BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 17. குதிரை பாய்ந்தது!  Button10

 

  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 17. குதிரை பாய்ந்தது!

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 17. குதிரை பாய்ந்தது!  Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 17. குதிரை பாய்ந்தது!      ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 17. குதிரை பாய்ந்தது!  Icon_minitimeFri May 06, 2011 9:57 am


கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

17. குதிரை பாய்ந்தது!



ஒப்புவமையில்லாத தன் சகோதரன் அருள்மொழிவர்மனுக்குத் தகுந்த மணமகள் வானதிதான் என்று குந்தவை தீர்மானித்திருந்தாள். ஆனால் வானதியிடம் ஒரே ஒரு குறை இருந்தது. அது அவளுடைய பயந்த சுபாவந்தான். வீராதி வீரனை மணக்கப் போகிறவள், உலகத்தை ஒரு குடை நிழலில் ஆளப் போகும் புதல்வனைப் பெறப் போகிறவள், இப்படி பயங்கொள்ளியாயிருக்கலாமா? அவளுடைய பயந்த சுபாவத்தை மாற்றி அவளைத் தீரமுள்ள வீர மங்கையாக்க வேண்டுமென்று குந்தவை விரும்பினாள். அதற்காகவே இந்தப் பொம்மை முதலை விளையாட்டை ஏற்படுத்தியிருந்தாள். ஆனால் அந்தச் சோதனையில் கொடும்பாளூர்க் குமாரி வெற்றியுடன் தேறிவிட்டாள்.

குடந்தை சோதிடர் வீட்டிலிருந்து குந்தவை தேவியும் வானதியும் திரும்பி வந்ததும் அன்னப் படகில் ஏறிக்கொண்டார்கள். படகு சிறிது தூரம் சென்றது. ஆற்றங்கரையில் இருபுறமும் மரமடர்ந்த ஓரிடத்தில் படகை நிறுத்திவிட்டு குந்தவையும் அவளுடைய தோழிகளும் நீரில் இறங்கி விளையாடுவது வழக்கம். அந்த இடத்துக்கே இன்றும் போய் அவர்கள் இறங்கினார்கள்.

எல்லாரும் இறங்கியானதும், அப் பெண்களில் ஒருத்தி, "ஐயோ! முதலை!" என்று கூவினாள். அவர்கள் எந்தப் பெரிய மரத்தின் அடியில் இறங்கினார்களோ, அந்த மரத்துக்கு மறுபக்கத்தை அப்பெண் சுட்டிக் காட்டிக்கொண்டே "முதலை! முதலை!" என்று அலறினாள். உடனே எல்லாப் பெண்களும் சேர்ந்து, "ஐயோ! முதலை! பயமாயிருக்கிறதே!" என்றெல்லாம் கூச்சலிட்டுக் கொண்டு ஓடினார்கள்.

ஆனால் பயந்த சுபாவமுள்ள வானதி மட்டும் அச்சமயம் சிறிதும் பயப்படவில்லை. திறந்த வாயுள்ள பயங்கர முதலையைத் திடீரென்று சமீபத்தில் கண்டும் அவள் பீதி அடைந்துவிடவில்லை. மற்றவர்கள் எல்லாரும் குந்தவை தேவி கூறியிருந்தபடி மிகவும் பயந்ததுபோல் பாசாங்கு செய்தும் வானதி பயப்படவில்லை. "அக்கா! முதலைக்குத் தண்ணீரில் இருக்கும்போதுதான் பலமெல்லாம்! கரையில் கிடக்கும்போது அதனால் ஒன்றும் செய்ய முடியாது. இவர்களைப் பயப்படாதிருக்கச் சொல்லுங்கள்!" என்றாள் கொடும்பாளூர்க் குமரி.

"அடி, பொல்லாத கள்ளி! 'இது நிஜ முதலையல்ல; பொம்மை முதலை' என்பது உனக்கு முன்னாலேயே தெரியும் போலிருக்கிறது! யாரோ உனக்குச் சொல்லியிருக்க வேண்டும்!" என்று மற்றப் பெண்கள் கூறினார்கள்.

"நிஜ முதலையாயிருந்தால்கூட எனக்குப் பயம் கிடையாது. பல்லி, கரப்பான் பூச்சிகளைக் கண்டால்தான் எனக்குப் பயம்!" என்றாள் வானதி.

இந்தச் சமயத்திலேதான் அப்பெண்களைப் பயங்கரமான முதலை வாயிலிருந்து காப்பாற்றுவதற்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். குதிரை மேலிருந்து ஒரே குதியாய்க் குதித்து ஓடி வந்து வேலையும் வீசினான்.

முதலைக்கு முன் புறத்தில் வந்து நின்று அந்தக் கம்பீரத் தோற்றமுடைய மங்கை பேசியதைக் கேட்ட வல்லவரையனுக்கு உடம்பு புல்லரித்தது. அவள் தன்னோடு பேசவில்லையே என்று குடந்தை சோதிடர் வீட்டில் அவனுக்கு ஏற்பட்ட மனக்குறை தீர்ந்தது. ஆனால், அந்த முதலை, அவள் பின்னால் கிடந்த திறந்த வாயுடைய பயங்கர முதலை, ஏனோ அது, அவனுக்கு மனச் சங்கடத்தை அளித்துக் கொண்டிருந்தது. முதலைக்கு முன்னால் இவள் வந்து நிற்கும் காரணம் என்ன? 'அதைப் பற்றிச் சிரமம் வேண்டாம்' என்று இவள் சொல்வதின் பொருள் என்ன? இவ்வளவு நேரமும் அம்முதலை கிடந்த இடத்திலேயே கிடப்பதன் காரணந்தான் என்ன?

அந்த யுவதி மேலும் பேசினாள்:- "ஐயா! குடந்தையில் நீங்கள் அவசரப்பட்டுச் சோதிடர் வீட்டுக்குள்ளே வந்ததற்காக வருத்தம் தெரிவித்தீர்கள். அதற்கு மறுமொழி சொல்லாமலே நாங்கள் வந்துவிட்டோ ம். இதிலிருந்து சோழநாட்டுப் பெண்களே மரியாதை அறியாதவர்கள் என்ற கருத்து உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். அப்படி நீங்கள் எண்ணிக்கொள்ள வேண்டாம். என்னுடன் வந்த பெண்ணுக்கு திடீரென்று மயக்கம் வந்துவிட்டபடியால், என் மனம் சிறிது கலங்கியிருந்தது. ஆகையினால்தான் தங்களுக்கு மறுமொழி சொல்லவில்லை!..."

'அடாடா! இது என்ன இனிமையான குரல்! இவள் பேசும் மொழிகளைக் கேட்டு என் நெஞ்சு ஏன் இப்படிப் பொங்குகிறது? தொண்டை ஏன் விக்கிக்கொள்கிறது? குழலும் வீணையும் மத்தளமும் போர் முரசுங்கூட இப்படி என்னைக் களிவெறிக் கொள்ளச் செய்ததில்லையே? இப்படி என்னைக் குலுக்கிப் போட்டதில்லையே? இந்த மங்கையின் பேச்சில் குறுக்கிட்டு ஏதேனும் சொல்ல வேண்டும் என்று பார்த்தால், ஏன் என்னால் முடியவில்லை? ஏன் நாக்கு மேலண்ணத்தில் இப்படி ஒட்டிக் கொள்கிறது? ஏன் இப்படிக் காற்றோட்டம் அடியோடு நின்று போயிருக்கிறது? ஏன் இந்த அரிசிலாற்றின் வெள்ளம் ஓடாமல் நின்றிருக்கிறது? அப்புறம் இந்த முதலை!... இது ஏன் இப்படிச் சும்மாக் கிடக்கிறது?

வந்தியத்தேவனுடைய உள்ளம் இவ்வாறு தத்தளிக்கையில் அந்த மங்கையின் குரல் மேலும் கனவில் கேட்பதுபோலக் கேட்டது:- "இப்போது கூட அபலைப் பெண்ணாகிய எங்களைக் காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டு தான் இந்தக் காரியம் செய்தீர்கள்! முதலையின்மேல் வேலை எறிந்தீர்கள். இவ்வளவு வேகமாகவும் குறி தவறாமலும் வேல் எறியக்கூடிய வீரர்களைக் காண்பது அரிது!..."

மரத்தடியில் ஒதுங்கி நின்று கேட்டுக்கொண்டிருந்த பெண்கள் இப்போது மறுபடியும் கலீர் என்று சிரித்தார்கள். அச்சிரிப்பினால் வந்தியத்தேவனுடைய மோகக் கனவு கலைந்தது. அந்த மங்கையின் பேச்சாகிய மாயமந்திரத் தளை படீர் என்று அறுபட்டது. முதலையை இன்னொரு தடவை உற்றுப் பார்த்தான். எதிரேயிருந்த பெண்ணைச் சற்றும் பொருட்படுத்தாமல் விலகிச் சென்று முதலையின் சமீபம் அடைந்தான். அதன் முதுகில் பாய்ந்திருந்த தன் வேலை அசைத்து எடுத்தான்! வேல் குத்தியிருந்த துவாரத்தின் வழியாக இரத்தம் பீறிட்டுக் கொண்டு வரவில்லை! பின், என்ன வந்தது! கொஞ்சம் வாழைநாரும் பஞ்சும் வெளிவந்தன!

மறுபடியும் அந்தத் துஷ்டப் பெண்கள் சிரித்தார்கள். இம்முறை கெக்கலிக் கொட்டிப் பலமாகச் சிரித்தார்கள்.

வல்லவரையனுடைய உள்ளமும் உடலும் குன்றிப்போயின. இம்மாதிரி அவமானத்தை இதற்குமுன் அவன் எக்காலத்திலும் அடைந்ததில்லை. இத்தனை பெண்களுக்கு முன்னால் இப்படிப்பட்ட பேரவமானமா? - இல்லை! இல்லை! இவர்கள் அரக்கிகள்! - இவர்கள் பக்கத்திலே நிற்கக் கூடாது! இவர்களுடைய முகத்தை ஏறிட்டும் பார்க்கக் கூடாது! சீச்சீ! என் அருமை வேலாயுதமே! உனக்கு இந்தக் கதியா நேர்ந்தது? இத்தகைய அவமானமா உனக்கு நேர்ந்தது? இதை எப்படி நிவர்த்தி செய்து உனக்கு நேர்ந்த மாசைத் துடைக்கப் போகிறேன்!...

இவ்வளவு எண்ணமும் சில கணநேரத்தில் வந்தியத்தேவனுடைய மனத்தில் ஊடுருவிச் சென்றன. அங்கு நின்று சிரித்தவர்கள் மட்டும் ஆண் மக்களாயிருந்திருந்தால், அங்கேயே ஒரு போர்க்களம் ஏற்பட்டிருக்கும்! சிரிக்கத் துணிந்தவர்கள் அக்கணமே உயிரே இழந்திருப்பார்கள்! அரிசிலாற்றின் செந்நீர்ப் பிரவாகத்துடன் அவர்களுடைய இரத்தமும் கலந்து ஓடியிருக்கும்! ஆனால் இவர்கள் பெண்கள்! இவர்களை என்ன செய்ய முடியும்? இவர்களை விட்டு ஓடிப்போவது ஒன்றுதான் செய்யக்கூடிய காரியம்!

தன் உள்ளத்தை நிலைகுலையச் செய்த மங்கையின் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல் வந்தியத்தேவன் பாய்ந்து ஓடி நதிக்கரைமீது ஏறினான். அங்கு நின்றிருந்த அவனுடைய குதிரை அச்சமயம் ஒரு கனைப்புக் கனைத்தது. குதிரையும்கூட அப்பெண்களுடன் சேர்ந்து தன்னைப் பார்த்துச் சிரிப்பதாகவே வந்தியத்தேவனுக்குத் தோன்றியது. எனவே தன் கோபத்தையெல்லாம் அக்குதிரையின் பேரில் காட்டினான். அதன்மேல் பாய்ந்து ஏறி உட்கார்ந்து தலைக் கயிற்றினால் 'சுளீர் சுளீர்' என்று இரண்டு அடி கொடுத்தான்! அந்த ரோஷமுள்ள குதிரை நதிக்கரைச் சாலையின் வழியாகப் பிய்த்துக்கொண்டு பாய்ந்தோடியது.

சிறிது நேரம் வரையில் குந்தவைப் பிராட்டி குதிரைபோன திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். குதிரை கிளப்பிய புழுதி அடங்கும் வரையில் பார்த்துக்கொண்டு நின்றாள்.

பின்னர், தோழிப் பெண்களைத் திரும்பிப் பார்த்து, "பெண்களா! உங்களுக்கு மட்டுமரியாதை இன்னும் தெரியவில்லை. நீங்கள் அப்படி சிரித்திருக்கக் கூடாது. நாம் தனியாயிருக்கும் போது, எப்படி வேண்டுமானாலும் நீங்கள் சிரித்துக் கொம்மாளம் அடிக்கலாம். அன்னிய புருஷன் வந்திருக்கும்போது அடக்கமாயிருக்க வேண்டாமா? சோழ நாட்டுப் பெண்களைப் பற்றி அந்த வாலிபன் என்ன எண்ணிக் கொண்டு போவான்?" என்று சொன்னாள்.















Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 17. குதிரை பாய்ந்தது!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 18. அம்பு பாய்ந்தது!
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 62. ஈட்டி பாய்ந்தது!
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 14. பறக்கும் குதிரை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: