BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  62. ஈட்டி பாய்ந்தது! Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 62. ஈட்டி பாய்ந்தது!

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  62. ஈட்டி பாய்ந்தது! Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 62. ஈட்டி பாய்ந்தது!   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  62. ஈட்டி பாய்ந்தது! Icon_minitimeSun Jun 12, 2011 3:20 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

62. ஈட்டி பாய்ந்தது!


சற்று நேரம் நின்ற இடத்திலேயே நின்றான் மதுராந்தகன். குடிசைக்குப் போகலாமா, கோட்டைக்குப் போகலாமா என்று அவன் உள்ளத்தில் ஒரு போராட்டம் நடந்தது போலத் தோன்றியது. பின்னர் அவன் தன்னைச் சுமந்து வந்த பல்லக்கின் அருகில் சென்று சிவிகை தூக்கிகளிடமும், காவலர்களிடமும் ஏதோ சொன்னான். சிவிகைக்கு உள்ளேயிருந்து ஏதோ ஒரு பொருளையும் எடுத்துக் கொண்டான். சிவிகையைத் தூக்கிக் கொண்டு ஆட்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுடன் தீவர்த்தி வெளிச்சமும் சென்றது.

மதுராந்தகன் திரும்பக் குடிசையை நோக்கி வந்தபோது, அவனும் மாதேவடிகளும் எந்த மரத்தின் ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்களோ, அந்த மரத்தின் பின்புறத்திலிருந்து திடீரென்று ஒரு மனிதன் வெளிப்பட்டு வந்ததைக் கண்டு மதுராந்தகன் ஒரு கணம் திடுக்கிட்டான்.

அவன் வேறு யாரும் இல்லை. பாதாளச் சிறையிலிருந்து தப்பித்து வந்தியத்தேவனோடு வந்திருந்த, 'பைத்தியக்காரன்' கருத்திருமன்தான். இன்னமும் அவன் பார்ப்பதற்குப் பைத்தியக்காரனைப் போலவே இருந்தான். அவனுடைய தோற்றமும் அவன் திடீரென்று அந்த இடத்தில் வெளிப்பட்டதும் மதுராந்தகனுக்குத் திகிலை உண்டாக்கியதில் வியப்பில்லைதானே?

அடுத்த கணம் மதுராந்தகன் சிவிகையிலிருந்து எடுத்து வந்த கூரிய குத்துவாளை ஓங்கினான். கருத்திருமன் அவனைக் கையமர்த்தி, "ஐயா! நில்லுங்கள்! நான் தங்கள் விரோதி அல்ல!" என்றான்.

"விரோதி அல்லவென்றால், பின்னே நீ யார்? என் நண்பனா?" என்று மதுராந்தகன் கேட்டான்.

"ஆம், ஐயா! நண்பன்தான்!"

மதுராந்தகன் குரோதமும், துயரமும் ததும்பிய குரலில் மெல்லிய சிரிப்புச் சிரித்துவிட்டு, "நல்ல நண்பன் கிடைத்தாய்! உலகமே என்னைவிட்டு நழுவிச் செல்லும்போது, நீயாவது கிடைத்தாயே!" என்றான்.

"ஆம், ஐயா! உலகத்தில் யாரும் தங்களுக்குச் செய்ய முடியாத உதவியைத் தங்களுக்கு நான் செய்ய முடியும்!" என்றான் கருத்திருமன்.

"அது என்ன, சொல்லு பார்க்கலாம்! நேரமாகிவிட்டது சொல்லுவதைச் சீக்கிரம் சொல்லு!"

"எதற்கு நேரம் ஆகிவிட்டது?" என்று கருத்திருமன் கேட்டு விட்டு, மதுராந்தகனை உற்று நோக்கினான்.

"அரண்மனைக்குப் போவதற்குத்தான், வேறு எதற்கு?"

"தங்களுக்கு உரிமை இல்லாத அரண்மனைக்குத் தாங்கள் திரும்பிப் போகப் போகிறீர்களா?"

மதுராந்தகன் மறுபடியும் அதிர்ச்சி அடைந்து, "அடே! என்ன சொல்லுகிறாய்? உனக்கு என்ன தெரியும்? எப்படித் தெரியும்? விரைவிலே சொல்லு! இல்லாவிடில்..." என்று கையிலிருந்த குத்துவாளை ஓங்கினான்.

"ஐயா! வாளை ஓங்க வேண்டாம். தங்கள் பகைவர்கள் எதிர்ப்படும்போது உபயோகிப்பதற்குத் தீட்டி வைத்துக் கொள்ளுங்கள். சற்று முன் தாங்களும், தங்களை வளர்த்த பெரிய மகாராணியும் இந்த மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் மரத்தின் பின்னால் நின்றதை நீங்கள் இருவரும் கவனிக்கவில்லை..."

"ஆகா! ஒட்டுக்கேட்டு இரகசியத்தை அறிந்து கொண்டாயா? அந்தத் துணிச்சலுடனேதான் என்னை வழிமறித்து நிறுத்தினாயா?"

"இல்லை, இல்லை! மகாராணி தங்களிடம் சொன்ன செய்தி எனக்கு முன்பே தெரியும்; அதைவிட அதிகமாகவும் தெரியும். அந்த மாதரசி தங்களை வயிற்றில் வைத்து வளர்த்த அன்னை அல்லவென்றும், கண்டராதித்தர் தங்கள் தந்தை அல்லவென்றும் அவர் தங்களிடம் கூறினார். தங்களுடைய அன்னை யார் என்றும் சொல்லி இருப்பார். ஆனால் தங்கள் தந்தை யார் என்று சொல்லி இருக்கமாட்டார்."

மதுராந்தகன் அவனை வெறித்து நோக்கி, "உனக்கு அது தெரியுமா?" என்றுகேட்டான்.

"ஆம், தெரியும்."

மதுராந்தகன் அந்தப் பைத்தியக்காரத் தோற்றமுடையவன் தான் அவன் தந்தை என்று உரிமை கொண்டாடப் போகிறானோ என்று பீதி அடைந்தான். அருவருப்பும் ஆத்திரமும் நிறைந்த குரலில் "உனக்கு எப்படித் தெரியும்? நீ யார்?" என்று கேட்டான்.

"நான் தங்கள் தந்தையின் ஊழியன்!" என்று கருத்திருமன் கூறியதும், மதுராந்தகன் முகம் தெளிவு பெற்றது.

கருத்திருமன் சற்று அருகில் நகர்ந்து வந்து, "ஐயா! தங்கள் தந்தை..." என்று மெல்லிய குரலில் கூறினான்.

மதுராந்தகன் காதில் அவன் கூறியது விழுந்தது. மதுராந்தகனுடைய தலை சுற்றியது. கீழே விழப் பார்த்தவன் சமாளித்துக் கொண்டு கருத்திருமனுடைய புஜங்களை உறுதியாகப் பற்றிக் கொண்டு, "நீ கூறியது உண்மைதானா? உண்மையாகவே நான் இராஜ குமாரன்தானா?" என்று கேட்டான்.

"ஆம், ஐயா! இதைத் தங்களிடம் சொல்வதற்காகவே பல வருஷங்களுக்கு முன்பு நான் இங்கு வந்தேன். தங்களை அந்தரங்கமாகப் பார்த்துப் போவதற்கு சமயம் நோக்கிக் கொண்டிருந்தேன். துரதிர்ஷ்டவசமாகச் சின்னப் பழுவேட்டரையர் என்னை அரண்மனைத் தோட்டத்தில் பார்த்துவிட்டார். பிடித்துப் பாதாளச் சிறையில் போட்டுவிட்டார்."

"எப்போது தப்பினாய்? எப்படி?"

"இன்றைக்குத்தான், வந்தியத்தேவன் என்னும் வாலிபன் ஒருவனுடைய உதவியினால் தப்பித்து வெளி வந்தேன்."

"ஆகா! நானும் கேள்விப்பட்டேன்; கரிகாலரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவன் அல்லவா அவன்?"

"ஆம்; ஐயா! ஆனால் உண்மையில் ஆதித்த கரிகாலரைக் கொன்றவன் அந்த வாலிபன் அல்ல!"

"அதைப் பற்றி நமக்கு என்ன கவலை? கொன்றவனாகவே தான் இருக்கட்டுமே? இப்போது எங்கே அவன்?"

"அதோ சற்றுத் தூரத்தில் தெரியும் வேலியின் மறைவில் இருக்கிறான். எனக்கும், அவனுக்கும் இரண்டு குதிரைகளுடன் காத்திருக்கிறான். நான் நேரம் செய்வது பற்றி அவன் இப்போது கோபம் அடைந்திருப்பான். அதைப் பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. எதிர்பாராத விதத்தில் தங்களைச் சந்தித்து விட்டேன்."

"எப்போது நீங்கள் இங்கே வந்தீர்கள்?" என்றான் மதுராந்தகன்.

"சற்று முன்னாலேதான் வந்தோம். இந்தக் குடிசைக்கு அருகில் இரண்டு குதிரைகள் இருக்கின்றனவென்று தெரிந்து கொண்டு வந்தோம். குதிரைகளைத் தேடிக் கொண்டிருந்தபோது தாங்களும், தங்களை வளர்த்த அன்னையும் தீவர்த்திகளுடன் சாலையில் வந்தீர்கள். அந்த வெளிச்சத்தில் குதிரைகளைக் கண்டுபிடித்தோம். நான் பல வருஷங்களுக்குப் பிறகு வாணியைப் பார்த்தேன். அவளுடைய ஊமைப் பாஷையில் பேசிக் கொண்டிருக்கும்போதே நீங்கள் இந்தக் குடிசைப் பக்கம் திரும்பி வந்தீர்கள். நீங்கள் இந்தக் குடிசைக்குத்தான் வருகிறீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வந்தியத்தேவன் வேலி மறைவுக்கு ஓடி விட்டான். நானும் வாணியும் இம்மரத்தின் பின்னால் சிறிது நேரம் நின்றோம். பிறகு அவளும் குடிசைக்குள் போய்விட்டாள். நான் மட்டும் இங்கு நின்று கொண்டிருந்தேன். அதன் பலனாகத் தங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது."

"சரி, இனிமேல் நீ என்ன செய்யப் போகிறாய்?"

"தாங்கள் எவ்விதம் சொல்லுகிறீர்களோ, அவ்விதம் செய்கிறேன் ஐயா! தங்கள் பிறப்பைக் குறித்த உண்மையை அறிந்த பிறகும், தஞ்சை அரண்மனைக்குத் திரும்பிப் போகப் போகிறீர்களா? ஒன்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் தாங்கள் சோழ குலத்து இளவரசர் அல்லவென்பது இன்னும் சிலருக்கும் தெரியும். முதன்மந்திரிக்கும், அவருடைய ஒற்றன் ஆழ்வார்க்கடியான் என்பவனுக்கும் தெரியும், என்றைக்காவது ஒருநாள்..."

"ஆமாம், ஆமாம்! தஞ்சை அரண்மனைக்குப் போக எனக்கும் விருப்பமில்லைதான், நீ என்ன யோசனை சொல்லுகிறாய்?"

"அந்த வேலி மறைவில் இரண்டு குதிரைகள் இருக்கின்றன. தாங்கள் குடிசைக்குள் போவதுபோல் போய்விட்டு அந்த வேலிப் பக்கம் வாருங்கள். நான் வந்தியத்தேவனுடன் சிறிது பேசிக் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறேன். தங்கள் கையிலுள்ள வாளை அவன் மீது எறிந்து கொன்றுவிடுங்கள். இரண்டு குதிரைகள் மீது நாம் இருவரும் ஏறிப் போய்விடுவோம். கோடிக்கரை சென்று இலங்கைக்குப் போவோம். இலங்கை அரசர், சோழ குலத்தின் பகைவர். பாண்டிய குலத்துக்குப் பரம்பரை சிநேகிதர். நான் இலங்கை மன்னரை நன்கு அறிவேன். பாண்டிய குலத்தின் மணி மகுடமும், இரத்தின ஹாரமும் இருக்குமிடமும் அறிவேன் என்ன சொல்லுகிறீர்கள்?"

மதுராந்தகன் சிறிது நேரம் யோசனை செய்தான். அவனுடைய உள்ளம் அந்தச் சில வினாடி நேரத்தில் எத்தனையோ கோட்டைகள் கட்டியது.

"ஐயா! நேரம் போகிறது தங்கள் முடிவு என்ன? வந்தியத்தேவன் இனி இங்கேயே வந்துவிடுவான்."

"அவனைக் கொல்லவேண்டும் என்றா சொல்லுகிறாய்?"

"தங்களுக்குத் தயக்கமாயிருந்தால் தங்கள் கையிலுள்ள குத்து வாளை என்னிடம் கொடுங்கள்!"

"வேண்டாம்; இந்த வாளுக்கு வேறு வேலை இருக்கிறது. வந்தியத்தேவனைப் பற்றி எனக்குத் தெரியும். அவன் நல்ல வீரன் அவனையும் நம்முடன் அழைத்துக் கொண்டு போகலாமே?"

"அழைத்துப் போகலாம்; ஆனால் இன்னொரு குதிரை?"

"குதிரைக்கு என்ன குறைவு? நான் இன்னமும் பட்டத்து இளவரசன் மதுராந்தகன்தானே!" என்று கூறிவிட்டுக் கோபச் சிரிப்புச் சிரித்தான்.

பிறகு, "நீ போ! அவனைச் சற்று நேரம் பொறுமையாக இருக்கச் சொல்! இந்தக் குடிசைக்காரனைப் பார்த்து ஒரு வார்த்தை பேசிவிட்டு விரைவில் வந்து விடுகிறேன்!" என்றான்.

கருத்திருமன், வந்தியத்தேவன் மறைந்து நின்ற வேலியைத் தேடிக் கொண்டு போனான். நல்ல இருட்டு. தூரத்தில் இராஜபாட்டையில் அவ்வப்போது சிலர் தீவர்த்தி பிடித்துக் கொண்டு போனபோது சிறிது வெளிச்சம் வந்தது. வெகு தூரத்திலிருந்து வந்த அந்த மங்கலான வெளிச்சத்தில் இரண்டு கம்பீரமான புரவிகள் வேலிகளில் கட்டப்பட்டு நிற்பது தெரிந்தது. ஆனால் வந்தியத்தேவனைக் காணவில்லை. மெல்லிய குரலில் கூப்பிட்டுப் பார்த்தான்; பதிலுக்குக் குரல் கேட்கவில்லை.

"சரி; அவனாகத் தொலைந்து போனால் நல்லதாய்ப் போயிற்று" என்று கருத்திருமன் எண்ணிக் கொண்டான்.

வந்தியத்தேவனும் கருத்திருமனும் முதலில் நந்தவனக் குடிசையருகில் வந்தபோது அங்கே இருள் சூழ்ந்திருந்தது. குடிசைக்குள் எரிந்த சிறிய விளக்கிலிருந்து சில ஒளிக்கிரணங்கள் வெளியே எட்டிப் பார்த்தன.

தாமரைக் குளத்திற்குத் தண்ணீர் மொள்ளச் சென்ற வாணி அம்மையாரோ, இருவர் இருட்டில் வருவதைக் கண்டு தயங்கி நின்றாள். முதலில் வந்தியத்தேவனுடைய முகம் அவள் பார்வையில் தென்பட்டது. உடனே அவளுடைய முகம் மலர்ந்தது முன்னொரு தடவை சேந்தன் அமுதன், அவனை அழைத்து வந்ததை அவள் மறந்து விடவில்லை. வரவேற்புக்கு அறிகுறியாகத் தலையை அசைத்தாள்.

பின்னால் தொடர்ந்து வந்த கருத்திருமனைக் கண்டதும் பேய் பிசாசைக் கண்டவளைப் போல் பீதி அடைந்து செயலற்றுப் பிரமித்து நின்றாள். கருத்திருமன் அவளுடன் சமிக்ஞை பாஷையில் பேச முயன்று, அவளுடைய பீதியை ஒருவாறு போக்கினான்.

அவர்களிருவரையும் தனியாக விட்டுவிட்டு வந்தியத்தேவன் குடிசையை அணுகினான். வாசற்கதவு அப்போதுதான் தாளிடப்பட்டது. பலகணி வழியாக எட்டிப் பார்த்தான். சேந்தன் அமுதன் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக முகமலர்ச்சியுடன் பூங்குழலியுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அவனுக்குச் சிறிது நிம்மதி ஏற்பட்டது. அவர்களுடைய பேச்சினிடையில் குறுக்கிட்டு விடைபெற்றுக் கொண்டு போக முயல்வது உசிதமா என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே, செம்பியன்மாதேவியும், மதுராந்தகனும், அவர்களுடைய பரிவாரங்களும் வந்து விட்டார்கள்.

உடனே அவன் குடிசையைவிட்டு நகர்ந்து வேலியைத் தாண்டி அப்பால் குதித்தான். அங்கே கட்டியிருந்த குதிரைகளைக் கண்டதும் ஆழ்வார்க்கடியான் அந்த வரைக்கும் தன்னை ஏமாற்றி மோசம் செய்யவில்லை என்று உறுதி பெற்றான். கருத்திருமன் வரவுக்காக அங்கேயே காத்திருந்தான்.

சிவிகைகள், பரிவாரங்கள், தீவர்த்திகள் எல்லாம் போன பிறகும் கருத்திருமன் வராதிருக்கவே, வந்தியத்தேவன் பொறுமை இழந்தான்.

மீண்டும் வேலியைத் தாண்டிக் குதித்து வந்தான். மரத்தடியில் மதுராந்தகனும், கருத்திருமனும் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்தான். மதுராந்தகன் கண்ணில் பட அவன் விரும்பவில்லை. கருத்திருமனுக்கும், மதுராந்தகனுக்கும் என்ன அந்தரங்கப் பேச்சு என்ற ஐயமும் அவன் உள்ளத்தில் உதித்தது. அவர்களுடைய பேச்சில் ஒரு பகுதி அவன் காதில் விழுந்தது.

மதுராந்தகன் குடிசையை நோக்கிப் போனபோது, அவனை அறியாமல் வந்தியத்தேவனும் பின் தொடர்ந்து போனான்.

மதுராந்தகன் குடிசை வாசலில் சென்று கதவை இடிக்கலாமா, வேண்டாமா என்று தயங்கி நின்றான். அப்போது உள்ளிருந்து கலகலவென்று சிரிப்புச் சத்தம் கேட்டது. அந்தச் சிரிப்பின் ஒலியினால் மதுராந்தகனுடைய மனம் மாறிவிட்டதோ, அல்லது எண்ணி வந்த காரியத்துக்குத் துணிவு வரவில்லையோ, தெரியாது. உடனே திரும்பிக் கருத்திருமன் சென்ற திசையை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.

வந்தியத்தேவன் அவன் கண்ணில் படாமல் தப்புவதற்காக அப்பாலிருந்த ஒரு மரத்தின் மறைவுக்குப் பாய்ந்தான். அப்படிப் பாயும்போது அவன் கண்ணில் ஒரு விபரீதமான காட்சி தென்பட்டது. குடிசைக்குப் பின்புறச் சுவரில் ஒரு பலகணி இருந்தது. அதன் வழியாகக் குடிசையில் எரிந்த விளக்கின் ஒளி சிறிது வெளியே வந்து கொண்டிருந்தது. அந்த ஒளியில் ஒரு மனித உருவம் கையில் ஒரு குட்டையான ஈட்டியுடன் பயங்கரமாக நிற்பதைக் கண்டான்.

குடிசையின் பலகணி வழியாக அந்த உருவம் உள்ளே உற்றுப் பார்த்தது. பின்னர் ஈட்டியைப் பலகணி வழியாக உள்ளே எறியும் நோக்குடன் குறி பார்க்கத் தொடங்கியது. ஆனால் உடனே எறிந்துவிடவில்லை. குறி பார்ப்பதும் மறுபடி தழைப்பதுமாக இருந்தது. அதே சமயத்தில் குதிரைகள் புறப்படும் காலடிச் சத்தம் கேட்டது. வந்தியத்தேவன் ஒரு கண நேரம் தத்தளித்தான்.

குதிரைகள் இரண்டும் போய்விட்டால் அவன் தப்பிச் செல்வது அசாத்தியமாகிவிடும். குதிரையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போனால் இங்கே இந்தக் கரிய நிழல் உருவம் என்ன கொடிய காரியம் செய்ய எண்ணுகிறதோ, அதைத் தடுக்க முடியாமற் போகும்.

வந்தியத்தேவனுடைய தத்தளிப்பு ஒரு நிமிட நேரத்துக்கு மேல் நீடிக்கவில்லை. குதிரைகள் போனால் போகட்டும். அவன் கடமை இப்போது இங்கேதான். கையில் ஈட்டியுடன் நின்ற கரிய உருவத்தை நோக்கி மெள்ளச் சென்றான்.

குடிசைக்குள்ளிலிருந்து 'வீல்' என்று ஒரு குரல், பீதி நிறைந்த பெண் குரல், தெளிவாகக் கேட்டது.

வந்தியத்தேவன் ஜாக்கிரதையை விட்டு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான். ஈட்டியை உள்ளே எறிய இருந்தவன் வந்தியத்தேவன் ஓடி வரும் சத்தம் கேட்டுத் திரும்பினான்.

திரும்பிய வேகத்துடன் அவன் மீது ஈட்டியை எறிந்தான். ஈட்டி வந்தியத்தேவனுடைய விலாவில் பாய்ந்தது. அவன் கீழே விழுந்தான்.

அவன் என்ன ஆனான் என்றுகூடப் பாராமல் ஈட்டியை எறிந்தவன் அங்கிருந்து ஓட்டம் எடுத்தான்






Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 62. ஈட்டி பாய்ந்தது!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 18. அம்பு பாய்ந்தது!
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 17. குதிரை பாய்ந்தது!
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 8. "ஐயோ! பிசாசு!"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: