BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 35. மந்திரவாதி   Button10

 

  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 35. மந்திரவாதி

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 35. மந்திரவாதி   Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 35. மந்திரவாதி      ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 35. மந்திரவாதி   Icon_minitimeFri May 06, 2011 11:28 am

கல்கியின் பொன்னியின் செல்வன்
முதல் பாகம் : புது வெள்ளம்
35. மந்திரவாதி





தூரத்தில் பேரிகைகளின் பெரு முழக்கம் கேட்டது. எக்காளங்கள் சப்தித்தன. மனிதர்களின் குரல்கள் ஜயகோஷம் செய்தன. கோட்டைக் கதவுகள் திறந்து மூடிக்கொள்ளும் சத்தமும் யானைகள் குதிரைகளின் காலடிச் சத்தமும் எழுந்தன.

நந்தினியின் கவனத்தை அந்தச் சத்தங்கள் கவர்ந்தன என்பதை வந்தியத்தேவன் அறிந்து கொண்டான். காவல் புரிந்த தாதிப்பெண் திடுக்கிட்டு எழுந்து சற்று அருகில் வந்து, "அம்மா! எஜமான் வந்துவிட்டார் போலிருக்கிறது" என்றாள்.

நந்தினி, "எனக்குத் தெரியும்; நீ உன் இடத்துக்குப் போ!" என்றாள்.

பிறகு வந்தியத்தேவனைப் பார்த்து, "தனாதிகாரி கோட்டையில் பிரவேசிக்கிறார். சக்கரவர்த்தியின் க்ஷேமத்தை விசாரித்து விட்டு, கோட்டைத் தளபதியைப் பார்த்துப் பேசிவிட்டு இங்கே வருவார். வருவதற்குள் நீ போய்விட வேண்டும். ஆழ்வார்க்கடியார் கூறிய செய்தி என்ன?" என்று வினவினாள்.

"அம்மணி! அந்த வீர வைஷ்ணவ சிகாமணி தங்களை அவருடைய சகோதரி என்று சொல்லிக் கொண்டார். அது உண்மை தானா?" என்று வல்லவரையன் கேட்டான்.

"அதைப்பற்றி நீ ஏன் சந்தேகப்படுகிறாய்?"

"பச்சைக் கிளியும் கடுவன் குரங்கும் ஒரு தாயின் குழந்தைகள் என்றால் எளிதில் நம்ப முடியுமா?"

நந்தினி சிரித்துவிட்டு, "ஒருவிதத்தில் அவர் சொன்னது உண்மைதான். நாங்கள் ஒரே வீட்டில் ஒரே குடும்பத்தில் வளர்ந்தோம். உடன் பிறந்த தங்கையைப் போலவே என்னிடம் பிரியம் வைத்திருந்தார். பாவம்! அவருக்குப் பெரும் ஏமாற்றம் அளித்து விட்டேன்!"

"அப்படியானால் சரி! ஆழ்வார்க்கடியார் தங்களுக்குச் சொல்லி அனுப்பிய செய்தி கிருஷ்ணபகவான் தங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான். தாங்கள் கண்ணனை மணந்து கொள்ளும் கலியாணக் காட்சியைப் பார்க்க வீர வைஷ்ணவ பக்த கோடிகளும் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்!"

நந்தினி ஒரு பெருமூச்சு விட்டாள். "ஆகா! இன்னும் அவருக்கு அந்தச் சபலம் நீங்கவில்லை. போலிருக்கிறது! நீ அவரைப் பார்த்தால் எனக்காக இதைச் சொல்லிவிடு! என்னை அடியோடு மறந்துவிடச் சொல்லு! ஆண்டாளைப் போல் பரமபக்தையாகக் கொஞ்சமும் தகுதியற்றவள் நான் என்று சொல்லு!"

"நான் அதை ஒப்புக் கொள்ளவில்லை, அம்மா!"

"என்னத்தை ஒப்புக்கொள்ளவில்லை?"

"தாங்கள் ஆண்டாள் ஆக முடியாது என்பதைத்தான் ஒப்புக் கொள்ளவில்லை. ஆண்டாள் பக்தி செய்து, பாட்டுப் பாடி, அழுது கண்ணீர் விட்டு, பூமாலை தொடுத்துச் சூட்டி, - இப்படியெல்லாம் செய்து கண்ணனை மணந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் தங்களுக்கு அத்தகைய கஷ்டமே தேவையில்லை. தங்களைக் கிருஷ்ணபகவான் பார்த்துவிட வேண்டியதுதான். ருக்மணி, சத்திய பாமாவையும், ராதாவையும், கோபிகாஸ்திரீகளையும் உடனே கைவிட்டு அவர்கள் வீற்றிருந்த சிம்மாசனத்தில் தங்களை ஏற்றி உட்கார வைத்துவிடுவார்!"

"ஐயா! நீர் முகஸ்துதி செய்வதில் சமர்த்தராயிருக்கிறீர்! அது எனக்குப் பிடிப்பதேயில்லை."

"அம்மணி! முகஸ்துதி என்றால் என்னவோ?"

"முகத்துக்கு நேரே ஒருவரைப் புகழ்வதுதான்."

"அப்படியானால் சற்றே நீங்கள் திரும்பி முதுகைக் காட்டிக் கொண்டு உட்காருங்கள்..."

"எதற்காக?"

"முகத்தைப் பார்க்காமல் முதுகைப் பார்த்துக் கொண்டு புகழ்ச்சி கூறுவதற்காகத்தான். அதில் ஒன்றும் தவறு இல்லையல்லவா?"

"நீர் பேச்சில் மிக கெட்டிக்காரராயிருக்கிறீர்."

"இப்போது தாங்கள் அல்லவா முகஸ்துதி செய்கிறீர்கள்?"

"நீரும் உமது முகத்தைத் திருப்பிக்கொண்டு, முதுகைக் காட்டுவதுதானே?"

"மகாராணி! போர்க்களத்திலாகட்டும், பெண்மணிகளிடமாகட்டும், நான் முதுகு காட்டுவது எப்போதும் கிடையாது. தாங்கள் தாராளமாய் என்னை முகஸ்துதி செய்யலாம்!"

இதைக் கேட்டு விட்டு நந்தினி 'கலீர்' என்று சிரித்தாள்!

"நீர் மந்திரவாதிதான்; சந்தேகமில்லை, நான் இம்மாதிரி வாய்விட்டுச் சிரித்து வெகு காலம் ஆயிற்று!" என்று சொன்னாள்.

"ஆனால், அம்மணி! தங்களைச் சிரிக்கப் பண்ணுவது வெகு அபாயம்! தடாகத்தில் தாமரை சிரித்து மகிழ்ந்தது; தேன் வண்டு மயங்கி விழுந்தது!" என்றான் வந்தியத்தேவன்.

"நீர் மந்திரவாதி மட்டுமல்ல; கவியும் போலிருக்கிறதே!"

"நான் முகஸ்துதிக்கும் அஞ்சமாட்டேன்; வசவுக்கும் கலங்க மாட்டேன்."

"உம்மை யார் வைதது?"

"சற்று முன் என்னைக் 'கவி' என்றீர்களே?"

"அப்படியென்றால்?"

"நான் சிறுவனாயிருந்தபோது என்னைச் சிலர் 'குரங்கு மூஞ்சி!' என்று சொல்வதுண்டு. வெகு நாளைக்குப் பிறகு இன்றைக்குத்தான் தங்களுடைய பவளச் செவ்வாயினால் அதைக் கேட்டேன்."

"உம்மையா குரங்கு மூஞ்சி என்றார்கள்? யார் அப்படிப் பட்ட புத்திசாலிகள்?"

"அவர்களில் யாரும் இப்போது உயிரோடில்லை."

"உம்மை நான் அவ்வித சொல்லவில்லை. கவிபாடக் கூடியவர் போலிருக்கிறதே என்று சொன்னேன்."

"கொஞ்சம் கவியும் பாடுவேன். ஆனால் பகைவர்களுக்கு முன்னால்தான் பாடுவேன். வில்லம்பினால் சாகாதவர்கள், சொல்லம்பினால் சாகட்டும் என்று!"

"ஐயா, கவிராஜ வீரசிங்கமே! உம்முடைய பெயர் என்னவென்று இன்னமும் சொல்லவில்லையே?"

"என் சொந்தப் பெயர் வந்தியத்தேவன்; பட்டப் பெயர் வல்லவரையன்."

"அரச குலத்தினரா?"

"பழைய புகழ் பெற்ற வாணாதி ராஜர் குலத்தில் வந்தவன்!"

"இப்போது உங்கள் ராஜ்யம்?"

"மேலே ஆகாசம்! கீழே பூமி; இப்போது நான் சகல பூமண்டலத்துக்கும் ஏக சக்ராதிபதி!"

நந்தினி சிறிது நேரம் வல்லவரையனை ஏறத்தாழப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அப்படி ஒன்றும் நடக்காத காரியம் இல்லை. உம்முடைய பூர்வீக ராஜ்யத்தை நீர் திரும்பவும் பெறலாம்."

"அது எப்படி சாத்தியம்? புலியின் வயிற்றுக்குள்ளே போனது திரும்பவும் வருமா? சோழ சாம்ராஜ்யத்தில் சேர்ந்த அரசு திரும்பக் கிடைக்குமா?"

"கிடைக்கும்படி செய்ய என்னால் முடியும்."

"அம்மணி! வேண்டாம்! இராஜ்யம் ஆளும் ஆசை எனக்கு எப்போதும் கிடையாது. கொஞ்சம் இருந்ததும் இன்றைக்குச் சுந்தர சோழ சக்கரவர்த்தியைப் பார்த்த பிறகு அடியோடு போய்விட்டது. இம்மாதிரி பிறர் கையை எதிர்பார்த்துச் சக்கரவர்த்தியாயிருப்பதைக் காட்டிலும் மறு நாள் உணவு எங்கே கிடைக்கும் என்று தெரியாத சுதந்திர மனிதனாயிருப்பதே மேல்."

"என்னுடைய கருத்தும் அதுதான்!" என்றாள் நந்தினி. பிறகு ஏதோ மறந்துபோன விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொண்டவள் போல், "சின்னப் பழுவேட்டரையரின் ஆட்கள் உம்மை எதற்காகத் தேடுகிறார்கள்?" என்று கேட்டாள்.

"தங்களுடைய தாதிப் பெண்ணைப் போல் அவருக்கும் என் பேரில் சந்தேகம் உண்டாகிவிட்டது."

"என்ன சந்தேகம்?"

"பனை இலச்சினை உள்ள முத்திரை மோதிரம் என்னிடம் எப்படி வந்தது என்று?"

நந்தினியின் முகத்தில் பயத்தின் சாயல் சிறிது தென்பட்டது.

"மோதிரம் எங்கே?" என்று திடுக்கிட்ட குரலில் கேட்டாள்.

"இதோ இருக்கிறது, அம்மணி! இலேசில் அதைப் போக்க அடித்து விடுவேனா?" என்று கூறிக்கொண்டே மோதிரத்தை எடுத்துக் காட்டினான்.

"இது உம்மிடம் இருப்பது அவருக்கு எப்படித் தெரிந்தது?" என்று நந்தினி கேட்டாள்.

"சுந்தர சோழ சக்கரவர்த்தியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என் மனத்தில் நெடுநாளாக இருந்தது. அதற்கு இந்த முத்திரை மோதிரத்தை உபயோகப்படுத்திக் கொண்டேன். பார்த்து முடிந்த பிறகு இந்த மோதிரம் என்னிடம் எப்படி வந்தது என்று கோட்டைத் தளபதி கேட்டார்..."

"நீர் என்ன சொன்னீர்!" என்று நந்தினி வினாவிய குரலில் திகில் தொனித்தது.

"தங்கள் பெயரைச் சொல்லவில்லை, அம்மணி! பெரிய பழுவேட்டரையர் கொடுத்தார் என்று சொன்னேன்..."

நந்தினி பெருமூச்சு விட்டாள்.

அவள் முகத்திலும் குரலிலும் இருந்த திகில் நீங்கியது.

"நீர் சொன்னதை அவர் நம்பினாரா?" என்று கேட்டாள்.

"முழுதும் நம்பியதாகத் தெரியவில்லை. அதனால்தானே என்னைப் பின் தொடரும்படி ஆட்களை விட்டிருக்க வேண்டும்? தமையனார் திரும்பி வந்ததும் என்னை அவர் முன்னால் நிறுத்தி உண்மையை அறிய எண்ணியிருக்கலாம்!" என்றான் வந்தியத்தேவன்.

நந்தினி புன்னகை புரிந்து, "பெரிய பழுவேட்டரையரிடம் நீர் பயப்படவேண்டாம். அவர் உம்மைக் கடித்துத் தின்றுவிடாமல் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றாள்.

"அம்மணி! தனாதிகாரியின் பேரில் தங்களுடைய செல்வாக்கு எவ்வளவு என்பது உலகம் அறிந்த செய்தி. ஆனால் எனக்கு வெளியில் அவசர காரியம் இருக்கிறது. ஆகையினால் தான் தப்பிச் செல்லத் தங்கள் உதவியைக் கோருகிறேன்."

"அப்படி என்ன அவசர வேலை இருக்கிறது?"

"எத்தனையோ இருக்கிறது. உதாரணமாக ஆழ்வார்க்கடியாரைப் பார்த்து தங்கள் மறுமொழியைச் சொல்ல வேண்டும். அவருக்கு என்ன சொல்லட்டும்?"

"அவருக்கு 'நந்தினி என்று ஒரு சகோதரி இருந்தாள்' என்பதை அடியோடு மறந்துவிடும்படி சொல்லு!"

"சொல்லிவிடலாம்; ஆனால் நடக்கிற காரியமில்லை"

"எது?"

"தங்களை மறப்பதுதான். இரண்டு தடவை தற்செயலாகப் பார்த்த என்னாலேயே தங்களை மறக்கமுடியாது போலிருக்கிறதே! வாழ்நாளெல்லாம் தங்களோடு இருந்தவரால் எப்படி மறக்கமுடியும்?"

நந்தியின் முகத்தில் வெற்றிப் பெருமிதத்தின் சாயல் பரிணமித்தது. அவளுடைய வேல்விழிகள் வந்தியத்தேவனுடைய நெஞ்சை ஊடுருவின போல் நோக்கின.

"சக்கரவர்த்தியைப் பார்ப்பதற்கு நீர் ஏன் அவ்வளவு ஆவல் கொண்டிருந்தீர்?" என்று கேட்டாள்.

"உலகப் பிரசித்தி பெற்ற அந்தச் சுந்தர புருஷரைப் பார்க்க நான் விரும்பியதில் வியப்பு என்ன? உலகத்தில் வீர மன்னர்கள் தங்கள் வீரமும் பௌருஷமும் பெருக வேண்டும் என்றும், இராஜ்யமும் கீர்த்தியும் விஸ்தரிக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள். அவ்விதமே பிரஜைகளைப் பிரார்த்தனை செய்யும்படியும் சொல்வார்கள். ஆனால் நம்முடைய சக்கரவர்த்தியைப் பற்றிப் புத்த பிக்ஷுக்களின் மடங்களில் என்ன பிரார்த்தனை செய்கிறார்கள்?

".................சுந்தரச்
சோழர் வண்மையும் 'வனப்பும்'
திண்மையும் உலகிற் சிறந்து வாழ்கெனவே"

என்று பிரார்த்தனை செலுத்துகிறார்கள். இத்தகைய கலியுக மன்மதனைப் பார்க்கவேண்டும் என்று எனக்கு வெகு நாளாக ஆசையாயிருந்தது."

"ஆமாம்; சக்கரவர்த்திக்குத் தம்முடைய அழகைப் பற்றி ரொம்பப் பெருமைதான். அவருடைய செல்வக் குமாரிக்கு அதைவிட அதிக கர்வம்..."

"குமாரியா? யாரைச் சொல்லுகிறீர்கள்?"

"பழையாறையிலே இருக்கிறாளே, ஒரு அகம்பாவம் பிடித்த கர்வி, அந்த இளையபிராட்டி குந்தவை தேவியைத்தான் சொல்லுகிறேன்."

வந்தியத்தேவா! நீ அதிர்ஷ்டக்காரன். நீ தேடிக் கொண்டிருந்த உபாயம் இதோ உன் முன்னால் தானே வந்து நிற்கிறது! அதை நன்கு உபயோகப்படுத்திக் கொள்! - இவ்வாறு வல்லவரையன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

இத்தனை நேரமும் ஒய்யாரமாகப் படுக்கையில் சாய்ந்து படுத்திருந்த நந்தினி திடீரென்று எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

"ஐயா! நான் ஒன்று சொல்கிறேன். அதை ஒப்புக்கொள்வீரா?" என்று கேட்டாள்.

"சொல்லுங்கள், அம்மணி!"

"நீரும் நானும் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளலாம். நீர் எனக்கு உதவி செய்யவேண்டியது; நான் உமக்கு உதவி செய்ய வேண்டியது; என்ன சொல்கிறீர்!"

"அம்மணி! தாங்கள் சோழ மகாராஜ்யத்தில் சர்வ சக்தி வாய்ந்த தனாதிகாரியின் ராணி. நினைத்ததை நினைத்தபடி சாதிக்கக்கூடிய சக்தி வாய்ந்தவர். நானோ ஒருவிதச் செல்வாக்கும் இல்லாதவன். தங்களுக்கு நான் என்ன விதத்தில் உதவி செய்யமுடியும்?" என்றான்.

அவன் உள்ளத்திலிருந்து பேசுகிறானா, உதட்டிலிருந்து பேசுகிறானா என்று தெரிந்துகொள்ள விரும்பிய நந்தினி தன் கூரிய விழிகளை அவன் மீது செலுத்தினாள்.

வந்தியத்தேவன் அதற்குச் சிறிதும் கலங்காமல் நின்றான்.

"எனக்கு அந்தரங்கமான பணி ஆள் ஒருவர் தேவையாயிருக்கிறது. இந்த அரண்மனையில் உமக்கு வேலை வாங்கிக் கொடுத்தால், ஒப்புக்கொள்வீரா?" என்று கேட்டாள்.

"இதே மாதிரி சேவையை இன்னொரு மாதரசிக்குச் செய்வதாக ஏற்கனவே ஒப்புக்கொண்டு விட்டேன். அவள் வேண்டாமென்று நிராகரித்தால், தங்களிடம் வருகிறேன்."

"அது யார் அவள், என்னோடு போட்டிக்கு வருகிறவள்?"

"சற்று முன் மிகப் பிரியத்தோடு பேசினீர்களே, அந்த இளையபிராட்டி குந்தவை தேவிதான்."

"பொய்! பொய்! அப்படி ஒருநாளும் இருக்கமுடியாது! என்னை வேடிக்கை செய்யப் பார்க்கிறீர்..."

"மகாராணி! இந்த ஓலையை ஏற்கனவே பலர் திருடிப் பார்த்துவிட்டார்கள். ஆகையால் தாங்களும் இதைப் பார்ப்பதினால் மோசம் ஒன்றும் வந்துவிடாது!" என்று சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலர் குந்தவைக்குக் கொடுத்த ஓலையை எடுத்து நீட்டினான்.

நந்தினி ஓலையை விளக்கினடியில் பிடித்துக்கொண்டு படித்தாள். படித்து முடித்தபோது அவளுடைய கண்களிலிருந்து கிளம்பிய மின்னல் ஜுவாலை நாக சர்ப்பத்தின் வாயிலிருந்து வெளிவந்து மறையும் அதன் பிளவுபட்ட நாவை வந்தியத்தேவனுக்கு நினைவூட்டியது. அவனையறியாமல் அவன் உடம்பு நடுங்கியது.

நந்தினி கம்பீர பாவத்துடன் வந்தியத்தேவனைப் பார்த்து, "ஐயா! நீர் இந்தக் கோட்டையிலிருந்து உயிரோடு தப்பிச் செல்ல எண்ணுகிறீர் அல்லவா?" என்று கேட்டாள்.

"ஆம், அம்மா! அதற்குத்தான் தங்கள் உதவியை நாடி வந்தேன்."

"ஒரு நிபந்தனையின் பேரில்தான் உம்மைத் தப்பித்துவிட நான் உதவி செய்யலாகும்."

"நிபந்தனையைச் சொல்லுங்கள்!"

"இந்த ஓலைக்குக் குந்தவை என்ன மறு ஓலை கொடுக்கிறாளோ, அதை மறுபடியும், என்னிடம் கொண்டுவந்து காட்ட வேண்டும். சம்மதமா?"

"மிக அபாயமான நிபந்தனை போடுகிறீர்கள்!"

"அபாயத்துக்கு அஞ்சாதவர் என்று சற்று முன்னால் பெருமை அடித்துக் கொண்டீரே?"

"அபாயத்துக்குத் துணிவது என்றால் அதற்குத் தகுந்த பரிசு கிட்ட வேண்டும் அல்லவா?..."

"பரிசா? பரிசா வேண்டும்? நீர் கனவிலும் அடையக் கருதாத பரிசு உமக்குக் கிடைக்கும். சோழ சாம்ராஜ்யத்தில் இன்று சர்வ சக்தி வாய்ந்தவராய் விளங்கும் பெரிய பழுவேட்டரையர் எந்தப் பரிசுக்காக வருஷக்கணக்காகத் தவம் கிடக்கிறாரோ அத்தகைய பரிசு உமக்குக் கிடைக்கும்!" என்று கூறி நந்தினி வந்தியத்தேவன் பேரில் மறுபடியும் மோகனாஸ்திரத்தைத் தூவினாள்.

பாவம்! வல்லவரையனுடைய தலை சுழன்றது. நெஞ்சே! தைரியத்தை கடைப்பிடி! அறிவை இழந்துவிடாதே! - என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அச்சமயம் அவனுக்குத் துணை செய்ய வந்ததைப் போல் அருகிலுள்ள தோட்டத்திலிருந்து ஆந்தையின் கடூரமான குரல் கேட்டது.

ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை கேட்டது.

வந்தியத்தேவனுடைய உடம்பு சிலிர்த்தது.

நந்தினி தோட்டத்தில் ஆந்தைக் குரல் வந்த இடத்தை நோக்கி "நிஜ மந்திரவாதியே வந்துவிட்டான்!" என்றாள்.

பிறகு வந்தியத்தேவனைப் பார்த்து "அவன் எனக்கு இனித் தேவையில்லை. ஆனாலும் இரண்டு வார்த்தை அவனிடம் சொல்லி அனுப்புகிறேன். ஒரு வேளை, உம்மைத் தப்பித்து விடுவதற்கு அவன் உபயோகமாயிருக்கலாம். சற்று நேரம் நீர் அதோ அந்தப் பக்கம் போய் இருட்டில் மறைந்து நில்லும்!" என்று முன்னம் அவளுடைய தாதிப் பெண் போன திசைக்கு நேர் எதிர்த் திசையைக் காட்டினாள்.










Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 35. மந்திரவாதி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 12. நந்தினி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 30. இரு சிறைகள்
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. நம் விருந்தாளி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: