய ஆத்திரம் அவளுடைய கால்களுக்கு அளவில்லாத விரைவைக் கொடுத்தது. சூரியன் உச்சிவானுக்கு வந்த சமயம் அவள் படகை விட்டிருந்த இடத்தை அடைந்துவிட்டாள். நல்ல வேளை; படகு விட்டிருந்த இடத்தில் கட்டிப் போட்டபடியே இருந்தது. அவளுடைய ஆருயிர்த்தோழி அந்தப் படகுதான். அவளுடைய அடைக்கல ஸ்தானம் அந்தப் படகுதான். துன்பமும், துரோகமும் சூழ்ந்த இந்தப் பொல்லாத உலகத்தில் தனக்கு அமைதியும் ஆனந்தமும் அளிப்பது அந்தச் சாண் அகலத்துப் படகுதான். அதை யாரும் அடித்துக்கொண்டு போகாமல் விட்டு வைத்தது பெரிய காரியம்.

'இனி எது எப்படியாவது போகட்டும். இளவரசரை அந்தக் கிழச் சேநாதிபதி காவல் புரியட்டும். கொடும்பாளூர் வீட்டுப் பெண்ணையே அவர் கழுத்தில் கட்டிவிடட்டும். அதனால் எனக்கு என்ன? என் படகு இருக்கிறது; துடுப்பு இருக்கிறது; கையில் வலிவு இருக்கிறது; விசாலமான கடலும் இருக்கிறது. சமுத்திர ராஜனே! உன் அருமைப் புதல்வியை வேறு யார் கைவிட்டாலும் நீ கைவிட மாட்டாய் அல்லவா?

"சமுத்திர குமாரி" என்று இளவரசர் திருவாயினால் கூறியதைப் பொய்யாக்க மாட்டாய் அல்லவா?

பூங்குழலி படகில் ஏறிக்கொண்டாள். கடலை நோக்கிப் படகைச் செலுத்தினாள். நதியின் ஓட்டத்தோடு சென்றபடியால் சீக்கிரத்திலேயே தொண்டைமானாற்றின் முகத்துவாரத்தை அடைந்துவிட்டாள். பின்னர் கடலில் படகைச் செலுத்தினாள். சிறிது நேரத்துக்கெல்லாம் சுழிக்காற்று அடிக்கப் போகிறது என்று அவளுக்குத் தெரிந்து போயிற்று. சுழிக்காற்றின் முன் அறிகுறிகளை அவள் நன்கு அறிந்திருந்தாள். முதல் நாள் இரவு சந்திரனைச் சுற்றிச் சாம்பல் நிற வட்டம் காணப்பட்டது. இன்றைக்குப் பகலெல்லாம் ஒரே புழுக்கமாயிருந்தது. மரங்களில் இலை அசையவில்லை. அதோ தென்மேற்கு மூலையில் கரிய மேகத்திட்டுக்கள் கிளம்பிவிட்டன. சீக்கிரத்தில் சுழிக்காற்று அடிக்கப்போவது நிச்சயம். கடலின் கொந்தளிப்பு அற்புதக் காட்சியிருக்கும். கடலில் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. பூதத் தீவுக்குப் போய்த் தங்கியிருப்பது நல்லது. அங்கே தங்கியிருந்தால் சுழிக்காற்றினால் கடலிலே உண்டாகும் அல்லோல கல்லோலத்தை நன்றாகப் பார்த்துக் களிக்கலாம். காற்று அடித்துவிட்டுப் போன பிறகு, கடலிலும் கொந்தளிப்புச் சிறிது அடங்கிய பிறகு, படகைக் கடலில் செலுத்திக்கொண்டு கோடிக்கரைக்குப் போகலாம். இப்போது என்ன அவசரம்? கோடிக்கரைக்கு இப்போது அந்த மரக்கலம் அநேகமாகப் போயிருக்கும். நல்லவேளை சுழிக்காற்றில் அது அகப்பட்டுக் கொண்டிராது. இளவரசர் இத்தனை நேரம் பத்திரமாகப் போய் அங்கே இறங்கியிருப்பார். அல்லது ஒருவேளை மாமல்லபுரத்துக்கே போயிருந்தாலும் போயிருப்பார். எங்கே போயிருந்தால் நமக்கு என்ன? சுழிக்காற்றில் அகப்பட்டுக் கொண்டிருக்கமாட்டார்; அந்த வரைக்கும் திருப்தி அடையலாம்.

சுழிக்காற்றுத் தொடங்குவதற்கு முன்னால் அடியோடு காற்று நின்று போயிருந்தபடியால் மரக்கலங்கள் பாய் விரித்திருந்தும் கடலில் போக முடியவில்லை என்பது பூங்குழலிக்குத் தெரியாது. ஆகையால் இத்தனை நேரம் அக்கரை போய்ச் சேர்ந்திருக்கும் என்றே நினைத்தாள்.

சேநாதிபதி, "இளவரசருக்கு வலை போடாதே!" என்று சொன்னது அடிக்கடி அவளுடைய மனத்தில் தோன்றி துன்புறுத்திக் கொண்டிருந்தது. ஆகையால், கோடிக்கரைக்குத் தானும் உடனே போகவேண்டாம் என்று எண்ணினாள். பூதத் தீவிலே தங்கியிருந்து சுழிக்காற்றின் அட்டகாசங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பிறகு சாவகாசமாகப் புறப்படத் தீர்மானித்தாள். தொண்டைமானாற்றின் முகத்துவாரத்திலிருந்து பூதத்தீவு அதிக தூரத்தில் இல்லை ஆகையால் புறப்பட்ட ஒரு நாழிகை நேரத்துக்குள் அங்கே போய்ச் சேர்ந்துவிட்டாள். பூங்குழலி பூதத்தீவைச் சேர்ந்ததற்கும் சுழிக்காற்று அடிக்கத் தொடங்கியதற்கும் சரியாயிருந்தது.

படகைக் கரையில் ஏற்றிக் குப்புறக் கவிழ்த்துப் பத்திரமாய்க் கட்டிப் போட்டுவிட்டு, பூங்குழலி அத்தீவில் இருந்த ஒரு சிறிய புத்த ஸ்தூபத்தை அடைந்தாள். முதலில் சற்று நேரம் அதன் அடிவாரத்துக் குகை அறையில் காற்றிலும் மழையிலும் அடிபடாதிருந்து பார்த்தாள். அதிக நேரம் அவளால் அப்படி இருக்க முடியவில்லை. வாயு பகவானின் கோலாகலத் திருவிளையாடல்களைப் பார்க்கும் ஆசை உண்டாயிற்று. குகையிலிருந்து வெளிவந்து படிக்கட்டில் ஏறி ஸ்தூபத்தின் உச்சியை அடைந்தாள். அப்போது சுற்றுப்புறத்துச் சூழ்நிலை அவள் உள்ளத்தின் நிலைக்கு ஒத்ததாக இருந்தது. பூதத்தீவில் ஓங்கி வளர்ந்திருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் தலைவிரி கோலமாக ஊழிக் காலத்தில் சம்ஹார மூர்த்தியைச் சுற்றி நின்று பூதகணங்கள் ஆடுவது போல் ஆடின. கடல் அலைகள் அத்தென்னை மரங்களின் உயரம் சில சமயம் எழும்பி இமயமலையின் பனிச் சிகரங்களைப்போல் ஒரு வினாடி காட்சி அளித்து, மறு வினாடி நூறு கோடி நுரைத் துளிகளாகச் சிதறி விழுந்தன. சுழன்று சுழன்று அடித்த காற்றின் சப்தமும் அலைகளின் பேரொலியும் இடையிடையே கேட்ட இடி முழக்கமும் சேர்ந்து திக்குத் திகாந்தங்கள் எல்லாம் இடிந்து தகர்ந்து விழுகின்றன என்று எண்ணச் செய்தன. வானத்தை வெட்டிப் பிளப்பதுபோல் அவ்வப்போது தோன்றிக் கப்பும் கிளையும் விட்டுப் படர்ந்து ஓடி மறைந்த மின்னல்கள் ஒரு வினாடி நேரம் கொந்தளித்த அலை கடலையும், பேயாட்டம் ஆடிய மரங்களையும், வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டு மறுவினாடி கன்னங்கரிய காரிருளில் ஆழச் செய்தன.

இவ்வளவு அல்லோலகல்லோலங்களையும் பார்த்துக் கொண்டு பூங்குழலி வெகுநேரம் நின்றாள். அவள் உடம்பு காற்றில் ஆடிய மரங்களைப் போல் ஆடியது. அவள் கூந்தல் அவிழ்ந்து காற்றில் பறந்தது. மழை அவள் உடலை நனைத்தது. இடி முழக்கம் அவள் செவிகளைப் பிளந்தது. மின்வெட்டு அவள் கண்களைப் பறித்தது. இதையெல்லாம் அவள் பொருட்படுத்தவேயில்லை. வெகு நேரம் அக்காற்றிலும் மழையிலும் அவள் நின்றாள். அவள் உள்ளம் வெறி கொண்டு கொந்தளித்தது. தன்னைச் சுற்றிலும் நடைபெறும் அற்புத கோலாகலமெல்லாம் தான் பார்த்துக் களிப்பதற்காகவே நடப்பதாக எண்ணிப் பெருமிதத்துடன் அநுபவித்துக் கொண்டிருந்தாள்.

இடையிடையே அவளுக்கு இளவரசர் அருள்மொழிவர்மரின் நினைவு வந்துகொண்டிருந்தது. அச்சமயம் அவர் கோடிக்கரை சேர்ந்து பத்திரமான இடத்தில் தங்கியிருப்பார் என்று எண்ணினாள். ஒரு வேளை தன் பெற்றோர் வீட்டிலே கூடத் தங்கியிருக்கலாம்; அல்லது நாகப்பட்டினம் சென்று அங்கே இராஜ மாளிகையில் தங்கியிருக்கலாம். ஒரு வேளை கடலில் கப்பலிலேயே இருந்திருப்பாரோ? இருந்தால் என்ன? அவர் ஏறிச் சென்ற பெரிய மரக்கலத்தை எந்தச் சுழிக்காற்றுதான் என்ன செய்துவிடும்? அவரைப் பாதுகாக்க எத்தனையோ பேர் சுற்றிலும் சூழ்ந்திருப்பார்கள். தன்னைப் பற்றி அவர் ஞாபகப்படுத்திக் கொள்ளுவாரா? 'அந்தப் பேதை பூங்குழலி இச்சமயம் எங்கிருக்கிறாளோ?' என்று எண்ணிக் கொள்வாரா? ஒரு நாளும் மாட்டார். அவளுடைய சகோதரி அனுப்பிய வந்தியத்தேவனைப் பற்றி நினைத்துக் கொள்வார். கொடும்பாளூர்க் கோமகளைப்பற்றியும் நினைத்துக் கொள்ளலாம். இந்த ஏழைக் கரையர் குலப் பெண்ணை அவருக்கு எங்கே நினைவிருக்கப்போகிறது?

இரவு வெகு நேரம் சுழிக்காற்றின் கோலாகலத்தை அநுபவித்துவிட்டுப் பூங்குழலி ஸ்தூபத்தின் அடிவாரக் குகைக்குச் சென்று கண்ணயர்ந்தாள். தூக்கத்தில் அவள் அமைதியடையவில்லை. ஏதேதோ கனவுகள் கண்டு கொண்டிருந்தாள். கடலில் படகில் சென்று வலை வீசுவது போலவும், அதில் இளவரசர் அகப்படுவது போலவும் ஒரு தடவை கனவு கண்டாள். மற்றொரு சமயம் அவளும் இளவரசரும் மீன்களாக மாறிக் கடலில் அருகருகே நீந்திப் போவதாகக் கனவு கண்டாள். ஒவ்வொரு கனவின் போதும் நடுவில் விழித்தெழுந்து, "இது என்ன பைத்தியக்காரத்தனம்?" என்று எண்ணி மனத்தைத் தெளிவாக்கிக் கொள்ள முயன்று மறுபடியும் உறங்கினாள்.

பொழுது விடிந்து அவள் நன்றாய் விழித்தெழுந்த போது சுழிக்காற்றின் கோலாகலம் ஒருவாறு அடங்கி விட்டிருந்தது. இடியில்லை; மின்னல் இல்லை; மழையும் நின்று போயிருந்தது. எழுந்து கடற்கரைக்குச் சென்றாள். நேற்றிரவு போல் அவ்வளவு பெரிய அலைகள் இப்போது கடலில் அடிக்கவில்லை. ஆயினும் கடல் இன்னும் கொந்தளிப்பாகவே இருந்தது. முன்னாளிரவு சுழிக்காற்று அத்தீவை என்ன பாடுபடுத்திவிட்டது என்பதற்கு அறிகுறியான காட்சிகள் நாலாபக்கமும் காணப்பட்டன. வேருடன் பெயர்ந்து தரையில் விழுந்து கிடந்த மரங்களும், முடிகள் வளைந்து தாழ்ந்திருந்த நெடிய பெரிய மரங்களும் காட்சி அளித்துக் கொண்டிருந்தன.

பூங்குழலி அக்காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தபோது கடலில் சற்றுத் தூரத்தில் ஒரு கட்டுமரம் மிதப்பது போல் தெரிந்தது. அது கடற்கரையோரத்து அலைகளினால் பல தடவை அப்படியும் இப்படியும் அலைப்புண்ட பிறகு கடைசியாகக் கரையில் வந்து ஒதுங்கியது. அப்போதுதான் அதிலே ஒரு மனிதன் இருப்பதைப் பூங்குழலி கவனித்தாள். ஓடிப் போய்ப் பார்த்தாள். கட்டுமரத்தில் கட்டப்பட்டிருந்த அந்த மனிதன் குற்றுயிராயிருந்தான். அவனைக் கட்டு அவிழ்த்து விட்டு ஆசுவாசப்படுத்தினாள். அவன் ஈழத்துக் கடற்கரைக் கிராமம் ஒன்றைச் சேர்ந்த வலைஞன். மீன் பிடிக்க போன இடத்தில் சுழிக்காற்றில் அகப்பட்டுக் கொண்டதாகக் கூறினான். தன்னுடன் இருந்த தோழனைக் கடல் இரையாக்கிக் கொண்டதாகவும் தான் பிழைத்தது புனர்ஜன்மம் என்றும் தெரிவித்தான். இன்னும் முக்கியமான ஒரு செய்தியையும் அவன் கூறினான்.

"முன்னிரவு நேரத்தில், கடுமையான சுழிக்காற்று அடித்துக் கொஞ்சம் நின்றது போலிருந்தது. எங்களைச் சுற்றிலும் காரிருள் சூழ்ந்திருந்தது. திடீரென்று ஒரு பேரிடி இடித்தது. அப்போது தோன்றிய மின்னல் வெளிச்சத்தில் இரண்டு மரக்கலங்கள் தெரிந்தன. ஒரு மரக்கலம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அந்தப் பயங்கரமான காட்சியைச் சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். அதில் மனிதர்கள் அவசர நடமாட்டமும் தெரிந்தது. பிறகு தீப்பிடித்த கப்பல் கடலில் முழுகிவிட்டது. மற்றொரு மரக்கலம் இருட்டில் மறைந்து விட்டது!" என்று அம்மனிதன் தட்டுத் தடுமாறிக் கூறினான்.

இதைக் கேட்டவுடனே பூங்குழலிக்கு இளவரசரை ஏற்றிச் சென்ற கப்பல் அவற்றில் ஒன்றாயிருக்குமோ என்ற ஐயம் உதித்தது. அப்படி இருக்க முடியாது என்று நிச்சயம் அடைந்தாள். கடலில் எத்தனையோ கப்பல்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கும். அதைப்பற்றி நமக்கு என்ன கவலை? ஆனாலும் தீப்பிடித்த கப்பலில் இருந்தவர்களில் சிலர் கடலில் விழுந்திருக்கக் கூடும். இந்தக் கட்டுமரத்து வலைஞனைப் போல் அவர்களில் யாராவது கையில் அகப்பட்டதைப் பிடித்துக்கொண்டு தத்தளிக்கக் கூடும். அவர்களுக்கு ஏன் நாம் உதவி செய்யக்கூடாது? படகில் ஏறிச் சென்று அப்படித் தத்தளிக்கிறவர்களை ஏற்றிக்கொண்டு வந்து ஏன் கரை சேர்க்கக் கூடாது? பின்னே, இந்த ஜன்மம் எதற்காகத்தான் இருக்கிறது?...

அவ்வளவுதான்; இந்த எண்ணம் தோன்றியதோ இல்லையோ, பூங்குழலி படகைக் கட்டவிழ்த்து நிமிர்த்திக் கடலில் தள்ளி விட்டாள்; தானும் ஏறிக் கொண்டாள். அவளுடைய இரும்புக் கரங்களின் பலம் முழுவதையும் உபயோகித்துத் துடுப்பை வலித்தாள். கரையில் வந்து மோதிய அலைகளைத் தாண்டி அப்பால் போகும் வரையில் மிகக் கடினமான வேலையாயிருந்தது. அப்புறம் அவ்வளவு கஷ்டமாக இல்லை வழக்கம்போல் சர்வசாதாரணமாக அவளுடைய கரங்கள் துடுப்பை வலித்தன. படகு உல்லாசமாக ஆடிக் கொண்டு மெள்ள மெள்ள நகர்ந்து சென்றது.

பூங்குழலியின் உள்ளத்தில் குதூகலமும் பொங்கியது. அவள் படகிலே வழக்கமாகப் பாடும் பழைய கீதம் தானாகவே புதிய உருவம் கொண்டது. அலைகளின் இரைச்சலை அடக்கிக் கொண்டு அந்தக் கீதம் அவளுடைய கம்பீரமான இனிய குரல் வழியாக வெளிவந்து நாற்றிசையும் பரவியது:-

"அலைகடல் கொந் தளிக்கையிலே
அகக்கடல்தான் களிப்பதுமேன்?
நிலமகளும் துடிக்கையிலே
நெஞ்சகந்தான் துள்ளுவதேன்?
இடி இடித்து எண்திசையும்
வெடிபடும் அவ்வேளையிலே
நடனக் கலைவல்லவர்போல்
நாட்டியந்தான் ஆடுவதேன்?"

பாய்மரக் கட்டையைப் பிடித்துக்கொண்ட இளவரசரும், வந்தியத்தேவனும் அலைகடலில் மொத்துண்டு மொத்துண்டு மிதந்து கொண்டிருந்தார்கள். அன்று ஓர் இரவுதான் அவர்கள் அவ்வாறு கடலில் மிதந்தார்கள். ஆனால் வந்தியத்தேவனுக்கு அது எத்தனையோ யுகங்கள் எனத் தோன்றியது. அவன் சீக்கிரத்திலேயே நிராசை அடைந்து விட்டான்; பிழைத்துக் கரையேறுவோம் என்ற நம்பிக்கையை அடியோடு இழந்து விட்டான்.

ஒவ்வொரு தடவை அலை உச்சிக்கு அவன் போய்க் கீழே வந்த போதும், "இத்துடன் செத்தேன்" என்று எண்ணிக் கொண்டான். மறுபடியும் உயிரும் உணர்வும் இருப்பதைக் கண்டு வியந்தான்.

அடிக்கடி இளவரசரைப் பார்த்து, "என்னுடைய அவசர புத்தியினால் தங்களையும் இந்த ஆபத்துக்கு உள்ளாக்கினேனே" என்று புலம்பினான்.

இளவரசர் அவனுக்கு ஆறுதல் கூறித் தைரியம் ஊட்டி வந்தார். "மூன்று நாள், நாலு நாள் வரையில் கடலில் இம்மாதிரி மிதந்து பிழைத்து வந்தவர்கள் உண்டு" என்று அடிக்கடி சொல்லி வந்தார்.

"நாம் கடலில் விழுந்து எத்தனை நாள் ஆயின?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"இன்னும் ஒரு ராத்திரிகூட ஆகவில்லையே?" என்றார் இளவரசர்.

"பொய்! பொய்! பல நாட்கள் ஆகியிருக்க வேண்டும்" என்றான் வந்தியத்தேவன்.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அவனுக்கு இன்னொரு கஷ்டம் ஏற்பட்டது. தொண்டை வறண்டுபோய்த் தாகம் எடுத்தது. தண்ணீரிலேயே மிதந்து கொண்டிருந்தான்; ஆனால் தாகத்துக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லை. இது பெரிய சித்திரவதையாயிருந்தது. இளவரசரிடம் கூறினான்.

"கொஞ்சம் பொறுமையாயிரு! சீக்கிரம் பொழுது விடியும்! எங்கேயாவது கரையிலே போய் ஒதுங்குவோம்" என்றார் இளவரசர்.

சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தான்; முடியவில்லை. "ஐயா! என்னால் இந்தச் சித்திரவதையைப் பொறுக்க முடியாது. கட்டை அவிழ்த்து விடுங்கள்! கடலில் முழுகிச் சாகிறேன்!" என்றான்.

இளவரசர் மீண்டும் தைரியம் கூற முயன்றார் ஆனால் பலிக்கவில்லை. வந்தியத்தேவனுக்கு வெறி மூண்டது. தன்னுடைய கட்டுக்களைத் தானே அவிழ்த்துக் கொள்ள முயன்றான். இளவரசர் அதைப் பார்த்தார். அருகில் நெருங்கிச் சென்று அவனுடைய தலையில் ஓங்கி இரண்டு அறை அறைத்தார். வந்தியத்தேவன் உணர்வை இழந்தான்!

அவன் மறுபடி உணர்வு பெற்றபோது பொழுது விடிந்து வெளிச்சமாயிருப்பதைக் கண்டான். அலைகளின் ஆரவாரமும் சிறிது அடங்கியிருந்தது. சூரியன் எங்கேயோ உதயமாகியிருக்க வேண்டும். ஆனால் எங்கே உதயமாகியிருக்கிறது என்று பார்க்க முடியவில்லை. இளவரசர் அவனை அன்புடன் நோக்கி, "தோழா! சமீபத்தில் எங்கேயோ கரை இருக்கவேண்டும். தென்னை மரம் ஒன்றின் உச்சியைச் சற்று முன் பார்த்தேன். இன்னும் கொஞ்சம் பொறுமையாயிரு!" என்று சொன்னார்.

"இளவரசே! என்னைக் கைவிட்டுவிடுங்கள்! தாங்கள் எப்படியாவது தப்பிப் பிழையுங்கள்!" என்றான் வந்தியத்தேவன்.

"வேண்டாம்! அதைரியப்படாதே! உன்னை அப்படி நான் விட்டுவிடமாட்டேன்! ஆகா! அது என்ன! யாரோ பாடுகிற குரல்போல் தொனிக்கிறதே!" என்றார் இளவரசர். ஆம்; அப்போது அவர்களுடைய காதில் பூங்குழலி படகிலிருந்து பாடிய பாட்டுத்தான் கேட்டது.

"அலைகடல் கொந்தளிக்கையிலே
அகக்கடல்தான் களிப்பதுமேன்?"

என்ற கீதம் அவர்களுடைய காதில் அபய கீதமாகத் தொனித்தது. உடற்சோர்வும் மனச்சோர்வும் உற்று, முக்கால் பிராணனை இழந்திருந்த வந்தியத்தேவனுக்குக்கூட அந்தக் கீதம் புத்துயிர் அளித்து உற்சாகம் ஊட்டியது.

"இளவரசே! பூங்குழலியின் குரல்தான் அது! படகு ஓட்டிக்கொண்டு வருகிறாள். நாம் பிழைத்துப் போனோம்!" என்று சொன்னான்.

சிறிது நேரத்துக்கெல்லாம் படகு அவர்கள் கண்ணுக்குத் தென்பட்டது. நெருங்கி நெருங்கி அருகில் வந்தது. பூங்குழலி , "இது உண்மையில் நடப்பதுதானா?" என்று சந்தேகித்துச் செயலிழந்து நின்றாள். இளவரசர், வந்தியத்தேவனைக் கட்டு அவிழ்த்து விட்டார். முதலில் தாம் படகிலே தாவி ஏறிக்கொண்டார். பின்னர் வந்தியத்தேவனையும் ஏற்றி விட்டார். பூங்குழலி கையில் பிடித்த துடுப்புடனே சித்திரபாவையைப் போல் செயலற்று நின்றாள்








Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 53. அபய கீதம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 7. காட்டில் எழுந்த கீதம்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 25. கோட்டைக்குள்ளே
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 41. நிலவறை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: